Print Version|Feedback
The Italian elections: A perspective for the working class
இத்தாலி தேர்தல்கள்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முன்னோக்கு
By Peter Schwarz
28 February 2018
ஐரோப்பா எங்கிலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர் கொண்டிருக்கும் அனைத்து அரசியல் பிரச்சினைகளும், இத்தாலியில் இந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட உள்ள தேர்தல்களில் ஒன்றுதிரண்ட வடிவில் வெளிப்படுகின்றன.
ஆழமடைந்து வரும் சமூக நெருக்கடியின் பின்புலத்தில் இத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, 8 சதவீத மக்கள் "முழு வறுமையில்" வாழ்கின்றனர். உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதம் 11 சதவீதமாக உள்ளது, இதுவே இளைஞர்களிடையே 30 சதவீதத்தை எட்டியுள்ளது. வழமையான வேலைவாய்ப்பு இல்லாமல் உயிர் வாழ்விற்கான அற்ப தொகையில் வாழ்க்கைக்கு வழி தேடும் இன்னும் பல மக்கள், இந்த புள்ளிவிபரங்களில் கணக்கில் எடுக்கப்படவே இல்லை. இத்தாலி, 58 சதவீதத்துடன், யூரோ மண்டலத்திலேயே மிகக் குறைந்த வேலைவாய்ப்பு விகிதம் கொண்ட ஒரு நாடாக உள்ளது.
தேர்தலைச் சுற்றி அச்சுறுத்தும் விதத்தில் தொங்கி கொண்டிருக்கும் இரண்டாவது காரணி, அதிகரித்து வரும் போர் அபாயமாகும். நேட்டோவுக்குள் முன்னணி சக்தியாக உள்ள அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடன் போருக்குள் இறங்க அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி ஒரு ஸ்தாபக உறுப்பு நாடு என்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியமோ ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு தலைமையின் கீழ் அதன் வல்லரசு அபிலாஷைகளை வலியுறுத்தவும் மற்றும் மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் போர் தொடுக்கவும் தயாரிப்பு செய்து வருகிறது. ஐரோப்பாவுக்கு "உலகில் பொதுவான அதிகாரக் கட்டமைப்பு" வேண்டியுள்ளதாக இம்மாதம் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜேர்மன் வெளியுறவு மந்திரி சிக்மார் காப்ரியேல் அறிவித்தார். இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் இல்லாமல் அதனால் அதை செய்ய முடியாது, “ஏனென்றால் ஊனுன்னிகள் உள்ள உலகில், ஒரேயொரு சைவ உணவினராக இருப்பது மிகவும் கடினமானது.” என்றார்.
சமூக சமத்துவமின்மைக்கும், போருக்கும் இத்தாலியில் பலமான எதிர்ப்பு உள்ளது. வர்க்கப் பதட்டங்கள் உடையும் புள்ளியில் உள்ளன. முசோலினியின் பாசிசவாதிகளுக்கு எதிரான தொழிலாள வர்க்க போராட்ட காலத்திலிருந்து, Resistenza, இத்தாலிய தொழிலாள வர்க்கம் போர்குணம் மிக்க போராட்டத்தின் ஒரு நீண்ட பாரம்பரியம் கொண்டுள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஈராக் போருக்கு எதிராக போராட /"ரோமில் மட்டும்" 3 மில்லியன் பேர் வீதிகளில் இறங்கினர். ஆனால் அந்த எதிர்ப்பு இப்போதைய இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தனது அரசியல் வெளிப்பாட்டை காட்டமுடியவில்லை.
ஒரு சமயம் தங்களை "இடது" என்றோ அல்லது "சோசலிசவாதிகள்" என்றோ காட்டிக் கொண்ட கட்சிகள் மற்றும் அரசியல் போக்குகள் வலதுக்கு மாறியதே இதற்கு முக்கிய காரணமாகும். இத்தாலியில் பயங்கர அளவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையானது, பெரிதும் மத்திய-இடது அரசாங்கங்கள் என்றழைக்கப்பட்டவை பின்பற்றிய கொள்கைகளின் விளைவாகும். சில்வியோ பெர்லுஸ்கோனியின் கீழ் அமைந்த வலதுசாரி அரசாங்கங்கள் கட்டுப்பாடற்ற ஊழல் மற்றும் சுய-செழிப்பால் குணாம்சப்பட்டிருந்த அதேவேளையில், ரோமானோ பிரோடி, மஸ்சிமோ டி'அலீமா மற்றும் மத்தேயோ ரென்சி ஆகிய மத்திய-இடது பிரதம மந்திரிகளின் பெயர்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திருப்பி விடப்பட்ட பொது செலவின வெட்டுக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளில் இருந்து பிரிக்கவியலாதவாறு உள்ளன.
முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி, குட்டி-முதலாளித்துவ போராட்ட கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரிவுகளில் இருந்து தங்களின் உறுப்பினர்களை நியமித்த Rifondazione Comunista மற்றும் Sinistra Ecologia Libertà (SEL) போன்ற கட்சிகளே இன்றியமையாத இழிவார்ந்த பாத்திரம் வகித்தன. அவை சமூக தாக்குதல்கள் மற்றும் போருக்கு எதிரான போராட்டங்களில் செல்வாக்கு செலுத்த முயன்ற அதேவேளையில், முதலாளித்துவ அரசும் அரசாங்கமும் எப்போதெல்லாம் அடிமட்டத்திலிருந்து அழுத்தத்தை சந்தித்ததோ அப்போதெல்லாம் அவை அவற்றை ஆதரித்து நின்றன. 2006 இல், Rifondazione வெறுக்கப்பட்ட ரோமானோ பிரோடி அரசாங்கத்திற்கு உள்ளேயும் கூட நுழைந்தது.
மீண்டும் மீண்டும் தங்களை மறுகுழுவாக்கம் செய்தும் பெயரை மாற்றிக் கொண்டு செயல்பட்டு வந்துள்ள இத்தகைய போக்குகள் உடனான 25 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம், இவையெல்லாம் இடது-சாரியோ அல்லது சோசலிச தொழிலாள வர்க்க அமைப்புகளோ இல்லை என்பதையே மாற்றுக் கருத்துக்கு இடமின்றி எடுத்துக்காட்டி உள்ளது. இதற்கு மாறாக அவை, அடிமட்டத்திலிருந்து எழும் ஓர் அச்சுறுத்தலுக்கு எதிராக முதலாளித்துவ ஒழுங்கமைப்பை எப்போதும் பாதுகாக்கின்ற, உயர்மட்ட-நடுத்தர வர்க்கத்தின் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் வலதுசாரி கட்சிகளாகும்.
அவற்றில் சில இப்போது, மக்கள் அதிகாரம் (Potere al Popolo) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிடுகின்றன. இது அரசியல் திவால்நிலைமைகளின் ஒரு கூட்டணி என்பதோடு, சோசலிசத்தை மதிப்பிழக்க செய்வதே இதன் முக்கிய பணியாகும். பொடெமோஸ் (ஸ்பெயின்), இடது கட்சி (ஜேர்மனி) மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (பிரான்ஸ்) ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு, இவற்றின் முன்மாதிரிகளில் ஒன்று தான், Troika வின் (மூன்று அமைப்புகள்) கடுமையான சமூக செலவின குறைப்பு கட்டளைகளை கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் மீது திணித்துள்ள பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் தலைமையிலான கிரீஸின் சிரிசா அமைப்பாகும்.
“இடது" என்றழைக்கப்படுவது திவாலானது தான் நகைச்சுவையாளர் பெப்பே கிறில்லோ தலைமையிலான ஐந்து நட்சத்திர இயக்கம் (M5S) வளர்வதற்கான காரணம். மத்திய-இடது கட்சிகளால் ஆதரிக்கப்பட்ட மற்றொரு பிரதம மந்திரி மரியோ மான்டி கடுமையான சமூக செலவின நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியதன் மூலம் உலக பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகளைத் தொழிலாளர்கள் மீது சுமத்தியதும், M5S 2014 இல் மொத்த வாக்குகளில் ஒரு கால்வாசி வாக்குகளை வென்றது. அனைத்திற்கும் மேலாக, அரசியல் உயரடுக்கின் ஊழலை கிறில்லோ ஓயாது மீண்டும் மீண்டும் குறை கூறியதே அவர் வெற்றிக்கான காரணமாக இருந்தது.
எவ்வாறிருப்பினும், M5S ஒரு வலதுசாரி, முதலாளித்துவ கட்சி என்பது இப்போது வெளிப்படையாக உள்ளது. இது, புலம்பெயர்வு-விரோத பேரினவாதத்திற்கான அதன் ஆதரவு, ஐரோப்பா மட்டத்தில் பிரிட்டனின் UKIP மற்றும் ஜேர்மனிக்கான மாற்றீடு ஆகியவற்றுடனான அதன் கூட்டணி மற்றும் அது அரசாங்கம் அமைத்துள்ள ரோம் போன்ற நகரங்களில் நடக்கும் ஊழல்களில் அது சம்பந்தப்பட்டிருப்பதால் எடுத்துக்காட்டப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர், மற்ற கட்சிகளுடன் கூட்டணிகள் உருவாக்குவதில் இருந்து அதை தடுக்கும் கட்சிவிதிமுறைகளை M5S அகற்றியது.
“இது அரசாங்கத்திற்குள் நுழைவதற்கு சரியான தருணம்,” என்று தெரிவித்த முன்னணி M5S வேட்பாளர் Luigi Di Maio, “நாங்கள் இத்தாலியைக் குழப்பத்தில் விட மாட்டோம், மாறாக விவாதங்களைத் தொடங்க தேர்தல் நாள் இரவு அனைத்து அரசியல் சக்திகளுக்கும் முறையீடு செய்வோம்,” என்றார். யார் விருப்பத்திற்குரிய கூட்டாளியாக இருப்பார் என்பதை Di Maio அறிவிக்கவில்லை. ஆனால், அதிவலது Lega மற்றும் பெர்லுஸ்கோனியின் வலதுசாரி Forza Italia உட்பட அனைத்து கட்சிகளும் சாத்தியமான முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
கருத்துக்கணிப்புகளில் ஏறத்தாழ 30 சதவீத வாக்குகளுடன் M5S முன்னணியில் இருக்கிறது என்றால், காரணம் அங்கே முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட தகைமை கொண்ட எந்தவொரு உண்மையான இடதுசாரி மாற்றீடுகளும் இல்லை என்பதானாலேயே ஆகும்.
சமூக கோபம் கொதிக்கும் புள்ளியை எட்டியுள்ளது. இந்த காரணத்தினால் தான், எல்லா கட்சிகளும் அவற்றில் தேர்தல் பிரச்சாரங்களில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்களுக்கு எதிராக கோபமூட்டுவதில் ஒருங்குவிந்துள்ளன. இந்த அகதிகள்-விரோத கோபமூட்டல் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதையும், சுரண்டப்படுபவர்கள் மற்றும் ஒடுக்கப்படுபவர்க்களின் கோபத்தை மக்களில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவுகளுக்கு எதிராக திருப்பி விடுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. அதேநேரத்தில், இது அதிகரித்த நம்பிக்கையோடு தலை தூக்கி வரும் வலதுசாரி பாசிசவாத போக்குகளை ஊக்குவித்து, பலப்படுத்தி வருகிறது.
வரி ஏமாற்று மீதான தீர்ப்பு நிலுவகையில் இருப்பதால் தேர்தலில் நிற்க தடுக்கப்பட்டுள்ள, 81 வயதான பெர்லுஸ்கோனி அவரது Forza Italia கட்சியை அதிவலது Lega மற்றும் நவ-பாசிசவாத Fratelli d'Italia உடன் அணி சேர்த்துள்ளார். இந்த கூட்டணி தற்போது கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் உள்ளது. அது லிபியாவில் போராளிகள் குழுக்களை ஆயுதமேந்த செய்தமை மற்றும் இத்தாலிக்குள் அகதிகள் எல்லை கடந்து வருவதைத் தடுக்க தடுப்புகாவல் முகாம்கள் அமைத்தமை உட்பட தற்போதைய ஜனநாயக கட்சி (PD) அரசாங்கத்தின் வெளிநாட்டவர் விரோத கொள்கைகளில் இருந்து ஆதாயமடைந்து வருகிறது.
பெப்ரவரி தொடக்கத்தில், மாசிரடா நகரில் Lega கட்சி ஆதரவாளர் ஒருவர் புலம்பெயர்ந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதற்குப் பின்னர் இருந்து, இனவாதிகளுக்கும் பாசிசவாத-எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிலவும் மூர்க்கத்தனமான மோதலே தேர்தல் பிரச்சாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த ஞாயிறன்று இனவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிராக ரோமில் 100,000 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர், அதேவேளையில் மிலானில் 50,000 பேர் வெளிநாட்டவர் விரோத பேரணியில் கலந்து கொண்டனர்.
மார்ச் 4 ஆம் தேதி தேர்தல்கள் இத்தாலியின் சமூக மற்றும் அரசியல் நெருக்கடியைத் தீவிரப்படுத்தும். ஜனநாயக கட்சி (PD), அதன் கூட்டாளிகள், மற்றும் ஆகக்குறைந்தளவில் பெர்லுஸ்கோனி மற்றும் M5S ஆகியவை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் சிக்கன கொள்கைகளை ஊக்குவிக்கின்றன, Lega மற்றும் பாசிசவாத குழுக்கள் இத்தாலிய தேசியவாத நிலைப்பாட்டில் இருந்து அதை தாக்குகின்றன. இரண்டினது கொள்கைகளுமே ஒரு முட்டுச்சந்துக்கே இட்டுச் செல்கிறது என்பதோடு, ஆழ்ந்த அபாயங்களையும் கொண்டுள்ளது.
இத்தாலிய, ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரமான சாத்தியத்திறனை அணித்திரட்டும் இயக்கம் மூலமாக மட்டுமே, போர் அபாயம், அதிவலது மற்றும் பாசிசவாத சக்திகளின் வளர்ச்சி, ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களை நிறுத்த முடியும். இதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) இத்தாலிய பிரிவுகளைக் கட்டமைப்பது அவசியமாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகள் மட்டுமே சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம் மற்றும் அவற்றின் போலி-இடது ஆதரவாளர்களுக்கு எதிராக மார்க்சிச சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தைப் பாதுகாத்து நிற்கின்றன.
நாங்கள், போர், பாசிசம் மற்றும் சமூக தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தை அவற்றின் மூலக்காரணமாக விளங்கும் முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கும் ஒரு வேலைத்திட்டத்திற்காக போராடுகிறோம். பெரிய வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, தனிநபர் இலாப திரட்சிக்காக அல்லாமல் சமூக தேவைக்கேற்ப சமூகத்தை ஒழுங்கமைக்காமல் ஒரேயொரு சமூக பிரச்சினையைக் கூட தீர்க்க முடியாது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எங்களின் பதில் தேசிய அரசைப் பலப்படுத்துவது அல்ல, மாறாக ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் என்பதே எங்களின் பதிலாகும்.