Print Version|Feedback
German Green Party-aligned newspaper defends far-right Professor Baberowski
ஜேர்மன் பசுமைக் கட்சிக்கு ஆதரவான செய்தித்தாள் அதி-வலது பேராசிரியர் பாபரோவ்ஸ்கியை பாதுகாக்கிறது
International Youth and Students for Social Equality (IYSSE)
6 March 2018
ஜேர்மன் பசுமைக் கட்சிக்கு ஆதரவான Taz என்று பரவலாக குறிப்பிடப்படுகின்ற The Tageszeitung என்ற ஒரு தினசரி, சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பு (IYSSE) மீது ஒரு கூர்மையான தாக்குதலை நடத்துவதற்காக தனது வாரஇறுதி பதிப்பை அர்ப்பணித்திருந்தது. முகப்புப் பக்கத்தில் பிரதான இடம்பிடித்திருப்பதோடு, உள்ளே மூன்று முழுப் பக்கங்களுக்கு நீள்கின்றதொரு கட்டுரையில், நீண்டகால taz ஆசிரியரான சபீன ஸைய்ஃபேர்ட், அதி-வலது வரலாற்றாசிரியர் ஜோர்ஜ் பாபரோவ்ஸ்கி குறித்தான IYSSE இன் விமர்சனம் பல்கலைக்கழகங்களில் “வெளிப்படையான விவாதம்” மற்றும் “கருத்து சுதந்திர”த்திற்கு ஒரு அச்சுறுத்தலை முன்நிறுத்துவதாக அறிவிக்கிறார்.
இந்த மனிதர் அமைதிப்படுத்தப்பட்டாக வேண்டும்” என்பதான taz இன் தலைப்புமே கூட அபத்தமானது. ஜேர்மனியில் இருக்கும் அத்தனை பெரிய ஊடக ஸ்தாபனங்களுமே பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் கிழக்கு ஐரோப்பிய வரலாற்றைக் கற்பிக்கும் பாபரோவ்ஸ்கியின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்ளும் நிலையில் தங்களை அமர்த்திக் கொண்டிருக்கின்றன. பொதுநிகழ்ச்சிகளில் இத்தனை அதிகமாக கலந்துகொள்ளும் இன்னுமொரு பேராசிரியரைக் காண்பது அபூர்வம். Basler Zeitung இல் அவர் தொடர்ந்து பத்தி எழுதுகிறார், Frankfurter Allgemeine Zeitung (FAZ) மற்றும் Neue Zürcher Zeitung இல் அடிக்கடி எழுதுகிறார், Deutschlandfunk மற்றும் பிற ஊடக ஒளிபரப்புகளில் உரைநிகழ்த்துகிறார், ஏராளமான கருத்தரங்க விவாதங்களில் பங்குபெறுகிறார். அவரை விமர்சிக்கும் மாணவர்களை வசை பாடுகிறார், அவர்களை விரிவுரைகளில் இருந்து வெளியேற்றும்படி செய்கிறார், அவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்தும் வெளியேற்றப்பட வேண்டும் என்று கோருகிறார் அல்லது அவர்களை சட்டரீதியான புகார்களைக் கொண்டு துரத்துகிறார்.
ஆனால் tazக்கு கருத்து சுதந்திரம், பாபரோவ்ஸ்கியால் ஆபத்துக்குள்ளாக்கப்படவில்லை, மாறாக, அவரது வலது-சாரி கண்ணோட்டங்களை பகிரங்கமாக விமர்சனம் செய்திருக்கின்ற, அத்துடன் ஏராளமான நகரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் அமைப்புகளிடம் இருந்து ஆதரவைப் பெற்றிருக்கின்ற —இது taz மறைக்கின்ற ஒரு உண்மையாகும்— IYSSE ஆல் தான் ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றதாம். ஸைய்ஃபேர்ட்டின் வாதங்களை ஒருவர் பின்பற்றினால், அப்போது பாபரோவ்ஸ்கி அனைத்து விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவராய் இருப்பார். அவருக்கும் மற்ற வலது-சாரி சிந்தனையாளர்களுக்கும் ஸைய்ஃபேர்ட் ஒரு தடையில்லா சுதந்திரத்தை கொடுக்கின்றார்.
பாபரோவ்ஸ்கி, அகதிகளுக்கு எதிரான அவரது பரப்புரைக்காகவும், வன்முறை மீதான அவரது நியாயப்படுத்தலுக்காகவும், தேசிய சோசலிசத்தை (நாஜிசம்) ஆபத்தில்லாததாக காட்டுவதற்காகவும் ரஷ்யப் புரட்சி குறித்த அவரது கம்யூனிச-விரோத பொய்மைப்படுத்தலுக்காகவும் இழிவுமிக்க பெயர்பெற்றவராகும். Taz பத்திரிகையே கூட பாபரோவ்ஸ்கியின் வலது-சாரி அரசியலைக் குறித்து நிறைய விமர்சனபூர்வமான செய்திகளை வெளியிட்டிருக்கிறது.
ஆனால் இப்போது, முன்னாள் 1968 ஆர்ப்பாட்டத் தலைமுறை மற்றும் வசதியான நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வெளியீடானது, அதி-வலது பேராசிரியருக்கு தனது இதயத்தில் இடம் கண்டுபிடித்திருக்கிறது. பாபரோவ்ஸ்கி ஸைய்ஃபேர்ட்டினால் கிட்டத்தட்ட புகழ்ந்து தள்ளப்படுகிறார். அடிக்கடி தவறாய் புரிந்து கொள்ளப்படுவதாக உணர்கின்ற, விமர்சனத்தால் பாதிப்புக்குள்ளாகின்ற மற்றும் “பல்கலைக்கழகத்தில் இனியும் எந்த விவாதங்களும் இல்லை, எந்த சர்ச்சைகளும் இல்லை” என்று புகாரிடுகின்ற ஒரு உணர்ச்சிநுட்பமான மற்றும் சுய-விமர்சன மனிதர் என்று அவரை ஸைய்ஃபேர்ட் விவரிக்கிறார்.
“ஒரு இதமான வெய்யில் கொண்ட அக்டோபர் காலையில்” “ஹம்போல்ட்டின் தனித்துவமான உணர்வால்” நிரம்பிய ஒரு பழைய சொற்பொழிவு அரங்கில் “கருப்பு உலோகக் கண்ணாடிகளுடனான அந்த மெலிந்த மனிதர்” நடத்துகின்ற, ஒரு உண்மையான கல்வியின் தூங்குகின்ற இலட்சியங்களைத் தட்டியெழுப்புகின்ற, விளக்கமளிக்கின்ற மற்றும் வரலாறு விடயங்களிலான அவரது உரை குறித்து ஸைய்ஃபேர்ட் உற்சாகத்துடன் சித்தரிக்கிறார். “ஜோர்க் பாபரோவ்ஸ்கியின் வாக்கியங்கள் தெளிவானவை, புரிந்துகொள்ளக் கூடியவை, அழகானவை, எழுதி வைத்துக் கொள்ளத்தக்கவை, ஏதோவொன்றைக் கட்டவிழ்த்து விடுகின்ற வாக்கியங்கள்” என்று taz இன் ஆசிரியர் பிரவாகமாய் பொழிகிறார்.
இதற்கும் உண்மையான பாபரோவ்ஸ்கிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவரது வலது-சாரிக் கண்ணோட்டங்கள் மிக நன்றாய் ஆவணப்படுத்தப்பட்டவை. 2015 செப்டம்பர் 14 அன்று, “வரவேற்கும் ஒரு கலாச்சாரம் குறித்த பேச்சு”க்கு எதிராக Frankfurter Allgemeine Zeitung இல் அவர் ஆவேசம் காட்டியபோது தேசிய அளவிலான கவனத்தை அவர் ஈர்த்தார். பல மில்லியன் மக்களை ஒன்றிணைப்பது “நாம் நின்று கொண்டிருப்பதும் சமூகத்திற்கு ஒரு ஸ்திரத்தன்மையையும் சீர்மையையும் கொடுக்கின்றதுமான பாரம்பரியத்தை முறிக்கிறது” என்ற இனவாத வாதத்தைக் கொண்டு இதற்கு அவர் நியாயம் கற்பித்தார். அதி-வலது ஜேர்மனிக்கான மாற்றின் (AfD) புலம்பெயர்வோர் விரோதப் பிரச்சாரங்களுக்கு எரியூட்டிய பல பகிரங்கமான கூற்றுகளில் இது ஒன்றேயொன்று மட்டுமே.
ஸைய்ஃபேர்ட்டும் கூட, பாபரோவ்ஸ்கி வலது-சாரி ஜனரஞ்சகவாத கிறிஸ்தோப் புளோஹரின் Basler Zeitung இல் தொடர்ந்து எழுதுகிறார் என்பதையும் “விளம்பர வல்லுநரான ரோலண்ட் ரெஹ்கி போன்ற ’தாராளவாத-கன்சர்வேட்டிவ்’களாக தங்களை அழைத்துக் கொள்கின்ற மற்றவர்கள் கடும்வலது என்று கூறுகின்றவர்களை அடிக்கடி மறுட்வீட் செய்கிறார்” என்பதையும் ஒத்துக் கொள்ள நேரிட்டது. ஆயினும் வலது-சாரி பேராசிரியருக்கான அவரது போற்றுதலை இது குறைத்துவிடவில்லை.
பாபரோவ்ஸ்கி Bremen Asta (பல்கலைக்கழக மாணவர் சங்கம்) மீதும் சோசலிச சமத்துவக் கட்சி (Socialist Equality Party, SGP) மீதும் வழக்கு தொடர்ந்திருந்த Cologne மற்றும் Hamburg நீதிமன்றங்கள், அவரை “வலது-சாரி தீவிரவாதி” என்றும் “வரலாற்றை பொய்மைப்படுத்துபவர்” என்றும் அழைப்பதற்கான உரிமையை அவற்றுக்கு வழங்கியது என்ற உண்மையைக் கொண்டு ஸைய்ஃபேர்ட் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. “அப்போது முதல் அவற்றுடன் தான் அவர் வாழ வேண்டியிருக்கிறது” என்று கடுகளவு சுருக்கமாய் அவர் எழுதுகிறார். இத்தனைக்கும் taz இன் ஸ்தாபகர்களில் ஒருவரான, பேர்லின் வழக்கறிஞர் ஜோஹானஸ் ஐசன்பேர்க், பாபரோவ்ஸ்கிக்கு எதிராக Bremen Asta மற்றும் SGPயின் பிரதிவாதங்களின் சார்பாக ஆஜராகி வாதிட்டவர் என்பதுடன் விசாரணை முடிவு குறித்து tazக்கு செய்திகளும் அளித்திருந்தார்.
பாபரோவ்ஸ்கியும் அவரது சகாவான அரசியல் விஞ்ஞானி ஹேர்ஃபிரட் முங்க்லரும் சமீப ஆண்டுகளில் ஜேர்மன் வெளியுறவுக் கொள்கையை மறுநோக்குநிலை அமைப்பதில் சித்தாந்தரீதியாக ஒரு மையமான பாத்திரத்தை வகித்திருக்கின்றனர். 2014 பிப்ரவரியில், மூனிச் பாதுகாப்பு மாநாட்டில், ஜேர்மன் அரசாங்கத்தின் முன்னணிப் பிரதிநிதிகள், இராணுவரீதியாக ஒதுங்கியிருந்த காலகட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், ஐரோப்பாவிலும் மற்றும் உலகிலும் தனது அளவுக்கும் செல்வாக்குக்கும் ஏற்றதொரு பாத்திரத்தை ஜேர்மனி மறுபடியும் வகிக்க வேண்டும் என்றும் அறிவித்தனர்.
பத்து நாட்களுக்குப் பின்னர், செய்தி வார இதழான Der Spiegel, “முதலாம் உலகப் போர் குற்றவுணர்ச்சி: யார்மீது குற்றம் எனும் கேள்வி வரலாற்றாசிரியர்களை பிளவுபடுத்துகிறது” (World War I Guilt: Culpability Question Divides Historians) என்ற தலைப்பில் Dirk Kurbjuweit எழுதிய, முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களிலான “ஜேர்மன் குற்றவுணர்ச்சி” குறித்த கேள்வியை முன்நிறுத்தும் ஒரு கட்டுரையை வெளியிட்டது. நாம் எழுதியிருந்தவாறாக, “இருபதாம் நூற்றாண்டு குறித்த ஒரு புதிய விவரிப்பையும், ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை மறைக்கின்றதும் மற்றும் நியாயப்படுத்துகிறதான வரலாற்றின் ஒரு பொய்மைப்படுத்தலையும்” அபிவிருத்தி செய்வதே அந்தக் கட்டுரையின் பணியாக இருந்தது.
“ஜேர்மன் குற்றவுணர்ச்சி” குறித்த மறுமதிப்பீட்டுக்கான பிரபலமான சாட்சியமாக, Der Spiegel, அன்று உயிருடன் வாழ்ந்து வந்த நாஜி வக்காலத்துவாதி ஏர்ன்ஸ்ட் நோல்ட்டக்கு அடுத்த இடத்தில் பாபரோவ்ஸ்கியையும் முங்க்லரையும் அமர்த்தியது. ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களாக அவர்களது மரியாதையானது வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கான அங்கீகாரமாக அர்த்தமளிக்கப்பட்டது. போரில் ஜேர்மனியின் பொறுப்பின் மீது பூசி மறைக்கின்ற வகையில், முதலாம் உலகப் போர் குறித்த ஒரு புத்தகத்தை முங்க்லர் எழுதியிருந்தார். நாஜிக்களின் போர்க் குற்றங்களை குறைத்து காட்டுகின்ற கூடுதல் சிரமமான பணிக்கு பாபரோவ்ஸ்கி முகம்கொடுத்திருந்தார். தேசிய சோசலிசமானது (நாஜிசம்) போல்ஷிவிசத்துக்கான ஒரு நியாயபூர்வமான பிரதிபலிப்பு என்பதான ஆய்வுவழியைக் கொண்டு 1986 இல் “வரலாற்றாசிரியர்களின் சர்ச்சை” ஒன்றைத் தூண்டியிருந்த ஏர்ன்ஸ்ட் நோல்டவை Spiegel கட்டுரையில் அவர் பாதுகாத்துப் பேசினார்.
இந்த ஆய்வுவழி பாபரோவ்ஸ்கியின் சொந்தப் படைப்பு முழுமையிலும் இழையோடுகிறது. உதாரணமாக, 2007 இல் அவர் எழுதிய “Kriege in staatsfernen Räumen” (அரசு கட்டுப்பாடு இல்லாத பகுதிகளிலான போர்கள்”) எனும் கட்டுரையில், கிழக்கில் திட்டமிட்டு நடத்தப்பட்ட அழித்தொழிப்புப் போரானது ஜேர்மன் இராணுவத்தின் மீது (Wehrmacht) சோவியத் ஒன்றியத்தால் திணிக்கப்பட்டதாக இருந்தது என அவர் விளக்கினார்: “சாதாரண மக்களையும் விட்டுவைக்காத ஒரு புதிய வகைப் போருக்கு ஸ்ராலினும் அவரது தளபதிகளும் Wehrmacht ஐ தள்ளியிருந்தார்கள்”. “Verbrannte Erde” (“எரிந்த பூமி”) என்ற அவரது புத்தகத்தில் அவர் கூறுகிறார்: “ஜேர்மன் இராணுவத்தின் குரூரமான செயலானது... சித்தாந்தரீதியான நம்பிக்கைகளுடனான குறிப்புகளுடன் ஒருபோதும் விளக்கப்பட முடியாது. ஹிட்லரின் படைவீரர்கள் ஒரு சித்தாந்தப் போரில் ஈடுபட்டிருக்கவில்லை, மாறாக அவர்கள் தப்பிக்க வழியில்லாத இயங்குநிலை கொண்ட ஒரு போரில் ஈடுபட்டிருந்தனர்.”
Der Spiegel இல் பாபரோவ்ஸ்கி இறுதியாக ஹிட்லரையும் பாதுகாத்து பேசினார். “ஹிட்லர் மனநிலை பிறழ்ந்தவருமில்லை, நச்சுத்தனம் கொண்டவருமில்லை. அவர் தனது மேசையில் யூதர்களை இல்லாதொழிப்பது குறித்து எவரும் பேசுவதை விரும்பியது கிடையாது” என்று அவர் கூறினார். Taz இதனை சுருக்கமாகக் குறிப்பிடுகிறது, ஆனால் “சரியான உள்ளடக்கத்தில் மட்டுமே புரிந்துகொள்ளத்தக்க பாபரோவ்ஸ்கியின் ஒரு வசனம்” என்பதாக உடனடியாக அதனை சிறிதாக்கிவிட்டு, அதன்பின் வேறொரு விடயத்திற்கு தாவிவிடுகிறது. ஆனாலும் பாபரோவ்ஸ்கி, ஹிட்லரை குற்றமற்றவராக காட்டும் உள்ளடக்கம் மிகத்தெளிவானதாகும். இது ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவை நியாயப்படுத்துவதற்காக நாஜிக்களின் குற்றங்களை தணித்துக்காட்டுவது குறித்ததாகும்.
இதுவரையிலும் நவ-பாசிச வட்டாரங்களில் இருந்து மட்டுமே அறியப்படுவதாய் இருந்து வந்திருக்கின்ற இத்தகைய அட்டூழியமான அறிக்கைகள் எதிர்த்துப் பேசப்படாமலேயே இருந்து வந்தன. IYSSEம் SGPம் மட்டுமே இவற்றுக்கு எதிராகப் பேசின. இந்த எதிர்ப்புகளுக்கு ஆளும் வட்டாரங்கள் மிகப் பதட்டத்துடன் எதிர்வினையாற்றின. ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் தலைமையகம் (Presidium) ஒரு பகிரங்க அறிக்கையில் பாபரோவ்ஸ்கியை பாதுகாத்தது, அவர் மீதான விமர்சனங்கள் “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றதோடு அவரை விமர்சிப்பவர்கள் மீது வழக்கு தொடரவும் அச்சுறுத்தியது —இதுவே கருத்து சுதந்திரத்தின் மீதான உண்மையான ஒரு தாக்குதல்!
அடுத்துவந்த ஆண்டில் பாபரோவ்ஸ்கி மற்றும் முங்க்லர் மீதான விமர்சனம் பரவியதை அடுத்து, ஊடகங்கள் ஒரு கோபமான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டன. Cicero மற்றும் FAZ போன்ற பழமைவாத செய்தித்தாள்கள் இதில் முன்னணிப் பாத்திரம் வகித்தன, IYSSE ஐ ஒரு “ட்ரொட்ஸ்கிச கும்பல்” என்று அவை கண்டனம் செய்தன. ஆனால் Süddeutsche Zeitung மற்றும் Die Zeit ஆகிய சற்று தாராளவாத செய்தித்தாள்களாக சொல்லப்படுபவையும் இதில் இணைந்து கொண்டன. Taz, Tagesanzeiger மற்றும் Frankfurter Rundschau ஆகியவற்றில் மட்டுமே அவ்வப்போதான விமர்சனபூர்வமான எழுத்துக்கள் தென்பட்டன.
குறிப்பாக, 2017 ஜூன் 11 அன்று Andreas Fischer-Lescano எழுதி Frankfurter Rundschau இல் பிரசுரமான ”ஒரு வலது-சாரியின் சுய முன்வைப்பு” (The Self-Presentation of a Right-winger) என்ற கட்டுரை கவனத்துக்குரியதாகும். பிரபலமான இந்த Bremen சட்டப் பேராசிரியர் பாபரோவ்ஸ்கியைப் பற்றிக் கூறுகையில் “அவரது விஞ்ஞானபூர்வ எழுத்துக்களும் அன்றாட அரசியல் கருத்துக்களும் அதீத வலது-சாரி விமர்சனத்தின் கலவையாக மாறுகின்றன, வரலாற்று திருத்தல்வாத மற்றும் தேசியவாத நோக்கங்களுடன் இடைச்செருகல்களாக நுழைக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார்.
சென்ற ஆண்டு ஏப்ரலில், ஜேர்மன் மாநில அரசாங்கங்களின் முன்னணிப் பிரதிநிதிகள் கூகுளின் பொறியியல் பிரிவு துணைத்தலைவரான பென் கோம்ஸ் உடன், ஒரு புதிய தேடல் குறித்து அல்லது அதனினும், தணிக்கை மென்பொருள் செயல்வழிமுறை (அல்காரிதம்) குறித்து விவாதிக்கும் பொருட்டு சந்தித்தனர். மூன்று வாரங்களுக்குப் பின்னர், கூகுள் “போலிச் செய்திகளாக” கருதப்படுபவைக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை அது அறிமுகம் செய்திருந்ததாக அறிவித்தது. அது முதலாக, பாபரோவ்ஸ்கி குறித்த உலக சோசலிச வலைத் தளத்தின் விமர்சனம் கூகுளின் தேடல் முடிவுகளில் தோன்றுவதில்லை.
பாபரோவ்ஸ்கியை ஆதரித்துப் பேசுபவர்களில் இப்போது tazம் இணைந்திருக்கிறது என்பது ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும். ஸைய்ஃபேர்ட் குறிப்பாக ஒரு நேர்மையற்ற வழிமுறையைப் பயன்படுத்துகிறார். பாபரோவ்ஸ்கியின் ஏராளமான அதி-வலது தீவிரவாத மற்றும் வரலாற்றுத் திருத்தல்வாத கூற்றுகளையும் IYSSE இன் விமர்சனங்களையும் நேரடியாக மேற்கோளிடுவதை அவர் தவிர்க்கிறார், அதற்குப் பதிலாக “கருத்து சுதந்திரம்” குறித்த பொதுவான மற்றும் முற்றிலும் கபடவேடமான பரிசீலனைகளின் மீது சாய்ந்துகொள்கிறார்.
Taz இன் ஆசிரியர் குழு அதன் வார இறுதிப் பதிப்பின் மையமான பேசுபொருளாக பாபரோவ்ஸ்கியை பாதுகாப்பதை ஆக்குவதற்கு எடுத்த முடிவானது ஜேர்மனியில் இப்போது நடந்தேறி வருகின்ற அரசியல் மாற்றங்களின் பின்புலத்தில் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியதாகும். சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) உறுப்பினர்கள் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினருடன் (CDU/CSU) மாபெரும் கூட்டணியின் ஒரு புதிய பதிப்பிற்கு ஆதரவாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையில் வாக்களித்து உடன்பட்ட அதே வாரஇறுதியில் ஸைய்ஃபேர்ட் இன் கட்டுரையும் வெளியாகியிருந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்ததற்குப் பிந்தைய மிகவும் வலது-சாரி ஜேர்மன் அரசாங்கமாக இது இருக்கப் போகிறது. சொந்த நாட்டில் அரசின் அதிகாரங்களை பாரிய அளவில் அதிகரிப்பதும், வெளிநாட்டில் ஜேர்மனியின் இராணுவத் திறன்களை அதிகப்படுத்துவதும், இவற்றுடன் சொந்த நாட்டில் சிக்கன நடவடிக்கைகளையும் சேர்த்துக் கொள்வதும் கூட்டணி உடன்பாட்டிற்கு மையமானதாக இருக்கிறது.
பசுமைக் கட்சி மற்றும் இடது கட்சி இரண்டுமே SPD இன் வாக்களிப்பை வரவேற்றிருக்கின்றன. ஜேர்மன் இராணுவவாதத்தை எதிர்ப்பதாக முன்பு கூறிவந்த நடுத்தர வர்க்கக் கட்சிகளிடம் இருந்து இனி எந்த எதிர்ப்புமில்லை. பல இளைஞர்களால் தொழிலாளர்களால் மற்றும் taz இன் வாசகர்களாலும் கூட வெறுக்கப்படுகின்ற அதி-வலது AfD தான் இப்போது நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைமையாக இருக்கிறது. மாபெரும் கூட்டணிக்கும் AfDக்குமான இந்த எதிர்ப்புக்கு நாம் அரசியல் வெளிப்பாட்டை வழங்கிக் கொண்டிருப்பது குறித்து, பசுமைக் கட்சிக்கு நெருக்கமான taz ஆசிரியர் குழு சீற்றம் கொண்டிருக்கிறது. ஆகவே தான் IYSSE மீது தாக்கப்படுகின்றது.
சமூக துருவப்படல் அதிகரித்துச் செல்லும் நிலைக்கு முகம்கொடுக்கும் நிலையில் வலது நோக்கி துரிதமாக நகர்கின்ற நடுத்தர வர்க்க அடுக்குகளுக்காக ஸைய்ஃபேர்ட் பேசுகிறார். Taz மற்றும் பசுமைக் கட்சி உருவாவதற்கு காரணமாக இருந்த 1968 ஆர்ப்பாட்ட இயக்கமானது பெருமளவில் நாஜிக்களின் குற்றங்கள் —இவை போருக்குப் பிந்தைய அடினொவர் சகாப்தத்தில் அமைதியாக்கப்பட்டு தரைவிரிப்பின் கீழ் தள்ளி விடப்பட்டிருந்தது— மீதான கோபத்தால் செல்வாக்கு செலுத்தப்பட்டதாக இருந்தது. 1980களின் வரலாற்றாசிரியர்களின் சர்ச்சையிலும் கூட, நோல்ட்ட நாஜிக்களுக்கு வக்காலத்து வாங்கியதைக் கொண்டு தன்னை முழுமையாக தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலை இப்போது மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஸைய்ஃபேர்ட்டின் கட்டுரையில் ஒரு குறிப்பிடத்தக்க வாசகம் இருக்கிறது. நீண்டகாலமாக வாக்களிக்கவில்லை என்று கூறும் பாபரோவ்ஸ்கியை அவர் மேற்கோளிடுகிறார். “இடது, தாராளவாத அல்லது பழமைவாதம், எதுவும் அவருக்கு கூற எதுவுமில்லை” என்று எழுதும் அவர் பின் கேட்கிறார், “இது பலரின் விடயத்தில் உண்மையில்லையா? விஷேடமாக தார்மீகரீதியாக உறுதிப்பட்டு செல்கின்ற ஒரு புதிய அல்லது அடையாள வலதுக்கு முகம்கொடுக்கும் நிலையில் அரசியல் நம்பிக்கைகளும், அவற்றுடனான இணைவுகளும் கலைந்து போகவில்லையா?”
கடந்த காலத்தின் சித்தாந்த கசடுகளை மீண்டும் கிளறி விட்டுக் கொண்டிருக்கும் புதிய வலது குறித்து தார்மீகரீதியாக என்ன இருக்கிறது? AfD இன் எழுச்சிக்கு முகம்கொடுக்கும் நிலையில், தமது அரசியல் நம்பிக்கைகளை எல்லாம் தூக்கிவீசி விட்டு வலதுடனான “தார்மீக” வளையத்துக்குள் தங்களை நிறுத்திக் கொள்கின்ற தன்னையும் தனது சகாக்களையும் குறித்தே ஸைய்ஃபேர்ட் இங்கே பேசுகிறார் என்பது தெளிவு. விளக்கமளித்தல் குறித்தும், பாபரோவ்ஸ்கி குறித்தும், “செவ்வியல் சிற்பங்கள், ஃபிரெடரிக் கட்டிடக்கலை மற்றும் ஹம்போல்ட்டின் தனித்துவமான உணர்வு” குறித்தெல்லாம் மிக அருமையாக எழுதுகின்ற இந்த மிகவும் நவீனமான மனிதரின் கட்டுரையை படிக்கையில், 1933க்கு முன்பாகவும் குறிப்பாக அதன்பின்னரும் ஜேர்மன் குட்டி முதலாளித்துவ தட்டின் மிகப் பலரும் ஏன் நாஜிக்களின் பக்கம் சென்றார்கள் என்பதற்கான தொடர்பை சுயமாகவே அறிந்துகொள்ளக் கூடியதாய் இருக்கிறது.
வலதிற்கு இவ்வாறாக மண்டியிடுவதை, இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெருவாரியானோரும், அத்துடன் taz இன் வாசகர்களில் பலரும் கூட நிராகரிக்கின்றனர் என்பதில் IYSSE உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.
போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளையும், மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை பூசிமெழுகுவதையும் எதிர்க்கின்ற தொழிலாளர்களும் இளைஞர்களும் பாபரோவ்ஸ்கியை ஊக்குவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கடிதங்களை taz இன் ஆசிரியர் குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று நாங்கள் அழைக்கிறோம்! நான்காம் அகிலத்தின் இணைய வழி செய்தித்தாளான உலக சோசலிச வலைத் தளத்தை வாசிப்பதற்கும் ஆதரிப்பதற்கும், IYSSE மற்றும் SGP இல் இணைவதற்கும், மாபெரும் கூட்டணிக்கான ஒரு சோசலிச எதிர்ப்பை கட்டியெழுப்புவதற்கும் நாங்கள் அவர்களிடம் வலியுறுத்துகிறோம்.