Print Version|Feedback
Great power politics, militarism, increased deportations: The right-wing programme of Germany’s grand coalition
வல்லரசு அரசியல், இராணுவவாதம், அதிகரித்த நாடுகடத்தல்கள்: ஜேர்மனியின் மாபெரும் கூட்டணியின் வலதுசாரி வேலைத்திட்டம்
By Peter Schwarz
14 March 2018
புதிய ஜேர்மன் அரசாங்கம் இன்று பதவியேற்கிறது, ஆனால் ஊடகங்கள் ஏற்கனவே அதன் வேலைத்திட்டத்தை மக்களிடையே நிலைநிறுத்த தொடங்கிவிட்டன. இவ்வாறு செய்கையில், அவை தொடக்கத்திலிருந்தே இந்த கூட்டணி உடன்படிக்கை குறித்து WSWS என்ன குறிப்பிட்டு வந்துள்ளதோ அதை உறுதிப்படுத்துகின்றன: அதாவது, இந்த மாபெரும் கூட்டணியின் கொள்கையானது, வல்லரசு அரசியல், இராணுவவாதம், அத்துடன் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான கடுமையான தாக்குதல் ஆகியவற்றால் குணாம்சப்பட்டிருக்கும்.
சனிக்கிழமையன்று, Der Spiegel, “நன்றி, டொனால்ட்" என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை பிரசுரித்தது. அப்பத்திரிகையின் தலைமை பதிப்பாசிரியர் Klaus Brinkbäumer, சமீபத்திய மாதங்களில் சிக்மார் காப்ரியேல், ஊர்சுலா வொன் டெர் லெயென், வொல்ஃகாங் இஷிங்கர், ஹெர்பிரட் முன்ங்லெர் மற்றும் ஜேர்மன் வெளியுறவு கொள்கையின் மற்ற பிரதிநிதிகளும் என்ன பிரகடனப்படுத்தினார்களோ அதை தொகுத்தளித்து, தீர்க்கமான முடிவுகளை வரைந்தளிக்கிறார்.
ஒருவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு தான் நன்றி கூற வேண்டும், ஏனென்றால் "அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான கூட்டணியில் விரிசல்கள்" ஜேர்மனி "வளர்வதற்கு" “வாய்ப்பை" வழங்குகிறது என்பதும், வல்லரசு அரசியல் அடிப்படையில் ஜேர்மனி மீண்டுமொருமுறை ஓர் இழிவான வெளியுறவு கொள்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதுமே அக்கட்டுரையின் மத்திய வாதமாக உள்ளது. “அமெரிக்காவை நாம் சார்ந்திருக்க வேண்டியிருந்த, அனைத்து முக்கிய பணிகளையும், அனைத்திற்கும் மேலாக இழிவான பணிகளை, அமெரிக்காவிடம் விட வேண்டியிருந்த காலங்கள் முடிந்துவிட்டன,” என்று அறிவிக்கும் Brinkbäumer, “ஐரோப்பாவை நாம் மீண்டுமொருமுறை உலக அரசியல் சக்தியாக மாற்ற வேண்டும்,” என்று வாதிடுகிறார்.
“சுதந்திர வர்த்தகம் மற்றும் உலகமயமாக்கலை" அறிவுறுத்துகின்ற, “ஜனநாயகமற்ற சீனா" மீது Brinkbäumer பொறாமையான பார்வை வீசுகிறார், “ஜனநாயக அடித்தளங்கள் சிதைந்த ஒரு அமெரிக்காவைக்" காட்டிலும் அது "குறிப்பிட்ட அம்சங்களில் ஒரு சிறந்த பங்காளியாக" “அனுமானிக்க" கூடியதாக உள்ளது. பன்னாட்டு பிரச்சினைகளைப் பொறுத்த வரையில், ஐரோப்பா "அது சரியென கருதுவதைத் திணிக்க, நிச்சயமாக, அவசியப்படும் போது, அமெரிக்காவுக்கு எதிராகவும் கூட, அதற்கு அவசியமான பங்காளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.”
இது உறுதியாக என்ன அர்த்தப்படுத்துகிறது என்பதை பின்னர் Brinkbäumer நான்கு புள்ளிகளில் தொகுத்தளிக்கிறார்.
“நாம் கடந்த காலத்தின் மென்மையான, பாதுகாப்பான, சிலவேளைகளில் பாசாங்குத்தனமான வெளியுறவு கொள்கைக்கு பிரியாவிடை கூற வேண்டும்,” என்று முதலில் குறிப்பிடுகிறார். ஜேர்மன் இனியும் "மறைந்து" கொண்டிருக்க முடியாது, “தார்மீகரீதியில் முடிவான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும்,” என்றார்.
இரண்டாவதாக, இராணுவவாதத்தை மூடிமறைப்பதற்கு பதிலாக அதை பகிரங்கமாக பிரச்சாரம் செய்ய அவர் அறிவுறுத்துகிறார்: “பெரும் செலவுகள் மற்றும் வெளிப்படையான அபாயங்கள் சம்பந்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் என்று வருகையில், ஒரு ஜனநாயகத்தில் அது குறித்து விவாதிக்கப்பட்டு, முடிவெடுக்கப்பட வேண்டும்,” என்றார்.
அடுத்து அவர் மதிப்புகளின் அடிப்படையில் அல்லாத, நலன்களின் அடிப்படையில் அமைந்த ஒரு வெளியுறவுக் கொள்கையை கோர செல்கிறார்; இதுவும் "அச்சமின்றி" விவாதிக்கப்பட வேண்டும். அவர் துருக்கியை நோக்கிய ஜேர்மனியின் கொள்கையை ஒரு எடுத்துக்காட்டாக மேற்கோளிட்டு, வினவுகிறார்: “மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக ஆட்சிகளை துருக்கி மதிக்க வேண்டுமென நாம் விரும்புகிறோமா, அல்லது அது மாஸ்கோ அல்லது பெய்ஜிங்கை நோக்கி நோக்குநிலை கொள்வதை நாம் தடுக்க விரும்புகிறோமா?” என்றார்.
இறுதியாக Brinkbäumer கோருகிறார்: “நாம் ஐரோப்பாவை ஒரே அமைப்பாக ஒருங்கிணைக்க வேண்டும்.” முடிவில், “நாம் ஒரு கூட்டு நிதி மற்றும் பொருளாதார கொள்கை, ஒரு கூட்டு இராணுவம், ஒரு கூட்டு மூலோபாயம் மற்றும் அவ்விதத்தில் ஒரு கூட்டு வெளியுறவு கொள்கை கொண்டிருக்க வேண்டும்.” இதன் நோக்கம், “ஒரு பலமான ஐரோப்பாவாக" இருக்க வேண்டும், "இல்லையென்றால் ஐரோப்பியர்களாகிய நாம் நமது முக்கியத்துவத்தை இழந்து, போட்டியில் தோற்றுவிடுவோம்,” என்றார்.
ஒரு தசாப்தத்திற்கு முன்னர், இதுபோன்றவொரு பகிரங்கமான ஏகாதிபத்திய வேலைத்திட்டம் போராட்டங்களைத் தூண்டியிருக்கும் அல்லது குறைந்தபட்சம் பரபரப்பாக ஆகியிருக்கும். இன்றோ, ஆளும் உயரடுக்கு மற்றும் இடது கட்சி உட்பட அதன் கட்சிகளுக்கு உள்ளே ஒரு இணக்கம் உள்ளது. இதைத்தான் CDU, CSU மற்றும் SPD ஆல் கையெழுத்திடப்பட்ட கூட்டணி உடன்படிக்கை, விபரமாக உச்சரிக்கிறது.
இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஜேர்மனியை ஒப்பீட்டளவில் அமைதியான வழிவகைகள் மூலமாக ஒரு பொருளாதார சக்தியாக மாற்றுவதற்கு அனுமதித்த, இந்த சர்வதேச கட்டமைப்பு, இப்போது நீடிக்கவில்லை. அமெரிக்கா உடனான புவிசார்-மூலோபாய கருத்து வேறுபாடுகள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. இப்போது இவை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் உருக்கு மற்றும் அலுமினியம் மீதான இறக்குமதி தீர்வைகள் மற்றும் தண்டிக்கும் வகையிலான வரிகள் என அச்சுறுத்தல்களை உள்ளடக்கி இருப்பதுடன், இது ஜேர்மன் பொருளாதாரத்தின் இதயதானத்தைத் தாக்கக்கூடும் என்பதால், ஒரு வர்த்தக போரால் சூழப்பட்டுள்ளன.
“வேறெந்த நாடும் இந்தளவுக்கு கடுமையாக பாதிக்கப்படாது,” என்று பொருளாதார வல்லுனர் Gabriel Felbermayr குறிப்பிட்டதை Der Spiegel மேற்கோளிட்டது. ஜேர்மனியில் உள்ள நான்கில் ஒரு வேலை ஏற்றுமதிகளைச் சார்ந்துள்ளது. வாகனத்துறை, இயந்திரத்துறை, மின் பொறியியல் துறை, மருந்து உற்பத்தி துறை, நுண்அளவீட்டு கருவித்துறை என குறிப்பாக முக்கிய ஐந்து தொழில்துறைகள் அமெரிக்காவிற்கான பிரதான ஏற்றுமதியாளர்களாக உள்ளன.
இதுவரையில் ஜேர்மன் பொருளாதாரத்திற்கான மிக முக்கிய சந்தையாக இருந்துள்ள ஐரோப்பிய ஒன்றியமும் ஒருங்குலைந்து வருகிறது. பிரிட்டன் வெளியேறுவதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விரோதமான கட்சிகள், ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் ஒரு ஸ்தாபக அங்கத்துவ நாடான இத்தாலியின் நாடாளுமன்றத்தில் இப்போது பெரும்பான்மை பெற்றுள்ளன. பிரெஞ்சு ஜனாதிபதியின் உத்வேகமூட்டல் இருந்தாலும், அடுத்த நிதியியல் நெருக்கடி அதிகரித்து வருகின்ற நிலையில், பேர்லினும் பிரான்சும் மக்ரோனால் முன்வைக்கப்பட்ட நாணய ஒன்றிய சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த இதுவரையில் நெருக்கமாக வரவில்லை.
ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் கடந்த காலத்தில் அது பயன்படுத்திய குற்றகரமான முறைகளுக்குத் திரும்புவதன் மூலமாக இந்த நெருக்கடிக்கு தனது பிரதிபலிப்பை காட்டி வருகிறது. உலக சக்தியாக மீண்டும் நிலைபெறுவதற்காக, அது ஐரோப்பிய ஒன்றியத்தில் மேலாதிக்கம் செலுத்த விரும்புவதுடன், அதை நன்கு ஆயுத-தளவாடங்கள் பொருந்திய ஓர் இராணுவ கூட்டணியாகவும் மாற்ற முயல்கிறது.
இது உள்நாட்டு கொள்கையில் ஒரு நேரடியான தாக்கத்தைக் கொண்டுள்ளது. இராணுவவாதம் மற்றும் வல்லரசு அரசியல் என்பது ஜனநாயகத்துடன் பொருந்தாது. பல ஆண்டுகளாக நலன்புரி அரசு சேவை வெட்டுகளுடன் குறைவூதிய துறையின் மிகப்பெரிய விரிவாக்கமும் சேர்ந்து, வர்க்க பதட்டங்களைப் பாரியளவில் ஏற்கனவே கூர்மைப்படுத்தி உள்ளன. இப்போது, இராணுவ செலவு அதிகரிப்பு, திட்டநிரலில் வைக்கப்பட்டுள்ளது. நேட்டோ கோரும் அளவுக்கு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (GDP) 2 சதவீதம் என கூட்டணி உடன்படிக்கையில் இலக்கு ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பது, ஆண்டுக்கு மொத்தம் 70 பில்லியன் யூரோவாக இராணுவ வரவுசெலவு கணக்கை இரட்டிப்பாக்கும். இது அனைத்துக்கும் தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் கணிசமானளவுக்கு குறைந்து வருகின்ற போதும், இதனால் தான் அகதிகளுக்கு எதிரான பிரச்சாரம் இப்போது மீண்டும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அகதிகளுக்கு எதிரான பிரச்சாரமானது, சமூக அதிருப்தியைச் சமூகத்தின் மிகவும் பின்தங்கிய அடுக்கிற்கு எதிராக திருப்பி விட சேவையாற்றுகிறது. அதேநேரத்தில், அது அடிப்படை ஜனநாயக உரிமைகளைத் துடைத்தழிக்கவும் மற்றும் சமூக எதிர்ப்பை ஒடுக்க ஒரு பொலிஸ் அரசை கட்டமைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
புதிய உள்துறை மற்றும் உள்நாட்டு அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவர் (CSU), பாரிய கண்காணிப்பு, மற்றும் ஏனைய பிற பொலிஸ் அரசு நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் “நாடுகடத்துவதற்கான இன்னும் அதிக கடுமையான தலைமை திட்டத்தை" ஞாயிறன்று அறிவித்த போது, அது புதுப்பிக்கப்பட்ட தாக்குதலின் தொடக்கத்தைக் குறித்தது. அதேநாள் மாலை, ஜேர்மன் தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில், CDU இன் புதிய பொதுச் செயலாளர் அன்னகிரேட் கிரம்ப்- காரன்பவர், SPD அரசியல்வாதி மனுவேலா ஷ்வேசிக், இடது கட்சியின் நாடாளுமன்ற பிரிவின் தலைவர் சாரா வாகன்கினெக்ட், மற்றும் FDP தலைவர் கிறிஸ்டியான் லிண்ட்னர் ஆகியோரின் ஆதரவை அவர் பெற்றார்.
திங்களன்று, CSU இன் துணை தலைவரும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஐரோப்பிய மக்கள் கட்சியின் குழு தலைவருமான மன்ஃபிரெட் வேபர், Süddeutsche Zeitung பத்திரிக்கையில் ஒரு நீண்ட பேட்டியில் அதே தொனியில் தனது கருத்தை தொடர்ந்தார்.
இத்தாலிய தேர்தல் முடிவால் அவர் "பீதி அடைந்ததாக" வேபர் அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவு என்பது "நமது உலகளாவிய தன்முனைப்பின் முடிவை அர்த்தப்படுத்தும்,” என்றவர் எச்சரித்தார். பின்னர் அவர் "புலம்பெயர்வு கொள்கையில்" ஐரோப்பிய நாடுகள் "இரங்கத்தக்க வகையில் தோல்வி" அடைந்திருப்பதே முக்கிய பிரச்சினை என்று கண்டறிந்தார்.
அவர் தீர்வு: “நம் எல்லைகளுக்கு கடுமையான பாதுகாப்பு தேவைப்படுகிறது. … பல்கேரியர்கள் முள்வேலிகளைக் கொண்டு துருக்கி உடனான எல்லையில் சட்டவிரோத புலம்பெயர்வைத் தடுக்க முயல்கிறார்கள் என்றால், பின் அவர்கள் ஆதரவை பெற தகுதியுடையவர்களே,” என்றார். கூட்டு எல்லை பாதுகாப்பிற்காக ஐரோப்பாவுக்கு "செயலூக்கமான அதிகாரிகள்" தேவைப்படுகிறார்கள். தற்போதைய 1,500 க்கு பதிலாக, “குறைந்தபட்சம் 10,000” தேவைப்படுகிறது.
அகதிகளை நாடுகடத்துவதற்கான ஒரு முன்மாதிரியாக, வெப்பர் துருக்கி உடனான 2016 உடன்படிக்கையை மேற்கோளிட்டார். “நமக்கு நேரடியாக ஒழுங்கமைக்க ஆனால் முகாம்களில் இருந்து திட்டவட்டமான ரீதியில் திருப்பி அனுப்புவது அவசியமாகிறது, சான்றாக, [கிரேக்க தீவான] லெஸ்பொஸ் இல் இருந்து துருக்கிக்கு அனுப்பியதைப் போல. … லிபியாவில், குறைந்தபட்சம் நாம் குடியேற்ற பகுதிகளை கட்டமைக்க வேண்டும், சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை நாம் அங்கே திருப்பி விட முடியும்,” என்றார்.
“இழிவான-அருவருக்கத்தக்க-, நலன்கள் சார்ந்த வெளியுறவு கொள்கை,” “இராணுவ நடவடிக்கைகளுக்காக மிகப் பெரியளவில் செலவிடுவது,” “கடுமையாக நாடு கடத்துவது"—இவையெல்லாம் தான் இன்று பதவியேற்கும் புதிய அரசாங்க கொள்கைகளின் மைல்கல்லாக இருக்கின்றன. இது நாஜி ஆட்சி தூக்கியெறியப்பட்டதற்கு பிந்தைய மிகவும் வலதுசாரி ஜேர்மன் அரசாங்கமாக இருக்கப் போகிறது.
கட்டுரையாளர் பரிந்துரைக்கும் பிற கட்டுரைகள்:
Germany: Grand coalition expands foreign operations in Afghanistan and Iraq
[8 March 2018]
ஜேர்மனியில் பதவியேற்க உள்ள உள்துறை அமைச்சர் பொலிஸ் அரசு நடவடிக்கைகள், பரந்தளவிலான நாடு கடத்தல்கள் பற்றி அறிவிக்கிறார்
[13 March 2018]