Print Version|Feedback
Germany: The new Social Democratic ministers
ஜேர்மனி: சமூக ஜனநாயகக் கட்சியின் புதிய அமைச்சர்கள்
By Peter Schwarz
10 March 2018
கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியுடன் (CDU/CSU) சேர்ந்து அமையவிருக்கும் கூட்டணி அரசாங்கத்தில் இடம்பெறவிருக்கும் தனது அமைச்சர்களின் பெயரை சமூக ஜனநாயகக் கட்சி (SPD) வெள்ளிக்கிழமையன்று அறிவித்தது. புதிய அமைச்சரவையின் அங்கத்தவர்கள் பட்டியலை இது நிறைவு செய்கிறது. CDU மற்றும் CSU பிப்ரவரி இறுதியிலேயே தமது அரசாங்க அங்கத்தவர்களது பெயர்களை அறிவித்து விட்டன. அடுத்த புதன்கிழமையன்று, நாடாளுமன்றத்தால் நான்காவது முறையாக சான்சலராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அங்கேலா மேர்கெல் போட்டியிடுகிறார், அதனைத் தொடர்ந்து நாட்டின்க ஜனாதிபதி அவரது அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். பொதுத் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பின்னர், ஒருவழியாக ஜேர்மனி மீண்டும் ஒரு இயல்பான அரசாங்கத்தைக் கொண்டிருக்கிறது.
நாஜி ஆட்சி தூக்கிவீசப்பட்டதற்குப் பிந்தைய காலத்தின் மிக வலது-சாரி ஜேர்மன் அரசாங்கமாக இது இருக்கப் போகிறது. CDU/CSUக்கும் SPDக்கும் இடையில் நிறைவடைந்திருக்கும் கூட்டணி உடன்பாட்டில் இது தெளிவாகத் தெரிகிறது. இராணுவ செலவினத்தை இரட்டிப்பாக்குதல், சமூக வெட்டுகளின் ஒரு புதிய சுற்று, ஜேர்மனிக்கான மாற்றின் (AfD) வலது-சாரி அகதிகள் கொள்கையை ஏற்றுக்கொள்ளுதல், மற்றும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவதற்கு ஒரு போலிஸ் அரசை ஸ்தாபிப்பது ஆகியவற்றில் இது கவனம் குவிக்கிறது.
இந்த பிற்போக்குத்தனமான வேலைத்திட்டத்தை அமுலாக்குவதற்கு ஏற்றவகையில் அமைச்சர்கள் குறிப்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப்போது “தாயக” த்தையும் (homeland) சேர்த்துக் கொள்கின்ற வகையில் விரிவுபடுத்தப்பட்டிருக்கும் உள்துறை அமைச்சகம் CSU இன் தலைவரும் பவேரியன் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஹோர்ஸ்ட் ஸீஹோஃபர் கைவசம் வந்திருப்பதில் இது தெளிவாக விளங்கப்படுத்தப்படுகிறது. சட்டம் ஒழுங்கு விவகாரங்களில், CSUவானது CDUக்கு இன்னும் அதிகமாய் வலதின் பக்கத்தில் நிற்கிறது.
CDU இல் வலது-சாரி பழமைவாதிகளுக்கு செய்தித்தொடர்பாளராக இருக்கின்ற ஜென்ஸ் ஸ்பான் மற்றும் CSU இன் முன்னாள் பொதுச் செயலரும் ஒரு வலது-சாரி வாய்வீச்சாளருமான அண்டி ஸ்யொர் ஆகியோர் புதிய அரசாங்கத்தில் சேர்க்கப்பட்டிருப்பது இந்த வலது-சாரி திருப்பத்திற்கான ஒரு மேலதிக வெளிப்பாடாக இருக்கிறது. ஸ்பான் சுகாதார அமைச்சராகிறார், ஸ்யொர் போக்குவரத்துத் துறையைப் பெறுகிறார்.
SPD இன் சாமானிய உறுப்பினர்கள் ஒரு தெளிவான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் இந்த வலது-சாரி கூட்டணி உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்திருப்பதன் பின்னர், புதிய அமைச்சரவையில் அது ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கவிருக்கிறது. கட்சி 70 ஆண்டுகளில் அதன் மோசமான தேர்தல் முடிவுகளைப் பெற்ற நிலையிலும், புதிய அரசாங்கத்தில் விகிதாசார பொருத்தமற்று ஆறு அமைச்சர்களைப் பெறுகிறது.
வெளியுறவு மற்றும் தொழிலாளர் அமைச்சகங்கள் தவிர மூன்றாவது முக்கியமான துறையாக, சான்சலரின் அலுவலகத்திற்குப் பின்னர் அதிகாரத்தின் மிக செல்வாக்கான மையமாகக் கருதப்படுகிற நிதி அமைச்சகமும் அது பெறவிருக்கிறது. இந்தக் காரணத்திற்காக, மேர்கெல் பொருளாதார விவகாரத் துறை அமைச்சகத்தை CDUவிடம் ஒப்படைக்க வேண்டியதானது. நீதி, குடும்ப நலம் மற்றும் பொருளாதார அமைச்சகங்கள் தொடர்ந்தும் SPD ஆல் தலைமை கொடுக்கப்பட இருக்கின்றன.
ஹேம்பர்க் நகரபிதாவான ஓலாவ் ஷொல்ஸ் புதிய நிதி அமைச்சராகவிருக்கிறார், துணை சான்சலராக இவர் ஆறு SPD அமைச்சர்களது ஒருங்கிணைப்புக்கும் பொறுப்பானவராக இருப்பார் என்பதால் ஒரு பிரதான பாத்திரத்தைக் கொண்டவராக இருக்கிறார்.
ஷொல்ஸ் SPD இன் வலது-சாரி முன்னணிப் பிரதிநிதிகளில் ஒருவராவார். அவருக்கு முன்னிருந்த வொல்வ்காங் ஷொய்பிளவின் (CDU) கடுமையான சிக்கன நடவடிக்கைகளை கறாராகப் பின்பற்றுவார். ஒரு சமப்படுத்தப்பட்ட வரவு-செலவுத் திட்டம் என்னும் இலக்கு SPDக்கும் மீறவியலாததாகும் என்று ஏற்கனவே அவர் வாக்குறுதியளித்திருக்கிறார். இது குறிப்பாக, பாரிஸில், ஜனாதிபதி மக்ரோன் அரசாங்கம், நிதிக் கொள்கையில் ஒரு தளர்வுக்கு நம்பி வந்த நிலையில், அங்கு பிரமைவிலகச் செய்யும்.
SPD இன் பொதுச் செயலாளராக ஷொல்ஸ் 2010 திட்டநிரல் மற்றும் சான்சலர் கெரார்ட் ஸ்ரோடரின் ஹார்ட்ஸ் சட்டங்களின் கீழ் நல உதவிகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீது பாரிய தாக்குதல்கள் அறிமுகம் செய்யப்பட்டதை ஆதரித்தவராவார்; மேர்கெலின் கீழான முதல் மாபெரும் கூட்டணியில் தொழிலாளர் அமைச்சராக அவர் ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்தினார். ஹாம்பேர்க் மேயராக இருந்த சமயத்தில், ஜி20 ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக கொடூரமான போலிஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டதைக் கொண்டு சமீபத்தில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார்.
அரசாங்கத்தில் SPDயானது இரட்டை செயல்பாட்டை பூர்த்தி செய்கிறது. ஜேர்மனி மீண்டும் இராணுவவாதத்திற்கும் பெரும் சக்தி அரசியலுக்கும் திரும்புவதில் அது நீண்டகாலமாய் ஒரு முன்னணிப் பாத்திரம் வகித்து வந்திருக்கிறது; சமூக ஜனநாயக வெளியுறவு அமைச்சர்கள் ஃபிராங்-வால்டர் ஸ்ரைன்மரும் சிக்மர் காப்ரியலும் நீண்டகாலத்திற்கு முன்பே ஒரு தொனியை அமைத்து விட்டிருக்கின்றனர். தொழிலாள வர்க்கத்தில் சமூக நாசத்திற்கும் இராணுவவாதத்திற்கும் எதிராக பெருகிச் செல்கின்ற எதிர்ப்பை கட்டுப்படுத்தி வைப்பதற்கும் ஒடுக்குவதற்கும் கூட அது பொறுப்பானதாய் இருக்கிறது.
SPD தொழிலாளர்கள் மத்தியில் தனது வாக்கு அடித்தளத்தை பெருமளவில் தொலைத்து விட்டிருக்கிறது. இருப்பினும், இப்போதும் கூட, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், அரசபணியாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் முழு-நேர தொழிற்சாலை குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் ஒரு நெருக்கமான பின்னலை அது கொண்டிருக்கிறது, இப்பின்னல் எந்த சமூக எதிர்ப்பையும் நிலைதடுமாறச் செய்கிறது.
மொத்த நிதிநிலை ஒதுக்கீட்டில் ஐந்தில் இரண்டு பங்காக, 140 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கீட்டுடன், தொழிலாளர் அமைச்சகம் ஒரு முக்கியமான பாத்திரம் வகிக்கிறது. கடந்த அரசாங்கத்தில், ஆண்ட்ரியா நாலெஸ் இந்த துறைக்கு தலைமையிலிருந்தார். IG Metall சங்கத்தின் ஒரு அங்கத்தவரான நாலெஸ் தொழிற்சங்கங்களுடன் நெருக்கமான உறவுகள் கொண்டிருப்பவராவார், அவற்றின் பேரணிகளில் தொடர்ந்து உரையாற்றி வருபவர். இப்போது SPD இன் நாடாளுமன்றப் பிரிவின் தலைவராகவும் கட்சியின் தலைவராகவும், நாலெஸ், கட்சியை அரசாங்கத்தின் பின்னால் கொண்டுவருகின்ற வேலையை சுமக்கிறார்.
கூபேர்ட்டுஸ் ஹெய்ல் புதிய தொழிலாளர் அமைச்சராகவிருக்கிறார், இவர் இதுவரையிலும் திரைக்குப் பின்னால் தான் பிரதானமாக இயங்கி வந்திருப்பவராவார். இரண்டுமுறை SPD இன் பொதுச் செயலராக இருந்திருக்கிறார், 2009 மற்றும் 2017 தேர்தல்களிலான படுதோல்விகளுக்குப் பின்னர் அந்த இரண்டு முறையுமே பதவி இழந்திருந்தார். நாலெஸ் போலவே, ஹேய்லும் IG Metall இன் ஒரு அங்கத்தவராவார், விரிந்த தொடர்புகள் கொண்டவர். “வலைப்பின்னல்” -“network”- என்று சொல்லப்படுகின்ற SPD இன் அங்கத்தவர்களில் தமது சொந்த அரசியல்வாழ்க்கைகளை மேலுயர்த்துவதிலேயே பிரதானமாக அக்கறை கொண்டவர்களது ஒரு செல்வாக்கான கூட்டமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவராவார்.
குடும்ப விவகாரங்களுக்கான அமைச்சராக ஆச்சரியமூட்டும் வகையில் பிரான்ஸிஸ்கா ஹிவ்வி நியமிக்கப்பட்டிருப்பதும் சமூக எதிர்ப்பை ஒடுக்குகின்ற அம்சத்தைக் கொண்டு காணப்பட வேண்டியதாகும். பேர்லினில் உள்ள நகரமான Neukölln இன் நகரமேயரான இவர், மாநில அளவில் அல்லது கூட்டரசாங்க அளவில் எந்த அரசியல் பதவியும் ஒருபோதும் வகித்திராதவருமான இவர், கிழக்கில் இருந்து வருபவர், ஒரு பெண், 40 வயதுக்குக் கீழ்ப்பட்டவர் என பல தகுதிப்பெட்டிகளை பூர்த்தி செய்கின்ற காரணத்தைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். சமூக எதிர்ப்பை வலது-சாரி பாதைகளுக்குள் மாற்றி விடுவதில் ஹிவ்வி கைத்தேர்ச்சி பெற்றவர். தனது புத்தகங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அகதிகளுக்கு எதிரான சூழலுக்கு நஞ்சூட்டிய Heinz Buschkowsky தான் Neukölln மாவட்டத்தில் இவரது அரசியல் குருவாகவும் முன்னோடியாகவும் இருந்தார். Buschkowsky போலவே ஹிவ்வியும் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக ஒரு கடுமையான பாதையை எடுப்பதற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருப்பவராவார்.
ஷொல்ஸ் உம் நாலெஸும் பெரும்பாலும் பரந்த கலந்தாலோசனை இல்லாமல் தீர்மானித்திருந்த புதிய அமைச்சர் தெரிவுகளில் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருக்கும் முடிவு வெளியுறவு அமைச்சகத்துக்கான தெரிவாகும். முன்னாள் நீதி அமைச்சரான ஹெக்கோ மாஸ் தான் இந்த பதவியில் அமரவிருக்கிறார், இவருக்கு வெளியுறவுக் கொள்கை விடயங்களில் எந்த முன்னனுபவமும் கிடையாது. ஊடகங்கள் அவற்றின் காப்பக ஆவணங்களில் சல்லடை போட்டுத் தேடியும், வெளியுறவுக் கொள்கை விடயங்களில் மாஸ் கூறியதாக ஒரேயொரு அர்த்தமுள்ள வாசகத்தையும் கூட அவற்றால் தேடிக் கண்டுபிடித்து விட முடியவில்லை.
சார்லாந்தில் பிறந்த இந்த அரசியல்வாதியின் வளர்ச்சிக்கு எல்லாவற்றையும் விட முக்கியக் காரணம் அவரது வளைந்து கொடுக்கும் தன்மையும், முதுகெலும்பற்ற பண்பும், மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு அவர் காட்டும் அலட்சியமுமேயாகும். நீதி அமைச்சராக, அவர் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பலவீனப்படுத்துகின்ற பல சட்டங்களுக்கு பொறுப்பானவராய் இருந்தார். 2015 இல் நிறைவேற்றப்பட்ட தரவு தொடர்ந்து வைத்துக் கொள்ளும் சட்டம் -அதற்கு அரையாண்டுக்கு முன்பாக மாஸ் இதனை ஆவேசமாக நிராகரித்திருந்தார்- மற்றும் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் உள்ளடக்க தணிக்கை செய்ய வேண்டும் இல்லையேல் கடுமையான அபராதங்களுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு கீழ்ப்படியச் செய்கிற வலைத்தள அமலாக்கச் சட்டம் ஆகியவையும் இவற்றில் அடங்கும். மாஸ், தனது நண்பியான நடிகை நடாலியா வோர்னர் உடன் பேர்லின் பிரபலங்கள் மத்தியில் கலந்து பழக விரும்புபவரும், பேர்லின் வருடாந்திர திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்பைப் பெறுபவருமாவார், ஜனநாயக விரோத #MeToo பிரச்சாரத்திற்கு முன்மொழிந்தவர்களில் ஒருவராகவும் இருப்பவர்.
முன்னாள் வெளியுறவு அமைச்சரான சிக்மார் காப்ரியல் -இப்போதைய கருத்துக்கணிப்புகள் அவரை மிகவும் பிரபலமான SPD அரசியல்வாதியாக மதிப்பிடுகின்றன, அவர் பதவியில் தொடர்வதற்கு ஆதரவாக இருக்கின்றன என்ற நிலையிலும்- ஷொல்ஸ் மற்றும் நாலெஸால் தெரிவு செய்யப்படவில்லை. வணிகப் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், நிதி தினசரியான Handelsblatt, Süddeutsche Zeitung, 88 வயதாகும் மெய்யியல் அறிஞர் Jürgen Habermas மற்றும் பலரின் ஆதரவு இவருக்கு இருந்தது.
காப்ரியலுக்கும் SPD இன் தலைமைக்கும் இடையிலான விரிசலுக்கான காரணமாக கிட்டத்தட்ட அத்தனை கருத்துவிவரிப்புகளிலும் கூறப்பட்டது அவரது தனிப்பட்ட கணிக்கமுடியாத குணம்: அவர் “அபாரமான திறமை” கொண்டவர், ஆனால் “அழிவுகரமான சக்தி”யும் பெருமளவில் கொண்டிருக்கிறார், “கவனம் ஈர்க்கக் கூடியவர்” ஆனாலும் “நாசம் விளைவிக்கும் வகையில்” செயல்படுபவர், “குணாதிசய கோளாறுகள்” கொண்டவர், “ஒத்து” நடக்க மாட்டார், “குழுவாக செயல்படமாட்டார்” மற்றும் எப்போதும் அவரது “அரசியல் மனப்பக்குவத்தை” கட்டுப்பாட்டில் கொண்டிருக்காதவர்.
இவையனைத்தும் ஒரு பாத்திரம் வகிக்கக் கூடும். கூட்டணி உடன்பாட்டின் மீதான உறுப்பினர்களின் வாக்கெடுப்பை தொடர்ந்து, நாலெஸும் ஷொல்ஸ் உம் “ஒற்றுமை”யின் மீது வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். எதிர்ப்புகள் அத்தனையையும் மீறி வலது-சாரி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை அமலாக்குவதில் SPD ஐ தடுக்கின்ற விதமாக கட்சித் தலைமைக்குள் எந்த பகிரங்கமான மோதல்களையும் அனுமதிக்க இவர்கள் விரும்பவில்லை. இக்காரணத்தினால், புதிய அமைச்சர்களது பெயர்களை அறிவித்த சமயத்தில், அவர்கள் அனைவரும் “குழுவாய் செயல்படுபவர்கள்” என்பதை இவர்கள் வலியுறுத்தினர்.
காப்ரியல் உடனான சண்டைக்கு தனிப்பட்ட காரணங்கள் மட்டுமல்லாது அரசியல் காரணங்களும் இருக்கின்றன. வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் பகிரங்கமாக மோதிக் கொண்டால் அது அத்தனை தரப்புகளின் திட்டங்களையும் வெளிச்சத்துக் கொண்டுவருவதோடு அச்சத்தையும், நிராகரிப்பையும் மற்றும் எதிர்ப்பையும் கட்டவிழ்த்து விடக்கூடும் என்பதால் எவரொருவரும் இதுகுறித்துப் பேச விரும்புவதில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு அரசியல் பெரும்சக்தியாக கட்டியெழுப்பும் பொருட்டு பிரான்ஸ் உடனான நெருக்கமான இராணுவ ஒத்துழைப்புக்கு ஆலோசனையளித்து வருபவர்களில் காப்ரியலும் ஒருவராவார். இக்காரணத்தால், நிதிக் கொள்கையில் சலுகைகள் காட்டுவதற்கும் கூட அவர் தயாரிப்புடன் இருக்கிறார், ஆனால் SPD மற்றும் மாபெரும் கூட்டணியின் மற்ற பிரதிநிதிகள் இதனை நிராகரிக்கின்றனர்.
அத்துடன் ஜேர்மனி அமெரிக்காவில் இருந்து மிகத் தெளிந்த வகையில் தன்னை தள்ளி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து பகிரங்கமாக வலியுறுத்தி வந்திருக்கிறார். “ட்ரம்ப்பின் ஒரு அசாதாரணமான ஜனாதிபதி பதவிக் காலத்திற்குப் பிந்தைய காலத்தில், நாம் நமது பழைய கூட்டுக்குத் திரும்புவோம்” என்பதான நம்பிக்கையை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை மூன்று மாதங்களுக்கு முன்பாக அவர் கூறியிருந்தார். ரஷ்யாவுக்கு எதிரான தடைகளைத் தளர்த்துவதற்கு அவர் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்திருக்கிறார் என்பதுடன், அமெரிக்காவுடன் முறுக்கிக் கொண்டு நிற்கின்ற துருக்கியுடன் நெருக்கத்தை கூட்டுவதற்கு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதுவிடயத்தில் SPD மற்றும் மாபெரும் கூட்டணி இரண்டிற்குள்ளேயுமே கருத்துபேதங்கள் இருக்கின்றன.
இன்னொரு பக்கத்தில், ஜேர்மனி ஒரு மூர்க்கமான வல்லரசுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டுமென்றால் அது தன் இராணுவத் திறனை பாரிய அளவில் மேம்படுத்தியாக வேண்டும் என்ற உண்மை குறித்து காப்ரியல் உடன் உடன்பாடு நிலவுகிறது. ஜேர்மனி அதன் “சொந்த நலன்களை” சூத்திரப்படுத்த வேண்டும், “உலகம் குறித்த ஒரு மூலோபாய கண்ணோட்டத்தை பயில வேண்டும்”, “விழுமியங்கள் அடிப்படையிலான ஒரு வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதாக மலிவாக கூறிக் கொள்வதுடன் அது திருப்தியடைந்து விடக் கூடாது” என்பதெல்லாம் அவரது கோரிக்கைகளாய் இருக்கின்றன. ஐரோப்பா இராணுவத்தை கைவிட முடியாது, ஏனென்றால் “மாமிச உண்ணிகளின் ஒரு உலகத்தில், ஒரே சைவப் பிராணியாக காலம் தள்ளுவது மிகக் கடினமான காரியம்” என்பதான வசனத்தையும் அவர் உருவாக்கியிருந்தார்.
வெளியுறவு அமைச்சர் காப்ரியல் இல்லாவிடினும் மாபெரும் கூட்டணி, குறிப்பாக தனது இப்போதைய பதவியை புதிய அரசாங்கத்திலும் தக்கவைத்துக் கொள்ள இருக்கின்ற பாதுகாப்பு அமைச்சரான ஊர்சுலா வொன் டெர்லையன் (CDU), இதில் உறுதியுடன் நிற்கின்றனர்.