Print Version|Feedback
Ecuador cuts off Julian Assange’s access to the outside world
ஜூலியன் அசான்ஜ் வெளியுலகை அணுகுவதை ஈக்வடோர் தடுக்கிறது
By Mike Head
29 March 2018
விக்கிலீக்ஸ் பதிப்பாசிரியர் ஜூலியன் அசான்ஜ் முன்னாள் கட்டலோனிய பிராந்திய பிரதமர் கார்லெஸ் புய்க்டெமொன்ட் இன் கைதை கண்டித்து ஒரு ட்வீட் செய்தி அனுப்பியதற்காக, ஈக்வடோரின் இலண்டன் தூதரகத்திற்கு உள்ளிருந்து அவர் தகவல்கள் பரிமாறுவது மற்றும் தொடர்பு கொள்வது என அனைத்தையும் ஈக்வடோர் அரசாங்கம் துண்டித்துள்ளது.
விக்கிலீக்ஸ் நேற்று உறுதிபடுத்தியது: “விக்கிலீக்ஸ் பதிப்பாசிரியர் @ஜூலியன் அசான்ஜ் கூண்டில் அடைக்கப்பட்டு, ஈக்வடோரின் புதிய ஜனாதிபதி @லெனின் மொரீனோவின் உத்தரவின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரால் ட்வீட் செய்யவோ, பத்திரிகைகளோடு பேசவோ, பார்வையாளர்களைச் சந்திக்கவோ அல்லது தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளவோ முடியாது.”
ஜூலியன் அசான்ஜ் உலகெங்கிலுமான அவரது எண்ணற்ற ஆதரவாளர்களுடன் தகவல் பரிமாறிக் கொள்வதற்கான தகைமை மீதான புதிய கட்டுப்பாடுகளை உலக சோசலிச வலைத் தளத்தின் பதிப்பாசிரியர் குழு கண்டிக்கிறது.
இம்மாத தொடக்கத்தில் இங்கிலாந்தின் சாலிஸ்பர் நகரில் முன்னாள் ரஷ்ய இரட்டை உளவாளியான சேர்ஜி ஸ்கிர்பால் மற்றும் அவர் மகள் யூலியாவுக்கு நரம்புகளைத் தாக்கும் நஞ்சு வழங்கப்பட்டதாக கூறுபடும் சம்பவத்திற்கு ரஷ்யா தான் பொறுப்பு என்ற பிரிட்டனின் குற்றச்சாட்டுக்கு சவால்விடுத்து அசான்ஜ் திங்களன்று ட்வீட் செய்த பின்னர், செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட ஈக்வடோரின் இந்த நகர்வு வந்தது.
ஈக்வடோரின் முடிவு அசான்ஜ் க்கு ஒரு பயங்கர அச்சுறுத்தலாகும். அவர் அந்த சிறிய தூதரகத்தில் நடைமுறையளவில் ஒரு கைதியாக முழு தனிமைப்பாட்டை முகங்கொடுப்பதுடன், மரண தண்டனைகளுக்குரிய குற்றங்களாக கருதப்படும் உளவுவேலைகளில் ஈடுபட்டதற்காக மற்றும் தேசதுரோகத்திற்காக அமெரிக்காவில் வழக்கு விசாரணைக்காக ஒப்படைக்கப்படும் அதிகரித்த அபாயத்தையும் அவர் முகங்கொடுக்கிறார்.
இதற்கு கூடுதலாக ஈக்வடோரின் நகர்வானது, அரசியல் அதிருப்தி மற்றும் ஏகாதிபத்திய மற்றும் போர் எதிர்ப்பை மவுனமாக்க, அதிகரிக்கப்பட்டு வரும் இணைய தணிக்கையுடன் சேர்ந்து, அதே வரிசையில் உலகளாவிய பேச்சு சுதந்திரம் மீதான ஒரு நேரடி தாக்குதலும் ஆகும்.
அசான்ஜ் அந்த ட்வீட் சேதியை நீக்க வேண்டுமென ஈக்வடோர் கோரியதாக விக்கிலீக்ஸ் அறிவித்தது, அதில் அவர் ஸ்பானிய அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டலோனிய தலைவரை கைது செய்வதென்ற ஜேர்மனியின் முடிவுக்கு உறைய வைக்கும் வரலாற்று முன்னுதாரணத்தை அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
“1940 இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டலோனிய ஜனாதிபதி லுயிஸ் கொம்பானிஸ், ஸ்பெயினின் கோரிக்கைக்கு இணங்க கெஸ்டாபோவினால் பிடிக்கப்பட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, கொல்லப்பட்டார். இன்றோ, ஜேர்மன் பொலிஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டலோனிய ஜனாதிபதி கார்லெஸ் புய்க்டெமொன்ட் ஐ, ஸ்பெயின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கைது செய்துள்ளது, அவர்களிடம் ஒப்படைக்க உள்ளது.”
ஹிட்லரின் இரகசிய பொலிஸ் கெஸ்டாபோ, கொம்பானிஸை கைது செய்தது, ஜேர்மன் ஆதரவுடன் தளபதி பிராங்கோ ஸ்பானிஷ் புரட்சியை நசுக்கி, ஒரு மூர்க்கமான சர்வாதிகாரத்தை ஸ்தாபித்ததும் 1939 இல் அவர் பிரான்சுக்கு தப்பியோடி இருந்தார். நாஜிக்கள் கொம்பானிஸை மாட்ரிட் வசம் ஒப்படைத்தனர், அங்கே அவர் சித்திரவதை செய்யப்பட்டு, மரண தண்டனை விதிகப்பட்டு, கொல்லப்பட்டார்.
ஈக்வடோரின் நடவடிக்கைக்கு பின்னணியில் ஐரோப்பிய மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகள் உள்ளன. ஈக்வடோர் ஓர் அறிக்கையில் குறிப்பிடுகையில், சமூக ஊடகங்களில் அசான்ஜின் சமீபத்திய நடவடிக்கை "ஐக்கிய இராஜ்ஜியத்துடனும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய அரசுகளுடனும் மற்றும் மற்ற நாடுகளுடனும் [ஈக்வடோர்] பேணும் நல்லுறவை அபாயத்திற்கு உட்படுத்துவதாக" குறிப்பிட்டது.
பிரிட்டனும் அதன் கூட்டாளிகளும் ஸ்கிர்பால் நஞ்சூட்டல் விவகாரத்தில் ரஷ்ய தூதர்களை ஏன் வெளியேற்றின என்று திங்களன்று அசான்ஜ் கேள்வி எழுப்பியிருந்தார். “ரஷ்ய அரசை சந்தேகத்திற்குரிய முதல்நபராக காண்பதற்கு தெரேசா மே க்கு காரணங்கள் இருந்தாலும் கூட, இதுவரையில் ஆதாரங்கள் முழுமையாக நிரூபிக்காத நிலையில் மற்றும் OPCW [இரசாயன ஆயுத தடுப்பு அமைப்பு] இதுவரையில் சுதந்திரமாக உறுதிப்படுத்தவில்லை என்ற நிலையில், இது ரஷ்யா துன்புறுத்தப்படுகிறது என்ற கண்ணோட்டத்தை உள்நாட்டில் கொண்டு செல்ல அனுமதிக்கிறது,” என்று ட்வீட் செய்தார்.
அசான்ஜ் மற்றொரு ட்வீட் சேதியில், “இங்கிலாந்தில் நடந்த ஒரு தீர்க்கப்படாத சம்பவம் தொடர்பாக 21 அமெரிக்க நேச நாடுகள் தூதர்களை வெளியேற்றி உள்ளன, பாதிகப்பட்ட நாடாக கூறப்படும் பிரிட்டன் வெளியேற்றிய தூதர்களை விட அண்மித்து மூன்று மடங்கு அதிகமான தூதர்களை அமெரிக்கா வெளியேற்றியது,” என்பதை சுட்டிக்காட்டினார்.
அசான்ஜிக்கு எதிராக ஸ்வீடன் அரசாங்கத்தின் ஜோடிக்கப்பட்ட "பாலியல் மோசடி" குற்றச்சாட்டுக்கள் நீண்டகாலத்திற்கு முன்னரே கைவிடப்பட்டுவிட்டன என்றாலும், அவர் ஈக்வடோர் தூதரகத்தற்கு வெளியே கால் வைத்தால் இன்னமும் அவர் உடனடியாக கைது செய்யப்படுவதை முகங்கொடுக்கிறார், அங்கே அந்த தூதரகத்தில் சூரிய ஒளி, சுத்தமான காற்று அல்லது உடற்பயிற்சிகளை சிறிதளவே அணுக கூடிய நிலையில் அண்மித்து ஆறு ஆண்டுகளாக அடைபட்டு உள்ளார்.
ஸ்வீடன் அதிகாரிகள், அங்கே ஒருபோதும் எந்த முறையான வழக்கும் முதலிடத்தில் இல்லை என்பதை நிச்சயமாக உறுதிப்படுத்தி, கடந்த ஆண்டு உத்தியோகபூர்வமாக அவர்களின் விசாரணைகளை மூடிவிட்டார்கள். என்ன சம்பந்தப்பட்டிருந்தது என்றால் விக்கிலீக்ஸை மரியாதை இழக்க செய்து முடக்குவதையும், அசான்ஜை சிறை கம்பிகளுக்குப் பின்னால் தள்ளுவதையோ அல்லது அதை விட மோசமானதை நடத்துவதையோ நோக்கமாக கொண்ட ஒரு "கேவலமான உத்திகளின்" நடவடிக்கையே சம்பந்தப்பட்டிருந்தது.
செவ்வாயன்று ஈக்வடோர் குறிப்பிடுகையில், அசான்ஜ் “மற்ற நாடுகளுடன் குறுக்கிடும் சேதிகளை வெளியிடுவதில்லை என்று 2017 இறுதியில் அரசுக்கு வழங்கிய எழுத்துபூர்வ கடமைப்பாட்டை" மீறிவிட்டதாக குறிப்பிட்டது.
ஆனால் அதன் நடவடிக்கைகள் அதன் முந்தைய நடவடிக்கைகளையும் கடந்து செல்கிறது. அக்டோபர் 2016 இல், விக்கிலீக்ஸ் ஹிலாரி கிளிண்டனின் ஜனாதிபதி பிரச்சாரத்திலிருந்து கசியவிடப்பட்ட அதிர்ச்சியூட்டும் மின்னஞ்சல்களை பிரசுரித்ததும், அது அசான்ஜின் இணைய அணுகுதலை இடைநிறுத்தியது. மே 2017 இல், ஈக்வடோரிய ஜனாதிபதி மொரீனோ வலியுறுத்துகையில், கட்டலோனியா உடனான ஸ்பெயினின் பிரச்சினை குறித்து கருத்துரைப்பதை அசான்ஜ் நிறுத்திக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். மாட்ரிட் "ஒடுக்குமுறைக்காக" குற்றவாளி ஆகிறது என்று அசான்ஜ் ட்வீட் செய்திருந்தார்.
ஸ்கிரிபால் விடயத்தில் அசான்ஜின் கருத்துரைக்குப் பின்னர், பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் அலன் டுன்கன் அவரை ஒரு "இரங்கத்தக்க சிறு புழு" என்று குறிப்பிட்டதுடன், அவர் ஈக்வடோர் தூதரகத்திலிருந்து வெளியே வந்து, பிரிட்டிஷ் "நீதியின்" முன் சரணடைய வேண்டுமென தெரிவித்தார்.
அசான்ஜ் அதற்கு பதிலளித்தார்: “உண்மையை பிரசுரித்ததற்காக அமெரிக்காவிடம் என்னை ஒப்படைக்க விரும்புகிறதா என்பதை பிரிட்டன் தெளிவுபடுத்த வேண்டும் என்பதோடு, இவ்விடயத்தில் ஐ.நா. தீர்ப்புகளை அது தொடர்ந்து மீறி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.”
2015 இல், நியாயமற்ற தடுப்புக்காவல் மீதான ஐ.நா. செயற்குழு அசான்ஜின் கைது நடவடிக்கையை "நியாயமற்றது, காரணமற்றது, அவசியமற்றது, பொருத்தமற்றது,” என்று கண்டித்ததுடன், அவரை உடனடியாக விடுதலை செய்து இழப்பீடு வழங்க வேண்டுமென அழைப்பு விடுத்தது.
பிரிட்டிஷ் நீதித்துறையின் உண்மையான முகம் பெப்ரவரியில் வெளிக்காட்டப்பட்டது. ஸ்வீடன் முன்னெடுத்த ஐரோப்பிய கைது பிடியாணை மே 2017 இல் இரத்து செய்யப்பட்டிருந்த நிலையிலும் கூட, இது ஒரு பிரிட்டிஷ் பிடியாணைக்கு தூண்டுதலாக இருந்த நிலையில், அசான்ஜ் அவருக்கு எதிராக 2012 இல் வழங்கப்பட்ட அந்த பிரிட்டிஷ் கைது பிடியாணையை இரத்து செய்யுமாறு விண்ணப்பித்த ஒரு மனுவை இலண்டன் நீதிபதி ஒருவர் நிராகரித்தார்.
கடந்த ஏப்ரலில் ட்ரம்ப் நிர்வாகத்தின் அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செசென்ஸ் கூறுகையில், மூடிமுத்திரையிடப்பட்ட அமெரிக்க குற்றப்பத்திரிகையை முகங்கொடுக்க அசான்ஜின் கைது "ஒரு முன்னுரிமையாக" இன்னும் இருக்கிறது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அதன் போர் குற்றங்களையும், உலகெங்கிலும் அதன் இராஜாங்க ஊடுருவல்கள் மற்றும் மக்கள் மீதான கண்காணிப்புகளையும் அம்பலப்படுத்தியதற்காக அசான்ஜை தண்டிக்கவும் மவுனமாக்கவும் அமெரிக்க அரசியல், இராணுவம் மற்றும் உளவுத்துறை ஸ்தாபகம் தீர்மானமாக உள்ளது.
2007 அமெரிக்க ஹெலிகாப்டர் படுகொலையில் 12 அப்பாவி ஈராக்கியர்கள் கொல்லப்பட்டதை எடுத்துக்காட்டும் "சமகாலத்திய படுகொலை" காணொளியை விக்கிலீக்ஸ் வெளியிட்டமை, 250,000 க்கும் அதிகமான இரகசிய அமெரிக்க இராஜாங்க ஆவணங்களைப் பிரசுரித்தமை, மற்றும் கணினி வலையமைப்புகள் மீது இரகசியமாக கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக சிஐஏ இன் "தகவல் திருட்டு மென்பொருள்" நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் அடங்கிய ஆயிரக் கணக்கான கோப்புகளை பிரசுரித்தமை ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.
கட்டுரையாளர் பரிந்துரைக்கும் மற்ற கட்டுரை:
Freedom for Julian Assange!
[11 January 2018]