Print Version|Feedback
War clouds gather over Munich Security Conference
மூனீச் பாதுகாப்பு மாநாட்டைச் சுற்றி போர் மேகங்கள் சூழ்கின்றன
By Peter Schwarz
16 February 2018
கிறிஸ்டோபர் கிளார்க், The Sleepwalkers எனும் அவர் நூலில் எழுதுகிறார், “ஆயுதக் கிடங்குகள் தொடர்ந்து நிரம்பி வந்தாலும், சில இராணுவ தலைவர்கள் மற்றும் அரச தலைவர்களின் அணுகுமுறையில் போர்குண நிலைப்பாடு அதிகரித்தாலும், ஐரோப்பாவின் சர்வதேச அமைப்புமுறையானது நெருக்கடி மேலாண்மை மற்றும் சமாதானத்திற்கான ஆச்சரியமூட்டும் ஆற்றலை ஒட்டுமொத்தமாக எடுத்துக்காட்டியது" என்பதே முதலாம் உலக போருக்கு முந்தைய கடைசி இரண்டு ஆண்டுகளின் "மிகவும் ஆர்வமூட்டிய அம்சங்களில் ஒன்றாக" இருந்தது.
ஜேர்மனியில் இன்று தொடங்கும் மூனீச் பாதுகாப்பு மாநாட்டை பரிசீலிக்கும் ஒருவர் இந்த வரிகளை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த வருடாந்தர கூட்டம் நூற்றுக் கணக்கான உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ பிரதிநிதிகளை ஒன்றுகூட்டுகிறது, இவர்கள் முக்கிய திட்டங்கள் குறித்த விவாதங்களிலும், இணையாக நடக்கும் நூற்றுக் கணக்கான நிகழ்வுகளிலும், எண்ணற்ற இரகசிய கூட்டங்களிலும் பங்கெடுக்கிறார்கள். உலகின் இருதரப்பிலும் பல்வேறு மோதல் பிராந்தியங்களில் இருந்து பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பூரோஷென்கோ இருவரும் முனீச்சில் உள்ளனர். மத்திய கிழக்கிலிருந்து அதில் கலந்து கொண்டிருக்கும் அரசு தலைவர்களில் பினாலி யெல்ட்ரிம் (துருக்கி), பென்ஜமின் நெத்தனியாகு (இஸ்ரேல்), ஹைதர் அல்-அபாதி (ஈராக்) மற்றும் தமிம் பின் ஹமாத் அல் தானி (கட்டார்) ஆகியோரும், வெளியுறவு அமைச்சர்கள் மொஹம்மத் ஜாவத் ஜரீப் (ஈரான்) மற்றும் அப்தெல் அல்-ஜூபெர் (சவூதி அரேபியா) ஆகியோரும் உள்ளடங்குவர்.
அமெரிக்காவின் சார்பில் பாதுகாப்புத்துறை செயலர் ஜெனரல் ஜேம்ஸ் மாட்டீஸ், தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எச். ஆர். மெக்மாஸ்டர், சிஐஏ தலைவர் மைக் பொம்பியோ மற்றும் தேசிய பாதுகாப்பு முகமையின் தலைவர் டான் கோட்ஸ் ஆகியோர் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். ஜேர்மனி தற்போது தற்காலிக நிர்வாக அரசாங்கத்தை மட்டுமே கொண்டுள்ளது என்றாலும், அது நான்கு அமைச்சர்களைப் பிரதிநிதித்துவம் செய்துள்ளது: ஊர்சுலா வொன் டெர் லெயென் (பாதுகாப்புத்துறை), சிக்மார் காப்ரியேல் (வெளியுறவுத்துறை), தோமஸ் டி மஸியர் (உள்துறை) மற்றும் கெர்ட் முல்லர் (வளர்ச்சித்துறை).
பிரதம மந்திரி தெரேசா மே மற்றும் உளவுத்துறை தலைவர் அலெக்ஸ் யங்கர் ஆகியோரால் பிரிட்டனும், பிரதம மந்திரி மாட்டியூஸ் மோராவ்விசி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மாரியூஸ் பிளாசியாக் ஆகியோரால் போலாந்து, ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் மற்றும் வெளியுறவு கொள்கை உயர்மட்ட பிரதிநிதி ஃபெடெரிகா மொஹேரேனி ஆகியோரால் மற்ற ஐரோப்பிய நாடுகளும் அமைப்புகளும் பலமாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளன.
ஐ.நா. பாதுகாப்புத்துறை செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், நேட்டோ பொது செயலர் ஜெனரல் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் மற்றும் உயர்மட்ட இராணுவ பிரமுகர்களும், சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுக்கான அமைப்பு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஆபிரிக்க ஒன்றியம், செஞ்சிலுவை சங்கம், மற்றும் ஒரு மறைப்புக்காக, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch) ஆகியவற்றின் முன்னணி பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.
இம்மாநாடு, அதிகரித்து வரும் சர்வதேச மோதல்களுக்கான அறிகுறிகளுக்கும் ஒரு கூர்மையான போர் அபாயத்திற்கும் இடையே நடக்கிறது. முனீச் பாதுகாப்பு மாநாட்டு தலைவர், ஜேர்மன் தூதர் வொல்ஃப்காங் இஷிங்கர், இம்மாநாட்டுக்கு அடித்தளமாக சேவையாற்றும் முனீச் பாதுகாப்பு மாநாட்டு அறிக்கையின் முன்னுரையில், “கடந்த ஆண்டில், உலகம் பெரும் மோதலின் விளிம்புக்கு நெருக்கமாக —மிக மிக நெருக்கமாக!— வந்திருந்தது,” என்று எழுதினார்.
வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பதட்டங்கள், சவூதி அரேபியா மற்றும் ஈரானுக்கு இடையிலான உறவுகள், நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான பதட்டங்கள், மத்திய ரக அணுஆயுத படை ஒப்பந்தம் போன்ற குறிப்பிடத்தக்க ஆயுத கட்டுப்பாட்டு உடன்படிக்கைகள் சிதைந்து வருவது, தேசியவாதம் மற்றும் சிதைந்த தாராளவாதம் ஆகியவை இஷிங்கர் குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளில் உள்ளடங்கி இருந்தன.
ஆனால் இந்த உயர்மட்ட மாநாடு பதட்டங்களைத் தணிக்கவும், நிலைமையின் தீவிரத்தைக் குறைக்கவும் கடுமுயற்சி எடுக்குமென யாரொருவர் எதிர்பார்த்தாலும் அவர் ஏமாற வேண்டியிருக்கும். அதற்கு மாறாக, ஒன்று கூடியிருக்கும் வல்லரசுகள், குறிப்பாக ஐரோப்பியர்கள், எவ்வாறு எதிர்வரவிருக்கும் போர்களுக்கு தயாராக மீள்ஆயுதமேந்துவது என்பதே இந்த விவாதங்களின் இதயதானத்தில் இருக்கும் கேள்வியாக உள்ளது.
சர்வதேச ஒழுங்கமைப்பு தோல்வியடையும் ஒரு சூழலை விவரிக்கும் இந்த மூனீச் பாதுகாப்பு அறிக்கை, “அழிவின் விளிம்பை நோக்கியும் திரும்புதலும்?” என்ற அழிவுகரமான தலைப்பைக் கொண்டுள்ளது. இந்த கேள்விக்கான பதிலில், அம்மாநாடு விளிம்பிலிருந்து பின்னோக்கி இழுக்கவில்லை, மாறாக படுபாதாளத்திற்குள் தாவ தயாரிப்பு செய்கிறது. அந்த 90-பக்க பாதுகாப்பு மாநாட்டு அறிக்கையோடு சேர்ந்து, இஷிங்கர், "அதிக ஐரோப்பியம், அதிக இணைப்புடன், அதிக ஆற்றலுடன். எதிர்காலத்திற்கான ஐரோப்பிய ஆயுதப்படைகளைக் கட்டமைத்தல்" என்று தலைப்பிட்ட 50-பக்க ஐரோப்பிய பாதுகாப்புத்துறை அறிக்கை ஒன்றையும் முன்வைத்தார். ஐரோப்பாவுக்கான ஒரு பித்துப்பிடித்த மீள்ஆயுதமயப்படுத்தும் திட்டத்தைக் கொண்டிருந்த இதுபோன்றவொன்றை, படைகளின் முன்னொருபோதும் இல்லாத தயாரிப்பை, இரண்டாம் உலக போருக்கு ஜேர்மன் இராணுவத்தை ஹிட்லர் தயார் செய்ததற்குப் பின்னர் பார்த்திருக்க முடியாது.
என்னென்ன ஆயுத அமைப்புகள் வாங்கப்பட வேண்டும், ஐரோப்பிய சக்திகள் அவற்றின் இராணுவ செலவுகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக உயர்த்தினால் எந்தெந்த போர்கள் சண்டையிடப்பட வேண்டும் என்பது குறித்து விபரமாக விவரிப்பதற்கு, இஷிங்கர், பெருநிறுவன ஆலோசனை நிறுவனம் மெக்கின்செ இன் ஆலோசகர்களை ஈடுபடுத்தி இருந்தார்.
இந்த இலக்கு 2024 க்குள் 28 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் நோர்வே ஆல் எட்டப்பட்டால், அந்த ஆவண தகவலின்படி, “பாதுகாப்புத் துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 114 பில்லியன் அமெரிக்க டாலர் கூடுதல் நிதி கிடைக்கும், இது இங்கிலாந்தின் 2017 பாதுகாப்புத் துறை வரவுசெலவு திட்டக்கணக்கை விட இரண்டு மடங்குக்கு சமமாகும்.” பின் மொத்த ஐரோப்பிய இராணுவ செலவு 378 பில்லியன் டாலராக, 50 சதவீத உயர்வாக இருக்கும். இந்த அதிகரிப்பில் பாதி, “ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயினில் இருந்து வருவதாக இருக்கும்—ஏனெனில் இந்நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகம் என்பதோடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீத வரையறைகளில் இவை ஒப்பீட்டளவில் குறைவான பாதுகாப்புத்துறை வரவுசெலவு திட்டக்கணக்கை கொண்டுள்ளன.”
இஷிங்கர் மற்றும் மெக்கின்செ தமது விருப்பத்தை மூடிமறைக்காமல், எத்தனை டாங்கிகள், ஏவுகணைகள் மற்றும் ஆயுத அமைப்புகளை ஐரோப்பா இந்த தொகையில் வாங்க முடியும் என்பதைக் கணக்கிட்டிருந்தனர். “அதிகரிக்கும் பாதுகாப்புத்துறை வரவுசெலவு திட்டக்கணக்குகள் எதிர்வரவிருக்கும் காலத்தில் ஐரோப்பிய ஆயுதப்படைகளை வடிவமைக்க ஒரு பிரத்யேக வாய்ப்பைத் திறந்து விடும்,” என்றவர்கள் எழுதுகின்றனர். “9/11 தாக்குதலுக்கு விடையிறுப்பாக அமெரிக்கா அதன் செலவுகளில் இதற்கு ஒத்த அதிகரிப்பை தொடங்கி இருந்தது.”
ஒரு புள்ளியில், அவர்கள் ஐரோப்பாவில் டாங்கிகள் போதுமானளவுக்கு இல்லை என்பதை ஒப்புக் கொண்டனர்: “சான்றாக, அமெரிக்கா 2,800 க்கும் அதிகமான மிகப்பெரிய போர்க்கள டாங்கிகளைக் கொண்டுள்ளது, அதேவேளையில் ஐக்கிய இராஜ்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகியவற்றின் இராணுவங்கள் ஒவ்வொன்றிடமும் சுமார் 200 இல் இருந்து 350 க்குள் மட்டுமே உள்ளன.”
அல்லது அவர்கள் இந்த கேள்வியை முன்னிறுத்துகிறார்கள், “ஒருங்கிணைந்த-பாதுகாவலர் நடவடிக்கை போன்றவொரு திட்டத்திற்கு [அதாவது, 2011 இல் லிபியா மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்குத்] தேவைப்பட்ட அனைத்து சாதனங்களையும், அடிமட்டத்திலிருந்து, கொள்முதல் செய்வதற்கு எத்தனை காலமெடுக்கும்?” இதற்கான பதில், “தேவைப்படும் 670 ஆயுத அமைப்புமுறைகளைக் கொள்முதல் செய்ய உண்மையில் (GDP சதவீதத்தில்) அதன் 2024 க்கான மொத்த தளவாட செலவுகளில் 1.3 ஆண்டுகான செலவுகளை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இது, ஒரேயொரு மிகப்பெரிய நடவடிக்கைக்காக ஒட்டுமொத்த தளவாடங்களையும் வாங்குவதென்பது தேவைப்படும் முதலீட்டின் வரையறைகளில் மிகப்பெரிய கொள்முதலாக இருக்குமென்பதையே காட்டுகிறது.”
இவையெல்லாம் வெறுமனே ஊகமான கேள்விகள் இல்லை என்பதை, மூனீச் பாதுகாப்பு மாநாடு தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னர் புரூசெல்ஸில் நடந்த நேட்டோ பாதுகாப்பு மந்திரிமார் கூட்டம் எடுத்துக்காட்டியது. “சுமையைப் பகிர்ந்து கொள்வதே விவாதத்தின் முக்கிய தலைப்பாக இருந்தது" என்று நேட்டோ குறிப்பிட்டது. “பாதுகாப்பு முதலீடு மீதான நேட்டோவின் வாக்குறுதியை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அமைச்சர்கள் கணக்கெடுத்தனர். 2024 க்குள், 15 கூட்டாளிகள் பாதுகாப்புத் துறைக்காக அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% அல்லது அதற்கும் கூடுதலாக செலவிடுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. 'நாம் சரியான திசையில் நகர்ந்து வருகிறோம், வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் அதிக முன்னேற்றம் இருக்குமென நான் எதிர்பார்க்கிறேன்,' என்று பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் தெரிவித்தார்.”
ஜேர்மனியில் எதிர்வரவிருக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அடித்தளத்தை உருவாக்க இருக்கின்ற, பழமைவாத கட்சிகள் மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி உடன்படிக்கை ஐரோப்பாவில் ஒரு மிகப் பெரிய இராணுவ தயாரிப்பையும் நெருக்கமான பாதுகாப்புத்துறை கூட்டுறவையும் அறிவுறுத்துகிறது. ஓய்வூபெற்ற தொழில்ரீதியான இராஜாங்க அதிகாரி இஷிங்கர், ஜேர்மனியின் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவு விவகார அமைச்சகங்களுடன் நெருக்கமாக கலந்தாலோசித்திருந்தார்.
இந்த பைத்தியக்காரத்தனமான மீள்ஆயுதமயப்படுத்தும் திட்டத்தின் இலக்கு யார் என்பதை மூனீச் பாதுகாப்பு மாநாட்டு அறிக்கை தெளிவுபடுத்தியது. சீனா மற்றும் ரஷ்யாவுக்கு பக்கவாட்டில், அது அமெரிக்காவை ஒரு சாத்தியமான எதிராளியாக அடையாளம் கண்டது. “இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட தாராளவாத சர்வதேச ஒழுங்கமைப்பு எனப்படுவதன் மீதும், பல அமைப்புகள் மற்றும் வழிமுறைகள்" மீதும் மிகவும் குறிப்பிடத்தக்க தாக்குதல்கள், ஆச்சரியப்படுத்தும் வகையில் "எதிர்பார்க்காத ஆதாரங்களிடம் இருந்து வருகின்றன,” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “ஜி. ஜோன் இகென்பெர்ரி குறிப்பிடுவதைப் போல, 'உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அரசு, அது உருவாக்கிய ஒழுங்கமைப்பை அதுவே நாசப்படுத்த தொடங்கி உள்ளது. உண்மையில் ஒரு விரோதமான திரித்தல்வாத சக்தி அரங்கில் நுழைந்துள்ளது, ஆனால் அது சுதந்திர உலகின் இதயதானத்தை துவம்சம் செய்து, ஓவல் அலுவலகத்தில் அமர்ந்துள்ளது.'”
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, ஆபிரிக்கா, மற்றும் மத்திய கிழக்கு ஆகியவை எதிர்கால மோதல் பிரதேசங்களாக அடையாளம் காணப்படுகின்றன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொறிவும், இணைய வழி தாக்குதல்கள் மற்றும் உள்நாட்டு குழப்பங்களும் போருக்கு சாத்தியமான காரணங்களாக பெயரிடப்படுகின்றன.
ஒரு அத்தியாயம் அணுஆயுத மீள்ஆயுதமயமாக்கலுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. “அணுஆயுத சக்திகள் அவற்றின் தளவாடங்களை நவீனப்படுத்தி வருகின்றன, அணுஆயுதமேந்திய சிறிய நாடுகள் தகைமைகளைக் கட்டமைத்து வருகின்றன, ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கைகள் நொருங்கி வருகின்றன,” என்று அது குறிப்பிடுகின்றது. “இரண்டாவது அணுஆயுத சகாப்தம், அதிகளவில் பாத்திரம் வகிப்பவர்களுடனும் குறைந்த ஸ்திரத்தன்மையுடனும், வடிவெடுத்து வருகிறது.”
மூனீச் பாதுகாப்பு மாநாட்டுக்கு களம் அமைத்த ஆவணங்களும் மீள்ஆயுதமயமேந்தும் திட்டங்களும், ஏகாதிபத்திய சக்திகளது போர் திட்டங்கள் வெகுவாக முன்னேறி உள்ளன என்ற உண்மையில் எந்த சந்தேகத்திற்கும் இடம் வைக்கவில்லை. பொதுவாக இன்று மாரடைப்பு அல்லது புற்றுநோய் போன்ற உயிராபத்தான காரணங்களால் உயிரிழப்பதை விட ஓர் அணுஆயுத மோதலில் உயிரிழக்கும் ஆபத்து இன்றைய தலைமுறைக்கு மிகவும் அதிகரித்துள்ளது. இதற்கிடையிலும், எந்த போர்-எதிர்ப்பு இயக்கமும் இல்லை.
இதற்கு காரணம், முன்னர் மீள்ஆயுதமயப்படுத்தல் மற்றும் போருக்கு எதிராக போராடிய அத்தனை கட்சிகளும் முதலாளித்துவ ஒழுங்கமைப்புடன் சமாதானப்பட்டுள்ளன. சமூக சமத்துவமின்மை, தேசிய பதட்டங்கள் மற்றும் நிதிய ஸ்திரமின்மையால் பிளவுபட்டுள்ள, முதலாளித்துவமே, போர் அபாயத்திற்கான அடிப்படை காரணமாகும். முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் போருக்கு எதிரான போராட்டத்தை இணைத்து, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச பாரிய சோசலிச இயக்கத்தால் மட்டுமே, போர் அபாயத்தை நடைமுறைரீதியில் எதிர்க்க முடியும்.