Print Version|Feedback
Will India invade the Maldives?
இந்தியா மாலைதீவின் மீது படையெடுக்குமா?
By Rohantha De Silva
9 February 2018
இந்திய ஊடக அறிக்கைகள், ஒருபுறம் இந்தியாவும் அமெரிக்காவும், மற்றொரு புறம் சீனா என இந்நாடுகளுக்கு இடையேயான தீவிர பூகோள அரசியல் போட்டியின் ஒரு இலக்காக இருந்துவரும் ஒரு சிறிய இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டமான மாலைதீவை ஆக்கிரமிப்பதற்கு புது தில்லி தீவிரமாக பரிசீலித்து வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன.
நாடுகடத்தப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரும், மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியுமான முகமது நஷீத், இந்தியா இராணுவ ரீதியாக தலையீடு செய்யவேண்டுமென்ற பிரச்சாரத்தை பகிரங்கமாகவே மேற்கொண்டு வருவதோடு, மாலைதீவில் “ஜனநாயகத்தை காப்பாற்றும்” வகையில் இந்தியா செயலாற்ற வேண்டுமென்றும், மேலும் “துண்டு துண்டாக,” சீனாவுக்கு அது “விற்கப்பட்டு” வருவதை தடுக்கவேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கிறார்.
புதனன்று Times of India பத்திரிகை, இந்தியாவின் ஆயுதப் படைகள், “இந்திய சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் வகையில் ஏதேனும் தற்செயலான சம்பவம் நிகழுமானால் அப்போது இராணுவ ரீதியாக தலையீடு செய்ய அங்கு காத்திருப்பதாக” தெரிவிக்கிறது. இது, நடைமுறையிலுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களின் கீழ் மாலைதீவில் ஏற்கனவே இராணுவ அதிகாரிகள் உள்ளனர் என்ற நிலையில், இந்திய இராணுவம் “குறுகியகால அவகாசத்தில் கூட ஈடுபடுத்தப்படுவதற்கு” ஏதுவாக அங்கு தயாராக உள்ளது என்றும், இராணுவ தலையீடு தேவைப்பட்டால், (அதன்) மேற்கு கடற்படைப் பகுதியில் தற்போது ரோந்தில் ஈடுபட்டுள்ள போர்க்கப்பல்களை திசைதிருப்பி அனுப்பமுடியும் என்றும் சேர்த்து தெரிவிக்கின்றது.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்திய அரசாங்கம், மாலைதீவின் ஜனாதிபதி அப்துல்லா யாமீன், 15-நாள் அவசரகால நிலையை திணித்ததற்கும் மற்றும் நஷீதின் தண்டனையை இரத்து செய்து, எட்டு சிறை தண்டனை விதிக்கப்பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டதும், மற்றும் 12 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களது பதவிகளை பாராளுமன்றத்தில் மீட்டுக்கொடுத்ததுமான பிப்ரவரி 1 உச்ச நீதிமன்ற தீர்ப்பை தடைசெய்வதை முன்னிட்டு, அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தற்காலிகத் தடையை விதித்ததற்கும் அவரை கடுமையாக கண்டனம் செய்தது.
நேற்று புது தில்லி, மாலைதீவு அரசாங்கம் வகுத்திருந்த நடவடிக்கைகள் பற்றி விவரிப்பதற்கு வருகைதந்த “சிறப்பு தூதரை” வரவேற்க மறுத்துவிட்டது.
பாரம்பரியமாக, இந்தியா அதன் பிராந்திய மேலாதிக்கத்தின் ஒரு பகுதியாக கருதும், பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (South Asian Association for Regional Cooperation-SAARC) ஒரு சக உறுப்பினரான மாலைதீவுடன் மிக நெருங்கிய உறவுகளை கொண்டுள்ளது.
உலகளாவிய புவிசார் மூலோபாய போட்டியின் ஒரு முக்கிய அரங்கமாக கடந்த தசாப்தத்தில் எழுச்சிபெற்றுள்ள, உலகின் பரபரப்பான வணிக கடல்-பாதைகளின் ஸ்தலமாக இந்திய பெருங்கடல் உள்ள நிலையில், 1,192-தீவு அரசின் மூலோபாய முக்கியத்துவம் அதிவேகமாக வளர்ந்துள்ளது.
இருப்பினும், இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு பெரும் ஏமாற்றத்தை தரும் வகையில், யாமீனின் நான்கு ஆண்டுகால அரசாங்கம், சீனாவின் ஒரே பாதை ஒரே இணைப்பு (One Belt One Road-OBOR) திட்டத்தின் கடல்சார் பிரிவில் பங்கேற்க ஒப்புக்கொண்டதோடு, கடந்த டிசம்பரில் பெய்ஜிங் உடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு, அதனுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளை உருவாக்கிக் கொண்டுள்ளது.
இந்திய ஊடகங்களின் பெரும் பிரிவுகளும் மற்றும் குறைந்தது ஒரு பிஜேபி சட்டமன்ற உறுப்பினரும், புது தில்லி மற்றும் அதன் கூட்டாளியான வாஷிங்டனுடனும் மாலைதீவு இணைந்துள்ளதை உறுதிப்படுத்த தீர்க்கமாக செயலாற்ற புது தில்லியை பகிரங்கமாக வலியுறுத்தி வருகின்றனர்.
“இந்தியா மீண்டும் ஒருமுறை ஆட்டக்காரராக இருப்பதற்கு அதன் உரிமையை கோருவதற்கான ஒரு வாய்ப்பாக இது உள்ளது” என்று மாவேந்திர சிங் கூறினார். இவர் ஒரு பிஜேபி அரசியல்வாதியாக இருப்பதோடு அல்லாமல், “பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு,” குறித்து “குறிப்பாக எந்தவொரு நாட்டின் உலகளாவிய பாத்திரமும் முதலில் அண்டைநாட்டின் செயல்திறனை சார்ந்தே எப்போதும் இருக்கும்” எனவும் சேர்த்துக்கொண்டார்.
“மாலைதீவுகள் ஸ்திரப்பாட்டிற்கு திரும்புவதன் ஒரு பகுதியாக இந்தியா இருக்க வேண்டுமென்றால், அது கடுமையாக பங்கேற்க வேண்டும்,” என்று தலைப்பிடப்பட்ட ஒரு தலையங்கத்தில், Hindustan Times பத்திரிகை, பொருளாதாரத் தடைகளை விதிப்பது மற்றும் தேவைப்பட்டால் இராணுவ ரீதியான தலையீடு செய்வது உள்ளிட்ட, நிர்பந்தப்படுத்தும் இராஜதந்திரத்திற்கு அழைப்பு விடுத்தது.
பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது பாரதிய ஜனதாக் கட்சி (BJP) அரசாங்கமும் அவர்களது பங்கிற்கு, அவர்களது அட்டைகளை அவர்களது உள்ளாடைகளுக்குள் வைத்திருந்தனர்.
மோடியின் கீழ், இந்தியா அமெரிக்கா உடனான அதன் இராணுவ-பாதுகாப்பு கூட்டணியை பெருமளவில் விரிவுபடுத்தியுள்ளமை, பாகிஸ்தான் மற்றும் மியான்மரில் எல்லை தாண்டிய தாக்குதல்களை அதிகரிக்க செய்ததுடன், புது தில்லி நீண்ட காலமாக அதன் பாதுகாப்பாளராக நடத்திவரும் ஒரு சிறிய முடியரசான பூட்டான் உரிமை கோரிய ஒரு தொலைதூர ஹிமாலய மலைமுகட்டுப் பகுதி குறித்து சீனாவுடனான ஏழு வாரகால இராணுவ மோதல் நிலைப்பாட்டிலும் ஈடுபடச் செய்தது.
இருப்பினும், மாலைதீவிற்குள் இந்தியாவின் இராணுவத் தலையீடு என்பது பல கஷ்டங்களைத் தோற்றுவிக்கும். முதலாவதாக, அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பதை நிரூபிக்கும் அளவிற்கு மாலைதீவு பாதுகாப்புப் படைகள் உயர வேண்டும். இரண்டாவதாக, இந்தியாவை பொறுத்தவரை, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை கவிழ்ப்பதில் இந்தியா தலையிடுவது என்பது, “அரசு இறையாண்மை” குறித்த சர்வதேச கொள்கையை நிலைநிறுத்த வேண்டும் என்ற அதன் நீண்டகால கூற்று பாசாங்குத்தனமானது தான் என்றாலும் அதை மீறுவதாக இருக்கும். இறுதியாக, மாலைத்தீவின் மீது படையெடுப்பதற்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் நாடுகளின் உதவிகளை புது தில்லி பெறக்கூடும் என்பதில் சிறு சந்தேகம் உள்ள போதிலும், அவ்வாறு செய்வது “மூலோபாய சுயாட்சிக்கு” தொடர்ந்து உறுதியளிப்பதான இந்தியாவின் எந்தவொரு பாசாங்கையும் தகர்த்துவிடும். மேலும் இது, சீனாவை எதிரியாக்குவது மட்டுமன்றி, இந்திய முதலாளித்துவத்தைப் போலல்லாமல், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உள்ளூர் ஆளுனராக சேவையாற்றுவதில் எந்த ஊக்கமும் கொண்டிராத, இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களிடையே எதிர்ப்பையும் தூண்டிவிடும்.
வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் எது கட்டவிழ்ந்தாலும், மாலைதீவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு இந்தியாவின் பதில் என்பது, இராணுவத் தலையீட்டின் நன்மை தீமைகள் என்ன என்பதை மோடி அரசாங்கம் எடைபோட்டு வருவது மற்றும் மாலைதீவில் சீனாவின் செல்வாக்கை முறியடிக்க வேண்டி தேவையை பற்றி வெட்ககேடான வகையில் ஊடக விவாதங்கள் நடத்துவது போன்ற தெளிவான அறிகுறிகளால், தெற்காசியாவும் இந்திய பெருங்கடல் பகுதியும் பெரும் வல்லரசு மோதல்களின் சுழற்சியால் விழுங்கப்பட்டுள்ளதையும், மேலும் இதுவே தவிர்க்கமுடியாமல் இராணுவ போட்டிக்கும் மோதலுக்கும் வழிவகுக்கிறது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
1978 முதல் 2008 வரை இந்தியாவின் வலுவான ஆதரவுடன் மாலைதீவை ஆட்சி செய்த ஒரு சர்வாதிகாரியான அப்துல் காயூமின் சகோதரர் தான் இந்த யாமீன் ஆவார். தேர்தலில் போட்டியிட்டு 2013 இல் அவர் ஜனாதிபதியானதில் இருந்து மாலைதீவு, அரசியல் நெருக்கடியால் தொடர்ந்து தாக்குதலுக்கு உட்பட்டு கொண்டிருந்தது. சீனாவுடன் மாலைதீவின் உறவுகளை யாமீனின் அரசாங்கம் விரிவுபடுத்துவது போன்று, அமெரிக்கா மற்றும் பிரிட்டனும், மற்றும் இந்தியாவும் சற்று அதிகமான எச்சரிக்கையுடன், 2015 இல் மருத்துவ அடிப்படையில் நஷீதை சிறையிலிருந்து விடுவித்து பாதுகாத்தது முதலாக, அவரின் வளர்ச்சிக்கு அதிகரித்தளவில் ஊக்கமளித்துள்ளன.
இந்த சமீபத்திய நெருக்கடி நிலை, எதிர்பாராத விதமாக உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 1 அன்று தனது முந்தைய தீர்ப்புகளை மாற்றிய போது தொடங்கியது. இந்த உத்தரவு, பன்னிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை மீட்டது, அதில் பலரும் யாமீனின் சொந்தக் கட்சியிலிருந்து வெளியேறியவர்களாக இருந்தனர் என்ற நிலையில், பாராளுமன்றத்திற்குள் இவர்களது மீள்வருகை அக்கட்சியின் பெரும்பான்மையை உடைத்து அவரது அரசாங்கத்தை நேரடியாக அச்சுறுத்தியது.
இருப்பினும், தீர்ப்பை செயல்படுத்துவதை யாமீன் தடுத்து, அவசரகால நிலையை சுமத்திய பின்னர், இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், மேலும் பிப்ரவரி 1 தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் பணியை எஞ்சியுள்ள மூன்று நீதிபதிகள் மேற்கொண்டனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மில்லியன் கணக்கிலான ரூபாய்களை இலஞ்சமாக ஏற்றுக்கொண்டதனாலும், மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் சர்வாதிகாரியுமான அப்துல் காயூமின் சதிதிட்டத்தினாலும் முந்தைய தீர்ப்பு கையாளப்பட்டதற்கு “சான்றுகள்” இருப்பதாக மாலைதீவு பொலிஸ் கூறுகின்றது. காயூம் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார் என்பதோடு, அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட உள்ளார்.
யாமீன், தனது பலவீனமான ஆட்சியை பாதுகாப்பதற்காக ஜனநாயக விரோத சர்வாதிகார நடவடிக்கைகளையே அதிகரித்தளவில் மேற்கொள்கின்ற அதே வேளையில், மாலைதீவில் ஜனநாயகத்தை மீட்பதற்கு ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டுமென நஷீத் கோருகிறார்.
ஆனால், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவிற்கு அவர் விடுக்கும் கோரிக்கைகள், ஒரு வெளிப்படையான சீன விரோத மேடையாக இன்னும் அதிகளவு வெட்கமற்றதாக மாறியுள்ளன.
பிப்ரவரி 7 அன்று Indian Express இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், நஷீத், இந்தியா மற்றும் அமெரிக்காவின் மூலோபாய நலன்கள் மீதான அவரது நம்பகத்தன்மைக்கு உறுதியளித்ததோடு, மாலைதீவில் சீனாவின் முதலீட்டையும், மற்றும் “முழு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு” OBOR ஒரு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கண்டனம் செய்கிறார்.
அதே நாளின் பிற்பகுதியில், அவர், “மாலைத்தீவினர் இந்தியாவின் பாத்திரத்தை சாதகமானதாக பார்க்கின்றனர்: 1988 இல் அவர்கள் வந்தனர், நெருக்கடியை தீர்த்து வைத்தனர், சென்றனர். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்லர், மாறாக விடுதலையாளர்கள்” என்று ட்வீட் செய்தார்.
மாலைதீவின் வணிகர் அப்துல்லா லூதூபியின் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியைத் தடுக்க 1988 இல் மாலைதீவிற்குள் 1,600 இந்திய துருப்புக்கள் அனுப்பப்பட்டதை 88 குறிப்பிடுகின்றது, இம்முயற்சிக்கு, சிறிலங்கா தமிழ் பிரிவினைவாத அமைப்பான தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்திலிருந்தும் (People’s Liberation Organization of Tamil Eelam - PLOTE) போராளிகளைப் பயன்படுத்தியது.
காயூமின் சர்வாதிகார ஆட்சியை இந்தியா பல தசாப்தங்களாக பாதுகாத்த்த என்ற உண்மையை நிச்சயமாக நஷீத் மூடி மறைக்கிறார்.
இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவின் முயற்சிகள் குறித்து இந்திய செய்தி ஊடகம் முழு எச்சரிக்கையுடன் இருக்கிறது. உண்மையில், ஒவ்வொரு விடயத்திலும் சீனாவை குற்றம்சாட்டுவதில் இந்தியாவும் அதன் அமெரிக்க கூட்டணியும் நீண்டகாலமாக ஈடுபட்டுள்ளன.
2013 இல், இராணுவத் தளங்கள் மற்றும் அனைத்து அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு இராஜதந்திர பாணியிலான தடுப்பாற்றலை வழங்குவது உட்பட, அந்த தீவுப்பகுதி முழுவதிலும் ஒரு பெரும் அமெரிக்க இராணுவ பிரசன்னத்திற்கு சட்ட கட்டமைப்பை வழங்கக்கூடிய படை நிலை ஒப்பந்தம் (Status of Force Agreement-SPFA) ஒன்றில் கையெழுத்திட மாலைதீவை நிர்பந்திக்க வாஷிங்டன் முனைந்தது.
முன்னாள் இந்தியத் தூதரும் மற்றும் அமெரிக்காவுடன் இந்தியாவின் வளர்ந்துவரும் மூலோபாய கூட்டணியை விமர்சிப்பவருமான எம்.கே.பத்ரகுமார், “மாலைத்தீவு நெருக்கடி: அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டணியை அமைத்தல்” என்று தலைப்பிடப்பட்ட Asian Times கட்டுரையில் வெளியிடப்பட்ட மாலைத்தீவு உடனான இந்தியாவின் உறவுகளை ஊக்கப்படுத்தும் உண்மையான பிரச்சினைகளை சுட்டிக்காட்டினார்.
“ஒரு ‘ஜனநாயக பற்றாக்குறை’ குறித்து அது கையை முறுக்குகின்றது என்றாலும்,” “இந்தியப் பெருங்கடலில் சீனாவின் வளர்ந்துவரும் பிரசன்னத்தை எதிர்ப்பதுதான் அதன் உண்மையான நோக்கமாகும்” என்று பத்ரகுமார் எழுதுகிறார்.
இந்த, “கதையம்சமும்,” “சிறிலங்காவில் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு வியத்தகு ஒற்றுமையை கொண்டுள்ளது” என்பதை அவர் குறிப்பிடுகிறார். அங்கு, அரசாங்கத்தை குறைகூறுவதன் மூலம் மைத்திரிபால சிறிசேனாவை விலக்கி, சீனாவிற்கு மிக நெருக்கமானவராக கருதப்பட்ட நடப்பில் இருந்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிரான ஒரு “பொது எதிர்க்கட்சி” வேட்பாளராக அவரை நிறுத்தியதன் மூலம், ஒரு “ஆட்சி மாற்றத்திற்கு” ஜனவரி 2015 ஜனாதிபதி தேர்தல்களை வாஷிங்டனும் இந்தியாவும் பயன்படுத்தின.
இந்தியாவை தற்போது இணைத்துக்கொண்டுள்ள அமெரிக்காவின் மூலோபாயத் திட்டங்கள், ஒரு போர் அல்லது போர் நெருக்கடியில் சீனாவிற்கு எதிராக ஒரு பொருளாதார முற்றுகையை தீவிரமாக செயல்படுத்தும் வகையில், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளின் முக்கிய தடை முனைகளை கைப்பற்றுவதற்கு அழைப்பு விடுக்கின்றன. பத்ரகுமார் இதைச் சுட்டிக்காட்டி, “இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிக்கப்பல்களின் பிரசன்னத்தைக் கட்டுப்படுத்தவும், சீனா அதன் வெளிநாட்டு வர்த்தக்கத்தின் பெரும்பகுதியை நடத்துவதற்கு பயன்படுத்தும் இந்த கடல்பாதைகளை கட்டுப்படுத்தவும், “டியோகோ கார்சியா மற்றும் சீச்செல்ஸ் உடன் மாலைதீவை இணைக்கும் ஒரு ’இரண்டாவது தீவு சங்கிலியை’ உருவாக்கவே அமெரிக்க-இந்திய சூழ்ச்சி உண்மையாக திட்டமிடுகிறது. என எழுதுகிறார்.
மாலைதீவில் இந்தியாவின் எந்தவொரு தலையீட்டையும் எதிர்த்து குரல் கொடுக்கவேண்டும் என்றே சீனா எதிர்பார்க்கும். “மாலைதீவின் தற்போதைய சூழ்நிலைக்கு அதன் உள் விவகாரங்கள் தான் காரணம்,” என்றும், “சீனா, பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாக் கொள்கையை பின்பற்றுகிறது” என்றும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் புதனன்று தெரிவித்தார்.
சீன அரசுக்கு சொந்தமான Global Times பத்திரிகை மிகவும் வெளிப்படையானதாக இருந்தது. மாலைதீவில் புது தில்லி “தலையிட உரிமை இல்லை” என்று அது அறிவித்ததோடு, “சிறிய நாடான மாலைதீவு யார் வேண்டுமானாலும் அதனை கைப்பற்றலாம் என்ற நிலைமையை நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ளது: இந்நிலையில், இந்திய கட்டுப்பாட்டில் இருந்து அது விடுவிக்கப்படுமா என்றும், ஒரு இறையாண்மைமிக்க நாடாகவோ அல்லது அல்லாமலோ அதன் சுதந்திரம் ஒருங்கிணைக்கப்படுமா?” என்றும் கேள்வி எழுப்புகிறது.