Print Version|Feedback
French President Macron calls for the draft and threatens strikes on Syria
பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் கட்டாய இராணுவ சேவைக்கு அழைப்புவிடுப்பதுடன், சிரியா மீது தாக்குதல் நடத்த அச்சுறுத்துகிறார்
By Alex Lantier
15 February 2018
செவ்வாயன்று இரவு, பிரெஞ்சு ஜனாதிபதியின் பத்திரிகையாளர் அமைப்பு கூட்டத்தில், கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டு வர அழைப்பு விடுத்த இமானுவல் மக்ரோன், ஒரு முன்னாள் பிரெஞ்சு காலனியான சிரியா மீது விமானத் தாக்குதல்கள் நடத்தும் சாத்தியக்கூறு உள்ளதாக அச்சுறுத்தினார். சிரியாவில் அமெரிக்க குண்டுவீச்சில் டஜன் கணக்கான ரஷ்ய இராணுவ ஒப்பந்ததாரர்கள் கொல்லப்பட்டும், சிரியா இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கும் வெறும் ஒரு சில நாட்களுக்குப் பின்னர் வரும் இது, குழப்பத்திற்கிடமின்றி உலக போர் அபாயத்தின் ஓர் எச்சரிக்கையாகும்.
இது, பேர்லினில் பழமைவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளுக்கு இடையே அமையக்கூடிய ஒரு "பெரும் கூட்டணி" அரசாங்கத்துடன் மக்ரோன் ஒருங்கிணைய முயற்சித்து வருகிறார் என்ற ஜேர்மன்-பிரெஞ்சு அச்சின் குணாம்சத்தையும் அம்பலப்படுத்துகிறது. கொல்வதற்காக இளைஞர்களை அனுப்பியும் அல்லது அனைத்து பிரதான உலக சக்திகளும் உள்ளீர்க்கப்படும் ஏகாதிபத்திய போர்களில் அவர்கள் கொல்லப்படுவதற்கு அனுப்பியும், ஐரோப்பாவை ஓர் ஆக்ரோஷமான இராணுவவாத அணியாக மாற்றுவதற்கும் இது நோக்கம் கொண்டுள்ளது.
“ஆண்களுக்கும் பெண்களுக்கும் திறந்திருக்கும், கட்டாய கடப்பாடுடைய சேவையை நான் விரும்புகிறேன், இராணுவ விவகாரங்கள் குறித்து ஓர் உட்பார்வையை [அது வழங்கும்],” என்று அறிவித்த மக்ரோன், கட்டாய இராணுவச் சேவைக்குத் திரும்புவது என்று கடந்த ஆண்டு சூளுரைத்த ஒரு பிரச்சாரத்தை மீண்டும் வலியுறுத்துகிறார். சேவைக் காலம் "மூன்றில் இருந்து ஆறு மாதங்களுக்கு இடையே" இருக்கும், “ஆனால் அது இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை,” என்றார்.
அவரது 2017 ஜனாதிபதி பிரச்சாரத்தின் போது முதன்முதலாக அவர் கட்டாய இராணுவச் சேவைக்கு அழைப்பு விடுக்கையில் செய்ததைப் போலவே, மக்ரோன் எரிச்சலூட்டும் வகையில் அதன் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்ட முயன்றார், கட்டாய இராணுவ சேவையானது "குடிமக்கள்" பண்புகளில் ஒன்றாக இருக்குமெனக் கூறினார். அதாவது, இராணுவச் சேவையில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்ட இளைஞர்கள், சமீபத்திய இரண்டு ஆண்டுகால அவசரகால நிலைமையின் போது சிப்பாய்கள் செய்ததைப் போல, பிரான்ஸ் நகரங்களில் ரோந்து பணிக்கு அனுப்புவதில் போய் முடியக்கூடும். ஆனால், கட்டாய இராணுவச் சேவையானது பிரதான போர்களுக்கான தயாரிப்பு என்பதை அது சம்பந்தமான அவரது 2017 உரையில் மக்ரோனே ஒப்புக் கொண்டிருந்தார், “போர் என்பதை மீண்டும் அரசியலின் விளைபயனாக ஆக்கும், சர்வதேச உறவுகளது ஒரு சகாப்தத்தில் நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம்,” என்றார்.
சிரியா அரசு குளோரின் வாயு பயன்படுத்தியதாக ஆதாரமற்ற அமெரிக்க குற்றச்சாட்டுக்களைச் சுற்றி ஊடகங்கள் ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருந்த நிலையில், சிரியா மீது விமானத் தாக்குதல்கள் தொடங்க அவர் தயாராக இருப்பதாக மக்ரோன் செவ்வாயன்று இரவு தெரிவித்தார். சிரியாவில் நடந்து வரும் நேட்டோ போரில் சிரியா அரசு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக பிரான்ஸோ அல்லது அதன் கூட்டாளிகளோ அறிவித்தால், சிரியாவைத் தாக்குவதென சூளுரைத்து, கடந்த செப்டம்பரில் அவர் வழங்கிய ஐ.நா. உரையில் அவர் அமைத்த "எச்சரிக்கை கோட்டை" (red line) மக்ரோன் மறந்துவிட்டதாக குற்றஞ்சாட்டி பிரெஞ்சு பத்திரிகைகளில் ஒரு பிரச்சாரம் எழுந்திருந்தது.
“தடை விதிக்கப்பட்ட இரசாயன ஆயுதங்கள் அப்பாவி மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு [பிரான்சுக்கு] நம்பகமான ஆதாரங்கள் கிடைத்தால், நாங்கள் தாக்குவோம்,” என்றார். “இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களிலும் மற்றும் அவற்றை பயன்படுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களிலும் நாங்கள் தாக்குதல் நடத்துவோம். எச்சரிக்கை கோடு மதிக்கப்படும்,” என்றார்.
சிரிய ஆட்சிக்கு எச்சரிக்கைகளும் அச்சுறுத்தல்களும் அனுப்ப, சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் முக்கிய கூட்டாளியான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடன் அவர் நெருக்கமான தொடர்பில் இருப்பதாகவும் சேர்த்து கொண்டார். “இதை நான் ஜனாதிபதி புட்டினுக்கு மீண்டும் தெரியப்படுத்தினேன், சிரிய ஆட்சியுடன் மிகவும் தெளிவாக இருக்குமாறு அவரை நான் கேட்டுக் கொண்டேன், அது இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என்பதை மீளவலியுறுத்தி உள்ளது. … ஆனால் நாங்கள் அதை கவனித்துக் கொண்டிருக்கிறோம்,” என்று கூறிய மக்ரோன், “ஆதாரம் ஸ்தாபிக்கப்பட்டால், உடனேயே நான் என்ன கூறினேனோ அதன்படி நடந்து கொள்வேன்,” என்றார்.
மற்ற நேட்டோ சக்திகள் துணைபோக, மக்ரோன் இத்தகைய தாக்குதல்களைத் தொடுத்தால், அது ரஷ்யாவுடனான போர் அச்சுறுத்தலுடன், பிரான்சின் அந்த முன்னாள் காலனிக்கு எதிராக அதன் தூண்டுதலற்ற ஒரு போராக இருக்கும். விஷவாயுவை பயன்படுத்தியதாக ஆராய்ந்து பார்க்கப்படாத அமெரிக்க குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அதை நியாயப்படுத்துவதற்கான முயற்சியில், ஆத்திரமூட்டலின் துர்நாற்றம் வீசுகிறது. 2013 இல் கௌத்தாவிலும் மற்றும் 2017 இல் கான் ஷேகுனிலும் (Khan Shaykhun) நடந்த விஷவாயு தாக்குதல்கள் உட்பட, இதுபோன்ற முந்தைய கூற்றுகள் ஆத்திரமூட்டல்களாக நிரூபணமாயின, அங்கெல்லாம் நேட்டோ-ஆதரவிலான இஸ்லாமிய போராளிகள் குழுக்களே விஷவாயு தாக்குதல்களை நடத்தியதோடு, சிரியா மீது நேட்டோ தாக்குதல்கள் நடத்த சாக்குபோக்கை வழங்குவதற்காக அந்த ஆட்சியின் மீது பழி போட்டனர்.
இதற்கு முன்னதாக, ஈராக்கில் ஜேர்மன் இராணுவ பிரசன்னத்தை தீவிரப்படுத்துவது குறித்து அறிவிக்கவும் மற்றும் பேர்லினில் முன்மொழியப்பட்டுள்ள ஒரு "பெரும் கூட்டணியின்" வேலைத்திட்டத்தை கடந்த வாரம் பிரசுரிப்பதற்கும் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயென் கடந்த வாரயிறுதியில் அங்கே பயணம் மேற்கொண்டிருந்ததைப் பின்தொடர்ந்து இது வருகிறது.
இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய கொள்கைகள், வர்த்தகம், இராணுவம் மற்றும் மத்திய கிழக்கு கொள்கைகளில் பிரான்ஸ் உடன் ஒத்திசைந்துள்ளன. வொன் டெர் லெயென் மற்றும் அவரது பிரெஞ்சு சமதரப்பு புளோரோன்ஸ் பார்லியும், பிரான்கோ-ஜேர்மன் இராணுவ ஒற்றுமையைக் காட்சிப்படுத்த, இவ்வாரயிறுதியில் முனீச் பாதுகாப்பு மாநாட்டைக் கூட்டாக தொடங்கி வைக்க உள்ளார்கள்.
பேர்லின்-பாரீஸ் அச்சு, உலகளாவிய வெடிப்பார்ந்த விளைவுகளோடு ஐரோப்பிய இராணுவ ஆக்கிரமிப்பின் ஒரு பரந்த விரிவாக்கத்திற்குத் தயாரிப்பு செய்து வருகிறது என்பதையே சிரியா மீதான ஒரு தாக்குதல் குறித்த மக்ரோனின் தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது. ஸ்ராலினிச ஆட்சியால் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் (USSR) கலைக்கப்பட்டு, ஏகாதிபத்திய போருக்கு பிரதான இராணுவ எதிர்பலம் இல்லாமல் ஆக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் அதிகமான காலகட்டத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து போரில் தஞ்சமடைந்ததன் மூலமாகவும் அதன் இராணுவ சாகசங்களைப் பயன்படுத்தியதன் மூலமும் அதன் அதிகரித்து வரும் பொருளாதார பலவீனத்தை சரிகட்ட முனைந்துள்ளது.
இது, இரண்டு பிரதான அணுஆயுத சக்திகளான ரஷ்யா மற்றும் சீனாவை வாஷிங்டனின் பிரதான எதிரிகளாக முத்திரை குத்துகின்ற அமெரிக்க தேசிய பாதுகாப்புத்துறை மூலோபாயத்தை கடந்த மாதத்தில் வெளியிடுவது வரை சென்றுள்ளது.
இதே காலகட்டத்தில் பாரீஸ் முன்பினும் அதிக போர் நாடும் வெளியுறவு கொள்கையைப் பின்பற்றியுள்ளது. அதன் முன்னாள் ஆபிரிக்க காலனி சாம்ராஜ்ஜிய போர்களில் சண்டையிட்டதற்கு அப்பாற்பட்டு, அது வாஷிங்டனின் 2003 ஈராக் படையெடுப்பின் போது அதை எதிர்த்திருந்த போதினும், ஈராக்கிற்கு எதிராக 1991 இல், 2001 இல் ஆப்கானிஸ்தானில், லிபியா பின்னர் சிரியாவின் 2011 போர்களில் மீண்டும் மீண்டும் அமெரிக்க தலைமையிலான போர்களில் இணைந்திருந்தது. மக்ரோனின் கீழ், அது இந்த அத்துமீறல்களை அதிகரித்து வருகின்ற அதேவேளையில், செல்வந்தர்களுக்கு வரி வெட்டுக்கள் மூலமாக பில்லியன்களை வழங்கி வருவதுடன், தொழிலாள வர்க்கத்தை நோக்கமாக கொண்ட ஆழ்ந்த சமூக வெட்டுக்களுடன் இத்தகைய பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு நிதி வழங்கி வருகிறது.
என்ன மேலெழுந்து வருகிறது என்றால், ஐரோப்பா எங்கிலும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களைப் பேரழிவுகரமான விளைவுகளுடன் அச்சுறுத்தும் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் வெடிப்பார்ந்த ஓர் அரசியல் பொறிவாகும். இதில் ரஷ்யா மற்றும் சீனாவுடனான நேட்டோ மோதல்கள் மட்டுமல்ல, மாறாக 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை எதிர்விரோத கூட்டணிகளாக பிரிந்து உலகப் போரில் சண்டையிட்டுள்ள நேட்டோ சக்திகளுக்கு இடையிலான அரிதாகவே மூடிமறைக்கப்பட்டிருக்கும் கருத்து முரண்பாடுகளின் வெடிப்பும் சம்பந்தப்பட்டுள்ளது.
செவ்வாயன்று இரவு மக்ரோன் கூறிய கருத்துக்கள், குறிப்பாக ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு மீது வாஷிங்டன் மற்றும் பேர்லின்-பாரீஸ் அச்சுக்கு இடையே எழுந்து வரும் கருத்து முரண்பாடுகளின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டுவதாக இருந்தது.
முதலாவதாக, சிரியாவுக்கு எதிரான அவரின் போர்வெறி அச்சுறுத்தல்களுக்கு இடையே, மக்ரோன் ஓர் உடனடி தாக்குதலை குறிப்பிடவில்லை என்பதோடு, சிரியா விஷவாயுவைப் பயன்படுத்தியது என்ற அமெரிக்க குற்றச்சாட்டுகள் மீது அவரது அவநம்பிக்கையைச் சமிக்ஞை செய்தார். “ஆனால் உடன்படிக்கையால் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் அப்பாவி மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு, நமது உளவுத்துறை சேவைகளால் ஸ்தாபிக்கப்பட்ட ஆதாரம் எதுவும் இன்று நம்மிடம் இல்லை,” என்றார்.
மக்ரோன் அவரே கூட வெளிப்படையாக நம்பாத ஆய்வுக்குட்படுத்தப்படாத இந்த குற்றச்சாட்டுக்களுக்காக சிரியா மீது குண்டுவீச அச்சுறுத்தி ஏன் விடையிறுத்தார் என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
இரண்டாவதாக, வணிக நாளிதழ் Les Echos தகவலின்படி, ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் சிரியப் போரை கையாள்வதற்கு முயற்சி செய்துள்ளதுடன், “ஈரான், துருக்கி மற்றும் ரஷ்யா ஆகிய 'அஸ்தானா நிகழ்முறையின்' (Astana process) மூன்று உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தையை" தொடங்கி உள்ளார். இது அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் சிரியாவில் ரஷ்ய ஒப்பந்ததாரர்கள் மீது அமெரிக்க குண்டுவீச்சை விட மிகவும் வித்தியாசமான போக்கில் மக்ரோன் நின்றிருப்பதைக் காட்டுகிறது. இது பெப்ரவரி 9 இல் புட்டின் உடனான மக்ரோனின் சுமூகமான தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து நடந்துள்ளது, அந்த அழைப்பில் அவர் கிரெம்ளின் உடன் வர்த்தகம் மற்றும் அரசியல் கூட்டுறவை அதிகரிக்கவும் அழைப்பு விடுத்திருந்தார்.
எலிசே மாளிகை தகவலின்படி, இந்த தொலைபேசி அழைப்பின் போது, மக்ரோன் "மே 29 வேர்சாய் சந்திப்புக்குப் பின்னர் நமது இருதரப்பு உறவுகளின் செயல் விரைவுக்காக" புட்டினை பாராட்டி இருந்தார், மற்றும் "நமது அரசியல் பரிவர்த்தனைகள் வழமையாகவும் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும்" அவர் குறிப்பிட்டிருந்தார். பிரெஞ்சு மற்றும் ரஷ்ய "பொருளாதார மற்றும் கலாச்சார சக்திகள், சிந்தனைகள் மற்றும் இளைஞர்களுக்கு" இடையிலான உறவுகளில் தொடர்ந்து கொண்டிருக்கும் அபிவிருத்தியையும் பாராட்டி இருந்தார்.
இறுதியாக, மக்ரோன் பிரான்ஸ் மற்றும் துருக்கிக்கு இடையே இப்போது நடந்து வரும் "நிரந்தர பேச்சுவார்த்தையை" பாராட்டியதுடன், இம்மாத தொடக்கத்தில் குர்திஷ் படைகளைத் தாக்குவதற்கு சிரியா மீதான அதன் படையெடுப்பு குறித்து அவருக்கு "மறுஉத்தரவாதம்" அளித்திருந்ததாக குறிப்பிட்டார். அதற்கு முரண்பட்ட வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சன் நெருக்கடி கால பேச்சுவார்த்தைகளுக்காக நேற்று துருக்கிக்கு வந்தடைந்தபோது, துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் Mevlüt Çavuşoğlu கூறுகையில், வாஷிங்டன் உடனான அதன் கூட்டணி, சிரியாவில் குர்திஷ் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதன் காரணமாக "முற்றிலுமாக முறிந்து" போகலாம் என்று எச்சரித்தார்.
இத்தகைய ஐரோப்பிய-அமெரிக்க கருத்து முரண்பாடுகள் புரூசெல்ஸில் நேற்றைய நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் உச்சி மாநாட்டைச் சூழ்ந்து மீண்டும் பகிரங்கமாக வெடித்தன. நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் எச்சரிக்கையில் "நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் போட்டியிட தொடங்கினால்" அதில் "முற்றிலும் எந்த அர்த்தமும் இருக்காது,” என்றார்.
நேட்டோவுக்கான அமெரிக்க தூதர் Kay Bailey Hutchison கூறுகையில், ஐரோப்பிய இராணுவ கூட்டுறவுக்காக பேர்லின் மற்றும் பாரீஸ் தலைமையிலான திட்டங்கள் மீது அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே இராணுவ உறவுகள் முறிந்து போகும் சாத்தியக்கூறைக் குறித்து எச்சரித்தார். அவர் கூறினார், “நிச்சயமாக இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஒரு பாதுகாப்புவாத வாகனமாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை, நாங்கள் மிகவும் கவனமாக கவனிக்க இருக்கிறோம் ஏனென்றால் அவ்வாறு நடந்தால் பின் நாம் கொண்டிருக்கும் பலமான பாதுகாப்பு கூட்டணி உடையக்கூடும். ஐரோப்பியர்கள் ஆற்றலும் பலமும் பெற்றிருக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் ஆனால் அமெரிக்க பண்டங்களையோ அல்லது நோர்வேஜிய பண்டங்களையோ அல்லது சாத்தியமான அளவில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பண்டங்களையோ தடுப்பதற்காக இருக்கக்கூடாது,” என்றார்.