Print Version|Feedback
Seventy years after Sri Lankan independence: The record of capitalist decay and the necessity for socialism
இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் எழுபது ஆண்டுகள்: முதலாளித்துவ வீழ்ச்சியின் வரலாறும் சோசலிசத்திற்கான அவசியமும்
By Vijith Samarasinghe and K. Ratnayake
3 February 2018
1948ல் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து உத்தியோகபூர்வமாக சுதந்திரம் பெற்றதில் இருந்து 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும்விதமாக பெப்ரவரி 4 அன்று இலங்கை அரசாங்கம் ஒரு ஆடம்பர விழாவை அறிவித்துள்ளது. உலக பொருளாதார நெருக்கடியின் தாக்கம், பூகோள-அரசியல் போட்டித்தன்மை மற்றும் உள்நாட்டில் குமுறும் சமூகப் பதட்டங்களின் கீழ், அரசாங்கம் பிற்போக்கு தேசியவாத உணர்வுகளை கிளறிவிடுவதற்கு இந்த விழாவை சுரண்டிக்கொள்ளும்.
பிரிட்டனின் ராணி எலிசபெத்தின் பிரதிநிதியாக இளவரசர் எட்வார்டை அழைத்ததன் மூலம், ஏற்கனவே ஏகாதிபத்தியத்திற்கு இலங்கை முதலாளித்துவத்தின் அடிபணிவை அரசாங்கம் எடுத்துக்காட்டியுள்ளது.
கொழும்பின் காலிமுகத் திடலில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார். உழைக்கும் மக்களுக்கு கொடுக்க அவரிடம் எதுவும் இல்லாத நிலையில், அவர் நாட்டில் இருந்து ஊழலை அகற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படையாக அறிவிப்பார். முதலாளித்துவமே நாட்டின் அனைத்து "நோய்களதும்" தோற்றுவாய் என்ற உண்மையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இப்போது ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவினதும் பிரதான துரும்புச் சீட்டாக ஊழல் என்பது பயன்படுத்தப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஜனநாயக-விரோத ஆட்சிக்கும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக வளர்ச்சிகண்ட வெகுஜன எதிர்ப்பை தடம்புறளச் செய்ய 2015 ஜனவரியில் சிறிசேன பதவிக்கு வந்தார். தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் உருவாக்கப்பட்ட "தேசிய ஐக்கிய அரசாங்கமே” இப்போது நாட்டின் நெருக்கடிக்கு ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொள்வதில் கிழிந்து போயுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டங்கள் பற்றி உழைக்கும் மக்களிடையே எந்தவித பரந்த ஆர்வமும் கிடையாது. வேலைநிறுத்தங்கள், மாணவர் பேரணிகள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்புக்கள் பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. பெப்ரவரி 10 அன்று திட்டமிடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு குழப்பம் ஏற்படாத வகையில் என்ற சாக்குப் போக்கில், பெப்ரவரி 15 வரை தொழிசங்க நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு இந்த வாரம் தேர்தல் ஆணையாளர் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தார். சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாதலின் பாகமாக வெகுஜனப் போராட்டங்கள் வெடிக்கும் வாய்ப்பைப் பற்றி ஆளும் உயரடுக்கு பீதி அடைந்திருப்பதே உண்மை.
2015ம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை அரைவாசியாக குறைப்பது உட்பட ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்து வரும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மேற்பார்வையில் நாடு உள்ளது. தேசிய வருவாயில் 51 சதவிகிதத்தை ஜனத்தொகையில் உயர்மட்டத்தில் இருக்கின்ற 20 சதவிகிதத்தினர் பெறுகின்ற அதேவேளை, கீழ் மட்டத்தில் இருக்கின்ற 20 சதவிகிதம் பேர் வெறும் 5 சதவிகிதத்தையே பெறுகின்றனர்.
தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக கால் நூற்றாண்டிற்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட இனவாத யுத்தம், பிரதான வெளிநாட்டு சக்திகளின் ஆதரவோடு 2009ல் இராஜபக்ஷ ஆட்சியினால் இரத்த வெள்ளத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. யுத்தத்தினால் கிட்டத்தட்ட 200,000 பேர் இறந்துவிட்டனர். இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அத்தியாவசிய வசதிகள் இல்லாத இழி நிலையிலான குடிசைகளில் வாழ்கின்றனர்.
1940 களின் பிற்பகுதியில் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வெடித்த வெகுஜனப் போராட்டங்களை முறியடிப்பதற்கு, தேசிய முதலாளித்துவ வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்து பிரிட்டன் உத்தியோகபூர்வ சுதந்திரத்தை வழங்கிய தெற்கு ஆசியா முழுவதும், இத்தகைய அரசியல் ரீதியில் குமுறும் நிலைமைகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
உலகின் மிக சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் ஆகியுள்ளது. மிக உயர்ந்த 1 சதவீதத்தினர் ஒட்டுமொத்த வருமானத்தில் 23 சதவீதத்தை எடுத்துக்கொள்கின்ற அதேவேளை, வறிய 50 சதவீதமானோர் அல்லது 60 கோடி மக்கள் 15 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றனர். 2014ல் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி மீதான மக்களது கோபத்தையும் வெறுப்புணர்வையும் சுரண்டிக்கொண்டு அதிகாரத்தை எடுத்துக்கொண்ட இந்து பேரினவாத பாரதீய ஜனதா கட்சி, வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில், மக்களின் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதலைத் தொடர்கின்றது.
பாக்கிஸ்தானில் ஒரு இராணுவ-ஆதரவு ஆட்சி நிலவுகின்றது. பங்களாதேஷில், பிரதமர் ஷேக் ஹசினாவின் அரசாங்கம் முன்னெப்போதுமில்லாத அளவு எதேச்சதிகார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டினாலும் அதிகரித்து வரும் எதிர்ப்பு அலைக்கு எதிராக முதலாளித்துவ ஆட்சியை தூக்கி நிறுத்துவதற்கு இதைத் தவிர வேறு வழி கிடையாது.
பூகோள-அரசியல் பகைமை கூர்மைப்படுவதன் மத்தியில், அணு ஆயுத சக்திகளுக்கு இடையே பேரழிவுகரமான உலகப் போர் ஆபத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சீனாவிற்கு எதிராக தனது உலக மேலாதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள அமெரிக்கா அதன் இராணுவ வலிமையைப் பயன்படுத்த முற்படுகையில், தெற்காசியாவின் அனைத்து நாடுகளும் இந்த நீர்ச்சுழிக்குள் இழுக்கப்பட்டு வருகின்றன. பெய்ஜிங்கிற்கு எதிரான வாஷிங்டனின் போர் முயற்சியில் இந்தியா ஒரு "முன்நிலை" அரசாக ஆகியுள்ள அதேவேளை, சீனாவிலிருந்து தூர விலகுமாறு அமெரிக்கா பாகிஸ்தானை மேலும் மேலும் நெருக்கி வருகின்றது.
இலங்கையில் இராஜபக்ஷவை சீனாவுக்கு நெருக்கமானவாரகக் கண்டதால், அமெரிக்கா சிறிசேனவை நியமிக்க ஆட்சி மாற்ற நடவடிக்கை ஒன்றுக்கு திட்டமிட்டது. உழைக்கும் மக்களின் முதுகுக்குப் பின்னால், "தேசிய ஐக்கிய" அரசாங்கமானது சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவத் திட்டங்களுடன் நாட்டை ஒருங்கிணைக்கிறது.
இந்திய துணைக் கண்டம் முழுவதிலும், மற்றும் உண்மையில் உலகம் முழுவதும் உள்ள காலனித்துவத்துக்கு பிந்தைய நாடுகள் என அழைக்கப்படுவனவற்றில், முதலாளித்துவ வர்க்கங்களும் அவற்றின் அரசியல் சேவகர்களும் ஏகாதிபத்தியத்திலிருந்து உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை நிரூபித்து வருகின்றன. மேலும், அனைவருக்கும் உண்மையான ஜனநாயக உரிமைகள் மற்றும் ஒரு கௌரவமான வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கான தமது வாக்குறுதிகளை பூர்த்தி செய்ய அவை முற்றிலும் தவறிவிட்டன.
எழுபது ஆண்டுகளுக்கு முன்னர், போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியும் (Bolshevik Leninist Party of India - BLPI) 1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலமும் மட்டுமே, அங்கு வழங்கப்பட்டது ஒரு "போலி சுதந்திரம்" என அம்பலப்படுத்தின. "சுதந்திரம்" என்பது ஏகாதிபத்தியத்தின் "நேரடியான ஆட்சி வழிமுறைகளில் இருந்து மறைமுக ஆட்சி வழிமுறைகளுக்கு" மாற்றப்படுவது மட்டுமே என்று பி.எல்.பி.ஐ. தலைவர் கொல்வின் ஆர். டி. சில்வா விளக்கினார்.
இந்தியாவில் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வளர்ந்து வரும் புரட்சிகர எழுச்சியை முகங்கொடுத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் தலைவர்களுடன் 1947ல் இந்து இந்தியா மற்றும் முஸ்லீம் பாக்கிஸ்தானாக துணைக் கண்டத்தை கூறுபோடுவதற்கு கூட்டாய் சதி செய்தது. மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட இரத்தக்களரி வகுப்புவாத வன்முறைக்கு வழிவகுத்த இந்த பிரிவினைக்கு இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள் நேரடியாக ஆதரவு கொடுத்தன.
பி.எல்.பி.ஐ. இந்த துண்டாடலை எதிர்த்தது. டி. சில்வா விளக்கியதாவது: "ஒரு பக்கம் இது வெகுஜனங்கள் மீதான ஏகாதிபத்திய அடிமைச் சங்கிலிகளை மறு கட்டமைப்புச் செய்யும் வழிமுறையாகவும்… மறுபக்கம், இது வெகுஜனக் கிளர்ச்சிகளை உள்ளக இனவாத உணர்வுகளுக்குள் திருப்பிவிடும் வழி முறையாக, பரஸ்பர யுத்த சிந்தனைக்குள் இரு நாடுகளையும் ஈர்த்துவிடும் நடவடிக்கையாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.”
பி.எல்.பி.ஐ. பின்னர் போருக்குப் பிந்தைய ஒழுங்குகளுக்கு அடிபணிந்து, அரசியல் ரீதியாக பின்வாங்கி, லங்கா சம சமாஜக் கட்சியினுள் (ல.ச.ச.க.) நுழைந்துகொண்டாலும், அதன் தொலைநோக்குடைய முன்கணிப்பு சரியானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியாவும் பாக்கிஸ்தானும் மூன்று முழு அளவிலான யுத்தங்களை நடத்தியுள்ளதுடன் அவற்றின் ஆளும் கும்பல்கள், உழைக்கும் மக்களை பிரித்து, வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கான தமது பிரதான அரசியல் ஆயுதமாக வகுப்புவாதத்தை பயன்படுத்தி வருகின்றன.
இலங்கையில், உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்ற உடன் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கம் அதன் முதல் நடவடிக்கையாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மில்லியன் தோட்டத் தொழிலாளர்களது அனைத்து பிரஜா உரிமையையும் பறித்தெடுத்தது. கொழும்பு அரசியல் ஸ்தாபகம் அதன் ஆட்சிக்கு முண்டு கொடுப்பதன் பேரில், தொழிலாள வர்க்கத்தை இனவாதக் வழியில் பிளவுபடுவதற்காக மீண்டும் மீண்டும் தமிழர்-விரோத பேரினவாதத்தை தூண்டிவிடுவதை நாடுகின்றது.
1964ல் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்ததன் மூலம், சோசலிச சர்வதேசியவாதத்தின் அடிப்படைக் கொள்கைகளை வெளிப்படையாக நிராகரித்ததில் லங்கா சம சமாஜக் கட்சியின் அரசியல் சீரழிவு உச்சக்கட்டத்தை அடைந்தது. 1953ல் ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து முறித்துக் கொண்ட மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் ஆகியோரின் தலைமையில் நான்காம் அகிலத்திற்குள் தலைதூக்கிய ஒரு சந்தர்ப்பவாத கன்னையான பப்லோவாதம், இந்தக் காட்டிக்கொடுப்பின் ஒவ்வொரு முன்நகர்வுக்கும் ஒத்துழைத்து உடந்தையாக இருந்தது.
பண்டாரநாயக்க அரசாங்கத்திற்குள் நுழைகையில், ல.ச.ச.க. தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தை குழிதோண்டி புதைத்து, ஆளும் உயரடுக்கின் சிங்கள மேலாதிக்கவாத சித்தாந்தத்தை தழுவிக்கொண்டது. 1972ல் ஸ்ரீ.ல.சு.க. - ல.ச.ச.க. கூட்டணி அரசாங்கம், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து, பௌத்த மதத்தை அரச மதமாகவும் சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாகவும் ஆக்கிய புதிய அரசியலமைப்பை திணித்தது.
லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பால் உருவாக்கப்பட்ட குழப்பத்தை காஸ்ட்ரோவாதம், மாவோவாதம் மற்றும் சிங்கள ஜனரஞ்சக வாதத்தினதும் கலவையை அடிப்படையாகக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), சிங்கள கிராமப்புற இளைஞர்களிடையே தனது ஆதரவாளர்களை வெல்வதற்கு சுரண்டிக்கொண்டது. தமிழ் இளைஞர்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தமிழ் பிரிவினைவாதம் மற்றும் ஆயுதப் போராட்டத்திற்கான அதன் அறைகூவலுக்கு ஆதரவை வென்றது.
லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பு 1977ல் ஐ.தே.க. மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கும், அதன் சந்தை-சார்பு வேலைத்திட்டத்தை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கும் வழி வகுத்தது. இந்த தாக்குதல்களை அரசாங்க தொழிலாளர்கள் எதிர்த்தபோது, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன 100,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததுடன், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக அடுத்தடுத்து ஒரு இனவாத ஆத்திரமூட்டல்களுக்கு அழைப்பு விடுத்தார். 1983 இல், தீவை நாசமாக்கிய முழு அளவிலான யுத்தத்தை அவர் ஆரம்பித்தார்.
சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.), சோசலிச சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு எதிராகப் போராட, 1968ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக உருவாக்கப்பட்டது. அது, அனைத்து விதமான தேசியவாதம் மற்றும் பேரினவாதத்தை எதிர்த்ததுடன், போருக்கும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த போராடியது.
இலங்கை போன்ற பின்தங்கிய நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவ வர்க்கம் என அழைக்கப்படுவது, வெகுஜனங்களின் எந்தவொரு சமூக மற்றும் ஜனநாயக அபிலாஷைகளை இட்டு நிரப்ப இயல்பிலேயே இலாயக்கற்றது என்பதை எடுத்துக்காட்டிய ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பு.க.க. மற்றும் சோ.ச.க. போராட்டம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த வேலைத்திட்டமும் முன்னோக்கும், 1917ல் ரஷ்யாவில் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் நடத்தப்பட்ட சோசலிசப் புரட்சியால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் நடந்த இந்தப் புரட்சி, இன்று வரை உலகின் முதலாவது ஒரே தொழிலாள வர்க்க அரசை ஸ்தாபித்தது.
இலங்கை முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பிரிவும் அதன் பிற்போக்கு மற்றும் தொழிலாள வர்க்க விரோத குணாம்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஜே.வி.பி. நீண்ட காலத்துக்கு முன்னரே பாராளுமன்ற ஆசனங்களுக்காக தனது இராணுவ சீருடையை விற்றுவிட்டதுடன் கொழும்பு ஸ்தாபகத்துடன் முழுமையாக ஒருங்கிணைத்துக்கொண்டுள்ளது. எப்போதும் தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புலிகள், ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் தனியான முதலாளித்துவ அரசை உருவாக்க முயன்றனர். பெரும் வல்லரசுகள் அதற்கு எதிராக தீர்க்கமாகத் திரும்பியதை அடுத்து, 2009ல் புலிகளின் தோல்வியானது தேசியவாதத்தின் திவால்தன்மையை நிரூபித்தது.
நவ சம சமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் ஜே.வி.பீ.யில் பிரிந்து சென்று உருவான முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற பல்வேறு போலி-இடது அமைப்புக்களும் பிரதான முதலாளித்துவக் கட்சிகளின் ஆதரவாளர்கள் மற்றும் உடந்தைகளே தவிர வேறொன்றுமில்லை. 2015ல் அமெரிக்க ஆதரவுடன் சிறிசேனவை நியமிப்பதற்கு அவர்கள் அனைவரும் அணிசேர்ந்தனர்.
இலங்கையில் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு கன்னையில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காகவும், ஒரு சில செல்வந்தர்களின் இலாபங்களை ஊதிப்பெருக்க வைப்பதற்காக அன்றி, உழைக்கும் மக்களின் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, தொழிலாளர்-விவசாயிகளது அரசாங்கத்திற்காக நாங்கள் போராடுகிறோம்.
தெற்காசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. சோசலிச சர்வதேசியவாதத்திற்கும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கும் போராடுவதன் மூலம் மட்டுமே ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படவும் போர் அச்சுறுத்தலுக்கு முடிவுகட்டவும் முடியும். இந்த சர்வதேச போராட்டத்தில் இன்றியமையாத அரசியல் ஆயுதம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வெளியீடான உலக சோசலிச வலைத் தளம் (wsws.org) ஆகும்.
அதன் சுதந்திர தின கொண்டாட்டங்களின் மூலம், அதன் எழுபது ஆண்டு ஜனநாயக விரோத ஆட்சி மற்றும் சமூக சிதைவின் மோசமான வரலாற்றை மூடிமறைக்க இலங்கை ஆளும் வர்க்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகள் இந்த பிற்போக்கு போலித்தனத்தை நிராகரிக்குமாறும், சோ.ச.க. மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் கற்குமாறும், முதலாளித்துவத்தை தூக்கி வீசி, மனிதகுலத்திற்கு ஒரு சோசலிச எதிர்காலத்தை உருவாக்குவதற்காக புரட்சிகர போராட்டத்தில் இணையுமாறு நாம் அழைப்பு விடுகிறோம்.