Print Version|Feedback
The Munich Security Conference and Germany’s return to world power politics
மூனீச் பாதுகாப்பு மாநாடும், உலக அதிகார அரசியலுக்கு ஜேர்மனியின் மீள்வருகையும்
By Peter Schwarz
21 February 2018
மூனீச் பாதுகாப்பு மாநாட்டில் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயென் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேலின் கருத்துவெளிப்பாடுகள், எதிர்வரவிருக்கும் பெரும் கூட்டணியின் மத்திய பணி என்னவாக இருக்கும் என்பதை எடுத்துரைக்கின்றன. அதாவது, கடந்த நூற்றாண்டில் இரண்டு உலக போர்களுக்கும், மனிதயின வரலாற்றிலேயே மிக கொடூர குற்றங்களுக்கும் இட்டுச் சென்ற இராணுவவாதம் மற்றும் வல்லரசு அரசியலுக்கும் ஜேர்மனியை மீண்டும் திருப்புவதாகும்.
2014 இன் வெகு ஆரம்பத்தில், கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) வொன் டெர் லெயெனும் மற்றும் காப்ரியேலின் சமூக ஜனநாயக கட்சியில் (SPD) முன்பு வெளிவிவகார அமைச்சராக பதவியிலிருந்த பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையரும் அந்தாண்டின் முனீச் மாநாட்டில் இராணுவ கட்டுப்பாடு முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக அறிவித்தனர்.
“ஜேர்மனி, விரைவாகவும், மிக தீர்மானத்துடனும், இன்னும் அதிகமாக போதுமானளவுக்கும் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும்,” என்று அந்நேரம் அறிவித்த ஸ்ரைன்மையர், “உலக அரசியலின் வெளியில் நின்று கருத்துரைப்பதைக் காட்டிலும் ஜேர்மனி மிகவும் பலமானது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
வொன் டெர் லெயென் இப்போது இந்த கொள்கையை நடைமுறைப்படுத்த முன்நகர்ந்து வருகிறார்.
“நாம் பொறுப்பேற்றுள்ளோம்,” என்று பெருமைப்பட்ட அவர், உக்ரேன் விவகாரம் மற்றும் நேட்டோவின் கிழக்கு பகுதியை பலப்படுத்துவதில் ஜேர்மன் வகித்த பாத்திரம், ஈராக், சிரியா மற்றும் மாலியில் ஜேர்மனியின் இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கோளிட்டார். அதேநேரத்தில், ஒரு சில ஆண்டுகளில் ஜேர்மன் இராணுவ செலவுகளை இரட்டிப்பாக்கும் ஒரு விரிவான மீள்ஆயுதமயப்படுத்தும் திட்டத்தையும் அவர் அறிவித்தார்.
வொன் டெர் லெயென் புதிய ஆயுதங்களை நிலைநிறுத்துவதில் அவர் தீர்மானகரமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். “தகைமைகள் மற்றும் கட்டமைப்புகளைக் கட்டமைத்தல் ஒரு விடயம்,” “இன்னொரு விடயம், சொல்லப் போனால், சூழ்நிலைக்கு தேவைப்படும் போது இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான பொதுவான விருப்பம்,” என்றார்.
காப்ரியேலும் அதே தொனியில் கருத்துரைத்தார். "உலகத்தில் ஐரோப்பாவிற்கு பொதுவான அதிகாரக்கட்டமைப்பு" வேண்டியுள்ளது என்றார். இதை இராணுவ வழிவகைகள் இன்றி செய்ய முடியாது, “ஏனென்றால் ஊனுண்ணிகள் உள்ள ஓர் உலகில் ஒரேயொரு சைவ உணவினராக இருப்பது மிகவும் கடினமானது” என்றார்.
"புதிய ஆசிய சகாப்தத்தின் தொடக்கத்திற்கு" எதிராக எச்சரித்த அவர், “மிகவும் அசௌகரியமான மற்றும் அபாயகரமான உலகின் சவால்களை முகங்கொடுக்க" அங்கே கூடியிருந்த இராணுவ பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகளை வலியுறுத்தினார். கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிக்கு இடையிலான கூட்டணி உடன்படிக்கையானது, "வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி கொள்கையில் பாரிய முதலீட்டை" வழங்குகின்றது என்று தற்பெருமை பேசினார். “எதிர்வரவிருக்கும் அரசாங்கத்தினது வெளியுறவு கொள்கையின் இதயதானத்தில்" “ஒரு பரந்த ஒன்றோடொன்று பிணைந்த பாதுகாப்புத்துறை கருத்துரு" இருக்கும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
வட கொரியா, ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான போர் அச்சுறுத்தல்களுடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே பதட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன என்பதே மூனீச் பாதுகாப்பு மாநாட்டைச் சுற்றி சூழ்ந்துள்ளது. அம்மாநாட்டின் தலைவர் வொல்ஃப்காங் இஷிங்கர் மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் போன்ற முக்கிய பேச்சாளர்கள், பனிப்போர் முடிவடைந்த பின்னர் உலகம் ஒருபோதும் அணுஆயுத மோதலை இந்தளவுக்கு நெருக்கத்தில் கண்டிருக்கவில்லை என்று எச்சரித்தனர்.
ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் அதன் வரலாறு நெடுகிலும் செய்துள்ளதைப் போலவே இந்த நெருக்கடிக்கும் விடையிறுத்து வருகிறது. அதாவது அதன் போர்வெறி கொண்ட, மீள்ஆயுதமயப்படும், பைத்தியக்காரத்தனமான வல்லரசு திட்டங்களை அபிவிருத்தி செய்து வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள், ஆபிரிக்காவிலும் மற்றும் "கிழக்கு ஐரோப்பாவிலிருந்து மத்திய ஆசியா வரையிலும்" அவற்றின் நலன்களை ஸ்திரப்படுத்த "மூலோபாயங்கள் மற்றும் தளவாடங்களை அபிருத்தி" செய்ய வேண்டியுள்ளதாக காப்ரியேல் அறிவித்தார். அவர், “ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிளவுபடுத்த யாரும் முயல வேண்டாம்" என்று அறிவித்து, ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்தினார்.
பிரான்சுடனான நெருங்கிய கூட்டுறவைச் சார்ந்துள்ள ஜேர்மன் அரசு, அதன் வல்லரசு திட்டங்களின் உண்மையான இயல்பை மூடிமறைப்பதற்காக ஐரோப்பிய ஒற்றுமையைக் கையிலெடுக்கிறது. வொன் டெர் லெயென் அவரது பிரெஞ்சு சக கூட்டாளியான புளோரென்ஸ் பார்லியுடன் சேர்ந்து அம்மாந்நாட்டை தொடங்கி வைத்தார், இவரும் ஒரு விரிவான மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்தை முன்வைத்தார். பார்லி தெரிவித்தார், “நாங்கள் 'ஐரோப்பியர்களின் ஓர் இராணுவத்தை!' உருவாக்குவதற்காக ஓர் அரசியல் நகர்வை மேற்கொண்டுள்ளோம், ஜேர்மனியும் பிரான்சும் கூட்டாக ஐரோப்பிய திட்டத்தைத் தொடர தயாராக உள்ளது, இதில் முன்னோக்கி செல்வதற்கு ஐரோப்பியர்கள் அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்,” என்றார்.
ஐரோப்பாவை குறித்து பேசும் இந்த வாய்வீச்சுக்கும், அதில் வாழ்பவர்களது நலன்களுக்காக அக்கண்டத்தை ஐக்கியப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது, ஓர் உலக சக்தியாக செயல்படுவதற்காக, ஐரோப்பாவில் மேலாதிக்க செலுத்துவதற்கான ஜேர்மன் விருப்பத்தின் வெளிப்பாடாகும். அரங்க மேடையில் ஒன்றுகூடி உட்காருவதற்கே மறுக்கும் அளவுக்கு ஐரோப்பிய அரசு தலைவர்கள் பிளவுபட்டுள்ளனர், இதற்காக மூனீச் மாநாட்டு தலைவர் இஷிங்கர் குறைபட்டு கொண்டார்.
மூனிச் பாதுகாப்பு மாநாடு, ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே ஓர் இராணுவவாத வெறித்தனத்தைத் தூண்டியது. ஜேர்மன் பத்திரிகைகள் முழுவதும், இராணுவம் எந்தளவுக்கு "புறக்கணிக்கப்பட்டும்" “ஆதாரவளமின்றியும்" உள்ளது என்பது குறித்த செய்திகளால் நிரம்பி இருந்தன.
இராணுவத்தின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹரால்ட் குஜாத் (Harald Kujat) Deutschlandfunk செய்திக்கு கருத்து தெரிவித்த போது, அதற்கு பொறுப்பான அரசியல்வாதிகளைக் கூர்மையாக விமர்சித்தார். இராணுவத்தின் நிலை "பரிதாபகரமாக" இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதன் “போக்கை சீராக்க" அழைப்பு விடுத்தார். பாதுகாப்பு அமைச்சர் "ஆயுத திட்டங்களுக்காக 2030 க்குள் 130 பில்லியன் யூரோ" அறிவித்திருப்பதை அவர் சுட்டிக் காட்டிய போதும், “துரதிருஷ்டவசமாக இதுவரையில் ஒன்றும் நடக்கவில்லை" என்றவர் சாடினார்.
கடந்த காலத்தின் இரத்த தாகமெடுத்த வார்த்தைகளும் திரும்பி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் மூனீச்சில் கோருகையில், ஐரோப்பா "உலக அரசியல் தகைமைக்காக போட்டியிட" வேண்டுமெனக் கோரினார், ஜேர்மன் பத்திரிகைகள் உற்சாகத்துடன் அந்த வார்த்தையை பிடித்துக் கொண்டன. “தயவுசெய்து, உலக அரசியலுக்காக இன்னும் அதிக ஆற்றல்!” என்று Die Zeit ஒரு கட்டுரைக்குத் தலைப்பிட்டிருந்தது, அதேவேளையில் Frankfurter Allgemeine Zeitung “உலக அரசியலில் ஐரோப்பா இன்னும் அதிக தகைமை கொண்டிருக்க வேண்டும்,” என்று எழுதியது.
இந்த வார்த்தைகள் எல்லாம் கவனித்தக்க வரலாற்று பின்னணியில் இருந்து வருகின்றன. முதலாம் உலகப் போருக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் ஜேர்மன் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த “உலக அரசியல்" என்ற இந்த கோஷம், நிலச்சுவான்தாரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் குட்டி-முதலாளித்துவ வர்க்கத்தினரை கடற்படை மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்தின் பின்னால் அணிசேர்த்து, ஏகாதிபத்திய விரிவாக்க போக்கில் கொண்டு சென்றது. இது தவிர்க்கவியலாமல் பிரிட்டிஷ் பேரரசுடனும் அமெரிக்காவுடனும் மோதலுக்கு இட்டுச் சென்றது.
ஜேர்மன் வரலாறு தொடர்பான ஹென்றிச் ஆகஸ்டின் தரமான படைப்பான மேற்கை நோக்கிய நீண்ட பாதை (The Long Road to the West) என்பதில், 1890 க்கும் 1918 க்கும் இடையிலான ஆண்டுகள் குறித்த அத்தியாயத்திற்கு அவர் "உலக அரசியலும் உலக போரும்" என்று தலைப்பிட்டிருந்தார். அவர் எழுதினார், “ஐரோப்பிய கண்டத்தில் ஏற்கனவே ஜேர்மன் சாம்ராஜ்ஜியம் அரைவாசி-மேலாதிக்க அந்தஸ்தைக் கொண்டுள்ள நிலையில், ஜேர்மனி உலக அரசியலைப் பின்பற்ற முடிவெடுத்த போது,” “இதனால் பாதிக்கப்படும் பிரதான சக்திகள் எடுக்கும் தற்காப்பு முயற்சிகள்" மட்டுமே இதன் விளைவாக இருக்கும்.
“உலக அரசியல்" கொள்கையானது உள்நாட்டு எதிரிக்கு எதிராகவும் திருப்பிவிடப்பட்டது. அதாவது அந்தநேரம் விரைவாக வளர்ச்சியடைந்த மற்றும் அப்போது அந்த காலத்தில் மார்க்சிசவாதிகளாக இருந்த சமூக ஜனநாயகக் கட்சிக்கு எதிராகவும் திருப்பி விடப்பட்டது. 1895 இல் ரீர் அட்மிரல் அல்ஃப்ரெட் வொன் திர்பிட்ஸ் எழுதிய ஒரு கடிதத்தில் இருந்தும் வின்ங்லர் மேற்கோளிட்டார். ஜேர்மனி உலக அரசியலுக்கு முன்னேறி செல்ல வேண்டியிருப்பதற்கு ஆகக்குறைந்தது "மிகப்பெரும் புதிய தேசிய கடமைகளும் அதனுடன் தொடர்புபட்ட பொருளாதார ஆதாயங்களும் மட்டுமல்ல, படித்த மற்றும் பாமர சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஒரு பலமான வலிநிவாரணியும் தேவையாக உள்ளதாக" கடற்படை தளவாடங்களுக்கான திட்டத்தின் ஆசிரியர் எழுதினார்.
இன்று, அந்த "உலக அரசியலை", அதில் உள்ளடங்கிய அனைத்து விளைவுகளோடும், சமூக ஜனநாயகக் கட்சி (SPD), CDU மற்றும் CSU உடனான கூட்டணியுடன் நடத்திக் கொண்டிருக்கிறது: அதாவது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மீள்ஆயுதமயப்படுத்தல், சமூக செலவின வெட்டுக்கள், ஊடகங்களின் ஒத்திசைவை அரசு பெற்றிருப்பது, இணைய தணிக்கை மற்றும் ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AfD) வடிவத்தில் அதிவலதைப் பலப்படுத்துதல் ஆகியவை.
எதிர்கட்சி என்றழைக்கப்படுபவை உள்ளடங்கலாக, இதற்கு ஜேர்மன் நாடாளுமன்றத்தில் (Bundestag) எந்த எதிர்ப்பும் இல்லை. சுதந்திர ஜனநாயகக் கட்சியும் (FDP), தனது நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளில் எண்ணற்ற முன்னாள் மற்றும் பின்புல இராணுவ அதிகாரிகளை உள்ளடக்கி உள்ள ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியும் (AfD) முற்றிலுமாக இராணுவத்தின் பக்கம் உள்ளன.
பசுமை கட்சியினர் இந்த புதிய பெரும் கூட்டணியை வலதிலிருந்து தாக்கி வருகின்றனர். பசுமைக் கட்சியின் பாதுகாப்புத்துறை கொள்கை செய்தி தொடர்பாளர் ரோபியாஸ் லிண்டனர், இராணுவத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க எதுவும் செய்யப்படவில்லை என்று Deutschlandfunk இல் பாதுகாப்புத்துறை அமைச்சரைக் குற்றஞ்சாட்டினார். இராணுவத்திடம் உயர்ரக நவீன ஆயுத அமைப்புகள் இல்லை என்று கூறிய அவர், “கப்பல்களின் நிலை என்ன, போர்விமானங்களின் நிலை என்ன?” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
இடது கட்சி வல்லரசு அரசியல் புதுப்பிக்கப்படுவதை ஆதரிக்கிறது. நாடாளுமன்ற வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான குழுவின் இடது கட்சி பிரதிநிதி ஷ்ரெபான் லீபிஸ், காப்ரியேலின் உரைக்கு உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அமெரிக்கா உடனான உறவு மீது மறுசிந்தனையும் மீள்நோக்குநிலையும் "நீண்டகாலமாகவே கருத்தில் எடுக்கவேண்டியதாக இருந்து" வந்ததாக ஒளிபரப்பு நிறுவனம் Phoenix க்கு அவர் தெரிவித்தார். “நாம் நமது சொந்த நலன்களைக் கொண்ட ஓர் இறையாண்மை நாடு, இது மிகப் பெரும்பாலும் அமெரிக்காவின் நலன்களுடன் ஒத்து போகும் என்றாலும், சிலவேளைகளில் ஒத்துப் போகாது,” என்பதை அவர் சேர்த்துக் கொண்டார்.
சமூக ஜனநாயகக் கட்சிக்குள், பெரும் கூட்டணியின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் இப்பிரச்சினையைத் தட்டிக்கழித்து வருகின்றனர். ஆதரவாளர்கள் இதைக் குறித்து பேசுவதில்லை ஏனென்றால் அவர்கள் எதிர்ப்பைக் கிளறி விட விரும்பவில்லை என்பதால். கூட்டணி உடன்படிக்கை மீது தற்போது வாக்களித்து வரும் கட்சி உறுப்பினர்களிடையே, அரசாங்கத்தில் SPD பங்கெடுப்பதை ஊக்குவிப்பதற்கு ஆதரவை பெறும் நோக்கில், அக்கட்சியிலுள்ள இக்கொள்கைக்கு ஆதரவானவர்கள் வெளியுறவு கொள்கை குறித்தோ அல்லது இராணுவம் குறித்தோ ஒருமுறை கூட குறிப்பிட்டதில்லை. பெரும் கூட்டணியின் எதிர்ப்பாளர்கள் அந்த தலைப்பை தவிர்த்துக் கொள்கிறார்கள் ஏனென்றால் இந்த பிரச்சினையில் அவர்கள் காப்ரியேலுடன் உடன்படுகிறார்கள் என்பதால்.
சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei—SGP) மட்டுமே வல்லரசு அரசியல் மற்றும் இராணுவவாதத்தை நிராகரிக்கும் ஒரே அரசியல் போக்காக இருப்பதுடன், அவற்றை எதிர்ப்பதில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணித்திரட்ட முயன்று வருகிறது. நாங்கள் பெரும் கூட்டணியை நிராகரிக்கிறோம் என்பதோடு, புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
ஒரு பெரும் கூட்டணி என்ன கொடூரமான திட்டங்களைப் பின்தொடரும் என்பதை இந்த கூட்டணியின் உடன்படிக்கையே எடுத்துக்காட்டுகிறது. அதேநேரத்தில், அது இன்னும் பல கேள்விகளையும் எழுப்புகிறது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்த பல மாதகால கூட்டணி பேச்சுவார்த்தைகளில், SPD, CDU/CSU மற்றும் அவற்றின் இராணுவ மற்றும் வெளியுறவு கொள்கை ஆலோசகர்கள் எட்டிய இரகசிய உடன்படிக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் அனைத்தையும் பிரசுரிக்குமாறு நாங்கள் கோருகிறோம். இரட்டிப்பாக்கப்படும் இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கிற்கு எதிலிருந்து நிதி வழங்கப்படும்? ஜேர்மனி அணுஆயுதங்களைக் கொள்முதல் செய்ய திட்டமிட்டு வருகிறதா? பிரான்ஸ் மற்றும் நேட்டோவுடன் இதேபோன்ற உடன்படிக்கைகள் உள்ளனவா?
ஒரு வரலாற்று பேரழிவுக்குத் தயாரிப்பு செய்து வரும் ஆளும் வர்க்க சதித்திட்டத்தை எதிர்ப்பதில் முதல்படி, புதிய தேர்தல்களுக்காக போராடுவதாகும். சோசலிச சமத்துவக் கட்சி (SGP), ஆளும் உயரடுக்கின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தவும், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளுடன் சேர்ந்து, போர், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு பலமான சோசலிச இயக்கத்தைக் கட்டமைக்கவும், தொழிலாள வர்க்கத்திலும் மற்றும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் ஒரு தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
இப்பிரச்சினைகளைக் குறித்து விவாதிக்க எமது நிகழ்வுகளுக்கு வாருங்கள்! சோசலிச சமத்துவக் கட்சி (SGP) மற்றும் நான்காம் அகிலத்தின் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பில் இணையுங்கள்!