Print Version|Feedback
Tens of thousands of German industrial workers on strike
பத்தாயிரக்கணக்கான ஜேர்மன் தொழிற்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்
By our reporters
1 February 2018
ஜேர்மனியின் வாகன உற்பத்தித் துறை, உலோகத் துறை மற்றும் மின்பொருட்கள் தயாரிப்புத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஒருநாள் வேலைநிறுத்தங்கள் செவ்வாய்கிழமை மாலையில் தொடங்கின. IG Metall தொழிற்சங்க புள்ளிவிவரத்தின் படி, சுமார் 68,000 தொழிலாளர்கள் வேலை செய்யக் கூடிய 80 ஆலைகளில் வேலை புதன்கிழமை நிறுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை வரையிலும் இன்னும் கூடுதல் 200 செயல்பாடுகளிலான வேலைநிறுத்தங்கள் நடைபெறவிருக்கின்றன. இந்த வேலைநிறுத்தங்களில் 500,000 தொழிலாளர்கள் பங்கேற்கவிருப்பதாக மதிப்பிடப்படுவதால், 15 ஆண்டுகளில் இத்துறையில் நடைபெறும் மிகப்பெரும் வேலைநிறுத்தங்களாக இவை ஆகின்றன.
இந்த வேலைநிறுத்தங்களில் ஒரு கண்ணை கூசச் செய்யும் முரண்பாடு மேலோங்கி நிற்கிறது. பெருநிறுவனங்கள் செல்வத்தில் கொழிக்கின்ற அதேவேளையில் தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் தொடர்ந்து மோசமடைந்து செல்வது குறித்து தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரும் கோபம் நிலவுகின்ற அதேவேளை, தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த அணிதிரட்டலைத் தடுப்பதற்கும் வேலைநிறுத்தத்தை விலைபேசுவதற்கும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கின்றன.
ஆறு சதவீத வருடாந்திர ஊதிய அதிகரிப்பு என்ற தனது ஆரம்ப இலக்கை IG Metall நீண்ட காலத்திற்கு முன்பே கைவிட்டு விட்டது. மூன்று சதவீத அதிகரிப்பு என்ற முதலாளிகளின் ஆத்திரமூட்டும் முன்மொழிவுக்கு 3.6 சதவீத அதிகரிப்புக்கு உடன்பட முன்வந்ததன் மூலமாக பெரும் விட்டுக்கொடுப்புகளை அது செய்திருக்கிறது. இது தவிர, 35 மணி நேர வேலைவார நீட்டிப்பை ஏற்றுக் கொள்வதற்கான அதன் விருப்பத்தையும் இத்தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியிருக்கிறது. முதலாளிகளுடன் ஒரு பரிதாபத்திற்குரிய உடன்பாட்டை எட்டுவதற்கு முன்பாக தொழிலாளர்களின் கோபத்தை தணியவைத்து விடும் நோக்கத்துடனேயே IG Metall வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
”முடிவற்ற வேலைநிறுத்தங்கள் இல்லாமல், ஒரு உடன்பாட்டை எட்டுவதுதான் எங்கள் இலக்காக எப்போதும் இருந்து வருகிறது” என்று IG Metall இன் தலைவரான Jörg Hofmann புதன்கிழமையன்று ஃபிராங்பேர்ட்டில் தெரிவித்தார். “IG Metall பேச்சுவார்த்தை மேசையில் எப்போதும் ஆக்கபூர்வமான தீர்வுகளை எட்டவே ஆர்வம் காட்டுகிறது. மேலதிகப் பேச்சுவார்த்தைகளுக்கு எங்களது கதவு திறந்தே இருக்கிறது.”
ஆனால் தொழிலாளர்கள் இத்தகையதொரு உடன்பாட்டை எதிர்பார்த்து வேலைநிறுத்தங்களுக்காக வாக்களிக்கவில்லை மாறாக பல ஆண்டு கால ஊதியத் தேக்கத்தின் மீதான தங்கள் கோபத்தினாலேயே வாக்களித்தனர். ஒவ்வொரு தொழிற்சாலையிலும், இந்த போராட்டத்திற்கு மிகப்பெருவாரியான பெரும்பான்மையில் அவர்கள் வாக்களித்தனர். Kassel இல் இருக்கும் மெர்சிடஸ் பென்ஸ் ஆக்ஸில் தொழிற்சாலையில், 98 சதவீத தொழிலாளர்கள் ஒரு வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். Frankfurt/Main இல் இருக்கும் ஒரு வாகன உதிரிபாகங்கள் விநியோக நிறுவனமான AVO Carbon இல், IG Metall அங்கத்தவர்களில் 95.5 சதவீதம் பேர் இன்று 24 மணி நேரத்திற்கு வேலைக்கருவிகளை கீழே போட வாக்களித்தனர். Duisburg இல் உள்ள Grillo ஆலைகளிலும் கிட்டத்தட்ட 100 சதவீதத்தை ஒட்டிய பெரும்பான்மைகளில் வேலைநிறுத்தங்களுக்கு அழைக்க ஆதரவாக வாக்களிக்கப்பட்டிருந்தது.
IG Metall இந்த போர்க்குண மனோநிலைக்கு எதிரான விதத்தில், ஒவ்வொரு வேலைநிறுத்தத்தையும் தனிமைப்படுத்தி ஒரு பரந்த அணிதிரட்டல் அபிவிருத்தி காண்பதைத் தடுப்பதற்காக இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. ஒரு முக்கியமான தடவாளரீதியான வெற்றியாக அது, 24-மணி நேர வேலைநிறுத்தங்களை மூன்று-நாட்களுக்காய் பகிர்ந்து, ஒரு சமயத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மிக அதிகமான தொழிற்சாலைகள் வேலைநிறுத்தத்தில் இல்லாதவாறு உறுதிசெய்து கொண்டது. சில குறிப்பிட்ட தொழிற்சாலைகளில், வேலைநிறுத்தங்கள் தொடங்கும்போது பல குட்டிப் பேரணிகளை தொழிற்சங்கம் நடத்தினாலும் கூட, வருகைப்பதிவை ஒரு சில தொழிற்சாலைகளுடன் அது மட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது.
Stuttgart இல் Coperionக்கு வெளியில் முற்றுகைப் போராட்டம்
Stuttgart இல் எந்திர தயாரிப்பு நிறுவனமான Coperion இல், உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்கள் ஒரு சிறிய எண்ணிக்கையிலான முற்றுகைப் போராட்டதாரர்களை மட்டுமே சந்திக்க முடிந்தது. தனது பெயரைக் கூற மறுத்து விட்ட தொழிற்சங்க நிர்வாகி ஒருவர், முற்றுகைக்கு தொழிலாளர்களைத் திரட்டுவது IG Metallக்கு சிரமமான காரியமாக இருந்ததாக தெரிவித்தார். புதன்கிழமையன்றான அத்தனை வேலைநிறுத்தங்களையும் போலவே, அதுவும் 24 மணி நேரத்திற்குப் பின்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. Coperion இல் தொழிலாளர்கள் புதன்கிழமை மாலைக்குப் பின்னர் வேலைகளை மீண்டும் தொடர்ந்த சமயத்தில், நகரின் அதே சுற்றுப் பகுதியில் இருந்த Bosch ஆலையில் வேலைநிறுத்தத்திற்கு இத்தொழிற்சங்கம் அழைப்பு விடுத்திருந்தது, இது வியாழனன்று மாலை வரை நீடிக்கும்.
Hanau Vacuum Smelting இலும் இதேபோன்ற சித்திரமே முன்நின்றது. இந்த நிறுவனம் ஒருகாலத்தில் தொழிற்சங்கத்தின் கோட்டையாகக் கருதப்பட்டது, ஆனால் அங்கும் கூட IG Metall கணிசமான செல்வாக்கைத் தொலைத்து விட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, இங்கு 200 வேலைகளை வெட்டுவதற்கு அமெரிக்க தாய் நிறுவனமான OM உடன் தொழிற்சங்கம் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருந்தது, அதன்படி, இந்த ஆலையில் இப்போது வெறும் 1,400 தொழிலாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். இந்த தொழிற்சாலையில் வேலைநிறுத்தத்திற்கான வாக்களிப்பு என்பது கிட்டத்தட்ட ஏகமனதானதாக இருந்தது, ஆனால் முற்றுகைப் போராட்டத்தில் பங்குபெற்றிருந்தவர்களின் எண்ணிக்கையோ மிகக் குறைவானதாய் இருந்தது.
Hanau Vacuum Smelting இல் முற்றுகைப் போராட்டம்
தொழிலாளர்கள் ஏதேனும் ஒரு அல்லது இன்னொரு முதலாளியிடம் இருந்தான தாட்சண்யமற்ற நடவடிக்கைக்கு மட்டும் முகம்கொடுக்கவில்லை, மாறாக பெருநிறுவனங்கள், அரசு எந்திரம் மற்றும் அத்தனை அரசியல் கட்சிகளால் ஒழுங்கமைக்கப்படுகின்ற ஒரு சர்வதேச சமூக எதிர்ப்புரட்சிக்கு முகம்கொடுத்து நிற்கின்றனர். இந்த மோதலில் தொழிற்சங்கங்கள் பெருநிறுவனங்களின் பக்கத்தில் நிற்கின்றன.
பாரிய வேலைநீக்கங்களை அறிவித்ததன் மூலம் கோபத்தின் மையஇலக்காக ஆகியிருக்கும் சீமென்ஸ் கூட்டுக்குழுமத்திற்கு எதிரான போராட்டங்களில், இந்த சமூகத் தாக்குதல்களின் சர்வதேச வீச்சு குறிப்பாக மிகத் தெளிவாக இருந்தது.
Görlitz இன் சீமென்ஸ் தொழிலாளர்களது ஒரு குழு தங்களது ஆலை மூடப்படுவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சுமார் 750 கிலோமீட்டர்கள் சைக்கிள் மூலமாகப் பயணம் செய்து முனிச்சுக்கு வந்திருந்தனர். பிற இடங்களில் இருந்தான சீமென்ஸ் தொழிலாளர்கள் புதன்கிழமையன்று அவர்களை உற்சாகத்துடன் வரவேற்றனர், முனிச்சின் ஒலிம்பியா மண்டபத்தில் நடைபெறவிருந்த சீமென்ஸ் மத்திய பங்குதாரர்கள் கூட்டத்தில் பங்குபெறுபவர்கள் தங்களைக் கடந்தே சென்றாக வேண்டிய விதத்திலான ஒரு குறுகிய பாதையை அவர்கள் அமைத்தனர். அதேநாளில் ஃபிராங்பர்ட்டில் சீமென்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஃபிராங்பேர்ட் பங்குச் சந்தைக்கு முன்பாக சீமென்ஸ் தொழிலாளர்கள்
எதிர்ப்புப் போராட்டங்கள் அதிகரித்துச் சென்றாலும் தொழிற்சாலைகளை மூடும் தனது திட்டத்தில் தான் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாக சீமென்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான ஜோ கெய்சர் பங்குதாரர்கள் கூட்டத்தில் செவ்வாய்கிழமையன்று அறிவித்தார். “கடுமையான செலவு-வெட்டுத் திட்டத்திற்கு வேறு எந்த மாற்று வழியுமில்லை” என்று அவர் அறிவித்தார். அதே நேரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கான தனது பாராட்டை கெய்சர் பாதுகாத்துப் பேசினார். “ஜனாதிபதியின் வரிச் சீர்திருத்தத்திற்காக அவரை வாழ்த்தியதில் எனக்கு எந்த வருத்தமுமில்லை.”
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸின் உல்லாசப்போக்கிடத்தில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டத்தின் போது, ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் 15 முதன்மையான தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு ட்ரம்ப் ஒரு அழைப்பை நீட்டினார். கெய்சர் ட்ரம்புக்கு அருகில் அமர்ந்திருந்தார், அவர் முதலில் பேசினார், “ வரி சீர்திருத்தத்தை நீங்கள் மிகவும் வெற்றிகரமாகச் செய்துமுடித்திருந்ததால், நாங்கள் எங்களது அடுத்த தலைமுறை கேஸ் டர்பைன்களை (gas turbines) அமெரிக்காவில் உருவாக்குவதற்கு முடிவுசெய்திருக்கிறோம்.” டரம்ப் சேர்த்துக் கொண்டார், “அப்படியா, பெரிய விடயம் தான். அருமையான விடயம்.”
கெய்சர் சான்சலர் அலுவலகத்தில் நெருக்கமான தொடர்புகள் கொண்டிருப்பதோடு கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்கும் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான ஒரு மெகா கூட்டணியை உருவாக்க ஆதரிக்கிறார். பெருநிறுவன நலன்களுக்கும் பெரும்செல்வந்தர்களுக்கும் பலனளிக்கக் கூடிய வகையான இதேபோன்றதொரு வரிச் சீர்திருத்தத்தை வரவிருக்கும் ஜேர்மன் அரசாங்கத்திடம் இருந்து அவர் எதிர்பார்க்கிறார் என்ற உண்மையில் சந்தேகத்திற்கு எந்த இடமும் அவர் தரவில்லை. முனிச்சில் பங்குதாரர்கள் மத்தியில் பேசுகையில் அவர், ஒரு உலகளாவிய பெருநிறுவனத்தின் தலைவராக, மிகச் சிறந்த உற்பத்தி நிலைமைகள் எங்கு நிலவுகிறதோ அதனை நோக்கியே தனது பெருநிறுவன மூலோபாய நோக்குநிலையை தான் அமைத்தாக வேண்டும் என்று தெரிவித்தார்.
CDUம் SPDம் தமது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் ஜேர்மனியில் ட்ரம்ப்பின் வேலைத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தயாரிப்பு செய்கின்றன. சமூக பிற்போக்குத்தனம் மற்றும் இராணுவவாதத்தின் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கும், நாஜி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிந்தைய காலத்தின் மிக வலது-சாரியான வேலைத்திட்டத்தை திணிப்பதற்கான ஒடுக்குமுறை அரசு எந்திரத்தை வலுப்படுத்துவதற்கும் அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர். பெரும் தொழிற்சங்கங்கள் இந்தத் திட்டத்திற்கான தமது ஆதரவை வெகுகாலத்திற்கு முன்பே அறிவித்து விட்டன.
இது தொழிற்சாலைகளில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கிறிஸ்டியன் ஸ்வார்ஸ் Duisburg இல் இருக்கும் Grillo ஆலையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். “மெகா கூட்டணியிடம் இருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை, நிச்சயமாக சமூக மேம்பாடுகளை எதிர்பார்க்கவில்லை” என்றார் அவர். “காட்டிக்கொடுக்கப்பட்டதாக பலர் உணர்கின்றனர். அந்தக் காரணத்தால் தான் [அதி-வலது தீவிரவாத] AfD நாடாளுமன்றத்தில் இருக்கிறது. இப்படித் தான் இது தொடரப் போகிறது.”
அவரது சகாக்களில் ஒருவர் இதில் உடன்பட்டார், அவர் சேர்த்துக் கொண்டார், “ஆரம்பத்தில் எதிர்க்கட்சியில் அமரப் போவதாக SPD கூறியது, இப்போது அது மெகா கூட்டணியில் மறுபடியும் நுழைந்து கொண்டிருக்கிறது. இதன்மூலம் அவர்கள் முன்னினும் மோசமாய் நம்பகத்தன்மையை தொலைத்திருக்கின்றனர்.”
வெள்ளிக்கிழமையன்று வேலைநிறுத்தம் நடைபெறவிருக்கும் பேர்லினில் இருக்கும் ஒரு BMW ஆலையில், WSWS செய்தியாளர்கள் சைமன் என்ற ஒரு 34 வயது தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளியை சந்தித்தனர். தான் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பேது உறுதியாகத் தெரியவில்லை என்றார் அவர். வீட்டிலேயே அமரலாம் அல்லது முற்றுகைப் போராட்டத்தில் பங்கெடுக்கலாம் என்பதான தெரிவு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு விடப்பட்டுள்ளது. தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள் தற்போதைய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளால் பாதிக்கப்படவில்லை, ஏனென்றால் இதனினும் மோசமான நிலைமைகளைக் கொண்டிருக்கும் அவர்களுக்கான தனி ஒப்பந்தங்களுக்கு தொழிற்சங்கங்கள் ஏற்கனவே உடன்பட்டிருக்கின்றன. ஆகவே வளர்ந்து செல்லும் இந்த தொழிலாளர்கள் கூட்டத்தின் மத்தியில் IG Metall ஆழமாய் வெறுக்கப்படுவதாய் உள்ளது.
புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுவதற்கு ஆதரவு தெரிவித்த சைமன், தேர்தல் நாளன்று வாக்குகள் மூலமாக அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்ட ஒரு கூட்டணி திரை மறைவில் புதிய அரசாங்கத்திற்குத் தயாரிப்பு செய்து கொண்டிருப்பது குறித்து ஆவேசத்துடன் பேசினார். தொழிலாளர்கள் ஒரு சிறுபான்மை எண்ணிக்கையிலானோருக்காக செல்வத்தை உற்பத்தி செய்கின்றார்கள், அவர்களுக்கு அதில் மிக மிகக் குறைவாகவே கிடைக்கிறது என்று அவர் புகார் தெரிவித்தார்.
போராட்டத்தில் தொழிலாளர்களை சர்வதேச அளவில் ஐக்கியப்படுத்துவது என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei’s) முன்னோக்கை அவர் வலுவாக ஆதரித்தார். “மிகச் சரியாக அதுவே தேவை” என்று அவர் உற்சாகத்துடன் கூறினார். ருமேனியாவில் தொழிற்சங்கங்களுக்கு எதிரான தன்னியல்பான வேலைநிறுத்தங்கள் குறித்த செய்திகளை அவர் மிக ஆர்வத்துடன் கேட்டறிந்தார். “இதைப் பற்றி மிகக் குறைவாகவே தெரியப்படுத்தப்படுகிறது என்பது வெட்கத்திற்குரியதாகும்” என்ற அவர் தனது சகாக்களுக்கு அளிப்பதற்காக SGP துண்டறிக்கைகளின் ஒரு கட்டை எடுத்துக் கொண்டார்.