Print Version|Feedback
In letter to Congress, social media companies outline plans for mass censorship
காங்கிரசுக்கு விடுத்த கடிதத்தில், சமூக ஊடக நிறுவனங்கள் பாரிய தணிக்கைக்கான திட்டங்களை விவரிக்கின்றன
By Will Morrow
31 January 2018
ஜனவரி 16 அன்று காங்கிரஸூக்கு சமர்ப்பிக்கப்பட்டு, ஜனவரி 25 அன்று வெளியான கடிதத்தின்படி, இணையத்தில் அரசியல் பேச்சைக் கண்காணிக்கவும் தணிக்கை செய்யவும் முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பீடு செய்பவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளதுடன், செயற்கை அறிவு மென்பொருள் தேடல் வழிமுறையை அபிவிருத்தி செய்தும் வருகின்றன.
முகநூல், டுவிட்டர் மற்றும் கூகுளில் இருந்து வரும் கடிதங்கள், “2016 அமெரிக்கத் தேர்தல்களில் சமூக ஊடகத்தின் செல்வாக்கு” பற்றி நவம்பர் 1, 2017ல் நடந்த செனெட் உளவுக் குழு விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பின்பற்றவேண்டியவை தொடர்பாக எழுதப்பட்டுள்ளன.
முகநூல் துணைத்தலைவரும் மற்றும் பொது ஆலோசகருமான கொலின் ஸ்ரெஷ் அந்நிறுவனமானது அதன் உள்ளடக்க மதிப்பீட்டாளர்ளின் பட்டாளத்தின் அளவை 10,000 லிருந்து 20,000 ஆக இரட்டிப்பாக்கும் என்று எழுதியதுடன், அதன் சமூக நடவடிக்கைகள் துறையில் இன்னும் 3000 பணியாளர்களை பணியர்த்தப் போவதாகவும் எழுதினார். அத்துறை “எமது பயனர்கள் மற்றும் தானியங்கிக் கருவிகள் பொருத்தமற்றதாக, ஆபத்தானதாக, அத்துமீறலாக அல்லது மற்றவகையில் எமது கொள்கையை மீறுவதாக காட்டும் விடயங்களை மீளாய்வு செய்யும்” என்று மேலும் தெரிவித்தார்.
இந்த மாற்றங்கள் “எமது தளத்தின் மீதான புதிய வகையான இழிவுபடுத்தலை அடையாளம் காண்பதற்கும், மற்றும் எமது சமூகத்தனரிடமிருந்தும் சட்ட அமலாக்கத்திடமிருந்தும் பெறும் அறிக்கைகளுக்கு விரைந்து பதில்கொடுப்பதற்கும்” உதவும்.
அத்துடன், முகநூலானது “உலகம் முழுவதிலும் விளம்பரங்களை மதிப்பீடு செய்ய அர்ப்பணித்துள்ள தமது குழுக்களுக்கு” மேலும் 1000 பணியாளர்களைச் சேர்த்துள்ளது. அவர்களது வேலை “எமது தானியங்கி மதிப்பீடு முறையை, முறையற்ற விளம்பரங்களைக் கண்டறிவதிலும் எமது கொள்கைகளை அமல்படுத்துவதிலும் இன்னும் திறமானதாகவும் சக்திமிக்கதாகவும் பயற்சியளிக்க” பயன்படுத்தப்படும்.
அதிகரித்த அளவில் சக்திமிக்க செயற்கை அறிவு தேடல் மென்பொருள் வழிமுறையுடன் ஒன்றிணைந்து முகநூல் மனித மதிப்பீட்டாளர்கள் வேலை செய்கிறார்கள். இம்முறையானது பரந்த அளவில் தணிக்கை அளவில் அதிகரிப்பை அனுமதிக்கும் அதேவேளை, மனித தணிக்கைகளின் முடிவெடுக்கும் நடத்தையைக் காட்டுவதற்கும் கற்கின்றது.
அதன் பெரும் தேர்ந்தெடுக்கும் “வெளிப்படைத்தன்மையை” அது முன்னிலைப்படுத்துவதின் ஒரு பகுதியாக, முகநூலானது, அனைத்து அரசியல் விளம்பரதாரர்களையும் பதிவு செய்யுமாறு கோருவதுடன் தங்களது பெயர், இருப்பிடத்தை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறது. ஸ்ரெஷ் இன் கடிதம், “செயலூக்கத்துடன் தங்களை வெளிப்படுத்தாத அரசியல் விளம்பரதாரர்களுக்காக, நாம் எந்திரம் மூலம் அறிந்துகொள்ளும் கருவிகளை உருவாக்கி வருகிறோம், அவை அவர்களைக் கண்டுகொள்ள எமக்கு உதவும்.” அத்தகைய தேடல் மென்பொருள் வழிமுறையானது, அதன் தளத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் குறிப்பிட்ட உள்ளடக்கம் அரசியல்ரீதியானதா என்பதைத் தீர்மானிக்கும் திறனுடையதாக இருக்கும்.
“பாதுகாப்பு விடயங்களில் முதலீடு செய்தல், மிகவும் முக்கியமானவை. ஏனெனில் நாம் செலவழிக்கும் தொகை எமது இலாபத்தன்மையை பாதிக்கும் என எதிர்பார்ப்பதாக” முதலீட்டாளர்களுக்கு அறிவித்திருப்பதாக ஸ்ரெஷ் மேலும் கூறினார்.
ஜனநாயகக் கட்சி செனெட்டர் கமலா ஹாரிஸ் இடமிருந்து வந்த கேளவிக்கு பதிலளிக்கையில், கூகுள் மூத்த உதவித்தலைவர் மற்றும் பொது ஆலோசகர் கேன்ட் வாக்கர், கூகுள் தேடலில் எந்த முடிவுகள் மேலுக்கு வருகின்றன என்று தீர்மானிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மென்பொருள் தேடல் வழிமுறையை, நிறுவனமானது தொடர்ந்து மேம்படுத்துகிறது என்று குறிப்பிட்டார். “கடந்த சில மாதங்களில், பொருந்தாத அல்லது சரிபார்க்கப்படாத முடிவுகள் இன்னும் பொருந்தும் முடிவுகளால் பதிலீடு செய்யப்படுவதை உறுதிப்படுத்த நாம் மீண்டும் ஒருமுறை எமது மென்பொருள் தேடல் வழிமுறையை மாற்றி இருக்கிறோம்,” என்று வாக்கர் குறிப்பீட்டார்.
பொது பாதுகாப்பு நிகழ்வுகளுக்குப் பின்னர் எமது உற்பத்திப் பொருட்கள் மீதான முடிவுகளை” கூகுள் தொடர்ந்து கண்காணிப்பதாகவும் வாக்கர் தெரிவித்தார். “இந்த பொது பாதுகாப்பு நிகழ்வுகள்” என்பன ஐயத்திற்கிடமின்றி அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியிலும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், இராணுவ நடவடிக்கைகள், பொலீஸ் துப்பாக்கிச்சூடுகள், தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் மற்றும் புலம்பெயர்தோர் எதிர்ப்பு திடீர்ச் சோதனைகள் ஆகியவற்றையும் உள்ளடக்குவன.
உள்ளடக்கத்தை மதிப்பிடல் என்பதை, கூகுள் அதன் தேடு பொறியின் மீதான பல்வேறு வலைத் தளங்களை நசுக்குதற்கு அல்லது முன்னேற்றுதற்கு அதிகரித்த அளவில் செயற்கை அறிவு வேலைத்திட்டங்களால் செய்யப்பட்டு வருகின்றன என்றும் வாக்கர் குறிப்பிட்டார். “கூகுள் ஒவ்வொருநாளும் பில்லியன் கணக்கான பயனர்களுக்கு சேவைசெய்கிறது மற்றும் எமது தீர்வுகள் பெரிய அளவில் வேலைசெய்யத் தேவைப்படுகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார். “நாம் ஆயிரக்கணக்கான மனித மதிப்பீட்டாளர்களில் மட்டும் நம்பி இருக்கவில்லை, நாம் பணியில் அமர்த்தியுள்ளோம் பயிற்சி அளித்துள்ளோம், ஆனால் எமது தளத்தை பாதுகாக்கவும் எமது கொள்கைகளுக்கு ஆதரவை முன்னேற்றுவிக்கவும் எந்திரம் மூலமாக அறிந்துகொள்ளும் மற்றும் தேடல் மென்பொருள் வழிமுறைகளை அபிவிருத்தி செய்வதற்கு எமது உயர் பொறியாளர்களில் சிலரை அர்ப்பணித்திருக்கிறோம்.”
உலக சோசலிச வலைத் தளமானது, கூகுள் தேடல் முடிவுகள் தேடல் மென்பொருள் வழிமுறைகளில் மாற்றங்கள் –கடந்த ஏப்பிரலில் “போலிச் செய்திகளை” எதிர்த்துப் போராடல் மற்றும் “அதிகாரபூர்வ உள்ளடக்கத்தை” முன்னேற்றுதல் என்ற பதாகையின் கீழ் முதலில் அறிவிக்கப்பட்டவை– சோசலிச, இடதுசாரி மற்றும் போர் எதிர்ப்பு வெளியீடுகளை, குறிப்பாக WSWS க்கான தேடல் போக்குவரத்தை தடுப்பதை நோக்கமாகக் கொண்டவை என ஆவணப்படுத்தி இருக்கிறது.
ஜனநாயககக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி சட்டம் வகுப்பவர்களால் சமூக ஊடக நிறுவனங்களுக்கு விடுக்கப்படும் கேள்விகள், அமெரிக்க அரசியலில் ரஷ்ய “தலையிடல்” என்று அழைக்கப்படுவதன் மீதான தற்போதைய பிரச்சாரத்தின் எதேச்சாதிகாரத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
குடியரசுக் கட்சி செனெட்டர் டாம் காட்டன் முகநூல் மற்றும் டுவிட்டரை ஏன் அவர்கள், அமெரிக்க அரசாங்கத்தின் வேவு மற்றும் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய தகவல்களை வெளியிட்ட இதழியல் வெளியீடான விக்கிலீக்ஸை தொடர்ந்து அனுமதிக்கின்றனர் என்று கேட்டார். அதன் தலைவர் ஜூலியன் அசான்ஜ் மற்றும் NSA அமெரிக்க மற்றும் உலக மக்களையும் பரந்தமுறையில் உளவுபார்த்தலை அம்பலப்படுத்திய எட்வார்ட் ஸ்னோவ்டென் ஆகியோர் தொடர்ந்து டுவிட்டர் மற்றும் முகநூல் கணக்குகளை தொடர்ந்து பராமரித்து வருவதைப் பற்றி அவர் கேட்டார்.
ஜனநாயகக் கட்சி செனெட்டர் கமாலா ஹாரிஸ், “மிகவும் பரந்ததான ரஷ்யப் பிரச்சாரத்தை” விட “போலியான” மற்றும் “கட்சி கடந்த” உள்ளடக்கமே உள்ளன, அதாவது அமெரிக்க ஊடகம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தை எதிர்க்கும் வலைத் தள கருத்துக்களே பிரச்சினையாக இருந்தது என்று அறிவித்தார். ஜனநாயகக் கட்சியாளான டியான் ஃபென்ஸ்ரைன், ரஷ்யாவில் “தயாரிக்கப்பட்ட” பதிவுகளை பார்த்ததாக அல்லது பகிர்விட்டதாகக் கூறப்படும் 126 மில்லியன் அமெரிக்கர்களின் தரவுகளை முகநூல் பராமரித்து வந்திருக்கிறதா எனத் தெரிவிக்கும்படி கோரினார்.
செனெட் குழு விசாரணைகளுக்குப் பின்னர், சமூக ஊடக நிறுவனங்கள் காங்கிரசுக்கு சமர்ப்பித்த ஆவணங்களில் விவரிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கும் மேலாகக் கூட சென்றுள்ளன. டிசம்பரில் முகநூல் பயனர்கள் முன்னர் அவர்கள் வாசித்திருந்த விடயங்களில் ரஷ்ய பக்கங்களுடன் தொடர்புபட்டிருந்தனவாகக் கூறப்படும் விடயங்களைப் பயனர்களுக்குக் காட்டும் ஒரு தகவல் தளத்தை உருவாக்கியிருப்பதாக முகநூல் அறிவித்தது. அதேபோன்ற அச்சுறுத்தும் அறிக்கையில், அனைத்துப் பயனர்களின் அரசியல் நடவடிக்கையைத்தான் பின் தொடர்ந்து வருவதாகத் தெளிவுபடுத்தும் விதமாக, டுவிட்டர் தான் பகிரப்பட்டதாகவும் பின்தொடரப்பட்டதாகவும் கூறும் “ரஷ்யப் பிரச்சாரம்“ குறித்து பயனர்களுக்கு ஒரு செய்தி அனுப்பியது.
ஜனவரி 12 அன்று, முகநூலானது பயனர்களின் செய்தியோடை மீதான அரசியல் உள்ளடக்கம் மற்றும் செய்திகளுக்கு முக்கியத்துவமின்மை அளித்ததாகவும் மற்றும் “தனிப்பட்ட நிகழ்வுகள்” என்று அழைக்கப்படுவனவற்றை முன்னேற்றுவதாகவும் அறிவித்தது. ஒரு வாரம் கழித்து, அது தான் பயனர்களுக்குக் காட்டும் செய்திகள் சுதந்திர செய்தி வெளிப்பாடுகளுக்கு கேடுவிளைக்கும் –நியூயோர்க் டைம்ஸூக்கான பங்கு விலைகளில் ஒரு கூர்மை அடைதலுக்கு இட்டுச்செல்லும் “நம்பிக்கைக்குரிய” வளங்களை நோக்கிய பற்றுக் கம்பியாக இருக்கும் என்று அது அறிவித்தது. முகநூல் தலைமை நிறைவேற்று அதிகாரி மார்க் சக்கெர்பேர்க் திங்கள் அன்று, செய்தியோடை இப்பொழுது “பிளவுபடுத்தும் தேசிய பிரச்சினைகளுக்கு” எதிர்ப்பாக பயனர்களின் சொந்த நகரங்கள் மாநகரங்களில் உள்ள செய்திகளை முன்னிலைப்படுத்தும் என்று அறிவித்தார். இந்நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தாபக செய்தி வெளிப்படுத்தங்களை வெளிப்படையாகவே முன்னேற்றுவித்து, பிரதான உலக நிகழ்வுகள் மற்றும் அரசியல் பிரச்சினைகள் மீதாக மாற்று முன்னோக்கை அடைவதிலிருந்து பயனர்களைத் தடுக்கவும் நோக்கங்கொண்டது.
தணிக்கை மற்றும் அரசியல் கண்காணிப்பின் ஒரு அமைப்பை கட்டுதல் அதிகரித்த அளவில் செயற்கை அறிவு தொழில்நுட்பத்தினால் ஊக்கப்படுத்தப்படுவது, உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவால் சோசலிஸ்ட், இடதுசாரி மற்றும் முற்போக்கு வலைத் தளங்களுக்கு அதன் “இணையத் தணிக்கையை எதிர்த்துப் போராட ஒரு சர்வதேசக் கூட்டணிக்காக” என்ற பகிரங்க கடிதத்தில் எழுதிய, 21ம் நூற்றாண்டு முதலாளித்துவ பொலீஸ் அரசுக்கு தொழில்நுட்ப சாரக்கட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்ற எச்சரிக்கையின் அவசரத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நாம் நமது வாசகர்கள் அனைவரையும் பகிரங்கக் கடிதத்தை வாசிக்குமாறும் அதனை மற்றவர்களிடம் பகிருமாறும் கேட்டுக்கொள்வதுடன், இணையத் தணிக்கைக்கு எதிரான போராட்டத்தில் தலையிடுவதற்கு எம்மைத் தொடர்புகொள்ளுமாறும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.