Print Version|Feedback
US to expand military deployments as war danger builds in Asia
ஆசியாவில் போர் அபாயம் கட்டமைந்து வருகையில், அமெரிக்கா இராணுவ நிலைநிறுத்தல்களை விரிவாக்குகிறது
James Cogan
12 February 2018
கடந்த மாதம் ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்ட தேசிய பாதுகாப்பு மூலோபாயம், சீனா மற்றும் ரஷ்யாவை அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்கொண்டிருக்கும் தலையாய "மூலோபாய போட்டியாளர்களாக" வரையறுத்தது. அவ்விரு அணுஆயுத நாடுகளையும், உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கத்தைப் பலவீனப்படுத்துவதில் இருந்து தடுக்கப்பட வேண்டிய "திரித்தல்வாத நாடுகளாக" அது முத்திரை குத்தியது. அமெரிக்கா "போருக்கான தயார் நிலையை முன்னுரிமைப்படுத்த" வேண்டியிருப்பதாக அந்த ஆவணம் அறிவித்தது.
ஒபாமா நிர்வாகம் நவம்பர் 2011 இல் அப்பிராந்தியத்தில் அதன் ஆத்திரமூட்டும் "முன்னெடுப்பை" அறிவித்ததில் இருந்து, கடந்த ஆறு ஆண்டுகளாக அமெரிக்க இராணுவம் இதை தான் ஆசியாவில் செய்து கொண்டிருக்கிறது. அது சீனாவுக்கு எதிராக பிராந்தியந்தழுவிய போர் தொடுக்க பல்வேறு மேற்பரப்பு கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், குண்டுவீசிகள், அதிவேக போர்-விமானங்கள், தரைப்படை பிரிவுகள் மற்றும் கடற்படை பிரிவுகளை நிலைநிறுத்தி தயாரிப்பு செய்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் அமெரிக்க படைகளின் புதிய தளங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்தில் மீள்ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளன. சீனாவுக்கு எதிராக ஒரு "மூலோபாய பங்காளியாக" அலங்கரிக்கப்பட்டுள்ள இந்தியா, இப்போது அமெரிக்க இராணுவத்திற்கு இடமளிப்பதுடன், பராமரிப்பு மற்றும் வினியோக ஏற்பாடுகளையும் வழங்குகிறது.
ஜப்பானின் ஒக்கினாவா மற்றும் ஏனைய இடங்களிலும், அமெரிக்கா, 18,000 கப்பற்படை துருப்புகள், ஒரு விமானந்தாங்கி போர்க்கப்பல் படைப்பிரிவு மற்றும் விமானப்படை அதிவேக போர்விமானங்களின் படைப்பிரிவுகள் உள்ளடங்கலாக, சுமார் 50,000 இராணுவப் படையினரைக் கொண்டுள்ளது. வட கொரியா உடனான எந்தவொரு மோதலுக்கும் தாக்குமுகப்பாக, அது தென் கொரியாவில் சுமார் 29,500 படையினரைக் கொண்டுள்ளது. குவாமில் 7,000 இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர், அத்துடன் அணுஆயுதங்கள் தாங்கிச் செல்லக்கூடிய B-52 மற்றும் B2 ரக மூலோபாய குண்டுவீசிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆசியாவில் அமெரிக்க பலத்தைத் திரட்டுவதற்கான அடுத்த கட்டத்தைக் குறித்து பெப்ரவரி 9 இல் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தது. பென்டகன், கடந்த தசாப்தத்திலும் அதற்கு முன்னர் இருந்தும் ஈராக் மற்றும் மத்திய கிழக்கில் பிரதானமாக பயன்படுத்திய மேற்கு கடற்படையை மையமாக கொண்ட மூன்று சாகச கடற்படை பிரிவுகளை (Marine Expeditionary Units - MEUs) அப்பிராந்தியத்தில் நிலைநிறுத்த பரிசீலித்து வருகிறது.
இந்த சாகச கடற்படை பிரிவுகளில், 2,200 கடற்படையினரும், அதிவிரைவு போர்விமானங்களும் மற்றும் நீரிலும் நிலத்திலும் தாக்கும் போர்க்கப்பல்களில் நிறுத்தப்பட்டுள்ள ஹெலிகாப்டர்களும் உள்ளன, அத்துடன் சேர்ந்து வழிநடத்தத்தக்க ஏவுகணைகள் தாங்கிய விரைவு போர்க்கப்பல்கள் மற்றும் அழிக்கும் நடுத்தர போர்க்கப்பல்கள், ஒத்துழைப்பு வாகனங்கள் மற்றும் பெரும்பாலும் ஒரு தாக்கும் நீர்மூழ்கிக்கப்பல் ஆகியவையும் உள்ளன. துப்பாக்கி தாங்கிய கப்பல் இராஜதந்திரத்தின் இருபத்தோராம் நூற்றாண்டு பதிப்பில், இந்த சாகச கடற்படை பிரிவுகள் நிலைநிறுத்தப்பட்டால், அவை சீனாவுக்கு எதிராக "அமெரிக்காவுடன் நிலைநிற்குமாறு பசிபிக் நாடுகளை இணங்குவிக்க" அப்பிராந்தியம் முழுவதிலும் ஒரேநேரத்தில் ஏழு மாதங்களுக்கு ரோந்து மேற்கொள்ளும்.
இந்த சாகச கடற்படை பிரிவுகள் (MEUs) “ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும்" மற்றும் "கூட்டாளிகளுக்கு பயிற்சியளிக்கும்" என்றும், “ஒரு மோதல் வெடித்தால் விடையிறுக்கும்" என்றும் பென்டகன் அதிகாரிகள் ஜேர்னல் பத்திரிகைக்கு தெரிவித்தனர். மேலும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அமெரிக்க கடற்படைக்கு எதிராக சீன இராணுவம் அபிவிருத்தி செய்து வரும் முன்னோக்கிய தளங்கள் அமைந்துள்ள தென் சீன கடலில், சீன வசமிருக்கும் தீவுதிட்டுக்கள் மற்றும் கடல்குன்றுகளைத் தாக்குவதிலும் கைப்பற்றுவதிலும் இந்த நிலத்திலும் நீரிலுமான தாக்கும் படைகள் பாத்திரம் வகிக்கும்.
முப்படை தளபதிகளின் தலைவர் ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட், கடந்த வாரம் வட ஆஸ்திரேலிய நகரமான டார்வினில் உள்ள அமெரிக்க தளங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட போது, பத்திரிகையாளர்களுக்கு கூறுகையில், “நாங்கள் இங்கே நீண்டகால நலன்களைக் கொண்டுள்ளோம், மேலும் நாங்கள் நீண்டகால பொறுப்புறுதி ஏற்றுள்ளோம், நாங்கள் இங்கே நீண்டகாலமாக இருந்து வருகிறோம்,” என்றார். இந்தாண்டின் ஆறு மாதங்களுக்கு டார்வினில் இருந்து செயல்படுவதற்காக ஒக்கினாவாவிலிருந்து அனுப்பப்படும் கடற்படையினரின் எண்ணிக்கை, இந்த மார்ச் மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் இருந்து கணிசமாக அதிகரிக்கப்படும் என்பதை பென்டகன் அதிகாரிகள் முன்னறிவிப்பாக தெரிவித்தனர்.
அமெரிக்க இராணுவம், குறுகிய-கால ஓட்டத்தில், வட கொரியாவுக்கு எதிரான ஒரு பாரிய தாக்குதலுக்கும், அதைத் தொடர்ந்து அதன் ஆட்சியை தூக்கியெறிவதற்கான ஒரு படையெடுப்பு மற்றும் வட கிழக்கு ஆசியாவில் அதிகார சமநிலையை விரைவாக மாற்றுவதற்கும் தயாரிப்பு செய்து வருகிறது. இது, வெறும் 25 மில்லியன் மக்களுடன் பொருளாதாரரீதியில் ஆதரவற்ற அந்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள சீனா மற்றும் ரஷ்யாவின் மூலோபாயத்திற்கு நேரடியாக கேடு விளைவிக்கும்.
தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடங்கிய நாட்களின் போது, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக்கல் பென்ஸ் இன் வாரயிறுதி நடவடிக்கை, மிகவும் அச்சுறுத்தலாக இருந்தது.
தென் கொரிய அரசாங்கம் வட கொரிய விளையாட்டுக் குழு பங்கெடுப்பதை அதன் வழியில் வரவேற்க சென்றதுடன், வட கொரிய தலைவர் தலைவர் கிம் ஜோங்-யுன் இன் சகோதரி கிம் யொ-ஜொங்கிற்கும் மற்றும் அந்த தனிமைப்பட்ட நாட்டின் பெயரளவிற்கான அரசு தலைவர் கிம் யொங்-நம்மிற்கும் இராஜாங்க மரியாதை அளிக்குமளவுக்கு சென்றது. இப்போதைய பதட்ட நிலை போராக விளைந்தால், தீபகற்பத்தின் இரண்டு தரப்பிலும் நூறாயிரக் கணக்கானவர்கள் காயப்படுவார்கள் என்பதுடன், பொருளாதார மற்றும் சமூக சீரழிவு ஏற்படும் என்ற நிலையில், அத்தகைய பதட்ட நிலையைத் தணிப்பதற்காக இரண்டு தரப்பு கொரியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை நோக்கி தற்காலிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
தென் கொரியா மற்றும் வட கொரியா இரண்டையும் அவமதித்து ஒரு கணக்கிட்ட ஏகாதிபத்திய இறுமாப்புடன், அமெரிக்காவுக்கு ஒரு சமாதானமான தீர்வு காணும் ஆர்வமில்லை என்பதை பென்ஸ் தெளிவுபடுத்தினார். அவர் வட கொரிய தலைவர்களுடன் பேசவும் கூட மறுத்து, அரசின் இரவு உணவு விருந்தில் இருந்து வெளியேறினார், பின்னர் தொடக்க விழாவின் போது இரண்டு தரப்பு கொரியர்களின் ஒருங்கிணைந்த குழு அணிவகுத்த போது எழுந்திராமல் தொடர்ந்து அமர்ந்திருந்தார்.
இத்தகைய இராஜாங்கரீதியிலான அவமதிப்புகள் ஒரேயொரு நோக்கத்திற்கே சேவையாற்றுகின்றன: அதாவது, வட கொரியாவை அமெரிக்காவின் ஒரு வாடிக்கையாளர் அரசாக மாற்றும் ஒரு விளைவை மட்டுமே ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கும் என்ற தவறுக்கிடமற்ற சேதியை அனுப்புவதற்கே சேவையாற்றுகின்றன. வாஷிங்டன், கிம் ஜோங்-யுன்னின் ஆட்சியின் முழுமையான அடிபணிவைக் கோரி வருகிறது. இதற்கு மாற்றீடு திட்டங்கள் ஏற்கனவே நடந்து வருகின்ற நிலையில்,"நெருப்பு கக்கும் சீற்றத்துடன்" வட கொரியாவை "முழுமையாக அழிப்பதென்ற" ட்ரம்பின் அச்சுறுத்தலை நடைமுறைப்படுத்துவதாகும்.
டார்வினில் அமெரிக்க கடற்படையினர் இடையே கூறிய உறைய வைக்கும் கருத்துக்களில், தளபதி டன்ஃபோர்ட் கூறினார்: “[இ]தன் இறுதியில், கொரிய தீபகற்பத்தில் நாம் சண்டையிட்டால் அது மிகவும் மோசமான ஒரு போராக இருக்கும். அதில், நிச்சயமாக நமது கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளுடன் சேர்ந்து, அம்மண்ணில் கடற்படையினர் மற்றும் சிப்பாய்கள் களமிறங்குவார்கள். நீங்கள் ஒரு கடற்படையினராக இருந்தால், வெளிப்படையாக கூறுவதானால் நீங்கள் சீருடையில் இருந்தால், எப்போதும் காலையில் இதுவே சமாதானத்தின் எனது கடைசி நாள் என்று நம்பியவாறு எழுகிறீர் என்றால், நீங்கள் சரியான இடத்தில் நிறுத்தப்படுவீர்கள்,” என்றார்.
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிற அமெரிக்க "கூட்டாளிகளும் பங்காளிகளும்" குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களை அடுத்து போருக்கு தயாராகி வருகின்றனர் என்பதைத் தவிர, இதுபோன்ற நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகளில் இருந்து வட கொரியா வேறென்ன முடிவுக்கு வர முடியும்?
முதலாளித்துவத்தின் முரண்பாடுகள், உலகை இரண்டாம் உலக போருக்குப் பின்னர் அனேகமாக மிகவும் கொடூரமாக விலை கொடுக்க செய்யக்கூடிய மோதலின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கம், அதன் உள்நெருக்கடிகளாலும் மற்றும் ஒரு காலத்தில் அது செய்ததைப் போல உலகிற்கு கட்டளையிட தகைமையற்றும், அதன் வசப்படுத்த முடியாத வீழ்ச்சியைத் தடுக்க 25 ஆண்டு கால இராணுவவாத வன்முறையைத் தீவிரப்படுத்துவது மட்டுமே ஒரே வழியென்ற முடிவுக்கு வந்துள்ளது.
கொரிய தீபகற்பம் மீதான ஒரு போரில் இருந்து சீனாவும் ரஷ்யாவும் விலகி நின்றாலும் கூட, அதுபோன்றவொரு மோதல் அணுஆயுதங்களுடன் சண்டையிடப்படும் "வல்லரசு" போர்களின் அபாயத்தையே உயர்த்தும். அதைப் போலவே, நெருக்கடியில் சிக்கிய முதலாளித்துவ செல்வந்த குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ ஆட்சிகளும், அமெரிக்காவுடன் தவிர்க்கவியலாத ஓர் இராணுவ மோதலுக்கு செயலூக்கத்துடன் தயாரிப்பு செய்து வருகின்றன. ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் சிந்தனை குழாம்கள் மற்றும் இராணுவங்களிலும், வாஷிங்டன் உடனான மோதல் இறுதியில் தவிர்க்கவியலாதது என்ற கணக்கீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
1915 இல், ரஷ்ய புரட்சியாளர் தலைவர் விளாடிமீர் லெனின், சுவிஸ் கிராமம் சிம்மர்வால்டில் நடந்த போர்-எதிர்ப்பு மாநாட்டில் முன்மொழிந்த தீர்மானத்தில் எழுதினார்:
“சமீபத்திய காலத்தின் அனைத்து புறநிலைமைகளும், பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர வெகுஜன போராட்டங்களை நாளின் நடப்பாக ஆக்கியுள்ளன. தொழிலாள வர்க்கத்தின் சட்டபூர்வ போராட்டத்தின் ஒவ்வொரு வழிவகைகளையும் பயன்படுத்தி, அதேவேளையில் இந்த உடனடியான மற்றும் மிகவும் முக்கியமான பணிக்கு அந்த ஒவ்வொரு வழிவகைகளையும் அடிபணிய செய்து, தொழிலாளர்களின் புரட்சிகர நனவை அபிவிருத்தி செய்யவும், அவர்களை சர்வதேச புரட்சிகர போராட்டத்தில் அணிதிரட்டவும், எந்தவொரு புரட்சிகர நடவடிக்கையையும் ஊக்குவிக்கவும் முன்னெடுக்கவும், ஏகாதிபத்திய போரை ஒடுக்குவோருக்கு எதிராக ஒடுக்கப்படும் வர்க்கத்தின் ஒரு உள்நாட்டு போருக்குள், முதலாளித்துவவாதிகளின் வர்க்கத்தைப் பறிமுதல் செய்வதற்கான ஒரு போருக்குள், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப்படுவதற்கும் மற்றும் சோசலிசத்தை அடைவதற்குமான ஒரு போருக்குள் மக்களை திருப்புவதற்கும், சாத்தியமான ஒவ்வொன்றையும் செய்வதே, சோசலிஸ்டுகளின் கடமையாகும்.”
இன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதே முன்னோக்கிற்காக போராடுகிறது, அதை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலைமையாக கட்டமைக்க வேண்டும்.