Print Version|Feedback
As workers seek higher wages
Billionaire warns of growing class conflict in US
தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோருகின்ற நிலையில்
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வர்க்க மோதல்கள் குறித்து பில்லியனர்கள் எச்சரிக்கின்றனர்
By Jerry White
9 January 2018
பங்குச் சந்தைகள் உயர்ந்து வருவதுடன், பெருநிறுவன அமெரிக்கா ஒரு பாரிய வரி வெட்டைக் கொண்டாடி கொண்டிருக்கையில், மிகப்பெரும் சமத்துவமின்மை மட்டம் ஆழ்ந்த சமூக அதிருப்தியை உண்டாக்கி கொண்டிருக்கிறது என்று சில வணிக வட்டாரங்களில் இருந்து அதிகரித்தளவில் எச்சரிக்கைகள் வருகின்றன.
கடந்த வாரம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் பிரசுரிக்கப்பட்ட ஒரு பேட்டியில் உலகின் மிகப் பெரிய தனியார் முதலீட்டு நிறுவனமான Bridgewater Associates ஐ நிர்வகிக்கும் ரே டாலியோ, “பங்கு மதிப்புகளின் உயர்வானது" மக்கள்தொகையின் அடிமட்ட 60 சதவீதத்தினருக்கு முன்னேற்றங்களைக் கொண்டு வரவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், நீண்ட-கால அதிக பொருளாதார வளர்ச்சியாக கூட மாற்றப்படவில்லை என்றவர் எச்சரித்தார். மக்கள்தொகையின் இந்த பிரிவினரிடம் எந்த சேமிப்பும் இல்லை என்பதுடன், உரிய வயதிற்கு முன்னரே மரணிக்கும் விகிதம் இவர்களிடையே அதிகரித்துள்ளது, மேலும் இவர்களின் குழந்தைகள் அவர்களது பெற்றோர்களைக் காட்டிலும் குறைவாக சம்பாதிக்கும் நிலையை அடைகிறார்கள் என்றவர் தெரிவித்தார்.
“பெருநிறுவன வரிகள் குறைக்கப்பட்டிருப்பதற்கும் மற்றும் பங்கு விலைகளின் உயர்வுக்கும், சீற்றம் மற்றும் அரசியல் துருவமுனைப்பாட்டிற்கு தீனிப்போட்டு, விரிவடைந்து செல்லும் இலாப வரம்புகளின் பிரதிபலிப்பு பிம்பமாக தேக்கமடைந்த சம்பளங்களைப் பெறுவர்களும் மற்றும் ஏறத்தாழ எந்த சொத்தும் இல்லாதவர்களுமான அடிமட்ட 60% குடும்பங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்பதே “அவரின் பெரும் கவலை என்று ஜேர்னல் அறிவித்தது. திரு. டாலியோ குறிப்பிடுகிறார்: 'நமக்கு ஒரு கீழ்நோக்கிய பொருளாதார திருப்பம் ஏற்பட்டால், நாம் ஒருவருக்கு ஒருவர் குரல்வளையைப் பிடித்துவிடுவோமென எனக்கு கவலையாக உள்ளது.'”
நிகர சொத்து மதிப்பாக 17 பில்லியன் டாலர் வைத்துள்ள டாலியோ, சமூக சீர்திருத்தவாதி இல்லை. “பணத்தைப் புழக்கத்தில் விடுவதில் இருந்து கிடைக்கும் தொகையுடன் ஒப்பிட்டால் உற்பத்தி மூலமாக கிடைக்கும் பணம் மிகவும் அற்பமானது,” என்று கூறி, எந்த சமூக அடுக்கின் பாகமாக அவர் இருக்கிறாரோ அதன் ஒட்டுண்ணித்தனமான குணாம்சத்தை 2004 இல் இழிவுகரமாக தொகுத்தளித்தார். அவரின் எச்சரிக்கைகள், நிதியியல் செல்வந்த தட்டுக்கள் மீது எந்த ஆழ்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை, அவை சிக்கன நடவடிக்கைகளையும், வரி வெட்டுக்கள் மற்றும் நெறிமுறைகளைத் தளர்த்தவும் கோரி வருகின்றன.
உலகளாவிய நிதிய பொறிவுக்கு ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் நிதியியல் பிரபுத்துவத்திற்கு அரசு பிணையெடுப்புகள் மூலமாகவும் மற்றும் உலகின் மத்திய வங்கிகளின் அண்மித்து பூஜ்ஜியம் அளவிலான வட்டி விகித கொள்கைகள் மூலமாகவும் பணம் பாய்ச்சப்பட்டுள்ளது. முன்பில்லாதளவில் பங்குச்சந்தை உயர்வுக்கு எரியூட்டி உள்ள இது, 2017 இல் உலகின் 500 மிகச் செல்வந்த பில்லியனர்களின் தனிப்பட்ட சொத்துக்களில் 1 ட்ரில்லியன் டாலரைக் கூடுதலாக அதிகரித்தது.
தேக்கமடைந்த சம்பளங்கள் மற்றும் அதிக குடும்ப கடன் காரணமாக மூன்றில் இரண்டு பங்கினர் "அவர்கள் 2015 இல் இருந்ததை விட அதிக விளிம்பில் இருப்பதை உணர்வதாக", உலகளாவிய ஆலோசனை நிறுவனம் வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் 5,000 மிகப்பெரிய தொழில் வழங்குனர்கள் உடனான புதிய ஆய்வில் கண்டறிந்தது. பெரும் மருத்துவ செலவு உட்பட கடந்த இரண்டு ஆண்டுகளில் "முக்கிய நிதி நிகழ்வுகளால்" பாதிக்கப்பட்டிருப்பதாக ஐம்பத்தியொரு சதவீதத்தினர் குறிப்பிட்டனர்.
உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 17 ஆண்டுகளில் அதன் மிகக் குறைந்த மட்டங்களில் இருப்பதுடன் அமெரிக்காவில் "முழு வேலைவாய்ப்பு" என்று கூறப்படுவதற்கு இடையே, 2017 இல் கூலிகள் வெறும் சுமார் 2.5 சதவீதம் மட்டுமே உயர்ந்தன, இது உத்தியோகபூர்வ பணவீக்க விகிதம் 2.0 சதவீதத்திற்கு சற்றே அதிகமாகும். இது பெருமந்த நிலைக்கு முன்னர் இருந்த 3.3 மற்றும் 3.6 இடையிலான ஆண்டு அதிகரிப்புகளைக் காட்டிலும் மிகவும் குறைவாகும்.
கடந்த டிசம்பரில் கையெழுத்தான 665 ஒப்பந்தங்களைக் குறித்து புளூம்பேர்க் செய்தி தொகுத்த ஓர் ஆய்வு, முதல் ஆண்டு சம்பளம் ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களுக்கு சராசரியாக 2.7 சதவீதம் உயர்ந்திருப்பதையும், உற்பத்தித்துறை தொழிலாளர்களுக்கு 2.5 சதவீதமும், அரசு தொழிலாளர்களுக்கு வெறும் 2.1 சதவீதமும் உயர்ந்திருப்பதைக் காட்டியது.
பெருநிறுவன வரிகளில் ட்ரம்பின் பெரும் குறைப்பானது, 2018 இல் குறிப்பிடத்தக்களவில் சம்பள உயர்வுகளைக் கோர தொழிலாளர்களை ஊக்குவிக்குமென பகுப்பாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வாகன ஓட்டுதல், சரக்கு கையாளும் பண்டகங்கள், தொலைதொடர்பு, மருத்துவ கவனிப்பு மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறைகளில் உள்ள நூறாயிரக் கணக்கான தொழிலாளர்களின் தொழில் ஒப்பந்தங்கள் இந்தாண்டு நிறைவடைவதாக புளூம்பேர்க் குறிப்பிட்டது.
இவற்றில் உள்ளடங்குபவை:
* சேவைத்துறை பணியாளர்களின் சர்வதேச சங்க (SEIU) உறுப்பினர்களான மின்னிசொடாவில் உள்ள அலீனா மருத்துவமனைகளில் அண்மித்து 3,000 பணியாளர்களது ஒப்பந்தமும் மற்றும் மின்னிசொடாவின் செயின்ட் பாவுல் இல் உள்ள அபோட் நோர்த்வெஸ்ட் மருத்துவமனையின் 3,000 பணியாளர்களின் ஒப்பந்தங்களும் பெப்ரவரி 28 இல் நிறைவடைகின்றன. அண்மித்து 5,000 செவிலியர்கள் 2016 இல் அலீனாவில் ஒரு மாத கால வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
* பல மாநிலங்களில், ABF Freight Systems இன் 7,500 தொழிலாளர்களுக்கான Teamsters சங்க ஒப்பந்தம் மார்ச் 31 இல் காலவதியாகிறது.
* எந்திர வல்லுனர்கள் மற்றும் விமானத்துறை தொழிலாளர்களது சர்வதேச அமைப்பின் உறுப்பினர்களான, ஜோர்ஜியா மற்றும் கலிபோர்னியாவின் Lockheed Martin ஆலைகளில் உள்ள 5,000 தொழிலாளர்களது ஒப்பந்தங்கள் மார்ச் 4 இல் காலாவதியாகின்றன.
* வடக்கு கரோலினாவில் உள்ள டைம்லெர் ட்ரக் ஆலைகளில் பணிபுரியும் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் 4,500 அங்கத்தவர்களின் ஒப்பந்தம் ஏப்ரல் மாத மத்தியில் நிறைவடைகிறது.
* லாஸ் வேகாஸில் பராமரிப்பு மற்றும் காசினோவின் 40,000 தொழிலாளர்களுக்கான பல ஒப்பந்தங்கள் மே மாதம் காலாவதியாகின்றன.
* SAG-AFTRA அங்கத்தவர்களான 132,000 தொலைக்காட்சி தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் ஜூன் 30 இல் நிறைவடைகிறது.
* சர்வதேச நாடக அரசு பணியாளர் அமைப்பில் உள்ள, Alliance of Motion Picture மற்றும் Television Producers ஆகியவற்றின் 43,000 அங்கத்தவர்களை உள்ளடக்கிய ஓர் உடன்படிக்கை ஜூலை 31 இல் நிறைவடைகிறது.
* Teamsters இன் அங்கத்தவர்களான, மிகப்பெரும் சரக்கு வினியோக நிறுவனத்தைச் சேர்ந்த 230,000 ஐக்கிய பார்சல் சேவை தொழிலாளர்களின் ஒப்பந்தம் ஜூலை 31 இல் நிறைவடைகிறது.
* அமெரிக்க தபால் தொழிலாளர்கள் சங்கத்தின் (APWU) அங்கத்தவர்களான 200,000 ஒருங்கிணைந்த தபால் நிலைய சேவை தொழிலாளர்களின் ஒப்பந்தம் செப்டம்பர் 20 இல் நிறைவடைகிறது.
நிஜமான சம்பளங்கள் பல தசாப்தங்களாக வீழ்ச்சி அடைந்ததற்குப் பின்னர், தொழிலாளர்கள் சாதனையளவுக்கு இலாபமீட்டும் நிறுவனங்களிடமிருந்து இழந்த வருமானத்தை மீண்டும் பெற தீர்மானகரமாக உள்ளனர். “வரி சட்டமசோதாவிலிருந்து கிடைக்கக்கூடிய சலுகை என்று வருகையில், ஒவ்வொருவரும் தங்களின் கரத்தை நீட்டுவார்களென நான் நினைக்கிறேன்,” என்று UPS செய்தி தொடர்பாளர் ஸ்டீவ் கௌட் புளூம்பேர்க்கிற்கு தெரிவித்தார். “நிச்சயமாக முதலீட்டாளர்கள் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கலாம்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
UPS நிறுவனம் 2016 இல் 3.4 பில்லியன் டாலர் இலாபமீட்டிய பின்னர், 2017 இன் முதல் மூன்று காலாண்டுகளில் 5 பில்லியன் டாலர் ஈட்டியது. பெருநிறுவனங்கள் அவற்றுக்கான வரிச்சலுகைகளில் இருந்து கிடைக்கும் இலாபங்களைத் தொழிலாளர்களது நிலைமைகளை முன்னேற்ற செலவிடுவதில்லை, மாறாக பங்குகளை வாங்கி விற்கும் திட்டங்களுக்கும் மற்றும் செல்வந்த முதலீட்டாளர்களுக்கு பங்காதாயம் வழங்குவதற்கும், கையகப்படுத்தல்கள் மற்றும் இணைப்புகளை அதிகரிப்பதற்கும் பயன்படுத்துகின்றன, இதன் விளைவாக வேலைகள், சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் மீது இன்னும் அதிகமாக தாக்குதல்கள் நடத்தப்படும்.
Teamsters சங்கம் மற்றும் பிற சங்கங்களுடன் தொடர்ந்து நயவஞ்சகமான கூட்டில் இருப்பதைத் தொழில் வழங்குனர்கள் கணக்கிட்டு வருகின்றனர். 2015-2016 இல் "சம்பள உயர்வு அழுத்தத்தின்" அபாயத்தை முகங்கொடுத்த ஜனாதிபதி ஒபாமா, ஜூலை 2015 இல் வெள்ளை மாளிகை சந்திப்பிற்காக தொழிற்சங்க தலைவர்களுக்கு அழைப்புவிடுத்தார். எந்தவொரு ஒருங்கிணைந்த போராட்டத்தையும் அடிபணிய செய்வதும், பணவீக்க விகிதத்திற்கு சற்று அதிகமாக விற்றுத் தள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டதும், நிர்பந்தத்தின் கீழ் தொழிற்சங்கங்களால் அழைப்புவிடுக்கப்பட்ட வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்தி காட்டிக்கொடுத்ததுமே இதன் விளைவாக இருந்தது, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்கள், Allegheny Technology எஃகுத்துறை தொழிலாளர்கள் மற்றும் வெரிஜோன் தொழிலாளர்களின் போராட்டங்களும் இதில் உள்ளடங்கும்.
1947 இல் அமெரிக்க தொழிலாளர் ஆணைய புள்ளிவிபரங்கள் துறை அதன் புள்ளிவிபரங்களைச் சேகரிக்க தொடங்கிய பின்னர் இருந்து, 2007 மற்றும் 2016 க்கு இடையிலான 10 ஆண்டுகளில் பெரும் வேலைநிறுத்தங்கள் சராசரியாக ஆண்டுக்கு வெறும் 14 என்றளவில் மிக குறைந்தளவிலேயே இருந்தன. இத்துடன் ஒப்பிடுகையில் 1977-1986 இல் ஆண்டுக்கு சராசரியாக 145 இருந்தன, 1967-76 இல் 332 மற்றும் 1947-1956 இல் 344 உம் இருந்தன. 2009 இல் வெறும் ஐந்து மட்டுமே இருந்த எண்ணிக்கைக்கு அடுத்த மிகக் குறைந்த எண்ணிக்கையாக, கடந்த ஆண்டு, வெறும் எட்டு மிகப்பெரும் வேலைநிறுத்தங்களே இருந்தன, இதிலும் பாதி வெறும் மூன்று நாட்களே நீடித்தன.
வோல் ஸ்ட்ரீட் க்கு வழங்கப்படும் நிதி விரயமானது, தொழிற்சங்கங்களால் வர்க்க போராட்டம் செயற்கையாக ஒடுக்கப்பட்டதாலேயே சாத்தியமானது. இருப்பினும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளை உள்ளடக்கி, இது இன்னும் வெடிப்பார்ந்தவகையில் கிளர்ச்சியுறும் என்பதை உத்தரவாதப்படுத்தி, வர்க்க விரோதங்கள் இக்காலக்கட்டத்தில் இன்னும் ஆழமாகவே அதிகரித்துள்ளன.
ஒருங்கிணைந்த வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்திற்கு எதிராக வாகனத் தொழிலாளர்களின் 2015 கிளர்ச்சி, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிடி பலவீனமடைந்து வருகிறது என்பதை எடுத்துக்காட்டியது, தொழிலாளர்-மேலாண்மை பயிற்சி மையங்கள் மற்றும் போலி அறக்கட்டளைகள் மூலமாக பாய்ச்சப்பட்ட பரந்தளவிலான பெருநிறுவன கையூட்டுகள் அம்பலமானவை மற்றும் வாகனத்துறை முதலாளிமார்களுடனான தசாப்த கால வஞ்சக கூட்டு ஆகியவற்றால் இவை முற்றிலுமாக மதிப்பிழந்துள்ளன. 150,000 வாகனத்துறை தொழிலாளர்களின் ஒப்பந்தங்கள் செப்டம்பர் 2019 இல் முடிவடையும்.
விலைவாசி உயர்வுகள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து ஈரானில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள்; இஸ்ரேலிய மருந்துத்துறை தொழிலாளர்களின் போராட்டங்கள்; பாரிய வேலைநீக்கங்களுக்கு எதிராக ஜெருசலேம் நகரசபை பணியாளர்களின் வேலைநிறுத்தங்கள் ஆகியவை உட்பட சர்வதேச அளவில் அதிகரித்த வர்க்க மோதல்களுக்கான அறிகுறிகளுடன் இந்த புத்தாண்டு தொடங்கி உள்ளது.
ஜேர்மனியில் வாகனத்துறை, எஃகு மற்றும் பொறியியல் துறையின் 3.9 மில்லியன் தொழிலாளர்கள் இம்மாத முடிவில் சம்பள ஒப்பந்தம் காலாவதி ஆவதை முகங்கொடுக்கின்ற நிலையில், VW, Porsche, Siemens தொழிலாளர்களும் மற்றும் பிற பெருநிறுவன தொழிலாளர்களும் இவ்வாரம் மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்களை நடத்தி வருகின்றனர். இவை எல்லாம் டிசம்பர் இறுதியில் போர்டின் க்ரையோவா (Craiova) ஆலையில் ரோமானிய வாகனத்துறை தொழிலாளர்கள் நடத்திய தன்னியல்பான வேலைநிறுத்தத்தைப் பின்தொடர்ந்து வருகின்றன.
பிரான்சில், வாகனத்துறை தொழிலாளர்களும் ஏனைய தொழிலாளர்களும் "பணக்காரர்களின் ஜனாதிபதியான" இமானுவல் மக்ரோன் அரசாங்கத்தை எதிர்த்து வருகின்றனர், இவர் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதை இலகுவாக்க அமெரிக்க பாணியிலான தொழிலாளர் "சீர்திருத்தங்களை" ஒருதலைபட்சமாக திணித்துள்ளார் என்பதோடு, பகுதி-நேர மற்றும் தற்காலிக தொழிலாளர்களின் பயன்பாட்டை பாரியளவில் விரிவாக்கி உள்ளார். இங்கிலாந்தில், டோரி அரசாங்கம் மற்றும் அதன் தொழிற்கட்சி கூட்டாளிகள் முன் நகர்த்திய நடத்துனர்களின் நீக்கத்திற்கு எதிராக இரயில் தொழிலாளர்கள் வேலையிட வெளியேற்றத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
ஆர்ஜென்டினாவில் சுரங்கப்பாதை தொழிலாளர்களும் மற்றும் பிற தொழிலாளர்களும் நடத்திய வேலைநிறுத்தங்களைத் தொடர்ந்து, ஜனவரி 3 இல், Buenos Aires இல் விமான நிலைய தரைத்தள சிப்பந்திகள் ஒரு மறைமுக வேலைநிறுத்தம் நடத்தினர்.
இந்த போராட்டங்கள் அதிகரித்தளவில் தொழிலாளர்களை முதலாளிமார்களுக்கும், அவர்களைப் பாதுகாக்கும் பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான அரசாங்கங்களுக்கும், முதலாளித்துவ-சார்பு மற்றும் தேசியவாத தொழிற்சங்கங்களுக்கும் எதிராக கொண்டு வருகின்றன. தொழிலாளர்கள் சர்வதேச அளவில் உலகளாவிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு எதிராக தங்களின் போராட்டங்களை ஒருங்கிணைக்க தள்ளப்பட்டு வருகின்றனர்.
தொழிலாளர்கள் இந்த போராட்டத்தை முன் நகர்த்த, முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்களுடன் உடைத்துக் கொண்டு, வர்க்க கூட்டுறவின் அடிப்படையில் அல்ல, வர்க்க போராட்ட முறையின் அடிப்படையில் சாமானிய தொழிலாளர்களது கட்டுப்பாட்டிலான புதிய அமைப்புகளைக் கட்டமைக்க வேண்டும். இதுபோன்றவொரு போராட்டம், நிதிய பிரபுத்துவம் முறையற்ற வகையில் சேர்த்த செல்வங்களைப் பறிமுதல் செய்து, பொருளாதார வாழ்வை சோசலிச ஒழுங்கமைப்பில் மாற்றும் தொழிலாளர்களின் அதிகாரத்திற்காக போராடுவதற்காக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பதுடன் இணைக்கப்பட வேண்டும்.