Print Version|Feedback
UK, France boost military, intelligence ties at Sandhurst summit
இங்கிலாந்தும் பிரான்சும் சான்ட்ஹர்ஸ்ட் உச்சிமாநாட்டில் இராணுவ, உளவுத்துறை உறவுகளை அதிகரிக்கின்றன
By Robert Stevens and Alex Lantier
20 January 2018
வியாழனன்று, இங்கிலாந்து பிரதம மந்திரி தெரேசா மேயும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும், சான்ட்ஹர்ஸ்ட் இன் இங்கிலாந்து இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஒரு முக்கிய சந்திப்பை நடத்தினர். ட்ரம்ப் நிர்வாகத்துடனும் மற்றும் நேட்டோவிற்குள்ளேயும் அதிகரித்து வரும் பதட்டங்கள், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகியவற்றிற்கு இடையே, 2010 லான்காஸ்டர் மாளிகை உடன்படிக்கையில் கொண்டு வரப்பட்ட மூலோபாயத்துக்கு ஏற்ப, இங்கிலாந்து-பிரெஞ்சு இராணுவ மற்றும் உளவுத்துறை உறவுகளை அதிகரிப்பதே இச்சந்திப்பின் நோக்கமாக இருந்தது.
இராணுவ செலவினங்களை அதிகரிப்பது, கூட்டு வேவுபார்ப்பு நடவடிக்கைகள், மற்றும் கலே பிரெஞ்சு துறைமுகத்திலிருந்து பிரிட்டனை வந்தடைய முயலும் புலம்பெயர்வோர் மீதான தாக்குதல்கள் உட்பட அவர்கள் பல பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளில் உடன்பட்டனர். அணுஆயுத திட்டங்கள், விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் மீதும், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்களிலும் கரீபிய கடலிலும் கப்பற்படை நிலைநிறுத்தல்கள் மீதான கூட்டுறவைத் தீவிரப்படுத்தவும் அவர்கள் சூளுரைத்தனர். கடுமையான இணைய தணிக்கைக்கான வழிவகைகள் மீதும் அவர்கள் உடன்பட்டனர்.
அது "பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு இடையிலான இரண்டு தசாப்த கால பழைய பாதுகாப்பு உடன்படிக்கை" என்பதால்தான் சான்ட்ஹர்ஸ்ட் தேர்வு செய்யப்பட்டதாக பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது. இங்கிலாந்தின் பிரதான உள்நாட்டு மற்றும் சர்வதேச உளவுத்துறை முகமைகளான MI5, MI6 மற்றும் பொது தகவல் தொடர்பு தலைமையகம் (GCHQ) ஆகியவற்றின் தலைவர்களும், அவர்களின் பிரெஞ்சு சமதரப்பான வெளிநாட்டு கண்காணிப்பு மற்றும் உள்நாட்டு கண்காணிப்புக்கான பொது இயக்குனரகங்களின் (DGSE, DGSI) தலைவர்களும் அதில் கலந்து கொண்டமை, அக்கூட்டத்ததின் மூலோபாய குணாம்சத்தை உயர்த்திக் காட்டியது.
“அதிகரித்து வரும் ஸ்திரமற்ற மற்றும் நிலையற்ற உலகை" சுட்டிக்காட்டி, அந்த மாநாட்டின் கூட்டறிக்கை குறிப்பிடுகையில், “லான்காஸ்டர் மாளிகை உடன்படிக்கையானது எங்கள் உறவின் அஸ்திவாரமாகும். 2010 க்குப் பின்னர் இருந்து, நாங்கள் எமது கூட்டு தகைமைகளை மேம்படுத்தி உள்ளோம் மற்றும் எங்களின் ஆயுதப்படைகள், வேவுபார்ப்பு முகமைகள், இராஜாங்க அபிவிருத்தி அதிகாரிகள் ஆகியோருக்கு இடையே முன்னொருபோதும் இல்லாத மட்டங்களில் ஒருங்கிணைப்பைக் கண்டுள்ளோம்,” என்று அறிவித்தது.
“மற்றவர்களது இன்றியமையா நலன்கள் அச்சுறுத்தப்படாமல், ஐக்கிய இராஜ்ஜியத்தின் அல்லது பிரான்சின் இன்றியமையா நலன்கள் அச்சுறுத்தப்படலாம் என்ற சூழலை கருதிப் பார்க்கும் நிலைமை இல்லை,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். இன்றியமையா நலன்கள் என்பது தற்காத்து கொள்வதற்காக போருக்குள் இறங்கும் என்பதைக் குறிப்பதால், இதன் முக்கிய அர்த்தம் என்னவென்றால் பிரிட்டனும் பிரான்சும் நேட்டோவுக்கு உள்ளேயே தனியாக, ஒரு சிறிய கூட்டணியைக் கட்டமைத்து வருகின்றன என்பதாகும். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னரும், ஜேர்மனியின் மறுஐக்கியத்திற்குப் பின்னரும், "1992 இல் ஏற்கனவே விவரிக்கப்பட்ட இந்த எளிமையான கோட்பாட்டின்" மீது பிரான்சின் Le Point இதழ் திருப்தி வெளியிட்டது.
இந்த சிறிய வெளியுறவு கொள்கை ஆவணம், முக்கிய உலகளாவிய வெடிப்பு புள்ளிகள் மீது, குறிப்பாக மிகப் பெரும் போர்களைத் தூண்டிவிட வாஷிங்டன் அச்சுறுத்தி வரும் புள்ளிகள் மீது பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாடுகளை விவரிக்கும் குறிப்பு புள்ளிகளை உள்ளடக்கி இருந்தது. இந்த ஆவணம், 2015 ஈரானிய அணுஆயுத அமைதி உடன்படிக்கையைப் பாதுகாக்க அவற்றை பொறுப்பாக்குகிறது, ட்ரம்ப் நிர்வாகமோ இந்த உடன்படிக்கையைக் கைவிடுவதற்கு சமிக்ஞை காட்டி வருகின்ற நிலையில், இதற்கிடையே ஈரானுக்கு எதிராக அமெரிக்க போர் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. வாஷிங்டன் அணுஆயுதத்தைக் கொண்டு நிர்மூலமாக்க அச்சுறுத்தி வரும் வட கொரியாவுடன், "அர்த்தமுள்ள மற்றும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளுக்கு" இந்த ஆவணம் அழைப்பு விடுக்கிறது.
பிரான்சுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை அழைத்து வந்தும், மாஸ்கோவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கு அழைப்பு விடுத்தும், தனது ஜனாதிபதி பதவியை தொடங்கிய மக்ரோனால், இங்கிலாந்துக்கு வழங்கப்படும் ஒரு வெளிப்படையான விட்டுகொடுப்பாக, அந்த சிறிய ஆவணம் ரஷ்யாவைக் கூர்மையாக தாக்கியது.
"ரஷ்யாவின் அதிக ஆக்ரோஷமான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கை, … மூலோபாய பயமுறுத்தல், தவறான உளவுத்தகவல் அளித்தல், தீய நோக்குடன் இணைய நடவடிக்கை மேற்கொள்ளுதல், மற்றும் அரசியல் குளறுபடிகள் உள்ளடங்கலாக இவற்றின் மீதான ஒரு பொதுவான மதிப்பீட்டை" இங்கிலாந்தும் பிரான்சும் பகிர்ந்து கொள்கின்றன என்று அந்த ஆவணம் அறிவித்தது. கிரீமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதை கண்டித்த அது, பேர்லின், பாரீஸ், கியேவ் மற்றும் மாஸ்கோ ஆல் பேசி முடிக்கப்பட்ட உக்ரேன் மீதான மின்ஸ்க் சமாதான உடன்படிக்கையை ஆமோதித்தது: “ரஷ்யா அதன் மின்ஸ்க் கடமைப்பாடுகளுக்குக் கீழ்படியாத வரையில், [மாஸ்கோ மீதான] பொருளாதார தடையாணைகளை நீக்க முடியாது.”
அவ்விரு நாடுகளும் அவற்றின் கூட்டணியை எடுத்துக்காட்ட இரண்டு வெளிநாட்டு தலையீடுகளில் உடன்பட்டன. ஆபிரிக்காவின் சாஹெல் பிராந்தியத்தில் ஒரு நவ-காலனித்துவ போரில் சண்டையிட்டு வரும் ஆயிரக் கணக்கான பிரெஞ்சு சிப்பாய்களுக்கு உதவியாக, பிரிட்டன் மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் 50 இல் இருந்து 60 இராணுவ உதவியாளர்களை அனுப்ப உள்ளது. பிரான்ஸ் அதன் பங்கிற்கு, “எஸ்தோனியாவில் 2017 இன் வெற்றிகரமான கூட்டு நிலைநிறுத்தல்களின் மூலமாக கட்டமைக்கப்பட்ட, இங்கிலாந்து தலைமையிலான போர்க்குழுவின் பாகமாக", 2019 இல் நேட்டோவினது "முன்னோக்கி விரிவாக்கப்படும் பிரசன்னத்திற்கு" இன்னும் அதிக துருப்புகளை அனுப்பும்.
இதற்கும் கூடுதலாக மே குறிப்பிடுகையில், 2020 வாக்கில் "விரைவாகவும் நடைமுறைரீதியிலும் எந்தவொரு அச்சுறுத்தலையும் முகங்கொடுக்க" இங்கிலாந்து-பிரெஞ்சு கூட்டு அதிரடிப்படை 10,000 வரையிலான துருப்புகளை நிலைநிறுத்த தயாராக இருக்கும் என்று அறிவித்தார்.
இவ்விரு நாடுகளுமே அவற்றின் திட்டநிரலின் முதலிடத்தில் இணைய தணிக்கையை வைத்துள்ளதுடன், அவற்றின் போர் எந்திரங்களைக் கட்டமைத்து வருகின்ற நிலையில், ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவது அவசியம் என்பதில் இவை உடன்படுகின்றன. “பயங்கரவாதம்" மற்றும் "குற்றவாளிகளுக்கு" எதிராக சண்டையிட்டு வருகிறோம் என்ற மூடுமறைப்பின் கீழ், இந்த உச்சி மாநாடு, "சட்டவிரோத தகவல்கள் இணையத்தில் ஏற்றப்பட்ட 1-2 மணி நேரத்திற்குள் அவற்றைக் கண்டறிந்து அழிக்கும் தானியங்கி முறையை உறுதிப்படுத்தி வைக்கும்,” மற்றும் "அவை பரவாமல் இருப்பதைத் தடுக்கும்" முன்மொழிவுகளை உள்ளடக்கிய ஓர் அறிக்கையை முன்வைத்தது.
2003 Le Touquet உடன்படிக்கையில் பிரிட்டன் எல்லையை ஒட்டிய சுரங்க பாதையை கண்காணிப்பதற்கான பொறுப்பை பிரான்ஸ் ஏற்றிருந்த நிலையில், கலே புலம்பெயர்வோரை ஒடுக்குவதற்கான நிதியுதவிகள் மீது இலண்டனும் பாரீசும் சண்டையும் இட்டிருந்தன. சான்ட்ஹர்ஸ்ட் இல், இவ்விரு நாடுகளும் "சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும் எண்ணிக்கையை அதிகரிப்பதில்" கூட்டு நடவடிக்கை எடுக்க உடன்பட்டன.
மே மக்ரோனின் அழுத்தத்தின் கீழ், "கலே மற்றும் டன்கீர்க் பகுதிகளுக்கு வெளியில் அமைந்துள்ள விசாரணை மற்றும் ஆய்வு மையங்கள் போன்ற இடங்களில், தஞ்சம் வழங்குவதில் பிரான்சுக்கு உதவவும்", மற்றும் எல்லையில் பொலிஸ் வேலைகள் மேற்கொள்ள பிரான்சுக்கு பிரிட்டன் வழங்கும் தொகையை 50 மில்லியன் யூரோவாக உயர்த்தவும் உடன்பட்டார்.
புலம்பெயர்ந்தவர்கள் மீதான புதிய உடன்படிக்கை “அதிக மனிதாபிமான அணுகுமுறையை” உறுதிப்படுத்துமென அம்மாநாட்டின் பத்திரிகையாளர் கூட்டத்தில் மக்ரோன் பாசாங்குத்தனமாக அறிவித்தார். உண்மையில் என்ன நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றால், புலம்பெயர்ந்தோரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை காலகட்டத்தை வயது வந்தோருக்கு ஆறு மாதத்திலிருந்து ஒரு மாதமாகவும் குழந்தைகளுக்கு 25 நாட்களுமாக குறைத்து, நாடு கடத்துவதற்கான நிகழ்ச்சிப்போக்கு வேகப்படுத்தப்படுகிறது. இங்கிலாந்துக்குள் அது எத்தனை புலம்பெயர்வோரை ஏற்றுக் கொள்ளும் என்பதை இங்கிலாந்து குறிப்பிடவில்லை.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்க சகாப்தத்தில் இருந்த சர்வதேச அரசியல் கட்டமைப்பு தீவிரமாக பொறிந்து வருவதையும், ஏகாதிபத்திய சக்திகள் மீண்டும் போருக்குத் தயாரிப்பு செய்கையில் ஒடுக்குமுறைக்கும் மற்றும் புலம்பெயர்வோர்-விரோத வெறுப்பு வெறிக்குத் திரும்புவதையும் இந்த மாநாடு எடுத்துக் காட்டியது. மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் பிரதான ஐரோப்பிய சக்திகள் முக்கிய பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைக் கொண்டுள்ள நிலையில், இங்கே அமெரிக்க கொள்கை ஒரு மிகப் பெரிய பிராந்திய அல்லது உலக போரைத் தூண்டிவிடலாம் என்கிற நிலையில், இப்பிராந்திய விவகாரங்கள் மீதான அடிப்படை கருத்து வேறுபாடுகள் பிரதான ஐரோப்பிய சக்திகளை வாஷிங்டனிடம் இருந்து பிரிக்கின்றன.
அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியம் வேகமாக உடைந்து வருகிறது, குறிப்பாக பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்கெடுப்புக்கு பின்னர் இருந்து. செப்டம்பர் 2017 ஜேர்மன் தேர்தல்களால் கட்டவிழ்ந்த நெருக்கடிக்குப் பின்னர், ஐரோப்பாவின் முன்னணி சக்தியான ஜேர்மனி உடனான அதன் உறவுகள் மீது அதிகரித்து வரும் கவலைகளுக்கு இடையே, பாரீஸ் இலண்டனுடன் ஓர் உயர்மட்ட இராணுவ உச்சி மாநாட்டை ஒழுங்கமைத்தது குறிப்பிடத்தக்கதாகும். மக்ரோனுடன் நெருக்கமான உறவுகளை ஆதரிக்கும் மகா கூட்டணி (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்-சமூக ஜனநாயக கட்சி) அரசாங்கம் மானக்கேடாக வாக்குகளை இழந்ததுடன், பேர்லின் இன்னமும் ஓர் அரசாங்கம் அமைக்க இயலாமல் உள்ளதால், பேர்லினில் அதிக விரோதமான அரசாங்கம் ஒன்று உருவாகி விடுமோ என்று பாரீசுக்கு அச்சம் இருக்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறலாம் மற்றும் தங்கியிருக்கலாம் என்ற பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் இரண்டு கன்னைகளுமே பிரான்சுடன் நெருக்கமான உறவுகளை ஆதரித்தன. இம்மாநாட்டுக்கு முன்னதாக ஒரு தலையங்கத்தில், தங்கியிருப்பதை ஆதரிக்கும் பைனான்சியல் டைம்ஸ் கடந்த தசாப்தத்தின் இராணுவ மற்றும் உளவுத்துறை கூட்டுறவை உவமைப்படுத்தி எழுதிய அதேவேளையில், “எவ்வாறிருப்பினும் பிரிட்டன் வெளியேறும் சகாப்தத்தில், இந்த பிணைப்புகள் மீள்-ஆய்வுக்கு உட்படுத்தப்படும்,” என்று எச்சரித்தது. வரலாற்றுரீதியில் அமெரிக்காவுடன் ஐக்கிய இராஜ்ஜியம் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள நிலையில், அது குறிப்பிடுகையில், “ஐரோப்பாவின் ஆயுதப்படைகளுடன் நாட்டின் ஆயுதப்படைகளை ஒருங்கிணைப்பது மீது பிரிட்டனில் ஆழ்ந்த ஐயுறவு நிலவுகிறது,” என்று எழுதியது.
எதுவாயினும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரிட்டனின் சர்ச்சைக்குரிய பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் அதை ஆதரிக்க மக்ரோன் எந்த நகர்வும் மேற்கொள்ளவில்லை, ஆனால் பிரெக்ஸிட் இல் பிரான்ஸ் அல்ல ஐரோப்பிய ஒன்றியமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டி இருந்தார். ஐரோப்பிய ஒன்றியம்-ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு இடையிலான எந்தவொரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையிலும் நிதியியல் சேவைகளை உள்ளடக்குவதை அவர் ஏன் எதிர்த்தார் என்று கேட்கப்பட்ட போது, அவர் கூறினார், “நான் இங்கே தண்டிக்கவோ அல்லது வெகுமதி அளிப்பதற்கோ இல்லை. ஒரே சந்தை என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் இதயதானமாக இருப்பதால், அது பாதுகாக்கப்படுவதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.”
பிரிட்டன் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே சந்தை அணுகுதலை விரும்பினால், “அது பிரிட்டன் தேர்வு செய்வதைப் பொறுத்தது: அது எனது தேர்வு இல்லை—ஆனால் நிதியியல் சேவைகளுக்கென அவர்கள் வித்தியாசமான அணுகுதலைக் கொண்டிருக்க முடியாது. … இதன் அர்த்தம் வரவு செலவு திட்டக்கணக்கில் பங்களிப்பு செய்ய வேண்டும் மற்றும் ஐரோப்பிய நீதி பரிபாலனைகளை ஏற்க வேண்டும் என்பதாகும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
ஒரே சந்தையை அணுக அனுமதிக்கின்ற, ஆனால் கனடா பாணியிலான வர்த்தக உடன்படிக்கை ஒன்றை பிரிட்டன் தேர்வு செய்ய முடியாது என்றவர் வலியுறுத்தினார். “இந்த விதத்தில் அங்கே எந்த கண்துடைப்பும் இருக்கக்கூடாது, அல்லது அவ்விதம் அது செயல்படாது, நாமே ஒரே சந்தையை அழித்து விடக்கூடும்,” என்றார்.