Print Version|Feedback
Will there be a US nuclear sneak attack on North Korea?
அமெரிக்க பதுங்கியிருந்து வட கொரியா மீது ஓர் அணுஆயுத தாக்குதல் நடத்தவிருக்கிறதா?
By Bill Van Auken
26 January 2018
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக வட கொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையே இறுக்கம் தளர்ந்துள்ள நிலையிலும் மற்றும் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிடமிருந்து வந்த "நெருப்பு கக்கும் சீற்றத்தில்" தற்காலிக அமைதி நிலவுகின்ற இந்த திரைமறைவிற்க்குப் பின்னால், பென்டகனும் சிஐஏ உம் வட கொரியாவுக்கு எதிராக அணுஆயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட ஒரு முன்கூட்டிய போருக்கான தயாரிப்புகளை முன் நகர்த்துகின்றன என்பதற்கு அங்கே அறிகுறிகள் அதிகரித்து வருகின்றது.
ஒரு முழு அளவிலான போரை தூண்டிவிடாது என்ற தவறான எதிர்பார்ப்புடன் இருந்தாலும் கூட, வட கொரிய அணுஆயுத தளங்கள் மீது அமெரிக்க விமானத் தாக்குதல்களை உள்ளடக்கிய ஓர் “மூக்கூடைக்கும்" தாக்குதல் (bloody nose attack) என்றழைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க இராணுவத்திற்கும் உளவுத்துறை எந்திரம் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே திரைக்குப் பின்னால் நடந்து வரும் விவாதங்கள் குறித்து அமெரிக்க பெருநிறுவன ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகி உள்ளன.
அரிதான ஒரு பகிரங்க உரையில், சிஐஏ இயக்குனர் மைக் பொம்பியோ (Mike Pompeo) இந்த திட்டங்களைச் சூசகமாக சுட்டிக்காட்டினார். அமெரிக்க நிறுவன பயிலகம் எனும் வலதுசாரி சிந்தனை குழாமில் செவ்வாயன்று பொம்பியோ உரையாற்றுகையில், அமெரிக்க பெருநிலத்திற்கு எதிராக ஓர் அணுஆயுத தாக்குதல் நடத்தும் ஆற்றலை பியொங்யாங் "இன்னும் ஒரு சில மாதங்களில்" எட்டிவிடுமென எச்சரித்தார்.
வாஷிங்டன் "இந்த அபாயத்தை முன்கூட்டியே அகற்ற உள்ளது" மற்றும் வட கொரியா "அணுஆயுதமயப்படுவதை நிரந்தரமாக தடுக்க" உள்ளது என்று அந்த சிஐஏ இயக்குனர் தெரிவித்தார்.
கிம் யொங் யுன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் கோருவதன் மூலமாக "அவர் நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதாக" வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சனுக்கு கடந்த அக்டோபரில் ட்ரம்ப் அளித்த எரிச்சலான கூற்றால் பொய்யாகி போன கூற்றை ட்ரம்ப் நிர்வாகம் "இராஜாங்க வழிவகை தீர்வுக்கு" பொறுப்பேற்றுள்ளதாக அவர் வலியுறுத்திய போதினும் பொம்பியோ, "ஜனாதிபதி எல்லாவித சாத்தியக்கூறுகளையும் கொண்டிருக்கும் வகையில், பல்வேறு விடயங்களை நம்மால் வழங்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக," பென்கடனுடன் இணைந்து சிஐஏ "பல விருப்பத்தேர்வுகளுக்கு தயாரிப்பு" செய்து வருவதாக தெரிவித்தார்.
“ஒரு முன்கூட்டிய தாக்குதலுக்கான ஆற்றல் அல்லது அறிவைக் குறித்து கவனித்துக் கொள்வதை [அவர்] மற்றவர்களிடம் விட்டுவிடுவார்" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
எவ்வாறிருப்பினும் இதற்கான "தகமை" சம்பந்தமான பிரச்சினை, ஏற்கனவே அமெரிக்க இராணுவம் எடுத்த தொடர்ச்சியான பல அச்சுறுத்தும் நடவடிக்கைகள் மூலமாக முடிவெடுக்கப்பட்டுவிட்டது.
விமானப்படை, இம்மாத தொடக்கத்தில், லூசியானாவின் பார்க்ஸ்டேல் விமானத்தளத்தின் 300 விமானப் படையினரோடு சேர்ந்து ஆறு B-52H ரக Stratofortress குண்டுவீசிகளை, குவாமில் இருந்த ஆறு B-1B Lancer ரக குண்டுவீசிகளுக்குப் பதிலாக பிரதியீடு செய்தது. B-1B குண்டுவீசிகளைப் போலன்றி, அணுஆயுதங்களைத் தாங்கி செல்லக்கூடிய ஆற்றல் கொண்ட B-52s இன் நிலைநிறுத்தல், ஒரு மிகப் பெரிய தீவிரப்பாட்டைக் குறிக்கிறது.
அணுஆயுத தாங்கிய அமெரிக்காவின் B-2 ரக குண்டுவீசி
“பசிபிக்கிற்கு B-52H மீண்டும் வந்திருப்பது [அமெரிக்க பசிபிக் கட்டளையகம்] மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளுக்கு ஒரு நம்பகமான, மூலோபாய சக்தியைக் காட்டுவதற்கான அடித்தளத்தை வழங்கும்,” என்று விமானப்படை அறிக்கை ஒன்று குறிப்பிட்டது. “50,000 அடி உயரத்தில் அதிவேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்ற B-52 ரக குண்டுவீசிகள், அணுஆயுதங்களை அல்லது அணுஆயுதமல்லாத குண்டுகளுடன் துல்லியமாக உலகளவில் வழிநடத்தப்பட்டு செல்லக்கூடிய தகைமை கொண்டவையாகும். இந்த முன்னோக்கிய நிலைநிறுத்தல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதன் கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளுக்கு அமெரிக்கா ஏற்றிருக்கும் தொடர்ச்சியான பொறுப்புறுதியைக் எடுத்துக்காட்டுகிறது,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
ஒரு வாரத்திற்கு முன்னர், அணுஆயுதம் தாங்கிய கண்டறியவியலாத மூன்று B-2 ரக குண்டுவீசிகளை பென்டகன் குவாம் விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்தியது.
இந்த மூன்று குண்டுவீசிகளும் —B-52s, B-2s மற்றும் B-1Bs ஆகியவை— வட கொரியாவின் இலக்குகளில் இருந்து வெறும் 2,200 மைல் தொலைவில் அமைந்துள்ள குவாமில் ஒருசேர நிறுவப்பட்டுள்ளன என்பது அண்மித்து இரண்டரை ஆண்டுகளில் முதல் நிலைநிறுத்தலாகும்.
புளூம்பேர்க் செய்தி நிறுவனம் புதனன்று அறிவிக்கையில், அமெரிக்க விமானப்படை "அமெரிக்காவின் மிகப் பெரிய அணுஆயுதமல்லாத குண்டின் ஒரு மேம்பட்ட வடிவத்தை — அதாவது, இப்போது குவாமில் அமைக்கப்பட்டுள்ள கண்டறியவிலாத B-2 ரக குண்டுவீசிகள் மட்டுமே கொண்டு செல்லக்கூடிய 30,000 பவுண்டு எடையிலான "பாதாளங்களையும் தகர்க்கும்" ஒரு குண்டை, நிலைநிறுத்தி இருப்பதாக" குறிப்பிட்டது.
“வட கொரியாவில் நிலத்தடியில் அமைக்கப்பட்ட அணுஆயுத ஏவுகணை தளங்களைத் தாக்குவதென அமெரிக்கா முடிவெடுத்துவிட்டால்,” கடந்த ஏப்ரலில் ஆப்கானிஸ்தான் மீது வீசப்பட்ட அனைத்து குண்டுகளுக்கும் தாய் என்றழைக்கப்படும் MOAB ஐ விட மிகப் பெரியதான இந்த ஆயுதத்தை, "பயன்படுத்துக் கூடும்" என்று புளூம்பேர்க் அறிவித்தது.
இதற்கிடையே, வழிநடத்தத்தக்க ஏவுகணைகளைக் கொண்ட நடுத்தர அழிப்புபோர்க்கப்பல்கள் (destroyers) மற்றும் பிற வகை போர்க்கப்பல்களின் தாக்கும் படைப்பிரிவுடன் சேர்த்து, அமெரிக்க கப்பற்படையின் Nimitz ரக பிரமாண்ட விமானந்தாங்கி போர்க்கப்பல் USS கார்ல் வின்சென் இம்மாத தொடக்கத்தில் சான் டெய்கோவில் இருந்து புறப்பட்டது, இது பெப்ரவரி 9 இல் தென் கொரியாவின் Pyeongchang இல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக கொரிய தீபகற்பத்தைச் சென்றடைந்து, அங்கே ஏற்கனவே ஜப்பானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள USS ரோனால்டு ரீகன் விமானந்தாங்கி போர்க்கப்பல் உடன் இணையும்.
பென்டகனின் அதிநவீன F-35B ரக போர்விமானங்களைத் தாங்கியவாறு, 40,000 டன் எடையுள்ள அதிநுட்பமான விமானந்தாங்கி போர்க்கப்பல் USS Wasp இப்போது ஜப்பானில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த போர் விமானங்கள் வட கொரியாவில் உள்ள நிலத்தடி அணுசக்தி அமைப்புகள் மற்றும் கட்டளையகங்கள் மற்றும் கட்டுப்பாட்டு வசதிகளுக்கு எதிராக பயன்படுத்தத்தக்கதும், நிலத்தை ஊடுருவி பாதாளத்தில் சென்று வெடிக்கும் ஆயுதமுமான B61 ரக அணுவெப்பாற்றல் புவிஈர்ப்பு குண்டுகளை (thermonuclear gravity bombs) ஏந்திச் செல்ல தகைமை கொண்டவையாகும்.
அணுஆயுத தாக்கும் படைகளின் இந்த உருவாக்கத்திற்கு சமாந்தரமாக, அமெரிக்க தரைப்படையும் மற்றும் தரைப்படையின் வான்படைப்பிரிவு துருப்புகளும், அமெரிக்கா எங்கிலுமான இராணுவத் தளங்களில் ஒரு படையெடுப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன, அதேவேளையில் வெளிநாடுகளுக்குத் துருப்புகளை விரைவாக நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் வகையில் "ஆட்சேர்ப்பு மையங்களில்" ஆட்களைச் சேர்க்க காத்திருப்புப் பட்டியலில் இருந்த 1,000 தரைப்படையினர் பணியாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கொரிய தீபகற்பத்தில் திட்டமிடப்பட்டிருந்த கூட்டு இராணுவ பயிற்சிகளை ஒத்தி வைக்க தென் கொரியா வாஷிங்டனை இணங்க வைத்ததும் தான், இந்த துடிப்பார்ந்த இராணுவ தயாரிப்புகள் நடந்து வருகின்றன. பியொங்யாங், அந்த கூட்டு இராணுவப் பயிற்சியை படையெடுப்புக்கான ஓர் ஆத்திரமூட்டும் தயாரிப்பு என்று கண்டித்திருந்தது.
ஜனாதிபதி Moon Jae-in இன் தென் கொரிய அரசாங்கம், வரவிருக்கும் 2018 ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுக்களை வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு பயன்படுத்தி உள்ளார். வட கொரியா இந்த விளையாட்டுக்களில் மிகப் பெரியளவில் பிரதிநிதிகள் குழுவை அனுப்ப உடன்பட்டுள்ளது, அத்துடன் தென் கொரிய மற்றும் வட கொரியாவின் பெண்களுக்கான பனிச்சறுக்கு ஹாக்கி விளையாட்டு வீராங்கனைகள் முதல் முறையாக ஓர் ஒருங்கிணைந்த குழுவாக கலந்துகொள்ள இணைகிறார்கள்.
“உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்" கொரியர்கள் அனைவரும் "விரைவாக வட கொரிய மற்றும் தென் கொரிய உறவுகளை மேம்படுத்துமாறும்", மற்றும் ஒரு "சுதந்திரமான மறுஐக்கியத்திற்கான திருப்பம் எடுக்க" செயல்படுமாறும் அழைப்பு விடுத்து, வியாழனன்று Kim Jong-un சமாதான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதற்கிடையே டாவோஸில், தென் கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் Kang Kyung-wha ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில், “அணுசக்தி பிரச்சினையை பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜாங்க முன்முயற்சிகள் மூலமாக தீர்க்க வேண்டும். இராணுவ தீர்வு யோசனையை ஏற்க முடியாது,” என்றார்.
வாஷிங்டன் தன்னிச்சையாக ஓர் இராணுவத் தாக்குதலை நடத்தாது என்பதற்கு அது தெளிவான உத்தரவாதங்களை சியோலுக்கு வழங்கினால், என்று கேட்கப்பட்ட போது அப்பெண்மணி கருத்துரைக்க மறுத்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “எங்கள் தலைவிதி தான் பணயத்தில் உள்ளது. கொரிய தீபகற்பத்தில் எடுக்கப்படும் எந்தவொரு விருப்பத் தெரிவையும், எங்களுடன் இணைந்து செல்லாமல் நடைமுறைப்படுத்த முடியாது,” என்றார்.
எவ்வாறிருப்பினும், ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க இராணுவ நடவடிக்கை மீது சியோலுக்கு ஏதேனும் தனியதிகாரம் வழங்கி உள்ளதா என்பது எந்த விதத்திலும் தெளிவாக இல்லை. சியோலுக்கும் பியொங்யாங்கிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை, வாஷிங்டன், வட கொரியாவுக்கு எதிராக "அதிகபட்ச அழுத்தமளிக்கும்" அதன் கொள்கைக்கு ஓர் அச்சுறுத்தலாகவும் மற்றும் போருக்கான அதன் தயாரிப்புகளுக்கு ஒரு சாத்தியமான தடையாகவும் பார்க்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. சியோல் மற்றும் பியொங்யாங்கிற்கு இடையே ஏற்பாடு செய்து கொள்வதற்கான எந்தவொரு நகர்வும், அமெரிக்க போர் முனைவைக் குறைப்பதற்கு பதிலாக, ஆக்ரோஷ இராணுவ வழிவகைகள் மூலமாக தீர்ப்பதற்காக அமெரிக்க ஆளும் ஸ்தாபகம் மற்றும் அதன் இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்திற்குள் அழுத்தத்தை மட்டுமே அதிகரிக்கக்கூடும்.
அமெரிக்க இராணுவ ஆயத்தப்படுத்தல்களுக்கு இடையே, அமெரிக்க அரசாங்கம், வட கொரியாவின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் ஒரு புதிய சுற்று தடையாணைகளை விதித்தது. இந்த சமீபத்திய தடையாணைகள் ஒன்பது நிறுவனங்களையும், 16 தனிநபர்கள் மற்றும் ஆறு வட கொரிய கப்பல்களையும் இலக்கில் வைத்தது. அந்த தடையாணை பட்டியலில் சீனாவை மையமாக கொண்ட இரண்டு வர்த்த நிறுவனங்களும் இருந்தன.
இந்த புதிய தடையாணைகளுக்கு பெய்ஜிங் கோபத்துடன் தனது பிரதிபலிப்பை காட்டியது. “எந்தவொரு நாடும் சீன நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் மீது நீதி பரிபாலனைகளுக்கு வெளியே அதன் சொந்த சட்டங்களைப் பயன்படுத்துவதை, சீனா தீர்மானமாக எதிர்க்கிறது,” என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து வரும் போர் அபாயம், மில்லியன் கணக்கானவர்களின் உயிரைப் பறிக்கக்கூடிய ஓர் அணுஆயுத மோதல் அச்சுறுத்தலை கொண்டிருப்பதுடன், இதை அணுசக்தி விஞ்ஞானிகளின் சஞ்சிகை வியாழனன்று மேற்கோளிடுகையில், 1947 இல் இருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் அதன் அணுவாயுத கடிகாரம் (Doomsday Clock) என்றழைக்கப்படுவது, 30 நொடிகள் முன்னோக்கி நகர்த்தப்பட்டு, நள்ளிரவுக்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்கூட்டி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது. அக்குழு இந்த அணுஆயுத போர் அச்சுறுத்தலை மரணகதியிலானதாக மதிப்பிட்டுள்ளமை, கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில் இது இரண்டாவது முறையாகும்.
ஈரான் அணுஆயுத உடன்படிக்கையை முடித்துக் கொள்வதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தலையும், உலகின் இரண்டு மிகப்பெரிய அணுஆயுத சக்திகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்களையும் அது மேற்கோளிட்டுக் காட்டியது. அது ட்ரம்ப் நிர்வாகத்தினது அணுஆயுத தோரணை மீளாய்வு அறிக்கை மீதும் கவனம் செலுத்த அழைப்புவிடுத்தது, இந்த அறிக்கையானது "அமெரிக்க பாதுகாப்பு திட்டங்களில் அணுஆயுதங்களின் வகைகள் மற்றும் அவை வகிக்கும் பாத்திரங்களை அதிகரிக்கவும் மற்றும்" அவற்றின் பயன்பாட்டின் "உச்ச வரம்பைக் குறைக்கவும்" கோருகிறது.
இந்த நிர்வாகமும் பென்டகனும் சமீபத்தில் ஒரு தேசிய பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் தேசிய இராணுவ மூலோபாயத்தையும் வெளியிட்டுள்ளன, இவை இரண்டு தசாப்த கால முந்தைய "பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்" என்பதை, "வல்லரசு" மோதல் மற்றும் உலக போருக்கான தயாரிப்பு என்பதைக் கொண்டு பிரதியீடு செய்து, அமெரிக்க மூலோபாயத்தில் ஓர் அடிப்படை மாற்றத்தை விவரித்திருந்தன, அதில் ஒரு வலியுறுத்தலாக வாஷிங்டனின் அணுஆயுத தளவாடங்களை கட்டியெழுப்புவதும் இடம் பெற்றுள்ளது.