ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian Trotskyists hold Russian Revolution centenary meeting in Kolkata

இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் கொல்கத்தாவில் ரஷ்யப் புரட்சி நூற்றாண்டுக் கூட்டத்தை நடத்தினர்

By Ritwik Mitter 
18 January 2018

ரஷ்யப் புரட்சியின் நூறாவது ஆண்டான கடந்த ஆண்டை நினைவுகூரும் வகையில் ஜனவரி 14 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரம் கொல்கத்தாவில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தினர்.

இந்த நிகழ்வு, இரண்டு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலத்தில் கொல்கத்தாவில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் நடத்தப்பட்ட முதலாவது பொதுக் கூட்டமாக இருந்தது, இதில் ஹெர்மன் ஆக்ஸெல்பேங்கின் ஜாரில் இருந்து லெனினுக்கு எனும் ஆவணப்படம் சிறப்பாக திரையிடப்பட்டது. 1940 களின் மத்தியில் நான்காம் அகிலத்தின் அப்போதைய இந்திய துணைக் கண்டப் பிரிவான இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (Bolshevik Leninist Party of India - BLPI) தொழிலாளர்கள் மத்தியில் ஒரு வலுவான பிரசன்னத்தைக் கொண்டிருந்த போது, முன்னர் கல்கத்தா என்றழைக்கப்பட்ட இந்த நகரம் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முக்கிய தளமாக இருந்தது.

கூட்டத்திற்கு முந்தைய வாரங்களில், ICFI இன் ஆதரவாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டனர். ரயில்வே ஊழியர்கள் உட்பட தொழிலாளர் குடியிருப்புகளிலும், ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும், பிரசிடென்சி கல்லூரி, அறிவியல் கல்லூரி மற்றும் நகர கல்லூரி ஆகிய கல்லூரிகளிலும் ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்த கூட்டம் வங்க மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டதோடு முகநூலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, மேலும் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பாலாஷ் ராய் முக்கிய பேச்சாளரான அருண் குமாரை அறிமுகம் செய்து வைத்ததோடு, அவரது குறிப்புகளை வங்க மொழி பெயர்ப்பு செய்தார்.


அருண் குமார் (இடது), பாலாஷ் ராய் மற்றும் சதீஷ் சைமன் (வலது)

ICFI, ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டுக் கூட்டங்களின் உலக உள்ளடக்கத்தை அருண் குமார் சுருக்கமாகக் கூறி சர்வதேச வர்க்கப் போராட்டம் மீண்டும் எழுச்சியுறுவதை சுட்டிக்காட்டினார்: வேலைகள், வேலை நிலைமைகள் மற்றும் அடிப்படை வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதை முன்னிட்டு ஜேர்மனி, கிரேக்கம், பிரிட்டன், ருமேனியா, இஸ்ரேல் மற்றம் துனிசியாவில் ஆர்ப்பாட்டங்களும், வேலை நிறுத்தங்களும் தொழிலாளர்களால் நடத்தப்படுகிறது. அமெரிக்காவும், ஏனைய முக்கிய ஏகாதிபத்திய சக்திகளும் ஆழமடைந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடிக்கு தங்கள் இராணுவத் தலையீடுகளைத் தீவிரப்படுத்துவதன் மூலமாக விடையிறுத்துள்ளமை, மூன்றாம் உலகப் போருக்கான ஆபத்தையே காட்டுகின்றன என்பதையும் அவர் விளக்கினார்.

சீனாவிற்கு எதிரான தனது இராணுவ மூலோபாய தாக்குதல்களில் இந்தியாவை அமெரிக்கா எப்படி ஒருங்கிணைக்கிறது என்பது பற்றி அருண் குமார் ஆய்வு செய்தார். வாஷிங்டனுக்கு பிரதம மந்திரி நரேந்திர மோடி அளித்துவரும் உற்சாகமிக்க ஆதரவு ஏற்கனவே கொந்தளிப்புடன் இருக்கும் தெற்காசியப் பிராந்தியம் முழுவதிலும் பூகோள அரசியல் பதட்டங்களை இன்னும் ஆழமடையச் செய்திருப்பதாக அவர் கூறினார். “இந்த பிராந்தியம், இந்தியா-அமெரிக்கா, சீனா-பாகிஸ்தான் ஆகிய இராணுவ மூலோபாய கூட்டணிகளுக்கு இடையிலான பகைமையினால் அதிகரித்தளவில் துருவமயப்பட்டுள்ளது” எனவும் கூறினார்.

போல்ஷிவிக்குகளின் சர்வதேச முன்னோக்கின் முக்கியத்துவத்தை இந்த பேச்சாளர் தெளிவுபடுத்தியதோடு, லெனினை மேற்கோள்காட்டி இவ்வாறு கூறினார்: “புரட்சி ஆரம்பிப்பது குறித்த பெரும் மதிப்பு ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் மீது விழுந்துள்ளது. ஆனால் ரஷ்ய பாட்டாளி வர்க்கம் அதன் இயக்கமும், புரட்சியும் உலகப் புரட்சிகர பாட்டாளி வர்க்க இயக்கத்தின் ஒரு பகுதி மட்டுமே என்பதை மறந்துவிடக் கூடாது, அது உதாரணமாக, ஜேர்மனியில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளுடனும் உத்வேகம் அதிகரித்து வருகிறது. இந்த கோணத்தில் இருந்து மட்டுமே நாம் நமது பணிகளை வரையறுக்க முடியும்”

1920 களின் மத்தியில் ரஷ்ய தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்ட ஸ்ராலினிச அதிகாரத்துவம் இந்த முன்னோக்கில் இருந்து விலகி, ட்ரொட்ஸ்கி எச்சரித்துள்ளபடி இறுதியில், 1991 இல் முதலாளித்துவ மறுசீரமைப்புக்கும் சோவியத் ஒன்றிய கலைப்புக்கும் வழிவகுத்தது என்று அருண் குமார் கூறினார்.

இந்தியாவின் பிரதான ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் இன் அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் என்று அழைக்கப்பட்டது பற்றி பேச்சாளர் குறிப்பிட்டார். “அக்டோபர் புரட்சியின் புரட்சிகர பாரம்பரியங்களுடன் சிபிஎம் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை,” என்று கூறினார். மேலும், “ஸ்ராலினிஸ்டுகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, போல்ஷிவிக்குகளின் சர்வதேச முன்னோக்கை திரிப்பதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் இன்னும் திசைதிருப்பி ரஷ்யப் புரட்சியை ஒரு தேசிய நிகழ்வாக சித்தரித்துக் காட்ட முயன்றனர்” என்றும் கூறினார்.

ஸ்ராலினை புகழ்ந்துரைத்த “மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-மாவோயிச கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கூட்டு பிரகடனம்” என்ற தலைப்பில் இந்திய மாவோயிஸ்டுகள் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இருந்து அருண் குமார் மேற்கோளிட்டு, “ஒரு கடினமான இருவழி போராட்டத்தின் மத்தியில் தோழர் ஸ்ராலின் ட்ரொட்ஸ்கிசத்தை எப்படி தோற்கடித்தார்” என்பது பற்றியதே  புரட்சி என்று அதில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.

இப்பேச்சாளர் கூட்டத்தில் பின்வருமாறு கூறினார்: “ட்ரொட்ஸ்கிசத்தை நசுக்கும் பெயரில், தேசியவாத, சலுகைபெற்ற ஸ்ராலினிச அதிகாரத்துவம் போல்ஷிவிக் மத்திய குழுவிலுள்ள கிட்டத்தட்ட ஒட்டுமொத்த மார்க்சிச தலைவர்களையும் கொன்றுவிட்டது என்பதுதான் உண்மை… மேலும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களை கொடூரமான வகையில் காட்டிக்கொடுப்பு வேலையை நடத்தியது.”

மேலும் அருண் குமார் தொடர்ந்து கூறினார்: “உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு தலைமை தாங்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே ரஷ்யப் புரட்சியின் புரட்சிகர பாரம்பரியத்தை உள்ளடக்கியிருப்பதோடு அதனைத் தொடரும் ஒரே கட்சியாக உள்ளது. இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மட்டுமே இந்தியா ஒரு முஸ்லீம் பாகிஸ்தானாகவும், இந்து மேலாதிக்க இந்தியாவாகவும் 1947 இல் பிற்போக்குத்தன வகுப்புவாத பிரிவினைக்குள்ளானதை எதிர்த்தனர், அப்போது, அதற்கு காங்கிரஸ் கட்சியும் இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவளித்தன.

“ICFI இன் இந்திய ஆதரவாளர்கள், ICFI இன் இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் ஒத்துழைப்புடன், உலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பாகமாக தெற்காசியாவின் ஐக்கிய சோசலிச அரசுகளின் முன்னோக்கிற்காக போராடுகின்றனர்.”

கூட்டத்திற்கு பின்னர் கலந்துகொண்டவர்களில் சிலர் ICFI ஆதரவாளர்களுடன் பேசினர்.

இந்திராணி, இல்லத்தரசியான இவர் பின்வருமாறு தெரிவித்தார்: “கூட்டத்தில் கலந்துகொண்டு ஜாரில் இருந்து லெனினுக்கு என்ற ஆவணப்படத்தைப் பார்த்த பின்னர் நான் ஒரு விடயத்தைக் கண்டுகொண்டேன்: 100 ஆண்டுகளுக்கு முன்பு லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் ஜாரிச ஆட்சியையும், ரஷ்யாவில் இடைக்கால அரசாங்கத்தையும் மிக கடினமான மற்றும் விரோதமான சூழ்நிலைகளின் கீழ் போல்ஷிவிக்குகள் தூக்கியெறிந்தனர். இப்புரட்சி தொழிலாளர்கள் அரசை தோற்றுவித்து, உலக அரங்கில் சோசலிசத்திற்கான போராட்டத்தைத் தொடங்கியது.

“இவையனைத்தையும் கருத்தில் கொள்ளும் போது, முன்னோக்கி நகர்ந்து செல்வதற்கு பதிலாக, நாம் பின்னோக்கி சென்று பிராந்தியவாதம் மற்றும் தேசியவாதத்தால் பிரிக்கப்படுகிறோம்…. என்றே நான் நினைக்கிறேன். ICFI தோழர்களும் உலக சோசலிச வலைத் தளமும் உண்மையை முன்வைத்து ஒரு எளிய மற்றும் தெளிவான முறையில் பேசியுள்ளனர். மேற்கு வங்கத்தில் கடந்த 40 ஆண்டுகளாக சிபிஎம் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் “மக்கள் சார்புடைய” கொள்கைகள் எனும் மாயையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் எனக்கு இது உணர்த்தியது.”


ருத்ரநீல், அவரது தொடர்பு விபரங்களை குறிப்பிடுகிறார்

ருத்ரநீல், ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர் இவ்வாறு கூறினார்: “நவீன சகாப்தத்தில் உயர்மட்ட வர்க்கத்தினர் மற்றும் தொழிலாள வர்க்கத்தினர் இடையே அதிகரித்து வரும் வேறுபாடுகள் காரணமாக முதலாளித்துவ ஆட்சிகளுக்கு எதிரான இயக்கம் மிகவும் அவசியம். இந்த அடக்குமுறை கட்டமைப்பை வெற்றி காணவும், உழைக்கும் தனிநபர்களைக் கொண்ட அனைத்து வர்க்கங்களின் மத்தியில் சமத்துவத்தை உறுதிசெய்யவும் உங்களுடைய அமைப்புக்கு வேண்டிய அனைத்து வகையான ஆதரவு மற்றும் உதவி கிடைக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அனைத்து எதிர்கால தலைமுறையினருக்காக சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவையும் நம் நாட்டில் நிறுவப்பட வேண்டும்.”