Print Version|Feedback
False alarm of incoming missile in Japan
ஏவுகணை தாக்க வந்து கொண்டிருப்பதாக ஜப்பானில் தவறான எச்சரிக்கை
By Peter Symonds
17 January 2018
ஏவுகணை தாக்க வந்து கொண்டிருக்கிறது குறித்து ஹவாயில் ஒரு தவறான எச்சரிக்கை வழங்கப்பட்டு வெறும் ஒரு சில நாட்களில், ஜப்பானிய அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு NHK, வட கொரியாவில் இருந்து ஓர் ஏவுகணை செலுத்தப்பட்டு இருப்பதாக தவறான எச்சரிக்கையுடன் நேற்று பொதுமக்களை ஸ்தம்பிக்க செய்தது. அப்பிழையைச் சரி செய்த ஒரு தகவல் ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் அனுப்பப்பட்டது.
அவ்விரு நாட்டு அதிகாரிகளுமே, ஒரு தவறு செய்ததாக தனிநபர்கள் மீது பழி சுமத்தினர். ஆனால் ஏவுகணை தாக்குதல் குறித்த இரண்டு தவறான எச்சரிக்கைகளும் முற்றிலும் தற்செயலானது அல்ல. அவை கொரிய தீபகற்பத்தில் நிலவும் அதீத பதட்டங்களது விளைவாகும். இதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளியான ஜப்பானுமே பிரதான பொறுப்பாகின்றன.
அதன் வலைத்தளத்தில் ஓர் எச்சரிக்கை வெளியிட்ட NHK, செவ்வாயன்று ட்வீட்டர் வழியாகவும் மற்றும் செல்லிட தொலைபேசிகளுக்கும் பின்வருமாறு எச்சரிக்கையை அனுப்பியது: “வட கொரியா ஓர் ஏவுகணை செலுத்தி விட்டதாக தெரிகிறது. கட்டிடங்களுக்குள்ளோ அல்லது அடித்தளங்களிளோ தஞ்சமடையுமாறு அரசு மக்களைக் கேட்டுக் கொள்கிறது.”
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு NHK இணைய தளத்திலிருந்து ஒரு திருத்தமும், மானக்கேடான மன்னிப்பும் வந்தது. “இது, இணையம் வழியாக உடனடி செய்தி அனுப்பும் இயந்திரம் பிழையாக செயல்படுத்தப்பட்டதால் நிகழ்ந்துவிட்டது. நாங்கள் மன்னிப்பு கோருகின்றோம்,” என்று அறிவிப்பாளர் தெரிவித்தார். கூடுதல் விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
பல தசாப்தங்களாக இதுபோன்ற எந்த பீதியும் ஏற்பட்டதில்லை என்கிற நிலையில், ஒரு வாரத்திற்கும் குறைந்த நாட்களில் இரண்டு தவறுதலான எச்சரிக்கைகள் நிகழ்ந்துள்ளன என்ற உண்மையே, வட கொரியாவுக்கு எதிராகவும், அத்துடன் சீனா மற்றும் ரஷ்யா போன்ற பிரதான அணுஆயுத சக்திகளுடனும், போர் தயாரிப்புகள் முன்னேறிய நிலையில் இருப்பதை எடுத்துக் காட்டுகின்றன. வேவுபார்ப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்புமுறைகள் ஆயத்தப்படுத்தப்பட்டு வருகின்றன, அல்லது ஆசியாவில் அமெரிக்கா தலைமையிலான விரைவான இராணுவ ஆயத்தப்படுத்தலின் பாகமாக பனிப்போருக்குப் பின்னர் புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டு வருகின்றன.
நவம்பரில், அமெரிக்க இராணுவத்தின் பசிபிக் கட்டளையகம் அமைந்துள்ள ஹவாயில் அதிகாரிகள், ஒரு தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி எழுப்பும் பனிப்போர் காலத்திய எச்சரிக்கை ஒலியெழுப்பி அமைப்புமுறையை அவர்கள் மாதந்தோறும் பரிசோதித்து வருவதாக அறிவித்தனர். “ஓர் அணுஆயுத அச்சுறுத்தலுக்கு நமது மாநிலத்தைத் தயார் செய்வதற்கான" அதன் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தொடர்ந்து அறிவிக்கப்படுமென அவசர கால மேலாண்மை முகமை அறிவித்தது.
ஜப்பானும், பிரதம மந்திரி ஷின்ஜோ அபே அரசாங்கத்தின் கீழ், அதன் படைத்துறைசாரா பாதுகாப்பு எந்திரத்தை வேகப்படுத்தி, ஓர் ஏவுகணை தாக்குதலுக்கு தயாரிப்பு செய்து வைக்க படைத்துறைசாரா பயிற்சிகளைத் முடுக்கி விட்டது. ஜப்பானின் மீள்இராணுவமயமாக்கலையும் மற்றும் ஆயுதப்படைகளைப் பயன்படுத்துவது மீதான சட்டப்பூர்வ மற்றும் அரசியலமைப்பு கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அவர் நகர்வுகளையும் நியாயப்படுத்துவதற்கு, அபே, வட கொரியாவுடனான மோதலைக் கைப்பற்றி உள்ளார்.
அந்த தவறான எச்சரிக்கைகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டுமோ, “வட கொரிய அச்சுறுத்தலைக்" குறித்து அச்சம் மற்றும் பீதிக்குரிய சூழலை உருவாக்குவதற்காக திட்டமிட்டு முடுக்கி விடப்பட்டது என்பதை முற்றிலுமாக நிராகரித்து விட முடியாது. மட்டுப்பட்ட அணுஆயுத தளவாடங்களைக் கொண்ட ஒரு சிறிய மற்றும் வறிய நாட்டை மிகப்பெரிய சர்வதேச அச்சுறுத்தலாக சித்தரிக்கும் பொருட்டு, அவ்விரு நாடுகளிலும் கடந்த ஆண்டு நெடுகிலும் ஓர் இடைவிடாத பிரச்சார நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது.
உண்மையில், ஆயிர ஆயிரமான அணுஆயுத குண்டுகளுடன் உலகின் மிகப்பெரும் சக்தி வாய்ந்த இராணுவ படைகளை எதிர்கொள்ளும், பியொங்யாங் ஆட்சியின் எல்லா வெற்றுரைகளிலும், அதற்கு பாதுகாப்பிற்கான ஒரு வழிவகையாக அணுஆயுதங்கள் அவசியப்படுவதாக அது எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் ட்ரம்ப் நிர்வாகமோ, அமெரிக்க கண்டத்தைத் தாக்கும் திறனுள்ள ஓர் அணுஆயுத ஏவுகணையை வைத்திருக்க வட கொரியாவை அது அனுமதிக்காது என்று அறிவித்து, அதை தடுக்க இராணுவ தாக்குதல் உள்ளடங்கலாக அனைத்து வழிவகைகளையும் அது பிரயோகிக்கும் என்று மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளது.
வட கொரியா மீது "நெருப்பு கக்கும் சீற்றத்தைப்" பொழிவதற்கும் மற்றும் 25 மில்லியன் மக்கள் வாழும் அந்நாட்டை "முற்றிலுமாக அழிக்கவும்" ட்ரம்பின் சொந்த ஆத்திரமான அச்சுறுத்தல்களே, அமெரிக்கா அதன் தரப்பில் வெற்றி பெறுவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயாராக உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில், பியொங்யாங்கின் அணுஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தளவாடங்களை அழித்து விடவேண்டுமென்ற வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு பியொங்யாங்கை அடிபணிய செய்வதற்கும் மற்றும் அதன் இராணுவ மற்றும் தொழில்துறைகளைப் பெரியளவில் ஊடுருவி சோதனையிட ஒப்புக் கொள்ள செய்யவும், அமெரிக்கா "அதிகபட்ச அழுத்தத்தைப்" பிரயோகிக்கும் அதன் முயற்சிகளை அதிகரித்து வருகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சன் நேற்று கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறைஸ்டியா ஃப்ரீலாந்துடன் சேர்ந்து கூட்டாக, வட கொரியா மீது அழுத்தத்தைத் தீவிரப்படுத்துவதற்கான வழிகளை விவாதிக்க வான்கோவரில் 20 நாடுகளின் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அந்நிகழ்வு பிரதிநிதித்துவம் அற்றது என்றும் ஆக்கப்பூர்வமற்றது என்றும் அறிவித்து, சீனாவும் சரி ரஷ்யாவும் சரி இரண்டுமே, அதில் கலந்து கொள்ள மறுத்துவிட்டன.
தங்களின் ஆரம்ப அறிக்கைகளில், வெளியுறவு அமைச்சர்கள் இரு கொரியாவுக்கு இடையிலான சமீபத்திய பேச்சுவார்த்தைகளையும், தென் கொரியாவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியா பங்கெடுக்க இருப்பதைக் குறித்தும் குறிப்பிட்டனர் என்றாலும், வட கொரியா அணுஆயுதமயப்படுவதைக் கைவிட வேண்டுமென்று வலியுறுத்திய அவர்கள் அனைவரும், அதன் பொருளாதாரத்தை முடக்கி வருகின்ற எந்தவொரு தடையாணைகளைத் தளர்த்துவதையும் நிராகரித்தனர்.
அமெரிக்கா "அணுஆயுதமேந்திய வட கொரியாவை ஏற்காது" என்று பலமாக வலியுறுத்திய ரில்லர்சன், கடுமையான நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடுத்தார். “வட கொரியா நம்பகமான பேச்சுவார்த்தைகளுக்கு வரும் புள்ளிக்கு, அந்த ஆட்சியின் நடவடிக்கைகளுக்கு விலைசெலுத்துவதை நாம் அதிகரிக்க வேண்டும்,” என்றவர் தெரிவித்தார். எண்ணெய் மற்றும் பிற பண்டங்களை இறக்குமதி செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் அதன் பெரும்பாலான ஏற்றுமதிகள் மீது தடைகள் என வட கொரியா ஏற்கனவே இராஜாங்கரீதியிலும் பொருளாதாரரீதியிலும் உலகிலேயே மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக உள்ளது.
முக்கியமாக, தடைகளை மீறி வட கொரியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் கப்பல்களுக்கு கடல்வழி போக்குவரத்து தடைகளை அதிகரிக்குமாறு நாடுகளுக்கு ரில்லர்சன் அழைப்புவிடுத்தார். கப்பல் போக்குவரத்து மீது ஏதோவொரு விதத்தில் தடைவிதிப்பதற்கு அமெரிக்கா அழுத்தமளிக்கக்கூடும்—இந்நடவடிக்கையானது கடந்த மாதம் துறைமுகத்தில் இருந்து அதுபோன்ற வாகனங்களைக் கைப்பற்ற அழைப்புவிடுத்த ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தையும் கடந்து செல்கிறது.
பெருங்கடல்களில் கப்பல்களைத் தேடி பறிமுதல் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக கனடாவின் தலைமை தளபதி ஜொனாதன் வான்ஸ் குறிப்பளித்தார். வட கொரியாவுக்கு எதிரான தடையாணைகளை அமல்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சிகளில் பங்கெடுப்பதற்கும் அவர் "ஆயுதப் படைகளுக்குள் இராணுவ தகைமை" இருப்பதாக அறிவித்தார். கப்பல் போக்குவரத்தைத் தடுக்கும் நடவடிக்கையே கூட, ஒரு பரந்த மோதலைத் துரிதப்படுத்தக்கூடிய ஓர் ஆத்திரமூட்டும் போர் நடவடிக்கையாகும்.
அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளுக்கு கோரிக்கை விடுப்பதற்குப் பக்கவாட்டில், அது வரவிருக்கும் மாதங்களில் வட கொரியாவுக்கு எதிராக, ஒரு தற்காப்பு போருக்கு அல்ல, ஓர் ஆக்கிரமிப்பு போருக்கான தயாரிப்புகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது தென் கொரியாவுடனான முக்கிய கூட்டு இராணுவ பயிற்சிகளை அமெரிக்கா தள்ளி வைத்துள்ளது என்றாலும், அதேவேளையில் பென்டகன் உள்நாட்டில் இராணுவ பயிற்சிகளை அதிகரித்து கொண்டிருக்கிறது.
பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் குழுவில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் உறுப்பினர் மெக் தொர்ன்பேர்ரி நேற்று செய்தியாளர்களுக்கு கூறுகையில், “வட கொரியா என்று வருகையில் இராணுவத் தெரிவுகளுடன் வேறு என்னென்ன சம்பந்தப்பட்டிருக்கும் என்பதை நிர்வாகம் மிகவும் ஆழமாக பரிசீலித்து வருகிறது,” என்றார். நடந்து வரும் பயிற்சி "மிகவும் முக்கியமானது" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
“அமெரிக்க இராணுவம் சத்தமின்றி கடைசி தீர்விற்கு தயாரிப்பு செய்கிறது: வட கொரியாவுடன் போர்" என்று தலைப்பிட்ட நீண்ட கட்டுரை ஒன்று நியூ யோர்க் டைம்ஸில் நேற்று பிரசுரமானது. “வட கொரியாவுடனான கடைசி நடவடிக்கையாக இருக்கக்கூடிய ஒன்றுக்கு அந்நாட்டின் இராணுவத்தைத் தயாரிப்பு செய்வதில் கவனம்செலுத்துவது புதுப்பிக்கப்பட்டிருப்பதையே, அந்த பயிற்சிகளின் அளவும் மற்றும் நடந்து வரும் நேரமும் எடுத்துக்காட்டுகின்றன என்று அக்கட்டுரை குறிப்பிட்டது.
“கடந்த மாதம் வட கரோலினாவின் ப்ராக் துறைமுகத்தில், ஒரு பயிற்சியின் போது சுட்டுத்தள்ளும் 48 அப்பாச்சி போர்விமானங்களும் மற்றும் தளவாடங்கள் எடுத்துச் செல்லும் சினூக் ஹெலிகாப்டர்களும் பறக்க விடப்பட்டன, இப்பயிற்சியானது பீரங்கி குண்டுகள் வீசப்பட்டு கொண்டிருக்கும் போதே தாக்கும் இலக்குகளை நோக்கி உபகரணங்களையும் துருப்புகளையும் நகர்த்துவதைப் பயிற்சி செய்தது. இரண்டு நாட்களுக்குப் பின்னர், தரைப்படையின் வான்பிரிவைச் சேர்ந்த 119 சிப்பாய்கள், இரவு நேரத்தில் நெவாடாவுக்கு மேலே C-17 இராணுவ தளவாட விமானங்களில் இருந்து பாராசூட்டில் வந்திறங்கினர், வெளிநாடு மீதான படையெடுப்பை அது ஒத்திகை செய்தது.
“அவசரமான நேரத்தில் இராணுவப் படைகளை வெளிநாடுகளுக்கு நகர்த்துவதற்கான அணிதிரட்டும் மையங்கள் என்றழைக்கப்படுவதை எவ்வாறு அமைப்பது என்பதை அடுத்த மாதம், காத்திருப்பு பட்டியலில் உள்ள 1,000 க்கும் அதிகமான சிப்பாய்கள், அமெரிக்கா எங்கிலும் உள்ள இராணுவச் சோதனை சாவடிகளில் பயிற்சி செய்வார்கள்.”
இந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது அமெரிக்கா நிறைய சிறப்புப்படை துருப்புகளைத் தென் கொரியாவுக்கு அனுப்ப இருப்பதை அக்கட்டுரை சுட்டிக்காட்டியது, “இறுதியில் இது, ஈராக் மற்றும் சிரியாவில் சண்டையிட்டு வருகின்ற அதே மாதிரியாக பாணியில், கொரியாவை மையமாக கொண்ட ஒரு செயற்படை பிரிவை உருவாக்குவதாக இருக்கும் என்று சில அதிகாரிகள் கூறினர்.”
அமெரிக்கா மேற்கு பசிபிக்கின் குவாமில் உள்ள அதன் இராணுவத் தளங்களில் மூலோபாய குண்டுவீசிகளை ஆயத்தப்படுத்தி வருகிறது என்பது, வட கொரியாவுடன் அமெரிக்கா ஒரு நாசகரமான போருக்கு தயாரிப்பு செய்து வருகிறது என்பதற்கான மிகவும் நம்பகமான அறிகுறியாக உள்ளது. குவாமின் ஆண்டர்சன் விமானப்படைத் தளத்தின் B-1 குண்டுவீசிகளைப் பிரதியீடு செய்ய இம்மாதம் அனுப்பப்பட்ட மூன்று B-2 கண்டறியவியலா குண்டுவீசிகளுடன் இணைய, அங்கே இன்னும் ஆறு B-52 ரக குண்டுவீசிகளை அமெரிக்க விமானப்படை நிலைநிறுத்தி உள்ளதாக CNN நேற்று செய்தி வெளியிட்டது. B-1 ரக குண்டுவீசிகளைப் போலன்றி, B-52 மற்றும் B-2 ரக குண்டுவீசிகள் அணுகுண்டுகளை ஏந்திச் செல்லக் கூடியவையாகும்.