Print Version|Feedback
Greek workers strike against Syriza’s imposition of EU austerity “multi-bill”
ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளுக்காக "கூட்டு-சட்டமசோதாவை" திணிக்கும் சிரிசாவுக்கு எதிராக கிரேக்க தொழிலாள வேலைநிறுத்தம்
By Alex Lantier
16 January 2018
ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளைக் கொண்டுள்ள 1,300 பக்க "கூட்டு-சட்டமசோதாவை" கிரேக்க நாடாளுமன்றத்தில் சிரிசா (தீவிர இடது கூட்டணி) துரிதகதியில் நிறைவேற்ற முயன்ற நிலையில், திங்களன்று சிரிசாவுக்கு எதிராக கிரீஸில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர் மற்றும் அன்று மாலையே ஏதென்ஸில் போராட்டங்கள் வெடித்தன. பழமைவாத புதிய ஜனநாயகம், சமூக-ஜனநாயக Democratic Alignment, மத்தியவாதிகள் மற்றும் நவ-நாஜி கோல்டன் டோன் இன் தேசியவாத கூட்டணி ஆகியவை நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்திருந்தன.
வேலைநிறுத்தத்திற்கான உரிமை உட்பட அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தாக்குதல்களுக்கு எதிராக பாரிய மக்கள் எதிர்ப்புக்கு இடையே, ஏதென்ஸில் கப்பல் போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்து ஏறத்தாழ முற்றிலுமாக தடைப்பட்டிருந்தது. ஏதென்ஸ் சுரங்கப்பாதை, பேருந்து மற்றும் ட்ராம் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன, மருத்துவர்களும் வேலைநிறுத்தத்தில் இணைந்ததால் மருத்துவமனைகள் அத்தியாவசிய பணியாளர்களுடன் செயல்பட்டது. தலைநகரில் ஆயிரக் கணக்கானவர்கள் இரண்டு வெவ்வேறு தொழிற்சங்க போராட்டங்களில் அணி வகுத்தனர்.
சிரிசா நிர்வாகிகளால் வழிநடத்தப்படும் கிரேக்க நாடாளுமன்றம் 154 க்கு 141 என்று அந்த கூட்டு-சட்டமசோதாவுக்கு ஒப்புதல் வாக்குகள் வழங்கியதும் போராட்டக்காரர்கள் மற்றும் கலகம் ஒடுக்கும் பொலிஸிற்கு இடையே மோதல்கள் வெடித்தன, அந்த சட்டமசோதா குடும்ப நல உதவித்தொகைகளைக் குறைப்பதுடன் வேலைநிறுத்த உரிமை மீதான கடுமையான மட்டுப்பாடுகள் உள்ளடங்கலாக ஆலைமூடல்களைச் சுலபமாக்குகிறது.
போராட்டக்காரர்கள் எரிபொருள்கொண்ட போத்தல்களையும், சிமென்ட் கட்டிகள் மற்றும் கற்களையும் வீசினர், அதேவேளையில் பொலிஸ் பதிலுக்கு கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் உணர்விழக்க செய்யும் கையெறி குண்டுகளை வீசினர்.
2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தால் நடத்தப்பட்ட வாழ்க்கை தரங்கள் மீதான இடைவிடாத தாக்குதல் மற்றும் வேலைநிறுத்த உரிமை மீதான சிரிசாவின் தாக்குதல் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளர் போராட்டங்களின் இந்த வெடிப்பு, சர்வதேச வர்க்க போராட்டத்தின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. இது, சிரிசா ஒரு இடதுசாரி அல்லது சோசலிச அமைப்பு என்ற அரசியல் பொய்யை சிதறடிக்கிறது, இந்த பொய்க்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI) தொடர்ந்து போராடியுள்ளது. சிரிசா, தொழிலாளர்களுக்கு விரோதமான ஒரு வலதுசாரி கட்சியாகும்.
ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை நிறுத்துவது என்ற அதன் தேர்தல் வாக்குறுதிகளைக் காட்டிக்கொடுத்த அது, இப்போது தொழிலாளர்களின் எதிர்ப்பை மவுனமாக்க ஜனநாயக-விரோத முறைகளைப் பயன்படுத்த திட்டமிடுகிறது.
இது கிரீஸின் எல்லைகளையும் கடந்து நீண்ட-தூர தாக்கங்களைக் கொண்டிருக்கும், ஏனெனில் ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்த பிரிவுகள், சம்பளங்கள் மற்றும் சமூக செலவினங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாரிய வேலைநீக்கங்களுக்கான திட்டங்களுக்கு எதிராக போராட்டத்திற்குள் நகர்ந்து வருகின்றன.
இதேபோல சிரிசா தேர்வாவதை ஆதரித்த ஐரோப்பா எங்கிலும் உள்ள குட்டி-முதலாளித்துவ வெகுஜனவாத மற்றும் மார்க்சிச-விரோத கட்சிகள் —ஸ்பெயினில் பொடெமோஸ் இல் இருந்து ஜேர்மனியில் இடது கட்சி, பிரான்சில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி மற்றும் ஜோன்-லூக் மெலென்சோனின் அமைப்பு, பிரிட்டனில் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி வரையில்— இவையும் தொழிலாளர்களின் எதிரிகளாக அம்பலமாகி நிற்கின்றன. ஐரோப்பிய அரசியல் ஸ்தாபகத்தின் "இடது" என்று கூறி வந்துள்ளதும் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக பிணைந்துள்ளதுமான இந்த சக்திகளுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே அதிகரித்து வரும் மோதல், வெடிப்பார்ந்த மற்றும் இறுதியில் புரட்சிகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும்.
இத்தகைய சம்பவங்கள், தொழிலாள வர்க்கத்தை ஒடுக்க நிதியியல் தன்னலக் குழுக்களின் ஒரு சர்வாதிகாரமாக செயல்படும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய தேசிய அரசாங்கங்களின் பெரிதும் இற்றுப்போன நாடாளுமன்ற-ஜனநாயக முகத்திரையை மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு முன்னால் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
ஐயத்திற்கிடமின்றி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரதான வங்கிகளால் வரையப்பட்ட அந்த "கூட்டு-சட்டமசோதாவை" படித்து பார்க்க வேண்டுமென கூட அக்கறை கொள்ளாமல், சிரிசா பிரதிநிதிகள் சர்வ சாதாரணமாக அதற்கு கிரேக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் முத்திரை குத்திவிட்டார்கள். கிரீஸின் வலதுசாரி நாளிதழ் Kathimerini சற்றே சங்கடத்துடன் எழுதியதைப் போல, “அந்த வரைவு சட்டமசோதாவின் நூற்றுக் கணக்கான பக்கங்கள் வெறும் ஒருசில நாட்களில் விவாதிக்கப்பட்டன, நியாயமாக பார்த்தால் தாங்கள் எதற்கு வாக்களிக்கிறோம் என்று பிரதிநிதிகள் முழுமையாக புரிந்து கொண்டிருந்தார்களா என்பதே சந்தேகமாக உள்ளது.”
கிரீஸ் மற்றும் ஐரோப்பிய மக்களால் எதிர்க்கப்படும் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது அந்த "கூட்டு-சட்டமசோதா" கடுமையான தாக்குதல்களைக் கொண்டிருப்பது சிரிசாவுக்கு நன்கு தெரியுமென பரவலாக செய்திகளில் குறிப்பிடப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வீடுகளை ஏலம் விடுகையில் அங்கே குடியிருந்தவர்களும் அண்டை அயலாரும் நேரடியாக வந்து தடுப்பதைத் தவிர்க்கும் நோக்கில், பறிமுதல் செய்யப்பட்டவைகளை மின்னணு முறையில் ஏலம் விடும் வழிவகைகளையும், குடும்ப வருமானங்களில் ஆழ்ந்த வெட்டுக்களையும்; வேலைநிறுத்தம் செய்வதற்கு முன்னதாக (மொத்த தொழிற்சங்க உறுப்பினர்களில் 50 சதவீதத்தினர் வேலைநிறுத்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டாலே போதும் என்பதற்கு எதிராக) வேலைநிறுத்த நடவடிக்கைக்கு மொத்த தொழிற்சங்க அங்கத்தவர்களில் 50 சதவீதத்தினரின் ஆதரவு அவசியம் என்பது போன்ற, வேலைநிறுத்த நடவடிக்கையைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட நடவடிக்கைகளும் அதில் உள்ளடங்கி உள்ளன.
இந்த நடவடிக்கையானது "வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி, உற்பத்தியை அதிகரிக்கும்", அதாவது தொழிலாளர்கள் மீதான சுரண்டலை அதிகரிக்கும், என கிரீஸிற்கு "கடன் வழங்குபவர்கள் நம்புகின்றனர்" என்று ராய்டர்ஸ் குறிப்பிட்டது.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், சிரிசா தலைவரும் பிரதம மந்திரியுமான அலெக்சிஸ் சிப்ராஸ் இந்த திட்டநிரலின் சமூகரீதியிலான எதிர்-புரட்சிகர தன்மையை மறுக்க முயன்றார். அடுத்தடுத்த ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைக்காக கொண்டு வரப்படும் உடன்படிக்கை வரையறைகளின் கீழ் கிரேக்க மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் கட்டளையிடப்படும் பல வெட்டுக்களில் இந்த சிக்கன தொகுப்பே கடைசியானதாக இருக்கும் என்றவர் உறுதியளித்தார். “நீண்ட மற்றும் சிக்கலான சுழற்சியின் முடிவு" என்று புகழ்ந்துரைத்து, சிப்ராஸ் கூறுகையில், “நாம் இந்த திட்டம் முடிவடைவதற்கு ஒரு படி முன்னேயும், வரவிருக்கும் உடன்படிக்கைகளின் இறுதி முடிவிலும் இருக்கிறோம்,” என்றார். “இந்த கோடையில், நாம்… ஒரு கடினமான, நியாயமற்ற மற்றும் பாதிப்பேற்படுத்தும் காலத்தில் இருக்க வேண்டியிருக்கும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
இந்த “கூட்டு-சட்டமசோதா”, கிரீஸின் அரசியலமைப்பில் பாதுகாக்கப்பட்ட வேலைநிறுத்த உரிமையை நடைமுறையளவில் அழிக்க நோக்கம் கொண்டுள்ளதை மறுத்து, சிப்ராஸ் தொடர்ந்து கூறினார்: “தொழில் சந்தையின் நெறிமுறைகளைத் தளர்த்துவதற்காக இந்த அரசாங்கமானது, கடன் வழங்குபவர்களும் மற்றும் தொழில் அதிபர்களும் கோரும் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துகிறது என்பது ஒரு வெட்கக்கேடான பொய். வேலைநிறுத்த உரிமையானது தொழிலாள வர்க்கத்தின் புனிதமான வெற்றியாகும்.”
இங்கே சிப்ராஸ் தான் வெட்கங்கெட்ட பொய்யர். நாடாளுமன்றத்தில் அவரது வாக்குறுதிகள், இம்மாதத்திலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அதிகாரத்திற்கு வந்த போது ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளைப் போலவே, அதேயளவுக்கு மதிப்பற்றவை. நாடாளுமன்றத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தபோதே, மூத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளோ, கிரீஸின் ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு உத்தியோகபூர்வமாக முடிந்த பின்னரும் அந்நாட்டிடம் இருந்து அவர்கள் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைக் கோர இருப்பதாக அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.
“இத்திட்டம் முடிந்த பின்னர் மேற்கொண்டும் கடனுதவி வழங்கப்பட்டால், பின் கூடுதல் உடன்படிக்கைகளைப் பெறலாம் என்பதே அர்த்தம்,” என்று முன்னாள் ஜேர்மன் நிதியமைச்சர் வொல்ஃப்காங் சொய்பிள இன் ஒரு கூட்டாளியும், ஐரோப்பிய செயற்குழுவின் வெளியேறும் தலைவருமான தோமஸ் வெய்சர் Kathimerini க்குத் தெரிவித்தார். கிரீஸ் திவால்நிலையை கோர முயன்றாலோ அல்லது நிர்வாக நடைமுறைக்கு சாத்தியமற்ற அதன் 323 பில்லியன் யூரோ இறையாண்மை கடனுக்கு மறுவடிவம் கொடுக்க முயன்றாலோ அல்லது அதன் கடன்களுக்கு உதவியாக மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் உதவி கோர முயன்றாலோ, ஐரோப்பிய ஒன்றியம் பேரழிவுகரமாக கூடுதல் சமூக வெட்டுக்களைக் கோரும் என்பதை இது உள்ளடக்கமாக கொண்டுள்ளது.
சிரிசாவின் "கூட்டு-சட்டமசோதா", ஐரோப்பா எங்கிலும் முதலாளித்துவ வர்க்கத்தால் வேலைநிறுத்த உரிமை மீதும் மற்றும் ஏனைய சட்டபூர்வ உரிமைகள் மீதும் நீண்ட காலமாக நடத்தப்பட்ட தாக்குதலின் பாகமாகும். பிரிட்டனின் தொழிற்சங்க-தடை சட்டங்கள், மேற்கு ஐரோப்பாவின் பெரும் பகுதிகளில் பொதுத்துறை வேலைநிறுத்தங்களுக்கு தடை விதித்து சேவைத்துறையை நடைமுறைப்படுத்த தேவையான ஆகக்குறைந்த மட்டத்தை உறுதிப்படுத்துவது, பிரான்சில் போராட்டங்களுக்கு தடைவிதிக்கவும் மற்றும் குறைந்தபட்ச கூலிக்கும் கீழே சம்பளங்களைக் கொண்டு வருவதற்கும் அனுமதிக்கும் தொழிற்சட்டம் மற்றும் அவசரகால நிலை ஆகியவை இதில் உள்ளடங்குகின்றன.
ஜேர்மன் உலோகத்துறை தொழிலாளர்களும், பிரிட்டிஷ் ரயில்வே துறை தொழிலாளர்களும் வேலைநிறுத்த நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், ஸ்பெயினில் வேலைநிறுத்த நடவடிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், பிரெஞ்சு அரசாங்கத்தின் தொழிலாளர்-விரோத திட்டநிரல் மீது சமூக கோபம் அதிகரித்து வருவதுடன், ருமேனிய மற்றும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில், ஐரோப்பா எங்கிலும் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க போர்குணத்துடன் கிரீஸ் போராட்டங்கள் பிணைந்துள்ளன. வர்க்க போராட்டம் தீவிரமடைவதை முகங்கொடுக்கும் முதலாளித்துவ வர்க்கம் அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கிழித்தெறிய நகர்ந்து வருகிறது.
வர்க்கப் போராட்டத்தின் ஒரு மீளெழுச்சி காலத்திற்குள் சர்வதேச தொழிலாள வர்க்கம் சென்று கொண்டிருப்பதால், சிரிசா அரசாங்கத்துடனான அனுபவம் அதற்கு ஓர் அடிப்படை மூலோபாய அனுபவமாகும். சிரிசா உடனான அனுபவம் அப்பட்டமாக எடுத்துக்காட்டுவதைப் போல, தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமாக உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் போலி-இடது கட்சிகளின் அரசியல் மற்றும் அமைப்புரீதியிலான கட்டுப்பாட்டின் கீழ் போராட்டங்களை முன்நகர்த்த முடியாது. ஐரோப்பாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒருங்கிணைப்பதற்காக செயல்படும் வகையில், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான போராட்ட அமைப்புகளை ஏற்படுத்துவதே முன்னோக்கிய பாதையாக உள்ளது.
சிரிசாவின் துரோகம் மற்றும் திவால்நிலையை முகங்கொடுத்துள்ள தொழிலாள வர்க்கத்திற்கு, ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கிற்காக போராடும் அதன் சொந்த புரட்சிகர அரசியல் தலைமை அவசியமாகிறது. இதன் அர்த்தம், கிரீஸிலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் ICFI இன் பிரிவுகளை —ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை— கட்டமைப்பதாகும், ICFI மட்டுமே சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து சிரிசாவை எதிர்த்து, அது அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னரே அது வகிக்க இருந்த துரோக பாத்திரம் குறித்து எச்சரித்தது.