Print Version|Feedback
Final reflections on the centennial year of the October Revolution
அக்டோபர் புரட்சியின் நூறாவது ஆண்டுநிறைவின் எண்ணப்பிரதிபலிப்புகள்
David North
30 December 2017
முடிவுக்கு வர இருக்கும் இவ் ஆண்டின் மிகத் தொடக்கத்தில் உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது: “உலக முதலாளித்துவத்தை ஒரு ஆவி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது: அது ரஷ்ய புரட்சி என்னும் ஆவியுருவாகும். இந்த வாக்கியம் முதலாளித்துவ வரலாற்றாசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களினால் அக்டோபர் புரட்சி அவதானிக்கப்பட்ட விதத்தில் மிகச் செறிவான வகையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது. வருடத்தின் முதல் மாதங்களில், வருணனையானது சிடுமூஞ்சித்தனமாகவும் நிராகரிப்பதாகவும் இருந்தது, அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சென்ற மார்ச் மாதத்தில் இலண்டன் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் இல் வெளியான வரலாற்றாசிரியர் ஷீலா பிட்ஸ்பாட்ரிக்கின் மேலோட்டமான கருத்து: ”தோல்வியைப் போல் தோற்பது எதுவுமில்லை, புரட்சியின் நூற்றாண்டை அணுகும் வரலாற்றாசிரியர்களுக்கு சோவியத் ஒன்றியத்தின் மறைவானது துணிபோட்டு மூடி விட்டதைப் போல இருக்கிறது. புரட்சி குறித்து அவசரகதியில் வரும் புதிய புத்தகங்களில், வெகு சில மட்டுமே அதன் நீடிக்கும் முக்கியத்துவம் குறித்து வலுவாக வாதிடுகின்றன, அநேகமானவை ஒரு வருத்தத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன.... சோசலிசம் என்பது அதனைப் பேசாமல் இருப்பதே நல்லது என்ற அளவுக்கு ஒரு கானல்நீராய் இருக்கிறது.”
ஆனால் வருடம் முன்நகர நகர, ஒரு பிரளயகரமான போரின் பெருகும் அச்சுறுத்தல், மற்றும், உலக அரசியல் ஸ்திரமின்மை மற்றும் தீவிரமடையும் சமூகப் பதட்டங்களின் அன்றாட வெளிப்பாடுகள் ஆகியவற்றின் மத்தியில், வருணனைகளின் தொனி முன்னெப்போதினும் ஒரு இருண்ட தன்மையைப் பெறத் தொடங்கியது. 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதானது சோசலிசப் புரட்சியின் ஆவியுருவை என்றென்றைக்குமாய் ஒழித்துவிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் லெனின் தலைமையில் நடந்த அந்தப் புரட்சியின் சரியான நூற்றாண்டு தினம் நெருங்கிய வேளையில், முதலாளித்துவ வர்க்கம் “அந்த கிழவனுக்குள் இத்தனை இரத்தம் இருக்குமென்று யார் கண்டிருக்க முடியும்?” என்று கேட்ட சீமாட்டி மக்பாத் இன் நிலையில் தன்னைக் கண்டது.
நவம்பர் 6 அன்று நியூயோர்க் டைம்ஸில் வெளியான ஒரு கட்டுரையில், வலது-சாரி வரலாற்றாசிரியரான சைமன் சேபாக் மொண்டேஃபியோரி எழுதினார்: “மிகச்சரியாக நூறாண்டுகளுக்கு முன்னால் விளாடிமிர் லெனினால் ஒழுங்கமைக்கப்பட்ட அக்டோபர் புரட்சியானது, சோவியத் ஒன்றியம் உருக்குலைந்த போது கற்பனை செய்தும் பார்த்திருக்க முடியாத வழிகளில், இப்போதும் காலப்பொருத்தத்தைக் கொண்டிருக்கிறது.” போல்ஷிவிக்குகளின் வெற்றி தொடர்ந்தும் “அதிர்வலைகளைக் கொண்டிருக்கிறது, ஆதர்சிக்கிறது” என்பதுடன் “காவியமாக, பாரம்பரியக் கதையாக, மனதை மயக்குவதாக விஸ்வரூபமெடுக்கிறது” என்று இறுக்கத்துடன் அவதானித்தார். லெனினை கொலைசெய்வதன் மூலம் புரட்சியைத் தோற்கடிக்கத் தவறிய ரஷ்ய முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தின் தோல்வி குறித்து மொண்டேஃபியோரி புலம்பினார்.
அதேநாளில், வாஷிங்டன் போஸ்டில், கம்யூனிச-விரோத வரலாற்றாசிரியரான ஆன் ஆப்பிள்பாம், முதலாளித்துவம் இன்னும் சோசலிசப் புரட்சியின் அச்சுறுத்தலால் பாதிப்புக்குள்ளாகத்தக்க நிலையில்தான் இருக்கிறது என்றும், அரசாங்கங்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது என்றும் எச்சரித்தார். புரட்சிகர சோசலிஸ்டுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் உள்ளது என்றபோதிலும், அவர்களின் சாத்தியத்திறனை குறைத்து மதிப்பிடப்பட்டு விடக் கூடாது என்றார். “ஞாபகத்தில் இருக்கட்டும்,” ஆப்பிள்பாம் எழுதினார், “1917 இன் தொடக்கத்தில்... பின்னாளில் போல்ஷிவிக்குகள் என உலகத்திற்குத் தெரியவந்த மனிதர்களில் அநேகம் பேர் சமூகத்தின் விளிம்புகளில் இருந்த சதிகாரர்களாகவும் கற்பனையுலகத்தில் மிதப்பவர்களாகவும் இருந்தனர். வருடம் முடிவதற்குள் பார்த்தால், அவர்கள் ரஷ்யாவை நடத்தும் நிலைக்கு வந்துவிட்டிருந்தனர்.” இவ்வாறாக, 1917 இன் படிப்பினை தெளிவாய் இருக்கிறது: “ஒரு அமைப்புமுறை மிகவும் பலவீனமானதென்றால், எதிர்க்கட்சிகள் மிகவும் பிளவுபட்டுக் கிடந்ததென்றால், ஆளும் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து கிடந்ததென்றால், தீவிரவாதிகள் யாருமே அவர்களை எதிர்பார்த்திராத இடங்களில் சடுதியில் மையத்திற்கு வந்துவிட முடியும்.”
மிகவும் வர்க்க-நனவான முதலாளித்துவ வரலாற்றாசிரியர்களுக்கு நேர்மாறாய், குட்டி-முதலாளித்துவ போலி-இடதுகளது பிரதிநிதிகள் இன்றைய உலகில் சோசலிஸ்டுகளுக்கான தத்துவார்த்த வழிகாட்டியாக மற்றும் அரசியல் முன்மாதிரியாக அக்டோபர் புரட்சியின் அத்தியாவசிய பொருத்தமின்மையைத் தொடர்ந்தும் வலியுறுத்தினர். லெனினுக்கும், இன்னும் ட்ரொட்ஸ்கிக்கும் கூட சம்பிரதாயமான ஒரு அஞ்சலி செலுத்துவதில் எந்தத் தவறும் இல்லைத்தான். ஆனால், நடைமுறை விடயத்தில், போல்ஷிவிசத்தின் மற்றும் அக்டோபர் புரட்சியின் தத்துவம், அரசியல் மற்றும் அனுபவத்தில் குறிப்பாக சமகால உலகத்திற்குப் பொருத்தமாய் அங்கே அதிகமாய் ஏதுமில்லை. அக்டோபர் புரட்சி நூற்றாண்டைக் குறிக்கும் விதமான ஜாக்கோபின் இதழின் சிறப்புப் பதிப்பு ஒன்றில் இந்த திவாலான கண்ணோட்டம் அதன் மிக நிறைவான வெளிப்பாட்டைக் கண்டிருந்தது. கோனர் கில்பாட்ரிக் மற்றும் அடேனர் உஸ்மானி எழுதிய “புதிய கம்யூனிஸ்டுகள்” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரை பின்வரும் தலைப்புவாசகத்துடன் தொடங்குகிறது: “இது 2017ம் ஆண்டு. 1917 இன் பிரச்சினைகளைக் குறித்து கவலை கொள்வதை நிறுத்த வேண்டிய சமயம்.”
இந்த அறிவுரை அடேனரும் உஸ்மானியும் வெளிப்படையாக நம்புவதைப் போல அத்தனை அசலானது இல்ல. அரை நூற்றாண்டுக்கு முன்னர் “புதிய இடது” தனக்கு அடித்தளமாகக் கொண்டிருந்த அடிப்படைக் கருத்தாக்கம் இதுதான். 1968 இல் போலவே, “1917 பிரச்சினைகளைக் குறித்து கவலைப்படுவதை நிறுத்த” விடுக்கப்படும் அழைப்பானது, ஒரு புரட்சிகர மார்க்சிச அரசியல் கட்சியின் தலைமையில் தொழிலாள வர்க்கத்தால் அரசியல் அதிகாரம், முதன்முறையாகவும் இதுவரையில் ஒரேயொரு தடவையாகவும் கைப்பற்றப்பட்டதன் தத்துவம், வேலைத்திட்டம், கோட்பாடுகள் மற்றும் மூலோபாயப் படிப்பினைகளை ஆய்வுசெய்வதற்கு எதிராக செலுத்தப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் பாதையில் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தை புரட்சிகரமாகத் தூக்கிவீசுவதற்குக் கிட்டிய பல சந்தர்ப்பங்கள் தடம்புரளச் செய்யப்பட்டதிலும் தோல்வி கண்டதிலும் ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், மத்தியவாதம் மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதத்தின் பிற வடிவங்கள் வகித்த பாத்திரம் குறித்த எந்த ஆய்வும் கூடாது என்பதும் ”புதிய இடது” மற்றும் அதன் போலி-இடது வம்சாவளிகளது “வரலாற்றை மறப்போம்” அணுகுமுறையின் ஒரு துணைவிதியாக இருக்கிறது. போலி-இடதுகளால் ஊக்குவிக்கப்படும் ஞாபகமறதியானது, எல்லாவற்றுக்கும் மேல், ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாறு மற்றும் வேலைத்திட்டத்தை கற்பதற்கும் அதில் தீவிரமாக ஈடுபடுவதற்கும் எதிராக முன்னெடுக்கப்படுகின்றது.
எதிர்பார்க்கத்தக்க வகையில், சமகால சோசலிச தத்துவத்தின் ஒரு உதாரணவடிவமாக நியூயோர்க் டைம்ஸால் விளம்பரப்படுத்தப்படுகின்றதும் பாராட்டப்படுகின்றதுமான ஜாக்கோபின் இதழின் பொதுவான குணாம்சங்களாக விளங்கக் கூடிய சிடுமூஞ்சித்தனமான மற்றும் மேலோட்டமான வாத வகைகளால் கில்பாட்ரிக்-உஸ்மானி கட்டுரை நிரம்பி வழிகிறது. “இருபதாம் நூற்றாண்டு சோசலிசம் தோல்விகாணும் தலைவிதியையே கொண்டிருந்ததோ இல்லையோ, நாம் இப்போது ஒரு புதிய சகாப்தத்தில் வாழ்கிறோம்” அந்த ஆசிரியர்கள் எழுதுகின்றனர். அந்த “புதிய சகாப்தம்” என்ன என்பதையோ, அல்லது அது அக்டோபர் புரட்சியின் சகாப்தத்தில் இருந்து அடிப்படையில் எப்படி வேறுபட்டது என்பதையோ இன்னதென்று சரியாக விளக்காமல், கில்பாட்ரிக்-உஸ்மானி வெறுமனே திட்டவட்டம் செய்கின்றனர்: “இன்று, ஒரு நூறு ஆண்டுகளின் பின்னர், உலகம் மாறி விட்டிருக்கிறது. [?] இன்றைய அரசியல் பணிகள் எந்த இடத்திலும் 1918 இல் போல்ஷிவிக்குகள் முகம்கொடுத்தவற்றை ஒத்தவையாக இல்லை. [??] ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கொலைபாதகப் போரினால் கொந்தளிப்புற்றிருந்த ஒரு உலகத்தை போல்ஷிவிக்குகள் பெற்றிருந்தனர்; நாம் இதுவரை பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் மிக அமைதியான காலகட்டத்தில் வாழ்கிறோம்.” [???]
இந்த அரசியல் ரிப் வான் விங்கிள்கள் (Rip Van Winkles) கடந்த கால் நூற்றாண்டு காலமாக நன்கு தூங்கி விட்டார்கள் போல் தெரிகிறது, ஈராக் மீதான இரண்டு படையெடுப்புகள், 1990களின் பால்கன் போர்கள், ஆபிரிக்காவில் ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்ட பல இரத்த ஆறுகள், மற்றும் “பயங்கரவாதத்தின் மீதான போர்” இன் கடந்த பதினாறு ஆண்டுகளின் ஒரு பின்விளைவாக மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் பெரும்பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பொதுவான படுகொலைகள் இவற்றையெல்லாம் அவர்கள் கவனிக்கவேயில்லை போலும். ”பதிவுசெய்யப்பட்ட வரலாற்றின் இந்த மிக அமைதியான காலகட்டத்தில்” பல மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் காயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், கோடிக்கணக்கானோர் வீடிழந்தவர்களாக நாடிழந்தவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
”உலகின் உழைக்கும் வர்க்கங்கள் முன்நகர்ந்து விட்டிருக்கின்றன” ஜாக்கோபின் இதழின் தத்துவாசிரியர்கள் அறிவிக்கிறார்கள். “கற்பனையுலகக் கனவுகாணல்” காலம் போய்விட்டது. மாறாக, “இது பழைய கேள்விகளுக்கான பழைய பதில்கள் குறித்து நாம் கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, உழைக்கும் மக்கள் இப்போது கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விகள் குறித்து கவலைப்படுவதற்கான நேரமாகும்.” இது லெனின், ட்ரொட்ஸ்கியின் காலமல்லவாம், மாறாக... சாண்டர்ஸ், கோர்பினின் காலமாம்! ஓய்ந்து போன சீர்திருத்தவாதத்தின் இந்த இரண்டு பரிதாபகரமான பிரதிநிதிகள் “உலகத்தை மாற்றுவதில் குறியாக இருக்கின்ற கோடிக்கணக்கான மக்களின்” உண்மையான குரல்களாக பாராட்டப்படுகின்றனர். அமெரிக்க ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய இராச்சிய தொழிற் கட்சி ஆகிய உலகின் மிகப் பிற்போக்கான முதலாளித்துவ-ஏகாதிபத்தியக் கட்சிகள் இரண்டைக் காப்பாற்றுவதில் “குறியாக இருக்கின்ற” இரண்டு மனிதர்களின் தலைமையில் இந்த புரட்சிகர இலட்சியம் எப்படி சாதிக்கப்படும் என்பதை கில்பாட்ரிக்கும் உஸ்மானியும் விளக்கத் தவறுகிறார்கள்.
* * * *
கடந்த பன்னிரண்டு மாதங்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது 1917 இன் நிகழ்வுகளுடனும் போல்ஷிவிசத்தின் புரட்சிகர சர்வதேச வேலைத்திட்டத்துடனுமான அதன் ஆழமான வரலாற்று மற்றும் அரசியல் இனம்காணலை வெளிப்படுத்துகின்றதான ஒரு விதத்தில் அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டை அனுசரித்திருக்கிறது. ரஷ்யாவுக்குள்ளும் சரி சர்வதேச அளவிலும் சரி அந்த புரட்சிகர ஆண்டின் முக்கிய அரசியல், சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளை தேடிப் பின்செல்கின்ற 1917 ஆம் ஆண்டின் ஒரு விரிவான வாராந்திர நிகழ்வுப் பட்டியலை உலக சோசலிச வலைத் தளத்தில் பதிவிட்டதும் எங்கள் அனுசரிப்பு நிகழ்வில் இடம்பெற்றிருந்தது. 1917 ஆம் ஆண்டின் முக்கிய அரசியல், தத்துவார்த்த மோதல்கள் மீது கவனம்குவித்த அதேநேரத்தில், ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் புரட்சிகர இயக்கம் கட்டவிழ்ந்த அந்த சமூக மற்றும் புத்திஜீவித சூழலது ஒரு உணர்வை வழங்குவதற்கும் அது முனைந்தது. 1917 இன் பிப்ரவரி மற்றும் அக்டோபர் புரட்சிகளில் போல்ஷ்விக் கட்சி முகம்கொடுத்த தத்துவம், வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு குறித்த இன்றியமையாத பிரச்சினைகளை ஆய்வுசெய்தும் விளக்கியும் ஒன்பது விரிவுரைகளையும் அனைத்துலகக் குழு ஒலிபரப்பியது. இறுதியாய், இந்த ஆண்டின் இலையுதிர்பருவத்தில், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆசிய-பசிபிக்கில் அனைத்துலகக் குழுவுடன் இணைப்பு கொண்ட அரசியல் கட்சிகள், அக்டோபர் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் படிப்பினைகள் குறித்த பொதுக்கூட்ட விரிவுரைகளுக்கும் ஏற்பாடு செய்தன, இதில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் கணிசமாய் பங்கெடுத்தனர்.
அனைத்துலகக் குழுவின் நூற்றாண்டு நிகழ்வு அனுசரிப்பின் ஒவ்வொரு அம்சமும் ஒரு புரட்சிகர மார்க்சிச முன்னோக்கை சமரசமற்றுப் பாதுகாப்பதில் வேரூன்றியதாக இருந்தது. அவற்றில் பின்வரும் அத்தியாவசிய கருத்தாக்கங்களும் அடங்கும்.
1) முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கான உருமாற்றத்தின் ஒரு வரலாற்றுக் காலகட்டமும், இன்றைய வரலாற்றுக் காலகட்டத்தின் வரையறை வரையும் அது தொடர்ந்து வருகின்ற அக்டோபர் புரட்சியானது உலக சோசலிசப் புரட்சியின் சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறித்தது. 1917 இல் தொழிலாளர்களது’ அதிகாரம் ஸ்தாபிக்கப்பட்டதும், அதனையடுத்து 1922 இல் சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டதும் அக்டோபர் புரட்சியின் பிரம்மாண்ட சாதனைகளாய் இருந்தன. சோவியத் அதிகாரத்தின் ஸ்தாபகமும் அதனைப் பாதுகாத்ததும் எத்தனை முக்கியமானதாக இருந்தபோதிலும், அது உலக சோசலிசப் புரட்சியில் ஒரேயொரு அத்தியாயம் மட்டுமே. ஸ்ராலினிசத்தின் அடிப்படைக் காட்டிக்கொடுப்பாகவும், ரஷ்ய மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான அதன் அத்தனை குற்றங்களுக்கும் மூலவளமாக இருந்தது, உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தை அது மறுதலித்ததும் போல்ஷிவிசத்தை ஒரு தேசிய அரசைக் கட்டியெழுப்பும் வேலையாக அது திரித்ததுமே ஆகும். 1924 இல் ஸ்ராலின் மற்றும் புக்காரினால் அறிவிக்கப்பட்ட “தனியொரு நாட்டில் சோசலிசம்” வேலைத்திட்டமானது லெனின் ஏப்ரலில் ரஷ்யாவுக்குத் திரும்பியதும் எதற்கு எதிராக சமரசமற்றுப் போராடினாரோ, 1917 பிப்ரவரி புரட்சிக்கு உடனடிப் பிந்தைய காலத்தில் ஸ்ராலின் மற்றும் காமனேவால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த அந்த தேசிய-ஜனநாயக நோக்குநிலைக்கான ஒருமறு உயிர்கொடுப்பாக இருந்தது.
2) ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தினால் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படுவதில் உச்சகட்டத்தை அடைந்த 1917 இன் நிகழ்வுகள், 1905 புரட்சியின் பின்னர் லியோன் ட்ரொட்ஸ்கியால் எடுத்துரைக்கப்பட்டிருந்த நிரந்தரப் புரட்சித் தத்துவ முன்னோக்கை நிரூபணம் செய்தது. ட்ரொட்ஸ்கி முன்கணித்திருந்ததைப் போலவே, பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கிவீசி சோசலிசக் கொள்கைகளை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே புரட்சியின் ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுவது சாத்தியமாயிருந்தது.
3) அக்டோபர் புரட்சியின் வெற்றியானது ஒரு மார்க்சிச முன்னணிப்படைக் கட்சியின் அவசியத்தை விளங்கப்படுத்தியது. அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராகவும் மெய்யியல் சடவாதத்தின் தத்துவார்த்த திரிப்புகளின் செல்வாக்கிற்கு எதிராகவும் லெனினால் நடத்தப்பட்ட நெடிய போராட்டம் இல்லையென்றால், 1917 இல் ரஷ்யாவில் வெடித்த பாரிய தன்னெழுச்சியான இயக்கத்திற்கு அரசியல் மற்றும் அமைப்புரீதியான வழிகாட்டலை வழங்க அத்தியாவசியமாக இருந்த மிகவும் நனவான மார்க்சிசப் புரட்சியாளர் காரியாளர்கள் தொழிலாள வர்க்கத்தில் இருந்திருக்க மாட்டார்கள்.
4) புரட்சிகர மார்க்சிச கட்சியின் அவசியம், போல்ஷ்விக்குகளினால் வழங்கப்பட்ட தலைமையின் மூலமாக 1917 இல் சாதகமானவிதத்தில் ஊர்ஜிதப்படலைக் கண்டதென்றால், அடுத்துவந்த தசாப்தங்களில் தொழிலாள வர்க்கம் பெற்ற தோல்விகளில் அது எதிர்மறையானவிதத்தில் ஊர்ஜிதப்படலைக் கண்டது. முதலாளித்துவம் இருபதாம் நூற்றாண்டில் தப்பிப்பிழைத்தது என்றால் புரட்சிகர சூழ்நிலைகளோ சந்தர்ப்பங்களோ இல்லாத காரணத்தால் அல்ல, தொழிலாள வர்க்கத்தின் அதிகாரத்துவ கட்டுப்பாட்டிலான கட்சிகளது தலைமைகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளது காட்டிக்கொடுப்புகளின் காரணத்தால் தான்.
5) நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியதைப் போல, தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியைத் தீர்ப்பதே புரட்சிகர சோசலிச இயக்கம் முகம்கொடுக்கின்ற மாபெரும் வரலாற்றுப் பணியாக இருக்கிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 2017 இல் அது நடத்தியிருக்கும் தத்துவார்த்த மற்றும் அரசியல் வேலைகளை பெருமிதத்துடன் திரும்பிப் பார்ப்பதற்கான அத்தனை உரிமைகளையும் கொண்டிருக்கிறது. நாள்தோறுமான உலக சோசலிச வலைத் தளத்தின் வெளியீட்டையும் அது பராமரித்தது என்ற உண்மையைக் கொண்டு பார்க்கும்போது அரசியல் மற்றும் தத்துவார்த்தக் கல்வியூட்டலின் இந்த இலட்சியநோக்குடனான வேலைத்திட்டத்தை நடத்துவதற்கான அதன் திறன் மேலும் குறிப்பிடத்தக்கதாக ஆகிறது. உலகில் ஒரே புரட்சிகர மார்க்சிச கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கணிசமாக வலுப்பெற்று வருவதற்கு இந்த சாதனைகள் சாட்சியமளிக்கின்றன.
ஆயினும் கடந்தகால சாதனைகள் குறித்த பெருமிதம் மெத்தனமான சுய-திருப்தி அல்ல. 2018 ஆம் ஆண்டின் மிக முக்கியமான அரசியல் அம்சமாக இருக்கப் போகும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சிக்கான ஒரு அத்தியாவசியத் தயாரிப்பாகவே கடந்த ஆண்டின் அத்தனை கல்வியூட்டும் வேலைகளையும் அனைத்துலகக் குழு காண்கிறது.