Print Version|Feedback
US and India use Indian Ocean Conference to reinforce their strategic interests
அமெரிக்காவும் இந்தியாவும் தங்கள் மூலோபாய நலன்களை வலுப்படுத்த இந்திய பெருங்கடல் மாநாட்டைப் பயன்படுத்துகின்றன
By Pradeep Ramanayake and K. Ratnayake
8 September 2017
கொழும்பில் கடந்த வாரம் நடந்த இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் (IOC) விளம்பரப்படுத்தப்பட்ட கருப்பொருள் "சமாதானம், முன்னேற்றம் மற்றும் சுபீட்சம்" ஆகும். ஆனால், இந்த இரண்டு நாள் நிகழ்வுக்கும் அத்தகைய அபிலாஷைகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. வாஷிங்டனும் புது தில்லியும் இந்த பிராந்தியத்தில் கடற்படை நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் மூலோபாய நலன்களை வலியுறுத்துவதற்குமான தமது திட்டங்களை வெளிப்படுத்துவதற்காக இந்த நிகழ்வை பயன்படுத்திக்கொண்டன. அவர்கள் சீனாவைப் பெயர்க் குறிக்காவிட்டாலும், இந்த இராணுவ கட்டியெழுப்பலின் இலக்கு அதுவே.
சிங்கப்பூரின் சர்வதேச கற்கைகளுக்கான ராஜராட்னம் பள்ளி மற்றும் ஒரு கொழும்பு ஆராய்ச்சி மையமான அடிப்படைக் கல்விகளுக்கான தேசிய நிறுவனத்துடனும் இணைந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான சிந்தனைக் குழாமான இந்திய அறக்கட்டளையால் இந்த மாநாடு நடத்தப்பட்டது.
பிரதான அமெரிக்க பேச்சாளர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பதில் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் ஆவார். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை தாங்கினர். ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன், ஜப்பான், இந்தோனேசியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சிங்கப்பூர், சீஷெல்ஸ், மொரிஷியஸ், மலேசியா மற்றும் வியட்நாம் உட்பட சுமார் 35 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சீனா மற்றும் பாக்கிஸ்தானும் குறைந்த பிரதிநிதிகளை அனுப்பின.
ஒருபுறம் அமெரிக்காவும் இந்தியாவும், மறு புறம் சீனாவும் ஏனைய நாடுகளுக்கும் இடையே பூகோள-அரசியல் பதட்டங்கள் அதிகரித்து வருவதன் பின்னணியிலே இந்த நிகழ்வு இடம்பெற்றது.
ட்ரம்ப் நிர்வாகமானது வட கொரியாவின் அணுசக்தி சோதனைகளை இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அச்சுறுத்துவதற்கும் மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கும் மற்றும் தென் கொரியாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் பயன்படுத்துகிறது. சீனா மற்றும் ரஷ்யாவை வடகொரியாவிற்கு உதவுவதாக வாஷிங்டன் குற்றம் சாட்டுவதானது, தனது பூகோள மேலாதிக்கத்தை வலியுறுத்தும் அமெரிக்க முயற்சிகளின் இறுதி இலக்குகள் அவையே என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. "கடற் போக்குவரத்து சுதந்திரத்தை" பாதுகாக்கும் போலியான சாக்குப்போக்குடன், தென் சீனக் கடலுக்கு பென்டகன் கடற்படை போர்க்கப்பல்களை அனுப்பிக்கொண்டு, பெய்ஜிங்கின் பிராந்திய உரிமை கோரல்களை சவால் செய்வதுடன் அணு ஆயுதப் போரை விளைவிக்கும் ஆபத்தான பதட்டங்களை தூண்டிவிடுகிறது.
இந்தியாவும் சீனாவும் பரஸ்பர எல்லைகளில் நீண்ட காலமாக பிராந்திய பூசல்களை கொண்டுள்ளதுடன் வளங்கள் மற்றும் சந்தைகளுக்கான போராட்டத்தில் போட்டியாளர்களாக உள்ளன. சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் உந்துதலின் ஒரு பகுதியாக, மோடி அரசாங்கம் இந்தியாவை ஒரு "முன்னிலை அரசாக" மாற்றிக்கொண்டிருக்கிறது.
ஆண்டுதோறும் உலக கொள்கலன் கப்பல் போக்குவரத்தில் அரைப் பகுதியும், மொத்த சரக்கு போக்குவரத்தில் மூன்றில் ஒரு பகுதியும், எண்ணெய் ஏற்றுமதிகளில் மூன்றில் இரண்டு பங்கும் இந்தியப் பெருங்கடலின் வழியாவே இடம்பெறுகின்றன. சீனாவிற்கு இந்த வழிகள் இன்றியமையாதவை. எரிசக்தி உட்பட அதன் மூலப்பொருட்களின் பெரும்பகுதி ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. சீனாவுடன் இராணுவ மோதல் ஏற்பட்டால், அமெரிக்க மற்றும் இந்திய கடற்படை, சீன கப்பல்களை தடுக்க முயற்சிக்கும்.
இப்பிராந்தியத்தில் வாஷிங்டனின் மூலோபாய நலன்களை வலியுறுத்துகையில் வெல்ஸ் பிரகடனம் செய்ததாவது: "அமெரிக்காவானது ஒரு இந்து-பசிபிக் சக்தியாகும் –தொடர்ந்தும் அப்படி இருக்கும்". இந்திய பெருங்கடலில் "பாதுகாப்பு அச்சுறுத்தல்களை" எதிர்த்து நிற்பதற்கும், "கடற் போக்குவரத்து சுதந்திரம் உட்பட சர்வதேச தரங்களை ஆதரிக்கவும்" "இந்திய பெருங்கடலுக்கான பொதுவான நோக்கை" அமைக்க அவர் அழைப்பு விடுத்தார்.
"சர்வதேச தரநிலைகள்," "கடற் போக்குவரத்து சுதந்திரம்" "விதிகள் அடிப்படையிலான அமைப்புக்கள்" போன்ற சொற்றொடர்கள், சீனாவிற்கு எதிராக வாஷிங்டனால் பயன்படுத்தப்படும் பாசாங்குத்தனமான மந்திரங்கள் ஆகும்.
அமெரிக்காவால் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை சுட்டிக் காட்டி, ஜூலை மாதத்தில் அமெரிக்க-இந்தியா-ஜப்பான் நடத்திய மலபார் கடற்படைப் பயிற்சியை பற்றி பிரதிநிதிகளுக்கு நினைவுபடுத்திய வெல்ஸ், "பத்தாயிரம் சிப்பாய்களுக்கும் மேல் பங்குபற்றிய இற்றைக்கு மிகப்பெரிய மற்றும் மிக ஒருங்கிணைந்த" பயிற்சியாக அதை சித்தரித்தார். "கூட்டு திறனைக் கட்டியெழுப்புதல் மற்றும் பயிற்சிகளும், மேலும் மேலும் சிக்கலானதாகி வரும் இந்த பிராந்தியத்தில் பாதுகாப்பு சுமையை பகிர்ந்து கொள்ள உதவும்," என அவர் மாநாட்டில் தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய கடற்படைக்கும்-கடற்படைக்குமான உறவையும் அக்டோபரில் நடத்தவுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான "முதலாவது கடற்படை பயிற்சியையும்" வெல்ஸ் அறிவித்தார். சீனாவிற்கு எதிரான அமெரிக்க போரில் இலங்கையை முழுமையாக ஒருங்கிணைக்கும் வாஷிங்டனின் முயற்சிகளில் இவை சமீபத்தியவை.
அமெரிக்கா 2015ல் இந்திய ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ பெய்ஜிங்குடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளின் காரணமாக அவரை அகற்றி, அவருக்கு பதிலாக மைத்திரிபால சிறிசேனவை நியமிப்பதற்கும் உதவியது.
ஐ.ஓ.சி. கூட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், இலங்கை கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, "கடற்போக்குவரத்து சுதந்திரத்திற்கு" தனது அர்ப்பணிப்பை அறிவித்தார். இலங்கை கடற்படையின் எதிர்கால பாத்திரம், "ஏடன் வளைகுடா மற்றும் மலாக்கா ஜலசந்திக்கும் இடையில் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பதே," என அவர் அறிவித்தார். இரு இடங்களும் சீனக் கப்பல் போக்குவரத்தின் மூலோபாய வெடிபுள்ளிகள் ஆகும்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள கடல்வழிப் பாதைகள் உலகில் பரபரப்பான மற்றும் மிகவும் சிக்கலான கடல்வழி போக்குவரத்து இணைப்புகளாகும் என்று இந்திய அமைச்சர் ஸ்வராஜ் மாநாட்டில் தெரிவித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் 90 சதவிகிதமும் அதன் அனைத்து எண்ணெய் இறக்குமதிகளும் இந்த வழிகளையே பயன்படுத்துகின்றன. "இந்திய பெருங்கடலில் பிராந்தியத்தில் உள்ள முக்கிய மையமாக இந்தியாவிற்கு இந்த பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று அவர் அறிவித்தார்.
இந்தியாவின் மூலோபாயம், "இந்தியப் பெருங்கடலிலும் அதற்கு அப்பாலும் கடலோர அரசுகளுக்கு மத்தியில் துறைமுக இணைப்புகளை விரிவுபடுத்துவதையும் உள்ளடக்கியுள்ளது," என்று ஸ்வராஜ் தொடர்ந்தார். இலங்கை, மாலைதீவு, மொரிஷியஸ் மற்றும் சீசெல்ஸ் போன்ற நாடுகளுடன் இந்தியா இத்தகைய முன்னேற்றங்களை விரிவுபடுத்துகிறது. கொல்கத்தாவின் கிழக்கு இந்திய துறைமுகத்துடன் மியான்மரில் உள்ள சிட்வெ துறைமுகத்தை இணைக்கும் கலடன் போக்குவரத்து திட்டம் மற்றும் தாய்லாந்துக்கான முத்தரப்பு நெடுஞ்சாலை, மற்றும் ஈரானில் உள்ள சபாஹார் துறைமுகத் திட்டம் உட்பட ஏனைய திட்டங்களை பற்றி ஸ்வராஜ் சுட்டிக்காட்டினார்.
மோடி அரசாங்கத்தின் இராணுவ கட்டமைப்பு அமெரிக்காவால் ஊக்குவிக்கப்பட்டது. அமெரிக்கா, இந்தியாவின் கடும்-பகையாளிகளான பாக்கிஸ்தான் மற்றும் சீனாவுக்கும் கேடு விளைவிக்கும் பல்வேறு மூலோபாய நலன்களை இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறது. சர்வதேச அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தில் இந்தியாவிற்கு ஒரு சிறப்பு நிலைமையை நிறுவுவதும், மேம்படுத்தப்பட்ட அமெரிக்க ஆயுதக் கருவிகளை பெற அனுமதிப்பதும் இதில் அடங்கும். இந்திய துறைமுகங்களில் அமெரிக்க கடற்படை கப்பல்கள் நிறுத்தப்படுவதற்கும் பழுது பார்க்கவும் மற்றும் பராமரிப்பிற்காகவும் இந்தியா அனுமதி வழங்கியதன் மூலம் பிரதியுபகாரம் செய்துள்ளது.
"ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கையின் பண்பாட்டை உறுதிப்படுத்துகின்ற ஒரு பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவது முக்கியம்," என ஸ்வராஜ் மாநாட்டில் தெரிவித்தார். சமீபத்தில் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு பெரும்பகுதி பங்குகளை சீனா கையகப்படுத்தியதை சுட்டிக் காட்டி கொழும்பு ஊடகங்கள் அவரது கருத்துக்கு குறுக்கிட்டிருந்தன. அம்பாந்தோட்டை ஒப்பந்தத்தை தொடர்ந்து, துணை கண்டத்தையும் இந்தியப் பெருங்கடலையும் தனது செல்வாக்கு மண்டலமாகக் கருதும் இந்தியா, வெளிவிவகாரச் செயலர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை, புது தில்லியின் கவலையை தெரிவிக்க இலங்கைக்கு அனுப்பி வைத்தது.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.ஓ.சி. மாநாட்டில் கூறியதாவது: "இலங்கையின் முக்கிய கடல் துறைமுகங்களை, குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான தீர்மானத்தை பற்றி நான் குறிப்பிடுகிறேன். சிலர் அதை இராணுவத் தளமாக சித்தரித்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரசாங்கமானது எந்தவொரு நாட்டுடனும் இராணுவக் கூட்டுக்களில் ஈடுபடவில்லை அல்லது வெளிநாடுகளுக்கு இலங்கை தளங்களை அனுமதிக்கவில்லை என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன்."
விக்கிரமசிங்கவின் கருத்துக்கள், புது தில்லியை மட்டுமன்றி, எல்லாவற்றுக்கும் மேலாக வாஷிங்டன், டோக்கியோ மற்றும் சீனாவிற்கு எதிராக அமெரிக்க தலைமையிலான பொருளாதார மற்றும் இராணுவ கட்டமைப்பில் ஈடுபட்டுள்ள அனைவரையும் சமாதானப்படுத்த எடுத்த முயற்சியாகும். ஐ.ஓ.சி. ஒன்று கூடலானது இந்த தயாரிப்புகளின் உயர்ந்த கட்டத்தின் மற்றொரு அறிகுறியாகும்.