Print Version|Feedback
Sri Lankan president sacks justice minister
இலங்கை ஜனாதிபதி நீதி அமைச்சரை பதவி நீக்கம் செய்தார்
By K.Ratnayake
25 August 2017
"ஐக்கிய அரசாங்கத்தின்" பிரதான பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) கோரிக்கைகளை தொடர்ந்து புதனன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜேதாச இராஜபக்ஷவைவை பதவி நீக்கம் செய்தார். முன்னணி ஐ.தே.க. உறுப்பினரான விஜேதாச, அமைச்சரவை பதவிக்கு முதலில் அவரது கட்சியினாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த வாரம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. செயற் குழுவானது விஜேதாசவின் அகற்றலுக்கு அழைப்பு விடுத்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அவர் புதிய இலஞ்ச மற்றும் ஊழல் சட்டங்களை அறிமுகப்படுத்த தவறியதாகவும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யவும் தாமதித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் அவரது ஆட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதை தாமதப்படுத்துவதாக முன்னணி அரசாங்க உறுப்பினர்களால் விஜேதாச பகிரங்கமாக கண்டனம் செய்யப்பட்டார்.
விஜேதாச இராஜபக்ஷவின் பதவி நீக்கமானது சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் ஊழல் எதிர்ப்பாளர்களாக காட்டிக்கொள்ளவும் மஹிந்த இராஜபக்ஷ மற்றும் பிற எதிர்ப்பாளர்களின் ஆதரவாளர்களை கீழறுக்கவும் மேற்கொள்ளும் திட்டமிட்ட முயற்சியாகும். "ஊழலை எதிர்த்து போரிடும்" போலி பதாகையின் கீழ், அரசாங்கம் தனது கையை பலப்படுத்த முயலும் அதேவேளை, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது கடுமையான சமூக சிக்கன நடவடிக்கைகளை சுமத்துகிறது.
விஜேதாச இராஜபக்ஷ, முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஆனால், 2015 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலில் சிறிசேனவின் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க ஐ.தே.க.யில் சேர்ந்தார். இந்த தேர்தலில் அமெரிக்கத் தலைமையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையின் பாகமாகவே இந்த அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் பாராளுமன்ற தேர்தல்களுக்குப் பின்னர் அவர் நீதி மற்றும் பெளத்த விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். விஜேதாச, பிற்போக்கு பௌத்த உயர் மட்டத்தினருடன் நெருக்கமான தொடர்புகளையும் பொது பாலசேன (பௌத்த சேனை), இராவணா பாலகாயா (இராவணன் படை) போன்ற பாசிச குழுக்கள் மீது அனுதாபத்தையும் கொண்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கான அரசாங்கத்தின் முடிவை விஜேதாச பகிரங்கமாக விமர்சித்தமை தொடர்பாகவும் ஐ.தே.க.யின் அரசியல் உயர்மட்டத்தினர் கோபமடைந்துள்ளனர். ஒப்பந்தத்தை முதலில் ஆதரித்த விஜேதாச, பின்னர் மனதை மாற்றிக்கொண்டு, அரசாங்கம் வெளி நாடுகளுக்கு பொது சொத்துக்களை விற்பதாகவும், ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கு தான் பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
அண்மையில், பாரிய கடன் முறி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நபருடன் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவகாரத்தினால் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க கட்டாயத்தின் பேரில் இராஜினாமா செய்ததோடு, அது அரசியல் ரீதியாக மதிப்பிழந்த அரசாங்கத்தின் நெருக்கடியை ஆழப்படுத்தியுள்ளது. மஹிந்த இராஜபக்ஷவுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் எதிரான ஊழல் வழக்குகளை விஜிதசேவின் உதவியுடன் சட்டமா அதிபர் திணைக்களம் தாமதப்படுத்துகிறது என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன உட்பட முன்னணி ஐ.தே.க உறுப்பினர்கள் கூறுகின்றனர். விஜேதாச, இராஜபக்ஷ தலைமையிலான எதிர்ப்புக் குழுவோடு தொடர்பு வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த ஆழ்ந்த நெருக்கடிக்கு மத்தியில், சிறிசேன தலைமையில் ஆகஸ்ட் 15 அன்று அமைச்சரவை கூட்டம் கூடி, முன்னாள் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிரான "ஊழல் வழக்குகளை" எப்படி "துரிதப்படுத்துவது" என்பது பற்றி கலந்துரையாடியுள்ளது. அமைச்சரவைக் கூட்டம், ஊழல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்காக வெளிப்படையாகவே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு "மேல் நீதிமன்றத்தை" ஸ்தாபிக்கும் சாத்தியத்தை பற்றி கலந்துரையாடியது.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, 87 ஊழல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் 12 விசாரணைகளுக்கு மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். உயர் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசியலமைப்பை திருத்த வேண்டிய அவசியமில்லை என சேனாரட்ன மேலும் கூறினார். "சட்ட மா அதிபர் மற்றும் பிரதம நீதியரசராலும் இதை ஏற்றுக் கொள்ள முடியுமானால், அதை செய்ய முடியும்," என்று அவர் அறிவித்தார். "இது திருடர்கள் எப்போது பிடிபடுவர் என மக்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்த்துவிடும்."
இந்த நடவடிக்கைகளின் அரசியலமைப்புத் தன்மை பற்றிய சேனாரட்னவின் கூற்றுக்கள் தவறானவை –நீதித்துறைக்கும் சட்ட மா அதிபருக்கும் இந்த அதிகாரங்கள் ஒருபோதும் இருந்ததில்லை. அமைச்சரவையின் ஜனநாயக-விரோத நடவடிக்கைகள், அரசாங்கத்தின் அரசியல் தேவைகளுக்காக, நீதித்துறையை நெருக்கமான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைவதாகும்.
ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை முடுக்கிவிட முயற்சிக்கும் அரசாங்கம், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோடாபய இராஜபக்ஷ மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் உட்பட முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் அவரது குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நகர்வது போல் தோன்றுகிறது.
இராஜபக்ஷ அரசாங்கத்தை நேரடியாக சவால் செய்து, ஆட்சியை கவிழ்க்க அச்சுறுத்தியுள்ளார். சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் இலாபம் பெறுவதன் பேரில், இராஜபக்ஷவும் ஸ்ரீ.ல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளின் பாதுகாப்பாளர்களாக காட்டிக்கொள்கின்றனர். சிறிசேனவை ஆதரிக்குமாறு ஸ்ரீ.ல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர்களை ஐ.தே.க-ஸ்ரீ.ல.சு.க.வின் "ஐக்கிய அரசாங்கத்தில்" இருந்து விலக்கிக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
பல போலி-இடது குழுக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் புத்திஜீவிகளின் உதவியுடன் 2015ல் சிறிசேன பதவிக்கு வந்தார். இராஜபக்ஷ அரசாங்கத்தின் தமிழர்-விரோத யுத்தத்திற்கு எதிராகவும், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் நிலவிய வெகுஜன எதிர்ப்பை சுரண்டிக்கொண்டு, இந்த அடுக்கு சிறிசேன "நல்லாட்சியை" ஸ்தாபிப்பதோடு, வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவார் என கூறிக்கொண்டது.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குள், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை ஈவிரக்கமின்றி அமுல்படுத்துவதுடன் ஆர்ப்பாட்டம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்கள் மீது பொலிஸ் மற்றும் இராணுவத்தை கட்டவிழ்த்துவிடுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு கொள்கையை உறுதியாக மாற்றிக்கொண்டிருக்கிறது. சிறிசேனவை அதிகாரத்துக்கு கொண்டுவந்த வாஷிங்டன் திட்டமிட்ட ஆட்சி மாற்றத்தில், பெய்ஜிங்குடனான கொழும்பின் நெருக்கமான உறவுகளை முடிவுக்கு கொண்டுவந்து, முழுக்க முழுக்க சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் பாதையில் இலங்கை கொண்டுவரப்பட்டது.
அரசாங்கத்தின் "ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை" ஊடகங்கள் முன்னிலைப்படுத்தி வருகின்றன. கடந்த வார இறுதியில் சண்டே டைம்ஸ் பத்திரிகை, "பெரிய ஊழல் வழக்குகள்: ஜனாதிபதியின் சீற்றத்தைத் தொடர்ந்து, நீதிச் சக்கரங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன" என்று தலைப்பிட்டு நீண்ட பத்தியை வெளியிட்டிருந்தது. இந்த கட்டுரையானது ஊழல் வழக்கு தாமதங்கள் பற்றிய சிறிசேனவின் முந்தைய குறிப்புகளைப் பற்றி சுட்டிக் காட்டியது. ஊடகத்தின் பிற பிரிவுகள், விஜேதாச அகற்றப்படுவதை பற்றி பரபரப்பு செய்திகளை வெளியிட்ட அதே நேரத்தில், அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மூடிமறைக்கின்றன.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் முக்கிய இலக்கு, பெருகிய முறையில் போராட்டங்களுக்குள் வருகின்ற தொழிலாள வர்க்கமும் ஏழைகளுமே ஆகும். கடந்த வாரம், ஆயிரக்கணக்கான கிராமப்புற ஏழைகள் சமுர்த்தி திட்டத்தில் வெட்டுக்களுக்கு எதிராக, ஒரு நிர்வாக அலுவலகத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த மட்டுப்படுத்தப்பட்ட நலன்புரி கொடுப்பனவில் சர்வதேச நாணய நிதியம் வெட்டுக்களை கோரியுள்ளது. இந்த வெகுஜன எதிர்ப்பை முகங்கொடுத்த, சமூக அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, நலன்புரி வெட்டுக்கள் கைவிடப்படும் என்று அறிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.
இன்று அரசாங்கம் ஒரு புதிய உள்நாட்டு வருவாய் மசோதாவை முன்வைக்கும். இது தொழிலாளர்கள், ஓய்வு பெற்றவர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் சிறிய உற்பத்தியாளர்கள் உட்பட வெகுஜனங்களின் பரந்த பிரிவினரிடையே வரிகளை சுமத்தும் அதேவேளை, பெருவணிகத்திற்கு வரிகளை குறைக்கவுள்ளது. தொழிலாளர்கள் மத்தியில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்த தாக்குதல்களை அமுல்படுத்துவதில் போலி-இடது நவசமசமாஜக் கட்சி (ந.ச.ச.க.) மற்றும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் பிரஜைகள் சக்தி மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட ஏனைய குழுக்களின் ஆதரவு அரசாங்கத்துக்கு கிடைக்கின்றது. அண்மையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர், இந்த அமைப்புகள் கொழும்பில் பொதுக் கூட்டமொன்றை நடத்தி, விசேட ஊழல் எதிர்ப்பு நீதிமன்றங்களை நிறுவுவதற்கு அழைப்புவிடுத்தன.
கூட்டத்தில் உரையாற்றிய அரசாங்கத்தை ஆதரிக்கும் ஒரு பெளத்த துறவி தம்பர அமில தெரிவித்ததாவது: "சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து, இரவு பகலாக இராஜபக்ஷவின் வழக்குகளை விசாரித்து அவர்களை சிறையில் அடையுங்கள்." நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, பிரச்சாரத்துக்கு தமது ஊக்குவிப்பை வெளிப்படுத்த ஐந்து அரசாங்க அமைச்சர்கள் கூட்டத்தில் பங்குபற்றினர் என பின்னர் ஊடகங்களுக்கு பெருமை பாராட்டிக்கொண்டார்.
கடந்த மாதம், இதே குழுக்கள், கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களையும் எரிபொருள் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை அடக்குவதற்கு இராணுவத்தை அனுப்பியதையும் ஆதரித்தன.
ஆழமடைந்துவரும் நிதிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அரசாங்கம், சமூக சிக்கன நடவடிக்கைகளை திணிக்கவும் எதேச்சதிகார வடிவிலான ஆட்சிக்கு சட்ட வரம்புகளை உருவாக்கவும் உதவுவதற்காக போலி இடதுகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் பயன்படுத்தி வருகின்றது. இதுவே அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தின் உள்ளடக்கம் ஆகும்.