Print Version|Feedback
As US threatens war against North Korea, China appeals to European powers
வட கொரியாவிற்கு எதிரான போர் குறித்து அமெரிக்கா அச்சுறுத்துகையில், சீனா ஐரோப்பிய சக்திகளிடம் முறையீடு செய்கின்றது
By Alex Lantier
9 September 2017
கொரிய தீபகற்பத்தில் உருவாகியிருக்கும் அமெரிக்க இராணுவ விரிவாக்கத்தை சீனா நேற்று எதிர்த்ததுடன், ஐரோப்பிய மத்தியஸ்தத்தை நாடியது. வட கொரியா அதன் அணுஆயுத சோதனைகளை நடத்திய பின்னர், சீன ஜனாதிபதி ஜி ஜன்பிங் ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கேல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஆகிய இருவரையும் தொடர்பு கொண்டு அதற்கு எதிரான பொருளாதாரத் தடைகளில் ஒருங்கிணையுமாறு பேசியதோடு, மேலும் இந்த நெருக்கடி ஒட்டுமொத்த உலக போராக வெடிப்பதில் இருந்து அதனை தடுக்கவும் அவர்களிடம் கோரினார்.
ரஷ்யா மற்றும் சீனாவிற்குள் இலக்குகளை கண்காணிக்கவும், அடையாளம் காணவும், தாக்குதல் நடத்தவும் தென் கொரியாவில் அமெரிக்கா நிறுவும் THAAD ரேடார் மற்றும் ஏவுகணை அமைப்பை பயன்படுத்த முடியும் என்று கூறி பெய்ஜிங் அதனை முறையாக எதிர்க்கின்றது. “சீனா மற்றும் ஏனைய பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு நலன்களை மதிக்கவும், THAAD செயல்பாட்டை உடனடியாக நிறுத்தவும் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை நீக்கவும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை நான் கடுமையாக வலியுறுத்துகின்றேன்” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறினார்.
அவரது கருத்துக்கள் இராஜதந்திர வார்த்தையாடல்களாக இருந்தாலும், முக்கிய சக்திகளுக்கு இடையேயான நேரடி யுத்தத்திற்கு வழிவகுக்கும் ஒரு பெரிய அச்சுறுத்தலாகவே THAAD ஐ பெய்ஜிங் கருதுவதை ஜெங் முற்றிலும் தெளிவு படுத்தினார். சீன அரசு நடத்தும் Global Times பத்திரிகைக்கு பேசுகையில், வட கொரிய ஆட்சி ஞாயிறன்று நடத்திய ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை போன்று இதுவும் அபாயகரமானதாக இருந்ததாக கூறி ஷாங்காயின் ஃபுடான் பல்கலைக்கழகத்தின் ஜெங் ஜியோங் THAAD செயல்பாட்டை தாக்கினார்.
“இந்த செயல்பாடும் வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளின் இயல்பை ஒத்திருக்கும் நிலையில், கொரிய தீபகற்ப பிரச்சினையை தீர்க்க முடியாது, மாறாக ஏற்கனவே உள்ள குழப்பமான சூழ்நிலையை வெறுமனே அதிகரிக்கச் செய்யும் என்பதோடு, போருக்கு நெருக்கமாக தீபகற்பத்தை மேலும் உந்தச் செய்யும்,” என்று ஜெங் கூறினார். தீபகற்பத்தை அணுஆயுதமற்றதாக்குவதற்கு சீனா நிறைய முயற்சி செய்துள்ளது, மேலும் அமைதியான தீபகற்பத்தை பார்க்க அமெரிக்கா விரும்ப வில்லை, அது தான் அமெரிக்கா, ஏனெனில் இந்த பிராந்தியத்தில் மூலோபாய ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு தவிர்க்க முடியாததொரு காரணத்தை இந்த குழப்பமான சூழ்நிலை தான் அதற்கு வழங்குகின்றது” என்றும் கூறினார்.
வட கொரியா உடனான போர் குறித்து ட்ரம்பும், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளும் மீண்டும் அச்சுறுத்துகையில் சீனாவின் எதிர்ப்பு வெளிவந்தது. வியாழனன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ட்ரம்ப், “இராணுவ வழியில் செல்வதை நான் விரும்பவில்லை, ஆனால் அது நிச்சயமாக நடக்கக்கூடிய ஒன்றுதான்” என்று அறிவித்தார். பென்டகன் அதிகாரிகளும், வட கொரியாவிற்கு எதிராக இணைய தாக்குதல்களுக்கும், பிற நடவடிக்கைகளுக்கும் தயாரிப்பு செய்து வருவதாக கூறியுள்ளனர்.
குறிப்பாக, வளர்ந்து வரும் இராணுவ பதட்டங்களைக் கட்டுப்படுத்தவும், அமெரிக்க விரிவாக்கத்தை தடுக்கவும் வாஷிங்டனின் ஐரோப்பிய நட்பு நாடுகளின் ஆதரவைத் நாடுவது மற்றும் பெற்றுக் கொள்வதன் மூலம் பெய்ஜிங் எதிர்வினையாற்றியது.
கொரிய நெருக்கடி குறித்து விவாதிக்க மேர்க்கேலும் ஜியும் வியாழன் பிற்பகுதியில் தொலைபேசி அழைப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததாக ஜேர்மன் அதிபர் அலுவலகம் நேற்று அறிவித்தது. ஜியும் மேர்க்கேலும், “வட கொரியாவில் உள்ள தற்போதைய சூழ்நிலையால் மிகவும் கவலைகொண்டிருந்தனர் என்பதாக தெரிவித்து அதிபர் அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. [வட கொரிய அணுஆயுத சோதனை] முழு பிராந்தியத்திற்குமான அதிகளவு அபாயத்தையும், சர்வதேச சட்டத்தை மீறுவதையும் பிரதிபலிக்கின்றது. ….. இந்த நெருக்கடிக்கு ஒரு அமைதியான தீர்வை காணும் பொருட்டு வட கொரியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை வலுப்படுத்த இந்த இரு பேச்சாளர்களும் உடன்பட்டனர்.”
நேற்று, ஜி மக்ரோனை அழைத்து பேசியதுடன், தொடர்ந்து சீன தொலைக்காட்சியில் அவர்களது தொலைபேசி அழைப்பு பற்றி ஒரு அறிக்கையையும் வெளியிட்டனர். “ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஒரு நிரந்தர உறுப்பினராக பிரான்ஸ், நிலைமையை அமைதிப்படுத்துவதற்கும் பேச்சுவார்த்தையை மறுதொடக்கம் செய்வதற்கும் ஒரு ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகிக்கும் என்று சீனா நம்புவதாக” CCTV இல் ஜி தெரிவித்தார். “அமைதியான வழிமுறைகள், பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை நடத்துதல் போன்றவற்றினாலன்றி கொரிய நெருக்கடியை தீர்க்க முடியாது,” என்று ஜி கூறியதோடு, அவரது அரசாங்கம், “அணுஆயுதமற்ற கொரிய தீபகற்பத்தை” நாடுவதாகவும் சேர்த்து கூறினார்.
சீன அரசின் செய்தி ஊடகம், ஜியின் தொலைபேசி அழைப்புக்கு மக்ரோன் சாதகமாக விடையிறுத்ததாக தெரிவித்தது. சீனாவும், பிரான்ஸும் “பரந்த மூலோபாய பங்காளிகள்” என்று அவர் கூறினார். பிரான்ஸ், “இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையிலான சீனாவின் அமைதியான அணுகுமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது,” மேலும் “கொரிய தீபகற்ப அணுஆயுத பிரச்சினைக்கு ஒரு சரியான தீர்வுக்கு அழுத்தம் கொடுக்க சீனாவுடனான ஒத்துழைப்புக்கு” உறுதியளித்துள்ளது என்றும் அவர் சேர்த்து கூறினார்.
ஐரோப்பாவை நோக்கிய சீனாவின் முனைவு, மேலும் பேர்லின் மற்றும் பாரிஸ் ஆகியவற்றின் சாதகமான பதில் ஆகியவை அசாதாரணமான கூர்மையான இராணுவ பதட்டங்களையும், போர் அபாயத்தையும், அத்துடன் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மராபார்ந்த நெருக்கடியையும் பிரதிபலிக்கின்றன. அதிகரித்துவரும் அமெரிக்க-ஐரோப்பிய வர்த்தக அழுத்தங்களுக்கும் மற்றும், தங்கள் ஆயுதப் படைகளை கட்டமைக்க பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க செய்வதற்காக ஐரோப்பிய சக்திகள் மூலமான நகர்வுகளுக்கும் மத்தியில் முக்கிய ஐரோப்பிய சக்திகளுக்கும் வாஷிங்டனுக்கும் இடையேயான உறவுகள் ட்ரம்பின் தேர்வுக்குப் பின்னர் முறிந்துவிட்டன.
ட்ரம்ப் தனது 2016 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது இதனை வழக்கற்றுப்போனது என்று அறிவித்த பின்னர், வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையேயான 68 ஆண்டுகள் பூர்த்தியான நேட்டோ இராணுவக் கூட்டணி விரைவாக முறிந்துள்ளது. கொரிய நெருக்கடியின் போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிலைப்பாடு மீண்டும் மீண்டும் முரண்பட்டுள்ளது. ஏற்கனவே ஆகஸ்டில், “உலகம் முன்னெப்போதும் கண்டிராத நெருப்பையும், சீற்றத்தையும்” வட கொரியாவுடன் காணும் என்று ட்ரம்ப் அச்சுறுத்தியதற்கு பின்னர், “இந்த மோதல் குறித்து ஒரு இராணுவ தீர்வை நான் காணவில்லை” என்று மேர்க்கேல் பகிரங்கமாக பிரகடனம் செய்தார். கொரியாவில் போருக்காக தான் அமெரிக்க இராணுவம் “தயார்நிலையிலும், உசாராகவும் இருப்பதாக” அறிவித்ததன் மூலம் ட்ரம்ப் விடையிறுத்தார்.
இந்த வார தொடக்கத்தில், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், வட கொரியா மீதான மோதல்கள் உலகப் போராக உக்கிரமடையக்கூடுமென எச்சரித்தார். The National Interest இல், முன்னர் கொரியாவில் இருந்த ஒரு ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ அதிகாரியான டானியல் டேவிஸ் பிரசுரித்த ஒரு கட்டுரை அதிகாரிகளைப் பொறுத்த வரையில் கொரியாவில் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதற்கான வடிவமைப்பு ஒன்றை கொடுக்கின்றது.
“கொரிய தீபகற்பத்தின் நிலைமை இப்போது மிகப்பெரிய மற்றும் சாத்தியமான அணுஆயுத யுத்தத்தின் விளிம்பில் உள்ளது” என்று எச்சரிப்பதோடு, டேவிஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “இப்போது ஒரு போர் தொடங்கப்பட்டிருந்தால், அது விரைவில் எவரது கட்டுப்பாட்டையும் மீறக்கூடியதான ஒரு அணுஆயுத பரிமாற்றமாக வெடித்திருக்கும். இறப்பு விகிதமும் மில்லியன் கணக்கிற்கு விரைவாக ஏற்றம் கண்டிருக்கும். வட கொரியா இதுவரையிலும் அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பை தாக்கும் திறனை கொண்டிருக்கவில்லை என்றாலும், அமெரிக்க தாக்குதலின் விளைவிலான அணுஆயுதங்களின் எந்தவொரு பயன்பாடும் அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கான ஆழ்ந்த எதிர்மறையான விளைவுகளையே கொண்டிருக்கும்.”
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எச்.ஆர். மெக்மாஸ்டர் வட கொரியா உடனான ஒரு “தற்காப்பு போருக்கு” அழைப்பு விடுப்பதை மறைமுகமாக குறிப்பிட்டு, சீனாவுடனான போரை தொடங்கும் “தற்காப்பு போர்” அபாயங்களுக்கு ஆதரவாக டேவிஸ் பின்வருமாறு கூறினார்: “வட கொரியா ஒரு போரை தொடங்கியிருக்குமானால், சீனா அதற்கு உதவிக்கு வராது. இருப்பினும், வெளிப்புற சக்தி வட கொரியாவிற்கு எதிரானதொரு போரை தொடங்கியிருந்தால், பெய்ஜிங் பியோங்யாங்கின் உதவிக்கு வரும். இதனால், வட கொரியாவுக்கு எதிரான “தற்காப்பு போர்” என்றழைக்கப்படுவது சீனாவுடன் போரை சமன்படுத்துவதற்கான தனித்துவமான சாத்தியத்தைக் கொண்டுள்ளது.
பெய்ஜிங்கில் ஸ்ராலினிச வணிக செல்வந்த தட்டினருடன் இணைந்து செயல்படுவதான ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளிடம் அமெரிக்க போர் உந்துதலை எதிர்ப்பதற்கான பணியை தொழிலாள வர்க்கம் விட்டுவிட முடியாது.
வட கொரியாவுடனான அமெரிக்க மோதல் என்பது வட கொரியாவின் அண்டை நாடுகளான சீனா மற்றும் ரஷ்யாவுடனான ஒரு போராகவும் விரிவாக்கம் பெறும் என்று அஞ்சுகின்ற ஐரோப்பிய சக்திகளுக்கு, ஐரோப்பாவில் அமெரிக்க மற்றும் ரஷ்ய படைகள் இடையேயான போரையும் இது தவிர்க்க முடியாததாக்கும் என்பது நன்கு தெரியும். அவர்களது நாடுகளும் விரைவில் அழிந்துவிடும். அவர்கள் இரு பாதையிலான கொள்கையை தொடர்கின்றனர் என்பதோடு, வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் குறித்த அமெரிக்க கோரிக்கைகளை ஒப்புக்கொள்கின்றனர், ஆனால் அதே நேரத்தில் வாஷிங்டனுக்கு எதிரான சீனாவின் நிலைப்பாடு குறித்து வளர்ந்து வரும் அவர்களது ஆதரவையும் குறிப்பிடுகின்றனர்.
குறுகிய காலத்தில், வட கொரியாவை பொருளாதாரத் தடைகளைக் கொண்டு தனிமைப்படுத்த ஏதுவான வாஷிங்டனின் அழைப்புடன் யதேச்சையாக இந்த கொள்கை இதுவரை ஒத்துவரும் நிலையில், வட கொரியா மற்றும் பெரும் வல்லரசுகளுக்கு மத்தியிலான வளர்ந்து வரும் போர் அபாயத்தை மறைக்கவும் இது உதவுகின்றது. இருப்பினும், இன்னும் கூடுதலான வகையில் இந்த முயற்சி ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் சமாதான கொள்கையை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. முன்னாள் யூகோஸ்லாவியாவில் இருந்து லிபியா, சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து உருவான எண்ணற்ற அமெரிக்க தலைமையிலான போர்களில் பேர்லினுக்கும் பாரிசுக்கும் மட்டும் பங்கு இல்லை, என்றாலும் அவர்கள் அனைவரும் தங்களது இராணுவ எந்திரங்களை கட்டமைப்பதில் பில்லியன் கணக்கில் அதிகம் செலவிடுவதோடு, எப்பொழுதுமான அவர்களது சொந்த சுயாதீனமான மற்றும் ஆக்கிரோஷ ஏகாதிபத்திய கொள்கையை பின்பற்றுகின்றனர்.