ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: Unions suspend Tamil Nadu government workers’ strike

இந்தியா: தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் இடைநிறுத்திவைத்துள்ளன

By our correspondents
16 September 2017

அரசாங்க ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு (Joint Action Committee of the Government Teachers and Government Employees Organisations-JACTO-GEO) நேற்று தமிழ்நாடு உயர் நீதிமன்ற உத்தரவிற்கு அடிபணிந்ததோடு, 33,000 ஆசிரியர்களும் ஏனைய அரசு ஊழியர்களும் இணைந்து நடத்திய வேலைநிறுத்த நடவடிக்கையையும் ஆர்ப்பாட்டங்களையும் நிறுத்தியது. 

முந்தைய நீதிமன்ற உத்தரவை மீறியதாகவே திங்களன்று காலவரையற்ற மாநில அளவிலான வேலைநிறுத்தம் தொடங்கியது. ஏப்ரல் 2003 க்குப் பின்னர் பொது பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர்கள் மீதும் சுமத்தப்பட்டதான ஒரு பிற்போக்கு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ஒழிப்பது குறித்த நீண்டகால நிலுவையிலான கோரிக்கைகள் மீதான வெளிநடப்பாகவே அது இருந்தது. முந்தைய அரசாங்க-உத்தரவாதமளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுக்க ஊழியர்கள் விரும்புகின்றனர்.

வேலைநிறுத்தம் செய்பவர்கள், சம்பள உயர்வு முரண்பாடுகளை அகற்றுவது, 20 சதவிகித இடைக்கால சம்பள உயர்வு மற்றும் ஏற்கனவே இருக்கும் ஒப்பந்த வேலைவாய்ப்பு அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது ஆகியவற்றுக்கும் கோரிக்கை விடுக்கின்றனர். JACTO-GEO என்பது 100 க்கும் மேற்பட்ட பொதுத்துறை சார்ந்த ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டாகும். 


எழிலகம் அரசாங்க அலுவலகத்திற்கு அருகே மாநில ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசாங்கம், தமிழ்நாடு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (AIADMK) நிர்வாகம் மற்றும் ஏனைய மாநில அரசாங்களின் காரணமாக அதிகரித்துவரும் சமூக தாக்குதல்களுக்கு எதிராக இந்திய தொழிலாளர்களிடையே பெருகிவரும் உறுதிபாடு குறித்ததொரு அடையாளமாகவே இந்த வெளிநடப்பு உள்ளது.

பொதுமக்கள் நல சட்டமோதல் (Public Interest Litigation-PIL) என்றழைக்கப்படுவதற்கும், வேலைநிறுத்தத்தை தடைசெய்த முந்தைய நீதிமன்ற தீர்ப்பிற்கும் விடையிறுப்பாக நேற்றைய உயர் நீதிமன்ற விசாரணை இருந்தது. JACTO-GEO அலுவலக அலுவலர்கள், பொது உறுப்பினர் அங்கத்துவக் கூட்டத்தை கூட்டவும், திங்களன்று வேலைக்கு திரும்பவும் அனுமதிக்கப்பட வேண்டுமென கேட்டனர். இந்த வேண்டுகோளை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்ததுடன், “நீதிமன்றம் வேலைநிறுத்தத்திற்கு தடைவிதித்த பின்னர், வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற பொது குழுவின் அனுமதியை பெறுவதற்கான கேள்விக்கே அங்கு இடம் இல்லை” என அறிவித்தனர்.

ஊடக அறிக்கையின்படி, நீதிமன்றம் முந்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோளிட்டு, “அரசாங்க ஊழியர்களுக்கு வேலைநிறுத்தம் செய்யும் உரிமை கிடையாது” என்று வலியுறுத்தியது. இது, 2003 இல், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின்கீழ் (Essential Services Act), வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 200,000 அரசாங்க ஊழியர்களை பணி நீக்கம் செய்ததை அங்கீகரித்த இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் குறிப்பு ஆகும்.  

2005 இல் ஒருநாள் இந்திய பொது வேலைநிறுத்தத்தில் இதை ஒரு கோரிக்கையாக உருவாக்கிய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-சிபிஎம்) தலைமையிலான இடது முன்னணி தொழிற்சங்கங்கள் இந்த முந்தைய பிற்போக்குத்தனமான தீர்ப்பை மாற்றியமைக்க அழைப்பு விடுத்தன. இது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை பல்வேறு பயனற்ற சட்டரீதியான முறையீடுகளுக்குள் திசை திருப்பியது. இந்த முறை எந்தவொரு தொழிற்சங்கங்கமோ அல்லது, இந்தியாவின் எந்தவொரு ஸ்ராலினிச கட்சியோ, தமிழ்நாட்டிலும் அல்லது வேறெங்கும் இதற்கு எதிராக போராடுவதற்கு தொழிலார்களை அணிதிரட்டுவதை மட்டுமல்லாது நேற்றைய தீர்ப்பிற்கு சவால்விடக்கூட இல்லை.

தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான உயர் நீதிமன்றத்தின் இந்த தாக்குதல் அனைத்து இந்திய தொழிலாளர்கள் மீதான ஆளும் வர்க்கத்தின் தாக்குதலை தீவிரப்படுத்துவதையே குறிக்கிறது.

மோடி அரசாங்கம், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீது நீண்டகால தாக்குதலைத் தோற்றுவித்துள்ளது. இத்தாக்குதல், வேலை அழிவு மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் தனியார்மயமாக்கல், அத்துடன் சிறு விவசாயிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் வழங்கப்படும் மானியங்களுக்கான வரம்பில் ஏற்படுத்தப்படும் வெட்டுக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.

தமிழ்நாட்டின் அ.இ.அ.தி.மு.க. அரசாங்கம் வெளிநடப்பு ஆரம்பிக்கப்பட்ட உடனேயே வேலைநிறுத்தக்காரர்களைத் தாக்கத் தொடங்கியது. புதனன்று மட்டுமே, அரசாங்க அலுவலகங்களை செயல்பட விடாமல் மறியலில் ஈடுபட்டதாக கூறி 5,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அன்று மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்ட போதும், நேற்று வரையிலும் கைதுகள் தொடர்ந்தன.

JACTO-GEO அதிகாரிகள், வேலைநிறுத்தத்தை “தற்காலிகமாக” முடிவுக்கு கொண்டு வருவதாகக் கூறி, அவர்களை காப்பாற்றிக்கொள்ள முயன்றனர். இந்த கூற்று போலித்தனமானது. JACTO-GEO வும் அதன் உறுப்பினர் சங்கங்களும் மீண்டும் மீண்டும் அரசாங்க ஊழியர்களின் வேலைநிறுத்தங்களை “ஒத்திவைத்தன” என்பதோடு, உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு தண்ணீர் தெளித்துவிட்டன.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், அரசாங்க ஊழியர்கள் அதே விடயங்கள் குறித்து 10 நாட்களுக்கான வெளிநடப்பை மேற்கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இந்த கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து தொழிற்சங்கங்கள், அவர்களது 20 அம்ச கோரிக்கைகளை கொண்ட சாசனத்தில் ஒன்றை கூட வெற்றி கொள்ளாமல் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்றன. இந்த ஆகஸ்டில், தொழிற்சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகக் கூறி வரையறுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்தன.

அனைத்து இந்திய தொழிற்சங்க மையம் (All India Trade Union Centre-AITUC), இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (Center of Indian Trade Unions-CITU) மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam-DMK) உடன் இணைந்த சங்கம் ஆகியவையே JACTO-GEO வில் உள்ள முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புகள் ஆகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (CPM) போன்ற ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகளால் AITUC மற்றும் CITU ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன. பிப்ரவரி 2017 இல் 10 நாள் தமிழ்நாடு மாநில ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை காட்டிக்கொடுத்ததில் இந்த அமைப்புகள் முக்கிய பங்கு வகித்தன. (பார்க்க: தமிழ்நாடு அரசாங்க ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் திரும்பப் பெற்றன)

தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அணிதிரள்வையும் CPI யும் CPM மும் எதிர்க்கின்றன என்பதோடு, மத்திய மற்றும் மாநில அளவில் காங்கிரஸ் கட்சி அரசாங்கங்களுக்கு ஆதரவளிக்கும் இந்திய முதலாளித்துவத்தையும், பிராந்திய முதலாளித்துவ கட்சிகளையும் தொடர்ந்து பாதுகாக்கின்றது. 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில தேர்தலில் அவர்கள் அ.இ.அ.தி.மு.க. வுக்கு ஆதரவளித்தனர்.

இந்த வாரம், வேலைநிறுத்தம் செய்யும் அரசாங்க ஊழியர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள் மற்றும் போராடுவதில் அவர்களது உறுதிப்பாடு ஆகியவை பற்றி உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் பேசினர்.


லலித்

ஆசிரியரான லலித் என்பவர் பின்வருமாறு கூறினார்: “2003 இல் பணியில் சேர்ந்த ஊழியர்கள் மீது திணிக்கப்பட்டதான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு நாங்கள் உடன்படவில்லை. மேலும் தற்காலிக ஊழியர்களும் நிரந்தரமாக்கப்பட வேண்டுமென நாங்கள் கோருகிறோம்.  

“நான் 12 ஆண்டுகளாக ஆசிரியராக இருக்கிறேன், மேலும் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வருகிறேன். எனது மாத ஊதியம் கிட்டத்தட்ட 45,000 ரூபாய் ($US700) ஆகும், என்றாலும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பதால், அது ஓரளவு  வசதியுடைய வாழ்விற்கு போதுமானதாக இல்லை. மேலும் மத்திய அரசாங்கத்தால் பொது விற்பனை வரி (General Sales Tax-GST) அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை இன்னும் உயர்ந்துள்ளது. அதிலும் டீசல் பெட்ரோல் விலை தினமும் அதிகரித்து வருகிறது. 

சில ஒப்பந்த ஆசிரியர்கள் மாதத்திற்கு 7,000 – 10,000 ரூபாயை மட்டுமே ஊதியமாக பெறுவதாக அவர் கூறினார். மேலும் அவர், “கிராமங்களில், ஊட்டச்சத்து விநியோக ஊழியர்களும், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும் மிகக் குறைந்த ஊதியத்தையே பெறுகின்றனர்” என்றும் கருத்து தெரிவித்தார்.


கிருஷ்ணமூர்த்தி

நலன்புரி துறை ஊழியரான பாண்டித்துரை என்பவர் பின்வருமாறு கூறினார்: “நான் ஒரு வருட காலமாக பணியாற்றி வருகிறேன், எனது ஊதியம் வெறும் 16,000 ரூபாய் தான் என்பதோடு இந்த தொகை எனக்கும் எனது குடும்பத்திற்கும் போதுமானதாக இல்லை. நான் சென்னையில் வேலை செய்கிறேன், மேலும் மாதத்திற்கு 8,000 ரூபாயை எனது குடும்பத்திற்கு அனுப்புகிறேன். என் வீட்டில் இருக்கும் ஐந்து குடும்ப உறுப்பினர்களும் எனது வருமானத்தைச் சார்ந்து தான் இருக்கின்றனர். நான் எனது கிராமத்தில் விவசாயம் செய்திருந்தால் கூட, அதே தொகையை நான் சம்பாதித்திருக்க முடியம், இருந்தாலும் என்னுடைய ஊதியம் படிப்படியாக அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் நான் அரசாங்கப் பணியில் சேர்ந்தேன்.”

கிருஷ்ணமூர்த்தி WSWS இடம், “அவர்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுவதால், அவர்களது போராட்டத்தை யாரும் தடுக்க முடியாது என்றார். மேலும், அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து விசாரணை செய்யாமலேயே அவர்களது வேலைநிறுத்தத்திற்கு நீதிமன்றம் எவ்வாறு தடைவிதிக்க இயலும்? என்றும் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் மதுரை நீதிமன்றம் அதன் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டுமெனவும் கோரினார்.

“53 வருடங்கள் பழமையான ஓய்வூதிய திட்டம் ஏன் நீக்கப்பட்டுள்ளது, மேலும் புதியதோரு ஓய்வூதிய திட்டம் ஏன் செயல்படுத்தப்பட்டது? எனக் கேட்டார். மூத்த அதிகாரிகளும், பாதுகாப்பு ஊழியர்களும் அரசு வழங்கும் ஓய்வூதிய நலன்களை பெறுகின்றனர் என்றவர் சேர்த்துக் கூறினார். “17 முதல் 20 ஆண்டுகளுக்கு இராணுவப் பணியில் இருக்கும் மக்கள் ஓய்வூதியம் பெறுகின்றனர், ஆனால் அரசாங்க ஊழியர்கள் ஓய்வூதியங்களை பெறுவதற்கு 30 ஆண்டுகள் வரையிலும் வேலை செய்ய வேண்டும். இது சரிதானா?” எனவும் கேட்கிறார்.