Print Version|Feedback
Mélenchon sets nationalist trap for opposition to austerity in France
பிரான்சில் சிக்கன நடவடிக்கைகளுக்கான எதிர்ப்புக்கு மெலோன்சோன் தேசியவாத பொறி அமைக்கிறார்
By Anthony Torres
7 September 2017
மார்சைய்யில் நடந்த அடிபணியா பிரான்ஸ் (La France insoumise - LFI) இயக்கத்தின் கோடை வகுப்பில் நிறைவுரை ஆற்றிய ஜோன்-லூக் மெலோன்சோன், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் தொழில் சட்ட விதிமுறைகள் மீதான தாக்குதலை எதிர்த்து முன்மொழிந்த மூலோபாயமானது, சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்செல்வதற்குரிய ஒரு பாதையை எதிர்நோக்கி வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கான ஒரு பொறியாகும்.
ஐரோப்பாவில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த என்ன அவசியப்படுகிறதென்றால் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டமாகும். கண்டம் எங்கிலும் சமூக கோபம் அதிகரித்து வருகின்ற நிலையில், மெலோன்சோன் ஒரு புரட்சிகர மூலோபாயத்தை எதிர்க்கிறார். உண்மையில் அவர், மக்ரோன் அரசாங்கத்திற்குள் நுழையும் ஒரு மூலோபாயத்திற்குப் பொருத்தமாக, பிரெஞ்சு எல்லைகளுக்குள் ஒரு வெகுஜனவாத மற்றும் தேசியவாத இயக்கத்தைத் தொடங்க விரும்புகிறார்.
மெலோன்சோன் அவர் உரையில், அவர் "ஒழுங்கமைந்த தொழிலாளர்களின்" முன் உரையாற்றவில்லை, மாறாக "மக்களின்" முன்னால் உரையாற்றுவதாக வலியுறுத்தினார். மக்ரோனுடன் உத்தரவாணைகளைப் பேரம்பேசும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களது தொழிலாளர்கள் மீதான அமைப்புரீதியிலான செல்வாக்கை முறிப்பதற்குப் போராடுவதற்கு பதிலாக, அவர் அதை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் தொழிற்சங்கங்கள் பெரிதும் மதிப்பிழந்துள்ளன என்பதை அறிந்துள்ள மெலோன்சோன், தொழிலாளர்களும் இளைஞர்களும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக அணிதிரண்டு விடுவார்களோ என்று, அவர்களை அவரது கட்டுப்பாட்டிலான ஒரு வெகுஜன இயக்கத்தினுள் பிணைத்து வைக்க விரும்புகிறார்.
இதற்காக, தொழிலாளர் பொது கூட்டமைப்பு (CGT) ஒழுங்கமைத்திருந்த ஆர்ப்பாட்டத்திற்கு வெளியே, ஓர் ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பில்: “மக்களுக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள சமூக மற்றும் ஜனநாயக-விரோத ஆட்சி சதிக்கு எதிராக, அவர்கள், செப்டம்பர் 23 அன்று, பாரீஸை ஆக்கிரமிக்க வேண்டும்,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “ஒருசில நாள் இரவுகளுக்குள், ஒட்டுமொத்த தொழில் விதிமுறைகளும் அழிக்கப்பட்டுவிட்டது. அவர்களுடன் கலந்துரையாட உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கி இருந்தால், அது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்திருக்கும், ஆனால் முடிவில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றால் மட்டுமே விவாதம் சாத்தியமென்று அவர்கள் கருதுகிறார்கள்,” என்றார்.
மெலோன்சோன் மக்ரோனின் கொள்கைகளை விமர்சித்தாலும், அதை அவர் ஒரு பேரினவாத முன்னோக்கிலிருந்து எதிர்க்கிறார். நாஜி ஆக்கிரமிப்பின் கீழ் யூதர்களது நாடுகடத்தலில் பிரான்சுக்கு இருக்கும் பொறுப்பை ஏற்கனவே குறைத்துக் காட்டியுள்ள அவர், மக்ரோனின் இராணுவ வரவு-செலவு திட்ட வெட்டுகளை எதிர்த்து அவரை விமர்சித்த இராணுவ தலைமை தளபதி பியர் டு வில்லியே இன் விமர்சனங்களைப் புகழ்ந்துள்ளார். மக்ரோன் செய்ததைப் போலவே, மெலோன்சோனும் அவரது நிறைவுரையில், பிரான்சில் குறைந்த கூலியில் வேலை செய்யும் கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்களைக் கண்டனம் செய்தார்.
மக்ரோனும் ஒட்டுமொத்த ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கமும் சமூக தேட்டங்களை அழித்து வருகின்ற நிலையில், அவர் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான தாக்குதலைப் பிரத்யேகமாக சுட்டிக்காட்டினார்: “வெளிநாட்டிலிருந்து வந்து வேலை செய்துவிட்டுச் செல்லும் தொழிலாளர்களின் அந்தஸ்தை ஏற்க முடியாது, நாம் அதை ஏற்றுக் கொண்டதே இல்லை, நாம் இந்நாட்டிற்கு பொறுப்பாக இருந்தால், இங்கே பிரான்சில் வெளிநாட்டிலிருந்து வந்து வேலை செய்துவிட்டுச் செல்லும் ஒரு தொழிலாளியும் இருக்கக்கூடாது,” என்றார்.
இது குறிப்பாக, மக்ரோனின் தாக்குதல்களுக்கு எதிராக தங்களின் சமூக உரிமைகளைப் பாதுகாக்க முனையும் தொழிலாளர்களுக்கு மெலோன்சோன் ஒரு அரசியல் முட்டுச்சந்தை முன்மொழிகிறார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அவரது முன்னோக்கிற்கும், ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர மூலோபாயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இயல்பிலேயே பிரெஞ்சு தொழிலாளர்களின் கூட்டாளிகளான ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களிடம் இருந்து அவர்களைப் பிரிக்கும் ஒரு வெகுஜனவாத இயக்கத்தை அவர் எதைச் சுற்றி அபிவிருத்தி செய்ய கருதுகிறாரோ, அத்தகைய தொழிற்சங்க வெற்றுக்கூடுகளைக் கொண்டு தொழிலாளர்களின் அணிதிரள்வுகளின் மீது மேலாளுமையை செலுத்த தன்னை இணங்கிக் கொள்கிறார்.
மெலோன்சோன் முன்மொழிகின்ற தேசியவாத நோக்குநிலை மற்றும் தொழிற்சங்கங்களைக் கொண்டு தொழிலாளர்களைப் பிளவுபடுத்தல் ஆகியவை சோசலிச சமத்துவக் கட்சியிலிருந்து (PES) அவரை பிரிக்கும் வர்க்க இடைவெளிக்கு சான்று பகிர்கின்றன. அவசரகால நிலையும் மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் தலைமுறைகளாக தொழிலாள வர்க்கம் போராடி வென்ற சமூக உரிமைகளை ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் அழிப்பதும் முதலாளித்துவத்தின் ஒரு வரலாற்று நெருக்கடியை பிரதிபலிக்கிறது. ஆனால் மெலோன்சோன் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான ஒரு போராட்டத்திற்கும் மற்றும் 1917 அக்டோபர் புரட்சியை முன்மாதிரியாக கொண்ட சோசலிசத்திற்கான ஒரு புரட்சிகர பாட்டாளி வர்க்க போராட்டத்திற்கும் விரோதமாக உள்ளார்.
அவர் அவசரகால நிலையைத் திணித்துள்ளதும் மற்றும் 2016 இல் தொழிற்சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கிய பாதுகாப்பு எந்திரங்களுடன் கூட்டு வைக்க விரும்புகிறார். LFI கோடை வகுப்பிற்கான அவரது நிறைவுரையில், அவரது இயக்கம், பிரதம மந்திரியாக, மக்ரோனின் ஜனாதிபதி பதவிக்காலத்தின் கீழ், அரசு பதவியைப் பெற பொருத்தமானதாக இருக்க வேண்டுமென வலியுறுத்தினார்: “எப்போது வேண்டுமானாலும் ஆட்சி பொறுப்பெடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் அவ்வாறு இருந்தால் தான், நாளையே கூட ஆட்சி பொறுப்பெடுக்க தயாராக இருப்போம்,” என்றார்.
“அமைச்சர் நிக்கோலா உலோ (Nicolas Hulot) ஹைட்ரோகார்பன்கள் பயன்படுத்துவதை நிறுத்தும் ஒரு திட்டத்தை அவர் ஒழுங்கமைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். நாம் அதை ஆர்வத்துடன் நோக்குகிறோம், மேலும் எப்போதெல்லாம் அவசியப்படுகிறதோ, நாம் உதவுவோம்,” என்று அறிவித்து, மெலோன்சோன் மக்ரோனின் அமைச்சர்களுடன் அவர் ஒத்துழைக்க விரும்புவதாக தெரிவித்தார். அரசு 17 அணுஉலைகளை மூட இருந்தால், அவர் ஆதரிப்பதாகவும், அதை வரவேற்பதாகவும் மெலோன்சோன் தெரிவித்தார்.
மார்சைய்யின் அன்பார்ந்த கவனிப்புக்காக அந்நகருக்கு நன்றி தெரிவித்த பின்னர், மெலோன்சோன் "நமது பாதுகாப்பை உறுதிப்படுத்திய" பொலிஸையும் பாராட்டினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “தயவுசெய்து, உங்களுக்கு ஒடுக்குமுறைக்கான கருவிகள் வழங்க நிறைய பணம் பாய்ச்சப்பட்டு வருவது எங்களுக்குத் தெரியும். பொது ஒழுங்கைப் பேணுவதில் இருக்கும் பணிகள் எங்களுக்குத் தெரியும், ஆனால் மக்களை தாக்கும் ஒரு பொலிஸ் படையை அல்ல, அமைதியின் ஒரு பாதுகாவலனாக விளங்கும் ஒரு பொலிஸ் படை மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். பிரெஞ்சு குடியரசு கோட்பாடுகளுக்கு விசுவாசமான பொலிஸ்காரர்களாக, நீங்கள், ஆர்ப்பாட்டக்காரர்களை சுற்றி வளைத்து, பின்னர் அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசுவது உட்பட [சோசலிஸ்ட் கட்சியின் உள்துறை அமைச்சர் பேர்னார்ட்] கசெனேவ் கொண்டு வந்த அபத்தமான அணுகுமுறைகளை நிறுத்துவதற்காக தலையிட்டீர்கள்,” என்றார்.
அவசரகால நிலையின் கீழ் மெலோன்சோன் பொலிஸிற்கு முறையிடுவது தொழிலாளர்களுக்கான ஓர் எச்சரிக்கையாகும். மக்ரோனின் கீழ் ஆட்சி செய்ய விரும்பும் மெலோன்சோன், பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் ஒரு கூட்டணியை எதிர்பார்த்து வருகிறார்; மக்ரோனின் இராணுவ வரவு-செலவு திட்ட வெட்டுக்களுக்கு எதிராக மோதியதற்காக தளபதி டு வில்லியே பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அவரை மெலோன்சோன் ஆதரித்தது ஒன்றும் சந்தர்ப்பவசமாக நடந்ததில்லை.
அவசரகால நிலை குறித்து குழப்பத்தை விதைத்து, பிரான்சில் சர்வாதிகார அபாயங்கங்களுக்கு எதிராக தொழிலாளர்களை நிராயுதபாணிக்கும் நோக்கில், அவர் பொலிஸிற்கு பிற்போக்குத்தனமாக முறையீடுகள் செய்வது, மக்ரோனுக்கு எதிராக போராடி வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பொலிஸ் தாக்குவதில் இருந்து தடுத்துவிடாது. மறுபுறம், அவை, போராட்டக்காரர்களுக்கு எதிரான பொலிஸ் தாக்குதல்களை மெலோன்சோன் தீவிரமாக எதிர்க்க மாட்டார் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.
பொலிசுக்கும் அவசரகால நிலைக்கும் மெலோன்சோன் ஆதரவு காட்டுவதானது, அடிபணியா பிரான்ஸ் இயக்கத்திற்கும் (LFI), ஜனாதிபதி தேர்தலில் மெலோன்சோனுக்கு வாக்களித்த மில்லியன் கணக்கானவர்களுக்கும் இடையிலான அரசியல் இடைவெளியையும் உயர்த்திக் காட்டுகிறது. அவர் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக மற்றும் சிரியா மீது ட்ரம்ப் குண்டுவீசியதற்கு எதிராக குரல் கொடுத்ததற்காக, ஜனாதிபதி தேர்தல்களின் முதல் சுற்றில் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் பெரும் பிரிவுகளிடையே ஆதரவை பெற்றிருந்தார்.
மக்ரோன் மற்றும் லு பென்னுக்கு இடையிலான இரண்டாம் சுற்று தேர்தலில், மெலோன்சோன் தனது அரசியல் பொறுப்புக்களைக் கைதுறந்து, திட்டவட்டமாக ஓர் அரசியல் பாதையைக் காட்ட மறுத்தார். மக்ரோனுக்கு இடதில் இருந்து ஒரு மிகப்பெரிய சக்திவாய்ந்த எதிர்ப்பு எழுவதைத் தடுப்பதற்காக, அவர், தனது சொந்த ஆதரவாளர்களின் வாக்குகளையே அவமதித்தார், அவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியால் வலியுறுத்தப்பட்ட செயலூக்கமான புறக்கணிப்புக்கு ஆதரவாக இருந்தனர். இது தற்போதைய வழிவகுத்துள்ளது, இதில் மக்ரோன், நாடாளுமன்றத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய LFI பிரதிநிதிகளின் வெறும் வாய்வழி எதிர்ப்பை முகங்கொடுக்கையில், அவர் தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மெலோன்சோன், சோசலிஸ்ட் கட்சியைப் பாதுகாப்பதிலும், 1968 க்கு பிந்தைய போலி-இடதுகளின் ட்ரொட்ஸ்கிச விரோத கொள்கைகளை பாதுகாப்பதிலும் ஒரு பொய்யான வரலாற்று மற்றும் அரசியல் முன்னோக்கை சார்ந்துள்ளார்: “எங்கள் பொறுப்புகள் குறித்து எங்களுக்குத் தெரியும், பிரெஞ்சு மக்கள் இந்நாட்டின் பத்து நகரங்களில் முதல் சுற்றில் எங்களை முதலிடத்தில் நிறுத்தினர். ஆகவே, 40 க்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பின்னர், நீங்கள் பார்க்கும் இந்த இடத்திற்கு சோசலிஸ்ட் கட்சி தான் கொண்டு வந்ததாக என்பது, அது எங்களைச் சார்ந்த விடயம். கடந்த காலத்தில் இந்தளவிற்கு நிறைய வென்றெடுக்கப்பட்டதை, மறந்துவிடக் கூடாது. பொது வேலைத்திட்டம் (Programme Commun) தான் நம் அனைவரையும் கொண்டு வந்தது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது, நமது 5 வது வார விடுமுறைக்கு சம்பளத்தை நாம் எவ்வாறு பெற்றோம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது,” என்றார்.
இந்த கருத்து, அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் (LFI) தேசியவாத, தொழிற்சங்க சார்பு, பொலிஸ்-சார்பு மூலோபாயத்தின் அடியிலிருக்கும் ட்ரொட்ஸ்கிச விரோத முன்னோக்கை எடுத்துக்காட்டுகிறது. 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்தை பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) காட்டிக்கொடுத்ததால் தொழிலாளர்களிடையே அது செல்வாக்கை இழந்தது, இந்த நிலையில் ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து உடைந்து சென்ற சக்திகள், பல்வேறு சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் அராஜகவாதிகள் (anarchists) மற்றும் குட்டி-முதலாளித்துவ புத்திஜீவி வட்டாரங்கள், சோசலிஸ்ட் கட்சியை (PS) ஸ்தாபித்த முதலாளித்துவ வர்க்க மற்றும் முன்னாள்-விச்சி அரசியல்வாதியான பிரான்சுவா மித்திரோனைச் சுற்றி ஒன்றுகூடின.
இந்த முன்னோக்கின் அடிப்படையில் தான், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து உடைந்து சென்று, சோசலிஸ்ட் கட்சிக்கும் (PS) பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (PCF) இடையேயான இடதுகளின் ஐக்கியத்துடன் (Union de la gauche) கூட்டு சேர்ந்த பியர் லம்பேரின் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான மிலோன்சோன், சோசலிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1981 ஜனாதிபதி தேர்தல்களில் அதன் வெற்றிக்குப் பின்னர், 1982-1983 இல் அது "சிக்கன நடவடிக்கைகளுக்கு திரும்பியதுடன்", சோசலிஸ்ட் கட்சி, நிதியியல் செல்வந்த தட்டுக்களின் ஒரு கட்சி என்பது நிரூபணமானது, இது சமூக வேலைத்திட்டங்கள் மீதான மூர்க்கமான வெட்டுக்கள் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் தொழில்துறை அழிப்புகளுக்கு இட்டுச் சென்றது.
மெலோன்சோன் இந்த அரசியல் மரபை ஊக்குவிப்பதானது, அவர், போராடிக்கொண்டிருக்கும் தொழிலாளர்களை அணிதிரட்ட முயற்சிக்கவில்லை, மாறாக சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் உருக்குலைவுக்குப் பின்னர் அவர்களை ஒரு புதிய பொறிக்குள் சிக்க வைக்க முயன்று வருகிறார் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.