ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian ICFI supporters hold meeting against US-led war drive

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள் அமெரிக்க தலைமையிலான போர் உந்துதலுக்கு எதிராக கூட்டம் நடத்தினர்

By our correspondents
31 August 2017

ஆகஸ்ட் 27 அன்று சென்னையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இந்திய ஆதரவாளர்கள் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய போர் உந்துதலுக்கு எதிராக வெற்றிகரமான பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தினர். தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொழிலாளர்களும், இளைஞர்களும் கலந்துகொண்டதோடு, பேஸ்புக் வழியாக நேரடியாகவும் ஒளிபரப்பப்பட்டது. வெவ்வேறு இந்திய நகரங்களில் இருந்தும், அத்துடன் சர்வதேச அளவில் இருந்தும் இணையவழி பங்கேற்பாளர்கள் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தனர்.

இந்தக் கூட்டம் நடப்பதை தடுக்க பொலிஸ் அதிகாரிகள் முயன்றனர், அது இந்தியாவில் ஜனநாயக உரிமைகள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு நாள் முன்பு, அம்பத்தூர் தொழிற்துறை எஸ்டேட் காவல்துறையினர் கூட்டத்தை இரத்து செய்யும் முயற்சியில் ICFI ஆதரவாளர் ஒருவரை பொலிஸ் நிலையத்திற்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்தனர். கூட்டத்தில் அமெரிக்காவை எதிர்ப்பதைப் பற்றி பேசுவதையும், இந்திய-சீன போர் அபாயம் பற்றி குறிப்பிடுவதையும் தவிர்க்குமாறு காவல் ஆய்வாளர் விஜயராகவன் கேட்டுக்கொண்டார்.

அது முற்றிலும் நிராகரிக்கப்பட்டபோது, கூட்ட அரங்கின் பொறுப்பாளராக இருந்த நபருக்கு பொலிஸ் அழுத்தம் கொடுத்த நிலையில், அவர் ICFI ஆதரவாளர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஆதரிக்கிறார்களா மற்றும் பிரதம மந்திரி நரேந்திர மோடியின் அரசாங்கத்தை எதிர்க்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.

ICFI ஆதரவாளர்கள், அரசாங்கத்தை விமர்சிப்பது உட்பட பேச்சு சுதந்திரம் குறித்த அவர்களது ஜனநாயக உரிமையை வலியுறுத்தினர். மேலும் அவர்கள், விளக்கமளித்தனர் அதாவது மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகளுக்கு  ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அரசியல் ரீதியாக எதிரானவர்கள் என்றும் மற்றும் அவர்களது ஆயுதமேந்திய கொரில்லாவாத வழிமுறைகளையும் எதிர்ப்பவர்கள் மற்றும் 1917 இல் ரஷ்யாவில் தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவந்த போல்ஷிவிக்குகளின் மரபுகளில் ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் என்றும் கூறினர்.

கூட்ட அரங்கிற்கான வாடகை தொகை செலுத்தப்பட்டதற்கான ரசீதை பெற்ற பின்னர், துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது மற்றும் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவது போன்றவற்றை உள்ளடக்கும் நான்கு வார கால பிரச்சாரம் ஒன்றையும், அத்துடன் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் விளம்பரம் செய்வதை தொடங்கியதாகவும் ICFI ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு பகுதிகளிலிருந்து பலரும் நேரடி ஒளிபரப்பின் மூலமாக கூட்டத்தில் கலந்துகொள்ள காத்திருப்பதாகவும் அவர்கள் விளக்கமளித்தனர்.

கூட்டம் தொடர அனுமதிக்கப்பட்ட போதிலும், திட்டமிட்டதொரு நடவடிக்கையாக அந்த சூழ்நிலையை மிரட்டும் விதமானதாக உருவாக்கும் நோக்கத்தில் பொலிஸ் கூட்ட அரங்கிற்குள் நுழைந்தது. அவர்கள் சுற்றி பார்த்துவிட்டு பின்னர், பிரதான பேச்சாளர்கள் மற்றும் ICFI ஆதரவாளர்கள் குழுவின் ஏனைய அலுவலக அங்கத்தவர்களின் பெயர்கள் மற்றும் கைபேசி எண்களை கேட்டனர். வெளியே சுற்றி கண்காணித்து கொண்டிருந்த ஒரு பொலிஸ் அதிகாரி, பின்னர் கூட்ட அரங்கிற்குள் செல்லும் படிகளுக்கு அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு கூட்டம் முடிவடையும் வரை உள்நுழைபவர்கள் அல்லது வெளியேறுபவர்களை கண்காணித்த வண்ணம் இருந்தார்.


சென்னை கூட்டத்தின் ஒரு பகுதியினர்

ICFI ஆதரவாளர்கள் குழுவின் முன்னணி உறுப்பினரான சதீஷ் சைமன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் அமெரிக்க தலைமையிலான சக்திகள் நடத்திய 25 ஆண்டுகால ஏகாதிபத்திய சூறையாடும் போர்கள் பற்றியும், மேலும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தை ஸ்திரமற்றதாக்கிய சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகள் பற்றியும் அவர் பேசினார்.

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் ஏனைய இடதுசாரி, போர் எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்களுக்கு எதிராக கூகுளின் தணிக்கை குறிவைக்கப்பட்டதை சைமன் கவனத்தில் கொண்டுவந்தார். அரசியல் தணிக்கை பிரதானமாக WSWS க்கு எதிராக குறிவைக்கப்பட்டதனால் அது கறுப்புப்பட்டியலிடுதலுக்கு உள்ளானது என்று அவர் கூறினார். மேலும், பேச்சு சுதந்திரம் மீதான கூகுளின் தாக்குதலுக்கு எதிராக WSWS மூலம் தொடங்கப்பட்ட இணையவழி மனு பிரச்சாரத்திற்கு சைமன் ஆதரவு கோரினார்.

தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இந்திய ஆளும் வர்க்கத்தின் வலுவான தாக்குதலை நோக்கி திரும்பிய சைமன், 13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை முக்கியமானதாக சுட்டிக்காட்டினார். அவர்கள் செய்த ஒரே “குற்றம்” அவர்களது தொழிற்சாலையில் நிலவிய வேர்வை சிந்தும் அடிமைத்தனமான மலிவுகூலி உழைப்பு நிலைமைகளை சவால் செய்ததுதான். சிறையிலடைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுவிப்பதற்காக ICFI தொடங்கிய சர்வதேச பாதுகாப்பு பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

பிரதான பேச்சாளரான அருண்குமார் பின்வருமாறு தெரிவித்தார்: “இன்றைய உலகம் ஒரு பேரழிவுகர அணுஆயுத போர் வெடிப்பதற்கான விளிம்பில் உள்ளது.” மேலும், வடகொரியாவிற்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய ஆத்திரமூட்டும் வகையிலான “நெருப்பு மற்றும் சீற்றம்” காட்டப்போவதாக விடுத்த அச்சுறுத்தல்களை அவர் மேற்கோளிட்டார்.

அணுஆயுதப் போர் அச்சுறுத்தல் என்பது வெறுமனே வெள்ளை மாளிகையில் ஒரு பாசிச பைத்தியக்காரரின் விளைவு என்ற சாதாரணமான விஷயம் அல்ல, ஆனால் அமெரிக்க மற்றும் பூகோள முதலாளித்துவத்தின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியினால் தூண்டிவிடப்பட்ட மிகப்பரந்த புவிசார் அரசியல் பதட்டங்களில் இருந்து எழுகின்றது என்று குமார் விளக்கினார். வாஷிங்டனில் உள்ள இராணுவ மற்றும் அரசியல் உயரடுக்கின் சக்திவாய்ந்த பிரிவுகள், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க பூகோள மேலாதிக்கத்திற்கு முக்கிய தடையாக இருப்பதாக கருதும் சீனாவை சவால் செய்யும்படியும் மேலும் தேவைப்பட்டால் போருக்கு செல்லும்படியும் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன என்று பேச்சாளர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் ட்ரம்பின் புதிய கொள்கை, 16 ஆண்டுகாலமாக இடைவிடாத அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு எதிரான வெளிப்படையான முடிவற்ற மற்றும் தடையற்ற இராணுவ வன்முறைக்கான ஒரு அறிவிப்பாக இருப்பதை குமார் குறிப்பிட்டார்.

பூகோளரீதியான மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கான அதன் முயற்சியில், சீனாவிற்கு எதிரான ஒரு வலுவான எதிரியாக இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் அமெரிக்கா அதனுடன் ஒரு இராணுவ மூலோபாய பங்காண்மையை உறுதிப்படுத்திக் கொண்டது என்று குமார் தெரிவித்தார். “சீன-இந்திய உறவுகளில் காணப்படும் விரைவான சீரழிவிற்கு பிரதான காரணமாக இருப்பது, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ மூலோபாய தாக்குதலுக்குள் இந்தியா மேலும் ஆழமாக ஒருங்கிணைந்து இருப்பது தான், அதற்கு சமீபத்திய மற்றும் மிகுந்த வெடிக்கும் தன்மையிலான உதாரணமாக தற்போதைய எல்லை மோதல் உள்ளது.”

இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் அவரது ஆளும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியின் கீழ் அமெரிக்காவுக்கான ஒரு முன்னணி அரசாக இந்தியா மாறிவிட்டது என்று பேச்சாளர் விளக்கினார். மேலும், பென்டகனின் வழமையான பயன்பாட்டிற்கு இந்தியா தனது இராணுவ தளங்களையும், துறைமுகங்களையும் திறந்து வைத்துள்ளதோடு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடன் இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ-மூலோபாய உறவுகளை விரிவுபடுத்தியுள்ளது. பாகிஸ்தானுடனான இந்தியாவின் போர்குணமிக்க அணுகுமுறைக்கும் புது தில்லிக்கான வாஷிங்டனின் ஆதரவு ஊக்கமளித்துள்ளது.

“இந்திய பிராந்தியத்தில் எல்லை மோதல்கள், தெற்காசியாவின் ஏகாதிபத்தியப் பிரிவினையிலும், ஏகாதிபத்தியம் உருவாக்கிய பிற்போக்குத்தனமான அரசு கட்டமைப்புகளிலும் வரலாற்று ரீதியாக வேரூன்றியுள்ளன” என்று குமார் கூறினார். 1947 இல் வகுப்புவாத இரத்தத்தில் சுதந்திர போராட்டத்தை நசுக்குவதற்காக இந்து மற்றும் முஸ்லீம் முதலாளித்துவ வர்க்கம் இரண்டுமே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழைத்தன.

சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிரான அமெரிக்க ஏகாதிபத்திய போர் உந்துதலை ICFI எதிர்க்கின்ற போதிலும், முதலாளித்துவ மீட்சியின் விளைவாக உருவாக்கப்பட்ட இந்த நாடுகளின் முதலாளித்துவ ஆட்சிகளின் பிற்போக்குத்தனமான தேசியவாத கொள்கைகளுக்கு அது ஆதரவு கொடுக்கவில்லை என்று குமார் சுட்டிக் காட்டினார்.

இந்திய ஸ்ராலினிச மற்றும் மாவோயிச கட்சிகளின் பங்கு பற்றி பேசுகையில், டோக்லாமில் சீனாவுடனான எல்லைப் பிரச்சினை குறித்து “ஒருமித்த கருத்தை உருவாக்க” பி.ஜே.பி. அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்த “அனைத்து கட்சி” தலைவர்களுக்கான கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) இன் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரியின் பங்கேற்பு பற்றி குமார் குறிப்பிட்டார்.

மோடியின் உத்தரவின்படி பாகிஸ்தானுக்குள்ளே இந்திய இராணுவத்தின் சட்டவிரோத மற்றும் மிகுந்த ஆத்திரமூட்டும் வகையிலான “நுட்பமான தாக்குதல்” ஐ பாராட்டி கேரள மாநில முதல் மந்திரி மற்றும் சிபிஎம் அரசியல் குழு உறுப்பினருமான பினராயி விஜயனின் தூண்டுதலில் மாநில சட்டமன்ற தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டதை குமார் பார்வையாளர்களுக்கு நினைவுபடுத்தினார்.

அவருடைய உரையை முடிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் (ICFI) சேரவும், இந்தியாவில் ஒரு வெகுஜன புரட்சிகர சோசலிசக் கட்சியை கட்டியமைக்க உதவிடவும் தொழிலாளர்களையும், இளைஞர்களையும் குமார் ஊக்கப்படுத்தினார்.