Print Version|Feedback
French President Macron signs labor decrees, trampling on social opposition
சமூக எதிர்ப்பை நசுக்குகின்ற தொழிற் சட்ட உத்தரவுகளில் பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் கையெழுத்திடுகிறார்
By Anthony Torres
23 September 2017
பாரிய வெகுஜன எதிர்ப்பு, பெருகும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், நாட்டின் தொழிலாளர் சட்டத்தை அழிக்கும் உத்தரவுகளில் நேற்று கையெழுத்திட்டார். அவரது அரசாங்கம் சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பின்மைக் காப்பீடு ஆகியவற்றில் ஆழமான வெட்டுக்களை அறிவித்துள்ள அதேநேரத்தில், இராணுவத்திற்கு பில்லியன் கணக்கான யூரோக்கள் கூடுதலாய் செலவிடவும் செல்வந்தர்களுக்கு வரிகளை (Impôt sur la Fortune - ISF) வெட்டவும் வாக்குறுதியளிக்கிறது.
நேற்று, ஒரு அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் மக்ரோன், தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில், தொழிலாளர் துறை அமைச்சர் முரியல் பெனிக்கோ மற்றும் அரசாங்க செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோஃப் கஸ்டனேர் சூழ்ந்திருக்க, தொழிலாளர் சட்டத்தை திருத்துகின்ற ஐந்து உத்தரவுகளில் கையெழுத்திட்டார். முதலாவது நடவடிக்கைகள் நாளை உத்தியோகபூர்வ சட்டமன்ற ஆவணத்தில் (Journal officiel) வெளியிடப்பட இருக்கின்றன. “இந்தச் சீர்திருத்தம் வெளியிட்ட உடனே அமலுக்கு வரும். முதலாவது சீர்திருத்தங்கள் ஒரு சில தினங்களில் செயல்பாட்டுக்கு வந்து விடும்” என்று மக்ரோன் அறிவித்தார்.
ஆண்டின் முடிவுக்குள்ளாக “அநேகமாய் ஏறக்குறைய 20 உத்தரவுகள்” வரை தான் கையெழுத்திடக்கூடும் என்றும் “இந்த உத்தரவுகளில் இடம்பெற்றிருக்கின்ற அத்தனை சீர்திருத்தங்களும்” அதிகப்பட்சம் “ஜனவரி 1க்குள்ளாக” அமலுக்கு வந்துவிடும் என்றும் அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.
ஐரோப்பாவெங்கிலும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு நிலவுகின்ற பாரிய வெகுஜன எதிர்ப்புக்கு, மக்ரோனும் அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒட்டுமொத்த நிதி பிரபுத்துவமும் காட்டுகின்ற அலட்சியத்தையே இந்த நடவடிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டது முதலான நான்கு மாதங்களில் கருத்துக்கணிப்புகளில் அவரது ஏற்பு சதவிகிதம் 30 சதவீதமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது, அத்துடன் மக்ரோன் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் தொழிலாளர் சட்டத்திலான சென்ற ஆண்டின் சீர்திருத்தங்களுக்கு பிரெஞ்சு மக்களில் 70 சதவீதம் பேர் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். பத்தில் ஏழு தொழிலாளர்கள் விரோதமாக உள்ளனர்.
மக்களின் விருப்பங்களுக்கு எதிராக செயல்படுகின்ற அரசு எந்திரத்தின் மூலமாக, மக்களின் மீது மக்ரோன் ஆணவத்துடன் தனது உத்தரவுகளைத் திணித்துக் கொண்டிருக்கிறார். செப்டம்பர் 12 தொழிற்சங்க ஆர்ப்பாட்டம் தயாரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், “ஜனநாயகம் வீதியில் நிகழ்வதில்லை” (la démocratie, ce n'est pas la rue) என்று நியூயோர்க்கில் இருந்தவாறு மக்ரோன் அறிவித்தார். இந்த சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை “சோம்பேறிகள்” என்றும் “சிடுமூஞ்சிகள்” என்றும் கூறி அவர் அவமதித்தார்.
மக்ரோனும், வங்கிகளும் அத்துடன் பிரான்சிலுள்ள மற்ற பெரு வணிகங்களும் இருபதாம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கம் வென்றெடுத்திருந்த அத்தனை சமூக உரிமைகளையும் அழிப்பதற்கு தீர்மானம் பூண்டிருக்கின்றன. இந்த தேட்டங்கள் சர்வதேச போராட்டத்தின் விளைபொருட்களாகும். 1905 இல் நிறைவேற்றப்பட்ட பிரான்சின் தொழிலாளர் சட்டமானது, அந்த ஆண்டில் ரஷ்யப் புரட்சி வெடித்ததை ஒட்டி நடந்த ஐரோப்பிய வேலைநிறுத்தங்களின் உடனடியான விளைபொருளாய் இருந்தது. எங்கெங்கிலும் இருந்த ஆளும் வர்க்கங்களை மிரளச் செய்த, 1917 ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சி தான், தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகளிலான மேம்பாட்டிற்கு வேறெந்தவொரு நிகழ்வைக் காட்டிலும் அதிகமான காரணமாகும்.
பிரான்சில் வர்க்க உறவுகளின் பாரம்பரிய கட்டமைப்பை அழிப்பதன் மூலமாக, மக்ரோனின் உத்தரவுகள், வர்க்கப் போராட்டம் தீவிரமடைவதற்கான களத்தை அமைத்திருக்கின்றன. தொழிலாளர்களின் எதிர்ப்பை கழுத்து நெரிக்கின்ற சாதனங்களாக உருமாற்றம் கண்டிருக்கும் தொழிற்சங்கங்களை பிரதியிடுகின்ற வகையில், புதிய போராட்ட அமைப்புகளைக் கட்டுவதன் மூலமும், தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டுவதன் மூலமும் மட்டுமே தொழிலாளர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மக்ரோனின் உத்தரவுகள், வேலைநீக்கங்களையும் ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவு வெட்டுகளையும் ஏற்றுக் கொள்ளும்படி தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் வேலையிட வாக்களிப்பை திணிப்பதற்கு முதலாளிகளை அனுமதிக்கின்றன. தொழிலாளர்கள் இக்கோரிக்கைகளுக்கு மறுத்தால், முதலாளிகள் தொழிற்சாலைகளை மூடலாம், முன்வைக்கின்ற ஒப்பந்தங்களை மறுக்கின்ற தொழிலாளர்களை நீக்கலாம், அத்துடன் வேலைவாய்ப்பின்மை மையங்களில் அவர்களுக்கு வேலைக்கான மறு-பயிற்சி பெறுவதற்கு இருக்கின்ற உரிமைகளையும் இரத்து செய்யலாம்.
முதலாளிகள் தொழிலாளர்களை காலவரையற்ற தற்காலிக ஒப்பந்தங்களாக இருக்கக் கூடிய “திட்டப்பணி” (de chantier) ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படுகின்ற ஒன்றின் கீழ் வேலைக்கு அமர்த்திக் கொள்ள முடியும். இத்தகைய தொழிலாளர்கள் எவ்வளவு காலத்திற்கு மற்றும் எத்தனை முறை பணியமர்த்தப்படுவார்கள் என்பது தொழிற்துறை மட்டத்தில் நெறிப்படுத்தப்படும். ஒரு திட்டப்பணி முடிந்து விட்டது என்றால், எந்த துண்டிப்புத் தொகையும் தாரமலேயே, முதலாளிகள் “திட்டப்பணி” ஒப்பந்தங்களை முறித்துக்கொள்வதற்கு சட்டப்பூர்வமாய் அனுமதிக்கப்படுகிறார்கள்.
சிறு வணிகங்கள், இந்த வாக்கெடுப்புகளின் மூலமாக ஊதியங்கள், கொடுப்பனவு, பதின்மூன்றாம் மாத ஊதியம் தொடர்பாக ஸ்தாபிக்கப்பட்ட விதிகளை மாற்றிக் கொள்ள இயலும்.
தொழிலாளர் சட்டத்தை, தொழிற்துறை ரீதியான ஒப்பந்தங்களை மற்றும் முன்னர் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை -இவை எல்லாமே இனி முகவரியில்லாத கடிதங்களாக- மீறுகின்ற வகையிலான நிறுவன மட்டத்திலான ஒப்பந்தங்களைத் திணிப்பதற்கும் முதலாளிகளிடம் இனி அதிகாரம் இருக்கும்.
தொழிலாள வர்க்கத்தில் கோபம் அபிவிருத்தி காண்பதை மக்ரோன் அரசாங்கமும் சர்வதேச முதலாளித்துவ வர்க்கமும் பதட்டத்துடன் கவனித்துக் கொண்டிருக்கின்றன. ஓட்டுநர்களது வேலைநிறுத்தத்தை நிறுத்துவதற்கும் சாலைகளும் எரிபொருள் நிரப்பு நிலையங்களும் திறந்திருக்குமாறு பார்த்துக் கொள்வதற்குமான ஒரு முயற்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எலிசபெத் போர்ன் நேற்று டிரக் ஓட்டுநர்கள் தொழிற்சங்கங்களை அழைத்து, இந்த சீர்திருத்தங்களில் “கவலைப்படுவதற்கு எதுவொன்றும் இல்லை” என்பதான வெற்று வாக்குறுதிகளை அளித்தார்.
ஆளும் வர்க்கம் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பையே நம்பியிருக்கிறது, இத்தொழிற்சங்கங்கள் புதுச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை பல தனித்தனியான, வெவ்வேறு நாட்களிலான ஒருநாள் வேலைநிறுத்தங்களாக பிளவுபடுத்துவதற்கும், மக்ரோனுக்கான எதிர்ப்பை களைப்படையச் செய்வதற்கும் முற்படுகின்றன. புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் அவரது சீர்திருத்த திட்டநிரலின் கால அட்டவணையை பார்வையிடுவதற்கு இவை புதிய ஜனாதிபதியைச் சந்தித்தன. அதன்பின் பல வாரங்களாக அவை தொழிற்துறை மந்திரி பெனிக்கோ உடனும் முதலாளிகள் அமைப்புகளுடனும் தொழிற் சட்டவிதிகள் மீது பேச்சுவார்த்தை நடத்தின.
ஆகஸ்ட் 28 இல், மக்ரோன், பெனிக்கோ மற்றும் CFDT (பிரெஞ்சு தொழிலாளர் ஜனநாயகக் கூட்டமைப்பு) மற்றும் FO (தொழிலாளர் சக்தி) ஆகிய தொழிற்சங்கங்களது தலைமை நிர்வாகிகளுக்கு இடையில் இரண்டு இரகசிய கூட்டங்கள் நடைபெற்றதாக Le Canard enchaîné பத்திரிகை தெரிவித்தது. தொழிற்சங்கங்கள் “தமது அங்கத்தவர்களை கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதை” உறுதி செய்து கொள்வதற்கு மக்ரோன் விரும்பினார் என்று அந்த வார இதழ் தெரிவித்தது.
தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் “மனப்பூர்வமானதாக” இருந்ததென்றும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான பயிற்சிக்கு நிதியாதாரம் அளிக்கின்ற திட்டங்கள் —பெருநிறுவனப் பணத்தை தொழிற்சங்கங்களின் கல்லாவுக்குள் பாய்ச்சுவதற்கு மக்ரோனின் உத்தரவுகள் பயன்படுத்துகின்ற முக்கியமான வழிகளில் இது ஒன்று— குறித்து பெனிக்கோ “மிகவும் ஆர்வம்” காட்டினார் என்றும் Le Monde பத்திரிகை தெரிவித்தது. அதன்பின் தொழிற்சங்கங்கள் தாங்கள் முதலாளிகளுடனும் அரசாங்கத்துடனும் சேர்ந்து ஏற்பாடு செய்திருக்கின்ற ஒப்பந்தங்களை தொழிலாளர்கள் மீது திணிப்பதற்கு முற்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தின் இலாபமீட்டு நிலையை அதிகரிப்பதும், எல்லாவற்றுக்கும் மேல் இப்போது தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்ற போர்களில் பிரான்சும் மற்றும் ஐரோப்பாவும் அமெரிக்காவுடன் போட்டியிடத்தக்க நிலையை சாத்தியமாக்குவதுமே, மக்ரோனது சீர்திருத்தங்களது நோக்கமாய் இருக்கிறது.
மக்ரோன் தனது உத்தரவுகளை வெளியிடுவதற்கு ஒரு சில நாட்கள் முன்பாக தூதர்களது ஒரு கூட்டத்தில் இவ்வாறு கூறினார்: “நமது இராணுவப் படைகள் பிரான்சையும், அத்துடன் நமது கண்டத்தையும் பாதுகாக்கும் விதத்தில் தரத்திலும், பயன்படுத்தும் திறனிலும் மற்றும் வேகத்திலும், உலகின் மிகச் சிறந்த படைகளில் ஒன்றாக, ஐரோப்பாவின் மிகச் சிறந்த படையாக தங்களை எடுத்துக்காட்ட வேண்டும் என்பதே எனது இலட்சியமாகும். ஐரோப்பியக் கண்டத்தில் கடந்த 70 ஆண்டுகளாக நிலவி வருகின்ற அமைதி நமது ஒட்டுமொத்த வரலாற்றிலான ஒரு வழிவிலகலே என்பதை நாம் மறந்து விட்டிருக்கிறோம். ஆனால் அச்சுறுத்தல் நம் வாயிற்படியில் நிற்கிறது, போர் நம் கண்டத்தில் நிற்கிறது.”
போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கமும் உருக்குலைந்து செல்வதன் மத்தியில், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளின் மூலம் ஒரு முடிவெடுக்கும் நிலை நிர்ப்பந்தமாகியிருக்கும் நிலையில், அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பதட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. வட கொரியாவுக்கு எதிராய் அணுஆயுதங்களை கொண்டான ஒரு இனஅழிப்புக்கு ட்ரம்ப் விடுக்கின்ற காட்டுமிராண்டித்தனமான அச்சுறுத்தல்கள் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கங்களை அவர்களது சொந்த ஏகாதிபத்தியப் போர்களுக்கு தயாரிப்பு செய்யும் வகையில் அவற்றின் இராணுவப் படைகளை கட்டியெழுப்புவதற்கு உந்திக் கொண்டிருக்கின்றன. இந்த இராணுவப் பெருக்கத்துக்கான செலவை ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் முதுகில் கட்டுவதற்கு அவர்கள் தீர்மானத்துடன் உள்ளனர்.
தொழிலாளர்களது சமூக உரிமைகளை வெட்டுவதன் மூலம் மிச்சப்படுத்தப்படுகின்ற பில்லியன் கணக்கான யூரோக்கள் இராணுவப் படைகளை வலுப்படுத்துவதற்கும் பிரான்சை இராணுவமயமாக்குவதற்கும் செலவிடப்பட நோக்கம் கொள்ளப்பட்டிருக்கிறது, அதேநேரத்தில், பிரான்சின் ஜனநாயக-விரோதமான அவசரகாலநிலையின் மூலம் அளிக்கப்பட்ட அசாதாரணமான போலிஸ் அதிகாரங்களை நேரடியாகவும் நிரந்தரமாகவும் பொதுச் சட்டத்திற்குள் மாற்றுவதற்கு மக்ரோன் நோக்கம் கொண்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை உத்தரவுகளுக்கும், சர்வாதிகாரம் மற்றும் போரின் பெருகும் அபாயங்களுக்கும் முகம்கொடுத்து நிற்கின்ற பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலுமான தொழிலாளர்கள் ஒரு அரசியல் மற்றும் புரட்சிகரப் போராட்டத்தின் அவசியத்துக்கு முகம்கொடுத்து நிற்கின்றனர்.