Print Version|Feedback
French unions try to strangle workers’ opposition to Macron
பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மக்ரோன் மீதான தொழிலாளர் எதிர்ப்பின் குரல்வளையை நெரிக்க முயல்கின்றன
By Anthony Torres and Alex Lantier
19 September 2017
பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் உத்தரவாணைகள் தொழில் விதிமுறைகளைத் தாக்குவதுடன், பாரிய வேலைநீக்கங்களுக்கும் கூலிகள் மற்றும் அடிப்படை சலுகைகள் மீது ஒருதலைபட்சமான வெட்டுக்களுக்கும் வசதி செய்தளிக்கின்ற நிலையில், அதன் மீது அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க கோபத்தைக் கண்டு, தொழிற்சங்க அதிகாரத்துவம் மக்ரோனுக்கு எதிரான எதிர்ப்பின் குரல்வளையை நெரிக்க முயன்று வருகிறது. தொழிலாள வர்க்கத்தின் போர்குணத்தை தணிக்கவும், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு புரட்சிகர அணிதிரள்வுகளுக்குள் வேலைநிறுத்தங்கள் ஐக்கியமாவதைத் தடுக்கவும் நோக்கம் கொண்டு, தொழிற்சங்க அதிகாரத்துவம் வெவ்வேறு தொழிற்துறைகளில் சுழற்சி முறையிலான வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைத்து வருகிறது.
தொழிலாளர் போராட்டங்களின் ஒரு வெடிப்பை முகங்கொடுத்துள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோமோ என்று அஞ்சுவதுடன், அவை அரசாங்கத்துடன் அவற்றின் நடவடிக்கைகளை நெருக்கமாக ஒருங்கிணைத்து வருகின்றன. வெவ்வேறு தொழிற்சங்க கூட்டமைப்புகள் பல ஒருநாள் வேலைநிறுத்தங்களை வெவ்வேறு தேதிகளில் அறிவித்து வருகின்றன. நேற்று ட்ரக் ஓட்டுனர்களின் பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பும் (CFDT) பிரெஞ்சு கிறிஸ்துவ தொழிலாளர்கள் ஒன்றியமும் (CFTC) பாரீசிலும் மாகாணங்களிலும் முற்றுகை போராட்டங்களை ஏற்பாடு செய்தன. தொழிலாளர்களின் பொது கூட்டமைப்பும் (CGT) தொழிலாளர் சக்தியும் (FO) செப்டம்பர் 25 இல் ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்து வருகின்றன, அது எரிபொருள் நிரப்பு நிலையங்களை பாதிக்கும்.
தேசியளவிலான நடவடிக்கைக்கான இரண்டாவது நாளாக செப்டம்பர் 21 திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத்துறை தொலைக்காட்சி மற்றும் பாரீஸ் பொதுத்துறை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அந்நாளில் வேலைநிறுத்தங்களை அறிவித்துள்ளன, ஒன்பது தொழிற்சங்க அமைப்புகள் ஓய்வூதியதாரர்களை செப்டம்பர் 28 இல் பாரீஸில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) மற்றும் Solidaires தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த செப்டம்பர் 12 இல் நடந்த போராட்டத்தில் பங்கெடுக்க மறுத்த CFDT, அதில் சுமார் 400,000 பேர் கலந்து கொண்டிருந்த நிலையில், அக்டோபர் 3 இல் பாரீஸ் நிகழ்வு மையத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்து வருகிறது. அக்டோபர் 10 இல், பொதுத்துறை பணியாளர்களின் தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுக்கும்.
இதுவரையில் தொழிற்சங்கங்கள் சுத்திகரிப்பு ஆலைகளில் வேலைநிறுத்தங்களை அறிவிக்கவில்லை. ஆனால் முன்னணி அரசியல்வாதிகள், 2010 மற்றும் 2016 இல் பிரான்ஸ் எங்கிலும் எரிவாயு நிரப்பு நிலையங்களில் விரைவாக எரிபொருள் வினியோகங்கள் முடுங்குவதற்கு இட்டுச் சென்ற அதுபோன்றவொரு இயக்கத்தின் அபாயம் குறித்து விவாதித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசு எந்திரத்திற்குள்ளே நிலவும் வெடிப்பார்ந்த மோதல்களுக்கான ஒரு அறிகுறியாக, பிரான்சின் சிறப்பு கலகம் ஒடுக்கும் பொலிசில் கால்வாசி பேர் —தேசியளவில் 36 படைப்பிரிவுகளில் 9— அவர்களை இலக்கில் வைத்த வரவு-செலவு திட்டக்கணக்கு வெட்டுக்களுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
உள்ளாட்சி தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொழிலாளர்களிடையே தீவிரமடைந்து வரும் அதிருப்தி குறித்து தெரிவித்துள்ளன, CFDT-உலோகத்துறை கூட்டமைப்பின் விடயத்தைப் போல, அவை தொழிலாளர்களிடம் முழுமையாக மதிப்பிழப்பதை தவிர்ப்பதற்காக அடையாள போராட்டங்களுக்கு அழைப்புவிடுக்க தொழிற்சங்க தலைமைகளுக்கு அழுத்தமளித்து வருகின்றன.
L'Agence France-Presse க்கு கிடைத்த ஒரு கடிதத்தின்படி, CFDT-உலோகத்துறை கூட்டமைப்பு CFDT தலைவர் லோரன்ட் பேர்ஜியேருக்கு எழுதியதாவது, “ஒரு தேசிய போராட்டத்திற்கு அழைப்புவிடுக்காமல் இருக்க தெரிவு செய்யப்பட்டுள்ளது,” “இந்த முடிவு பல அங்கத்தவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது, அவர்கள் தனியார் துறையின் மிகப்பெரிய தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் CFDT இடமிருந்து ஒரு மிக பலமான விடையிறுப்பை எதிர்பார்த்திருந்தார்கள். … நமது கூட்டமைப்பின் பொதுக்குழு அங்கத்தவர்களாக பதவி வகிக்கும் நாம் என்ன நிறைவேற்ற வேண்டுமென அங்கத்தவர்கள் கோருகிறார்கள் என்றால், தேசியளவில் போராட்டங்களுக்கான CFDT இன் ஓர் அழைப்பாகும்.”
சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அவசரகால நிலையை திணித்துள்ள அரசுக்கும், தொழிலாளர்களின் கோபத்தை பாதிப்பில்லா போராட்டங்களுக்குள் திசைதிருப்புவதற்காக அரசின் அத்தகைய கொள்கைகளை எதிர்ப்பது போல நடித்துக் கொண்டிருக்கும் தொழிற்சங்க உயரதிகாரிகளுக்கும் இடையிலான முறையற்ற தொடர்புகள், பகிரங்கமாக உள்ளன. மக்ரோனுக்கும், தொழிலாளர் சக்தியின் (FO) தலைவர் ஜோன்-குளோட் மைய்யி, லோரன்ட் பேர்ஜியேர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முரியேல் பெனிக்கோவுக்கும் இடையே ஆகஸ்ட் 28 இல் இரண்டு இரகசிய சந்திப்புகள் நடந்ததை நையாண்டி வாரயிதழ் Canard enchaîné அம்பலப்படுத்தியது. Canard இன் தகவல்படி, மைய்யி மற்றும் பேர்ஜியேர் "அவர்களின் தொழிற்சங்க அடித்தளத்தை கட்டுப்பாட்டில் வைக்க முடியுமா" என்பதை அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.
இதுபோன்ற சந்திப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன, குறிப்பாக செப்டம்பர் 14 இல் வணிக வட்டத்தின் குழுக்களது தலைவர்களுக்கும் தொழிற்சங்க கூட்டமைப்புகளின் தலைவர்களுக்கும் இடையே செனட்டில் விவாதம் நடந்தது, இதில் பெனிக்கோ மற்றும் பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் கலந்துகொண்டனர். “சுமூகமாக" அல்லது "பழைய நண்பர்களுக்கு இடையிலான ஒரு விவாதம்" என்று Le Monde குறிப்பிட்ட அந்த விவாதத்தில், எட்வார்ட் பிலிப் CGT தலைவர் பிலிப் மார்ட்டினேசிடம், CGT கூறும் "விமர்சனங்களின் நியாயத்தை" அவர் புரிந்துகொண்டதாக வலியுறுத்தினார்.
தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு பயிற்சியளிக்க நிதி வழங்குவதன் மீது "மிகவும் உற்சாகமாக" இருந்ததாக பெனிக்கோ தெரிவித்தார், இது மக்ரோனின் உத்தரவாணைகள் எதன் வழியாக நிறைய பெருநிறுவன பணத்தை தொழிற்சங்க கஜானாக்களுக்குள் அனுப்புகிறதோ அப்பாதைளில் ஒன்றாகும். தொழிற்சங்கங்கள் அவற்றின் தொழிலாள வர்க்க அடித்தளம் வீழ்ச்சி அடைந்து அவ்விதத்தில் அவர்களின் சந்தா தொகையும் சரிந்ததன் காரணமாக 1980 களுக்குப் பின்னர் இருந்து ஆழ்ந்த நிதி நெருக்கடியில் இருந்து வந்துள்ள நிலையில், அவை தற்போது அவற்றின் வரவு-செலவு திட்டகணக்கின் 95 சதவீதத்தை அரசு மற்றும் வணிக நிதிகளைச் சார்ந்திருப்பதாக ஓர் உத்தியோகபூர்வ நாடாளுமன்ற அறிக்கை தெரிவிக்கிறது.
அரசாங்கம் அதன் அமைச்சரக பதவிகளில் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள பலரை உள்ளடக்கி உள்ளது. தொழிலாளர் சக்தி தலைவர் ஜோன்-குளோட் மைய்யி க்கு அடுத்து இரண்டாவது ஸ்தானத்தில் இருந்த Stéphane Lardy ஐ, பெனிக்கோ கடந்தாண்டு சமூக விவகாரங்களுக்கான பொது ஆய்வாளர் இயக்குனரகத்தில் பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சி பிரச்சினைகளுக்கான ஓர் ஆலோசகராக நியமித்தார். ஒரு பொருளாதார பேராசிரியரும் இமானுவல் மக்ரோனின் திருமணத்திற்கு சாட்சியமாகவும் இருந்த மார்க் ஃபெர்ராச்சி CGT க்கான தொடர்பு அலுவலகராக சேவையாற்றுகிறார். மார்க்கின் தந்தை பியர் ஃபெர்ராச்சி Secafi நிறுவனத்தை நடத்துகிறார், இது CGT க்கு ஆலோசனை மற்றும் நிதி திட்டமிடலை வழங்குகிறது.
இதுபோன்ற தொடர்புகள், தொழிலாளர்களின் கோரிக்கைகளை தொழிற்சங்க தலைவர்களுக்கு அனுப்பும் மூலோபாயத்தின் அரசியல் திவால்நிலைமையை எடுத்துக்காட்டுகின்றன. தொழிற்சங்க தலைவர்களுடன் பேரம்பேச அரசுக்கு அழுத்தமளிப்பதென்பது, முடிவெடுப்பதற்கான அனைத்து அம்சங்களையும் அதே தொழிலாள வர்க்க விரோத ஆளும் உயரடுக்கின் பல்வேறு அங்கத்தவர்களின் கரங்களில் விடுவதாக உள்ளது. மக்ரோன் அவசரகால நிலையை பொதுச்சட்டமாக எழுதி நிரந்தரமாக்கவும், அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு செலவினங்களுக்கு பில்லியன் கணக்கான யூரோக்களைச் செலவிடுவதற்கும் தயாரிப்பு செய்து வருகையில், தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்க போராட்டத்தை அல்ல, மாறாக ஓர் அரசியல் போராட்டத்தை முகங்கொடுக்கிறார்கள்.
இத்தகைய போராட்டங்களுக்கு அரசியல் தலைமை வழங்குவதற்காக, தொழிற்சங்கங்களை பிரதியீடு செய்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கான புதிய அமைப்புகளை உருவாக்க, அனைத்திற்கும் மேலாக ஒரு புதிய புரட்சிகர கட்சியை, சோசலிச சமத்துவக் கட்சியை (Parti de l’égalité socialiste) உருவாக்க அவர்கள் நிர்பந்திக்கப்படுவார்கள்.
மக்ரோனுக்கான எதிர்ப்பானது, ஐரோப்பா எங்கிலும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் சர்வாதிகாரம் மற்றும் போர் அபாயங்களுக்கும் எதிராக தொழிலாளர்களும் இளைஞர்களும் பரந்தளவில் தீவிரமயப்படுவதன் பாகமாகும். பிரெஞ்சு மக்களில் 68 சதவீத மக்கள் மக்ரோனின் தொழில் சம்பந்தமான உத்தரவாணைகளை எதிர்க்கின்றனர், 55 சதவீதத்தினர் இத்தகைய கொள்கைகளுக்கு எதிராக வேலைநிறுத்த நடவடிக்கையை ஆதரிக்கின்றனர், அதேவேளையில் மக்ரோனின் செல்வாக்கு விகிதம் 30 சதவீதம் சரிந்துள்ளது. இது ஐரோப்பா எங்கிலும் பெருந்திரளானவர்கள் பரந்தளவில் தீவிரமயப்படுவதன் பாகமாக உள்ளது, இது, இந்தாண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின்படி, பெரும்பான்மை இளைஞர்கள் தற்போதைய ஒழுங்கை தூக்கியெறிவதற்கான ஒரு பாரிய இயக்கத்தில் இணைய விரும்புவதாக அறிவிப்பதைக் கண்டது.
இந்த எதிர்ப்பானது இன்றியமையாத விதத்தில் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் மக்ரோன்-பிலிப் அரசாங்கத்திற்கு இடையிலான பேரம்பேசல்களின் மோசடி சூழலில் சுருங்கி விதத்தில் அபிவிருத்தி அடைய முடியாது, அவர்கள் அனைவரும் அனைத்திற்கும் மேலாக உலக சந்தையின் மீது பிரெஞ்சு நிறுவனங்களின் இலாபத்தை ஊக்குவிக்க முயன்று வருகின்றனர். ஐரோப்பா எங்கிலும் அதிகரித்து வருகின்ற தொழிலாள வர்க்க எதிர்ப்பை தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் நடத்தப்படும் புரட்சிகர போராட்டங்களில் ஐக்கியப்படுத்துவதே பணியாகும்.
இந்த அடிப்படையில், ஜோன்-லூக் மெலோன்சோனின் சூழ்ச்சிக்கையாளல்களை நம்பக்கூடாது, அவர் தொழிற்சங்க போராட்டங்களையும் மற்றும் மக்ரோனுக்கான "பிரதான" எதிர்ப்பாளராக ஊடங்களில் உள்ள அவரது அந்தஸ்தையும் பயன்படுத்தி மக்ரோனின் பிரதம மந்திரியாக ஆகலாமென நம்புவதாக நேற்று ஐரோப்பா1 க்குத் தெரிவித்தார். அவர் நவம்பர்-டிசம்பர் 1995 இல் அப்போதைய பிரதம மந்திரி அலென் யூப்பே இன் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பிரெஞ்சு இரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை குறிப்பிடுகையில் இதை விவரித்தார்.
மெலோன்சோன் "ஒரு முன்னுதாரணத்தை மனதில் கொண்டுள்ளார்: யூப்பே சீர்திருத்தங்களுக்கு எதிரான 1995 போராட்டங்கள். ஒரு சக்தி வாய்ந்த சமூக இயக்கம் இறுதியில் அப்போது, ஓராண்டுக்குப் பின்னர், நாடாளுமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக [அது பன்முக இடதையும் தனிப்பட்டரீதியில் மெலோன்சோனையும் அரசாங்கத்திற்குள் கொண்டு வந்தது] யூப்பே அவரது வெட்டுக்களைக் கைவிட இட்டுச் சென்றது. '1995 இல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது இருந்த சக்திகளின் உறவுமுறை இல்லை என்பதை சிராக் புரிந்து கொண்டிருந்தார்,' என்று மெலோன்சோன் தெரிவித்தார். 'இந்நாட்டை நாம் ஆள்வோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்! நாம் போர் இயக்கங்களில் உள்ளோம்.'” என்றது குறிப்பிட்டது.
மக்ரோன் அரசாங்கத்திற்குள் நுழைவதற்கான இந்த மூலோபாயம் தொழிலாளர்களுக்கு வைக்கப்படும் பொறியாகும். மக்ரோன்-மெலோன்சோன் ஆட்சியானது பிரான்சில் 1990 களில் இருந்த பன்முக இடது அரசாங்கம் அல்லது, மிக சமீபத்தில் மெலோன்சோனின் கூட்டாளி தலைமையில் அமைந்த கிரேக்க அரசாங்கம், தீவிர இடதின் கூட்டணி (சிரிசா) ஆகியவற்றை போலவே தொழிலாளர்-விரோத கொள்கைகளைத் திணிக்கும். சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்க பாவனை காட்டிய பின்னர், இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடிபணிந்து, தொழிலாளர்களுக்கு எதிராக ஆழ்ந்த வெட்டுக்களை திணித்தது. தொழிற்சங்கங்களுடன் அவர் கூட்டணி மூலமாக மெலோன்சோன் அபிவிருத்தி செய்து வரும் இதுபோன்றவொரு முன்னோக்கு, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பிற்போக்குத்தனமான முட்டுச்சந்தாகும்.