Print Version|Feedback
Hundreds of thousands march against Macron’s austerity measures in France
பிரான்சில் மக்ரோனின் சிக்கனக் கொள்கை நடவடிக்கைகளுக்கு எதிராக நூறாயிரக் கணக்கானவர்கள் அணிவகுக்கின்றனர்
By Alex Lantier and Anthony Torres
13 September 2017
பாரிய வேலைநீக்கங்கள், சம்பள மற்றும் சலுகை வெட்டுக்கள் மற்றும் வேலைகளை வேகப்படுத்தலுக்கு பாதை அமைக்கும் வகையில், பிரான்சின் தொழில் விதிமுறைகளைத் தகர்ப்பதற்கான ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் திட்டங்களுக்கு எதிராக நேற்று சுமார் 400,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்ரோனின் தொழில் "சீர்திருத்தங்கள்" பாரியளவிலான சிக்கன நடவடிக்கைகளின் மையத்திலிருக்கும் ஒரு சிறிய பகுதியாகும், அரசு ஓய்வூதிய நிதிகள் மற்றும் வேலைவாய்ப்பற்றோர் சலுகைகளை வெட்டுவதும் அவர் திட்டங்களில் உள்ளடங்கி உள்ளன.
பாரீஸில் (தொழிற்சங்கங்களின் தகவல்படி 60,000 பேர்), மார்சைய்யில் (60,000 பேர்), துலூஸ் (16,000), நான்ந் (15,000), போர்தோ (12,000), லியோன் (10,000), ரென் (10,000), நீஸ் (5,000) மற்றும் பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப்பின் சொந்த நகரமான லு ஆவ்ர் (3,400 பேர்) என இவ்விடங்களில் பெரியளவில் போராட்டங்கள் நடந்தன. மே மாதம் மக்ரோன் தேர்வானதற்குப் பின்னர் இதுவே தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட முதல் போராட்டமாகும். பாரீஸில், 13 வது மாவட்டத்தில் போராட்டக்காரர்களைத் தாக்குவதற்கு பொலிஸ் நீர்பீய்ச்சிகளைப் பயன்படுத்தியது, அதேவேளையில் லியோன் மற்றும் நான்ந்தில் இளைஞர்களுக்கும் பொலிஸிற்கும் இடையே மோதல்களும் ஏற்பட்டன.
பாரீஸ் ஆர்ப்பாட்டத்தில் ஒரு பதாகை: “எல்லாவற்றிலும் இசைந்து கொடுக்கும் நிலை, பாதுகாப்பு எங்கேயும் இல்லை"
மக்ரோனின் "தொழில் சீர்திருத்தங்களை", அமெரிக்கா மற்றும் ஜேர்மனி உட்பட உலகெங்கிலுமான ஆளும் வர்க்கங்கள், தொழிலாள வர்க்கத்தின் மீதான சர்வதேச தாக்குதல்களில் ஒரு புதிய சுற்றினது தாக்குமுகப்பாக பார்க்கின்றன. நியூ யோர்க் டைம்ஸ், "பேராசை கொண்ட முதலாளித்துவவாதிகளுக்கு எதிராக நிரந்தர பாதுகாப்பு கோரும் தொழிலாளர்களின் எண்ணப்போக்கை" மக்ரோனின் நடவடிக்கைகள் புரட்டி போடக்கூடியதாக பாராட்டியதுடன், “குறைந்தபட்சம் ஒரு கால் நூற்றாண்டாக, அடிப்படை சீர்திருத்தத்திற்கான ஒவ்வொரு முயற்சியும் மிகப் பிரமாண்டமான சிலவேளைகளில் வன்முறையான" மக்கள் ஆர்ப்பாட்டங்களால் "சீர்குலைக்கப்பட்டிருப்பதாக" புலம்பியது.
மக்ரோனின் செல்வாக்கு விகிதம் வீழ்ச்சியடைந்து வருகிறது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பெரும் பெரும்பான்மையினர் நாடாளுமன்ற வழிமுறைகளின்றி உத்தரவாணைகள் மூலமாக ஒரு சமூக எதிர்புரட்சியைத் திணிக்கும் அவர் திட்டங்களை எதிர்க்கின்றனர். இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலில் பாரியளவிலான மக்கள் வாக்களிக்கவில்லை என்பதோடு, பிரான்சின் பாரம்பரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், மக்ரோன் அத்தேர்தலில் நவ-பாசிசவாத மரீன் லு பென்னைத் தோற்கடித்து, ஜனாதிபதி பதவியை வென்று கொண்டார்.
விசாரணையின்றி மக்களை வீட்டுக்காவலுக்கு உள்ளாக்குவது உட்பட ஜனாதிபதி பதவிக்கு "அசாதாரண அதிகாரங்கள்" வழங்கும், பிரான்சின் அவசரகால நிலையின் பின்புலத்தில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நவம்பர் 2015 இல் இருந்து நடைமுறையில் இருந்து வரும் இந்த அதிகாரங்கள், மக்ரோன் மற்றும் அவருக்கு முன்பிருந்த சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் இருவராலும் தொழிற்சட்ட சீர்திருத்தங்களை எதிர்ப்பவர்களை வழக்கில் இழுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலக சோசலிச வலைத் தள (WSWS) செய்தி தொடர்பாளர்கள் பாரீஸ், மார்சைய், மற்றும் வடக்கு பிரான்ஸ் பகுதி போராட்டங்களில் பங்குபற்றினர். போராட்டக்காரர்கள் தொழில் விதிமுறைகளை அழிப்பதற்கு மட்டும் தங்களின் எதிர்ப்பைக் காட்டவில்லை, மாறாக போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கான உந்துதலையும் எதிர்த்தனர். பலரும், தொழிற்சங்கங்கள் மற்றும் தற்போதைய கட்சிகள் மீது அவர்களின் அவநம்பிக்கையை வெளிப்படுத்தினர். நவ-பாசிசவாத மற்றும் ஒரு சுதந்திர சந்தை சித்தாந்தத்திற்கு இடையே ஏதாவதொன்றை தேர்வு செய்ய வேண்டியிருந்த தேர்தல்களுக்குப் பின்னர், அரசியல் அமைப்புமுறையே வெறுப்பாக இருப்பதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.
பாரீசில் Nathanaël கூறுகையில், “எங்கள் மனக்குறையைக் காட்ட, போராடுவது மட்டுமே எங்களிடம் இருக்கும் ஒரே வழி. ஐந்தாம் குடியரசைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புகள் தோல்வி அடைந்துவிட்டன, அவை பல ஆண்டுகளாகவே தோல்வி அடைந்து வந்துள்ளன. நானொரு உயர்நிலை பள்ளி மாணவன். நான் வாக்களிக்கவில்லை, நான் வாக்களித்தாலும் கூட, அது எதையும் எனக்கு வழங்குமென நான் காணவில்லை. நான் ஏன் வாக்களிக்க வேண்டுமென எனக்கு தெரியவில்லை. சமூக பாதுகாப்பு இவ்வாறு செயல்படக்கூடாது, சட்டத்தின் ஆட்சி இவ்வாறு நடக்கக்கூடாது. … எங்கள் குரலை கேட்குமாறு செய்வதற்காக, இப்போது நாங்கள் வீதியில் இறங்கி போராட நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்,” என்றார்.
பாரீஸின் பாஸ்டி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமான முன்னோக்கில் அணிதிரட்டுவதற்கு தயாரிப்பு செய்ய, ஜனாதிபதி தேர்தல்களை செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste) அழைப்புவிடுத்தமை குறித்து வினவிய போது, அவர் தெரிவித்தார்: “நான் பெரும்பாலும் அதனுடன் உடன்படுகிறேன். [நவ-பாசிசவாத] தேசிய முன்னணியின் இந்த கேடுவிளைவிக்கும், அபாயகரமான கருத்துக்களை நான் முற்றிலும் எதிர்க்கிறேன், ஆனால் வாக்களித்து யாரையாவது ஆதரிக்க வேண்டியுள்ளது. ஆனால் வாக்களிப்பது இந்த அமைப்புமுறையை, இந்த அமைப்புகளை ஆதரிப்பது என்றாகிறது.”
Nathanaël மே 1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தைச் சுட்டிக்காட்டினார்: “தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது மட்டுமே செய்யக்கூடிய ஒரே காரியமாக உள்ளது. நாம் ஒரு தொழிற்சங்க போராட்டத்தில் இல்லை, மாறாக ஓர் அரசியல் போராட்டத்தில் உள்ளோம். … நாம் மே '68 போன்றவொரு போராட்டத்திற்கு நெருக்கத்தில் உள்ளோம்,” என்றார்.
பிரான்சின் மிக ஒடுக்குமுறையான அவசரகால நிலை சட்டத்தை பொதுச்சட்டமாக எழுதுவதற்கான மக்ரோனின் திட்டங்களை அவர் கண்டித்தார்: “அது பொது சட்டத்தின் ஆட்சியை முற்றிலுமாக மீறுகிறது,” என்றார். “என் உயர்நிலை பள்ளியில் இதை நான் மிகத் தெளிவாக பார்க்கிறேன், அன்றாடம் அவர்கள் எங்கள் பைகளைச் சோதனையிடுகிறார்கள், எங்கள் அடையாள அட்டைகளை சரி பார்க்கிறார்கள், இராணுவத்தினர் காவலில் உள்ளனர், கம்பிகளால் அடைக்கப்பட்டுள்ளன, புதிய தந்திரங்கள் கையாளப்படுகின்றன. உயர்நிலைப் பள்ளி அல்லது இளநிலை உயர்கல்வி பள்ளி மாணவர்களுக்கான இந்த சூழல் ஆரோக்கியமானதல்ல. பள்ளிகளில் இருந்து கற்றுக் கொள்வது சுதந்திரமும் அல்ல பொதுச்சட்டத்தின் ஆட்சியும் அல்ல” என்றார்.
போர் அபாயத்தை முகங்கொடுத்துள்ள இளைஞர்களின் கவலையை வலியுறுத்த அவர் கொரிய நெருக்கடியை எழுப்பினார்: “என்னைப் பொறுத்த வரையில், வட கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவுகளை வைத்து பார்த்தால், அச்சுறுத்தல் அதிகளவில் வட கொரியாவிடம் இருந்து வரவில்லை. ட்ரம்ப் அகம்பாவத்துடன் பிடிவாதமாக உணர்ச்சிவயப்பட்டு செயல்படுகிறார், உண்மையில் இவரை விவரிப்பதற்காக நாம் பயன்படுத்தும் சொற்களுக்கு கூட, இவர் தகுதியுடையவர் கிடையாது.”
ஊடகங்கள் போராட்டக்காரர்களைச் சட்டம் ஒழுங்கை முன்னிறுத்தி குறைகூறுவதையும் Nathanaël எதிர்த்தார்: “நானொரு நாசகாரன் கிடையாது, நான் கடை முகப்புகள் மீது கற்களை வீசப் போவதில்லை. … ஆனால் ஊடக ஒலி/ஒளிபரப்புகளில் ஒட்டுமொத்தமாக இதுபோன்ற அதிவலது வாய்ச்சவடாலும் மொழிகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன.”
“உங்களது உத்தரவாணைகள் என்னை சினம்கொள்ள வைக்கின்றன"
உலக சோசலிச வலைத்தளம் சரா என்ற மற்றொரு மாணவியுடனும் பேசியது, அவர் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மையை மற்றும் மக்ரோனின் கீழ் பிரான்ஸ் ஒடுக்குமுறைக்கு திரும்புவதை விமர்சித்தார்: “இவ்விதத்தில் சட்டங்களை நிறைவேற்றுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. குறிப்பாக தொழில்சார் பிரச்சினைகளில், நான் சிறிதும் மக்ரோன் தரப்பில் கிடையாது. அவரைப் பொறுத்தவரை, நாம் ஒன்றும் தெரியாத ஒரு நபரைக் கையாள வேண்டியுள்ளது. ஒப்பந்தங்களைக் கொண்டு அவர் என்ன செய்ய விரும்புகிறார்? எங்கே 5 ஆண்டுகளுக்கு தற்காலிக ஒப்பந்தம் இருக்கிறது? இது அசாதாரணமானது,” என்றார்.
அம்மாணவி தொடர்ந்து கூறுகையில், “மனிதவள மேம்பாட்டுத்துறையில் (Human Resources) பணியாற்ற நான் படித்து வருகிறேன். நான் சற்று அனுபவமில்லாதவள். வேலை சுலபமாக இருக்கும், தொழிலாளர்களுக்கு உதவுவதாக இருக்குமென நான் நினைத்தேன். ஆனால் இப்போது, நேரம் கடந்து கொண்டிருக்கிறது, நான் வயதில் சிறியவள் என்றாலும் வேலையிட உலகில், உறவுகள் உண்மையிலேயே வக்கிரமாக உள்ளன என்பதை நான் உணர்ந்து வருகிறேன். மக்ரோன் அந்த வக்கிரத்தன்மையை இன்னும் அடுக்கடுக்காக ஒருங்குவித்துக் கொண்டிருக்கிறார்,” என்றார்.
அவசரகால நிலை குறித்து அவர் கூறுகையில், “மக்களைப் பீதியூட்டுவது தான் அதன் முக்கிய நோக்கமென்று நினைக்கிறேன். அது மக்களை பயமுறுத்துகிறது, மேலும் வெளிப்படையாக சாதாரண இளைஞனாக, யுவதியாக பாஸ்டி சதுக்கத்திற்கு வரும்போது [இங்கே தான் ஆர்ப்பாட்டம் தொடங்கியது] … நாம் அடிப்படையில் ஒருவகையான சர்வாதிகாரத்தின் கீழ் உள்ளோம். இது, நாம் வரலாற்று புத்தகங்களில் இருந்து தெரிந்து கொண்ட சர்வாதிகாரங்களின் வகை இல்லை, மாறாக ஜனாதிபதி அவர் அதிகாரத்தைப் பயன்படுத்தும் விதத்தைப் பார்த்தால், மிகவும் மோசமான விடயங்கள் நடந்து வருகின்றன என்று நினைக்கிறேன்,” என்றார்.
ஒருபுறம் போராட்டத்திற்குள் நுழையும் மாணவர்கள் இளைஞர்களுக்கும், மறுபுறம் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் போலி இடது கட்சிகளுக்கும் இடையே ஒரு வர்க்க பிளவு உள்ளது. அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் (La France insoumise – LFI) ஜோன் லூக் மெலோன்சோன் போன்ற போலி இடது அரசியல் சக்திகளும் தொழிற்சங்கங்களும், ஹோலாண்டின் போர் கொள்கைகள் மற்றும் சிக்கன கொள்கைகளால் மதிப்பிழந்த சோசலிஸ்ட் கட்சியின் (PS) பொறிவுக்கு, போர்குணமிக்க மாற்றீடுகளாக தங்களை முன்வைக்க முயன்று வருகின்றன. ஆனால் உண்மையில் அவர்கள் இந்த அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஆழமாக ஒருங்கிணைந்துள்ளதுடன், பாட்டாளி வர்க்கத்தின் ஒரு புரட்சிகர போராட்டத்திற்கு விரோதமாகவும் உள்ளனர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான Parti de l'égalité socialiste இன் நோக்கம் அவ்விதமான ஒரு போராட்டத்தை முன்னெடுத்து செல்வதாகும்.