Print Version|Feedback
India and Japan strengthen their anti-China “strategic partnership”
இந்தியாவும் ஜப்பானும் அவர்களது சீன எதிர்ப்பு “மூலோபாய கூட்டுழைப்பை” வலுப்படுத்துகின்றனர்
By Wasantha Rupasinghe and Keith Jones
18 September 2017
கடந்த வாரம் ஜப்பான் பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இந்தியாவிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டதை டோக்கியோவும் புது தில்லியும், இந்திய பசிபிக் பிராந்தியம் முழுவதிலுமான பரந்த இராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு திட்டமிடவும், மேலும் ஆபிரிக்காவில் சீன செல்வாக்கை எதிர்கொள்ள கூட்டு பொருளாதார மற்றும் மூலோபாய முயற்சிகளை முன்னெடுப்பதற்கும் ஏற்புடையதான அவர்களது சீன எதிர்ப்பு “மூலோபாய கூட்டுழைப்பை” மேலும் வலுப்படுத்த பயன்படுத்திக் கொண்டன.
ஜப்பானின் பிரதான மூலோபாய பங்காளியான அமெரிக்கா, கொரிய தீபகற்பத்தின் மீதானதொரு “முன்கூட்டி தாக்கும் போர்” ஐ ஆரம்பிக்க திரும்ப திரும்ப அச்சுறுத்தி வருகின்ற நிலைமையின் கீழ், மேலும் அச்சுறுத்தும் வகையில், வட கொரியாவை அதன் அணுஆயுதத் திட்டத்தை கைவிட செய்வதற்கு கட்டாயப்படுத்தும் வகையில் ஜப்பான் எடுத்துவரும் முயற்சிகளில் அதனுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்ற வகைசெய்யும் இந்தியாவின் ஒரு உறுதிமொழியை இது உள்ளடக்கியது. மேலும், ஜப்பானிய மறுஆயுதமயமாக்கலை விரைவு படுத்தவும், மற்றும் ஆக்கிரமிப்பு, இராணுவவாத வெளியுறவுக் கொள்கையை தொடர்கின்ற டோக்கியோ மீதான எஞ்சியுள்ள அரசியலமைப்பு கட்டுப்பாடுகளை நீக்கவும் வட கொரியாவுடனான அமெரிக்க தூண்டுதலிலான நெருக்கடியை அபே சுரண்டி வருகிறார்.
அபேயும் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவர்களது பொது அறிவிப்புகளிலும், கடந்த வியாழனன்று நடந்த உச்சிமாநாட்டின் முடிவில் அவர்கள் வெளியிட்ட நீண்ட அறிக்கையிலும் சீனாவைப் பற்றி குறிப்பிடுவதை மிகநுட்பமாக தவிர்த்தனர். ஆனால், இந்திய ஜப்பானிய கூட்டணியை வலுப்படுத்துவதற்கான முக்கிய உந்துதல் காரணியாகவும், அவர்களது உந்துதலுக்கான இலக்காகவும் சீனா தான் இருக்கிறது என்பதில் யாருக்கும் எந்தவொரு ஐயப்பாடும் இல்லை.
உச்சிமாநாட்டை எதிர்நோக்கிய நிலையில், புது தில்லி சீனாவுடனான அதன் 73-நாள் எல்லை சச்சரவு மற்றும் போர் நெருக்கடிக்கும் விடையிறுப்பாக ஜப்பானுடனான அதன் உறவுகளை அதிகரிக்கும் என்பதாக விவாதிக்கக்கூடிய தலையங்கங்கள் மற்றும் கருத்தாக்கங்களால் இந்திய ஊடகங்கள் நிரம்பி இருந்தன.
பூட்டான் சிறிய நாடு என்பதற்கு அப்பாற்ப்பட்டு அந்த பிராந்தியத்தை புது தில்லி பாதுகாப்பதாக உரிமை கோரும் நிலையில், டோக்லாம் பீடபூமி மீதான பதட்டம் நிறைந்த இராணுவ நிலைப்பாட்டின் போது அதனை வெளிப்படையாக ஆதரித்த ஒரே நாடாக ஜப்பான் இருந்ததென பரவலாக அத்தகைய விளக்கவுரை வலியுறுத்தியது.
Indian Express ஐ பொறுத்தவரை, டோக்லாம் மோதல் நிலைப்பாடு சம்பந்தமான விவாதத்தை மோடியுடன் தனிப்பட்ட முறையில் அபே எழுப்பினார் என்பதோடு, நெருக்கடியின் போது “களத்தில் அவரது ஸ்திரப்பாடு” குறித்து அவரை “பாராட்டவும் செய்தார்” என்று தெரிவிக்கிறது.
மோடியும் அபேயும் அவர்களது கூட்டறிக்கையில், அவர்களது “பூகோள” கூட்டுழைப்பை வலியுறுத்தி பலகை முழுவதிலும் இந்திய ஜப்பானிய இராணுவ மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டங்களை உருவகப்படுத்தினர். “கண்காணிப்பு மற்றும் ஆளில்லா கணினி தொழில்நுட்பம், மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு போன்ற துறைகளில் பாதுகாப்பு உபகரணங்களையும், தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் விதத்தில்” இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. அத்துடன், 2018 இல் இந்திய இராணுவம் மற்றும் ஜப்பானின் தரை சுயபாதுகாப்பு படையினருக்கும் (Japan’s Ground Self-Defense Forces) இடையில் “கூட்டு களப்பயிற்சிகளையும்” அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி ஆராயவும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அறிக்கையில் குறிப்பிட்டது போல, ஜப்பான், அதன் அதிநவீன US-2 நீர்நில பயன்பாட்டுக்குரிய விமானத்தை இந்தியாவிற்கு விற்க தயாராக இருப்பதை வலியுறுத்துவதற்கு இந்த உச்சிமாநாட்டை பயன்படுத்தியது. டோக்கியோவின் மிகப்பெரிய வெளிநாட்டு ஆயுத விற்பனையை முடிவு செய்துள்ளதை அபேயும் மோடியும் அறிவிக்கக்கூடுமென வதந்திகள் நிலவிய போதிலும், பல இந்திய மற்றும் ஜப்பானிய மூலோபாயவாதிகளுக்கு பெரும் ஏமாற்றமளிக்கும்விதமாக US-2 குறித்த விற்பனை பேரங்கள் தொடர்கின்றபோது, புது தில்லி பெரும் தொழில்நுட்ப பரிமாற்றங்களுக்கு தூண்டில்போடுவது வெளிப்படையாக உள்ளது.
மோடியும் அபேயும், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உடனான இந்திய-ஜப்பானிய “முத்தரப்பு ஒத்துழைப்பு” குறித்த “புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்தை” வரவேற்றதோடு, “இந்த கூட்டுறவு கட்டமைப்புகளின் மூலோபாய முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்,” மேலும் அவற்றை விரிவாக்கம் செய்வதில் இணைந்து செயலாற்றவும் ஒப்புக்கொண்டனர். இந்த அறிக்கை, சமீபத்தில் நடத்தப்பட்ட வருடாந்திர இந்திய-அமெரிக்க-ஜப்பானிய கூட்டு மலபார் கடற்படைப் பயிற்சி மிகப்பெரிய அளவிலான இந்திய பெருங்கடல் போர் பயிற்சியாக இருந்ததென ட்ரம்ப் நிர்வாகம் பாராட்டியதையும் பிரத்யேகமாக குறிப்பிட்டுள்ளது.
இந்தியா தனது பாரம்பரிய பரம எதிரியான பாகிஸ்தானை மூலோபாய ரீதியாக தனிமைபடுத்த முனையும் அதன் பிரச்சாரத்திற்கு டோக்கியோவும் வலுவான ஆதரவளித்தது. காஷ்மீரில் இந்திய எதிர்ப்பு கிளர்ச்சியில் தீவிரமாகவுள்ள பாகிஸ்தானை தளமாகக் கொண்ட இஸ்லாமிய குழுக்களை எதிர்த்து போராட ஏதுவாக புது தில்லியுடன் இணைந்து செயலாற்ற ஜப்பான் உறுதியளித்துள்ளதோடு, இஸ்லாமாபாத், “2008 நவம்பரில் மும்பையில் நடந்த தாக்குதல் மற்றும் இந்தியா வசமுள்ள காஷ்மீரில் உள்ள பதான்கோட்டில் 2016 இல் நடந்த பயங்கரவாத தாக்குதல் ஆகியவை உள்ளிட்ட தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை நீதிக்கு முன்பு கொண்டுவர வேண்டும்” என்ற இந்திய கோரிக்கையையும் அங்கீகரித்தது.
வட கொரியா மீதான கூட்டு அறிக்கையின் பத்திகள், “வட கொரியாவின் அணுஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்களை ஆதரித்த அனைத்து கட்சிகளும்” அதன் விளைவுகளுக்கும் “விடையிறுக்க பொறுப்பானவர்கள்” என்று மோடியும், அபேயும் வலியுறுத்துவதை குறிப்பிடுவதோடு, பாகிஸ்தானில் ஒரு மறைமுக தாக்குதலையும் பெய்ஜிங்கில் ஒரு வெளிப்படையான தாக்குதலையும் உள்ளடக்கியது. பாகிஸ்தான் வட கொரியாவுடன் அதன் சொந்த அணுஆயுத திறன்களை அபிவிருத்தி செய்வதில் ஒத்துழைத்திருப்பதாக இந்தியா நீண்ட காலமாக குற்றம்சாட்டியது.
மக்கள் சீன குடியரசு, சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ மூலோபாய தாக்குதலில் புது தில்லியின் ஒருங்கிணைப்புக்கும், மேலும் இந்திய ஜப்பானிய உறவுகளுக்கு இணையாக, இஸ்லாமாபாத் உடனான வளர்ந்துவரும் அதன் சொந்த மூலோபாய பங்காண்மையை வலுப்படுத்துவதன் மூலமாக விடையிறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பெயர் குறிப்பிடாமல், மோடி-அபே அறிக்கை, பாகிஸ்தான் (50 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் மூலமாக) முக்கிய பங்கு வகிக்கும் சீனாவின் இணைப்பு மற்றும் பாதை முன்னெடுப்பு திட்டத்தை தாக்கியது. ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான மற்றும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்கும் தென்கிழக்கு ஆசிய பகுதிக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்த உள்கட்டமைப்பை கட்டமைப்பதில் இந்தியாவும் ஜப்பானும் ஒத்துழைக்கும் என்பதாகவும் இதில் உறுதியளிக்கப்பட்டது. 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆசிய ஆபிரிக்க வளர்ச்சி வழித்தடம் (Asia-Africa Growth Corridor) அமைக்கும் திட்டம் இனிமேல் தான் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட வேண்டும் என்றாலும் கூட இந்தியாவும் ஜப்பானும் அது தொடர்பாக தற்போது பணியாற்றி வருகின்றன.
சீனா, பங்களாதேஷ் மற்றும் பர்மா எல்லையை ஒட்டிய ஒரு பொருளாதார பின்னடைவு கொண்ட பகுதியான இந்தியாவின் வடகிழக்கில் உள்கட்டமைப்பை உருவாக்க உதவ ஜப்பானுக்கு விடுக்கப்பட்ட இந்தியாவின் அழைப்பு இந்திய ஜப்பானிய உறவுகளின் வலிமையை அடிகோடிட்டுக் காட்டுகிறது. இந்தியா, எண்ணற்ற இந்திய எதிர்ப்பு இனவாத தேசியவாத எழுச்சிகளின் தளமாக இருக்கும், சீனாவுடனான அதன் எல்லை மோதலின் மையமாக இருக்கும், மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடன் குறுகிய வழித்தடங்கள் மூலமாக மட்டுமே இணைக்கப்பட்டு இருக்கும் அதன் வடகிழக்கு பகுதியை, குறிப்பாக முக்கியமானதாகவும், மூலோபாய ரீதியாக பாதிக்கப்படக்கூடியதாகவும் கருதுகிறது.
இந்திய திட்டங்கள் தென் கிழக்கு ஆசியாவுடனான அதன் வர்த்தக மற்றும் மூலோபாய உறவுகளை விரிவுபடுத்திக் கொள்வதற்கு வடகிழக்கு பகுதியின் அபிவிருத்தி முக்கியமானதாக இருக்கிறது. வாஷிங்டன், டோக்கியோ இரண்டுமே, தென் சீனக் கடல் மோதலில் எப்போதும் புது தில்லி ஆழ்ந்து ஈடுபடுவதற்கான அவற்றின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தியாவின் “கிழக்கு நடவடிக்கை” கொள்கைக்கு ஆதரவளிக்க பலமுறை உறுதியளித்துள்ளன. இந்தியாவுடன் ASEAN நாடுகளில் ஏற்கனவே இருக்கும் மலிவு உழைப்பு உற்பத்தி வழிகளை இணைக்க ஜப்பானும் ஆர்வம் கொண்டுள்ளது.
அபே மோடி உச்சிமாநாட்டிற்கு பெய்ஜிங் இன் பிரதிபலிப்பு அமைதியானதாக இருந்தது. பதிலடி ஓசையற்றதாக்கப்பட்டது. டோக்லாம் நெருக்கடிக்கு பின்னர் இந்தியாவுடனான உறவுகளை மறுஒழுங்கமைவு செய்ய அது முனைந்து வருகின்ற நிலையிலும், அத்துடன், மிக முக்கியமாக, கொரிய தீபகற்பம் மீதான நெருக்கடியை அமெரிக்கா குழப்புகின்ற சூழலில் அதனிடம் இருந்து வரும் கடுமையான மூலோபாய அழுத்தத்திற்கு உட்படுகின்ற நிலையிலும் இது ஆச்சரியத்துக்கு உட்படுத்தும் விடயமில்லை.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், தென்கிழக்கு ஆசியாவிற்கு இந்தியாவின் நுழைவாயிலாக இருக்கும் வடகிழக்கின் அபிவிருத்தியில் ஜப்பானின் உதவியை நாடும் இந்தியாவின் திட்டங்களுக்கு விதிவிலக்கு எடுத்துக்கொண்டார் என்று கூறப்பட்டது. மேலும், “மூன்றாம் நபர்” யாரும் “எந்தவொரு வடிவத்திலும் பிராந்திய இறையாண்மை குறித்த சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான சச்சரவுகளில் தலையிட” முடியாது என்று ஹுவா தெரிவித்தார்.
மோடி-அபே உச்சிமாநாட்டின் திட்டநிரலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த நெருக்கமான இராணுவ மூலோபாய உறவுகளை உருவாக்கும் அதே வேளையில், ஜப்பானும் இந்தியாவும் அவர்களது வர்த்தக உறவுகளை உத்வேகத்துடன் ஆரம்பிப்பதில் ஆர்வமாக இருந்தன. இந்தியாவிற்கான ஜப்பானின் ஏற்றுமதி இன்னும் தேக்கநிலையில் உள்ளது என்பதோடு, ஜப்பானுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 2013-14 இல் 6.81 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது 2016-17 இல் வெறும் 3.85 பில்லியன் டாலராக குறைந்து, இவைகள் சமீபத்திய வருடங்களில் மேலும் நலிந்துவிட்டன.
உச்சிமாநாட்டின் சிறப்பம்சமாக, 508 கிலோ மீட்டர் மும்பை-அகமதாபத் அதிவேக இரயில் திட்டத்திற்கான கட்டமைப்பை தொடங்க குஜராத் மாநிலத்தில் உள்ள மோடியின் வீட்டில் வைத்து ஒரு அற்புதமான விழா நடைபெற்றது. இந்தியாவின் முதல் அதிவேக இரயில் பாதையை உருவாக்குவதற்கான சீனாவின் முயற்சியை வெற்றி கொள்ள தீர்மானித்து, ஜப்பான், 50 வருடங்களாக அதன் திட்டத்திற்கான மொத்த செலவு மதிப்பீடான 17 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் தொகையில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான தொகையை 0.1 சதவிகித சலுகை வட்டி வீதத்துடன் நிதியளிப்பு செய்து வருகிறது.
குஜராத்தில் புதிய மாருதி சுசூகி வாகன தொழிற்சாலையை திறந்துவைக்கும் நிகழ்வில் சுசூகியின் தலைவர் ஒசாமூ சுசூகியுடன் மோடியும் அபேயும் கலந்துகொண்டனர். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிரூபிக்கும் வகையில் இந்தியா முழுவதும் நிலவுகின்ற மலிவுகூலி உழைப்பு நிலைமைகள் மீதான எந்தவித சவாலையும் இந்திய அரசு இரக்கமின்றி ஒடுக்கும் விதமாக, அரசியல் ஸ்தாபகம், பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் 13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைத்துள்ளன. இந்த 13 பேரும், மாருதி சுசூகியின் மானேசர், ஹரியானா கார் அசெம்பிளி ஆலையில் மிகக் குறைந்த ஊதியம் மற்றும் ஆபத்தான ஒப்பந்தத் தொழிலாளர் வேலைகள் ஆகியவற்றை எதிர்ப்பதில் முன் நின்றனர்.
மோடி மற்றும் அபே இருவரும், சீனாவுக்கு போட்டியாக இந்தியாவை ஒரு மலிவு உழைப்பு உற்பத்தித் தொடரின் மையமாக உருவாக்க உதவும் ஜப்பானின் மூலதனத்தில் பொருளாதார பங்காண்மையுடனான இந்திய-ஜப்பானிய இராணுவ மூலோபாய கூட்டணியை சீராக்க ஆர்வமாக உள்ளனர். இந்தியாவின் Economic Times பத்திரிகையின் சமீபத்தியதொரு தலையங்கம், சீனாவில் வழங்கப்படும் கூலியில் ஐந்தில் ஒரு பங்கு தான் இந்திய தொழிலாளர்களின் கூலியாக உள்ளது என்றும், உற்பத்தியில் இந்தியாவை ஒரு உலக சக்தியாக உருவாக்கும் மோடியின் திட்டங்களை உணர்த்துவதற்கான கருவியாகவே இந்த ஊதிய வித்தியாசம் பேணப்பட்டுவருகின்று என்றும் விவாதிக்கின்றது.
தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: இந்திய ஜப்பானிய கூட்டணியின் இந்த உறுதிப்பாடு, சீனாவிற்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பொறுப்பற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் தாக்குதல்களை மட்டுமே ஊக்குவிக்கும் என்பதோடு, ஜப்பானிய ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய முதலாளித்துவ வர்க்கம் போன்ற பெரும் சக்திகளின் வேட்கையையும் தீவிரப்படுத்தும்.