Print Version|Feedback
Germany’s federal election campaign and the danger of global nuclear war
ஜேர்மனியின் கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரமும், உலகளாவிய அணுஆயுத போர் அபாயமும்
By Johannes Stern
9 September 2017
ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் நீண்டகாலமாக ஜேர்மனியின் கூட்டாட்சி தேர்தல் பிரசாரத்திலிருந்து போர் மற்றும் இராணுவவாதத்தின் பிரச்சினைகளை ஒதுக்கி வைக்க முனைந்துள்ளன. ஆனால் யதார்த்தம் இப்போது அவர்களை விரட்டிக் கொண்டிருக்கிறது. வட கொரியா, ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்ரோஷமும், பியொங்யாங் ஆட்சியின் அணுஆயுத பரிசோதனையும், மனிதயினத்தின் உயிர்பிழைப்பையே கேள்விக்குட்படுத்தும் வகையில், உலகை ஓர் அணுஆயுத போர் விளிம்பிற்குக் கொண்டு வந்துள்ளன. ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei – SGP) நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் (ICFI) சில காலமாக தொடர்ந்து எச்சரித்து வருகின்ற இந்த அபாயம் இப்போது பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
புதனன்று, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres) 1914 சூழ்நிலையோடு சமாந்தரப்படுத்தி அறிவிக்கையில், “முதலாம் உலக போர் வரலாற்றைப் பார்த்தீர்களென்றால், அது படிப்படியாக நடந்தது, ஒரு கட்சி ஒன்றைச் செய்யும், மற்றொரு கட்சி இன்றொன்றைச் செய்யும், பின்னர் மோதல் நிகழ்ந்தது,” என்றார்.
“நெருப்புப்பொறிகள்" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் Süddeutsche Zeitung இந்த தொந்தரவூட்டும் பிரச்சினையை முன்வைத்தது, “யாருக்கு தெரியும், இதுபோன்றவொரு சூழ்நிலையில், ஆரம்பத்தில் யாரும் விரும்பாத சம்பவங்கள் முடிவில் நடக்குமா இல்லையா என்று. 1914 கோடையில் ஐரோப்பாவை முதல் உலக போருக்குள் இட்டுச்சென்றவர்கள், இந்த தூக்கத்தில் நடப்பவர்கள், மீண்டுமொருமுறை விவாதித்து வருகிறார்கள் என்பது தற்செயலாக நடக்கும் நிகழ்வல்ல.”
இத்தேர்தலுக்கு முன்னதாக ஜேர்மன் நாடாளுமன்றத்தின் (Bundestag) கடைசி அமர்வில், பெரிதும் அணுஆயுத போர் அபாயமே சூழ்ந்திருந்தது. சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள், CDU) ஓர் உரை நிகழ்த்தி அமர்வை தொடங்கி வைப்பதற்கு முன்னரே, வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவின் துணை தலைவர் (சமூக ஜனநாயக கட்சி) Rolf Mützenich குறிப்பிடுகையில், “அணுசக்தியின் நிழலை விரிவாக்கி கொண்டே இருக்கின்ற ஒரு அலட்சியமான, ஆர்ப்பரிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் காரணமாக, வட கொரியாவில் இருந்து, அணுசக்தியின் நிழல் மீண்டுமொருமுறை உலகைச் சூழ்ந்துள்ளது. திருமதி. சான்சிலர், உங்கள் பதவியின் எஞ்சிய காலத்தில் இதுபோன்றவொரு அமெரிக்க ஜனாதிபதியுடன் நீங்கள் கூர்மையாக முரண்பட்டால், அனைத்து கௌரவமும் பெறுவதற்கு நீங்கள் தகுதி அடைவீர்களென நான் நினைக்கிறேன்,” என்றார்.
சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) வெளியுறவுத்துறை அமைச்சர் சிங்மார் காப்ரியேல் அவர் உரையில் கூறுகையில், “நம் வார்த்தைகளில், நாம் அணுஆயுதமில்லா மீள்ஆயுதமயப்படுத்தல் குறித்து மட்டும் பேசவில்லை, மாறாக பனிப்போரின் இருண்ட காலத்திற்குத் திரும்புவது குறித்தும் பேசுகிறோம்,” என்றார். உலகளாவிய அளவில், “எல்லா பேச்சுக்களும் மீள்ஆயுதமயப்படுத்தல் குறித்தே உள்ளன … சீனா, இந்தியா, இலத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஆபிரிக்கா, பிற இடங்களிலும் நாம் மீள்ஆயுதமயப்படுத்தல் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம், எங்கேயும் வேறெதுவும் பேசப்படுவதில்லை,” என்றார்.
“ஜேர்மனியிடமிருந்து வர வேண்டிய அரசியல் நடவடிக்கை, அரசியல் அடையாளம், இந்த ஆயுத போட்டியில் நாங்களும் இணைவோம் என்பதாக இருக்க முடியாது,” என்று அந்த ஜேர்மன் அமைச்சர் அறிவித்தார். “ஜேர்மனி உலகில் சமாதானத்திற்கான ஒரு குரலாக, சமாதானத்திற்கான ஒரு சக்தியாக இருக்க விரும்புகிறது என்பதோடு, மீள்ஆயுதமயப்படுத்தலில் அது பங்கேற்காது என்பதையே ஜேர்மனி எப்போதும், இந்நாட்டில் யார் ஆட்சியில் இருக்கும் போதும், சமிக்ஞை செய்துள்ளது,” என்றார். நேட்டோ அங்கத்துவ நாடுகள் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தைப் பாதுகாப்பிற்குச் செலவிட வேண்டும் என்பதை "அந்நேரத்தில் சமூக ஜனநாயகவாதிகள் இந்த சமரசத்தை ஆதரித்தார்கள் என்றாலும் கூட", அதுவொரு "பிழையே" என்று நேட்டோவின் முடிவை காப்ரியல் அறிவித்தார்.
நவம்பர் 1933 இல், "அமைதிவாதி ஹிட்லர்" (The pacifist Hitler) என்ற தலைப்பில் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதிய ஒரு கட்டுரையில், அவர் நாஜி ஆட்சியின் தொடக்கத்தில் ஹிட்லர் எவ்வாறு தன்னை "சமதானத்திற்காக" மற்றும் "சர்வதேச புரிதலுக்காக" சூளுரைத்தார் என்பதை விவரித்திருந்தார். ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார், மூன்றாம் குடியரசு 1933 இன் இறுதியில் அப்போது மிகவும் பலவீனமாக இருந்தது, “அதனை அடுத்து வேறெந்த மொழியையும் விட அமைதிவாதத்தையே அதனால் பேச முடிந்திருந்தது.” ஆனால், ஒருசில ஆண்டுகளின் போக்கில், அது மீள்ஆயுதமயமானதும், அது “'எனது சமாதானம்' என்பதில் இருந்து 'எனது போராட்டம்' என்றும், இன்னும் சொல்லப்போனால் 'எனது போர்' என்றும் மாறவிருந்தது,”
காப்ரியேல் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் வெறும் ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில், சமாதானம் மற்றும் ஆயுதக்குறைப்பு குறித்த வார்த்தைகளில் இருந்து ஜேர்மனியின் ஆயுதப்படைகளை ஆயத்தப்படுத்துமாறு அழைப்புவிடுக்க மாறினார். “நிச்சயமாக நாம் ஆயுதப்படைகளின் மீள்ஆயுதமயப்படுத்தலை மேம்படுத்த வேண்டும், ஏனென்றால், அதன் போக்கில், 12 ஆண்டுகளாக ஆயுதப் படைகளில் வெட்டுக்கள் செய்யப்பட்டுள்ளன,” என்று அந்த சமூக ஜனநாயகவாதி சீறினார். இதற்கு தனிப்பட்டரீதியில் பிரதானமாக பொறுப்பாகிறவராக, 2009 இல் இருந்து 2011 வரையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவரும் மற்றும் தற்போது அரசியல் மறுபிரவேசத்திற்கு முயற்சித்து வருபவருமான வலதுசாரி கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் அரசியல்வாதி கார்ல் தியோடோர் சு குட்டன்பேர்க் ஐ காப்ரியேல் அடையாளப்படுத்தினார்.
நேட்டோவின் 2 சதவீத இலக்கு மீதான காப்ரியேலின் விமர்சனத்தின் திசை தெளிவாக உள்ளது. போருக்காக ஏனைய வல்லரசுகளுடன் சேர்ந்து ஜேர்மன் மீள்ஆயுதமயமாகி வருகிறது மற்றும் தயாரிப்பு செய்து வருகிறது, ஆனால் அதன் சொந்த நிபந்தனைகளின் மீது இதைச் செய்து வருகிறது.
“பணயத்தில் இருக்கும் பிரதான பிரச்சினை நாம் எவ்வளவு செலவு செய்தோம் என்பதல்ல, மாறாக அதை எதில் செலவிட்டோம் என்பது தான்,” என்றவர் பிரதிநிதிகளிடையே அறிவித்தார். “சரியான மூலோபாயம்” பணயத்தில் வைக்கப்பட்டுள்ளது. “வெளிநாட்டு இராணுவ நிலைநிறுத்தல்களில் இருந்து திரும்பி வரும் ஒவ்வொரு சிப்பாயும்" அவரிடம் கூறியுள்ளனராம்: “ஆம், நமக்கு இராணுவம் வேண்டும். ஆனால் திரு. காப்ரியேல், வெறுமனே பாதுகாப்பு மற்றும் இராணுவத்திற்கு நிறைய செலவிடுவதன் மூலம் மற்றும் அகதிகளின் நகர்வை தடுப்பதன் மூலம் உங்களால் சமாதானம் மற்றும் ஸ்திரப்பாட்டைப் பாதுகாக்க முடியுமென நம்பிவிடாதீர்கள். பசி, வறுமை, விரக்தி மற்றும் எதிர்காலமின்மையை எதிர்த்து நீங்கள் போராட வேண்டியுள்ளது. நீங்கள் அதை செய்தாக வேண்டும்,” என்றார்.
இது அமெரிக்க தலைமையிலான மத்திய கிழக்கு போர்கள் மீதான விமர்சனங்களில் அரிதாகவே மறைக்கப்பட்டிருந்தது, காப்ரியேல் இதற்கு எதிராக, ஜேர்மனியின் மேலாதிக்கத்தில் அதிக "மனிதாபிமான" ஐரோப்பிய தலையீட்டு கொள்கை எனப்படுவதை எதிர்நிறுத்த விரும்புகிறார்.
“ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு ஐரோப்பாவே பொறுப்பேற்கும்,” இதை காப்ரியேல் "மறுஅளவிடல்" என்ற ஒளிவுமறைவற்ற தலைப்பிலான அவரின் சமீபத்திய நூலில் எழுதினார். “வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு கொள்கையில், நாம் மூலோபாய விழிப்போடும் நடவடிக்கை எடுக்க தகைமை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும், ஏனென்றால் நாம் இன்னும் அதில் போதுமானளவிற்கு சிறப்பாக இல்லை. இது நமது ஐரோப்பிய நலன்களை வரையறுப்பது மற்றும் அமெரிக்காவிடமிருந்து சுதந்திரமாக அவற்றை வெளிப்படுத்துவதை உள்ளடக்கி உள்ளது. இந்த பிடிவாதத்திற்காக, ஓரளவுக்கு வாஷிங்டனில் அபிவிருத்தி செய்யப்பட்ட நிலைப்பாடுகளை ஏற்பதிலிருந்து விலகி இருக்க வேண்டியுள்ளது,” என்றார்.
நேட்டோ மற்றும் அமெரிக்காவிடமிருந்து சுதந்திரமாக, அவசியமானால், அதற்கு எதிராகவும் கூட, ஐரோப்பாவின் உலகளாவிய நலன்களை வலியுறுத்த தகைமை கொண்ட ஒரு ஐரோப்பிய இராணுவத்தை ஸ்தாபிப்பதே காப்ரியேலின் அறிவிக்கப்பட்ட குறிக்கோளாகும். அது "வெறுமனே புதிய ஆயுதங்கள் வாங்குவது சம்பந்தப்பட்டதல்ல. அது ஐரோப்பிய ஆயுத தொழில்துறையை அதிக பலமாக ஒருங்கிணைப்பது மற்றும் ஆதாரவளங்களைக் குவிப்பது சம்பந்தப்பட்டதாகும். அது ஒரு கூட்டு ஐரோப்பிய பாதுகாப்பு அடையாளத்தை உருவாக்குவது சம்பந்தப்பட்டதாகும், அதன் மூலமாக அதிகரித்தளவில் ஒருங்கிணைந்த கட்டமைப்புகள் ஓர் ஐரோப்பிய இராணுவத்திற்கான பாதையை அமைக்கும்.”
அதன் அணுசக்தி தளவாடங்களைப் பலப்படுத்துவதற்கான அமெரிக்காவின் திட்டங்கள் இக்கொள்கைக்கு இடராக உள்ளன என்பது காப்ரியேலுக்கு நன்றாக தெரியும். “பனிப்போரின் இருண்ட மணித்தியாலங்களுக்குத் திரும்புவது", ஜேர்மனியும் ஐரோப்பாவும் அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை அதிகரிக்கும் என்பதோடு பேர்லினின் பொருளாதார மற்றும் புவிஅரசியல் நலன்களுக்குக் குழிபறிக்கும், இவை அமெரிக்காவின் அதே நலன்களுக்கு முன்பில்லாதளவில் ஆழமாக முரண்பட்டு நிற்கின்றன. அவர் இத்தேர்தல் பிரச்சாரத்தின் எஞ்சியப்பகுதியை, அமெரிக்கா தூண்டிவிடும் ஓர் அணுஆயுத போர் மீதுள்ள பரந்த அச்சத்தை ஜேர்மன் இராணுவவாதத்திற்கான ஆதரவுக்குள் திருப்பிவிடும் வகையில் பயன்படுத்த விரும்புகிறார்.
சமூக ஜனநாயக கட்சியின் சான்சிலர் வேட்பாளர் மார்ட்டின் சூல்ஸைக் கொண்டு ஓர் அரசாங்கம் அமைக்க போராடி வருகின்ற இடது கட்சி மற்றும் பசுமை கட்சியினர், தேர்தலுக்குப் பின்னர் அவர்களும் அதே குறிக்கோளை நோக்கி செயற்படுவார்கள். ஜேர்மன் அரசாங்கம் நேட்டோவின் 2 சதவீத இலக்கிற்கு வழங்கும் ஆதரவிலிருந்து "பின்வாங்குமாறும்" மற்றும் "Büchel இல் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க அணுஆயுதங்களைச் சாத்தியமானளவிற்கு உடனடியாக கூட்டாட்சி குடியரசிலிருந்து திரும்பப்பெறும் நோக்கில் அமெரிக்காவுடன் உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறும்" அழைப்புவிடுத்து செவ்வாயன்று ஜேர்மன் நாடாளுமன்றத்தில் அவர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இடது கட்சியின் தோற்கடிக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இறுதியில் பேசிய Jan Korte, அது அமைதிவாத நோக்கங்களால் உந்தப்பட்டதல்ல, மாறாக வாஷிங்டனுக்கு எதிராக ஜேர்மன் ஏகாதிபத்தியத்தைப் பலப்படுத்துவதற்கானது என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடம் வைக்கவில்லை. “நாம் சுதந்திரமான இறையாண்மை கொண்டவர்கள்—அமெரிக்காவிடம் இருந்தும்—இங்கே நமது சொந்த கொள்கைகளை நாம் உருவாக்குகிறோம்,” என்பதையும் அத்தீர்மானம் குறிப்பிட்டது.
ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே, அமெரிக்க அணுஆயுத திட்டங்களையும், அதற்கு குறைவின்றி ஐரோப்பிய மற்றும் ஜேர்மன் மீள்ஆயுதமயப்படுத்தலையும், எதிர்த்து, அதிகரித்து வரும் போர் அபாயத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து போராடுகின்ற ஒரே கட்சியாகும். “இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக! சோசலிசத்திற்காக!” என்ற நமது தேர்தல் அறிக்கையில், நாம் பின்வருமாறு குறிப்பிட்டோம்:
“ஆளும் வர்க்கத்திடம் சமாதானத்திற்காக முறையிடுவதன் மூலமாக ஒரு மூன்றாம் உலக போர் அபாயத்தைத் தடுத்துவிட முடியாது. போருக்கு எதிரான போராட்டமானது பிரிக்கவியலாதவாறு சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது. ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைக்க அழைப்புவிடுக்கிறது:
“போருக்கு எதிரான போராட்டமானது, மக்களின் அனைத்து முற்போக்கு கூறுபாடுகளையும் தனது பின்னால் அணிதிரட்டி, சமூகத்தின் தலைச்சிறந்த புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும். “புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிச இயக்கமாக இருக்க வேண்டும், ஏனென்றால் இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படை காரணமான நிதி மூலதனம் மற்றும் இந்த பொருளாதார அமைப்புமுறையின் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் போராட்டம் இல்லாமல் போருக்கு எதிரான எந்த தீவிரமான போராட்டமும் இருக்க முடியாது.
“ஆகவே புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அத்தியாவசியமாக, முழுமையாக, தயவுதாட்சண்யமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து சுயாதீனமாக, மற்றும் அவற்றிற்கு எதிராக இருக்க வேண்டும்.
“புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அனைத்திற்கும் மேலாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஓர் ஒருங்கிணைந்த உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை ஒன்றுதிரட்டி, சர்வதேசரீதியில் இருக்க வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தின் நிரந்தர போருக்கு, தேசிய-அரசு அமைப்புமுறையை இல்லாதொழிக்கும் மற்றும் ஓர் உலக சோசலிச குடியரசை ஸ்தாபிக்கும் மூலோபாய குறிக்கோளான தொழிலாள வர்க்கத்தின் நிரந்தர புரட்சி முன்னோக்கைக் கொண்டு பதிலளிக்க வேண்டும். இது பூகோளமயப்பட்ட ஆதாரவளங்களின் பகுத்தறிவார்ந்த, திட்டமிட்ட அபிவிருத்தியை, மற்றும் அதன் அடிப்படையில், வறுமை ஒழிப்பை மற்றும் மனித கலாச்சாரத்தை புதிய உயரங்களுக்கு உயர்த்துவதை சாத்தியமாக்கும்.”