Print Version|Feedback
Kumbakonam school fire convicts released by Madras high court
இந்தியா; கும்பகோணம் பள்ளித் தீ குற்றவாளிகளை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது
By Yuvan Darwin and Arun Kumar
26 September 2017
13 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்படை பாதுகாப்புத் தரங்களை குற்றவியல் ரீதியாக அலட்சியப்படுத்தியதால் ஒரு தனியார் பள்ளியில் தீப்பற்றியதுடன் அது 94 பள்ளிக் குழந்தைகள் தீயில் கருகி இறப்பதற்கும் வழிவகுத்தது, இதற்காக குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்டவர்கள் ஆகஸ்ட் 10 ம் தேதி தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி விடுவிக்கப்பட்டனர்.
ஜூலை 16, 2004 அன்று தமிழ்நாட்டில் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியின் சமையலறையில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது, அது விரைவில் கட்டிடத்தின் முதல் மாடிக்கு, மொட்டை மாடியிலிருந்த ஓலைக் கூரையின் மூலமாக பரவியது. பள்ளிக்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு பணியாளர்கள் மூன்று அடுக்கு மாடி கட்டிடத்தின் அருகில் செல்ல வழி இல்லாமல் நின்றனர், அது இரண்டு குடியிருப்புத் தொகுதிகளுக்கு இடையில் இருந்தது. மற்றும் அங்கு ஒரு நுழைவாயிலும் மாடிக்கு செல்வதற்கு ஒரு படிக்கட்டும் தான் இருந்தது. தீயணைப்பு படையினர் கட்டடத்தின் கான்கிரீட் கட்டமைப்பை உடைக்க வேண்டியிருந்தது, ஆனால் அவர்கள் அதை செய்து முடித்த சமயத்தில் பல மாணவர்கள் தீயில் கருகி இறந்து விட்டனர். தீயணைப்பு படையினர் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே உள்ளூர்வாசிகள் வெட்டும் சுத்திகளை பயன்படுத்தி சுவருக்குள் ஓட்டை துளைத்து வகுப்பறைக்குள் நுழைந்து சில சிறுவர்களை காப்பாற்றினார்கள்.
பள்ளி தீயிலிருந்து பாதுகாப்பதற்கான தீயணைப்பு கருவிகள் போன்றவை மற்றும் தீயிலிருந்து வெளியேறுவதற்கான அவசர வழி எதுவுமே இல்லாமல் இருந்தது, மேலும் அத்தகைய ஒரு அவசரகால சூழ்நிலையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான பயிற்சி, ஆசிரியர்கள் உட்பட ஊழியர்கள் எவருக்குமே அளிக்கப்படவில்லை. மேலும் அடிப்படை பாதுகாப்பு குறியீடுகளின் படி சட்டவிரோதமாக கருதப்படும் மொட்டை மாடியிலுள்ள ஓலைக்கூரை நிலைமையை மேலும் மோசமாக்கியது. மரணப்பொறிக்கு இணையான இவ்வாறான தெளிவான பாதுகாப்பற்ற நிலைமைகள் அனைத்தும் இருந்தபோதிலும், அரசாங்க கல்வி அதிகாரிகள் பள்ளிக்கான உரிமத்தை மீண்டும் மீண்டும் புதுப்பித்தனர்.
பள்ளி அதிகாரிகளின் தெளிவான கிரிமினல் அலட்சியம் மற்றும் டஜன் கணக்கான குழந்தைகளின் மரணத்திற்கு வழிவகுத்த அவர்களுடன் அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாக பாரிய கோபம் எழுந்தது. இதன் மத்தியில் தான் அவர்கள் மீதும் மற்றும் பல பலிக்கடாக்கள் உட்பட 21 பேர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தி அரசாங்கம் ஒரு நீதிமன்ற வழக்கை தாக்கல் செய்தது.
ஜூலை 30, 2014 அன்று வழக்கு விசாரணை முடிவடைந்த பின், பிரதானகுற்றவாளியான பள்ளியின் உரிமையாளர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் அவரது மனைவி சரஸ்வதிக்கு ஐந்து வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உரிமையாளர் மீது 5.267 மில்லியன் ரூபா அபராதம் விதித்ததுடன் ஒவ்வொரு பாதிக்கப்பட்டவருக்கு 50,000 ரூபா அற்ப இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டது. சில உள்ளூர் கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி சமையல்காரர்கள் போன்ற பல பலிக்கடாக்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து வருட தண்டனை வழங்கப்பட்டன. குற்றவாளிகளாக இருந்த பதினொரு பேரை நீதிமன்றம் விடுவித்தது, இதில் தெளிவாகவே பலிக்கடாக்கள் ஆக்கப்பட்ட மூன்று ஆசிரியர்கள் உட்பட கல்வி அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆறு பேர் ஆடங்குவர்.
சென்னை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 10ம் தேதி பள்ளி உரிமையாளர் பழனிச்சாமிக்கு ஆதரவாக கீழ் நீதிமன்ற தீர்ப்பை "மாற்றியமைத்தது". அவருடைய ஆயுள் தண்டனை "விசாரணை மற்றும் அதற்கு பின்னர் ஏற்கனவே அனுபவித்து விட்ட ஒரு காலமாக" மாற்றப்பட்டது, மேலும் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு சுமத்தப்பட்ட அபராதத் தொகை 116,500 ரூபாயாக குறைக்கப்பட்டது. சரஸ்வதி இறந்துவிட்ட காரணத்தால் அவர் மீதான தண்டனை இரத்து செய்யப்பட்டது. கீழ் நீதிமன்றத்தினால் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, பலிக்கடாக்களில் ஒருவரான பள்ளியின் சமையல்காரர் வசந்தியும் கூட "சிறைச்சாலையில் தண்டனைக் காலத்தை அனுபவித்து விட்டார்” என விடுதலை செய்யப்பட்டார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தலைமையிலான அஇஅதிமுக ஆட்சியின்போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தபோது, பள்ளி தீப்பற்றியது தொடர்பான பொதுமக்களின் சீற்றத்தை திசை திருப்பும் முயற்சி ஒன்றில் ஈடுபட்டார், உடனடியாக கல்வித் துறை மற்றும் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டினார். அதை தொடர்ந்து, அத்தியாவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் தரம் குன்றிய நிலையிலிருந்த பள்ளியை நடத்துவதற்கு உரிமம் வழங்குவதில் அவரது அரசாங்கமும் அதற்கு முன்னால் அடுத்தடுத்து வந்த மாநில ஆட்சிகளும் துணை போனதை மூடி மறைப்பதற்காக, அந்த பள்ளியின் உரிமம் இரத்து செய்யப்பட்டது.
நான்கு மாவட்ட அளவிலான கல்வித்துறை அதிகாரிகளை தற்காலிகமாக வேலை நீக்கம் செய்ய அஇஅதிமுக அரசாங்கம் உத்தரவிட்டது. உரிமையாளர், பழனிச்சாமி, அவரது மனைவி மற்றும் மகள் மற்றும் இரண்டு சமையல்காரர்கள் உட்பட ஐந்து பள்ளி ஊழியர்கள் கைது செய்யப்பட்டு, அலட்சியத்தினால் கொலை மற்றும் பிற குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த சம்பவம் பற்றி உலக சோசலிச வலைத் தளம் எழுதுகையில் வறிய பலியானவர்களின் மன்றாடல்கள் பற்றிய இந்திய உயரடுக்கின் அலட்சியமான அணுகுமுறை பற்றி எச்சரித்தது: "கும்பகோணம் தீ பற்றி தற்போது எவ்வளவு தான் அக்கறைகள் காட்டப்பட்டாலும், மக்களின் உடனடியான கோபம் மறைந்து போய் விட்ட நிலையில் சீக்கிரமாக மாநில மற்றும் தேசிய அரசியல்வாதிகள் இந்த விஷயத்தை விரைவில் கைவிட்டு விடுவார்கள். "(பார்க்க: School fire in southern India kills 90 children)
பள்ளி தீ விபத்தில் பலியானவர்களின் பெற்றோரால் எழுப்பப்பட்ட 2.5 மில்லியன் (25 இலட்சம்) ரூபாய் இழப்பீட்டுத் தொகையை எதிர்த்து கடந்த ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றம், ஒவ்வொரு நெருக்கமான குடும்பத்தினருக்கும் 500,000 ரூபா இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்த இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு வழங்க முன்வந்தது. ஆயினும்கூட அவர்கள் இன்னும் அந்த முழுத் தொகையையும் பெற்றுக் கொள்ளவில்லை என்று பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.
இந்து பத்திரிகையுடன் பேசுகையில், பள்ளித் தீயில் இரண்டு குழந்தைகளை இழந்த ஒரு சீற்றம் பெற்ற பெற்றோரான இன்பராஜ், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு பற்றி கூறியதாவது: "கல்வி வியாபாரத்தில் இலாபம் சம்பாதிப்பதற்காக எங்கள் குழந்தைகளின் இறப்புடன் வியாபாரம் செய்த கொலைகாரர்களை நாங்கள் பார்க்க நேர்ந்தால் என்ன நடக்கும்? அவர்கள் இப்போது விடுதலையாகி இருக்கிறார்கள், நாங்கள் தொடர்ந்து மௌனமாக துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அந்த யதார்த்தத்தை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? "
ஜெயலட்சுமி, மற்றொரு பெற்றோர், விம்மி அழுதபடி கூறினார்: "தீர்ப்பை கேட்ட பிறகு, எனக்கு சாப்பிடவே இஷ்டம் இல்லை. ஏனென்றால் இந்த வயிற்றில் இருந்து தான் அந்த குழந்தை பிறந்தது, அது குற்றவாளிகளின் அப்பட்டமான அலட்சியத்தினால் உயிருடன் எரிந்து கருகியது. அந்த வயிற்றில் எப்படி நான் உணவை நிரப்ப முடியும்? "
எட்டு வயது மகன் லக்ஷ்மி நாராயணனை தீயில் இழந்த எம்.சரவணன், டைம்ஸ் ஆப் இந்தியா க்கு கூறுகையில் "நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளது" என்றார். தீர்ப்பு வெளிப்படுத்துவது என்னவென்றால் நீதித்துறை எங்களது பிள்ளைகளின் வாழ்வுக்கு மதிப்பு எதுவும் இருப்பதாக கருதவில்லை "
இன்னொரு பெற்றோர் ஆர் மகேஷ், அவரும் கூட மகனை தீயில் இழந்தார். அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: "கீழ் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தண்டனையும் மிகக் குறைவாகவும் தாமதமாகவும் இருந்ததாக நாங்கள் அனைவரும் உணர்ந்தோம். ஆனால் இன்றைய சமீபத்திய தீர்ப்பு (வியாழன்) காயப்பட்ட எங்களுக்கு மேலும் அவமதிப்பை அளித்தது. இத்தகைய துயரமான வழக்குகளில் குற்றவாளிகளை நிரபராதிகள் ஆக்குவது நீதித்துறை மீதான எங்கள் நம்பிக்கையை குறைத்துள்ளது."
பலியானவரின் மற்றொரு பெற்றோரான மரியம்மாள் நியூஸ்18 இடம் கூறினார்: "நாங்கள் 13 வருடங்கள் காத்திருந்தோம். மூன்று வார காலத்திற்குள் எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தக் காலம் முடிந்து விட்டது. நாங்கள் இன்னும் 2 லட்ச ரூபா இழப்பீட்டுத் தொகையை பெறவில்லை.”
கும்பகோணம் பள்ளி தீயில் 94 இளம் குழந்தைகளின் இறப்புக்கள், நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசாங்க பள்ளிகளின் மோசமான நிலையை வெளிச்சத்தில் காட்டியுள்ளது. இந்த துயர சம்பவமானது
மத்திய மற்றும் மாநிலங்களில் அடுத்தடுத்து வந்த முதலாளித்துவ அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட சந்தை சார்பு சந்தை சீர்திருத்தங்களின் விளைவுகளில் ஒன்றாகும்.
13 இந்திய மாநிலங்களிலுள்ள 780 அரசு பள்ளிகளில் நடத்திய சமீபத்திய ஆய்வின் படி, கழிப்பறைகள் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மிகவும் போதுமானவை அல்ல. 5% க்கும் குறைவான பள்ளிகளில் மட்டுமே RTE (கல்விக்கான உரிமை) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து 9 வசதிகளும் உள்ளன. 30% க்கும் அதிகமான பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை (பல பெண்கள் பள்ளியை விட்டு செல்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று) மற்றும் 60% க்கும் மேலானவற்றில் விளையாட்டு மைதானங்கள் இல்லை.
சுமார் 1.2 மில்லியன் (120 இலட்சம்) பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் படி, 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 609 மாவட்டங்களில் பரவியுள்ள, நாட்டின் 30 சதவீத பள்ளிகளில் முறையான கட்டிடங்கள் இல்லை மற்றும் 14% பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை.
DISE (கல்விக்கான மாவட்ட தகவல் அமைப்பு) தரவின்படி, நாட்டின் ஒவ்வொரு 10 பள்ளிகளில் 6 இல் மட்டுமே மின்சாரம் உள்ளது. DISE அறிக்கையின் படி இருக்கும் வகுப்பறைகளில் 30% முதல் 40% வரையானவற்றுக்கு தீவிரமான பழுதுபார்ப்பு வேலை தேவைப்படுகிறது.
முழுமையான பாதுகாப்பான கட்டிடங்களில் ஒரு தரமான மற்றும் இலவச கல்வியை வழங்குவது ஒரு சோசலிச அமைப்பின் கீழ் மட்டுமே சாத்தியமாகும், அது மக்களின் தேவைகளையும் பாதுகாப்பையும் அடிப்படையாகக் கொண்டது, முதலாளிகளின் இலாப நோக்கை அல்ல.