Print Version|Feedback
The 150th anniversary of the publication of Capital
மூலதனம் வெளியிடப்பட்டதன் 150வது ஆண்டு
Nick Beams
18 September 2017
செப்டம்பர் 14 காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் முதல் தொகுதி வெளியிடப்பட்டதன் 150வது ஆண்டு தினமாகும். இது மனிதனின் புத்திஜீவித்தன அபிவிருத்தி மற்றும் வரலாற்று அபிவிருத்தியில் ஒரு திருப்புமுனையைக் குறித்து நின்றது. இது வெளியிடப்பட்டதன் மூலமாக, முதலாளித்துவ சமூகத்தின் இயங்கு விதிகள் வெளிப்படுத்திக் காட்டப்பட்டதுடன், அது கட்டவிழ்த்திருந்த சமூக சூறையாடல்களின் காரணங்கள் எடுத்துக்காட்டப்பட்டன, அத்துடன் மிக முக்கியமானதாய், சுரண்டலில்லாத ஒரு உலகத்திற்கும் உண்மையான மனித சுதந்திரத்தை ஸ்தாபிப்பதற்குமான போராட்டம், அதாவது சோசலிசத்திற்குமான போராட்டமானது, நம்பிக்கைகள் மற்றும் அபிலாசைகளின் ஒரு விடயமாக இருந்ததில் இருந்து ஒரு விஞ்ஞானமாக உருமாற்றப்பட்டது.
1867 ஆகஸ்டு 16 அன்று அதிகாலை இரண்டு மணிக்கு, இறுதிப் பிழைதிருத்தங்களை சரிபார்ப்பதை முடித்தபின்னர், மார்க்ஸ் தனது ஆயுள்கால நண்பரும் உடன்வேலை செய்தவருமான பிரெடரிக் ஏங்கெல்சுக்கு எழுதினார்: “ஆக இந்தத் தொகுதி முடிந்தது. அது சாத்தியமானதற்கு நான் உங்களுக்கு மட்டுமே கடமைப்பட்டிருக்கிறேன். உங்களது சுய-தியாகம் இல்லாமல் என்னால், தேவையான இந்த கடுமையான உழைப்பை கொண்டுவந்திருக்க முடியாது....”
இந்த பிரம்மாண்டமான சாதனையை சுருங்கக் கூறிய ஏங்கெல்ஸ், சுமார் 16 வருடங்கள் கழித்து மார்க்ஸ் இறந்தபோது கல்லறையில் அவர் நிகழ்த்திய உரையில், டார்வின் எப்படி உயிரின இயற்கையின் அபிவிருத்தி விதியைக் கண்டுபிடித்திருந்தாரோ, அதைப் போல மார்க்ஸ் மனித சமூகம் மற்றும் வரலாற்றின் அபிவிருத்தி விதியைக் கண்டுபிடித்திருந்தார் என்று விளக்கினார்.
மார்க்சுக்கு முன்பு, இந்தப் பிரச்சினைகள் குறித்த ஆய்வானது மதரீதியான புதிர்ப்படுத்தலைக் கொண்டு அல்லது அறநெறி வழிகாட்டல்களையும் மற்றும் சித்தாந்தத்தையும் முன்நிறுத்துவதைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தப்பட்டதாக இருந்தது. மனித சமூகமானது அதன் சித்தாந்த கருத்தாக்கங்களான கலை, அரசியல், மெய்யியல், அந்த சகாப்தத்தின் ஆன்ம இலட்சியம் இன்னபிறவற்றல் இருந்து அல்லாது, மாறாக அதன் ஸ்தாபனங்களும் சித்தாந்தக் கருத்தாக்கங்களும் எழுந்த அதன் பொருளாதார அபிவிருத்தியில் அடித்தளத்திலிருந்து விளக்கப்படவேண்டும் என்று மார்க்ஸ் ஸ்தாபித்தார்.
இந்த கருத்தாக்கங்கள் 1847 நவம்பரில் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் அடிப்படையை உருவாக்கின. இந்தப் புதிய தத்துவத்தை நவீன-கால முதலாளித்துவ சமூகம் குறித்த ஆய்வில் பிரயோகிப்பதற்கு அவசியமாக இருந்த பிரம்மாண்டமான உழைப்பில்தான் அடுத்த 20 ஆண்டுகள் செலவிடப்பட்டன.
மூலதனத்தின் முதல் பதிப்பின் ஒரு திறனாய்வில் இருந்து தனது இரண்டாம் பதிப்புக்கான பின்னுரையில் விரிவாக மேற்கோள் காட்டிய மார்க்ஸ் தனது செயல்முறையை எடுத்து வைத்தார்: அந்த திறனாய்வாளர் எழுதியிருந்தார் “மார்க்ஸ்”, “ஒரே ஒரு விடயத்தில் மட்டுமே தனது அக்கறையைச் செலுத்துகிறார்: சமூக நிலைமைகளது அடுத்தடுத்த தீர்மானிக்கப்பட்ட ஒழுங்குகளின் அவசியத்தை ஒரு சரியான ஆய்வினூடாக காட்டுவது, மற்றும், அவர் தொடங்கியிருந்த மற்றும் அவர் சார்ந்திருந்த அந்த உண்மைகளை சாத்தியமான அளவுக்கு எவ்விதமான பிழையுமில்லாதவாறு நிறுவுவதுமாகும். இதற்கு, ஒரேசமயத்தில் விடயங்களது இப்போதைய ஒழுங்கின் அவசியத்தையும், முதலாவது தவிர்க்கவியலாமல் கலைந்தாக வேண்டிய இன்னொரு ஒழுங்கின் அவசியத்தையும் அவர் நிரூபணம் செய்தாலே போதுமானது… மார்க்ஸ் சமூக இயக்கத்தை இயற்கை வரலாற்றின் ஒரு நிகழ்முறையாக, மனித விருப்பம், நனவு மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றில் இருந்து சுயாதீனமானதாக இருப்பதோடு மட்டுமன்றி, அந்த விருப்பத்தையும், நனவையும், புத்திசாலித்தனத்தையும் தீர்மானிக்கிறதாகவும் இருக்கின்ற விதிகளால் ஆளப்படுவதாக, அணுகுகின்றார்.”
இதன் மூலம் மார்க்ஸ் எந்த வகையிலும் முதலாளித்துவம் அதுவாகவே நிலைகுலைந்து விடும் என்று சாதிக்கவில்லை. அது முதலாளித்துவ அபிவிருத்தியினாலேயே உருவாக்கப்பட்ட சமூக சக்தியான தொழிலாள வர்க்கம் எனும் அதன் வரலாற்றுரீதியான சவக்குழி-தோண்டுபவர் மூலமாக தூக்கிவீசப்பட்டாக வேண்டும். அது நடக்காவிடின், மனித நாகரீகமே அழிவுக்கு முகம்கொடுத்திருந்தது.
மார்க்சின் படைப்பானது, மிகக் கடினமான விஞ்ஞான ஆய்வினை அடிப்படையாகக் கொண்டிருந்த அதேசமயத்தில், அது வெறுமனே விஞ்ஞானத்தின் நலனின் பேரில் செய்யப்படவில்லை. முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்கும் மனிதகுலத்தை ஒரு உயர்ந்த சமூக வடிவத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் அவசியமாக இருக்கின்ற தத்துவார்த்த ஆயுதங்களைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குகிற ஒரு புரட்சிகர முனைப்பின் கோணத்தில் இருந்து அது மேற்கொள்ளப்பட்டது.
அவரது படைப்பின் இந்த இரண்டு அம்சங்களும் அசைக்கமுடியாத பிணைப்பைக் கொண்டவையாகும். தொழிலாள வர்க்கமானது, அது எந்த சமூக ஒழுங்கிற்கு எதிராக போராட்டத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறதோ அந்த சமூக ஒழுங்கைக் குறித்த ஒரு விஞ்ஞானபூர்வ பகுப்பாய்வைக் கொண்டு ஆயுதபாணியாகாமல், அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்று அவர் வலியுறுத்தினார். அதே நேரத்தில், முதலாளித்துவம் குறித்த அவரது விஞ்ஞானபூர்வ பகுப்பாய்வில் அவர் பெற்ற அதிமுக்கியமான வெற்றிகள் சாத்தியமானதென்றால் அதன்காரணம் அவர் முதலாளித்துவம் குறித்த ஒரு விமர்சனப்பூர்வ மனோபாவத்துடன், அதன் உண்மையான இயல்பு புதிர்ப்படுத்தப்பட்டிருக்கின்ற கருத்துவாத வடிவங்களுக்குள் உள்நுழைந்து அவற்றைத் தோலுரித்துக் காட்ட முனைப்புடன் இருந்த ஒரு புரட்சியாளராய் இருந்தார் என்பதால் தான். ஆகவேதான் மூலதனத்தின் துணைத்தலைப்பு “அரசியல் பொருளாதாரம் மீதான ஒரு விமர்சனம்” என்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலதனம் முதன்முதலாக வெளியிடப்பட்டபோது, அது முதலாளித்துவ புத்திஜீவி வட்டாரங்களில் பெருமளவில் உதாசீனம் செய்யப்பட்டது. ஆயினும் அது விரித்துரைத்த கருத்தாக்கங்களும் பகுப்பாய்வும் தொடர்ந்தும் முன்னேறின. அது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது, அடுத்த ஒரு சில தசாப்தங்களுக்குள் அது “தொழிலாள வர்க்கத்தின் பைபிள்” என்றாகி விட்டிருந்தது. அது முதலாளித்துவத்தின் சூறையாடல்களுக்கான மூலம் குறித்த ஒரு பகுப்பாய்வை ஸ்தாபித்ததுடன், எல்லாவற்றுக்கும் மேல், வளர்ந்து சென்ற தொழிலாளர்’ இயக்கத்துக்கு ஒரு வரலாற்று மற்றும் அரசியல் முன்னோக்கை வழங்கியது.
அரசியல் பொருளாதாரம் குறித்த விஞ்ஞானத்தில் மார்க்ஸ் ஈட்டியிருந்த இன்றியமையாத திருப்புமுனை முன்னேற்றங்களது அடிப்படையிலேயே இந்த முன்னோக்கு சாத்தியமாகியிருந்தது. அத்தனை பெரும் விஞ்ஞான சிந்தனையாளர்களையும் போலவே, மார்க்சும் அவரது முன்னோடிகளது, எல்லாவற்றுக்கும் மேல், ஆடம் ஸ்மித் மற்றும் டேவிட் ரிக்கார்டோ ஆகிய செவ்வியல் அரசியல் பொருளாதாரத்தின் இரண்டு பிரதான பிரதிநிதிகளது, தோள்களின் மேல் நின்று பார்த்தார்.
முதலாளித்துவ வர்க்கம் ஒரு மேலெழுந்து வரும் வர்க்கமாகவும் ஒரு முற்போக்கான சமூக சக்தியாகவும் இருந்த ஒரு காலகட்டத்தில் தமது பணிகளை முன்னெடுத்திருந்த அவர்கள், தொழிற்துறை முதலாளித்துவம் என்ற உயிர்பெற்று வந்த புதிய சமூகத்திற்குள்ளான ஒரு விஞ்ஞானபூர்வ ஆய்வை நடத்துவதில் இறங்கியிருந்தனர். உழைப்பின் மதிப்பு குறித்த விதியை -பண்டங்கள் சந்தையில் என்ன விகிதத்தில் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன (அவற்றின் மதிப்பு) என்பது அவற்றில் பொதிந்திருக்கும் உழைப்பு நேரத்தின் அளவின் மூலம் தீர்மானிக்கப்பட்டது- முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஒரு ஆய்வில் இருந்து அவர்கள் வெளிக்கொணர்ந்திருந்தனர்.
ஆனால் இந்த விதி முதலாளித்துவ சமுகத்திற்குப் பிரயோகிப்படும்போது அது ஒரு முரண்பாட்டிற்கு வந்தது. மதிப்புகளின் விதி கூறியதைப் போல, சமமான மதிப்புடையவை சமமான மதிப்புடையவையுடன் பரிவர்த்தனை செய்யப்படுமானால், இலாபம் எங்கிருந்து தோன்றுகின்றது? முதலாளித்துவ சமூகத்தின் மிக முக்கியமான பரிவர்த்தனையான, மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையிலான பரிவர்த்தனையில், இந்த மதிப்பு விதி பிரயோகிப்படக்கூடியதாக தோன்றவில்லையே, அது எப்படி?
இந்தக் கேள்விக்கான பதிலை கண்டுபிடித்ததுதான் -இலாபம் எழுவதென்பது எப்படி சாத்தியமானது, மதிப்பு விதிக்கு முரண்பாடாய் அல்ல, மாறாக அதற்கு இணங்கியே- மூலதனம் வெளியிடப்படுவதற்கு முன்வந்த 20 ஆண்டுகளில் மார்க்சின் புத்திஜீவித்தன உழைப்பின் வெகுமையமாக இருந்தது.
உழைப்பின் விளைபொருள் தனிமனிதப் பயன்பாட்டுக்காக இலக்கு வைக்கப்படாமல், மாறாக பரிவர்த்தனைக்காக இலக்கு வைக்கப்படுவதாக இருக்கின்ற, பண்டம் என்ற, முதலாளித்துவ சமூகத்தின் மூலக்கூறு வடிவத்தின் முரண்பாடுகளை பகுப்பாய்வு செய்ததிலும் விசாரணை செய்ததிலும் இதற்கான தீர்வு காணப்படுவதானது. அதற்கேற்ப, மூலதனம் பின்வருமாறு தொடங்குகிறது: ”முதலாளித்துவ உற்பத்திமுறை நிலவுகின்ற சமூகங்களின் சொத்தானது ‘பண்டங்களது களஞ்சியமாக’வே தோற்றமளிக்கிறது. ஆகவே நமது பகுப்பாய்வு பண்டத்தைப் பகுப்பாய்வு செய்வதில் இருந்து தொடங்குகிறது.”
பண்டமானது பயன்மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பு ஆகிய எதிர்மறைகளின் ஒரு கூட்டாகவே இருக்கிறது என்பதை மார்க்ஸ் விளங்கப்படுத்தினார். இந்த முரண்பாட்டின் மீதான பகுப்பாய்வானது மதிப்பின் வடிவம், பணம் மற்றும் மூலதனத்தின் தோற்றுவாய், மற்றும் மார்க்ஸ் “பண்டங்கள் மீதான மோகம்” என்றழைத்த முதலாளித்துவ பொருளாதாரத்தினாலேயே உருவாக்கப்பட்டிருந்த சித்தாந்த புதிர்ப்படுத்தல்களின் மூலஊற்றும் ஆகியவற்றின் மீதான ஒரு ஆய்வுக்கு இட்டுச் செல்கிறது.
பண்டம்-பணம்-மூலதனம் குறித்த இந்த பகுப்பாய்வின் ஊடாகத் தான் மார்க்ஸ் உபரி மதிப்பின் இரகசியத்தை வெளிக்கொணர்ந்தார். தொழிலாளி முதலாளியிடம் விற்ற பண்டம் அவனது உழைப்பு அல்ல, மாறாக அவனது உழைப்பு சக்தி அல்லது அவனது உழைக்கும் திறன் என்ற உண்மையில் இருந்து இது எழுந்திருந்தது. இதற்கு அவனுக்கு அதன் மதிப்புக்குத் தக்கபடி கூலி -தொழிலாளி தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொண்டு அடுத்த தலைமுறை தொழிலாளர்களை உருவாக்குவதற்கு அவசியமாக இருக்கின்ற அளவு கூலி- கொடுக்கப்பட்டது. ஆனால் உற்பத்தி நிகழ்முறையில் நுகரப்படுவதும் கூலி கொடுத்து வாங்கியவராக முதலாளிக்கு சொந்தமானதாகவும் இருந்த, உழைப்புசக்தியின் பயன்-மதிப்பானது, கூடுதல், அல்லது உபரி மதிப்பை உருவாக்குகின்ற அதன் திறனில் அடங்கியிருந்தது. தொழிலாளி தன் உழைப்பு சக்தியின் மதிப்பை வேலைநாளின் ஒரு சிறு பகுதியிலேயே மறுஉற்பத்தி செய்து விடுகிறான், அந்த நாளில் உருவாக்கப்படுகின்ற மீதி மதிப்பு முதலாளிக்குப் போகிறது என்ற உண்மையில் இருந்து இந்த உபரி மதிப்பு எழுந்தது.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உபரி மதிப்பும் இலாபமும் மதிப்பு விதியின் முரண்பாட்டில் இருந்து எழவில்லை, மாறாக அதற்கு இணங்கவே எழுந்தது. சுரண்டலும் அதிலிருந்து பிறக்கின்ற ஒவ்வொன்றுமே முதலாளித்துவப் பொருளாதாரத்தின் விதிகளில் இருந்து விளைந்தவையாகும். இந்தக் கண்டுபிடிப்பானது, விஞ்ஞான அடிப்படையில், முதலாளித்துவ சமூகத்திற்குள்ளாக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தையும் ஸ்தாபகம் செய்தது.
உபரி மதிப்பு இரகசியம் கண்டுபிடிக்கப்பட்டதன் முக்கியத்துவம் ஏங்கெல்ஸால் வலியுறுத்திக் கூறப்பட்டது. உலகெங்கிலும் பில்லியன்கணக்கான மக்களிடம் மேலும் மேலும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் செயல்பாடுகளுக்கு குரோதம் பெருகிச் செல்கின்ற நிலையைக் காணும் சமகால சமூகத்திற்கு அவரது கருத்துக்கள் கொஞ்சமும் பொருத்தம் இழந்துவிடவில்லை.
ஏங்கெல்ஸ் குறிப்பிட்டுக் காட்டினார், மார்க்சுக்கு முந்தைய சோசலிசம் முதலாளித்துவ சமூகத்தையும் அதன் பின்விளைவுகளையும், சில சமயங்களில் ஆவேசமாகவும் கூட, விமர்சனம் செய்திருந்தது. “ஆயினும் அது அவற்றை விளக்க முடியவில்லை, என்பதால், அவற்றைக் குறித்த அறிவுத்தேர்ச்சி பெறமுடியவில்லை. அவற்றை மோசமானவை என்று நிராகரிக்க மட்டுமே அதனால் முடிந்தது.”
முதலாளித்துவ உற்பத்திமுறையை அதன் வரலாற்று இணைப்பு, ஒரு குறிப்பிட காலகட்டத்தில் அதன் தவிர்க்கவியலாத தன்மை, அத்துடன் அதன் தவிர்க்கவியலாத வீழ்ச்சி ஆகியவற்றுடன் காட்டுவதும், அத்துடன் “அதன் விமர்சகர்கள் விடய நிகழ்முறையை தாக்காமல் அதன் மோசமான விளைவுகளைத் தாக்கிவந்த நிலையில், அப்போதும் இன்னும் ஒரு இரகசியமாகவே இருந்து வந்த அதன் அடிப்படையான தன்மையை தோலுரித்துக் காட்டுவதும் அவசியமாக இருந்தது. உபரி மதிப்பின் கண்டுபிடிப்பின் மூலமாக அது செய்யப்பட்டது.” ஏங்கெல்ஸ் தொடர்ந்து கூறினார், அத்துடன் வரலாற்று சடவாதம் என்னும் தத்துவமும் சேர்ந்து, சோசலிசமானது ஒரு விஞ்ஞானமாக ஆனது.
முதலாளித்துவமும் அதன் சித்தாந்தப் பிரதிநிதிகளும் மூலதனம் படைப்பை உதாசீனம் செய்ய முயலத் தொடங்கினர். ஆனால் அதன் செல்வாக்கு பரவப் பரவ, அவர்கள் அதனை மறுக்க முற்பட்டனர், அது தோல்வியடைந்த போது, அவர்கள் பொய்களிலும் புரட்டுகளிலும் இறங்கினர். ஆனால் அவர்களது முயற்சிகள் பயனற்றவையாக நிரூபணமாகியிருக்கின்றன. மார்க்ஸ், முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் நுட்பமாய் ஒவ்வொரு விவரம் வரைக்கும் பகுப்பாய்வு செய்துவிடவில்லை, அல்லது அதன் வரலாற்று அபிவிருத்தியின் அத்தனை அம்சங்களையும் முன்கணித்துவிடவில்லை என்பது உண்மையே என்ற அதேநேரத்தில், அதன் அடிப்படையான செலுத்து சக்திகள் குறித்த ஒரு பகுப்பாய்வை வேறெந்தப் படைப்பும் வழங்கவில்லை.
உபரி மதிப்பு இரகசியத்தை கண்டறிந்ததன் மூலம், மார்க்ஸ், நெருக்கடிகளின் தவிர்க்கவியலாத தன்மையையும், இலாப விகிதம் வீழ்ச்சி காண விழையும் போக்கில் பிரதிபலிக்கின்றவாறாய் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும் கூலியுழைப்பு மற்றும் பண்ட உற்பத்தியின் அடிப்படையிலான சமூக உறவுகளது அமைப்புமுறைக்கும் இடையிலான உட்பொதிந்த முரண்பாட்டையும் தோலுரித்துக் காட்ட முடிந்தது.
தனியார் இலாப வேட்டைக்கும் உற்பத்தியின் சமூகமயமான தன்மைக்கும் இடையிலான வெடிப்பான முரண்பாட்டின் -அது நாசகரமான நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகளது வடிவங்களை எடுத்தாலும் சரி அல்லது அமெரிக்காவில் சமீபத்திய புயல்களின் தாக்கத்தால் விளைந்த சமூக அழிவு போன்ற வடிவமென்றாலும் சரி- செலுத்து சக்திகள் குறித்த ஒரு விஞ்ஞானப்பூர்வ பகுப்பாய்வை வேறெவரொருவரும் வழங்கவில்லை.
ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் முன்னேற்றுகின்ற திறம்படைத்ததான உழைப்பின் உற்பத்தித் திறன் பிரம்மாண்டமான வளர்ச்சியைக் கண்டிருக்கும் நிலையில், சமூக அசமத்துவமும் இல்லாமையும் பெருகிச் செல்வது ஏன், உற்பத்திப் பெருக்கமானது மேலும் மேலும், மார்க்ஸ் விளக்கியதைப் போல, ஒரு துருவத்தில் கிறங்கடிக்கும் செல்வம் மறுதுருவத்தில் வறுமை, துன்பம் மற்றும் சீர்கேடு என்கிற வடிவத்தை எடுப்பது ஏன் என்பதற்கான விளக்கத்தை வேறெந்தப் படைப்பும் வழங்கியிருக்கவில்லை.
முதலாளித்துவமும் அதன் பிரதிநிதிகளும் மூலதனம் மீதும் அதன் புரட்சிகர முடிவுரைகளின் மீதும் தொடர்ந்தும் நெருப்பைக் கக்கிக் கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் உண்மைகள் விடாப்பிடியானவை.
மார்க்ஸினால் பகுப்பாய்வு செய்யப்பட்ட முதலாளித்துவ அமைப்புமுறையின் செயல்பாடுகளுக்கு எதிராக போராட்டத்துக்குள் வருகின்ற தொழிலாளர்களும் இளைஞர்களும் அவர்கள் முகம்கொடுத்து நிற்பது என்ன என்ற புரிதலுக்கும் ஒரு விஞ்ஞானரீதியான நோக்குநிலை மற்றும் முன்னோக்குக்கான அடிப்படைக்கும் நிச்சயமானதொரு வழிகாட்டியை மூலதனத்தில் காண்பார்கள்.
ஆயினும், அத்தகையதொரு படைப்பை உள்வாங்கிக் கொள்வது என்பது சுலபமானதல்ல. மார்க்ஸே விளக்கியிருந்ததைப் போல, விஞ்ஞானத்துக்கு சுலபமான பாதை ஏதுமில்லை. முயற்சி செலவிடப்பட்டாக வேண்டும். ஆனால் அத்தகையதொரு முயற்சியின் பலன்கள் செறிவானவை, தாக்குப்பிடித்து நிற்பவை. மூலதனத்தை வாசிப்பவர்கள், அவர்கள் முகம்கொடுக்கின்ற தீவிரமான மற்றும் வளர்ந்து செல்கின்ற பிரச்சினைகளது மூலம் குறித்த ஒரு புரிதலையும் அதனை எதிர்த்துப் போராடுவதற்குரிய ஒரு முன்னோக்கையும் கொண்டு ஆயுதபாணியாக்கப்படுவது மட்டுமல்ல, அவர்கள் உலக இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்றுடன் கலந்துரையாடிக் கொண்டுமிருப்பார்கள். ஷேக்ஸ்பியர் தவிர்த்து, வேறெவரொருவரும், மொழி வளர்ச்சிக்கு அதேயளவுக்கு பங்களித்திருக்க மாட்டார்கள்.
ஆகவே, மூலதனம் வெளியிடப்பட்டதன் 150வது ஆண்டுதினமானது, சுரண்டல் அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டு: கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வார்த்தைகளில் கூறுவதானால், வர்க்கங்களையும் வர்க்க குரோதங்களையும் கொண்ட முதலாளித்துவ சமூகத்திற்கு பதிலாக “ஒவ்வொருவரின் சுதந்திரமான அபிவிருத்தி தான் ஒட்டுமொத்தமாய் அனைவரது சுதந்திரமான அபிவிருத்திக்கான நிபந்தனையாக அமைகின்ற ஒரு கூட்டமைப்பு நம்மிடம் இருக்கும்படி” உழைப்பினால் உருவாக்கப்பட்ட உற்பத்தி சாதனங்களை பொது உடைமையாக இருப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு உண்மையான மனித சமூகத்தை உருவாக்குவது என்கிற முன்னோக்கினை முன்கூட்டியே அடையும் பொருட்டு மூலதனத்தின் ஒரு புத்துயிர்ப்பான கற்கைக்கான சந்தர்ப்பமாக அமையட்டும்.