Print Version|Feedback
Burma’s Aung San Suu Kyi and the fraud of human rights imperialism
பர்மாவின் ஆங் சான் சூ கீ யும், மனித உரிமைகள் ஏகாதிபத்தியத்தின் மோசடியும்
Peter Symonds
14 September 2017
மேற்கத்திய மாநிலமான ராகினில் பர்மிய இராணுவ வெறியாட்டத்தில் இருந்து தப்பித்த நூறாயிரக் கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம்களின் அவல நிலையானது, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மற்றும் பர்மாவில் (மியான்மர்) அவர்களது முக்கிய அரசியல் கருவியாக செயற்பட்டுவரும் ஆங் சான் சூ கீ ஆகியோரால் நடைமுறைப்படுத்துவரும் மனித உரிமைகள் ஏகாதிபத்தியத்தின் மோசடியினால் உருவான ஒரு பேரழிவுகர வெளிப்பாடு ஆகும்.
மேலும் சூ கீ ஐ ஒரு “ஜனநாயக சின்னமாக” ஊக்குவித்தவர்களினதும் மற்றும் ஐ.நா.வினதும் பெரும் பாசாங்குத்தனத்தை எடுத்துக்காட்டும் தறுவாயாக இந்த இராணுவ நடவடிக்கைகளின் இந்த கொடூரமும் அளவும் இருந்து வந்தது. ஊடகமும் மனிதாபிமான அமைப்புகளும் செயற்பாட்டுப் பகுதிக்கு செல்வதற்கு தடைசெய்யப்பட்ட போதிலும், பர்மிய இராணுவம் கிராமங்களை திட்டமிட்டு சித்திரவதை செய்து வருவது, மேலும் குடிமக்களை சிப்பாய்கள் சுட்டு வீழ்த்தி வருவது ஆகியவை குறித்த எண்ணற்ற சாட்சியங்களுக்கு கணிசமான மற்றும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் நேற்று, ராகினியில் நிகழ்ந்து கொண்டிருந்ததை “இன அழிப்பு” என்பதாக விவரித்ததோடு, “ரோஹிங்கியாவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டதை விபரிப்பதற்கு ஒரு சிறந்த வார்த்தையை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா?” என்றும் கேள்வி எழுப்புகிறார். ஐ.நா. பாதுகாப்பு சபை வெளியிட்ட ஒரு அறிக்கை, “அதிகப்படியான வன்முறை குறித்த அறிக்கைகள் பற்றி கவலையை வெளிப்படுத்தியது,” மேலும் “நிலைமை இன்னும் மோசமடையாதிருக்கவும்,” குடிமக்களை பாதுகாக்கவும் மற்றும் அகதிகள் பிரச்சினையை தீர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கவும் முறையீடு செய்தது.
பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் கடந்த வாரம், இராணுவத்தைக் கட்டுப்படுத்துவதில் சூ கீ அவரது செல்வாக்கை பயன்படுத்த வேண்டுமென்று முன்வைக்கப்படும் சர்வதேச கூட்டு அழைப்பில் தானும் இணைந்தார். “ஆங் சான் சூ கீ நமது தலைமுறையின் மிகவும் உற்சாகமூட்டும் நபர்களில் ஒருவராக சரியாக கருதப்படுகிறார், என்றாலும் ரோஹிங்கியாவின் நடைமுறை பர்மாவின் கீர்த்தியை அவமதிப்பதாகவுள்ளது” என்றவர் அறிவித்தார்.
இராணுவத்தின் இந்த இன அழிப்பு ஒரு தசாப்தத்திற்கு முன்னர் பர்மிய இராணுவ ஆட்சி சூ கீ ஐ வீட்டுக் காவலில் வைத்திருந்தபோது நடந்திருந்தால், அதற்கான எதிர்வினை மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கக்கூடும். “மோசடி ஆட்சியின்” மேற்கத்திய ஏகாதிபத்தியத்தில் இருந்து கண்டனங்களும், மனித உரிமை மீறல்கள் பற்றிய அதன் நீண்ட வரலாற்றின் பழிப்புரைகளும் எழுந்திருக்கக்கூடும், மேலும் பர்மாவிற்கு எதிராக கடுமையான இராஜதந்திர மற்றும் பொருளாதாரத் தடைகள் குறித்த நகர்வுகளும் இருந்திருக்கும்.
பர்மாவில் நிகழ்ந்த சமீபத்திய இராணுவ கொடுஞ்சயல்கள் குறித்து வாஷிங்டன் இப்போது எப்படி மென்மையான மெத்தனப்போக்கினைக் கொண்டுள்ளது? உலகம் முழுவதிலுமான பிரச்சனையாக இருக்கின்ற நிலையில், பர்மாவில் அடிப்படை ஜனநாயக உரிமைகளை வளர்ப்பதில் அமெரிக்கா ஒருபோதும் சிறிதும் அக்கறை காட்டவில்லை. மாறாக பர்மிய இராணுவ சர்வாதிகாரத்தின் மீதான அதன் அணுகுமுறை எப்போதும் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களால் அதிலும் குறிப்பாக, சீனாவுடனான ஆட்சிக்கு நெருக்கமான உறவுகள் மீதான வாஷிங்டனின் விரோதத்தினால் தீர்மானிக்கப்பட்டது.
ஒபாமா நிர்வாகம் ஆசிய பசிபிக் முழுவதும் சீனாவிற்கு எதிராக அதன் “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” கொள்கையை வலுப்படுத்த தொடங்கிய நிலையில், பர்மிய இராணுவ ஆட்சி, உள்நாட்டில் பெருகியதொரு பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை எதிர்கொள்வதானது, 2011 இல் பெய்ஜிங்கில் இருந்து ஒரு மாற்றீட்டிற்கும், மேலும் சூ கீ மற்றும் அவரது ஜனநாயகத்திற்கான தேசியக் கழகத்திற்கும் (National League for Democracy-NLD) ஒரு அரசியல் பாத்திரத்தை கண்டுபிடிப்பதற்கான அதன் விருப்பத்தையும் அடையாளம் காட்டியது.
ஒரு திடீர்திருப்பம் நிகழ்ந்தது போன்று இருந்தது. கிட்டத்தட்ட ஒரே இரவில், அமெரிக்கா மற்றும் சர்வதேச ஊடகங்கள் பர்மாவை ஒரு போக்கிரித்தனமான அரசு என்றல்லாமல், மாறாக “ஒரு வளரும் ஜனநாயகம்” என்று நியமித்தது. 2012 இல் ஜனாதிபதி பராக் ஒபாமா வருகையின் உச்சக்கட்டத்தில் உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளின் தொகுப்பு ஒன்று அங்கு உருவானது. இந்நிலையில் பொருளாதாரத் தடைகள் படிப்படியாக கைவிடப்பட்டன என்பதோடு, சூ கீ இராணுவ ஆட்சியின் நடமாடும் தூதராகி முதலீட்டிற்கும் நிதி உதவிக்கும் வற்புறுத்தினார்.
2016 இல் கவனமாக நிர்வகிக்கப்பட்ட தேர்தல்களில் NLD இன் வெற்றி மற்றும் சூ கீ அரசாங்கத்தின் உண்மையான தலைவராக நியமனம் செய்யப்பட்டது ஆகியவை குறித்து ஜனநாயகம் மலர்வதாக கருதப்பட்டு ஸ்தாபக ஊடகங்கள், நடுத்தர வர்க்க தாராளவாதிகள் மற்றும் பல்வேறு போலி-இடது அமைப்புகளால் உலகளாவிய வரவேற்பைப் பெற்றது. உண்மையில், தொடர்ந்து இராணுவம் பொறுப்பில் உள்ளது: பாராளுமன்றத்தில் கால் பகுதி இடங்களுக்கான அதிகாரிகளை அது நியமித்தது, மேலும் பாதுகாப்பு, உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் எல்லைப்புற விவகாரங்கள் ஆகியவற்றிற்கான பிரதான அமைச்சரவை பதவிகளுக்கான படைத் தளபதிகளையும் அதுவே நியமித்தது.
சூ கியும் NLD யும், அவர்களது அடிப்படை அக்கறை ஜனநாயக உரிமைகள் போன்றவவை குறித்து ஒருபோதும் இல்லை என்பதால் இந்த விடுகதையோடு இணைந்தே சென்றனர். மாறாக இராணுவ ஆட்சியின் கீழ் தங்களது பொருளாதார நலன்களை திணித்து வைத்துள்ள பர்மாவின் முதலாளித்துவ வர்க்கத்தின் அந்த பகுதிகளை NLD பிரதிநிதித்துவம் செய்கின்றது. மேற்கத்திய ஏகாதிபத்தியத்துடன் ஒழுங்குபடுத்திக் கொண்டு, முதலீடு செய்வதற்கேற்ற வகையில் நாட்டை ஏற்புடையதாக்க முனைந்தனர்.
மேலும், சூ கீ உள்ளடங்கலாக NLD உம் உழைக்கும் மக்களிடையே மத மற்றும் இன பிளவுகளை விதைப்பதை மீண்டும் மீண்டும் சுரண்டுகின்றதான பர்மிய பௌத்த மேலாதிக்கத்தின் பிற்போக்குத்தனமான சித்தாந்தத்தில் ஊறிய இராணுவத்தை போன்றே பிரதிபலிக்கின்றன. பர்மாவில் ஒரு பொருளாதார மலர்ச்சிக்கான நம்பிக்கைகள் மறைந்துவிட்ட நிலையில், இராணுவம் NLD இன் ஆதரவோடு, நாட்டின் பிரச்சினைகளுக்கு நீண்ட காலமாக ஒரு பலியாடாக பயன்படுத்தப்பட்டு வந்த முஸ்லீம் ரோஹிங்கியாக்களுக்கு எதிராக வன்முறையை அதிகரித்துள்ளது.
சூ கீ யும் NLD யும், பங்களாதேஷில் இருந்து “சட்டவிரோதமாக குடியேறியவர்கள்” என்று முத்திரையிடப்பட்டுள்ள ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு அடிப்படை உரிமைகள் கூட இல்லாதது குறித்து பரிந்துரைக்க எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பர்மாவில் பல தலைமுறைகளாக வாழ்ந்தாலும், பல சந்தர்ப்பங்களில், அவர்கள் குடிமக்களாக கருதப்படுவது இல்லை, என்பதோடு அவர்களுக்கு சமூக சேவைகளை பெறுவதற்கோ அணுகுவதற்கோ எந்தவித உரிமைகளும் கிடையாது.
சூ கீ, “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் நியாயப்படுத்தியும், மேலும் இராணுவத்தின் கொடூரங்களுக்கு விடையிறுத்த ரோஹிங்கியா போராளிகளை அடக்குவதற்கான தேவையை குறிப்பிட்டும் இராணுவத்தின் இன அழிப்பு பிரச்சாரத்தை பகிரங்கமாக பாதுகாத்துள்ளார். கடந்த வாரம் துருக்கிய ஜனாதிபதியின் விமர்சனத்திற்குப் பின்னர், பயங்கரவாதிகளின் நலன்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பிரச்சினைகளை உருவாக்குகின்ற “போலி செய்தி புகைப்படங்கள்” மற்றும் “தவறான தகவலின் ஒரு பெரும் தொகுப்பு” ஆகியவற்றிற்கு எதிராக சூ கீ தாக்குதலுக்கு உள்ளானார்.
பர்மாவின் நிகழ்வுகள், ஏகாதிபத்தியத்தின் நலன்களை முன்னெடுப்பதற்கு “மனித உரிமைகளை” விசமத்தனமாக பயன்டுத்துவதின் ஒரு தெளிவான உதாரணமாகும். ஆனால் இது ஒரேயொரு விடயத்தில் இருந்து மட்டும் வேறுபட்டுள்ளது. அவ்வப்போது மீண்டும் மீண்டும், ஆக்கிரமிப்பு மற்றும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகள் மீதான சட்டவிரோத போர்களுக்கான சாக்குப்போக்காக “மனித உரிமைகள்” குறித்து தலைவர்கள் மற்றும் ஆட்சிகள் மீதான ஆர்ப்பாட்டம் சுரண்டப்பட்டு வருகிறது. அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும், பல்வேறு தாராளவாதிகள் மற்றும் போலி-இடது குழுக்களின் ஆதரவுடன் ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் கழிவுகளை வீசியமையானது, மூலோபாய, ஆற்றல் நிறைந்த மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை உயர்த்துவதற்கான ஒரு முயற்சியில் மில்லியன் கணக்கான உயிரிழப்புகளுக்கு இட்டுச்செல்கின்றது.
பர்மாவில் உள்ள நிலைமை, ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் முன்னதாக லியோன் ட்ரொட்ஸ்கி அவரது நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் வடிவமைத்த அடிப்படை முடிவை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது, மேலும், ஏகாதிபத்தியத்தால் மேலாதிக்கம் செய்யப்பட்ட பர்மா போன்றதொரு தாமதமான முதலாளித்துவ அபிவிருத்தி கண்ட நாடுகளில் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கு கூட முதலாளித்துவத்தின் எந்தவொரு பகுதியினதும் இயல்பான இயலாமையையே கொண்டுள்ளது. சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒருங்கிணைந்த கூறுபாடாக ஒரு புரட்சிகர இயக்கத்தின் தலைமையில் அதிகாரத்தை கையில் எடுக்கும் போராட்டத்திற்கு மத்தியில் அந்த பணி தொழிலாள வர்க்கத்தின் மீதே சுமத்தப்படுகிறது என்பது 1917 இல் ரஷ்யப் புரட்சி மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.