Print Version|Feedback
Amid India-China war crisis, Washington boosts strategic ties with New Delhi
இந்தியா-சீனா போர் நெருக்கடிக்கு இடையே, வாஷிங்டன் நியூ டெல்லி உடனான மூலோபாய உறவுகளை அதிகரிக்கிறது
By Deepal Jayasekera and Keith Jones
19 August 2017
இந்தியாவுடனான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய கூட்டணியை பலப்படுத்த சமீபத்திய நாட்களில் ட்ரம்ப் நிர்வாகமும் பென்கடனும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
வெளிப்படையாகவே இந்நகர்வுகள் டோக்லம் பீடபூமி கட்டுப்பாடு மீது சீனாவுடனான தற்போதைய மோதலில் புதுடெல்லி அதன் கடுமையான நிலைப்பாட்டை விடாப்பிடியாக வைத்திருக்க, இந்தியாவை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. டோக்லாம் பீடபூமி என்பது, இமாலய மலைப்பகுதியில் புதுடெல்லி ஒரு காபந்து அரசாக கையாளும் ஒரு சிறிய மன்னராட்சியான பூட்டானும் சீனாவும் தமது இறையாண்மை எல்லைப்பகுதியாக உரிமைகோருகின்றதும், இமாலய மலைத்தொடரில் அமைந்துள்ளதுமான ஒரு மலைஉச்சிப்பகுதியாகும்.
டோக்லம் பீடபூமியில் கடந்த இரண்டு மாதங்களாக இந்திய மற்றும் சீன துருப்புக்கள் "நேருக்கு நேர்" ஒன்றுக்கொன்று எதிரெதிராக அணிவகுத்து நிற்கின்ற அதேவேளையில், புது டெல்லியும் பெய்ஜிங்கும் ஒன்றின் மீது ஒன்று போர்நாடும் அச்சுறுத்தல்கள் மற்றும் குறைகூறல்களை விடுத்துள்ளதுடன் அவற்றின் இராணுவங்களை போருக்கு தயாராக இருக்க உத்தரவிட்டுள்ளன.
இந்தியா சீனாவை ஒட்டிய அதன் வடகிழக்கு எல்லையின் முன்னரங்கு நிலைகளுக்கு ஆயிரக் கணக்கான துருப்புகளை நகர்த்தி, அவற்றை "போர் இல்லையெனில், சமாதானம் இல்லை" என்ற உயர் எச்சரிக்கை நிலையில் நிலைநிறுத்தி உள்ளதுடன், வெடிகுண்டுகள், உதிரி பாகங்கள் மற்றும் ஏனைய போர் தளவாடங்களை அவசரகதியில் கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளது.
சீனா தீபெத்திற்கு போர்விமானங்களை நகர்த்தியிருப்பதாகவும், இந்திய மாநிலம் அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய அதன் எல்லைக்கு அருகே தரையிலிருந்து விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணைகளை நிலைநிறுத்தி இருப்பதாகவும் மற்றும் காயப்படுபவர்களைக் கருத்திக் கொண்டு திபெத்திற்கு கூடுதல் இரத்த கையிருப்புகளை அனுப்பி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலில் வாஷிங்டனின் தலையீடு, இப்போதைக்கு அது மறைமுகமாக இருந்தாலும் கூட, அணுஆயுத சக்திகளான இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே ஒரு எல்லை மோதல் அபாயத்தை மிகப்பெரியளவில் அதிகரிக்கின்றது என்பதோடு, வேகமாக தீவிரமடைந்து, ஆசியா மற்றும் மொத்த மனிதயினத்திற்குமே பேரழிவுகரமான விளைவுகளோடு அமெரிக்க மற்றும் ஏனைய பிராந்திய மற்றும் ஏகாதிபத்திய சக்திகளையும் உள்ளிழுக்கும்.
இந்திய சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடிக்கு இடையிலான ஓர் உரையாடலின் போது, அமெரிக்காவும் இந்தியாவும் "இந்தோ-பசிபிக் பிராந்தியம் எங்கிலும்" அவற்றின் இராணுவ-பாதுகாப்பு கூட்டுறவை விரிவாக்க ஒப்புக் கொண்டதாக செவ்வாயன்று வெள்ளை மாளிகை அறிவித்தது.
முதல் படியாக, அவ்விரு நாடுகளும் அவற்றின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களை உள்ளடக்கிய "மந்திரிகள் அளவிலான இருவருக்கு-இருவர் (2-by-2) பேச்சுவார்த்தையை" தொடங்கி, "அவற்றின் மூலோபாய ஆலோசனைகளை அதிகரிக்கும்.”
அதற்கடுத்த நாள் வாஷிங்டன் அறிவிக்கையில், சர்ச்சைக்குரிய காஷ்மீரில் இந்திய ஆட்சியை எதிர்க்கும் ஒரு இஸ்லாமிய போராளிகள் குழுவான ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பை ஒரு "வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக" பட்டியலிட்டிருப்பதாக அறிவித்தது. ஆச்சரியத்திற்கிடமின்றி, இந்நகர்வு இந்தியாவால் மனமுவந்து வரவேற்கப்பட்டது. முஸ்லீம் பெரும்பான்மை காஷ்மீர் பகுதியில் புது டெல்லி மீதான எதிர்ப்புக்கும் மற்றும் பாரிய அன்னியப்படலுக்கும் பாகிஸ்தான் அரசு-ஆதரவிலான பயங்கரவாதமே, முழுமையாக இல்லையென்றாலும், பிரதானமாக உள்ளதென புது டெல்லி வாதிடுகிறது. இதை இஸ்லாமாபாத் கடுமையாக கண்டனம் செய்து வருகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சன், பாதுகாப்பு துறை செயலர் ஜேம்ஸ் மாட்டீஸ் மற்றும் ஜப்பானிய அமைச்சர்களான Taro Kono மற்றும் Itsunori Onodera ஆகியோருக்கு இடையிலான நேற்றைய "இருவருக்கு-இருவர்" சந்திப்பானது, அமெரிக்காவும் ஜப்பானும் "அப்பிராந்தியத்தின் ஏனைய பங்காளிகளுடன் சேர்ந்து, குறிப்பாக கொரிய குடியரசு, ஆஸ்திரேலியா (மற்றும்) இந்தியாவுடன் சேர்ந்து, முத்தரப்பு மற்றும் பல்தரப்பு பாதுகாப்பு மற்றும் இராணுவ கூட்டுறவை முன்னெடுக்க" கூட்டாக பணியாற்றுவதென முடிவெடுத்தனர்.
இது, வட கொரியா அதன் அணுஆயுத மற்றும் தொலைதூர ஏவுகணை பரிசோதனைகளை ஒருதலைபட்சமாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென்ற அமெரிக்க கோரிக்கைகளுக்கு அது தலைவணங்க மறுத்ததற்கு ஒரு விடையிறுப்பாக காட்டப்பட்டது. ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் எட்டு மாதங்களுக்கு முன்னர் பதவிக்கு வந்த பின்னர் இருந்து திட்டமிட்டு தூண்டிவிட்டுள்ள வட கொரிய நெருக்கடி, அனைத்திற்கும் மேலாக பியொங்யாங்கின் அண்டை நாடும் பிரதான கூட்டாளியுமான சீனாவை மூலோபாயரீதியில் தனிமைப்படுத்த, சுற்றி வளைக்க மற்றும் பீதியூட்டுவதற்கான அமெரிக்க ஏகாதிபத்திய முனைவால் ஏற்பட்டதாகும்.
கடந்த கால்-நூற்றாண்டு காலமாக வாஷிங்டன் தான் ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டின் மீது சட்டவிரோதமாக படையெடுத்துள்ளது என்கின்ற போதினும், சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலுக்குள் இந்தியா முன்பினும் ஆழமாக ஒருங்கிணையும் பாகமாக, சிறிய, வறுமைப்பட்ட ஒரு நாடான வட கொரியாவை உலக அமைதிக்கு ஒரு பிரத்தியேக அச்சுறுத்தலாக சித்தரிக்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை திரும்பத்திரும்ப கூறுகின்றது.
முன்பில்லாத வகையில் வட கொரியா மீது "ஆத்திரம் மற்றும் சீற்றத்தை" மழையென பொழியவதற்கான ட்ரம்ப்பின் பொறுப்பற்ற அச்சுறுத்தல்களுடன், மோடி இந்தியாவையும் அச்சுறுத்தும் வகையில் அணி சேர்த்துள்ளார். அவர்களது ஆகஸ்ட் 15 உரையாடலின் உரை வடிவத்தின்படி, “வட கொரிய ஆபத்திற்கு எதிராக உலகை ஒருங்கிணைப்பதில், ட்ரம்பின் பலமான தலைமைக்காக பிரதம மந்திரி மோடி ஜனாதிபதி ட்ரம்புக்கு நன்றி தெரிவித்தார்.”
கடந்த ஒன்றரை தசாப்தங்களைப் பொறுத்த வரையில், ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தின் கீழ் ஆகட்டும் அல்லது குடியரசுக் கட்சி நிர்வாகத்தின் கீழ் ஆகட்டும், இந்தியாவை சீனாவுக்கு எதிர்பலமாக கட்டமைப்பதும் மற்றும் அமெரிக்காவின் மூலோபாய நோக்கங்களுடன் அதை பிணைப்பதுமே வாஷிங்டனின் ஒரு மத்திய மூலோபாய குறிக்கோளாக இருந்துள்ளது. இந்தியா, சீனாவை ஒட்டி சுமார் 3,500 கிலோமீட்டர் நீள எல்லையைக் கொண்டுள்ளதும், உலகின் மிகப்பெரிய படைகளில் ஒன்றை கொண்டுள்ளதும் என்பது மட்டுமல்ல. அது புவியியல்ரீதியில் இந்திய பெருங்கடலிலும் அதிகாரம் செலுத்துகிறது, இந்த கடல்-எல்லைகள் வழியாகத்தான் சீனாவிற்கான பெரும்பான்மை எண்ணெய் மற்றும் அதன் பொருளாதாரத்திற்கு தேவையான ஏனைய ஆதாரவளங்களும் செல்கின்றன.
மோடி மற்றும் அவரின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) மூன்றாண்டுகால ஆட்சியில், இந்தியா கண்கூடாக சீனாவுக்கு எதிரான அமெரிக்க தாக்குதலில் ஒரு முன்னணி நாடாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியா அதன் இராணுவ தளங்கள் மற்றும் துறைமுகங்களை அமெரிக்க போர்விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் வழமையாக பயன்படுத்துவதற்கு இப்போது அனுமதிக்கிறது. இந்திய பெருங்கடலில் சீன கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல்களின் நகர்வுகளைக் குறித்த உளவுதகவல்களைப் பென்டகனுடன் பகிர்ந்து கொள்கிறது, மேலும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ-மூலோபாய உறவுகளையும் மிக வேகமாக விரிவாக்கியுள்ளது.
கடந்த வாரயிறுதியில் பிரஸ் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியாவுடனான ஒரு பேட்டியில், அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் தலைவர் அட்மிரல் ஹாரி ஹாரீஸ் கூறுகையில், அமெரிக்கா "இந்தியாவின் இராணுவத்தை நவீனமாக்க அதற்கு உதவ தயாராக இருப்பதாக" அறிவித்து, இந்தியாவுடன் பென்டகன் இயைந்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வங்காள விரிகுடாவில் சமீபத்திய அமெரிக்க-இந்திய-ஜப்பானிய கூட்டு கடற்படை ஒத்திகையைப் புகழ்ந்துரைத்த அட்மிரல், அதை அமெரிக்காவின் நாற்கர ஒத்திகையாக மாற்றும் வகையில் ஆஸ்திரேலியாவையும் மற்றும் சீனாவை இராணுவரீதியில் எதிர்கொள்ள மற்றும் தோற்கடிக்க பென்டகனின் மூலோபாய முன்னெடுப்பில் உள்ள நாடுகளையும், வருடாந்தர மலபார் ஒத்திகையில் இணைத்து கொண்டால் அது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
டோக்லம் பீடபூமிக்கு உரிமையுள்ள சொந்தக்காரர் யார் என்பதில் அமெரிக்கா நிலைப்பாடு எடுக்கவில்லை என்பதை பகிரங்கமாக அது தொடர்ந்து பேணி வருவதற்கு இராஜாங்கரீதியிலான காரணங்கள் இருந்தாலும் கூட, சீனாவுடனான இந்தியாவின் தற்போதைய எல்லை நெருக்கடியில் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுடன் நிற்கிறது என்பதை தெளிவுபடுத்துமாறு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பல மூலோபாயவாதிகளிடம் இருந்து வந்த அழைப்பை அடுத்து, இந்தியாவுடனான உறவுகளைப் பலப்படுத்துவதற்கான வாஷிங்டனின் நகர்வுகள் வந்துள்ளன.
“JFK ஒரு சீன-இந்திய போரைத் தடுத்தார். ட்ரம்பால் முடியுமா? அணுஆயுத பணயங்கள் இப்போதும் பெரிதும் அதிகரித்துள்ளன,” என்று தலைப்பிட்டு நீண்டகால சிஐஏ நடவடிக்கையாளரும் ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரியுமான Bruce Reidel எழுதியிருந்த ஒரு கட்டுரை இவ்விடயத்தில் குறிப்பாக குறிப்பிடத்தக்கதாகும். ஜனாதிபதி ஜோன் கென்னடி "இந்திய விமானப்படைகளுக்கு சரக்குகளை மீள்நிரப்ப அமெரிக்க விமானப்படையை" அனுப்பினார் மற்றும் ஒரு விமானந்தாங்கி "போர்க்கப்பல் படைப்பிரிவை வங்காள விரிகுடாவிற்கும்" அனுப்பினார், இது தான் 1962 சீன-இந்திய எல்லை போரை சீனா ஒருதலைபட்சமாக முடித்துக் கொள்ளவும் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அதன் "கைப்பற்றல்களில்" இருந்து பின்வாங்கவும் செய்தது என்று அக்கட்டுரை வாதிடுகிறது.
“உலகிற்கே மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்த கூடியதான" ஒரு மோதல் வெடிப்பதைத் தடுக்க ட்ரம்ப் நிர்வாகம் இராஜாங்க நடவடிக்கைகளைத் தொடங்க தயாராக வேண்டுமென Reidel வலியுறுத்துகின்ற அதேவேளையில், இந்திய இராணுவம் பெய்ஜிங்கிடம் தலைகுனியாமல் இருக்க உதவுவதில் வாஷிங்டன் அதற்கு உதவ முன்வர வேண்டுமென்றும், அவசியமானால் போர்களத்தில் அதை இரத்தம்தோய்ந்ததாக்க வேண்டுமென்றும் அவர் மறைமுகமாக வாதிடுகிறார்.
ஒரு முன்னணி அமெரிக்க சிந்தனை குழாமான, மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் Richard M. Rossow, அவர் பங்கிற்கு, “சீனாவை எதிர்த்து நிற்க வெளிநாட்டு எல்லைகளுக்குள் அதன் துருப்புகளை அனுப்புவதை" ட்ரம்ப் நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டுமென்று வாதிடுகிறார், அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள் நீண்டகாலமாகவே இக்கருத்தில் நிலைத்திருக்கிறனர் என்பதை புது டெல்லி உணர்ந்துள்ளது.
போர் விரும்பத்தக்கதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அமெரிக்க தலைமையிலான "உலகளாவிய ஒழுங்கமைப்புக்கு" பங்களிப்பளிக்க முக்கிய படிகளை எடுக்க இந்தியா தயாராக உள்ளது என்பதற்கும், “நமது அதிகரித்துவரும் பாதுகாப்புத்துறை பங்காண்மையை இன்னும் ஆழப்படுத்தும் நமது தீர்மானத்தை அது பலப்படுத்தும் என்பதற்கும்" பலமான, தெளிவான ஒரு சமிக்ஞையை நாம் பெற்றுவிட்டோம் என்பதை Rossow ஒப்புக் கொள்கிறார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிக முக்கிய ஆசிய கூட்டாளியான ஜப்பான், டோக்லம் பீடபூமி பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிப்பதில் அமெரிக்காவை விட இன்னும் கூடுதலாக முன் சென்றுள்ளது. வியாழனன்று, இந்தியாவுக்கான ஜப்பானிய தூதர் Kenji Hiramatsu கூறுகையில், இந்தியா "பூட்டானுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை" ஒன்றை கொண்டிருப்பதாக கூறி, அதற்கு சட்டபூர்வ உரிமையில்லாத பகுதியில் இந்திய துருப்புகள் தலையிட்டிருப்பதை நியாயப்படுத்தினார். பெய்ஜிங் பெயரைக் குறிப்பிடாமல், அவர் அறிவுறுத்துகையில், அந்த சர்ச்சைக்குரிய பீடபூமியில் ஒரு சாலையை விரிவாக்கும் முயற்சியானது "இருக்கும் நிலைமையை பலத்தினால் ஒருதலைப்பட்சமாக மாற்ற" முயற்சிப்பதாகும் என்றார்.
மேற்கத்திய மூலதனத்திற்கு பிரதான மலிவு-உழைப்பு வினியோக-சங்கிலி மையத்திலிருந்து சீனாவைப் புறந்தள்ளும் நம்பிக்கையில் மற்றும் அதன் சொந்த வல்லரசு அபிலாஷைகளை முன்னெடுப்பதற்காக, ஊழல் நிறைந்த இந்திய முதலாளித்துவ வர்க்கம், சீனாவை மீண்டும் அடிபணிய வைக்கும் அமெரிக்க மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்திய உந்துதலில் அவற்றின் ஒரு சேவகராக சேவையாற்றி வருகிறது.
சீன மக்கள் குடியரசில் முதலாளித்துவத்தை மீட்டமைத்ததில் இருந்து எழுந்த செல்வந்த தன்னலக் குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற சீன ஆட்சியிடம், அதற்கு எதிராக தொடுக்கப்பட்டு வரும் இடைவிடாத தாக்குதலுக்கு எந்த முற்போக்கான பதிலும் கிடையாது.
ஆசிய மற்றும் உலக மக்களின் போர்-எதிர்ப்புணர்வுக்கு எந்தவொரு முறையீடும் செய்ய அமைப்புரீதியிலேயே இலாயகற்று, அது, வாஷிங்டன் உடன் ஒரு ஏற்பாட்டை செய்து கொள்ளும் முயற்சிக்கும், போர்நாடும் தேசியவாதத்தை முடுக்கிவிட்டு அதன் சொந்த இராணுவவாத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
பெரும்பாலும் போர் ஏற்பட சாத்தியமுள்ளது, ஆனால் அந்த மோதலை இந்தோ-சீனா எல்லையின் கிழக்கு பகுதியோடு மட்டுப்படுத்த முடியும் என்றும், அது ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரத்திற்கு மிகாமல் நீடிக்கும் என்றும் சீன இராணுவம் நம்புவதாக கூறிய மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆதாரநபர்களை, South China Morning Post இன் ஒரு சமீபத்திய கட்டுரை மேற்கோளிட்டது.
ஆனால் ஒரு எல்லை போரானது அமெரிக்காவில் தொடங்கி ஏனைய சக்திகளையும் வேகமாக உள்ளிழுக்கும் என்பதையே சமீபத்திய நாட்களின் அபிவிருத்திகள் எடுத்துக்காட்டுகின்றன. அதுபோன்றவொரு பேரழிவு தடுக்கப்பட்டாலும் கூட, இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான ஒரு மோதல் ஒரு எல்லை போராக மட்டுப்பட்டு இருந்தாலும் கூட, அது உலகெங்கிலும் உழைக்கும் மக்களுக்கு பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும்.
அதன் விளைவு என்னவாக இருந்தாலும், அதுபோன்றவொரு போர் ஏகாதிபத்தியத்தை மட்டுமே பலப்படுத்தும்.
ஒரு சீன "வெற்றியானது", இந்திய முதலாளித்துவ வர்க்கம் சீனாவுக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான நேட்டோ வகைப்பட்ட ஒரு கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ள மட்டுமே காரணமாக அமையும். அதற்கும் கூடுதலாக, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின் மீள்ஆயுதமயப்படுத்தல் போருக்கான திட்டங்களைத் தீவிரப்படுத்துவதற்கு இமாலய பகுதி சம்பவங்களை ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தும்.
சீனா தோல்வியடையும் ஒரு சம்பவத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவுக்கு எதிரான அதன் பொறுப்பற்ற இராணுவ-மூலோபாய தாக்குதலைத் தீவிரப்படுத்த அந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொள்ளும். இதற்கிடையே, மோடி அரசாங்கம், 1962 “அவமதிப்பை" துடைத்துவிட்ட பெருமிதத்துடன், தெற்காசியாவின் மேலாதிக்க சக்தியாக அதை அங்கீகரிப்பதற்காக அதன் அண்டைநாடுகளை மிரட்டுவதற்கான அதன் முயற்சிகளை அதிகரித்து, தொழிலாள வர்க்கம் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த போர்நாடும் உணர்ச்சிகரமான தேசியவாத சூழலை முடுக்கிவிட்டு, இந்திய அரசியலை இன்னும் கூடுதலாக வலதிற்கு நகர்த்தும்.
ஆனால் முதலாளித்துவ வர்க்கத்தின் போர் முனைவுக்கு ஒரு எதிர்விசை உள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் சமீபத்திய தசாப்தங்கள் ஒரு பாரிய தொழிலாள வர்க்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதுவொரு பலமான சமூக சக்தியாகும், இலாபங்கள், ஆதாரவளங்கள் மற்றும் மூலோபாய அனுகூலங்களுக்கான முதலாளித்துவ போட்டாபோட்டியில் இதற்கு எந்த ஆர்வமும் கிடையாது, போருக்கு மூலக்காரணமான முதலாளித்துவம் மற்றும் அது வரலாற்றுரீதியில் வேரூன்றியுள்ள காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறையை தூக்கியெறியும் நோக்கில், ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் சேர்ந்து இந்த பலமான சமூக சக்தி அணிதிரட்டப்பட வேண்டும்.