Print Version|Feedback
Sri Lankan police responsible for the death of young man in the east
இலங்கையின் கிழக்கில் இளைஞனின் மரணத்திற்கு பொலிஸ் பொறுப்பாளி
By our correspondent
9 August 2017
கிழக்கு இலங்கையில் கரனடியனாறு கிராம மக்கள், 17 வயது சுதாகரன் மதுசானின் மரணத்திற்கு பொறுப்பான பொலிசாருக்கு எதிராக, யூலை 24 அன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை, கரடியனாறு ஆற்றில் மணல் அகழும் பகுதியில் துப்பாக்கிப்பிரயோகம் செய்தபோது, மதுசானும் அவருடைய சகோதரன் கிருசாந்தனும் தப்புவதற்காக ஆற்றுக்குள் பாய்ந்தனர். கிராம மக்கள் அங்கு விரைந்து ஆற்றில் மூழ்கி கொண்டிருந்தவர்களை செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் மதுசான் இறந்தார்.
மதுசானும் அவரது அண்ணன் கிருசானும் கரடியனாறு முத்தன் குமாரவெளி ஆற்றிலிருந்து எடுக்கப்பட்ட மணலை உளவு இயந்திரத்ததில் ஏற்றிக் கொண்டிருந்தபோது விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் தொடுத்தனர்.
கிராமவாசிகள் ஊடகங்களுக்கு தெரிவித்தாவது: “நாங்கள் ஆற்றுப்பக்கம் வந்து அவர்களை காப்பாற்றுவதற்கு முயற்சித்தபோது அதிரடிப் படையினர் எங்களை தடுத்தனர். அதனால்தான் கிராம மக்கள் ஆத்திரமடைந்து சுற்றி வளைத்து அவர்களை நகரவிடாது தடுத்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். வைத்திய சாலைக்கு நேரத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இந்த இளைஞனின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும்.”
பொலிசார் அந்த இடத்திற்கு வந்து, அதிரடிப்படையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டதோடு அவர்களை விடுவிக்குமாறு கோரினர். ஆனால் பொரலிசாரின் கோரிக்கையை மக்கள் நிராகரித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். வியாழேந்திரன், எஸ். யோகேஸ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமாரும் அங்கு வந்து அதிரடிப் படையினரை விடுதலை செய்யுமாறு கோரினர். அதற்கும் அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர். பின்னர், அதிரடிப்படையினரை விடுவிக்க பெரியளவில் பொலிசார் அங்கு குவிக்கப்பட்டு எச்சரிக்கை வேட்டுக்களை சுட்டு மக்களை கலைத்தனர்.
மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் செங்கலடி வைத்திய சாலைக்கு முன்னாலும் மற்றும் அதற்கு அருகாமையில் உள்ள சந்தியில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு-பதுளை போக்குவரத்தை தடை செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பொலிசரில் நம்பிக்கையில்லை எனவும் மரணவிசாரணை நீதிபதியின் முன்னால் நடைபெற வேண்டும் எனவும் மக்கள் கோரினர்.
இது, வடக்கு மற்றும் கிழக்கில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் நடந்த இரண்டாவது கொலையாகும். இரண்டு வாரத்திற்கு முன்னர்தான் ஜூலை 9 அன்று யாழ்ப்பாணத்தில் துன்னாலை கிராமத்தை சேர்ந்த யோகராஜா தினேஷ், லொறியில் பயணம் செய்யும் போது மெய்சிலிர்க்கும் விதத்தில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாக அவர் மீது பொய்யாக பொலிசார் குற்றஞ் சாட்டினர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடூர இனவாத யுத்தம் முடிவுற்ற போதும், கொழும்பு அரசாங்கத்தின் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள வடக்கு மற்றும் கிழக்கில் மேலோங்கும் ஒடுக்குமுறை நிலைமையையே இந்த மரணங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
இந்த மரணங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாத்திரத்தையும் அம்பலப்படுத்துகின்றது. தமிழ் முதலாளித்துவத்தின் இந்த பிரதான கட்சி, சாதாரண மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அது அமெரிக்க சார்பு கொழும்பு அரசாங்கத்தின் நேரடி முகவராக செயல்படுவதுடன் இராணுவத்தின் சார்பாக தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களை ஒழுக்கப்படுத்துகின்ற வேலைகளில் ஈடுபடுகின்றது. சர்வதேச ரீதியில் அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்கு கீழ்படிந்து சேவை செய்கின்றது.
யுத்தத்தின் மூலமும் மற்றும் கொழும்பு அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கையினாலும் அதிகரிக்கப்பட்ட எண்ணிலடங்கா சமூகப் பிரச்சனைகளை வடக்கு கிழக்கு மக்கள் முகம் கொடுக்கின்றார்கள். ஏனய பிரதேசங்கள் போன்று கரனடியனாறும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டது. 2006ல் புலிகளுக்கு எதிரான இறுதி இராணுவ நடவடிக்கையில் இந்த பிரதேசவாசிகள் முழுமையாக இடம்பெயர்ந்திருந்தனர். அநேகமானவர்கள் திரும்பி வந்திருந்த போதும் அவர்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றார்கள்.
சில வசதிபடைத்தவர்களில் அநேகமானவர்கள் நெல் வயல் நிலங்களை கொண்டிருக்கின்றார்கள். கிராமவாசிகளில் பெரும்பான்மையானவர்கள் அறுவடை காலங்களில் இந்த வயல் நிலங்களில் வேலை செய்கின்றார்கள். காலையிலிருந்து மாலைவரை உழைத்த பின் 1,000 ரூபாயை பெறுகின்றார்கள். ஏனைய நாட்களில் ஆற்றில் மீன்பிடித்தும் அருகாமையில் உள்ள காடுகளில் விறகு வெட்டியும் சிறிய வருமானத்தை பெறுகின்றனர். வேலையின்மையால் சில இளைஞர்கள் மணல் வினியோகிக்கும் வர்த்தகர்களிடம் வேலை செய்கின்றனர். மேலும் அங்கு உள்ள மூன்று கற்குழிகளிலும் மக்கள் வேலை செய்கின்றார்கள். இந்த தொழிலாளர்கள் ஓலைக் குடிசைகளிலேயே வாழ்கின்றார்கள்.