Print Version|Feedback
පොලිස් නිලධාරීන්ට පහරදීම කඩතුරාවක් කරගනිමින් ආන්ඩුව උතුරේ රාජ්ය මර්දනය තර කරයි
பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதலை சாக்காக பயன்படுத்திக்கொண்டு வடக்கில் அரச ஒடுக்குமுறை உக்கிரமாக்கப்பட்டுள்ளது
By W. A. Sunil
7 August 2017
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில், ஜூலை 30 அன்று பகல், சுமார் 15 பேர் அடங்கிய கும்பல் ஒன்று வாள்கள் மற்றும் தடிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்து, இரண்டு பொலிஸ் அதிகாரிகளை தாக்கின. அவர்கள் இருவரும் ஒரு புகாரை விசாரிக்க சென்று திரும்பிக்கொண்டிருந்த போதே தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. கடும் தாக்குதலுக்கு உள்ளான தம்மிக்க மற்றும் சுரேந்திர ஆகிய இரண்டு போலீஸ் அதிகாரிகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது இன்னும் நிச்சயமாக அம்பலத்துக்கு வரவில்லை. சில தகவல்களின்படி, ஒரு முறைப்பாட்டைப் பற்றி விசாரிக்கும் போது போலீசாருடன் ஏற்பட்ட பிரச்சினையினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், சம்பவம் நடந்த அடுத்த நாள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பின்வருமாறு அறிவித்தார்:
"நாங்கள் பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டிவிட்டதாக கூறினாலும் அங்கு அனைத்துமே முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்ல முடியாது. இதை இந்த வழியில் போக அனுமதிக்க முடியாது. இந்த முறையில்தான் புலி பயங்கரவாதமும் ஆரம்பித்தது. அதுவே மீண்டும் வருகிறது,” என யாழ்ப்பாணத்தில் கடந்த 31ம் திகதி மத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நடந்த கலந்துரையாடலில் ஜயசுந்தர கூறினார். “தாக்குதல் காரர்கள் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள்” என்றும் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் "புணர்வாழ்வு அழிக்கப்படாத புலிகளின் முழு உறுப்பினர்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரையும் இரவு பகலாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்துவதாகவும் தேவைப்பட்டால் முப்படைகளின் ஒத்துழைப்பை பெறுவதாகவும் ஜயசுந்தர சுட்டிக்காட்டினார். ஒடுக்குமுறைத் திட்டத்தை அமுல்படுத்துவதைப் பற்றி கலந்துரையாடுவதற்காக, ஜயசுந்தர வடமாகாண முதலமைச்சர், தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளையும் சந்தித்தார்.
"புலி பயங்கரவாதம்" மீண்டும் தலை தூக்குகின்றது என்று அவர் கூறிய கருத்துக்களின் நோக்கம், அந்த விதத்தில் அடக்குமுறையை அதிகப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்து, இனவாதத்தை கிளறிவிடுவதற்கு எண்ணெய் வார்ப்பதே ஆகும். சமீபத்திய மாதங்களில் பொலிஸ் செய்த ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக எழுந்த வெகுஜன எதிர்ப்புக்களையும் “புலிகள் மீண்டும் தலை தூக்கும் சந்தர்பங்களாக” வகைப்படுத்தி, பொலிஸ் மற்றும் ஊடகங்கள் மூலம் ஒரு நச்சுத்தனமான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபரில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிராக வடக்கில் மக்கள் பெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். பின்னர் நடந்த விசாரணைகளில், பொலிஸ் அதிகாரிகள் அவர்களை சுட்டுக்கொன்று விட்டு பொய்களைச் சோடித்தனர் என்பது அம்பலத்துக்கு வந்தது. நான்கு பொலிஸ் அதிகாரிகளை கைது செய்து அவர்கள் மீது வழக்கு நடத்த பொலிஸ் நிர்ப்பந்திக்கப்பட்டது.
அண்மையில் ஜூலை 9 அன்று, பருத்தித்துறை அருகே, டிப்பர் வாகனம் ஒன்றில் ஏறிச் சென்ற இளைஞனை பொலிஸ் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர் சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்றதாக பிரச்சாரம் செய்தனர். பிரதேசவாசிகள் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் நடத்தி எதிர்ப்பை காட்டிய நிலையில், “வரம்புமீறி அதிகாரத்தைப் பயன்படுத்திவிட்டதாக” கூறி, இரண்டு அதிகாரிகளை பணி நீக்கம் செய்து, பொலிஸ் தன்னைக் காப்பாற்றிக்கொண்டது.
ஆனால், இனவாத பிரச்சாரத்துக்கு எண்ணெய் வார்த்து, த ஐலண்ட் பத்திரிகை, 31 ஜூலை அன்று வெளியிட்ட ஆசிரியர் தலையங்கத்தில் இவ்வாறு எழுதியிருந்தது: "முழு போராக அபிவிருத்தியடைந்த வடக்கின் எழுச்சிக்கு பொலிஸ் மீது தாக்குதல் நடத்துவதே முன்னோடியாக இருந்தது என்பதை அரசாங்கம் மறந்துவிடக் கூடாது." அந்த தலையங்கத்தில் மேலும் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: "அழிவுகரமான சக்திகளுக்கு சுதந்திரமாக செயல்படக் கூடியவாறு, திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் மூலம் பொலிஸ் மற்றும் ஆயுதப் படைகளை வடக்கில் முகாம்களுக்குள் மட்டுப்படுத்தி வைப்பதற்கு கவனமாக திட்டமிடும் இயக்கமொன்று செயற்படுவது தெரிகின்றது.”
மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான "கூட்டு எதிர்ப்பின்" அங்கத்தவர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தனவும், பொலிஸ் மா அதிபரின் வார்த்தைகளை மீண்டும் உச்சரித்து, "பொலிஸ் அதிகாரிகளை அடித்தும், கொன்றும் புலிகள் அமைப்பு முதலில் அப்படித்தான் ஆரம்பித்தது. இப்போது மீண்டும் அவை யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டுள்ளன" என்றனர். இராஜபக்ஷவின் சிங்களம் பேரினவாத கைக்கூலியான தூய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, 31ம் திகதி நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், பொலிசார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் பற்றி குறிப்பிட்டு, "வடக்கில் மீண்டும் எமது இராணுவத்தினரின் உயிர் ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது” என்று கூச்சலிட்டார்.
தாக்குதல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், மக்கள் போராட்டங்களை ஒடுக்குதல் உட்பட பல்வேறு காரணங்களால் வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் மக்கள் பொலிசுடன் மோதிக்கொள்கின்றனர். மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்காக அரசாங்கம் மேலும் மேலும் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைகளை பயன்படுத்துகின்ற நிலைமையில், அந்த ஒடுக்குமுறை முதலாளித்துவ அமைப்புகள் சம்பந்தமாக மக்களின் கோபமும் விரோதம் அதிகரித்து வருகின்றது.
தாக்குதலை நடத்தியவர்கள் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அதேபோல் “ஆவா கும்பலைச்” சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என ஜூலை 31 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் ஜயசுந்தர கூறியுள்ளார்.
பிரிவினைவாத புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தில், இராணுவ துணைப் படைகள் மற்றும் ஆயுத கும்பல்களும், இராணுவம் மற்றும் அதன் புலனாய்வு சேவைகளின் கீழ் செயற்பட்டது இரகசியமானதல்ல. அநேகமாக அவற்றின் உறுப்பினர்களாக இருந்தவர்கள், புலிகளுக்கு எதிரான, கொழும்பு அரசாங்கத்துடன் ஒத்துழைத்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) போன்றவற்றின் உறுப்பினர்களாவர். ஆவா கும்பலானது போரின் பின்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோடாபய இராஜபக்ஷவின் அனுமதியுடன் இராணுவ புலனாய்வுத் துறையினால் உருவாக்கப்பட்ட ஒன்று என அரசாங்க அமைச்சரவை பேச்சாளரும் சுகாதாரம் அமைச்சருமான ராஜித சேனாரத்ன நவம்பர் 2 அன்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
மக்களின் சிவில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் சோதனைக்குள்ளாக்கும் இராணுவ-பொலிஸ் ஆட்சியின் கீழ் இருக்கும் வடக்கு பிரதேசத்தில், பாதுகாப்புப் படைகளின் ஒத்துழைப்பு இல்லாமல் வாள் மற்றும் பொல்லுகளுடன் மோட்டார் சைக்கிள்களில் குண்டர் கும்பல்களால் இரவு மற்றும் பகலிலும் சுதந்திரமாக செல்வதற்கும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடவும் முடியுமா என்ற சந்தேகம் எழுகின்றது.
யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பொது மக்களின் வாழ்க்கைக்கு தொந்தரவாக இன்னமும் இலட்சத்துக்கும் அதிகமான இராணுவம் வடக்கில் அக்கிரமித்திருப்பதற்கும், போர் காலத்தில் இராணுவத்தால் பலாத்காரமாக கைப்பற்றப்பட்ட மக்களின் காணிகளில் பெரும்பாலானவற்றை இன்னமும் ஆக்கிரமித்திருப்பதற்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் பற்றிய தகவல்களை வெளியிடாமைக்கும் எதிராக, வடக்கில் மக்கள் மத்தியில் அரசாங்கம் சம்பந்தமாக வெறுப்பும் எதிர்ப்பும் வளர்ச்சியடைகின்ற நிலைமையின் கீழேயே அரசாங்கம் ஒடுக்குமுறையை உக்கிரமாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. பொலிசார் தாக்கப்பட்டனர் என்பது ஒடுக்குமுறையை தீவிரமாக்குவதற்கான சாக்குப் போக்கு மட்டுமே.
தமிழர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் அமைதியின்மை பற்றி பீதிக்கும் குழப்பத்துக்கும் உள்ளாகியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, அரசாங்கம் மேற்கொள்ளும் அடக்குமுறையை வெளிப்படையாக ஆதரிக்கிறது. அதேநேரம், இராணுவத்தை பகிரங்கமாக பயன்படுத்தினால், வடக்கு மக்களிடையேயான வெறுப்பு மற்றும் அமைதியின்மை கிளர்ச்சி மட்டத்துக்கு வளர்ச்சியடையும் என தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
பாதுகாப்பு படைகளை பயன்படுத்தாமல் "நேர்மையான மற்றும் பயனுள்ள" போலீஸ் படையை பயன்படுத்துமாறு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சமீபத்திய செய்தியாளர் மாநாட்டில் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்ததார். வடக்கிற்கு "தமிழ்" பொலிஸ் அதிகாரிகளை நியமிக்குமாறு கேட்டுக்கொண்ட முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், பருத்தித்துறையில் ஒரு இளைஞரை பொலிஸ் சுட்டுக் கொன்ற பின்னர், தமிழ் அதிகாரிகள் அப்படி செய்ததையிட்டு தான் “அதிர்ச்சியடைந்துள்ளதாக” புலம்பினார்.
முதலாளித்துவ அரசு, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதைப் பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவ வர்க்கம் கவலைப்படவில்லை. அரசாங்கம், முதலாளித்துவ பொலிஸ், இராணுவம் மற்றும் நீதிமன்றம் உட்பட ஒடுக்குமுறை ஸ்தாபனங்கள் பற்றி, மக்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ச்சியடைவது பற்றியே அவர்கள் கவலை கொண்டுள்ளனர்.
உக்கிரமடைந்தவரும் சிக்கன வேலைத் திட்டங்கள் மற்றும் ஒடுக்குமுறை ஆட்சிக்கும் எதிராக வடக்கிலும் தெற்கிலும் தொழிலாளர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்பையிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் முதலாளித்துவத்தின் எல்லா பகுதியும் பீதியடைந்துள்ளன. வடக்கு மற்றும் தெற்கிலும் தொழிலாள வர்க்க்திதன் ஐக்கியப்பட்ட போராட்டம் ஒன்று வளர்ச்சியடைவதை தடுப்பதன் பேரில், அவர்கள் தமிழர் விரோத இனவாதத்தை கிளறிவிடுவதற்கு இனவாத கும்பல்களை தூண்டிவிடுகின்றனர்.
வர்க்க ஆட்சி நெருக்கடிக்குள் போகும் எல்லா சமயத்திலும், தொழலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி ஒடுக்குமுறையை விரிவாக்குவற்கு, முதலாளித்துவ வர்க்கத்தின் நச்சுத்தனமான ஆயுதமாக இனவாதம் தூண்டிவிடப்படுகிறது. உலக நெருக்கடியினுள் மூழ்கி தீர்க்கமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள இலங்கை அரசாங்கம், எதேச்சதிகார ஆட்சிக்கு தயார்செய்து வருகின்றது.