Print Version|Feedback
The political and social roots of fascist violence in the US
அமெரிக்காவில் பாசிச வன்முறையின் அரசியல் மற்றும் சமூக வேர்கள்
Joseph Kishore
15 August 2017
வேர்ஜினியாவின் சார்லட்வில்லில் வாரயிறுதியில் வெடித்த நாஜி வன்முறை, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாஜி-சார்பு வெள்ளையின பேரினவாதிகள், எதிர்-போராட்டக்காரர்களைத் தாக்கி, 32 வயதான ஹீத்தர் ஹெயரைக் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்த புகைப்படங்கள், சமூகரீதியிலும் அரசியல்ரீதியிலும் அமெரிக்க சமூகத்தின் அழுகிய நிலையை அம்பலப்படுத்துகிறது. நாஜி குண்டர்கள் ஒரு பல்கலைக்கழக நகரம் முழுவதும் அட்டூழியத்தில் ஈடுபட்டு, மாணவர்கள் மற்றும் ஏனைய குடியிருப்போரைப் பீதியூட்டினர், அதேவேளையில் பொலிஸ் ஏளனச் சிரிப்போடு ஒதுங்கி நின்று தாக்குதல்தாரிகளுக்கு ஊக்கமூட்டியது. உலகிற்கு தார்மீக பொறுப்புகளை உபதேசிக்க விரும்புகின்றதும், சட்டம் மற்றும் ஜனநாயக ஸ்திரப்பாட்டின் கலங்கரை விளக்கமாக தன்னை காட்டிக் கொள்ளுகின்றதுமான ஒரு நாடு, அடிமட்டத்திலேயே சுக்குநூறாக உடைந்து கொண்டிருக்கிறது.
சார்லட்வில் சம்பவங்கள் மீது ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளின் அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவன ஊடகங்கள் அந்த வன்முறை மீது உத்தியோகபூர்வமாக கைகளைப் பிசைந்து கொண்டு வெளிவேஷ கண்டனங்களை வெளியிட்டு வருவதற்கும் மற்றும் மில்லியன் கணக்கான சமானிய மக்களின் ஆழ்ந்த கோபத்திற்கும் இடையே பரந்த இடைவெளி உள்ளது. அவர்களது அறிக்கைகளில் கபடத்தனத்தின் துர்நாற்றம் வீசுகிறது. சார்லட்வில் வன்முறை எதிலிருந்த எழுந்ததோ, அடியிலிருக்கும் அந்த சமூக மற்றும் அரசியல் நிலைமைகளைக் குறித்து எந்தவித ஆழ்ந்த ஆய்வும் அவர்களது சம்பிரதாயமான கண்டனங்களில் கிடையாது.
அதற்கு சரியான உதாரணம் திங்களன்று (“அவருக்கு பேச விரும்பாத, அந்த வெறுப்பு” என்ற தலைப்பில்) நியூ யோர்க் டைம்ஸில் வெளியான தலையங்கமாகும், இது ஜனநாயகக் கட்சிக்காக பேசுகிறது. இதன் ஆசிரியர்கள், அந்த வன்முறைக்கு பொறுப்பான வெள்ளையின பேரினவாத குழுக்களைக் கண்டிக்காததற்காக ட்ரம்பை விமர்சித்தனர். ட்ரம்ப், “நவீன ஜனாதிபதி பதவிக்கால வரலாற்றில், அவருக்கு சேவையாற்றுகின்ற வெறித்தனம் மற்றும் சகிப்புத்தன்மையற்ற அரக்கர்களுக்கு கட்டளையிட விருப்பமில்லாத ஒருவராக உள்ளார்,” என்றவர்கள் அறிவித்தனர். ஜனாதிபதி, “அவரின் தோல்வியடைந்து வரும் ஜனாதிபதி பதவிகாலத்தை மீட்டமைக்கும் பெரும்பிரயத்தன முயற்சியில்" வெள்ளையின மேலாதிக்கவாதிகளை அரவணைத்துள்ளார் என்பதையும் அந்த ஆசிரியர்கள் சேர்த்துக் கொண்டனர்.
ட்ரம்ப் பதவியில் இல்லாது இருந்திருந்தால், அமெரிக்க வீதிகள் சகோதரத்துவ நேசத்தின் பண் பாடியிருக்கும் என்று டைம்ஸ் மறைமுகமாக குறிப்பிடுகிறது. ஆனால் "தீய ட்ரம்ப்" குறித்த வரலாற்று பொருள்விளக்கம் எதையும் விளங்கப்படுத்தவில்லை. வெள்ளை மாளிகையில் வீராப்பு பேசுகின்ற இந்த குண்டர், சார்லட்வில் வன்முறை போலவே, ஓர் ஆழ்ந்த மற்றும் கையாளவியலாத நெருக்கடியின் ஓர் அறிகுறியாவார்.
பாசிசவாதமானது, ஓர் அரசியல் மற்றும் சமூக நிகழ்வுப்போக்காக, முதலாளித்துவ அதீத நெருக்கடியின் விளைபொருளாகும். 1932 இல் ஜேர்மனியில் நாஜி இயக்க வளர்ச்சியை பகுத்தாராய்ந்து, ட்ரொட்ஸ்கி விவரிக்கையில், “முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் 'வழமையான' பொலிஸ் மற்றும் இராணுவ வழிமுறைகளால், அவற்றின் நாடாளுமன்ற மூடுதிரைகளுடன் சேர்ந்து, இனியும் சமநிலையில் சமூகத்தை தக்க வைக்க முடியாதென ஆகும்போது, அத்தருணத்தில்" ஆளும் வர்க்கம் பாசிசத்திற்கு திரும்புகிறது, “... பாசிசவாத முகமையைக் கொண்டு, வெறிபிடித்த குட்டி முதலாளித்துவத்தினது மற்றும் வர்க்க நிலை பிறழ்ந்த மற்றும் நெறிபிறழ்ந்த உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் பிரிவுகளது பெருந்திரளானவர்களை முதலாளித்துவம் இயக்கத்திற்கு கொண்டு வருகிறது. எண்ணற்ற இந்த மனித உயிர்கள் அனைத்தினையும் இதே நிதி மூலதனமே கூட விரக்திக்கும் மற்றும் ஏழ்மைக்கும் இட்டுசென்றுள்ளது,” என்றார். (“அடுத்தது என்ன? ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்திற்கான அத்தியாவசிய கேள்வி")
பாசிசம் இதுவரையில் அமெரிக்காவில் ஒரு பாரிய இயக்கமாக இருந்ததில்லை. கூட்டரசின் தளபதி Robert E. Lee இன் சிலை நீக்கப்படுவதை எதிர்க்க, அதிவலது அமைப்புகளின் தேசியளவிலான அணிதிரட்டல், வெகுசில நூறு மக்களை மட்டுமே ஈர்த்திருந்தது.
எவ்வாறிருப்பினும் மக்களின் பரந்த பிரிவினரிடையே அவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவே இருந்தபோதினும், இந்த பிற்போக்குத்தனமான கூறுபாடுகள் வெள்ளை மாளிகை உட்பட அரசின் சக்திவாய்ந்த பிரிவுகளின் ஆதரவை அனுபவித்து வருகின்றன. இவர்களுக்கு பில்லியனர்களான ஆதவாளர்களின் நிதி உதவிகள் கிடைக்கின்றன, (ட்ரம்பின் பாசிசவாத தலைமை மூலோபாயவாதி ஸ்டீபன் பானன், தனியார் முதலீட்டு நிறுவன செயலதிகாரி ரோபர்ட் மெர்சருடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளார்). மேலும் பொலிஸ் மற்றும் இராணுவ எந்திரத்தின் குறிப்பிடத்தக்க பிரிவுகளது ஊக்கமான அனுதாபமும் இவர்களுக்கு உள்ளது.
ட்ரம்ப் அவரது பிரச்சாரம் முழுவதிலும் மற்றும் அவர் பதவியில் உள்ள இந்த முதல் ஏழு மாதங்களிலும், அவரும் அவரது பாசிசவாத ஆலோசகர்களும், அதீத இராணுவவாதம் மற்றும் சமூக பிற்போக்குத்தன கொள்கைக்கு எதிரான எந்தவொரு மக்கள் எதிர்ப்பையும் வன்முறையானரீதியில் ஒடுக்குவதற்காக, நாடாளுமன்றத்திற்கு-வெளியே ஒரு இயக்கத்தை அபிவிருத்தி செய்யும் பொருட்டு, பரந்த சமூக கோபம் மற்றும் அரசியல் நோக்குநிலை பிறழ்ச்சியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு தீர்க்கமான அரசியல் மூலோபாயத்தைப் பின்பற்றியுள்ளனர்.
ஆனால் நீடித்த பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிகழ்வுப்போக்கின் விளைவுகளோடு ஒப்பிடுகையில் ட்ர்ம்ப் மிகச்சிறிய காரியகர்த்தா தான். செல்வந்த தட்டுக்கள் மற்றும் தளபதிகளின் கலவையாக, அவரது நிர்வாகம், ஒரு கால் நூற்றாண்டு முடிவில்லா போர்கள், நான்கு தசாப்தகால சமூக எதிர்புரட்சி மற்றும் அமெரிக்க அரசியலில் அதிகரித்து வரும் ஏதேச்சதிகார குணாம்சத்திலிருந்து எழுந்துள்ளது. ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருதரப்பினரது மேற்பார்வையில் —சித்திரவதை, டிரோன் படுகொலைகள், ஆக்கிரமிப்பு போர்கள், பொலிஸ் படுகொலை— இவைதான் சார்லட்வில் சம்பவங்களுக்கு பின்புலத்தை உருவாக்குகின்றன.
ஆளும் வர்க்கத்தினுள் உள்ள அவரது அரசியல் எதிர்ப்பாளர்களது குணாம்சமும் நோக்குநிலையும்தான் ட்ரம்பின் மிகப்பெரிய சொத்தாக உள்ளன. ஜனநாயக கட்சியினர், மனநிறைவு மற்றும் சுயதிருப்தியின் உருவடிவமாக, இருக்கும் நடைமுறையை அவ்வாறே பாதுகாக்கும் கட்சியாக செயல்பட்டதால் தான், 2016 தேர்தலில் ட்ரம்ப் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்தார். தேர்தலுக்குப் பின்னர் இருந்து, ட்ரம்புக்கு அவர்களின் எதிர்ப்பானது முற்றிலுமாக, ரஷ்யாவுக்கு எதிராக இன்னும் அதிக ஆக்ரோஷ கொள்கைக்கான முறையீடுகளின் அடிப்படையில், பாசிச கூறுபாடுகள் தழைத்தோங்கியுள்ள, இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகளை நோக்கி நோக்குநிலை கொண்டுள்ளது. அவர்கள் தனிச்சலுகை கொண்ட உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்குகள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் இன் ஒரு கூட்டணியை பிரதிநிதித்துவம் செய்வதால், எந்தவொரு குறிப்பிடத்தக்க மக்கள் ஆதரவைப் பெறக்கூடிய ஒரு வேலைத்திட்டத்தையும் அவர்களால் முன்னெடுக்க முடியவில்லை, அவ்வாறு முன்னெடுக்க அவர்கள் விரும்பவும் இல்லை.
பெருநிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு எந்தவொரு எதிர்ப்பையும் நீண்டகாலத்திற்கு முன்னரே கைவிட்டு விட்ட, அதற்கு பதிலாக நச்சார்ந்த பொருளாதார தேசியவாத சித்தாந்தத்தை ஊக்குவித்து வரும் தொழிற்சங்கங்களின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தில் இருந்து இலாபமடைந்த ட்ரம்ப் ஆல், நாட்டின் தொழில்துறை அழிப்பால் நாசமாக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒரு குறிப்பிட்ட அடித்தளத்தை வென்றெடுக்க முடிந்தது. ட்ரம்ப் நிர்வாகத்தின் "அமெரிக்கா முதலில்" திட்டநிரல் தனிச்சலுகை கொண்டவர்களிடையேயும் மற்றும் ஊழல்நிறைந்த தொழிற்சங்க செயலதிகாரிகள் மத்தியிலும் வளமான அடித்தளத்தைக் கண்டுள்ளது.
வெள்ளையின தேசியவாத அமைப்புகளின் வளர்ச்சிக்கு இன்னுமொரு சித்தாந்த காரணியும் எண்ணெய் வார்த்துள்ளது: அதாவது, ஜனநாயகக் கட்சியால் வெளிப்படையாக இனவாத அரசியல் நியாயப்படுத்தப்பட்டமை. ஜனநாயகக் கட்சியினரும் அவர்களின் ஊடக எடுபிடுகளும் சார்லட்வில்லில் நவ-நாஜிக்களது பகிரங்கமான இனவாத நடவடிக்கைகளை கண்டித்துள்ளனர் என்றாலும், சமூக மற்றும் அரசியல் பகுப்பாய்வின் பிரதான வகைப்பாடாக ஜனநாயகக் கட்சியால் மற்றும் அதன் கூட்டாளிகளால் வெள்ளையின தேசியவாதிகள் ஓயாது ஊக்கப்படுத்தப்பட்டு உதவி பெற்றுள்ளனர் மற்றும் துணைபோய் உள்ளனர் என்ற உண்மை உள்ளது.
“வெள்ளையினத்தன்மை" மற்றும் "வெள்ளையின தனிச்சலுகை" மீதான கருத்துருவை ஊக்குவித்து, நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் ஏனைய பிரசுரங்களின் பக்கங்களில் முடிவில்லா கட்டுரைகளும் கருத்துரைகளும் வந்துள்ளன. ஜூன் 2016 இல் Free State of Jones திரைப்படத்தை கண்டித்த கருத்துரையில், டைம்ஸ் கட்டுரையாளர் சார்லஸ் ப்ளோவ், "இனம் என்பது வெறுமனே வர்க்கத்தின் ஒரு துணை கட்டமைப்பு என்ற வெள்ளையின தாராளவாத வலியுறுத்தலை" தாக்கி இருந்தார். அந்நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிடுகையில், ப்ளோவ் "ஒரு பாசிசவாதி கிடையாது என்றாலும், அவர் அவர்களில் ஒருவரைப் போல சிந்திக்கிறார்,” என்றது.
ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் சுற்றுவட்டத்தில் செயல்படும் போலி-இடது சகோதரத்துவ அமைப்புகளது, இனவாத அரசியல் மீதான கொள்கைப்பிடிப்பான உறுதிப்பாடு, ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சாரத்தில் உச்சத்தை எட்டியது, அது சகல சமூக பிரச்சினைகளும் இனம் மற்றும் இனவாதமாக குறைக்கப்பட்டுள்ளது என்ற கோட்பாட்டின் மீது மற்றும் வெள்ளையின தொழிலாளர்களின் மனக்குறைகள் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையின் விளைவல்ல, மாறாக இனவாதம் மற்றும் தனிச்சலுகைகளின் விளைவு என்பதன் மீது ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் ஆளும் வர்க்கத்தின் மீதல்ல, ஜனநாயகக் கட்சி, வெள்ளையின தொழிலாளர்கள் மீது பழிசுமத்துகின்ற அதேவேளையில், அரசியல், கலாச்சாரம் மற்றும் சமூகத்தைக் குறித்த அதன் இனவாத பொருள்விளக்கமானது, சமூக சமத்துவமின்மை மற்றும் போர் ஆகிய பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப உதவுகிறது என்பதால் அரசியல்ரீதியில் அதற்கு சௌகரியமாக இருந்தது.
ட்ரம்ப் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக பாசிசவாத சக்திகளின் விதைப்பை தீவிரப்படுத்தி இருந்த நிலையில், கூகுள் —அரசின், குறிப்பாக ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த பிரிவுகளுடனான கூட்டணியுடன்—இடதுசாரி மற்றும் முற்போக்கு வலைத் தளங்களை, அனைத்திற்கும் மேலாக, உலக சோசலிச வலைத் தளத்தை இலக்கில் வைத்து ஒரு தணிக்கை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. ட்ரம்ப் உருவாக்கியுள்ள இந்த சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு ஆளும் வர்க்கத்தின் சகல கன்னைகளது விடையிறுப்பானது, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எந்தவொரு சவாலையும் தடுக்க மற்றும் ஒடுக்க முனைவதாக உள்ளது.
ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்தின் மீது தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே பாசிசவாதத்தை எதிர்த்து போராட முடியும் என்பதை நீண்டகால வரலாற்று அனுபவம் எடுத்துக்காட்டியுள்ளது. தீவிர வலதுக்கு எதிரான போராட்டம், எல்லா இனங்கள், பாலினங்கள் மற்றும் தேசியங்களை சேர்ந்த தொழிலாள வர்க்கத்தின் சகல பிரிவுகளையும் ஐக்கியப்படுத்துவதன் மூலமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பானது, முதலாளித்துவம் உருவாக்கிய போர், சமூக சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை, குறைந்த கூலிகள், பொலிஸ் வன்முறை மற்றும் சகல சமூக கேடுகளுக்கும் எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் ஒரு சுயாதீனமான அரசியல் வடிவத்தில் எடுத்துக்காட்டப்பட்டு, முன்னெடுக்கப்படாத வரையில், தீவிர வலது சக்திகளே ஆதாயமடையும். தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமையை —சோசலிச சமத்துவக் கட்சியை (SEP)— கட்டமைக்க வேண்டியது அவசர பணியாக உள்ளது.