Print Version|Feedback
Over 1,000 sign petition to demand end to Google blacklisting of WSWS
உலக சோசலிச வலைத் தளத்தை கூகுள் தடுப்பதை முடிவுக்குக் கொண்டுவர கோரிக்கை விடுக்கும் மனுவில் 1,000 க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டனர்
By Isaac Finn
16 August 2017
உலக சோசலிச வலைத் தளத்தையும் மற்றும் பிற தளங்களையும் தேடல் முடிவுகளிலிருந்து தடுப்பதை கூகுள் நிறுத்தவேண்டும் என கோரிக்கை விடுக்கும் மனு ஒன்றில், இரண்டே நாட்களுக்குள் உலகெங்கிலும் இருந்து 1,000 க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த மனுவில், ஐந்து கண்டகளைச் சார்ந்த குறைந்தபட்சம் 35 வெவ்வேறு நாடுகளில் இருந்து கையெழுத்திட்டுள்ளனர்.
ஏப்ரலில், “அத்துமீறும்” தளங்களை தடுப்பதாகவும் மற்றும் “அதிகாரபூர்வ உள்ளடக்கத்தை” முன்னுக்கு கொண்டுவருவதாகவும் வேஷம் போட்டு கூகுள் அதன் தேடல் வழிமுறைகளில் ஒரு மாற்றத்தை அறிவித்தது. புதிய தேடல் வழிமுறை இடதுசாரி வலைத் தளங்களுக்கான தேடல் முடிவுகளை திறம்பட தடை செய்கின்றது. இந்த மாற்றத்தால் உலக சோசலிச வலைத் தளம் மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியதோடு, மூன்று மாத காலத்தில் கூகுள் தேடல்களில் இருந்து கிட்டத்தட்ட 70 சதவிகித வாசகர் வீழ்ச்சியை கண்டுள்ளது.
மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பரவலாக கட்டுரைகளை விநியோகிப்பதன் மூலம் கூகுள் தணிக்கைக்கு விடையிறுத்த உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் ஆதரவின் காரணமாக, சமீபத்திய நாட்களில் உலக சோசலிச வலைத் தள வாசகர்களின் எண்ணிக்கையளவு கூகுள் அதன் தணிக்கை நெறிமுறைகளைத் தொடங்குவதற்கு முன்னர் காணப்பட்ட மட்டங்களுக்குத் திரும்பியது.
இருப்பினும், கூகுள் தேடல் முடிவுகளில் காட்டப்படும் WSWS இன் புதிய கட்டுரைகளை தேடல் வழிமுறைகள் தடுப்பது தொடர்கின்றது என்பது உண்மையே.
இந்த மனுவில் கையெழுத்திட்ட பெரும்பாலான வாசகர்கள் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவாக கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
“WSWS மீதான கூகுளின் தணிக்கை நடவடிக்கை ஜனநாயக விரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு மாறானது” என்றும், “தேடல் முடிவுகளில் இருந்து WSWS உள்ளடக்கத்தை தடுப்பதை கூகுள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதுடன், அறிவுதான் சக்திவாய்ந்தது என்ற வகையில் தகவல்களை சுதந்திரமாக காண்பிக்க அனுமதிக்க வேண்டும்” என்றும் ஸ்ரெஃபானி என்பவர் குறிப்பிட்டார்.
“நாம் முகம் கொடுக்கும் அனைத்து அரசியல் பிரச்சனைகளினதும் வர்க்க இயல்பை அம்பலப்படுத்துவதற்கு முக்கியமான தகவல்களை பரப்புவதை அனுமதிக்கக் கூடாது என்பது சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு பாய்ச்சலையே குறிப்பிடுகின்றது” என்று பனாமாவில் இருந்து ஃபிலிப் குறிப்பிட்டார்.
அயர்லாந்தில் இருந்து இயன் என்பவர், “உலக சோசலிச வலைத் தளம், தொழிலாள வர்க்கத்திற்கு முழுமையான புறநிலை உண்மையைக் கூறுகின்றது என்பதுடன், தனது சிந்தனையில் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை முக்கியமாக கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
“WSWS மற்றும் பிற முற்போக்கு வலைத் தளங்களுக்கு எதிரான பிரச்சாரம் வெறும் ஏதோ தீய-டிஸ்டோபியன்- கனவு மட்டுமல்ல,” “நாம் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டும்” என்று ஜேர்மனியில் இருந்து ராபர்ட் என்பவர் குறிப்பிட்டார்.
டென்மார்க்கில் இருந்து கீடியோன் என்பவர் மனுவில் கையெழுத்திட்டு, “அதிகாரத்துவமும் கட்டுப்பாடும் எப்போதும் இருக்ககூடியதைவிட விட பேச்சு சுதந்திரம் மிகவும் முக்கியமானது மற்றும் இயல்பானதும்” என்று தெரிவித்தார்.
“மக்கள் தங்களுக்கான செய்திகளையும், தகவல்களையும் எங்கிருந்து பெற வேண்டும் என்பதை அவர்களே தேர்வு செய்துகொள்ளும் உரிமையை கொண்டு இருக்கின்றனர். சுதந்திரமான பேச்சு குறித்த எங்களது உரிமையை கூகுள் மீறுகின்றது; எந்த வலைத் தளங்களையும் தணிக்கை செய்யும் உரிமை அவர்களுக்குக் கிடையாது” என்று அம்பர் எழுதினார்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸிலிருந்து டேவிட் என்பவர், “இது உலக தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு மூர்க்கத்தனமான, வேண்டுமென்ற மற்றும் ஆபத்தான தாக்குதலாகும். அரசாங்கமும், வணிக நிறுவனங்களும் பொதுமக்கள் பார்வையில் இருந்து தகவல் பெறுவதை தீவிரமாகத் தடுக்க சதி செய்வது என்பது, அவர்கள் தீவிரமாகவும், நனவுபூர்வமாகவும் மக்கள் கட்டுப்பாடு குறித்த ஒரு பொலிஸ் அரசு முறையை நோக்கி நகர்கின்றனர் என்பதையே சமிக்ஞை செய்கின்றது” என்று எழுதினார்.
போர்ட்டோ ரிக்கோவிலிருந்து ஹெலனா என்பவர் ஆதரவளித்து, “எங்களுக்கு சீரிய மற்றும் நம்பகமான செய்திகள் தேவை. WSWS மட்டுமே எனது ஒரே மாற்று ஆகும்” என்று குறிப்பிட்டார்.
“இணையத்தில் எந்தவொரு வகையான தணிக்கைக்கும் நான் எதிரானவன்,” என்றும் “(இது) ஒரு சுதந்திர வெளியாக இருக்க வேண்டும், மேலும் பெருவணிக நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படக்கூடாது” என்றும் போர்ச்சுக்கலில் இருந்து ரிக்கார்டோ என்பவர் எழுதினார்.
உலக சோசலிச வலைத் தள நிருபர் ஆண்டரே டேமன், உலகெங்கிலும் உள்ள உலக சோசலிச வலைத் தள வாசகர்களின் வலுவான விடையிறுப்பால் உற்சாகம் அடைந்துள்ளதாக கூறினார். “இந்த விடையிறுப்பானது, கூகுளின் தணிக்கைக் கொள்கைகள் குறித்த மற்றும் மாபெரும் ஏகபோகங்களால் இணையத்தின் கட்டுப்பாட்டை கொண்டுள்ளவர்கள் மீதான மக்கள் எதிர்ப்பின் அளவை தெளிவுபடுத்துகின்றது.”
“ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இது ஒரு முக்கியமான போராட்டமாகும்: இணையத்தில் சுதந்திரமாக தகவல்களை தெரிந்துகொள்ளவும், சிந்திக்கவும், பரிமாறவும் உரிமை கோரி நாங்கள் போராடுகின்றோம்.”
உலக சோசலிச வலைத் தளம், நமது வாசகர்கள் அனைவரையும் இணைய தணிக்கைக்கு எதிராக போராட செய்வதற்கு சமூக ஊடகங்களில் நமது கட்டுரைகளை பகிர்ந்து கொள்வதன் மூலமாகவும், மனுவில் கையெழுத்திட்டு, நாம் பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்படவும் ஊக்கப்படுத்துகின்றது.