Print Version|Feedback
US imperialism and the threat of nuclear war against North Korea
அமெரிக்க ஏகாதிபத்தியமும், வட கொரியாவுக்கு எதிரான அணுஆயுத போர் அச்சுறுத்தலும்
Peter Symonds
11 August 2017
உலகம், கொரிய தீபகற்பத்தில் ஓர் உலகளாவிய அணுஆயுத மோதலாக துரிதமாக தீவிரமடையக்கூடிய ஒரு போரின் விளிம்பில் உள்ளது.
உலகம் இதற்கு முன்னர் ஒருபோதும் பார்த்திராததைப் போன்ற "ஆத்திரம் மற்றும் சீற்றத்துடன்", அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வட கொரியா மீது அவரது கோபமான அச்சுறுத்தலை இரட்டிப்பாக்கி உள்ளார். தனது வார்த்தைகள் "போதுமானளவிற்கு கடுமையாக இல்லை" என்று நேற்று கருத்துரைத்த அவர், எந்தவொரு தாக்குதலுக்கும் அமெரிக்க விடையிறுப்பு “எவரும் பார்த்திராததை போன்றவொரு சம்பவமாக இருக்கும்" என்று எச்சரித்தார். அமெரிக்க அணுஆயுத தளவாடங்கள் "மிகதரமான நிலையில்" இருப்பதாக அவர் சேர்த்துக் கொண்டார்.
வட கொரியாவுக்கு எதிராக அவர் ஒரு "முன்கூட்டிய தாக்குதலை" நடத்துவாரா என்று ட்ரம்பிடம் கேட்கப்பட்ட போது, இராணுவ வாய்ப்புகள் குறித்து அவர் கூற முடியாதென்றும், ஆனால் அதை ஒதுக்கிவிட முடியாதென்றும் தெரிவித்தார். அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் செயலூக்கத்துடன் ஒரு தாக்குதல் பரிசீலிக்கப்படுகிறது என்பது "வட கொரியாவை அமெரிக்கா முதலில் தாக்கினால், அது தற்காப்பாகுமா?” என்று தலைப்பிட்ட நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை ஒன்றால் எடுத்துக்காட்டப்பட்டது. ஒரு முன்கூட்டிய தாக்குதலுக்கான சட்டபூர்வ விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்குமா என்பதை விவாதித்திருந்த அக்கருத்துரை, வட கொரியா மீதான தன்னிச்சையான ஓர் ஆக்ரோஷ தாக்குதலை ஒரு நியாயமான வாய்ப்பாக கையாண்டிருந்தது.
வாஷிங்டன் போஸ்டின் உறைய வைக்கும் கட்டுரை ஒன்று, வட கொரியா மீது வாஷிங்டன் எவ்வாறு ஒரு முன்கூட்டிய அணுஆயுத தாக்குதலைத் தொடுக்கலாம் என்று ஆய்வு செய்யுமளவிற்கு இன்னும் மேலே சென்றிருந்தது. ட்ரம்ப், அவரின் ஆலோசகர்களின் உடன்பாட்டை பெறவில்லை என்றாலும் கூட, அவரே ஒரு அணுஆயுத முதல் தாக்குதலுக்கு உத்தரவிடலாம் என்றும், இராணுவமோ அல்லது காங்கிரஸோ இரண்டுமே அவர் உத்தரவை மீற முடியாது என்றும் அது நிறைவு செய்திருந்தது.
பெரும்பலத்துடன் அமெரிக்கா விடையிறுக்கும் வகையில், பெரிதும் ஸ்திரமற்ற பியாங்யாங் ஆட்சியை வேண்டுமென்றே ஒரு நடவடிக்கையில் இறங்க சீண்டிவிட முயல்கிறது என்றாலும் சரி, அல்லது வட கொரியா மீது முன்கூட்டிய தாக்குதல்களைத் தொடங்குவதற்கான நிலைமைகளை உருவாக்கி கொண்டிருக்கிறது என்றாலும் சரி, அமெரிக்கா "உலகம் முன்னொருபோதும் கண்டிராததைப் போன்ற" ஒரு பெரும் நாசகரமான குற்றத்திற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது.
போர் கொரிய தீபகற்பத்திற்குள்ளேயே நடந்தாலும் மற்றும் அணுஆயுதமின்றி ஏனைய தளவாடங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட, 1950-53 கொரிய போரின் போது ஏற்பட்டதைப் போல, உயிரிழப்புகளும் சேதங்களும் மில்லியன்களாக இருக்கும். பாதுகாப்புத்துறை செயலர் ஜெனரல் ஜேம்ஸ் மாட்டீஸ் இவ்வாரம் கூறுகையில், வாஷிங்டனின் உத்தரவுகளுக்கு வட கொரியா அடிபணியாவிட்டால், வாஷிங்டன் "அந்த ஆட்சியை முடிவுக்கு" கொண்டு வரும், மற்றும் "அதன் மக்களை அழிக்கும்", அதாவது 25 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாட்டை நிர்மூலமாக்கும் என்று அச்சுறுத்தினார். சீனா மற்றும் ரஷ்யா போன்ற ஏனைய அணுஆயுத அதிகாரங்களும் இதில் இழுக்கப்பட்டால், உலகளாவிய விளைவுகள் கணக்கிட முடியாததாக இருக்கும்.
இந்த நெருக்கடிக்கு யார் பொறுப்பு? அமெரிக்க ஊடகங்கள் வட கொரியாவின் "ஆக்கிரோஷத்தின்" மீது ஒரேமாதிரியாக பழிசுமத்துகின்றன. அரசு பிரச்சார வடிகாலாக அமெரிக்க ஊடங்கள் வகிக்கும் பாத்திரத்துடன் சேர்ந்து, இதுவொரு பொய்யாகும்.
இந்த நெருக்கடியானது, மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் பால்கன்களில் கடந்த கால்-நூற்றாண்டாக அமெரிக்க ஏகாதிபத்தியம் பின்பற்றிய அப்பட்டமான ஆக்ரோஷ கொள்கையின் விளைவாகும். வாஷிங்டனின் உலகளாவிய அபிலாஷைகளுக்கு ஒரு தடையாக இருந்த சோவியத் ஒன்றியம் 1991 இல் கலைக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்க மூலோபாயம் "எதிர்காலத்தில் எந்தவொரு உலகளாவிய போட்டி எழுவதையும் தடுப்பதில் ஒருமுகப்பட்டிருக்க" வேண்டும் என்று குறிப்பிட்டு பென்டகன், பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்தது.
வட கொரியா மீது ஒரு தாக்குதலை, ஒரு அணுஆயுத தாக்குதலையும் கூட, நியாயப்படுத்த ட்ரம்ப் மற்றும் அவர் ஆலோசகர்களால் இப்போது கையில் எடுக்கப்பட்டு வருகின்ற "முன்கூட்டிய போர்" கோட்பாடு, முதலில் ஜோர்ஜ் டபிள்யு. புஷ் ஆல் ஈராக் மீதான படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு சாக்குபோக்காக கையாளப்பட்டது. ஜனாதிபதி பராக் ஒபாமாவோ, அமெரிக்க "மதிப்புகள் மற்றும் நலன்கள்" மீதான ஏதாவதொரு அச்சுறுத்தல் காரணமே, மற்றொரு நாட்டை இராணுவரீதியில் தாக்குவதற்கு அமெரிக்காவிற்கு போதுமானது என்று அறிவித்து புஷ் கோட்பாட்டை விரிவுபடுத்தினார். இந்த புதிய கோட்பாடு சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறுகிறது. ஓர் ஆக்கிரமிப்பு போர் தொடுப்பது தலையாய குற்றமாகும், இதற்காக தான் நாஜி தலைவர்கள் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் நூரெம்பேர்க் விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்டார்கள்.
ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து அதன் குறிப்புகளை எடுத்து கொண்டு, அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள், வட கொரிய தலைவர் கிம் ஜோங்-யுன் ஐ ஒரு பைத்தியக்காரராக காட்டுவதற்கும் மற்றும் அவர் ஆட்சி "பாரிய பேரழிவுகரமான ஆயுதங்களின்" அச்சுறுத்தலை முன்னிறுத்துவதாக ஒட்டுமொத்தமாக ஊதிப்பெரிதாக்கி காட்டவும் அவற்றால் ஒரு தாக்குதல் நடத்தப்படுகிறது. இது, சேர்பியா, ஈராக், லிபியா மற்றும் சிரியாவிற்கு எதிராக அமெரிக்க தலைமையிலான போர்களுக்குப் பின்னால் பொது கருத்துக்களை கொண்டு செல்லும் முயிற்சியில் பயன்படுத்தப்பட்ட நன்கறியப்பட்ட வழமையான நடைமுறையைப் பின்தொடர்கிறது.
இந்த சரமாரியான பிரச்சாரத்திற்குப் பின்னால், அதிகரித்து வரும் இந்த போரின் அடிப்படை குணாம்சம் என்ன? இது உலகின் மிகவும் பலமாக ஆயுதமேந்திய ஏகாதிபத்திய சக்திக்கும், இருபதாம் நூற்றாண்டு முழுவதிலும் இடைவிடாது காலனித்துவ மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் விளைவாக தனது சமூக மற்றும் அரசியல் குணாம்சத்தைக் கொண்டுள்ள ஒடுக்கப்பட்ட வறிய ஒரு நாட்டிற்கும் இடையிலான ஒரு மோதலாகும்.
ஜப்பானால் நாற்பது ஆண்டுகளுக்கும் அதிக கால காட்டுமிராண்டித்தன காலனித்துவ ஆட்சிக்கு பின்னர், அமெரிக்கா சியோலில் ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவியதோடு, வடக்கு மற்றும் தெற்கு கொரிய தீபகற்பத்தில் செயற்கையான பிளவைப் பேணுவதற்கு 1950 களின் தொடக்கத்தில் இனப்படுகொலை-அளவிலான ஒரு போரைத் தொடுத்தது. அப்போர் முடிந்த பின்னரில் இருந்து, வட கொரியா மீண்டும் மீண்டும் ஆத்திரமூட்டல்கள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களுடன் சேர்ந்து, அமெரிக்க தலைமையிலான பொருளாதார முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் போர் அச்சுறுத்தல்களின் பிரதான இலக்கு வட கொரியா அல்ல, மாறாக அமெரிக்கா தனது பிராந்திய மற்றும் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு முக்கிய தடையாக கருதும் சீனா ஆகும். ஆசிய பசிபிக் எங்கிலும் அமெரிக்க இராணுவ ஆயத்தப்படுத்தல் பாசிசவாத பில்லியனர் ட்ரம்பில் இருந்து தொடங்கவில்லை, மாறாக அது ஒபாமா நிர்வாகம் அபிவிருத்தி செய்த "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின் ஒரு தொடர்ச்சியாகும். ஒபாமா இந்த புவிசார்-மூலோபாய நடவடிக்கையை ட்ரம்ப் வசம் ஒப்படைக்கையில், புதிய நிர்வாகம் முகங்கொடுக்கும் பிரதான இராணுவ சவாலாக வட கொரியாவை அடையாளம் கண்டதுடன், வட கொரிய "அச்சுறுத்தல்" சீனாவுடனான அமெரிக்க மோதலை அதிகரிப்பதற்கு சாக்குபோக்காக பயன்படுத்தப்பட வேண்டுமென ஆலோசனை வழங்கினார்.
பியொங்காங்கிற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு அவையில் கடுமையான புதிய தடையாணைகளுக்கு ஒருமனதான வாக்களிப்புகளுக்கு பின்னர் உடனடியாக ட்ரம்பின் ஆத்திரமூட்டும் அறிக்கைகள் வந்துள்ளன என்பது, தடையாணை தீர்மானங்களுக்கு ஆதரவான சீனாவின் வாக்கை பலவீனத்தின் ஒரு அறிகுறியாக மற்றும் மோதலை உடனடியாக தீவிரப்படுத்துவதற்கு ஒரு பச்சைக்கொடி காட்டப்பட்டதாக வாஷிங்டன் அர்த்தப்படுத்தி உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. வட கொரியாவுக்கு எதிரான "ஆத்திரமான மற்றும் சீற்றமான" அச்சுறுத்தல் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு ஒரு சவாலை முன்னிறுத்தும் வேறெந்த சக்திகளுக்கும் ஒரு மறைமுகமான எச்சரிக்கையாகும்.
வட கொரியா மீதான எந்தவொரு அமெரிக்க தாக்குதலும், ஏற்கனவே 1950 இல் ஏற்பட்டதை போலவே, சீனாவுடன் துரிதமான ஒரு போரில் தீவிரமடையக்கூடும். மூலோபாயரீதியில் அமைந்துள்ள கொரிய தீபகற்பம் மீதான அமெரிக்க கட்டுப்பாடு, 1930 களில் ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு செயல்பட்டதைப் போலவே, வடக்கு சீனாவிற்குள் ஆத்திரமூட்டல்கள் மற்றும் தலையீடுகளுக்கு உந்துசக்தியாக மாறும். 67 ஆண்டுகளுக்கு முன்னர் வட கொரியாவை அமெரிக்கா கைப்பற்றுவதைத் தடுக்க போராடியதுடன் இப்போது வரையில் பியொங்யாங்குடன் ஒரு பரஸ்பர பாதுகாப்பு உடன்படிக்கையைப் பேணி வருகின்ற சீனா, இந்த ஆபத்து குறித்து மிகவும் நனவுபூர்வமாக உள்ளதுடன், அதன் வடக்கு எல்லையை இராணுவரீதியில் பலப்படுத்தி வருகிறது.
தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் சுயாதீனமாக புரட்சிகரமானரீதியில் அணிதிரட்டுவது மட்டுமே ஒரு புதிய உலக போருக்கான ஏகாதிபத்திய உந்துதலை தடுக்கவும் மற்றும் போர்-நாடுவோரை நிராயுதபாணியாக்கவும் முடியும்.