Print Version|Feedback
Trump’s nuclear war threat against North Korea
வட கொரியாவுக்கு எதிராக ட்ரம்பின் அணுஆயுத போர் அச்சுறுத்தல்
Bill Van Auken
10 August 2017
வட கொரியா போன்றவொரு வறிய மற்றும் ஒடுக்கப்பட்ட நாட்டிற்கு எதிராக "உலகம் முன்னொருபோதும் கண்டிராத விதத்தில் ஆத்திரம் மற்றும் கோபத்தைக்" கட்டவிழ்த்துவிட, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தலானது, உலகெங்கிலும் பயங்கர மற்றும் பயம் கலந்த அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அண்மித்து ஒரு கால் மில்லியன் ஜப்பானிய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்ட அமெரிக்க அணுகுண்டு தாக்குதலின் 72 ஆம் நினைவாண்டை, ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் உயிர்பிழைத்தவர்கள் நினைவுகூர்ந்த அதே வாரத்தில் தான், அமெரிக்க ஜனாதிபதி அவரது கோல்ஃப் விடுமுறைக்கு இடையே ஒட்டுமொத்த மனிதயினத்திற்கும் கணக்கிடவியலா விளைவுகளுடன் கூடிய ஓர் அணுஆயுத போருக்கு அச்சுறுத்தல் விடுத்தார்.
ஜனாதிபதியின் கருத்து "திட்டமிட்டதல்ல, தன்னியல்பாக" கூறப்பட்டதென ஊடகங்களுக்குக் தெரிவித்து, வெள்ளை மாளிகையின் மூத்த உதவியாளர் ஒருவர் ட்ரம்ப் அறிக்கையின் உறைய வைக்கும் விளைவுகளைக் குறைத்துக் காட்ட முயன்றார், அதேவேளையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சன் கூறுகையில், அமெரிக்கர்கள் "கடந்த சில நாட்களின் இந்த குறிப்பிட்ட கடும் பேச்சுக்கள் குறித்து கவலையின்றி, இரவில் நிம்மதியாக உறங்கலாம்,” என்று தெரிவித்தார்.
சமாதானப்படுத்தும் மறுஉத்தரவாதங்கள் என்பதற்கும் குறைவான இதுபோன்ற கருத்துக்கள் கூறப்பட்டாலும், ட்ரம்பின் பாதுகாப்புத்துறை செயலரும் முன்னாள் கடற்படை தளபதியும், நிதானமான சக்தியைச் சேர்ந்த "அறிவார்ந்த முடிவுகளை எடுக்கும் அனுபவஸ்தர்" என்று வழமையாக ஊடகங்களால் குறிப்பிடப்படுபவருமான "போர் வெறியர்" ஜேம்ஸ் மாட்டீஸ், ஜனாதிபதியின் அச்சுறுத்தலையே எதிரொலித்தார். வட கொரியா "அதன் ஆட்சி முடிவடைவதற்கும் மற்றும் அதன் மக்கள் அழிக்கப்படுவதற்கும் இட்டுச் செல்லும் எந்தவொரு நடவடிக்கைகளையும் பரிசீலிப்பதை நிறுத்தி" கொள்ள வேண்டுமென அவர் புதனன்று கோரினார். வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு அடிபணியுங்கள் அல்லது அணுஆயுத நிர்மூலமாக்கலை முகங்கொடுங்கள் என்பதே இதன் தவறுக்கிடமற்ற அர்த்தமாகும்.
ட்ரம்ப் அவரே கூட புதனன்று ஒரு அணுஆயுத போர் நடத்துவதற்கான வாஷிங்டன் தகைமையை பெருமைப்பீற்றும் ஒரு ட்வீட் மூலமாக அவரது முந்தைய அச்சுறுத்தலைப் பின்தொடர்ந்தார். “ஜனாதிபதியாக எனது முதல் உத்தரவே, நமது அணுஆயுத தளவாடங்களைப் புதுப்பிப்பதற்காக மற்றும் நவீனப்படுத்துவதற்காக இருந்தது,” என்றவர் அறிவித்தார். “இப்போது அது முன்பினும் அதிக பலத்தோடும், சக்தி வாய்ந்தும் உள்ளது. இந்த பலத்தை நாம் ஒருபோதும் பயன்படுத்தாமல் இருப்போமென்று நம்புவோமாக, ஆனால் உலகிலேயே நாம் மிகவும் சக்திவாய்ந்த நாடு கிடையாது என்றவொரு காலம் ஒருபோதும் வராமலேயே இருக்கட்டும்!” என்றார்.
இதுபோன்ற பொறுப்பற்ற அச்சுறுத்தல்களும் கிலியூட்டும் வாய்சவடால்களும் மலைப்பூட்டுகின்றன. உலகிலேயே மிக சக்தி வாய்ந்த அணுஆயுத சக்தி, “ஆத்திரம் மற்றும் கோபத்துடன்" (fire and fury) அவர்களைத் தாக்கி, அவர்களின் ஒட்டுமொத்த மக்களையும் நிர்மூலமாக்க மீண்டும் மீண்டும் அச்சுறுத்துகின்ற போது வட கொரிய தலைவர்களுக்கு என்ன நினைக்க தோன்றும்?
கொரிய கடற்கரையை ஒட்டி விமானந்தாங்கி போர்க்கப்பல் USS கார்ல் வின்சன் தலைமையில் ஒரு படைக்குழுவை அமெரிக்கா நிறுத்தியுள்ளது மற்றும் வட கொரிய எல்லைக்கருகில் அச்சுறுத்தும் விதத்தில் B-1 லான்சர் குண்டுவீசிகள் பறக்க விடப்பட்டுள்ளன என்கின்ற நிலைமைகளின் கீழ், இத்தகைய அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றன.
அமெரிக்க அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் மூலோபாய குண்டுவீசிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தளங்களைக் கொண்ட அமெரிக்க பசிபிக் பகுதியான குவாம் மீது ஓர் ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கான அதன் சொந்த அச்சுறுத்தலுடன் வட கொரியா அமெரிக்கா போர் அச்சுறுத்தல்களுக்கு விடையிறுத்துள்ளது. அதேவேளையில் இந்த அச்சுறுத்தலை பியொங்யாங்கில் இருந்து வரும் வெறும் வாய்சவடால் என்று ஒதுக்கிவிடலாம் என்கின்ற அளவிற்கு, அது எவ்வகையிலும் நிச்சயமானதல்ல. அமெரிக்க அச்சுறுத்தல்கள் நிஜமானது என்றும், போர் உடனடியாக நிகழக்கூடும் என்றும் வட கொரியர்கள் கணக்கிட்டால் என்னாவது? அமெரிக்க குண்டுகள் மற்றும் ஏவுகணைகளுக்கு தங்களின் இராணுவத்தை இழப்பதற்கு பதிலாக அவர்கள் தங்களின் சொந்த முன்கூட்டிய தாக்குதலை நடத்தி, அவர்கள் உளறிக் கொண்டிருக்கவில்லை என்று வாஷிங்டனுக்குக் காட்டுவதற்கும் கூட அவர்கள் முடிவெடுக்கலாம்.
வட கொரியாவின் பிற்போக்குத்தனமான மரபுவழி ஆட்சியையோ மற்றும் அதன் சொந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளையோ உலக சோசலிச வலைத் தளம் சிறிதும் ஆதரிக்கவில்லை, ஆனால் அதேவேளையில் இதுபோன்ற கணக்கீடுகள் பகுத்தறிவற்றவை கிடையாது.
வட கொரியாவின் நிலைப்பாடு அளப்பரிய வரலாற்று சுமையை சுமந்து கொண்டிருக்கிறது. 65 ஆண்டுகளுக்கு முன்னர் கொரியாவிற்கு எதிரான அமெரிக்க போரில் குறைந்தபட்சம் மூன்று மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் இரண்டு மில்லியன் பேர் வடக்கில் இருந்தவர்கள். அமெரிக்க விமானப் படையின் சொந்த மதிப்பீட்டின்படி, “வட கொரியாவின் இருபத்திரெண்டு பிரதான நகரங்களில் பதினெட்டு குறைந்தபட்சம் அரைவாசியாவது துடைத்தழிக்கப்பட்டிருந்தன.” விமானப்படை தளபதி கர்டிஸ் லெமெ பின்னர் நினைவுகூர்கையில், “நாங்கள் வட கொரியா மற்றும் தென் கொரியா இரண்டினது ஒவ்வொரு நகரையும் எரித்து தரைமட்டமாக்கினோம்,” என்றார்.
அவ்விதத்தில் வட கொரியா குறித்து, அமெரிக்காவின் “ஆத்திரம் மற்றும் கோபமான” பேச்சும் மற்றும் ஒட்டுமொத்த மக்களையும் பூண்டோடொழிப்பதற்கான அச்சுறுத்தல்களும் தற்பெருமை கொண்ட வாய்வீச்சு என்பதல்லாமல் வேறொன்றுமில்லை.
வட கொரியா அதன் அணுஆயுத மற்றும் தொலைதூர ஏவுகணை பரிசோதனைகளை நிறுத்தி, அதன் ஒட்டுமொத்த அணுசக்தி ஆற்றலையும் ஒப்படைக்க வேண்டுமென்ற வாஷிங்டனின் கோரிக்கையே தற்போதைய மோதலின் ஒட்டுமொத்த அடித்தளமாகும். ஆனால் அதுபோன்ற கோரிக்கைகளுக்கு அடிபணிந்த ஏனைய ஆட்சிகளின் கதியைக் குறித்து வட கொரியாவின் கிம் ஜொங்-யுன் அரசாங்கத்திற்கு நன்கு தெரியும்.
வட கொரியாவைப் போலவே, "தீய அச்சின்" பாகமாக ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷால் பிரகடனப்படுத்தப்பட்ட ஈராக், அதன் ஆயுத திட்டங்களைக் கைவிட ஒப்புக் கொண்டது, இருப்பினும் "பாரிய பேரழிவு ஆயுதங்களைக்" கொண்டுள்ளது என்ற பொய் சாக்குபோக்கின் கீழ் அதன்மீது 2003 இல் படையெடுக்கப்பட்டது. அந்த அமெரிக்க போரில் சுமார் ஒரு மில்லியன் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டு, அந்நாட்டின் அரசு தலைவர் சதாம் ஹூசைனும் தான்தோன்றித்தனமாக கொல்லப்படுவதில் போய் முடிந்தது. அதேபோல, ஈராக் படையெடுப்புக்குப் பின்னர் லிபியாவின் மௌம்மர் கடாபி அவர் ஆயுத திட்டங்களைக் கைவிட உடன்பட்டார், பார்க்கப்போனால் அமெரிக்கா மற்றும் நேட்டோ 2011 இல் அவர் நாட்டிற்கு எதிராக ஒரு போர் தொடுத்து, அதில் பத்தாயிரக் கணக்கான லிபியர்கள் கொல்லப்பட்டு, அந்த சமூகம் ஒன்றுமில்லாமல் விடப்பட்டு, அவரது சொந்த அடாவடித்தனமான-குண்டர்களாலேயே அவர் படுகொலை செய்வதில் போய் முடிந்தது.
வட கொரியாவின் அணுஆயுத திட்டம் ஒன்று மட்டுந்தான் அந்நாட்டையும் அதன் அரசாங்கத்தையும் அதுபோன்ற கதியில் பாதிக்கப்படுவதில் இருந்து தடுத்து வைத்துள்ளது.
பைத்தியக்காரத்தனமாக தெரியும் ட்ரம்பின் இந்த அச்சுறுத்தல்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்ரோஷமான போர் திட்டங்களுக்கு ஓர் அணுஆயுத மோதல் அபாயம் ஒரு தீர்க்க முடியாத தடையாக இருப்பதை இனியும் அது ஏற்க விரும்பவில்லை என்பதற்கு ஓர் சமிக்ஞையாக உள்ளன.
அமெரிக்காவிலும் மற்றும் இந்த பூமியின் ஒவ்வொரு பாகத்திலும் பொருளாதார நிலைமைகள், ஜனநாயக உரிமைகள் மீதும் மற்றும் உழைக்கும் மக்களின் உயிர்வாழ்க்கை மீதும் பேரழிவுகரமான விளைவுகளுடன், ஏறத்தாழ நிச்சயமாக எது ஒரு உலக பேரழிவு போராக மாறக்கூடுமோ அதற்கு மக்களைத் தயார் செய்ய அமெரிக்க நிர்வாகம் முயன்று வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையை விரிவாக்கி வரும் வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் பல்வேறு சிந்தனை குழாம்கள் அனைத்தும், பியொங்யாங் ஓர் அணுஆயுத சக்தியாக மாறுவதற்கான வரம்பை எட்டிவிட்டதாகவும், ஒரு அமெரிக்க நகருக்கு எதிராக அவற்றை பிரயோகிக்க தகைமை கொண்ட சிறிய குண்டுகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதூர ஏவுகணைகளை அபிவிருத்தி செய்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டி வாதிடுகின்றன.
ஈராக்கிய பாரிய பேரழிவுகரமான ஆயுதங்கள் (WMD) குறித்த புஷ் நிர்வாகத்தின் பொய்களை ஜீரணித்து கொள்ள வேண்டியிருந்தது, அதை விட இந்த குற்றச்சாட்டுக்கள் நியாயமாக இருக்கின்றன என்பதற்கெல்லாம் அங்கே எந்த காரணமும் இல்லை. வட கொரியாவின் அணுகுண்டுகள் உயிர்வாழ்வு மீதான ஓர் அச்சுறுத்தல் என்று வாஷிங்டன் பிரகடனப்படுத்துகின்ற அதேவேளையில், இஸ்ரேல், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சமஅளவில் ஸ்திரமற்ற மற்றும் ஆக்ரோஷமான ஆட்சிகள் அவற்றின் சொந்த அணுஆயுத குண்டுகளை அபிவிருத்தி செய்வதற்கு அது ஒத்துழைத்துள்ளது.
Economist இதழின் சமீபத்திய பிரசுரத்தில், வட கொரியாவுக்கு எதிரான போர் தயாரிப்பில் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் கணக்கீடுகள் கொடூரமான வார்த்தைகளில் உச்சரிக்கப்பட்டுள்ளன, அமெரிக்காவிற்கு ஒரு நீண்டகால வெற்றியில் முடியும் ஒரு போர் வெடிப்பதற்குரிய அனுமான சூழலை அது விளக்குகிறது. 300,000 படைத்துறைசாரா மக்கள் ஆரம்பத்திலேயே கொல்லப்படுவார்கள் என்றும், அவற்றுடன் இன்னும் நிறைய பேர் கதிர்வீச்சு நச்சால் உயிரிழப்பார்கள் என்றும் அது மதிப்பிடுகிறது. ட்ரம்பிடம் இருந்து வரும் ட்வீட் செய்தியை அனுமானித்து அது நிறைவு செய்கிறது: “சியோல் மீது தீய சக்தியான கிம் வீசிய அணுகுண்டு தாக்குதல் மிகவும் மோசமானது! அவரை திரும்ப அணுகுண்டு கொண்டு தாக்குவதைத் தவிர வேறு இருக்கவில்லை. ஆனால் அமெரிக்க மீண்டும் பாதுகாப்பாக இருப்பதற்கு எனது நடவடிக்கைகளுக்கு தான் நன்றி கூற வேண்டும்!”
இந்த கொடூரமான அனுமானிப்பு ஏதோவொரு விதத்தில் சிறந்த சம்பவ சூழல் விவரிப்பாக உள்ளது, ஏனெனில் அதுபோன்றவொரு போர் ஒட்டுமொத்த வட கொரிய மக்களை மட்டுமின்றி, ஆனால் சாத்தியமான அளவிற்கு சியோலில் உள்ள 10 மில்லியன் கணக்கானவர்களையும் மற்றும் பரந்த டோக்கியோவில் 38 மில்லியன் பேரையும் பாதிக்கும், தென் கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ள பத்தாயிரக் கணக்கான அமெரிக்க துருப்புகளை குறித்தோ கூற வேண்டியதே இல்லை. அனைத்திற்கும்மேலாக, வட கொரியா மீதான ஒரு அமெரிக்க தாக்குதல், 65 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததைப் போலவே, இப்போது ஒரு பிரதான அணுஆயுத சக்தியாக உள்ள சீனாவை உள்ளிழுக்கும்.
தீவிரமடைந்து வரும் போர் அபாயமும் மற்றும் அணுஆயுத நிர்மூலமாக்கலின் வெறிபிடித்த அச்சுறுத்தல்களாக காணப்படுபவையும் வெறுமனே டொனால்ட் ட்ரம்பின் குற்றகரமான மற்றும் பாசிசவாத மனநிலை சார்ந்த ஒரு விடயமல்ல. அது அடோல்ப் ஹிட்லரின் மொழியில் பேச தொடங்கியுள்ள ஒட்டுமொத்த அமெரிக்க அரசாங்கத்தின் மனநிலையாகும்.
இது, அதன் சரிந்துவரும் பொருளாதார மேலாதிக்கத்தை ஈடுகட்டுவதற்கு ஒரு வழிவகையாக இராணுவவாதம் மற்றும் ஆக்கிரமிப்பு போரைத் தழுவிய அமெரிக்காவில் ஒரு முதலாளித்துவ செல்வந்த தன்னலக் குழுக்களது அச்சுறுத்தல்கள் மற்றும் பீதியூட்டல்கள், ஓயாத ஆக்கிரமிப்பு போர்களின் கடந்த 25 ஆண்டுகால போக்கில் அபிவிருத்தி கண்டுள்ள ஓர் அரசியல் கலாச்சாரத்தின் இறுதி விளைபொருளாக உள்ளது.
அன்னிய நாடுகள் மீதான போர் என்பது உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீது இடைவிடாத தாக்குதல்களையும் மற்றும் தொடர்ந்து விரிவடையும் சமூக சமத்துவமின்மையையும் உடன் இணைத்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் ட்ரம்ப் மிகவும் மக்கள் மதிப்பிழந்த ஜனாதிபதியாக உள்ள நிலைமைகளின் கீழ் சமூக எதிர்ப்பானது அதிகரித்து வருகிறது. அரசியல் ஸ்தாபகம் உள்ளார்ந்து பிளவுபட்டுள்ளது மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்திற்குள்ளேயே போர் நடந்து கொண்டிருக்கிறது. உள்ளார்ந்த சமூக மற்றும் அரசியல் பதட்டங்களை ஒரு அன்னிய நாட்டு "எதிரிக்கு" எதிராக வெளியே திருப்பிவிடுவதற்காக வெள்ளை மாளிகை வட கொரியா உடனான ஒரு போரை சாதகமாக்கிக் கொள்ளும் ஒரு நிஜமான அபாயமும் உள்ளது.
அதுபோன்றவொரு கொள்கையின் நீண்டகால பாதிப்புகளை யாரும் சந்தேகிக்க வேண்டியதில்லை. ஆயிரக் கணக்கான அமெரிக்க சிப்பாய்களின் உயிரிழப்புகள் உட்பட பாரிய மக்கள் படுகொலை செய்யப்படுவதை அர்த்தப்படுத்துகின்ற ஒரு போரைத் தொடங்குவது என்பது அமெரிக்காவிற்கு உள்ளேயே கூட வன்முறையான அரசியல் ஒடுக்குமுறைக்கு சாக்குபோக்காக பயன்படுத்தப்படும்.
உலக சோசலிச வலைத் தளத்தை ஓரங்கட்டுவதற்கான கூகுளின் முயற்சிகள், ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்திற்காக தயாரிக்கப்பட்டு வருகின்ற சர்வாதிகார முறைகளின் ஓர் எச்சரிக்கையாகும்.
ஓர் அணுஆயுத போர் அச்சுறுத்தலை முன்னுக்கு இட்டுச்செல்வது அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியாகும், இதன் மையத்தில் இருப்பது பூகோளமயமான பொருளாதாரத்திற்கும் மற்றும் எதிர்விரோத தேசிய அரசுகளாக உலகம் பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான தீர்க்கவியலாத முரண்பாடாகும். ஆனால் ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் போருக்கு எதிராக ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம், முதலாளித்துவம் மனிதயினத்தை காட்டுமிராண்டித்தனத்திற்குள் மூழ்கடிப்பதற்கு முன்னதாக அதை முடிவுக்கு கொண்டு வர, தொழிலாள வர்க்கம் அதன் சொந்த புரட்சிகர தீர்வுக்கு போராட வேண்டியதின் அரசியல் அவசியத்தையும், அதற்கான புறநிலைமைகளையும் இரண்டையும் இந்த இலாப அமைப்புமுறையின் இதே நெருக்கடி உருவாக்கி கொண்டிருக்கிறது.