Print Version|Feedback
EU holds Paris conference to set up detention camps for migrants in Libya
லிபியாவில் புலம்பெயர்வோருக்கான தடுப்புக்காவல் முகாம்கள் அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் பாரீஸில் மாநாடு நடத்துகிறது
By Alex Lantier
29 August 2017
ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, மற்றும் ஸ்பெயினின் அரசு தலைவர்களும் மற்றும் ஆபிரிக்க நாடுகளான நைஜர் மற்றும் சாட் இன் அரசு தலைவர்களும், அவர்களுடன் ஐ.நா. ஆதரவு பெற்ற லிபிய பிரதம மந்திரி ஃபயெஜ் அல்-சராஜ் உம் நேற்று பாரீஸில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஏற்பாடு செய்திருந்த புலம்பெயர்ந்தவர்கள் மீதான ஒரு உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர்.
அம்மாநாட்டின் நோக்கமே, அதன் மீது அரசியல்ரீதியில் குற்றகரமான தன்மையை ஏற்படுத்தியதுதான். நூறாயிரக் கணக்கான அகதிகளுக்கு தஞ்சம் கோரும் உரிமையை எவ்வாறு மறுப்பது மற்றும் ஆபிரிக்காவின் வடக்கிலிருந்து லிபியாவுக்கும் மத்தியதரைக் கடலை கடந்து ஐரோப்பாவிற்கும் அவர்கள் பயணிப்பதை எவ்வாறு தடுப்பது என்பதன் மீது அந்த உச்சிமாநாட்டில் விவாதிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் ஃபெடரிகா மொஹெரினி கலந்து கொண்ட அந்த மாநாட்டில், அகதிகளைக் கைது செய்து அவர்கள் தப்பியோடி வந்த அதே நாடுகளுக்கு அவர்களை திருப்பி அனுப்பி, அவ்விதத்தில் அவர்களை ஆபிரிக்காவிலேயே வைப்பதற்கும், மற்றும் மேற்கொண்டு புலம்பெயர்வதை அதைரியப்படுத்தவும் ஆபிரிக்க நாடுகளின் ஆயுத படைகளைப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அனைத்திற்கும் மேலாக அம்மாநாடு, லிபியாவில் 2011 நேட்டோ போரின் பேரழிவுகரமான விளைவுகளைக் கையாள்வதற்கான ஒரு முயற்சியாக இருந்தது, அப்போர்தான் கர்னல் மௌம்மர் கடாபி ஆட்சியைக் கலைத்து, இன்று வரையில் சீறிக் கொண்டிருக்கும் ஒரு இரத்தந்தோய்ந்த உள்நாட்டு போரைக் கட்டவிழ்த்துவிட்டது. அம்மாநாடு, லிபியாவுக்குள் எந்தெந்த ஆயுதமேந்திய கன்னைகளை ஆதரிப்பது என்பதில் ஐரோப்பிய சக்திகளிடையே தீவிரமடைந்து வரும் பதட்டங்களைக் குறைக்கவும் முயன்றது.
2011 க்கு பிந்தைய லிபியாவின் உள்நாட்டு போர் நிலைமைகளில் சிக்கிய பெரும் எண்ணிக்கையிலான அகதிகளின் கொடூரமான தலைவிதியை எடுத்துக்காட்டி, மற்றும் அகதிகள் மீது பொலிஸ் நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் யாரை சார்ந்திருக்க பரிந்துரைத்து வருகின்றதோ அந்த சக்திகளை அம்பலப்படுத்தி ஐ.நா. கடந்த வாரம் அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஐ.நா. அறிக்கை குறிப்பிடுகையில், “கடத்தல்காரர்கள், மக்களை சட்டவிரோதமாக நாடுகடத்துபவர்கள், ஆயுத குழுக்கள் மற்றும் பாதுகாப்பு படைகளது அங்கத்தவர்கள் என இவர்களின் அதீத வன்முறை; சித்திரவதை மற்றும் பிற கொடூர-நடவடிக்கைகள்; பலவந்த உழைப்பு; சுதந்திரத்தின் எதேச்சதிகார பறிப்பு; கற்பழிப்பு; ஏனைய பாலியியல் வன்முறை மற்றும் சுரண்டலுக்கும் புலம்பெயர்பவர்கள் தொடர்ந்து உள்ளாகிறார்கள். லிபியாவில் அடிமை சந்தைகள் இருப்பது குறித்து புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஏப்ரல் 11, 2017 இல் கண்டித்தது, அங்கே துணை-சஹாரா புலம்பெயர்ந்தோர் அழைத்து வரப்பட்டு விற்கப்படுகிறார்கள், பெண்கள் பாலியல் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள்,” என்று குறிப்பிட்டது.
லிபியாவில் ஐ.நா. ஆதரவு திட்டத்திலிருந்து கிடைத்த அறிக்கைகளின் அடிப்படையில், புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்தி, தடுப்புக்காவலில் வைப்பதற்காக லிபியாவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் முகாம்களின் நிலைமைகளை ஐ.நா., சித்தரித்திருந்தது. "பொதுவாக சட்டமின்மை மற்றும் நீதித்துறை அமைப்புகளது பலவீனத்தின் காரணமாக,” கடாபிக்குப் பின்னர் லிபியாவை ஆட்சி செய்யும் பல்வேறு போராளிகள் குழுக்களின் காட்டுமிராண்டித்தனமான நடத்தையால் பாதிக்கப்பட்டவர்களின் "குறைகள் மிகக் குறைவாகவே தீர்க்கப்படுவதாக" ஐ.நா. கண்டறிந்தது.
அது எழுதியது, “கார்யன், திரிபொலி, மிஸ்ரடா மற்றும் சுர்மனில் சட்டவிரோத புலம்பெயர்வை கையாள்வதற்கான துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தடுப்புக்காவல் முகாம்களை UNSMIL பார்வையிட்டது, அங்கே ஆயிரக் கணக்கான புலம்பெயர்வோர் அவர்களின் காவலின் சட்டப்பூர்வத்தன்மையை சவால்விடுக்க வாய்ப்பின்றி நீண்டகாலமாக அங்கே எதேச்சதிகாரமாக வைக்கப்பட்டுள்ளனர். சித்திரவதை, கொடூர-நடவடிக்கை, கற்பழிப்பு மற்றும் பாலியியல் வன்முறையின் ஏனைய வடிவங்களையும் UNSMIL ஆவணப்படுத்தி இருந்தது. தடுப்புக்காவல் மையங்கள் அதிக நெரிசலாக இருப்பதுடன், காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் பெரும்பாலும் சத்துக்குறைபாட்டுடன், வறிய சுகாதாரமற்ற நிலைமைகளில் வாழ்கின்றனர், அத்துடன் அவர்களுக்கான மருத்துவ கவனிப்பும் மிகக் குறைவாக அல்லது அணுக முடியாதவாறு உள்ளது.”
லிபியாவில் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவிலான ஆயுத படைகளின் காட்டுமிராண்டித்தனமான நடத்தையையும் ஐ.நா. ஆவணப்படுத்தி இருந்தது, அவை அகதிகளை இந்த தடுப்புக்காவல் முகாம்களுக்கு திரும்ப அனுப்புவதற்காக அவர்களைப் பிடிக்க முயல்கின்றனர். அதன் அறிக்கை குறிப்பிடுகையில், “லிபிய கடல் ரோந்துப்படையைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகின்ற ஆயுதமேந்திய சிப்பாய்களின் அபாயகரமான, உயிரையே அச்சுறுத்தும் இடைமறிப்புகளைக் குறித்து UNSMIL எண்ணற்ற அறிக்கைகளைப் பெற்றது. விடாமுயற்சி கொள்கையின் (diligence policy) காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அவையின் அதேபோக்கில், லிபிய கடல் ரோந்துப்படைக்கான அதன் ஆதரவை UNSMIL மீளாய்வு செய்து வருகிறது,” என்று குறிப்பிட்டது.
அம்மாநாடு நேற்று நள்ளிரவு பிரசுரித்த ஒரு சிறிய தீர்மானத்தில், “குறிப்பாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள" புலம்பெயர்ந்தோரை லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு அழைத்து வர ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்புவிடுத்த போதினும், மத்தியத்தரைக் கடலை எட்டுவதில் இருந்து அகதிகளை தடுத்து வைக்க நைஜர் மற்றும் சாட் இன் ஆயுத படைகள் மற்றும் பல்வேறு போராளிகள் குழுக்களை அது சார்ந்திருந்தது. அம்மாநாடு, அதன் அகதிகள்-விரோத நோக்கங்களுக்காக லிபிய கடல் ரோந்துப்படைக்கு இன்னும் அதிக சாதனங்களை வழங்கவும் முன்மொழிந்தது.
வடக்கு நோக்கிய அவர்களின் பயணத்தில் அவர்கள் லிபியாவை எட்டுவதற்கு முன்னரே, புலம்பெயர்வோரில் யார் உண்மையாகவே நைஜர் மற்றும் சாட் இன் அகதிகள் என்பதை "அடையாளம்" காண வரும்புவதாக மக்ரோன் தெரிவித்தார், அவ்விதத்தில் மற்றவர்களை திருப்பி அனுப்பிவிட முடியும். ஆபிரிக்காவில் அகதிகளுக்கு நிலவும் கொடூரமான நிலைமைகளுக்கு மக்களைக் கடத்துபவர்கள் மீது பழிசுமத்திய அவர் அறிவிக்கையில், “ஆயுதங்கள், மனித உயிர்கள், போதை மருந்துகளை கடத்தும் குறிப்பிட்ட நாடுகடத்தும் குழுக்களும் மற்றும் பயங்கரவாதத்துடன் இணைந்த சில குழுக்களும் ஆபிரிக்க பாலைவனத்தையும் மத்தியதரைக்கடலையும் சுடுகாடாக மாற்றிவிட்டன. இவர்கள் தான் பயங்கரவாதத்துடன் ஆழமாக இணைந்திருப்பவர்கள்,” என்றார்.
இவை, முற்றுமுதலான ஆயுத ஒடுக்குமுறையின் அடிப்படையில் அகதிகளுக்கு தஞ்சம் பெறும் உரிமைகளை மறுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூர்க்கமான கொள்கையை, மனித உரிமைகளை மதிப்பதாக பொய்யாக காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட அரசியல் பொய்களாகும். லிபியாவின் உள்நாட்டு போர் நிலைமைகளுக்கு மக்களைக் கடத்துவோரும் அல்லது அகதிகளும் காரணமல்ல, மாறாக ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போரில் லிபியா மீது குண்டுவீசிய மற்றும் பல்வேறு இஸ்லாமிய போராளிகள் குழுக்களை ஆயுதமேந்த செய்த நேட்டோ சக்திகளே இதற்கு காரணமாகும். ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவில் நடத்தப்பட்ட ஏகாதிபத்திய போர்களைப் போலவே, லிபிய சமூகமும் விரைவாக சிதைக்கப்பட்டது.
மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா எங்கிலுமான போர்கள் இப்போது இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய மிகப்பெரிய அகதிகள் நெருக்கடியை உருவாக்கியுள்ளதுடன், 60 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அவர்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். ஏகாதிபத்திய சக்திகளின் எதிர்வினை, போர் முனைவை நிறுத்துவதற்கோ அல்லது பத்து மில்லியன் கணக்கானவர்களை அவர்களின் வீடுகளை விட்டு வெளியே உந்தி கொண்டிருக்கும் இராணுவ மோதல்கள் மற்றும் வறுமையை ஒழிக்க முயற்சிப்பதற்காகவோ இல்லை. அதற்கு பதிலாக, அவை முன்னொருபோதும் இல்லாத இந்த புலபெயர்வோர் அலை ஐரோப்பாவை வந்தடைவதில் இருந்து தடுப்பதற்காக இராணுவ சர்வாதிகாரங்கள் மற்றும் நெறிமுறையற்ற போராளிகள் குழுக்களுடன் இன்னும் நெருக்கமாக வேலை செய்ய நோக்கம் கொண்டுள்ளன.
அமெரிக்காவிற்குள் மெக்சிகன் புலம்பெயர்வை தடுக்க ஒரு சுவர் கட்ட வேண்டுமென ட்ரம்ப் அழைப்புவிடுத்ததன் மீதான விமர்சனங்கள் உட்பட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது ஐரோப்பிய சக்திகளின் விமர்சனங்கள் இருந்தாலும், ஆபிரிக்க அகதிகளை நோக்கிய அவர்களின் சொந்த கொள்கையும் அதற்கு சம அளவில் ஈவிரக்கமின்றி மூர்க்கமாக உள்ளது. ஆயிரக் கணக்கான அகதிகள் மத்தியதரைக் கடலை கடந்த போது, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளோ, கடலில் மூழ்கி அகதிகள் உயிரிழக்கும் செய்தியானது புலம்பெயர்பவர்களை ஐரோப்பாவை அடைய முயற்சிப்பதிலிருந்து அவர்களை அதைரியப்படுத்தும் என்ற நம்பிக்கையில், மீட்பு நடவடிக்கைகளைக் குறைக்க முயன்றனர்.
ஒரு பிரிட்டிஷ் தூதரக அதிகாரி விவரிக்கையில், மீட்பு நடவடிக்கைகள் புலம்பெயர்வோரை ஊக்குவித்து, “ஒரு எதிர்பாரா 'ஈர்ப்பு காரணியை' உருவாக்கி அவ்விதத்தில் இன்னும் அதிக துயரகரமான அவசியமற்ற உயிரிழப்புகளுக்கு இட்டுச் செல்லும்" என்றார். அகதிகளை மூழ்கி இறக்க விட்டுவிடுவதன் மூலம் புலம்பெயர்வோரை அதைரியப்படுத்துவதும் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் "ஈர்ப்பு காரணியாக" உருமாறுவதைத் தவிர்ப்பதுமே இதற்கான தீர்வு என்றாகிறது. அப்போதிருந்து, ஆயிரக் கணக்கான அப்பாவி அகதிகள் மத்தியதரைக் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்—2017 இன் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 2,400 பேர் இறந்துள்ளனர்.
இத்தகைய நிலைமைகளின் கீழ், ஐரோப்பாவிற்கு "பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட" புலம்பெயர்ந்தவர்களை மட்டும் ஏற்றுக்கொள்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கூறுவது முற்றிலும் மற்றொரு எரிச்சலூட்டும் சைகையாக உள்ளது. லிபியாவில் எந்தவொரு அகதி பாதிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு அந்நாட்டின் உள்நாட்டு போர் நிலைமைகளே காரணமாகும், மேலும் "பாதிக்கப்பட்ட குறிப்பிட்டவர்களை" மட்டும் ஏற்றுக் கொள்வதற்கான உறுதிமொழிகளானது, எந்தெந்த அகதிகளுக்கு தஞ்சம் வழங்குவது என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமையை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு வழங்குவதற்கு ஒப்பானதாகும்.
ஆரம்ப அறிக்கைகளின்படி, ஆபிரிக்காவின் பெரும்பாலான பாகங்கள் மிகவும் வறுமையில் இருக்கும் வரையில் புலம்பெயர்வு தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என்ற ஆபிரிக்க அரசு தலைவர்களின் வாதங்களை ஐரோப்பிய அதிகாரிகள் அம்மாநாட்டில் கேள்விமுறையின்றி நிராகரித்தனர். “பிரச்சினை வறுமை தான்,” என்று கூறிய மொஹிரினி, என்றாலும் ஆபிரிக்காவில் வேலைகளை உருவாக்குவதற்காக கணிசமான நிதி வழங்கும் "ஒரு புதிய மார்ஷல் திட்டம்" தொடங்குவதை நிராகரித்தார். ஐரோப்பிய அதிகாரிகள் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ஆரம்பத்தில் 6 மில்லியன் யூரோ அல்லது நீண்டகால அடிப்படையில் 50 மில்லியன் யூரோ செலவிட சிந்தித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன—இது நூறு மில்லியன் கணக்கான மக்கள் வாழும் வறுமைபீடித்த ஒரு பிராந்தியத்தின் தேவைகளின் ஒரு துளிக்கு சமமாகும்.
அம்மாநாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவவாத மற்றும் அகதிகள்-விரோத கொள்கையை மட்டும் பிரதிபலிக்கவில்லை, மாறாக ஐரோப்பாவிற்குள் புலம்பெயர்வதை மட்டுப்படுத்த மிகவும் இலட்சிய திட்டங்களை யார் அறிவிப்பது மற்றும் யார் திட்டநிரலை வகுப்பது என்பதன் மீது ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே அதிகரித்து வரும் போட்டிகளையும் எடுத்துக்காட்டியது. மீண்டும் தேர்வாவதற்கு முயன்று வருபவரும் அவரது புலம்பெயர்வு-விரோத நற்பெயரை மெருகூட்ட முயன்று வருபவருமான ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் வருவதை மட்டுப்படுத்த இரத்தந்தோய்ந்த எகிப்திய இராணுவ சர்வாதிகாரி ஜெனரல் அப்தெல் பதாஹ் அல்-சிசி உடனான ஒரு உடன்பாட்டை நேற்று அறிவித்தார்.
பாரீஸ் மற்றும் ரோம் முறையே லிபியாவினுள் ஜெனரல் கலிபா ஹஃப்தார் மற்றும் மிஸ்ரடா போராளிகள் குழுக்கள் தலைமையில் எதிர்விரோத ஆயுத படைகளை ஆதரிப்பதால், லிபியாவின் முன்னாள் காலனித்துவ சக்தியான துருக்கியுடன் பிரான்சுக்கு ஏற்பட்டுள்ள கூர்மையான பதட்டங்களுக்கு இடையே, மக்ரோன் "அகதிகளின் விபர சேகரிப்பு" (hot spot) தடுப்புக்காவல் மையங்களை பிரான்ஸ் லிபியாவில் கட்டமைக்கும் என்று ஜூலையில் அவர் முன்வைத்த திட்டங்களை கைவிடுவதற்கு நிர்பந்திக்கப்பட்டிருந்தார்.