Print Version|Feedback
Indian Stalinists support Modi government in military standoff with China
சீனாவுடனான மோடி அரசாங்கத்தின் இக்கட்டான இராணுவ நிலைக்கு இந்திய ஸ்ராலினிஸ்டுகள் ஆதரிக்கின்றனர்
By Wasantha Rupasinghe and Keith Jones
29 July 2017Copy
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு “கீழ்படிந்த” கூட்டணி நாடாக இந்தியா தோன்றியிருப்பதனால் தான் நெருக்கடி தூண்டப்பட்டுள்ளது என்று அது ஒப்புக் கொண்ட போதிலும் மற்றும் இந்தியாவின் போர்குணமிக்க அச்சுறுத்தல்கள் சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் யுத்தத்தைத் தூண்டும் வகையில் இருந்தபோதிலும் கூட தற்போதைய இந்திய-சீன எல்லை நெருக்கடிக்கு மத்தியில், இந்தியாவின் பிரதான ஸ்ராலினிசக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம், பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.
ஆறு வாரங்களுக்கு முன்பு, இமயமலை அடிவாரத்திலுள்ள ஒரு மலைமுகட்டு பகுதியான டோக்லாம் அல்லது டோங்க்லாங் பீடபூமியில், அதாவது, சீனா மற்றும் இந்திய மேலாதிக்கத்திற்கு உட்பட்ட ராஜ்யமான பூட்டான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோருகின்ற பிராந்தியத்தில் சீன கட்டுமானத் தொழிலாளர்கள் ஒரு சாலையினை விரிவாக்கம் செய்வதை தடுப்பதற்காக இந்திய துருப்புக்கள் குறுக்கீடு செய்தன. அப்போதிருந்து, நூற்றுக்கணக்கான இந்திய மற்றும் சீன துருப்புக்கள் பதட்டம் நிரம்பிய ஒரு “நேருக்கு நேரான” நிலையில் ஈடுபடுத்தப்பட்டனர், இவர்களை நூறு மீட்டருக்கு சற்று அதிகமான தொலைதூர இடைவெளி தான் பிரித்துவைத்துள்ளது. புது தில்லி மற்றும் பெய்ஜிங் இரண்டுமே தொலைதூர பிராந்தியத்திற்கு ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை விரைந்து அனுப்பியதோடல்லாமல், பல வாரங்களாக இந்திய மற்றும் சீன தலைவர்கள் ஒரு இராணுவ மோதலுக்கான அச்சுறுத்தல்களை பரிமாற்றம் செய்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்த எல்லை நெருக்கடி, சீன இந்திய உறவுகள் விரைவாக சீர்கெட்டு வரும் நிலையில் ஒரு புதிய கட்டத்தை நன்கு எடுத்துக்காட்டுவதுடன் அதனை பிரதிநிதித்துவம் செய்கிறது. சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் ஒரு அசலான முன்னணி நாடாக இந்தியா மாற்றப்பட்டுள்ளதன் தவிர்க்க முடியாத விளைவாக இந்த சீர்குலைவு ஏற்பட்டுள்ளது.
ஆனால், ஆசியா மற்றும் உலக மக்களுக்கு, இந்திய-அமெரிக்க கூட்டணியினால் உருவாக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய ஆபத்துக்கள் குறித்து இந்திய தொழிலாளர்களையும், உழைக்கும் மக்களையும் எச்சரிப்பதற்கு பதிலாக, டோக்லாம் எல்லையிலுள்ள இக்கட்டான நிலையை ஸ்ராலினிஸ்டுகள் சற்று அதிகமான ஒரு இராஜதந்திர கொந்தளிப்பு நிலையாகவே கருதுகின்றனர்.
இன்னும் மோசமாக அவர்கள், நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசாங்கம் மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் மீது அழிவுகரமான பிரமைகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர், அவற்றின் சமாதானம் நாடும் பாத்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றனர், சூறையாடும் தன்மையிலான அவற்றின் வல்லரசாகும் அபிலாஷைகளுக்கும் ஆதரவளிக்கின்றனர்.
அனைத்திற்கும் மேலாக, மூல வளங்கள், சந்தைகள் மற்றும் மூலோபாய சாதக நலன்களுக்காக, இந்திய குடியரசு உள்ளிட்ட, அனைத்து போட்டி முதலாளித்துவ சக்திகளும் எடுக்கும் முயற்சிகளுக்கு விட்டுக்கொடுக்காத எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு பூகோள தொழிலாள வர்க்க தலைமையிலான இயக்கத்தின் வளர்ச்சியை அவர்கள் எதிர்க்கின்றனர்.
சீனாவுடனான எல்லைப்பிரச்சனை பற்றி “ஒருமித்த கருத்து ஒன்றை உருவாக்க,” ஜூலை 14 அன்று, பி.ஜே.பி. அரசாங்கம் அழைப்புவிடுத்த ஒரு “அனைத்து கட்சி” கூட்டத்தில் சிபிஎம் இன் பொது செயலர் சீதாராம் யெச்சூரி கலந்துகொண்டார். வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளரான கோபால் பாக்லேயின் கருத்துப்படி, “அனைத்து பங்கேற்பாளர்களும், இந்தியாவின் அணுகுமுறைக்கும், அத்துடன் தேசிய ஒருமைப்பாட்டின் தேவை குறித்தும் தங்களது வலுவான ஆதரவை வெளிப்படுத்தினர்” என்று கூறினார்.
யெச்சூரியும் சரி அல்லது சிபிஎம் மும் சரி பாக்லேயின் கருத்துக்களோடு முரண்படவும் இல்லை, கேள்விக்கு உட்படுத்தவும் இல்லை. உண்மையில், இந்திய முதலாளித்துவக் கட்சிகளிடையே ஒரு ஒருமித்த கருத்து இருப்பதாக காட்டும் நோக்கத்துடன் அரசாங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட ஒரு கூட்டத்தில் யெச்சூரி பங்கேற்றது என்பதே அதுவாக பேசுகிறது. இந்திய முதலாளித்துவத்தின் வெளியுறவுக் கொள்கைத் தந்திரங்களை – அந்த தந்திரங்கள் அவர்களது சூறையாடும், வல்லரசாகும் இலட்சியங்களை அடையும் நோக்கம் கொண்டவை – அவற்றை அம்பலப்படுத்தி அதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு மாறாக, “தேசிய,” மற்றும் வர்க்கங்களுக்கு மேம்பட்ட வண்ணங்களில் அவற்றை மூடி மறைப்பதற்கு ஸ்ராலினிஸ்டுகளின் உதவியை அவர்களுக்கு வழங்குவதற்கு யெச்சூரி விரைந்தார்.
அனைத்து கட்சி கூட்டத்தைத் தொடர்ந்து, யெச்சூரி தனது முகநூல் பக்கத்தில் “இராஜதந்திர வழிமுறைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலமாக (சீனாவுடனான இக்கட்டான நிலையை)” தீர்ப்பதற்கு “அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை சிபிஎம் முழுமையாக ஆதரிக்கும்” என்று அறிவித்தார். இதனுடன் சேர்த்து அவர் சிபிஎம் இன் தலைவர் மோடி மற்றும் பி.ஜே.பி க்கு விடுத்த அழைப்பில் “இந்த பிராந்தியத்தில் வெளிநாட்டு உறவுகள் திடீரென்று ஏன் மோசமடைந்து வருகின்றன என்பது பற்றி ஆழமாக சிந்தித்து விடையிறுக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
யெச்சூரியின் கருத்துக்கள், பி.ஜே.பி. அரசாங்கத்தின் மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் சமாதான நோக்கங்கள் மீதான ஒரு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஒப்பானதாக . இருக்கின்றன. அவர்கள் யாரை கிண்டல் செய்ய முயற்சிக்கிறார்கள்?
மோடியின் சமீபத்திய வெள்ளை மாளிகை விஜயம் தொடர்பான சிபிஎம் அரசியல் குழுவின் சொந்த அறிக்கையின்படி, பெருநிறுவன செய்தி ஊடகம், பெருவணிகம் மற்றும் நாட்டின் இராணுவ-மூலோபாய நடைமுறை ஆகியவற்றின் உற்சாகமிக்க ஆதரவுடன், பி.ஜே.பி. அரசாங்கம், “இந்தியாவை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கீழ்ப்படிந்த இளைய கூட்டாளி நாடாக உறுதிப்படுத்தியுள்ளது.” இவ்வாறு செய்கின்ற சமயத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் இழந்த பொருளாதார மேலாதிக்கத்தை மட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில் மத்திய கிழக்கு முழுவதும் கால் நூற்றாண்டு காலப் போர்களை நடத்தியது, அது அணு ஆயுதம் தாங்கிய சீனா மற்றும் ரஷ்யாவுடன் பொறுப்பற்ற இராணுவ-மூலோபாய மோதல்களை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
• வாஷிங்டனின் முக்கிய தெற்காசிய மற்றும் இந்திய பெருங்கடல் கூட்டாளியாக அதன் அரவணைப்பினால் தைரியம் பெற்று, பி.ஜே.பி. அரசாங்கம் தன்னை ஒரு பிராந்திய மேலாதிக்கவாதியாக அமைத்துக்கொள்ள தீவிரமாக முயன்று வருகிறது. கடந்த செப்டம்பரில், அது பாகிஸ்தானுக்குள் சட்டவிரோத எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு உத்தரவிட்டது, பின்னர் இஸ்லாமாபாத் உடனான நேருக்கு நேரான “மூலோபாய கட்டுப்பாட்டு” தளைகளை இந்தியா கைவிட்டு விட்டதாக பெருமையடித்தது. பத்து மாதங்களுக்கு பின்னர், “பாகிஸ்தானிய பயங்கரவாதம்” தான் காஷ்மீர் பகுதியில் இந்திய ஆட்சி மீதான வெகுஜன அதிருப்திக்கு மூலகாரணமாக இருப்பது என்று இந்து மேலாதிக்கவாத பி.ஜே.பி. பிடிவாதமாக வலியுறுத்துகின்றது, இந்நிலையில் இந்திய மற்றும் பாகிஸ்தானிய இராணுவத்தினர் வாள்களை ஏந்திய வண்ணம் ஒருவரை ஒருவர் எதிர் கொள்கின்றனர்.
• மேலும் மோடி அரசாங்கம், அதன் முன்னோடிகளின் முயற்சிகளை தொடர்கையில், ஒவ்வொரு பிரதான சீன மக்கள்தொகை மையத்தினையும் அணுஆயுதங்களைக் கொண்டு தாக்கும் திறன் வாய்ந்த அக்னி V ஏவுகணை உட்பட, ஒரு மும்முனை அணுசக்தி வளர்ச்சியை விடாப்பிடியாக பின்தொடர்ந்து வருகின்றது.
மோடி மற்றும் அவரது பி.ஜே.பி. யை பொறுத்தவரை “கடந்த காலத்தை சுய ஆய்வு செய்வது” மற்றும் ஒரு மிகுந்த “அண்டை நாட்டு” கொள்கையை பின்பற்றுவது என்பது அப்பட்டமாக அபத்தமானது. அது (ஸ்ராலினிஸ்டுகள் அடிக்கடி செய்வதைப் போன்று) “மக்கள் சார்பு” கொள்கைகளை பின்பற்ற வேண்டும் அல்லது வகுப்புவாதத்தைப் கைவிட வேண்டும் என்று அவர்களிடம் விண்ணப்பம் செய்வதற்கு ஒப்பானது.
முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பூகோள மூலோபாய இந்திய-அமெரிக்க பங்காண்மை மீது கட்டியெழுப்பி பி.ஜே.பி. அதன் பூகோள மூலோபாயத்தின் அடித்தளமாக இந்திய-அமெரிக்க கூட்டணியை உருவாக்கியுள்ளது. இன்னும் அடிப்படையாக, இந்திய முதலாளித்துவம், உலகம் சுற்றிலும் உள்ள அதன் போட்டியாளர்களைப் போல, பெரும் மந்தநிலைக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள உலக முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடிக்கு சிக்கன நடவடிக்கை, போர் மற்றும் பிற்போக்குத்தனத்தை தழுவியதன் மூலம் விடையிறுத்தது. அது, சந்தை சார்பு “சீர்திருத்தத்தை” தீவிரப்படுத்தவும், உலக அரங்கில் தனது நலன்களை இன்னும் ஆக்கிரோஷமாக நிலைநாட்டவும் ஏதுவாக மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்க பி.ஜே.பி. ஐ ஆட்சிக்கு கொண்டு வந்தது.
இந்தியாவின் பி.ஜே.பி. தலைமையிலான அரசாங்கத்திற்கு அத்தகைய முட்டாள்தனமான மற்றும் பிற்போக்குத்தனமான வேண்டுகோள்களை யெச்சூரி வைக்கிறார் என்பது நிச்சயமாக தற்செயலானது இல்லை. பல தசாப்தங்களுக்கு முன்னரே, சிபிஎம் மும் அதன் சகோதரக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI), முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டன. சமூக எதிர்ப்பை கட்டுப்படுத்துவது அல்லது ஒடுக்குவது, மற்றும் ஆளும் வர்க்கத்திற்கு ஆலோசனை வழங்கி அவர்களை உஷார் படுத்துவது போன்றவையே அவர்களது செயல்பாடுகளாக உள்ளது.
CPM இன் People’s Democracy வலைத் தளத்தின் சமீபத்திய இடுகையில் இது தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 12 அன்று, “இந்தியா-சீனா: பேச்சுவார்த்தைகளை தவிர வேறு வழி இல்லை” என்ற தலைப்பில் People’s Democracy ஒரு தலையங்கத்தை வெளியிட்டது. அதற்குள்ளாக, கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக, தென் சீன கடலில் சீனாவின் செயல்நோக்கம் கொண்ட “ஆக்கிரோஷமான” நடவடிக்கைகளுடன் டோக்லாம் சர்ச்சையை சமமானதாக்கி, பூட்டானின் இறையாண்மை உரிமையை மீறுபவராக சீனாவை வடிவமைக்கும் அரசாங்க மற்றும் செய்தி ஊடக அறிக்கைகளினால் இந்திய மக்கள் மூழ்கடிக்கப்பட்டனர், தேவைப்பட்டால், 1962 சீன-இந்திய எல்லைப் போரில் அதன் தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்தியாவின் திறனை அவை பாராட்டின.
எவ்வாறாயினும், People’s Democracy அல்லது CPM கட்சியின் வலைத் தளத்தில் இந்த இக்கட்டான எல்லைப்பகுதி பிரச்சனை பற்றி முதல் தடவையாக இந்த தலையங்கத்தில் தான் பிரசுரமானது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் வளர்ந்து வரும் “வேறுபாடு” குறித்து “பிரதான காரணியாக பங்களிப்பு செய்வது,” “அமெரிக்காவுடனான இந்திய மூலோபாய கூட்டணி தான்” என்று இந்த தலையங்கம் குறிப்பிடுகின்றது. மேலும் இந்தியா, “ஆசிய-பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவை அடக்கும் நோக்கத்துடன் தனது மூலோபாய திட்டங்களை வகுத்துள்ள அமெரிக்காவுடன்’ இணைந்துள்ளது ” எனத் தொடர்கின்றது.
ஆனால் அதனை, ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போர் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பூகோள இயக்கத்தைக் கட்டமைப்பதில், அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் மற்றும் உலகெங்கிலும் உள்ள அதன் வர்க்க சகோதர சகோதரிகளுடன் இணைவதற்கு இந்திய தொழிலாள வர்க்கத்தை அழைக்கும் நிலைப்பாட்டில் இருந்து செய்யவில்லை.
இல்லை, அதன் விவாதம் –மற்ற இடங்களில் அதனை மிக விரிவாக வெளிப்படுத்தியுள்ளது– இந்திய முதலாளித்துவத்தின் “தேசிய நலன்களுக்கு” இந்திய-அமெரிக்க கூட்டணி சேவை செய்யவில்லை என்பதை மோடி அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட ஒரு வேண்டுகோளாகவே உள்ளது. இந்தியா அதன் “மூலோபாய சுயாட்சியை” அதாவது, அமெரிக்கா, ஏனைய மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் வளைந்து நெளிந்து செல்வதற்கான வாய்ப்பை – பேணுமாயின் அது இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று சிபிஎம் வாதிடுகிறது.
“இருதரப்பு உறவுகளில் பாதுகாப்பு காரணியின் முக்கியத்துவம் இந்தியாவை மேலும் மேலும் அமெரிக்காவை சார்ந்திருக்க செய்கின்றது, மேலும் அவர்களது பாதுகாப்புக் குடையின் கீழ் இதைக் கொண்டு வருகிறது” என்று ஜூலை 16 People’s Democracy பதிப்பில் ஒரு நீண்ட கட்டுரை குறை கூறியது. வாஷிங்கடனுக்கு கீழ்படிவதன் காரணமாக, இந்திய முதலாளித்துவம், தனது சொந்த நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கு, போர் தொடுப்பது உள்ளிட்ட விடயங்களில் தனது இராணுவத்தை பயன்படுத்தும் திறனை இழந்து வருவதாக இந்த கட்டுரை புலம்பத் தொடங்குகின்றது: “நாம்……. அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்காக நமது இராணுவத்தை அடகு வைக்கின்ற நிலையில்……….. அதன் போர் மற்றும் சமாதானத்தைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு மிகச் சிறிய தன்னாட்சி உரிமையை தான் வழங்குகிறோம்.”
எப்போதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு வெற்றாரவார வேடம் ஏற்கின்றபோதும், இந்திய-அமெரிக்க கூட்டணி குறித்த ஸ்ராலினிஸ்டுகளின் எதிர்ப்பானது ஏகாதிபத்திய போருக்கு எதிரான உண்மையான எதிர்ப்புடன் எந்த சம்பந்தமும் இல்லாதது, அது அனைத்து போட்டி முதலாளித்துவ வர்க்கங்களுக்கும், வலுவற்ற முதலாளித்துவ ஒழுங்கிற்கும் எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்படுவதை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.
CPM, இந்திய இராணுவத்தின் விரைவான விரிவாக்கம் உட்பட, இந்திய ஆளும் வர்க்கத்தின் மாபெரும் இலட்சியங்களை வெட்கமின்றி ஆதரிக்கின்றது. இந்தியாவின் இராணுவ வரவு செலவுத் திட்டம் 2001 ல் 11.8 பில்லியன் டாலர் மதிப்பிலிருந்தது ஐந்து மடங்கு உயர்ந்து, இன்று கிட்டத்தட்ட 56 பில்லியன் டாலர் மதிப்பாக உயர்ந்துள்ளது பற்றி அது எந்தவொரு விமர்சனமும் செய்யவில்லை.
டோக்லாம் எல்லைப் பிரச்சனை தொடர்பாக, அதனை போட்டி முதலாளித்துவ நாடுகளுக்கு இடையே சாதகமான மூலோபாய நலன்களுக்கான ஒரு பிற்போக்குத்தனமான போராட்டம் என்று கண்டனம் செய்யவில்லை. அதற்கு மாறாக, இராஜதந்திர பேரம்பேசல்கள் மூலமாகவும், மேலும், “சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் பூட்டான் முன் முயற்சி எடுக்க” அனுமதியளிப்பதன் மூலமாகவும் “இந்தியாவின் நலன்களை” முன்னெடுக்க வேண்டும் என்று பி.ஜே.பி. அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுகின்றது.
பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகள் தொடர்பாக, சீனாவுடனான தற்போதைய எல்லைப் பிரச்சனையில் “கட்டுப்பாட்டுடன்” இருக்க சிபிஎம் ஆலோசனை கூறுவதைப் போலவே கூறுகிறது. ஆனால் அது கடந்த செப்டம்பரில், மோடி உத்தரவின்படி பாகிஸ்தானுக்குள் சட்டவிரோத மற்றும் மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் இந்திய இராணுவம் நடத்திய சிறப்புப் படைகளின் தாக்குதல்களை பாராட்டுவதில், சிபிஎம் ஏனைய இந்திய ஸ்தாபகத்துடன் இணைந்துகொள்வதை தடுக்கவில்லை. கேரள முதலமைச்சர் மற்றும் சிபிஎம் அரசியல் குழு உறுப்பினருமான பினராயி விஜயனின் முன்முயற்சியில் இந்திய இராணுவத்தை ஆதரிக்கும் தீர்மானம் ஒன்றை மாநில சட்டமன்றம் இயற்றியது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய-அமெரிக்க கூட்டணியை எதிர்ப்பதாக கூறுவது, இந்திய ஸ்ராலினிஸ்டுகளை பி.ஜே.பி. ஐ எதிர்க்கும் பேரில் காங்கிரஸ் கட்சி மற்றும் பெரும்திரளான வலதுசாரி பிராந்திய மற்றும் சாதிக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை தடுக்கவில்லை, அவை அனைத்தும் அமெரிக்காவின் மூலோபாய செயற்பட்டியலில் இந்தியாவின் ஒருங்கிணைப்பை ஆதரிக்கின்றன.
தெற்காசியாவும், இந்திய பெருங்கடல் பகுதியும், பெரும் வல்லரசு மோதல் சூழலுக்குள் வருகின்றன என்பதற்கான சமீபத்திய எச்சரிக்கையாக மட்டுமே, இந்த சீன-இந்திய எல்லைப்பிரச்சனை உள்ளது. தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக மூச்சுத்திணறடிக்க போலியான சோசலிச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்வீச்சை பயன்படுத்தும் இந்திய முதலாளித்துவத்தின் ஒரு அரசியல் முகவராக சிபிஎம் ஐ அம்பலப்படுத்துவது போருக்கு எதிராக தெற்காசிய மக்களை அணிதிரட்டுவதற்கு அவசியமானது.