Print Version|Feedback
The guns of August
ஆகஸ்ட் துப்பாக்கிகள்
Alex Lantier
8 August 2017
இந்த கோடையின் இறுதி வாரங்களில், பத்தாயிரக் கணக்கான நேட்டோ மற்றும் ரஷ்ய சிப்பாய்கள் ஐரோப்பா எங்கிலும் அருகருகே போர் பயிற்சிகளில் பங்கெடுத்து கொண்டிருக்கிறார்கள். 1914 ஆகஸ்ட் துப்பாக்கிகள் ஐரோப்பாவில் முதலாம் உலக போர் வெடிப்பை அறிவித்து ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், உலகின் பிரதான அணுஆயுத சக்திகளுக்கு இடையே மோதல் வெடிப்பதற்கான பல்வேறு இராணுவ வெடிப்பு-புள்ளி நிலைமைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல் ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ், வடக்கு கடலில் "Saxon Warrior” ஒத்திகைக்காக பிரிட்டிஷ் போர்க்கப்பல்களின் ஒரு தாக்கும் குழுவுடன் இணைகிறது. இது, ஹங்கேரி, ருமேனியா மற்றும் பல்கேரியாவில் 25,000 நேட்டோ சிப்பாய்களை உள்ளடக்கிய கடந்த மாத "Saber Guardian” ஒத்திகையைத் தொடர்ந்து நடக்கிறது.
நேட்டோ துருப்புகள் கிழக்கு ஐரோப்பா எங்கிலும் இன்னும் அதிக ஒத்திகைகளில் இணைந்து வருகின்றன. ரஷ்ய எல்லைகளில், போலாந்து மற்றும் பால்டிக் நாடுகளில் இன்னும் ஆயிரக் கணக்கானவர்கள் நிலைநிறுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதோடு, ஒரு முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவில் "Noble Partner” ஒத்திகையில் 2,000 அமெரிக்க துருப்புகள் இணைந்துள்ளன. 2008 இல் அமெரிக்க-பின்புலத்துடன் ஜோர்ஜிய இராணுவத்தின் ஒரு தாக்குதல் அந்நாட்டின் வடக்கில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய அமைதிப்படை சிப்பாய்களை கொன்றதும், ரஷ்யா மற்றும் ஜோர்ஜியாவிற்கு இடையே ஒரு சிறிய போர் தூண்டிவிடப்பட்டிருந்தது, அதற்குப் பின்னர் இது ஜோர்ஜியாவில் நடக்கும் மிகப்பெரிய அமெரிக்க ஒத்திகையாகும்.
இதற்கிடையே, கியேவில் நேட்டோ-ஆதரவிலான பெப்ரவரி 2014 ஆட்சிக்கவிழ்ப்பு சதியிலிருந்து மேலெழுந்த அதிவலது அதிதீவிர-தேசியவாத உக்ரேனிய ஆட்சியை ஆயுதமயப்படுத்தலாமா என்பது குறித்து வாஷிங்டனில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா இந்த கொள்கையை முதன்முதலில் 2015 இல் முன்மொழிந்தது என்றாலும், இந்த தீவிரப்படுத்தல் ரஷ்யாவுடன் முற்றுமுதலான போரைத் தூண்டும் என்று எச்சரித்து, ஜேர்மனியும் பிரான்சும் மின்ஸ்கில் ஒரு சமாதான உடன்படிக்கையை பேரம்பேசிய பின்னர் அதை அது கைவிட்டது.
மாஸ்கோ அதன் சொந்த போர் சாகசங்களை நடத்தி கொண்டிருக்கிறது. சீனாவின் ஏவுகணைகளைக் குறிவைத்து தாக்கும் சிறுபோர்க்கப்பல்களுடன் பால்டிக் கடலில் கூட்டு கடற்படை ஒத்திகைகளை நடத்திய பின்னர், அது, சீனா, ஈரான், எகிப்து, அங்கோலா, உஜ்பெகிஸ்தான், வெனிசூலா மற்றும் சிம்பாப்வே போன்ற நாடுகளின் படைகளுடன் சேர்ந்து அதன் சர்வதேச இராணுவ பயிற்சிகளை நடத்தி கொண்டிருக்கிறது. அது மேற்கு ரஷ்யாவில் அடுத்த மாதம் Zapad பயிற்சிக்கும் தயாரிப்பு செய்து வருகிறது, இதில் ஏறத்தாழ 100,000 துருப்புகள் ஈடுபடக்கூடுமென நேட்டோ ஆதாரநபர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னொருபோதும் இல்லாதளவிற்கு, பனிப்போர் முடிந்த பின்னர் மிகப்பெரியளவில் உள்ள இந்த போர் ஒத்திகைகளின் அளவு, ஓர் அரசியல் எச்சரிக்கையாகும். நேட்டோ கூட்டணியின் இராணுவ குவிமையமானது, மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பாவிற்கு நகர்ந்து வருகிறது. உயர்-நுட்ப எதிரிகளுடனான போருக்கு தயாராவதற்காக, அமெரிக்காவும் நேட்டோவும், தளவாடங்கள் மற்றும் மூலோபாயங்களில் "பரந்தளவிலான" மாற்றங்களைச் செய்து வருவதாக நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. ஐரோப்பிய நிலப்பகுதிகளுக்கு ஏற்ற வகையில் அவற்றின் டாங்கிகளை பாலைவன நிறத்திலிருந்து கரும்பசுமை நிறத்திற்கு மாற்றி வண்ணமிடுவதும் இதில் உள்ளடங்கும்.
அரசியல் மற்றும் இராணுவ சதிக்கூட்டங்கள், பெருந்திரளான மக்களின் முதுகுக்குப் பின்னால், கடந்த நூற்றாண்டு உலக போர்களுக்கு ஒத்த, அல்லது அவற்றை விட இரத்தந்தோய்ந்த, மோதல்களுக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன. அமெரிக்க தளபதி ஜோன் ஹீலி அறிவிக்கையில், “ஓர் ஒருங்கிணைந்த உலகளாவிய ஒத்திகையில் ஒரே மாதிரியான தொனியில் … இதன் விளைவாக நாங்கள் ஓர் உலகளாவிய ஒருங்கிணைந்த ஒத்திகை திட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்,” என்றார். ஆனால் கொரிய தீபகற்பம், தென் சீனக்கடல் மற்றும் மத்திய கிழக்கு பயிற்சிகளுடன் இந்த "உலகளாவிய ஒத்திகை" எதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது? இந்த "உலகளாவிய ஒத்திகை" என்பது உலகளாவிய போருக்கான ஒரு வெள்ளோட்டமாகும்.
உலகப் போர் எதை அர்த்தப்படுத்தும் என்பதன் மீது உத்தியோகபூர்வ வட்டாரங்களில் ஒரு காதடைத்த மவுனம் மேலோங்கியுள்ளது. எவ்வாறிருப்பினும், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்யா எங்கிலுமான நகரங்களில் அணுகுண்டுகள் வெடிக்கக்கூடிய ஒரு போரில், பில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படுவார்கள் என்பது மட்டும் உண்மை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பெருந்திரளான தொழிலாளர்களிடையே போர் மற்றும் இராணுவ செலவுகளுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது என்பதால், அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகமோ, உக்ரேனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு மற்றும் அமெரிக்க தேர்தல்களின் ரஷ்ய களவாடல் என்று முடிவில்லா, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களில் பொதுமக்களை மூழ்கடித்து, பீதியூட்டவும் மற்றும் ஒரு போர் காய்ச்சலை முடுக்கிவிடவும் சுழன்று கொண்டிருக்கின்றன.
இந்த போர் சாகசங்கள், உள்நோக்கத்துடனோ அல்லது தற்செயலாகவோ போராக தீவிரமடையும் ஆபத்தை முன்னிறுத்துகின்றன என்பதை இராணுவ அதிகாரிகளே ஒப்புக் கொள்கின்றனர். இருப்பினும், நேட்டோ நாடுகளது ஊடகங்கள் இதையும் கூட ரஷ்ய-விரோத விஷம பிரச்சாரமாக மாற்றி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றன. ரஷ்யாவின் Zapad ஒத்திகையைத் தாக்கும் ஒரு கட்டுரையில், MSN.com எழுதுகையில், “கூட்டணியின் அல்லது ரஷ்யாவின் ஒரு சிப்பாய், தவறுதலாக ஒரு பயிற்சியை ஒரு ஆக்ரோஷ நடவடிக்கையாக புரிந்துகொள்வது போன்ற பிழை ஏற்பட்டு ஏதேனுமொரு தரப்பு படைகளைக் கொண்டு விடையிறுத்தால், அது விரைவிலேயே ஒரு நெருக்கடியாக தீவிரமடைந்துவிடக்கூடும் என்பதன் விளிம்பில் பல அதிகாரிகள் உள்ளனர் … ரஷ்ய பயிற்சியின் போது நேட்டோ படைகள் ரஷ்ய எல்லைகளுக்கு அருகில் ஒத்திகைகளை நடத்துவதைத் தவிர்க்கும்,” என்று குறிப்பிட்டது.
போர் அபாயத்திற்கு மாஸ்கோ தான் பொறுப்பு என்ற வாதங்கள், ஏகாதிபத்திய பாசாங்குத்தனத்தைக் கொண்டுள்ளன. ரஷ்யா அதன் சொந்த மண்ணில் ஒத்திகைகளை நடத்தி வருகின்றது, அதேவேளையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்ய எல்லைகள் வரை அவற்றின் துருப்புகளை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.
விரிவாக்கலும், போர் அபாயமாயமும், 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு பிந்தைய கால்-நூற்றாண்டையும் விட அதிகமான காலத்தில், நேட்டோ சக்திகள், அனைத்திற்கும் மேலாக அமெரிக்கா, பின்பற்றிய கொள்கைகளில் வேரூன்றியுள்ளது. ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் அதற்கு அப்பாலும் அமெரிக்கா தலைமையிலான போர்களைக் கொண்டு, வாஷிங்டன் யுரேஷிய பெருநிலப்பகுதியில் அதன் மேலாதிக்கத்தை நிறுவ முனைந்தது. அது யுரேஷியா மீதான மேலாதிக்கத்தில் ஒரு போட்டி அதிகாரம் உருவாவதைத் தடுப்பதை மட்டும் நோக்கமாக கொண்டிருக்கவில்லை, மாறாக ஐரோப்பா மற்றும் ஆசியாவில் அதன் "கூட்டாளிகளது" வர்த்தக பாதைகள் மற்றும் எரிசக்தி வினியோகங்களை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டிருந்தது.
ரஷ்யாவிற்கு எதிரான இப்போதைய தீவிரப்படல், அத்தகைய போர்களில் அமெரிக்காவின் தொடர்ச்சியான பேரழிவுகரமான பின்னடைவுகளின் விளைவாகும். சிரியாவில் ரஷ்ய-ஆதரவிலான ஆட்சிக்கு எதிராக வாஷிங்டனும் நேட்டோவும் தூண்டிவிட்ட உள்நாட்டு போரில், அதன் இஸ்லாமிய பினாமி படைகள் அவற்றின் தோல்வி நெருங்கி வந்து கொண்டிருப்பதை முகங்கொடுக்கின்றன, நேட்டோ-ஆதரவிலான கியேவ் ஆட்சியோ, ஒட்டுமொத்த நாட்டையும் கைப்பற்றுவதில் தோல்வி அடைந்துள்ளதுடன், ரஷ்ய மொழி பேசும் கிழக்கு உக்ரேன் மற்றும் கிரிமியாவின் செவஸ்டோபோலில் அமைந்துள்ள முக்கிய ரஷ்ய கடற்படை தளம் மீது நடைமுறையளவில் கட்டுப்பாட்டையும் இழந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே பொருளாதார போட்டியாளர்கள் அதிகரித்து வருவதற்கு இடையே, இந்த பின்னடைவுகள் ஜேர்மனி தலைமையில் ஐரோப்பிய சக்திகளை ஒரு சுதந்திரமான, ஆனால் முக்கியமாக விரோதமான, வெளியுறவு மற்றும் இராணுவ கொள்கையை பின்தொடர்வதற்கு அவற்றை ஊக்குவித்துள்ளது.
ரஷ்யாவிற்கு எதிராக வாஷிங்டன் அதன் நிலைப்பாட்டை பலப்படுத்தவும் மற்றும் ரஷ்ய-விரோத அடிப்படையில் குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் அதன் கூட்டாளிகளை வென்றெடுப்பதன் மூலமாக ஐரோப்பாவை உடைக்கவும் இருவிதத்திலும் வாஷிங்டன் முயன்று வருகையில், மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த யூரோ-அமெரிக்க மோதல்கள் ட்ரம்பின் எக்குத்தப்பான தனிமனித குணாம்சங்களில் வேரூன்றியதல்ல, மாறாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு இடையிலான புறநிலை மோதலில் வேரூன்றியுள்ளது. கடந்த மாதம், ஐரோப்பாவிற்கான முக்கிய ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிகளை வெட்டியும், மற்றும் ரஷ்யாவுடன் எரிவாயு வர்த்தகம் மேற்கொள்ளும் மேற்கு ஐரோப்பிய பெருநிறுவனங்கள் மீது நிதி அபராதங்கள் விதிக்கப்படுமென அச்சுறுத்தியும், தடையாணைகளை நிறைவேற்றியது ட்ரம்ப் அல்ல மாறாக அமெரிக்க காங்கிரஸ் ஆகும், இது ஜேர்மனி மற்றும் ஏனைய அமெரிக்க "கூட்டாளிகளிடம்" இருந்து கோபமான எதிர்ப்பைக் கொண்டு வந்தது.
சோவியத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ செல்வந்த தன்னலக்குழுக்களின் திவாலான ரஷ்ய தேசியவாதத்தில் வேரூன்றிய கிரெம்ளின் கொள்கை, ஏகாதிபத்திய போர் முனைவை எதிர்ப்பதில் எந்த முன்னோக்கிய பாதையும் வழங்கவில்லை. கிரெம்ளின், சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் நிலவும் போர்-எதிர்ப்புணர்வுக்கு முறையிட பயந்தும், தகைமையின்றியும், அதற்கு பதிலாக ரஷ்யாவுக்குள் வலதுசாரி சக்திகளை மற்றும் இனப் பதட்டங்களை கிளறிவிட்டு கொண்டிருக்கிறது. அது ஏகாதிபத்திய சக்திகளுடன் முழுமையான இராணுவ மோதல் அபாயத்தை முன்னெடுப்பதற்கும் மற்றும் அவற்றுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்குமான முயற்சியில் அடிபணிவதற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது, இந்நிலையில் தான் சமீபத்தில் அது வட கொரியாவிற்கு எதிராக ஐ.நா. தடையாணைகளுக்கு வாக்களித்திருந்தது.
எதிர்விரோத போட்டி முதலாளித்துவ அரசுகள், ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்த அவற்றின் அரசியல் முன்னோடிகளைப் போலவே, உலக போருக்கு இட்டுச் செல்லும் ஒரு இயக்கவியலை நடைமுறைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றன, ஆனால் இம்முறை, பூமியையே அழித்துவிடக்கூடிய அணுஆயுத பயன்பாடு இதில் சம்பந்தப்பட்டுள்ளது. அரசியல்ரீதியில் தொழிலாள வர்க்கத்தின் நனவுபூர்வமான தலையீடு இல்லாமல், இங்கே போரை நிறுத்துவதற்கு வேறெந்த வழியும் கிடையாது. இந்த வெடிப்பார்ந்த நிலைமை முன்னிறுத்தும் அபாயங்கள் குறித்து பெருந்திரளான மக்கள் உண்மையிலேயே ஒன்றும் அறியாமல் இருக்கிறார்கள் என்பது தான் மிகப்பெரும் அபாயமாகும்.
இந்நிலைமைகளின் கீழ் தான், போர் குறித்த தேடல் முடிவுகளில் இருந்து WSWS கட்டுரைகளை நீக்கி, இடதுசாரி, சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு வலைத் தளங்களையும், அவற்றில் முதலாவதாக உலக சோசலிச வலைத் தளத்தையும், கூகுள் தணிக்கை செய்து வருகிறது. முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு முன்னோக்குடன் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில் WSWS ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைக்க வேண்டியதன் அவசரத்தை வலியுறுத்துவதுடன், இதனால் தான் தணிக்கை மற்றும் போரை எதிர்க்கும் அதன் ஆவணங்களை பரப்புவதில் அதன் வாசகர்களின் செயலூக்கமான ஆதரவைக் கோருகிறது.