Print Version|Feedback
One week after Charlottesville
Big business, military tighten their grip on Washington
சார்லட்வில் சம்பவங்களுக்கு ஒருவாரத்திற்குப் பின்னர்
பெருவணிகங்களும், இராணுவமும் வாஷிங்டன் மீது அவற்றின் பிடியை இறுக்குகின்றன
Patrick Martin and Joseph Kishore
21 August 2017
பல சமயங்களில், சம்பவங்களின் விளைவே அரசியல் நிகழ்வுகளின் அடித்தளத்தில் இருக்கும் இன்றியமையா பிரச்சினைகளை அம்பலப்படுத்திவிடும். சார்லட்வில் நாஜி அட்டூழியம் மீது ஆளும் வர்க்கத்தினுள் வெடித்த மோதல்களில், இது உண்மையாகி உள்ளது. இது ட்ரம்பின் தலைமை மூலோபாயவாதி ஸ்டீபன் பானனை வெள்ளியன்று பதவிநீக்குவதில் போய் முடிந்தது.
பெருநிறுவன கட்டுப்பாட்டிலான ஊடகங்கள், சம்பவங்களின் தொடர்ச்சியை முற்றிலுமாக இனரீதியிலான வார்த்தைகளில் சித்தரிக்க முனைந்துள்ளன, பானனும் மற்றும் "வெள்ளையின தேசியவாதத்தின்" ஏனைய ஆலோசகர்களும் இப்போது நீக்கப்பட்டு, வெள்ளை மாளிகை மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் அரசியல் கட்டுப்பாடு ஒரேசீரான அதிக "மிதவாத" அரசியல் கரங்களிடம் விடப்பட்டுள்ளது: அதாவது, வெள்ளை மாளிகை முப்படைகளின் தலைமை தளபதி ஜோன் கெல்லி தலைமையில் தளபதிகள் மற்றும் முன்னாள்-தளபதிகளின் ஒரு குழு, அத்துடன் ட்ரம்பின் தலைமை பொருளாதார ஆலோசகர் கேரி கோஹ்ன், மற்றும் நிதித்துறை செயலர் ஸ்டீவன் மினுசின் போன்ற வோல் ஸ்ட்ரீட் நிதியாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்பதாக குறிப்பிடுகின்றன.
நியூ யோர்க் டைம்ஸ் ஞாயிறன்று ஒரு தலையங்கத்தில், “அரசியலமைப்புரீதியிலும் அரசியல்ரீதியிலும் படைத்துறைசாராத தலைமையைக் காணப் பழகிய அமெரிக்கர்கள், திரு. ட்ரம்ப் முற்றிலுமாக தடம் விலகாமல் இருப்பதைத் தடுப்பதற்கு, இப்போது மூன்று நடப்பு மற்றும் முன்னாள் தளபதிகளான வெள்ளை மாளிகையின் புதிய முப்படைகளின் தலைமை தளபதி ஜோன் கெல்லி; தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச். ஆர். மெக்மாஸ்டர்; பாதுகாப்புத்துறை செயலர் ஜிம் மாட்டிஸ் ஆகியோரை சார்ந்திருக்க வேண்டியவர்களாக தங்களைக் காண்கிறார்கள். அனுபவம் மிக்கவர்கள் மற்றும் படித்தவர்கள், உலகளாவிய மோதலில் விலைகொடுக்க வேண்டிய கொடூரங்களை நன்குணர்ந்தவர்கள், திரு.ட்ரம்பிடம் இல்லாத பொதுமக்களுக்கான சேவையை நோக்கி ஒரு தூண்டலால் உந்தப்பட்டவர்கள். இம்மூன்று நபர்களும் அவரது மோசமான உள்ளுணர்வுகளை அடக்கிவைப்பார்கள் என்று நம்பப்படுகிறது,” என்று குறிப்பிட்டு வழி காட்டுகிறது.
டைம்ஸின் அதே பதிப்பில், ஒரு செய்தி பகுப்பாய்வு எதை “பெருநிறுவன அமெரிக்காவின் தார்மீக குரல்" என்று தலைப்பிட்டு அழைக்கிறதோ அதை கொண்டாடுகிறது. இவ்விடயத்தில், “வெறுப்பு குழுக்களை கண்டிக்கவும், சகிப்புத்தன்மையையும் அரவணைப்பையும் அடையாளம் காட்ட கடந்த வாரம் பெருவணிக தலைவர்களிடம் இருந்து ஓர் ஒருமித்த குரல் எழுந்தது” என குறிப்பிட்டது.
இந்த "தார்மீக" தலைவர்களின் "ஒருமித்த குரலின்" பாகமாக இருந்தவர்களின் பெயர்களில், 2008 நிதியியல் பொறிவுக்கு பொறுப்பானவைகளில் ஒன்றான JPMorgan Chase இன் ஜேமி டெமன் (Jamie Dimon); நூறாயிரக் கணக்கானவர்களைக் பலி கொண்ட இயக்கும் ஆளியின் (ignition switch) கோளாறை மூடிமறைப்பதை மேற்பார்வையிட்ட ஜெனரல் மோட்டார்ஸின் மேரி பர்ரா (Mary Barra); மற்றும் குறைந்த-கூலி சுரண்டலுக்கு ஒரு சம அர்த்தமாக விளங்கும் நிறுவனம் வால்மார்ட் இன் தலைமை செயலதிகாரி டொக் மெக்மில்லன் (Doug McMillon) போன்ற பெருநிறுவன குற்றவாளிகளின் பெயர்களும் உள்ளடங்கி இருந்தன.
சார்லட்வில்லில் கலகம் செய்த நவ-நாஜிக்களைப் பாதுகாக்கும் ட்ரம்பின் அஜாக்கிரதையான கருத்துக்களை ஆளும் உயரடுக்கு, வெளிநாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கும் உள்நாட்டில் சமூக மற்றும் அரசியல் ஸ்திரப்பாட்டைப் பேணுவதற்கும் ஒரு அச்சுறுத்தலாக பார்த்தது. பெருநிறுவன வரி வெட்டுக்கள், பெருவணிக நெறிமுறை தளர்த்தல், உள்கட்டமைப்பு சீர்திருத்தம் என்ற போர்வையில் இலாப கொழிப்பு, மருத்துவ சிகிச்சை மானியம் (Medicaid) மற்றும் ஏனைய சமூக திட்டங்களின் வெட்டுக்கள் கொண்ட ட்ரம்ப் திட்டநிரலில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து சக்தி வாய்ந்த பெருநிறுவன நலன்கள் அஞ்சின.
நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு பாசிசவாத அடித்தளத்தைக் கட்டமைக்கும் அவரது முயற்சியை ட்ரம்ப் தாமாகவே அம்பலப்படுத்தியமை, 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் கட்டமைந்துள்ள, ஓர் ஊகவணிக குமிழி பொறிவின் அபாயம் குறித்து நிதியியில் வட்டாரங்களில் பதட்டங்களை அதிகரித்தது.
அமெரிக்க வரலாற்றில் முன்பில்லாத அளவில் அரசு மீது இராணுவம் மற்றும் பெருநிறுவன அமெரிக்காவின் பிடியை அதிகரிக்க வேண்டுமென்பதே தெளிவாக டைம்ஸ் முன்வைக்கும் விடையிறுப்பாகும். 1961 இல் ஜனாதிபதி ட்வைட் டி. ஐசனோவரின் விடைபெறும் உரையில், “இராணுவ-தொழில்துறை கூட்டு" அதிகரிப்பதால் ஜனநாயகம் எதிர்நோக்கும் அபாயங்கள் குறித்து அவர் எச்சரித்து 56 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைய இந்த பரந்த இராணுவம்/உளவுத்துறை/பெருநிறுவன கூட்டு தற்போது அனுபவிக்கும் செல்வாக்கின் அளவு, பலம் மற்றும் விதம் குறித்து அவர் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்.
இந்த ஒன்றுதிரள்வின் முதல் விளைவு தான், ஆப்கானிஸ்தானில் போரை விரிவாக்குவதற்கான திட்டங்களை வெளியிட்டு, ட்ரம்ப் இன்றிரவு நாடுதழுவிய ஓர் உரை வழங்குவார் என்ற அறிவிப்பு.
அனைத்திற்கும் மேலாக ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறைக்கும் தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் எதிர்ப்பு குறித்து ஆளும் உயரடுக்கு அஞ்சுகிறது. இதனால் தான், மக்கள்தொகையில் மிக வறிய அரைவாசி மக்களின் செல்வவளம் அளவுக்கு 20 தனிநபர்கள் செல்வவளத்தைக் குவித்துக் கொண்டுள்ள ஒரு நாடான அமெரிக்காவின் சமூக வாழ்க்கை யதார்த்தம் குறித்தும், அத்துடன் ட்ரம்ப் நிர்வாகத்தின் பிற்போக்குத்தனமான திட்டநிரல் குறித்தும் கூட, ஊடகங்கள் முன்வைக்கும் உத்தியோகபூர்வ சொல்லாடலில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. ஈராக்கின் ஃபல்லூஜா நகரை அழிப்பதில் அவர் வகித்த பாத்திரத்திற்காக "Mad Dog" என்ற அடைமொழி பெற்ற மாட்டிஸ் போன்ற "பொறுப்பான" தலைவர்கள் செய்யும் குற்றங்கள் குறித்தோ மற்றும் போர் மீதோ கூட அங்கே எந்த விவாதமும் இருப்பதில்லை.
அமெரிக்கா இனவாத சகிப்புத்தன்மையின்றி கொந்தளித்து கொண்டிருக்கும் ஒரு நாடாக, நவ-நாஜி மற்றும் இனவாத சக்திகளின் பலம் மற்றும் செல்வாக்கு குறித்த மிகைப்படுத்தப்பட்ட சித்திரத்துடன் முற்றிலும் திரிக்கப்பட்ட ஒரு முன்நிறுத்தலை மையப்படுத்தி, தொடர்ச்சியாக ஒரு வேறுபட்ட பிரச்சினைகளைக் கொண்டு இது பிரதியீடு செய்யப்படுகிறது. இதன் காரணமாய் எங்கும் பரவியுள்ள ஜனநாயகக் கட்சியுடன் அணி சேர்ந்த ஊடகங்களில், வெளிப்படையாகவே முரண்பாடான ஆனால் உண்மையில் ஒன்றோடொன்று பொருந்திய போக்குகள் தோன்றுகின்றன. அதாவது அடையாள அரசியலின் ஊக்குவிப்புடன் சேர்ந்து சார்லட்வில்லில் ஆர்ப்பாட்டம் செய்த வெள்ளையின மேலாதிக்கவாத குண்டர்களை மதிப்புடனும் மற்றும் ஆச்சரியத்துடனும் அவை சித்தரித்து காட்டுகின்றன.
“அமெரிக்காவில் வெள்ளையின மேலாதிக்கம்,” என்று தலைப்பிட்டு நியூ யோர்க்கரில் ஞாயிறன்று வெளியான ஒரு செய்தியிதழ் இதற்கு சரியான உதாரணமாக இருந்தது. ஒபாமாவின் மிகைமதிப்பிட்ட வாழ்க்கை சரிதமான The Bridge எனும் நூலின் ஆசிரியர் டேவிட் ரெம்நிக்கின் ஓர் அறிமுகத்தில், “தவறிழைக்காதீர்: நவ-நாஜிக்களும் வெள்ளையின மேலாதிக்கவாதிகளும் இப்போது அமெரிக்க அரசியல் முன்முகப்பில் உள்ளனர்" என்று அறிவித்தார்.
“ஐரோப்பாவின் எந்தவொரு தேசத்தையும் போலன்றி, ஐக்கியப்படுத்தும் சக்தியாக அமெரிக்கா வெள்ளையினத்தைப் பற்றியுள்ளது,” என்று வலியுறுத்துகின்ற, “அமெரிக்காவை மீண்டும் வெள்ளை இனத்தவருக்காக மாற்றுவோம்" என்று தலைப்பிட்ட டோனி மொரிசனின் கட்டுரை, முக்கிய கட்டுரைகளில் ஒன்றாக இருந்தது. ஜனநாயக கட்சியினது மற்றும் தனிச்சலுகை கொண்ட நடுத்தர வர்க்கத்தின் போலி-இடது அமைப்புகளில் உள்ள அதன் பல்வேறு அடிவருடிகளது அதே போக்கில், மொரிசனும், ட்ரம்ப் தேர்வானதை "வெள்ளையின அமெரிக்காவின்" இனவாதத்தின் விளைவாக விளக்குகிறார்:
தேர்தல் நாளன்று, ஏன் இந்தளவு ஆர்வத்துடன் பல வெள்ளையின வாக்காளர்கள், குறைவாக படித்தவர்களும் சரி நன்கு படித்தவர்களும் சரி, டொனால்ட் ட்ரம்ப் விதைத்த வெட்கக்கேட்டை மற்றும் அச்சத்தை தழுவினர். கருப்பினத்தவர்களுக்கு வீட்டை வாடகைக்கு கொடுக்காததற்காக நீதித்துறை அந்த வேட்பாளரின் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தது. பராக் ஒபாமா அமெரிக்காவில் பிறந்தாரா என்று வினவிய அந்த வேட்பாளர், ஒரு பிரச்சார பேரணியில் Black Lives Matter போராட்டக்காரர் ஒருவரை அடித்த பின்னரும் மன்னித்துவிட்டதாக தெரிந்தது. அவரது காசினோ இடங்களில் இருந்து கருப்பின தொழிலாளர்களை அந்த வேட்பாளர் விலக்கி வைத்திருந்தார். டேவிட் டூக் ஆல் நேசிக்கப்படும் அந்த வேட்பாளர், Ku Klux Klan ஆல் ஆமோதித்து ஏற்றுக் கொள்ளப்படுகிறார்.
வெள்ளையினத்தவர்கள் அனைவரையும், குறிப்பாக வெள்ளையின ஆண்களை, KKK இன் இரகசிய ஆதரவாளர்களாக சித்தரிக்கும் இந்த முயற்சி ஓர் அரசியல் மோசடியாகும். இனவாதம் இருக்கிறது தான். ஆனால், சார்லட்வில்லில் அணிவகுத்த வெள்ளையின மேலாதிக்கவாதிகள் மற்றும் நவ-நாஜிக்கள் ஒரு சிறிய சிறுபான்மையினர், அவர்கள் பரந்த பெரும்பான்மை உழைக்கும் மக்களால் ஆழ்ந்த மனக்குமுறலுடன் பார்க்கப்படுகிறார்கள். ஒரு நாடுதழுவிய அணிதிரட்டல் இந்த காட்டுமிராண்டித்தனமான சித்தாந்தத்தின் ஒரு சில நூறு ஆதரவாளர்களை மட்டுமே ஈர்த்திருந்தது. இதற்கிடையே, ட்ரம்ப் மற்றும் அவர் பாதுகாக்கும் பாசிசவாதிகள் இருவரையும் கண்டிக்க எல்லா இனத்தையும் சேர்ந்த பத்தாயிரக் கணக்கானவர்கள் அணிவகுத்து வந்தனர்.
ட்ரம்ப் இன்று ஜனாதிபதியாக இருக்கிறார் என்றால், அது இனவாதத்திற்கு வழங்கப்பட்ட பாரிய வாக்குகளின் காரணமாக அல்ல, மாறாக வோல் ஸ்ட்ரீட் க்கும் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்திற்கும் இடையிலான கூட்டணியின் ஆளுருவாக உள்ளவரும், உயிர்பிழைக்கவே போராடிவரும் பத்து மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் அவலநிலையைக் குறித்து தமது மெத்தனமான அவமதிப்பை மூடிமறைக்க கூட முயலாதவருமான ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜனநாயகக் கட்சியை விட ட்ரம்ப் வெற்றிகரமாக அதிகளவில் சமூக அதிருப்திக்கு முறையிட்டார் என்பதனாலேயே ஆகும்.
மக்களின் பெரும் பிரிவுகளுக்கு பூதாகரமாக காட்டுவதற்கும், தனிச்சலுகை கொண்ட நடுத்தர வர்க்கத்தின் அடையாள அரசியலுக்கு முட்டுக்கொடுக்கவும், பாரிய செல்வவளத்தை பணக்காரர்களுக்கு கைமாற்றியதற்கு அரசியல் மூடுமறைப்பை வழங்குவதற்கும், நடைமுறையளவில் தளபதிகள் மற்றும் பெருநிறுவன பில்லியனர்களின் அரண்மனை ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஆதரவை அணிதிரட்டவும், மற்றும், அனைத்திற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தை ஒடுக்கவுமே இனவாத சொல்லாடல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஜனநாயக உரிமைகளுக்கு மேலோங்கிய அச்சுறுத்தல்கள், விரல்விட்டு எண்ணக்கூடிய பாசிசவாத குண்டர்களிடம் இருந்தல்ல, மாறாக வீதிகளில் இறங்கியுள்ள இனவாதிகளுக்கு மாற்று மருந்தாக கொண்டு வரப்படும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் பென்டகனின் கூட்டணியிடம் இருந்து வருகிறது.
டைம்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பல்வேறு துணை அமைப்புகளை பொறுத்த வரையில், நிஜமான அச்சுறுத்தல் நவ-நாஜிக்களிடம் இருந்து அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்திலிருந்து வருவதாக அவர்கள் காண்கிறார்கள்.
இனவாத அரசியலை ஊக்குவிப்பதும் மற்றும் அரசு மீதான இராணுவ-பெருநிறுவன கட்டுப்பாட்டை இறுக்குவதும், எதிர்ப்பு கண்ணோட்டங்களை, அனைத்திற்கும் மேலாக உலக சோசலிச வலைத் தளத்தை ஒடுக்குவதுடன் கைகோர்த்து செல்கிறது. தேடல் முடிவுகளில் மோசடி செய்வதன் மூலமாக WSWS ஐ தணிக்கை செய்ய மற்றும் இருட்டடிப்பு செய்ய, அரசுடன் நெருக்கமாக இணைந்து, இதற்காக தான் கூகுளால் அந்த முடிவு எடுக்கப்பட்டது. இது பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் கொள்கைகளுக்கு எதிரான சோசலிச எதிர்ப்பை இலக்கில் வைத்த இன்னும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்கு வெள்ளோட்டமாகும்.
கட்டுரையாளர்கள் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரை:
அரண்மனை சதியா அல்லது வர்க்கப் போராட்டமா: வாஷிங்டனின் அரசியல் நெருக்கடியும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமும்
[13 June 2017]