Print Version|Feedback
Google’s chief search engineer legitimizes new censorship algorithm
கூகுளின் தேடல் பிரிவு தலைமை பொறியாளர் புதிய தணிக்கை அல்காரிதத்தை நியாயப்படுத்துகிறார்
By Andre Damon
31 July 2017
பெருநிறுவன மற்றும் அரசு-கட்டுப்பாட்டிலான ஊடகங்களில் இருந்து சுயாதீனமாக செயல்படும் இணைய வலைத் தளங்களை பொதுமக்கள் அணுகுவதைக் கடுமையாக தடுக்கும் வகையில், ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே, கூகுள் அதன் தேடுபொறியில் ஒரு மிகப்பெரிய மாற்றம் செய்தது. அந்த மாற்றங்கள் செய்யப்பட்டதில் இருந்து, கூகுள் தேடல்கள் மூலமாக பல இடதுசாரி, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்களை அணுகும் எண்ணிக்கையில் ஒரு கூர்மையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கூகுள் வழியாக உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) அணுகும் எண்ணிக்கை, வெறும் ஒரு மாதத்தில், 70 சதவீத வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
கூகுளின் தேடல் பிரிவு தலைமை பொறியாளர் பென் கோம்ஸ் (Ben Gomes), ஏப்ரல் 25 இல் பதிவிட்ட ஒரு வலைப் பதிவில், ஓர்வெல்லியன் தலைப்பை போன்று, “தேடல்களுக்கான நமது சமீபத்திய தர மேம்பாடுகள்" என்று தலைப்பிட்ட ஒரு அறிக்கையில் புதிய தணிக்கை திட்டத்தை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை நடைமுறையளவில் பெருநிறுவன ஊடகங்களால் புதைக்கப்பட்டு விடப்பட்டது. நியூ யோர்க் டைம்ஸோ அல்லது வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலோ அந்த அறிக்கை குறித்து எழுதவேயில்லை. வாஷிங்டன் போஸ்ட் ஒரேயொரு வலைப்பதிவுடன் அந்த அறிக்கை குறித்த செய்தியை மட்டுப்படுத்திக் கொண்டது.
வெறும் தொழில்நுட்ப நெறிமுறை மாற்றம் என்பதாக குறிப்பிட்ட கோம்ஸின் அறிக்கையானது, "அப்பட்டமாக தவறான வழிகாட்டல் வழங்கும், தரங்குறைந்த, அத்துமீறிய அல்லது முற்றிலும் பொய் தகவல்களைப் பரப்புவதற்கு பங்களிப்பு செய்யும் வலைத்தள உள்ளடங்கங்கலான 'போலி செய்திகளின்' நிகழ்வுபோக்குக்கு" ஒரு அவசியமான விடையிறுப்பாக, இணைய தணிக்கையை நியாயப்படுத்தியது.
“'போலி செய்திகளின்' நிகழ்வுபோக்கு" என்பதே, 2017 இன் பிரதான "போலி செய்தி" ஆகும். அரசு மற்றும் பெருநிறுவன நலன்களுக்கு எதிரான இடதுசாரி எதிர்ப்பாளர்களை மதிப்பிழக்க செய்யும் நோக்கில், சிஐஏ இன் "தவறான தகவல்" பிரச்சாரங்கள் என்று எது அழைக்கப்பட்டதோ அவ்வகையான நன்கறியப்பட்ட குணாம்சங்கள் அனைத்தையும், இதன் தோற்றுவாய் மற்றும் பரப்பப்படும் முறையில் இது கொண்டுள்ளது.
“போலி செய்திகள்,” “அப்பட்டமாக தவறாக வழிநடத்தும் கருத்துக்கள்,” “தரங்குறைந்த,” “அத்துமீறிய,” மற்றும் "முற்றிலும் பொய் தகவல்,” என்ற சுமையேறிய சொற்களுக்கு, கோம்ஸ் எந்தவொரு உறுதியான உதாரணங்களும் வழங்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், எந்தவொரு தெளிவான வரையறையும் கூட அவர் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கூகுளின் புதிய தணிக்கை அல்காரிதம், அரசாங்க மற்றும் பெருநிறுவனங்களின் உத்தியோகபூர்வ கதையாடல்களுக்கு சவால் விடுக்கும் அரசியல் செய்திகள் மற்றும் கருத்துக்களை கொண்ட தளங்கள் மீது ஒருங்குவிந்துள்ளது. கோம்ஸ் எழுதுகிறார்: “[எ]ங்களது அன்றாட பயன்பாட்டில், சில சொற்களின் தேடல்கள் (சுமார் 0.25 சதவீதம்), மக்களுக்கு வேண்டாத, அத்துமீறிய அல்லது தவறாக வழிநடத்தும் கருத்தை தெளிவாக வழங்கும் தகவல்களுக்கு இட்டு செல்கின்றன என்பது மிகவும் வெளிப்படையாக உள்ளது.”
பல்வேறு வலைத் தள டொமைன்களின் "தரத்தை" ஆராய்ந்தறிய கூகுள் சுமார் 10,000 “மதிப்பீட்டாளர்களை" நியமித்திருப்பதாக கோம்ஸ் தெரிவித்தார். “கூகுளின் தேடல் முடிவுகளின் தரங்களை மதிப்பீடு செய்து, எங்கள் பரிசோதனைகளை குறித்து மதிப்பீடுகளை தரும் நிஜமான மனிதர்களான மதிப்பீட்டாளர்களை" நிறுவனம் கொண்டுள்ளது. தேடல் பிரிவின் அந்த தலைமை பொறியாளர் இந்த "மதிப்பீட்டாளர்களை" அடையாளம் காட்டவில்லை என்பதோடு, அவர்களைத் தேர்ந்தெடுப்பதில் என்ன வழிவகை பயன்படுத்தப்படுகிறது என்பதையும் விளக்கவில்லை. ஆனால், சமீபத்திய திட்டநிரல் (programming) அபிவிருத்திகளை பயன்படுத்தி, கூகுள் அதன் தேடுபொறிகளையே மதிப்பீட்டாளர்கள் போல "சிந்திக்க" செய்ய முடியும்—அரசு மற்றும் பெருநிறுவனங்களின் அரசியல் முன்னுரிமைகள், தப்பெண்ணங்கள் மற்றும் விருப்பமின்மைகளுக்கு ஏற்ற தேடல் முடிவுகளைக் கொண்டு வருமாறு அவற்றை பயிற்றுவிக்க முடியும்.
இந்த "மதிப்பீட்டாளர்கள்", நிறுவனத்தின் தேடல் தரவரிசை வழிகாட்டி நெறிமுறைகளுக்கு கீழ்படிந்திருப்பார்கள் என்று கோம்ஸ் வலியுறுத்துகிறார். “தவறாக வழிநடத்தும் தகவல்கள், எதிர்பாரா அத்துமீறிய முடிவுகள், கட்டுக்கதைகள் மற்றும் ஆதரவில்லா சூழ்ச்சி தத்துவங்களை உள்ளடக்கிய தரங்குறைந்த வலைப்பக்கங்களை ஒதுக்கிவிடுவதற்காக தரவரிசைப்படுத்தும் ரேட்டர்களுக்கு,” இந்த தேடல் வழிகாட்டி நெறிமுறைகள், மிக விரிவான உதாரணங்களை வழங்குகின்றன.”
வலைத் தளங்கள் மீதான எதிர்மறை மதிப்பீடுகளுக்கான புறநிலை அடித்தளத்தை விளங்கப்படுத்தாமல் கோம்ஸ், மீண்டுமொருமுறை எரிச்சலூட்டும் வார்த்தைஜாலங்களைப் பயன்படுத்துகிறார்.
இந்த "மதிப்பீட்டாளர்கள்" வழங்கும் விபரங்களைக் கொண்டு, கூகுள் "எங்களின் மதிப்பீட்டு முறைகளை மேம்படுத்தி இருப்பதுடன், மிகவும் அதிகாரபூர்வ தகவல்களை முன்னுக்குக் கொண்டு வரும் அல்காரித இற்றைப்படுத்தல்களை செய்துள்ளதாக" கோம்ஸ் அறிவிக்கிறார். வரவிருக்கும் காலத்தில், “மிகவும் அதிகாரபூர்வ பக்கங்களை முன்னுக்குக் கொண்டு வரவும், தரங்குறைந்த உள்ளடக்கங்களை பின்னுக்குத் தள்ளவும் உதவும் வகையில் நாங்கள் எங்களின் சமிக்ஞைகளைச் சீர்செய்துள்ளோம்,” என்று அவர் மீண்டும் வலியுறுத்துகிறார்.
கூகுள் அது தணிக்கை செய்ய விரும்பும் அரசியல் கண்ணோட்டங்களைக் குறித்து மட்டும் தீர்மானிப்பதில்லை, மாறாக எந்த தளங்களுக்கு சார்பாக இருக்க வேண்டுமென்றும் முடிவெடுக்கிறது என்பதே இதன் உறுதியான அர்த்தமாகும்.
தெளிவாக கோம்ஸ் "அதிகாரபூர்வ" என்ற வார்த்தையை மனதார நேசிக்கிறார், அந்த வார்த்தையின் அர்த்தம் குறித்த ஓர் ஆய்வு அவர் வார்த்தை மோகத்தின் இயல்பை விளங்கப்படுத்துகிறது. “அதிகாரபூர்வ" என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் வழங்கப்படும் விளக்கம்: “இணக்கமாக அல்லது கீழ்படிந்திருப்பதை அவசியப்படுத்தும், ஓர் உத்தியோகபூர்வ ஆதாரவளத்திடம் இருந்து வரும் உத்தரவு,” என்றுள்ளது.
தணிக்கை வழிமுறைகள் அதிகரித்தளவில் கட்டுப்பாடுகளைப் பெறும் என்பதை ஏப்ரல் 25 அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கூகுள் அதன் தேடல் முடிவுகளை இன்னும் அதிகமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலமாக, "நல்லதொரு முன்னேற்றத்தை செய்து" வருகிறது என்று கோம்ஸ் குறிப்பிடுகிறார்.
திரு. கோம்ஸ் ஒரு தகுதி வாய்ந்த புரோகிராமர் மற்றும் மென்பொருள் பொறியாளர் என்பதை ஒருவரால் ஊகிக்க முடியும். ஆனால் அவருக்கு பேச்சு சுதந்திரம் மீதான அக்கறை இல்லையென்றாலும், குறிப்பாக அது குறித்த அறிவு கூட இல்லையா என்று சந்தேகிக்க ஒருவருக்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
அரசாங்கம், உளவுத்துறை முகமைகள், பிரதான முதலாளித்துவ அரசியல் கட்சிகள் வழங்கும், பெருநிறுவன கட்டுப்பாட்டிலான ஊடகங்களால் மக்களுக்கு கொண்டு செல்லப்படும், உத்தியோகபூர்வ கதையாடல்களுக்கு அப்பாற்பட்டு வேறெதையும் மக்கள் அணுகுவதை அந்நிறுவனம் விரும்பவில்லை என்பதன் கூகுள்-உரை (Google-speak) தான் கோம்ஸின் அறிக்கை.
கூகுள், ஒரு பாரிய பல பில்லியனிய டாலர் பெருநிறுவன ஜாம்பவானாக மாறிய போக்கினூடாக, சக்தி வாய்ந்த மற்றும் ஒடுக்குமுறை அரசு அமைப்புகளுடன் அரசியல்ரீதியில் வஞ்சகமான மற்றும் அபாயகரமான உறவுகளை அபிவிருத்தி செய்துள்ளது. அது அமெரிக்க அரசுடன் மட்டுமல்ல, மாறாக கடல்கடந்த அரசுகளுடனும் உறவுகளைப் பேணி வருகிறது. அதன் புதிய அல்காரிதத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வெறும் ஒரு சில வாரங்களுக்கு முன்னர், ஏப்ரல் மாத தொடக்கத்தில், கோம்ஸ் புதிய தணிக்கை விதிமுறைகளை விவாதிக்க பேர்லினில் உயர்மட்ட ஜேர்மன் அதிகாரிகளைச் சந்தித்திருந்தார்.
அரசு தணிக்கையைத் திணிப்பதில் கூகுள் தேடுபொறி இப்போது ஒரு பிரதான சக்தியாகி உள்ளது.