Print Version|Feedback
Thousands of textile workers strike in defiance of Egyptian dictatorship
எகிப்திய சர்வாதிகாரத்தை நிராகரித்து ஆயிரக்கணக்கான ஜவுளித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்
By Johannes Stern
11 August 2017
எகிப்தில், ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-சிசி இன் மிருகத்தனமான மேற்கத்திய ஆதரவுடனான சர்வாதிகாரத்தை நிராகரித்து, ஆயிரக்கணக்கான ஜவுளித் தொழிலாளர்கள் உயர்ந்த ஊதியங்கள் மற்றும் சிறந்த வேலை நிலைமைகளுக்காக வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
வியாழனன்று, Middle East Eye பத்திரிகை, நைல் ஆற்றுப்படுகையில் நகரான மஹல்லா அல்-குப்ராவில் அமைந்துள்ள எகிப்து அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய ஜவுளித் தொழிற்சாலையான மிஸ்ர் நூற்பு மற்றும் நெசவு நிறுவனத்தில் (Misr Spinning and Weaving Company-MSWC) பெருமளவில் 16,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் என்று தெரிவித்தது. MSWC மொத்தம் 25,000 க்கும் அதிகமான தொழிலாளர்களை பணியில அமர்த்தியுள்ளது.
ஆகஸ்ட் 5 அன்று, ஆறாயிரம் தொழிலாளர்கள், மேம்படுத்தப்பட்ட ஊதியங்கள் மற்றும் நலன்கள், மற்றும் தாமதமாக ஊக்க ஊதியம் வழங்கப்படுவது ஆகியவை தொடர்பாக கோரிக்கை விடுத்து வேலைநிறுத்தம் செய்தனர். ஆகஸ்ட் 8 அன்று, கூடுதலாக 10,000 தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் இணைந்ததோடு அல்லாமல், நிர்வாகம் தொழிலாளர் பிரதிநிதிகளை சந்தித்து 10 சதவிகிதம் அடிப்படை சம்பள உயர்வை வழங்கிய பின்னரும் வேலைக்குத் திரும்ப மறுத்துவிட்டனர். தொழிலாளர்கள் இந்த வாய்ப்பை நிராகரித்ததோடு, நிறுவன இலாபங்களின் அவர்களது பங்கின் அதிகரிப்பு, அதிகரித்த உணவுபடி மற்றும் பதவி உயர்வு கொள்கையில் மாற்றங்கள் ஆகியவை உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே தங்களது வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தனர்.
வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களில் பெயர் குறிப்பிடாத ஒரு நபர், எகிப்திய இணையவழி செய்தித்தாளான Mada Masr க்கு பேட்டியளித்ததில், 8 நூற்பு ஆலைகள், 7 துணி ஆலைகள், ஒரு கம்பளி ஆலை, ஒரு வலைத்தட்டி பட்டறை (grille workshop), 11 ஜவுளித் தொழிற்சாலைகள் மற்றும் மோட்டார்வண்டி பழுதுபார்க்குமிடம் , மின்சாரம் மற்றும் நீர்வினியோக துறைகள் என அந்த நிறுவனத்தின் அனைத்து தொழிற்கூடங்களிலும் வேலைநிறுத்தம் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
எகிப்திய நாளிதழ் Al Ahram இல் வேலைநிறுத்தம் செய்யும் ஒரு முன்னணி ஆர்வலரான ஃபைசல் லோக்ஷா என்பவர் பேசுகையில், இந்த வேலைநிறுத்தத்தை ஒரு “இறுதி மோதல்” என்று விவரித்தார். மேலும் அவர், “கடந்த இரண்டு வாரங்களாக, உயர்வுகளுக்கு கோரிக்கை விடுத்து நாங்கள் வேலை நேரத்திற்கு பின்னர் தொழிற்சாலைக்குள் சிறிய பேரணிகளை ஒழுங்கமைவு செய்துள்ளோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், தொழிற்சாலையில் ஒரு முழு அளவிலான வேலைநிறுத்தம் செய்ய நாங்கள் முடிவு செய்தோம்” என்று தெரிவித்தார்.
எகிப்தில் தொழிலாள வர்க்க போராட்டத்தின் ஒரு வரலாற்று மையமாக மஹல்லா அல்-குப்ரா உள்ளது. 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில், முன்னாள் சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக MSWC தொழிலாளர்கள் பாரிய வேலைநிறுத்தங்களை நடத்தினர், மேலும் முபாரக்கை வீழ்த்தும் அளவிற்கு, 2011 ல் வெகுஜன புரட்சிகரப் போராட்டங்களில் அவர்கள் ஒரு முக்கிய பங்கு வகித்தனர். டிசம்பர் 2012 இல், இஸ்லாமிய ஜனாதிபதி முகம்மது முர்சிக்கு எதிராக தொழிலாள வர்க்க எதிர்ப்பின் அதிகரிப்பின் மத்தியில், மஹல்லாவில் தொழிலாளர்களும், மாணவர்களும், தங்களை முர்சியின் “முஸ்லீம் சகோதரத்துவ அரசு” என்று அழைத்துக்கொள்வதில் இருந்து “சுயாதீனமானவர்கள்” என அழைத்துக்கொண்டனர்.
ஜூலை 13 முர்சிக்கு எதிரான இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பின்னர் மில்லியன் கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்களை கொன்று குவித்ததும், சிறையிலிட்டதுமான மற்றும் தற்போது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு முழுமையான தாக்குதலுக்கும் தயாரிப்பு செய்து கொண்டிருக்கும் அல்-சிசி இன் எதிர்ப்புரட்சிகர இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பு பெருகி வருவதை மஹல்லாவில் நடக்கும் தற்போதைய வேலைநிறுத்தம் பிரதிபலிக்கின்றது. மே 22 அன்று, தெற்கு கெய்ரோவில் தனியாருக்கு சொந்தமான Tourah சிமெண்ட் நிறுவனத்தில் நடந்த உள் அமர்வுப் போராட்டம் ஒன்றை பாதுகாப்பு படைகள் வன்முறையினால் கலைத்தனர், மேலும் முழுநேர ஒப்பந்தங்களைக் கோரிய 32 தொழிலாளர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund-IMF) 12 பில்லியன் டாலர் மதிப்பிலான கடனை அங்கீகரித்ததைத் தொடர்ந்து, கடந்த நவம்பரில் எகிப்திய பவுண்டின் மதிப்பு சரியத் தொடங்கியதிலிருந்து ஜூலை மாதத்தில் எகிப்திய நுகர்வோர் விலை பணவீக்கம் மிக உயர்ந்த விகிதமாக 33 சதவிகிதம் உயர்ந்ததன் பின்னர் தற்போதைய வேலைநிறுத்தம் வெடித்தது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆணையிடப்பட்ட சிக்கனப் பொதியின் பகுதியாக, கடந்த மாதம் இந்த ஆட்சி எரிபொருள் விலையை 50 சதவிகிதம் வரை உயர்த்தியதுடன், ஏழ்மையான எகிப்திய மக்கள் சார்ந்திருக்கும் உணவு மானியங்களில் கடுமையான வெட்டுக்களையும் விதித்தது.
எகிப்தில் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியுடன் ஆழமடைந்து ஆர்ப்பாட்டங்களும், வேலைநிறுத்தங்களும் மீண்டும் எழுகின்ற நிலையில், ஏகாதிபத்திய சக்திகளிடையே மற்றொரு புரட்சிக்கான பயம் அதிகரித்து வருகின்றது. வெளிநாட்டு உறவு குறித்து ஐரோப்பிய குழு (European Council on Foreign Relation) வெளியிட்ட சமீபத்தியதொரு செய்தித்தாளில், “எகிப்து வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது: எகிப்தில் மற்றொரு நெருக்கடியை ஐரோப்பா எவ்வாறு தவிர்க்க முடியும்” என்ற தலைப்பிட்ட ஒரு கருத்துரையில் பின்வருமாறு எச்சரித்தது: “தற்போது நாட்டின் கவலைக்குரிய அதிக அழுத்தம்தரும் விடயமாக எகிப்திய பொருளாதாரம் உள்ளது. 2011 புரட்சிக்கு பின்னர், அரசியல் உறுதியற்ற தன்மையும், பாதுகாப்பு பயங்களும், முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை தடுத்தன. இது விரைவான வருமான வீழ்ச்சிக்கு காரணமானது. சிசி நிறுவிய அரசியல் அடக்குமுறை மட்டும்தான் சூழ்நிலையை மிகவும் மோசமடையச் செய்தது.”
மேலும் ஆசிரியர் பின்வருமாறு தொடர்கிறார்: “உள்ளூர், குறுங்குழுவாத மற்றும் தேசியவாத கருத்தாக்கங்களால் ஊக்கப்படுத்தப்பட்ட சமூக மற்றும் பொருளாதார ஆர்ப்பாட்டங்கள் தொடர்வதையும், மேலும் உண்மையில் விரிவடைவதையும் தான் அனைத்து அடையாளங்களும் குறிப்பிடுகின்றன. அனைத்து ஆர்ப்பாட்டங்களும் அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கப்பட்டவை அல்ல, ஆனால் எகிப்திய சமுதாயத்தில் கொந்தளிக்கும் அதிருப்தியை சமாளிக்கும் அளவிற்கு அது விவேகமுள்ளது அல்ல. 2011 புரட்சி, தொழிலாள இயக்கத்தின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டங்கள், உள்ளிருப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்டது; இன்றும் அவர்கள் அதே பாத்திரத்தை வகிக்க முடியும். சிசி எகிப்தியர்களின் அதிருப்தியை புறக்கணித்தால் அது அவரது அரசாங்கத்தை ஆபத்திற்கு உள்ளாக்கலாம்.”
ஏகாதிபத்திய சக்திகள், சிசியின் ஒடுக்குமுறை மற்றொரு சமூக வெடிப்புக்கு எரியூட்டுவதைப் பற்றி கவலைப்படலாம், ஆனால் அவற்றின் எதிர்வினைகள் அவரது ஆட்சிக்கு பிடிப்பை வழங்குவதாக உள்ளது. செவ்வாயன்று, கீல் இல் ஒரு விழாவின் போது எகிப்திய கடற்படை, இரண்டாவது முறையாக ஜேர்மன் கப்பல் கட்டுமானரான Thyssenkrupp Marine Systems இல் இருந்து நான்கு வகை 209/1400 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கியது. ஊடக அறிக்கையின்படி, இந்த நான்கு கப்பல்களுக்கான ஒப்பந்தம் 1.4 பில்லியன் யூரோக்கள் மதிப்பு கொண்டதாகும்.
ஏப்ரலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது இரத்தவெறி ஆட்சிக்கு ஆதரவான ஒரு பொது ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு அல்-சிசி ஐ வெள்ளை மாளிகைக்கு வரவேற்றார். இஸ்ரேலுக்குப் பின்னர், இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளைப் பெற்ற இரண்டாவது பெரிய நாடு எகிப்து ஆகும். மூன்று தசாப்தங்களாக அமெரிக்க உதவியாக 77 பில்லியன் டாலர் நிதியளிப்பை பெற்ற பாரிய எகிப்திய இராணுவ அமைப்பின் முக்கிய செயல்பாடு அரேபிய உலகில் மிகப்பெரிய மற்றும் வலுவான தொழிலாள வர்க்கத்தை கண்காணிப்பதாகவே உள்ளது.
இதனை எழுதிக்கொண்டிருக்கும்போது, வேலைநிறுத்தம் தொடர்கின்றது. தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு இந்த ஆட்சி தயாராக இல்லை என்பதுடன், ஒரு மோதலுக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றது என்று அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. Ahram Online இல் பேசிய மஹல்லாவின் எம்.பி. நெமாத் அமர், தொழிலாளர்கள் தங்களது வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்று வலியுறுத்தினார். மேலும் அவர், அல்-சிசி மற்றும் எகிப்திய பாராளுமன்றத்தால் வழங்கப்பட்ட சிறப்பு ஊதிய அதிகரிப்பை கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை எனவும், அது “அமைச்சக மற்றும் பொதுத்துறை அதிகாரத்துவ தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே” பொருந்தும் என்றும் தெரிவித்தார்.
எகிப்திய நாளிதழான Al-Masry Al-Youm, Gharbiya பாதுகாப்பு இயக்குநர் அமைப்பு, மஹல்லாவின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேற்ற வாயில்களில், தொழிலாளர்களின் அணிவகுப்பு அல்லது ஆர்ப்பாட்டங்கள் வெடிப்பதை விரைவில் கட்டுப்படுத்தும் விதமாக இரகசிய முகவர்களுடன் துருப்புக்களை நிறுத்தியுள்ளது என்று அறிவித்தது.