Print Version|Feedback
Seventy years since the communal Partition of South Asia
தெற்காசிய வகுப்புவாத பிரிவினையில் இருந்து எழுபது ஆண்டுகள்
Keith Jones
16 August 2017
எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் இதே வாரம், ஆகஸ்ட் 15, 1947 இல், தெற்காசியாவின் பிரிட்டிஷ் காலனித்துவ எஜமானர்கள், ஜவஹர்லால் நேரு மற்றும் மகாத்மா காந்தியின் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான ஒரு "சுதந்திர" இந்திய அரசாங்கத்திடம் அதிகாரத்தை கைமாற்றினர்.
அதற்கு முந்தைய நாள், இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மௌண்ட்பேட்டன் பிரபு, ஒரு திட்டவட்டமான முஸ்லீம் நாடாக பாகிஸ்தானை உருவாக்குவதற்காக கராச்சியில் முஸ்லீம் லீக் தலைவர் எம். ஏ. ஜின்னாவுடன் இணைந்திருந்தார். பிரிட்டிஷ் இந்திய சாம்ராஜ்ஜியத்தின் வடமேற்கு மற்றும் வடகிழக்கின் முஸ்லீம் பெரும்பான்மையினர் பகுதிகள் பாகிஸ்தானாக உருவாக்கப்பட்டு, அவ்விதத்தில் "புதிய" இந்தியா ஒரு பிரதான இந்து நாடாக மாற்றப்பட்டது.
இருப்பினும், ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமாகவே முஸ்லீம்கள் இந்திய துணைகண்டத்தின் அனைத்து பாகங்களிலும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த வகுப்புவாத பிரிவினை, 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றாகும். இந்தவொரு குற்றம் தான், அதற்குப் பிந்தைய தெற்காசியாவின் ஒட்டுமொத்த வரலாற்றையும் வடிவமைத்துள்ளது, அல்லது இன்னும் துல்லியமாக கூறுவதானால், சிதைத்துள்ளது.
பிரிவினை ஏற்படுத்திய பல மாதகால கொடூரமான வகுப்புவாத வன்முறையில், ஏறத்தாழ இரண்டு மில்லியன் இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் மனித வரலாற்றிலேயே மிகப்பெரியளவிலான பாரிய புலம்பெயர்வுகளில் ஒன்றை ஏற்படுத்தியது.
அதற்கடுத்து நான்காண்டு கால இடைவெளியில், 15 மில்லியனுக்கும் அதிகமானவர்கள், தங்களின் கைகளிலும் முதுகிலும் எந்தளவிற்கு சாமான்களைக் கொண்டு செல்ல முடியுமா அவற்றுடன், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு புலம்பெயர்ந்தனர்: இந்துக்களும் சீக்கியர்களும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள்ளும், இந்தியாவில் இருந்த முஸ்லீம்கள் பாகிஸ்தானிற்குள்ளும் தப்பியோடினர்.
பிரிவினையானது, தெற்காசியாவின் புவியியல், வரலாறு, கலாச்சாரம், மற்றும் அதன் பொருளாதார அபிவிருத்தியின் தர்க்கத்தையும் கூட மீறி நின்றது, அதன் நீர் ஆதாரவளங்களை அறிவார்ந்த முறையில் பயன்படுத்துவதும் இதில் உள்ளடங்கும். ஏழு தசாப்தங்கள் கடந்து விட்டன, உலகிலேயே பொருளாதாரரீதியில் மிகவும் குறைவாக ஒருங்கிணைந்த பிராந்தியமாக தெற்காசியா உள்ளது.
பிரிவினையானது வகுப்புவாத கொதிப்பை தடுக்காது போனாலும், வகுப்புவாத மோதல்களைத் தடுக்குமென, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரி நேரு உட்பட பிரிவினையின் வடிவமைப்பாளர்கள் வாதிட்டனர். யதார்த்தத்தில், அது தெற்காசியாவின் அரசு கட்டமைப்பிலேயே வகுப்புவாதத்தை உருவாக்கியது, அவ்விதத்தில் அது பலமாக வேரோடி, பூதாகரமாக வளர்ந்துள்ளது.
முஸ்லீம் பாகிஸ்தானின் ஆளும் உயரடுக்குகளும் மற்றும் வெளிவேஷத்திற்கு மதசார்பற்றதாக காட்டிக்கொள்ளும் இந்தியாவின் ஆளும் உயரடுக்குகளும், சமூக கோபத்தை ஒரு பிற்போக்கான திசையில் திருப்புவதற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கும் ஒரு வழிவகையாக, வகுப்புவாதத்தையும் மற்றும் அதன் சித்தாந்த உறவுகளான மத அடிப்படைவாதம் மற்றும் ஜாதியத்தையும் ஊக்குவிக்கின்றன.
பிரிவினையானது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு பிற்போக்குத்தனமான இராணுவ-மூலோபாய எதிர்விரோதத்தை அதிகரித்துள்ளது, இது அத்தியாவசிய ஆதாரவளங்களை சிதறடித்து, இன்று தெற்காசிய மக்களை அணுஆயுத அழிவுடன் அச்சுறுத்துகின்றது. கடந்த ஏழு தசாப்தங்களாக, இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்று அறிவிக்கப்பட்ட போர்களையும் பல அறிவிக்கப்படாத போர்களையும் நடத்தி உள்ளன, மற்றும் எண்ணற்ற போர் நெருக்கடிகளினூடாக கடந்து சென்றுள்ளன.
சமீபகாலம் வரையில் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதான கட்சியாக விளங்கிய காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் முஸ்லீம் லீக்கின் சூழ்ச்சியின் விளைவே பிரிவினை என்றும், அதில் தானும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எப்போதும் காட்டிக் கொள்கிறது.
நிச்சயமாக, பிரிட்டிஷ் அவர்களின் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையில் வகுப்புவாத வகைப்பாடுகளை இணைத்துக்கொண்டு “பிரித்தாளும்" நடைமுறையை கையாண்டார்கள், மேலும் இந்தியாவின் காலனித்துவ எஜமானர்களுடன் சேர்ந்து முஸ்லீம் லீக்கும் திரைமறைவில் இதற்கு உடந்தையாய் இருந்தது.
ஆனால் இந்த வகுப்புவாத சூழ்ச்சியை காங்கிரஸ் கட்சி ஏன் எதிர்க்கவில்லை; ஒரு "ஐக்கிய, ஜனநாயக, மதசார்பற்ற" இந்தியாவுக்கான போராட்டத்தில் இந்து-முஸ்லீம்-சீக்கியர்களை ஐக்கியப்படுத்தும் அதன் சொந்த வேலைத்திட்டத்தையே காட்டிக்கொடுத்து, பிரிவினையை அது ஏன் நடைமுறைப்படுத்தியது என்பதற்கு அங்கே அடிப்படையான வர்க்க காரணங்கள் உள்ளன. இதில், பரம-இந்து மற்றும் சீக்கிய வகுப்புவாதிகள் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மற்றும் மாஸ்டர் தாரா சிங்குடன் சேர்ந்து, வங்காளம் மற்றும் பஞ்சாபை துண்டாடுவதில் அவர்களது நெருக்கமான ஒத்துழைப்பும் உள்ளடங்கும்.
தெற்காசிய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் பொதுவான வர்க்க நலன்களுக்கு அழைப்புவிட்டு, அவ்விதத்தில் தெற்காசியாவை "கீழ்மட்டத்திலிருந்து" ஐக்கியப்படுத்துவதன் அடிப்படையில் அவர்களை அணிதிரட்டுவதற்கு, முதலாளித்துவ வர்க்க காங்கிரஸ் கட்சி இயல்பாகவே இலாயகற்று இருந்ததுடன், அதற்கு விரோதமாகவும் இருந்தது.
தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கான அதன் சொந்த மட்டுப்பட்ட வாய்ப்புகளுக்காக, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வயிற்றெரிச்சலுடன் இருந்த இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை காங்கிரஸ் கட்சி பிரதிபலித்தது. காந்தியின் தலைமையின் கீழ், 1920 மற்றும் 1942 க்கு இடையே, அது இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் அரசியல்ரீதியில் பலவீனமான மக்களை பரந்தளவில் அணிதிரட்டியது. ஆனால் அதிகளவிலான மக்கள், குறிப்பாக தொழிலாளர்கள், களத்திற்குள் நுழைந்தவுடன், அதேயளவிற்கு அதிக விடாப்பிடியோடு காங்கிரஸ் கட்சி ஏகாதிபத்தியத்துடன் ஒரு தீர்வைக் காண முயன்றது.
குறிப்பாக 1942 “வெள்ளையனே வெளியேறு" இயக்க அனுபவத்திற்குப் பின்னர், பெருந்திரளான தொழிலாளர்களின் மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள் அதன் கட்டுப்பாட்டை மீறி வெடிக்கக்கூடும் என்றும், பிரிட்டிஷ் இராஜ்ஜியத்திற்கு எதிரான போராட்டம் முதலாளித்துவ சொத்துடைமையை அச்சுறுத்தும் மிகத் தீவிரமான சக்திகளின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிடக்கூடும் என்றும் காங்கிரஸ் கட்சி மிகவும் அஞ்சியது.
1945 க்கும் 1947 க்கும் இடையே, பாரிய வேலைநிறுத்தங்கள், ஏகாதிபத்திய-எதிர்ப்பு அணிதிரள்வுகள் உட்பட இந்தியா புரட்சிகர-முன்னோடி போராட்டங்களின் ஒரு குணாம்சத்தைக் கொண்டிருந்தது, பாட்டாளி வர்க்க மையங்களாக விளங்கிய கல்கத்தா மற்றும் பம்பாயில் பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் நேரடியான மோதல்களும் மற்றும் ராயல் இந்திய கடற்படையின் சிப்பாய் கலகமும் கூட அதில் உள்ளடங்கும்.
பெருந்திரளான மக்கள் முன்னுக்கு வர வர, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்காக இன்னும் பதட்டத்துடன் காலனித்துவ அரசின் ஒடுக்குமுறை எந்திரத்துடன் கரம் கோர்த்தனர். அதற்காக அவர்கள் பிரிட்டிஷாருடன் ஒரு உடன்படிக்கையை எட்டுவதற்கு ஆர்வத்துடன் முயற்சித்தனர். தெற்காசியாவில் நேரடியாக ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து மறைமுகமான ஏகாதிபத்திய ஆட்சிமுறைக்கு மாற வேண்டியிருந்ததை உணர்ந்த பிரிட்டிஷார், அதற்காக வகுப்புவாத துருப்புச்சீட்டைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தை பலமிழக்க செய்யவும், அவர்களது முஸ்லீம் முதலாளித்துவ வர்க்கம் மற்றும் நிலப்பிரபுத்துவ ஆதரவாளர்களை ஒரு கடுமையான பேரம்பேசலை முடுக்கி விடுவதற்கு முனைந்தனர்.
ஆகஸ்ட் 1947 க்கு முந்தைய மூன்று தசாப்தங்களில் தெற்காசியாவை அதிர வைத்த பாரிய ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கத்தின் மீது கட்டுப்பாட்டை பேணுவதற்கான மற்றும் இறுதியில் அவற்றை ஒடுக்குவதற்கான காங்கிரஸ் கட்சியின் தகைமை, சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் மற்றும் அவர்களது இந்திய சேவகர்களாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) காட்டிக்கொடுப்புகளுடன் பிணைந்திருந்தது.
1917 அக்டோபர் புரட்சியின் முக்கிய படிப்பினைகளை வேண்டுமென்றே உதறிவிட்ட ஸ்ராலினிஸ்டுகள், ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டம் மீது தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் கட்டுப்பாட்டை மீளபலப்படுத்துவதற்கும் மற்றும் பெருந்திரளான விவசாய மக்களின் தலைமையாக தொழிலாள வர்க்கம் சவால்விடுப்பதை தடுப்பதற்கும் உரிய ஒரு போக்கை ஒவ்வொரு கட்டத்திலும் பின்தொடர்ந்தனர். அவர்கள், முதலாளித்துவ வர்க்க காங்கிரஸை ஒரு பன்முக-வர்க்க முன்னணி என்று புகழ்ந்துரைத்தமை; 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம் கூட்டுப்படையின் போர் முயற்சிக்கு தடையாக உள்ளது என்ற அடிப்படையில் அதை பிரிட்டிஷ் இந்திய அதிகாரிகள் ஒடுக்கியதை ஆதரித்தமை; மற்றும் தனி பாகிஸ்தானுக்கான முஸ்லீம் லீக்கின் பிற்போக்குத்தனமான கோரிக்கையை ஆதரித்தமை ஆகியவையும் அதில் உள்ளடங்கும்.
1945-47 எழுச்சியின் போது, தொழிலாள வர்க்கம் தனது கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களை ஒரு "தேசிய முன்னணியைக்" கட்டமைப்பதற்கு அடிபணிய செய்யவேண்டும் என்றும், இதுவே காங்கிரஸ் கட்சி மற்றும் முஸ்லீம் லீக்கின் கூட்டு தலைமையின் கீழ் இந்தியாவின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் என்றும் ஸ்ராலினிஸ்டுகள் வலியுறுத்தினர். இந்த கட்சிகளோ, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் சிறந்த உடன்படிக்கையை பெறுவதற்காக ஒன்றுக்கு எதிராக ஒன்று கடும் விரோதத்துடன், சூழ்ச்சி செய்து கொண்டிருந்தன என்பதெல்லாம் ஸ்ராலினிஸ்டுகளுக்கு ஒரு விடயமாக இருக்கவில்லை.
இந்திய, பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கத்தின் கரங்களில் ஜனநாயக புரட்சியை ஒடுக்குவதற்கு மிகவும் உடனடியான மற்றும் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடாக மட்டுமே இருந்த பிரிவினையானது, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் உலக முதலாளித்துவ மறுஸ்திரப்பாட்டிற்கு ஒரு பிரதான கூறுபாடாக விளங்கியது. விவசாய உறவுகளைத் தீவிரமாக மாற்றுவதில் தொடங்கி, ஜாதியத்தை ஒழிப்பது மற்றும் பெருந்திரளான விவசாய மக்கள் முகங்கொடுத்த எரியூட்டும் பிரச்சினைகள் என எதுவுமே தீர்க்கப்படவில்லை. இவ்விரண்டு நாடுகளிலும், ஆரம்பத்திலிருந்தே தொழிலாள வர்க்க போராட்டங்கள் அரசு ஒடுக்குமுறையால் அச்சுறுத்தப்பட்டிருந்த நிலையில், அடிப்படை சமூக பாதுகாப்புகளும் இல்லாமல், கூலிகள், வறுமை வாழ்வு, பிழைப்பாதாரமும் கூட இல்லாமல் வாழ தொழிலாள வர்க்கம் சபிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் "வளர்ச்சி" குறித்து இன்று மேற்கத்திய ஊடகங்களில் நிறைய பேசப்படுகின்றன. ஆனால், ஏதேனும் இருக்கிறதெனில், கடந்த ஏழு தசாப்தங்களை விட 2017 இல் இந்திய முதலாளித்துவ வர்க்கம் இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் நலன்களுக்கு இன்னும் அதிக பிற்போக்குத்தனத்துடன் மற்றும் இன்னும் அதிக விரோதமாக உள்ளது.
கடந்த கால் நூற்றாண்டாக உலக முதலாளித்துவத்திற்கான ஒரு மலிவு-உழைப்பு உற்பத்தியாளராக இந்தியா மாற்றப்பட்டமை ஒரு சிறிய அடுக்கை செல்வச்செழிப்பாக்கி உள்ளது. பில்லியனர்களின் எண்ணிக்கையில் இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இப்போது பெருமைபீற்றிக் கொள்கின்ற அதேவேளையில், இந்தியாவின் 1.3 பில்லியன் மக்களில் முக்கால்வாசி பேர் நாளொன்றுக்கு 2 அமெரிக்க டாலருக்கும் குறைவான தொகையில் உயிர்வாழ்கின்றனர்.
அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் குற்றகரத்தன்மை மற்றும் மூர்க்கத்தனத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் ஆளுருவாக இருப்பதைப் போல, இந்திய ஆளும் வர்க்கத்தின் நிஜமான முகத்தை, அதன் இப்போதைய பிரதம மந்திரியும், இந்து-மேலாதிக்கவாத, எதேச்சதிகார நரேந்திர மோடியிடம் காணலாம்.
முதலீட்டாளர்-சார்பு "சீர்திருத்தத்தை" விரைவுபடுத்துவதன் மூலமாக மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இந்தியாவை சிறிதும் தயக்கமின்றி அணிசேர்ப்பதன் மூலமாக, அதன் வல்லரசாகும் அபிலாஷைகள் உள்ளடங்கலாக இந்திய முதலாளித்துவ வளர்ச்சியை இன்னும் ஊக்கப்படுத்துவதற்கு மோடி பணிக்கப்பட்டுள்ளார்.
சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியா இப்போது ஒரு முன்னணி நாடாக சேவையாற்றி வருகிறது. இமாலய மலைப்பகுதியில் இரண்டு மாதமாக இந்தோ-சீன எல்லையில் நிலவும் விட்டுக்கொடுப்பற்ற நிலை போராக வெடிக்கக்கூடும் மற்றும் வட கொரியாவை எரித்து சாம்பலாக்கும் ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மோடியின் முழு-மூச்சு ஆதரவு ஆகியவற்றில் இந்த அச்சுறுத்தலான அபிவிருத்தி எடுத்துக்காட்டப்படுகிறது.
பிற்போக்குத்தனமான பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தசாப்தங்களாக ஒரு சேவகராக சேவையாற்றியது. இன்றும் அது அவ்வாறு செய்ய ஆர்வமுடன் தான் உள்ளது. ஆனால் பாகிஸ்தான் அபாயகரமாக தெற்காசியாவை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தி உள்ளதாகவும், ஆயுத மற்றும் அணுஆயுத போட்டிக்கு எரியூட்டி வருவதாகவும் மீண்டும் மீண்டும் வாஷிங்டன் அதை எச்சரிக்கின்ற அதேவேளையில், அது முன்பினும் அதிகமாக பாகிஸ்தானின் பரம-போட்டியாளரான இந்தியாவை ஆரத்தழுவியுள்ளது. இதனால் அதிகரித்தளவில் கவலை கொண்ட இஸ்லாமாபாத் பெய்ஜிங் உடனான அதன் நீண்டகால உறவுகளை நெருக்கமாக்கி உள்ளன.
இவ்விதத்தில், ஒவ்வொரு பாரிய புதிய வெடிப்பு உலையோடு சேர்ந்து, பிரிவினையிலிருந்து பிறந்த பிற்போக்குத்தனமான இந்தோ-பாகிஸ்தானிய எதிர்விரோதமும், இப்போது அமெரிக்க-சீன மோதலுக்கான சிக்கலாக மாறியுள்ளது.
தெற்காசிய தொழிலாளர்கள், கடந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மூலோபாய அனுபவங்களில் இருந்தும், ரஷ்ய புரட்சியிலிருந்தும், அத்துடன் தெற்காசியாவில் ஜனநாயக, ஏகாதிபத்திய-எதிர்ப்பு புரட்சி மீது காலனித்துவ முதலாளித்துவ வர்க்கம் நடத்திய ஒடுக்குமுறையில் இருந்தும் மற்றும் "சுதந்திர" முதலாளித்துவ ஆட்சியின் தோல்வியில் இருந்தும் படிப்பினைகளைப் பெற வேண்டும்.
போருக்கு எதிரான போராட்டமானது ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும். காலங்கடந்து முதலாளித்துவ அபிவிருத்தி கண்ட நாடுகளில், ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களை அரவணைத்து ஒரு சோசலிச புரட்சி மூலமாக தொழிலாளர்களது அரசாங்கத்தை நிறுவுவதன் மூலமாக மட்டுமே, ஏகாதிபத்தியத்திடம் இருந்தும் மற்றும் காலனித்துவத்தின் மரபுகளில் இருந்தும் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்தைய சுரண்டல் வடிவங்களில் இருந்தும் விடுதலை பெற முடியும். தொழிலாள வர்க்கம் இதுபோன்றவொரு புரட்சிக்கு தலைமை கொடுக்க, நிரந்தர புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான கட்சிகளை, அதாவது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டமைக்க வேண்டும்.