Print Version|Feedback
“When they pay a contract worker it’s like they’re giving money to a beggar”
Amazon investing billions in India to extract super profits
“ஒரு ஒப்பந்தத் தொழிலாளிக்கு அவர்கள் ஊதியம் கொடுக்கும் போது அது ஒரு பிச்சைக்காரனுக்கு அவர்கள் பணம் கொடுப்பதைப் போலவே உள்ளது”
மிக உயர்வான இலாபங்களை பெறுவதற்கு அமேசன் நிறுவனம் இந்தியாவில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்கின்றது
By Moses Rajkumar and Sasi Kumar
21 July 2017
மிகப்பெரிய வலைத் தள சில்லறை விற்பனையாளரான அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமேசன் நிறுவனம் இந்திய சந்தையை கைப்பற்றும் நோக்கத்துடன், அதன் பிரதான இந்திய போட்டியாளரான பிலிப்கார்ட்டை (Flipkart) வெளியேற்றும் முயற்சியில், தனது இந்திய பகுதி பிரிவான அமேசன் விற்பனையாளர் சேவைகள் பிரைவேட் லிமிடெட் இல் 16.8 பில்லியன் ரூபாய் ($US250 million) மதிப்பிலான தொகையினை முதலீடு செய்துள்ளது.
இந்த புதிய உள்ளீட்டின் மூலம், இந்தியாவில் அமேசனின் மொத்த முதலீடு 2 பில்லியன் டாலரை கடந்ததோடு, இந்திய இலக்கமுறை பொருளாதாரத்தில் இரண்டாவது மிகப்பெரிய பூகோள முதலீட்டாளராக இந்நிறுவனத்தை உருவாக்கியது. முதலாவது நிறுவனம், ஜப்பானை தளமாக கொண்ட தொலைதொடர்புகள் மற்றும் இணைய நிறுவனமான SoftBank ஆகும், இது இந்தியாவில் கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை கொண்டுள்ளது.
இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியை அவரது அமெரிக்க விஜயத்தின் போது சந்தித்த பின்னர், அமேசன் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் உற்சாகத்தில், “இந்தியாவிலுள்ள நம்பிக்கை மற்றும் கண்டுபிடிப்புக்களால் எப்போதும் மனது ஈர்க்கப்படுவதுடன், புத்துணர்வும் ஏற்படுகின்றது. தொடர்ந்து முதலீடு செய்யவும், வளர்ச்சியடையவும் ஆர்வமாகவுள்ளது” என்று ட்வீட் செய்தார்.
சமீபத்திய முதலீட்டைப் பற்றி கூறுகையில், ஒரு அமேசன் செய்தித் தொடர்பாளர், “இந்திய வாடிக்கையாளர்கள் இடையே மின்-வர்த்தக (e-commerce) பழக்கத்தை உருவாக்குவதற்கான ஒரு நீண்ட கால முன்னோக்குடன் எங்களது இந்திய வணிகத்திற்கு நாங்கள் இன்னும் அர்ப்பணித்துள்ளோம்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். மேலும் அவர், “புதுமையான இந்தியா-முதல் முயற்சிகளையும், அத்துடன் மிக முக்கியமான வீடியோக்களை போன்ற முற்றிலும் புதிய பரிசுப் பொருட்களை அறிமுகப்படுத்துவதையும் தொடரும் போது, வெறும் நான்கு ஆண்டுகளில் எங்களது வணிகத்தால் எங்களது வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் இந்தியாவை வழிநடத்த ஏதுவாக உள்ள அவர்களின் நம்பிக்கையைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைவதுடன், அதற்கு தலை வணங்குகின்றோம்” என்றும் கூறினார்.
மற்ற நாடுகடந்த நிறுவனங்களைப் போலவே, நாட்டின் ஒப்பந்தத் தொழிலாளர் அமைப்பு முறை மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்கும் அரசாங்கத்தின் இரக்கமற்ற ஒடுக்குமுறை போன்றவற்றை சாதகமாக்கிக் கொண்டு மிகப்பெரிய இலாபத்தை உறிஞ்சியெடுக்க முடியுமென அமேசன் நம்புகின்றது. இந்த ஆண்டு தொடக்கத்தில், புது தில்லியின் புறநகர பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய தொழிற்துறை பகுதியான மானேசரிலுள்ள மாருதி சுசூகி வாகன அசெம்ளி ஆலையில் 13 வாகனத் தொழிலாளர்கள் மீதான ஜோடிக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கான பிரதம மந்திரி மோடியின் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” பிரச்சாரத்தை குறைந்த மதிப்பீடு செய்யும் வகையில் “நம்மைப் பற்றிய எண்ணம் மீதான ஒரு கறையாக” மாருதி சுசூகி தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், ஆலை உள்ளிருப்பு போராட்டங்கள் மற்றும் இதர போர்க்குணமிக்க நடவடிக்கைகள் இருந்ததாகக் கூறி, சிறப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு முதலில் மரண தண்டனை விதிக்கவே முயன்றார்.
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சர்வதேச அமேசன் தொழிலாளர்கள் குரல் இதழ் ஆகியவற்றிலிருந்து செய்தியாளர் குழு ஒன்று, கீழ் திசை இந்தியாவில் வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள 7 மில்லியன் மக்கட்தொகை கொண்ட ஒரு நகரமான சென்னை மாவட்டத்தை சார்ந்த ராயபேட்டையிலுள்ள அமேசன் போக்குவரத்து சேவைகள் பிரைவேட் லிமிடெட் (Amazon Transportation Services Pvt. Ltd.) வசதிக்கு சமீபத்தில் விஜயம் செய்தது. அப்போது, அமேசன் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களுடன் செய்தியாளர்கள் பேசினர்.
45 வயதான அர்ஜூன், “நான் இந்த நிறுவனத்தில் ஒரு ஒப்பந்த தொழிலாளியாக சேர்ந்த போது, எனது தினசரி ஊதியம் 550 ரூபாயாக இருக்கும் என்று எனக்கு கூறப்பட்டது. ஒரு நாள் வார விடுமுறை கூட எனக்கு கிடையாது என்பதுடன், பண்டிகை கால விடுமுறைகளை எடுத்துக்கொள்ளவும் எனக்கு உரிமை கிடையாது. இது, வேலை செய்யவில்லையென்றால், சம்பளமும் இல்லை என்ற வகையிலானதாகும். வேலை நேரங்களில் எனக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் கூட, அதற்கான மருத்துவ செலவினங்களையும் நானே தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று கூறினார்.
மேலும் அவர், “அதிகளவு ஊதியத்துடனான வேறொரு வேலை எனக்கு கிடைக்குமானால், நான் இந்த வேலையை விட்டுவிடுவேன். அமேசன் உடன் எனக்கு எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை. ஊதியம் தொடர்பான எந்தவொரு பிரச்சனை பற்றியும் நான் ஒப்பந்தக்காரரிடம் தான் பேசவேண்டும், மேலும் நிறுவனத்திடமிருந்து ஒப்பந்தக்காரர் எவ்வளவு பணம் பெறுகிறார் என்பதும் எனக்குத் தெரியாது. ஊதியம் பெறுவதற்கு ஒரு நிர்ணயிக்கப்பட்ட தேதியும் இல்லை என்பதால், நான் எப்பொழுது ஊதியத்தைப் பெறப்போகிறேன் என்பது கூட எனக்கு ஒருபோதும் தெரியாது. ஒரு ஒப்பந்தத் தொழிலாளிக்கு அவர்கள் ஊதியம் கொடுப்பது, ஒரு பிச்சைக்காரருக்கு அவர்கள் பணம் கொடுப்பதைப் போலவே இருக்கும்” என்றும் தொடர்ந்து கூறினார்.
“எனது குறைந்த ஊதியத்தைக் கொண்டு எனது குடும்பத்தை பராமரிப்பது மிகவும் சிரமமானதாகவுள்ளது” என்றும் அவர் கூறினார். மேலும், அவரும் மற்ற தொழிலாளர்களும் சிறந்ததொரு கல்விக்காக அவர்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப விரும்பினாலும் கூட, அவர்களது குழந்தைகளை மோசமான நிதியளிப்புடன் இயங்கும் பொதுப் பள்ளிகளில் சேர்த்து விடவேண்டிய கட்டாயத்தில் தான் அவர்கள் இருப்பதாக அர்ஜூன் விளக்கினார். “எனது வீட்டிற்கு நான் வாடகை செலுத்துகிறேன், மேலும் இந்த அனைத்து செலவினங்களையும் என்னால் சமாளிக்க முடியவில்லை” என்றும் கூறினார்.
“அமேசன், ஜேர்மனி, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் இயங்குகிறதென எனக்குத் தெரியும், ஆனால் இந்த நாடுகளில் உள்ள அமேசன் தொழிலாளர்களின் நிலைமைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் உங்களுடன் பேசுவதன் மூலமாக தான் வெவ்வேறு நாடுகளில் உள்ள அமேசன் தொழிலாளர்களின் நிலைமைகள் மற்றும் போராட்டங்கள் பற்றி அறிந்து கொண்டேன். இந்நிலையில், அமேசன் நிறுவனத்தின் அனைத்து போராடும் தொழிலாளர்களும் நல்ல ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளுக்காக ஐக்கியத்துடன் போராட வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கின்றேன்.
“நீங்கள் சொல்வது போல உலக தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு போராடினால் அது நன்றாக இருக்கும். நான் அந்த கருத்தை விரும்புகிறேன். ஆனால் இந்த நாட்டில் வேறெந்தக் கட்சியும் இந்த திட்டத்தைப் பற்றி பேசவில்லை. இந்த மாதிரியான எந்தவொரு கட்சியையும் நான் விரும்பவில்லை. உங்களைப் போன்ற கட்சி தான் தொழிலாளர்களுக்குத் தேவையாகவுள்ளது.”
“உழைக்கும் மக்களுக்கு எதிராக மசோதாக்களை பிரதம மந்திரி நரேந்திர மோடி உருவாக்குகிறார் என்பதால் அவரை “ஒரு மோசக்காரன்” என்று அர்ஜூன் கண்டனம் செய்கிறார். மோடி “உழைக்கும் மக்களுக்கான மானியங்களையும் வெட்டுகிறார். அவர் விவசாயிகளின் நிலைமைகளை புறக்கணிக்கிறார். அவர் உலகத்தையே சுற்றி வருகிறார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை நீக்கி, அவற்றை செல்லாததாக்கியதன் மூலம் எவ்வளவு பணத்தை அவர் கைப்பற்றினார்?” என்றேல்லாம் அர்ஜூன் கூறினார்.
55 வயதுள்ள ஒரு ஒப்பந்த ஓட்டுநரான புஷ்பராஜூக்கு மாதத்திற்கு 12,000 ரூபாய் (US $186.42) மட்டுமே ஊதியம் வழங்கப்படுகின்றது. குறைந்த எண்ணிக்கையிலான நிரந்தர தொழிலாளர்கள் மட்டும் பெறக்கூடிய கூடுதல் நன்மைகளையும் அவர் பெறமுடிவதில்லை.
அந்த தொழிலாளி அவரது மனைவியின் துக்ககரமான மரணத்தைத் தொடர்ந்து அவர் அடைந்த அனுபவங்களைப் பற்றி விளக்கினார். “சென்னையில் உள்ள மெடாஃபோம் என்ற தனியார் நிறுவனத்தில் என் மனைவி ஒரு நிரந்தரத் தொழிலாளியாக வேலை செய்தார். இந்த நிறுவனம் சென்னையின் புறநகர் பகுதிக்கு மாற்றப்பட்டது. நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது அவர் இறந்தார், ஆனால், இதுவரை அவர் பெற உரிமையுள்ளதான, சேமநிதி (Provident Fund-PF) மற்றும் ஓய்வுதவித் தொகை (Gratuity) போன்ற எந்தவொரு நன்மைகளையும் எங்களுக்கு அந்த நிறுவனம் வழங்கவில்லை.
“என் மகளின் திருமண செலவுகளை நான் மேற்கொள்வதற்காக, எங்களுக்கு உரிமையுள்ள தொகையினை வழங்கிடுமாறு அந்த நிறுவனத்திடம் நாங்கள் கேட்டபோது, அவர்கள் மறுத்துவிட்டனர். அந்த நிறுவனத்தின் விரோதமான மனப்பான்மையினால் நான் மிகுந்த கோபமடைந்து, 5 லீட்டர் மண்ணெண்ணெய் உடன் நிறுவனத்தின் நுழைவு வாயிலுக்கு விரைந்து சென்று சுயமாக கொளுத்திக்கொள்ள தயாரானேன். அந்த நேரத்தில் நிறுவனத்தின் அதிகாரிகள் என்னை நோக்கி ஓடிவந்து எனக்கு 10,000 ரூபாய் மட்டும் கொடுத்தனர். இந்த போராட்டத்தில் நான் என்னையே அழித்துக் கொள்வேன் என்று அச்சுறுத்திய பின்னரே இந்த அற்ப தொகையை என்னால் பெற முடிந்தது. இதுவரை அவர்கள் எங்களுக்கு என் மனைவியின் பணிவிலகுதல் தொடர்பான தொப்பு தொகை எதையும் வழங்கவில்லை.
“உயிர் பிழைப்புக்காக மிகவும் கடினமான சூழ்நிலைகளில் ஒரு ஒப்பந்த தொழிலாளியாக நான் அமேசானில் வேலை செய்கிறேன். நான் தங்குவதற்கு கூட இடம் இல்லை என்ற நிலையில், நிறுவனத்தின் வாசலுக்கு வெளியே உள்ள ஒரு நடைமேடையில் தான் நான் தூங்குகின்றேன்.”
மத்திய மற்றும் மாநில மட்டங்களிலான அரசியல் கட்சிகளின் பங்கைப் பற்றி கருத்து தெரிவிக்கையில் புஷ்பராஜ், “எந்தவொரு கட்சியும் எந்த விதத்திலும் நன்மை செய்வதில்லை. முன்னாள் DMK (தமிழ்நாடு சார்ந்த முதலாளித்துவக் கட்சி) ஆட்சி காலத்தில், அதன் தலைவர் கருணாநிதி தனது கட்சியின் மட்டுமீறிய ஊழலுக்கு பேர் போனவர். அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் செல்வந்தர்களாக்கினார். அவர்கள் ஊழல் மூலம் திரட்டிய அனைத்து செல்வங்களையும் மறைத்துவிட்டனர்.
“ஆனால் காலமான ஜெயலலிதா (தற்போது தமிழ்நாட்டை ஆள்கின்ற AIADMK இன் முன்னாள் முதலமைச்சர்) கையும் களவுமாக பிடிபட்டார், காரணம் DMK தலைவர்கள் அவர்களது சட்டவிரோத செல்வத்தை பதுக்கியது போன்று இவர் திருடியவற்றை மறைக்க இவருக்கு திறமை இருக்கவில்லை. ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகள் இரண்டுமே ஊழல் நிறைந்தவை, தங்கள் சுய நலன்களுக்காகவே வேலை செய்கின்றன.
‘கறுப்பு பணத்தை’ (வரித் தேவைகளுக்காக பிரகடனம் செய்யாமல் சட்டவிரோதமாக பெறப்பட்ட வருமானம்) கைப்பற்றுவது பற்றி பெருமை பேசிக் கொள்ளும் மற்றும் குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக்கிய மோடி தலைமையிலான இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (பி.ஜே.பி) அரசாங்கத்தை புஷ்பராஜ் ஏளனம் செய்தார். அரசாங்கத்தின் அற்ப நலன்புரி சேவைகளை வழங்குவதற்காக, வங்கி கணக்குகள் திறப்பதையும், அத்துடன் ஆதார் அட்டை முறை என்ற ஒரு கட்டாய அடையாள அட்டை பயன்பாட்டையும், மோடி கட்டாயமாக்கினார்.
“தமிழக விவசாயிகள் தலை நகரமான புது தில்லிக்கு சென்று கடன் தள்ளுபடிகளை கோருவதற்கு ஆர்ப்பாட்டங்களை நடத்திய போது, அவர்களை சந்திப்பது மற்றும் அவர்களின் நிலைமைகள் பற்றி கேட்பது குறித்து மோடி ஒருபோதும் அக்கறை காட்டவில்லை.
“வங்கிகளில் இருந்து கடன் வாங்கிய ஏழை விவசாயிகள் அவர்களது கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் அவமானப்படுத்தப்பட்டதுடன், தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால், 70 பில்லியன் ரூபாய் அளவிற்கு பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடன்களைப் பெற்று அவற்றை திரும்ப செலுத்தத் தவறிய விஜய் மல்லையா போன்ற பெரும் செல்வந்தர்கள் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை நடத்தவும் அனுமதிக்கப்பட்டனர்.
“மாநில மற்றும் மத்திய இரு அரசாங்கங்களுமே செல்வந்தர்களின் நலன்களை பாதுகாக்கின்றன. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக போராடுவதால், உங்களைப் போன்ற கட்சியை நான் விரும்புகிறேன்.
29 வயதான சுகுமார், “நான் மாத ஊதியமாக 15,000 ரூபாய் (US $233) பெறுகிறேன் மேலும் கடந்த மூன்று மாதங்களாக இந்த நிறுவனத்திற்காக நான் வேலை செய்து வருகிறேன். எனது ஓட்டுநர் வேலை கடினமானது, ஆனால் அவர்கள் இன்னும் எனக்கு குறைந்த ஊதியத்தையே வழங்குகின்றனர். ஒரு உலகளாவிய நிறுவனமான அமேசன் நேரடியாக எங்களுக்கு ஊதியத்தை வழங்குமானால், குறைந்தபட்சம் 20,000 ரூபாய் (US $310.70) ஐ நாங்கள் பெறக்கூடும். மேலும், எனது குறைந்தளவு ஊதியத்தைக் கொண்டு வாழ்க்கையை நிர்வகிக்க ஒரே வழி இதுதான் எனக் கருதி நான் எனது பெற்றோருடன் வாழ்ந்து வருகின்றேன்” என்று கூறினார்.
பெருநிறுவன-கட்டுப்பாட்டு அரசியல் கட்சிகளிடமிருந்து அவரது அந்நியப்படுதலையும், அவற்றின் மீதான தனது அலட்சியத்தையும் இந்த இளம் தொழிலாளி வெளிப்படுத்தினார். மேலும் அவர், “அந்த அரசியல் கட்சிகள் பற்றி என்னிடம் பேச வேண்டாம். மோடியின் பணம் செல்லாததாக்கும் நடவடிக்கை ஏழை மக்களின் நிலைமைகளை இன்னும் சீர்கெடுத்தது. அவரது அரசாங்கம் பணக்காரர்களிடமிருந்து கறுப்பு பணத்தை எடுத்து அதை ஏழைகளுக்கு வழங்கும் என்று பெருமையடித்தார். ஆனால் இதுவரை, ஏழைகள் சிறிதளவு கூட அதனால் பயனடையவில்லை.”
26 வயதுள்ள ஒரு ஓட்டுநரான முகமது, “சென்னையில் இருந்து 57 கி.மீ. (35 மைல்கள்) தொலைவிலுள்ள செங்கல்பட்டை சார்ந்த ஒரு வேளாண் கிராமத்தில் இருந்து நான் வருகிறேன். அரசாங்கத்தால் வழங்கப்படும் பொது வேலைத் திட்டம் ஒன்றில், கிராமத்தில் உள்ள ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 150 ரூபாய் (US $2.33) மட்டுமே கூலியாக வழங்கப்படுகின்றது. அதனால் தான் நான் அந்த வேலைக்கு செல்லவில்லை. நான் ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் இருந்து வருகிறேன். ரியல் எஸ்டேட் அபிவிருத்தியாளர்கள் வீடுகளை கட்டியமைக்க விவசாய நிலங்களை வழமையாக எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள், மேலும் விவசாயிகளுக்கான தண்ணீரும் திசை திருப்பப்படுகின்றது. பெரிய நில உரிமையாளர்களும் தங்கள் பண்ணை நிலங்களில் வீடுகளை கட்டி வருவதோடு, இலாபம் சம்பாதிப்பதற்காக அவற்றை வாடகைக்கு விடுகின்றனர்” என்று கூறினார்.