Print Version|Feedback
Wages and Wall Street
கூலிகளும், வோல் ஸ்ட்ரீட்டும்
Barry Grey
15 July 2017
புவியரசியல் மோதல்கள், பொருளாதார மந்தநிலை மற்றும் ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில் அரசு நெருக்கடிகள் அதிகரித்து வருகையில் இவற்றிற்கு இடையே, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளோ தொடர்ந்து ஆச்சரியப்படும்வகையில் மேல்நோக்கி உயர்ந்து கொண்டிருக்கின்றன. ட்ரம்ப்-ரஷ்யா தொடர்பு சம்பந்தமாக வெள்ளியன்று வெளியான புதிய தகவல்கள், ஆழமாக மதிப்பிழந்த அமெரிக்க நிர்வாகத்தினது நெருக்கடியை தீவிரப்படுத்திய நிலையில், வோல் ஸ்ட்ரீட், அதன் கொடிகட்டி பறந்த மற்றொரு நாளில் திளைத்துக் கொண்டிருந்தது. டோவ் மற்றும் எஸ்&பி 500 சந்தைகள் புதிய சாதனை மட்டத்துடன் நிறைவடைந்தன. நாஸ்டாக் இந்தாண்டின் அதன் சிறந்த வாரத்தைப் பதிவு செய்தது. 2008 நெருக்கடிக்குப் பின்னர் 2009 மார்ச்சில் அதன் மிகக் குறைந்த புள்ளிகளைக் கண்ட டோவ் சந்தை, அதற்குப் பின்னர் இருந்து 340 சதவீதம் உயர்ந்துள்ளது.
குறிப்பாக அமெரிக்காவின் பொருளாதார போக்கில் உறுதியாக நிலைத்திருக்கும் மற்றொன்று, கூலிகளின் தேக்கநிலையும் வீழ்ச்சியுமாகும். இதற்கிடையே, அமெரிக்க வேலையின்மை விகிதமானது, அதனது வரலாற்றில் குறைந்தபட்ச மட்டமாக, பெயரளவிற்கு 4.4 சதவீதமாக காட்டப்படுகிறது. ஊடகங்களும் இதை "உறுதியான" வேலை உருவாக்கம் என்று குணாம்சப்படுத்துகின்றன.
சம்பள அதிகரிப்பு முன்அனுமானிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கின்ற போதினும், ஜூன் மாத அமெரிக்க வேலைவாய்ப்பு குறித்த கடந்த வார அறிவிப்பு சில முதலாளித்துவ வட்டாரங்களில் கூட அதிருப்தியை உண்டாக்கியது. ஏனென்றால் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் கூலிகள் வெறும் 2.4 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளன. இது 2008 நிதியியல் உருகுதலுக்கு முந்தைய மாதங்களில் இருந்த 3 சதவீதத்தை விட குறைவாகும். Manpower North America நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு உயர்மட்ட நிர்வாகியை நியூ யோர்க் டைம்ஸ் மேற்கோளிட்டது, அவர் கூறினார்: “வேலைவாய்ப்பின்மை வீழ்ச்சியடைகையில், புதிய வேலைகளில் சேரும் விகிதம் குறைவாகவும் மற்றும் கூலிகளின் தேக்கநிலை அடைவதை இதற்கு முன்னர் நாங்கள் பார்த்ததில்லை. இது தொழில் சந்தையில் ஏதோ தவறு உள்ளதை எடுத்துக்காட்டுகின்றது,” என்றார்.
"நிஜமான கூலி குறியீடு" (Real Wage Index) குறித்து இம்மாத தொடக்கத்தில் PayScale வலைத் தளத்தில் பிரசுரமான மிக சமீபத்திய தகவல்களின்படி, அக்குறியீட்டில் உள்ளடக்கப்பட்ட 32 மெட்ரோ பகுதிகளில் ஐந்து பகுதிகளில் இந்தாண்டின் இரண்டாம் காலாண்டில், கூலிகள் வீழ்ச்சி அடைந்திருந்தன. மத்தியமேற்கு பகுதிகளில் உள்ள ஐந்தில் டெட்ராய்ட், கன்சாஸ் நகரம், சிக்காகோ மற்றும் மினெயாபொலிஸ் ஆகிய நான்கும் தசாப்தங்களாக தொழில்துறைமயமாக்கல் அழிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.
பணவீக்கத்திற்கேற்ப ஈடுசெய்தால், இந்த குறியீட்டின்படி, அமெரிக்காவில் நிஜமான கூலிகள் 2006 இல் இருந்து 7.5 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளன. நிஜமான அர்த்தத்தில், அமெரிக்காவில் சராசரி கூலிகள் 40 க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்னர்தான் அதிகபட்சத்திற்கு உயர்ந்தன.
டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி (சிவப்பு நிறத்தில்) மற்றும் அமெரிக்க கூலிகள் (நீல நிறத்தில்)
1929 பங்குச்சந்தை பொறிவை அடுத்து, அமெரிக்காவில், சமூக சீர்திருத்தமும் பணக்காரர்களது செல்வவளத்தில் மிதமாக மறுபங்கீடும் நடந்தது, ஆனால் அதுபோலன்றி, 2008 வோல் ஸ்ட்ரீட் உருகுதலுக்குப் பின்னர் தொழிலாள வர்க்கம் மீதான தாக்குதல்கள் தீவிரமாக்கப்பட்டுள்ளதுடன், அத்துடன் சேர்ந்து நிதியியல் செல்வந்த தன்னலக் குழுக்கள் இன்னும் கூடுதலாக செழிப்பாக்கப்பட்டுள்ளன மற்றும் பங்குச் சந்தை சாதனையளவிற்கு உயர்ந்துள்ளது. சமூக சமத்துவமின்மை வேகமாக அதிகரித்துள்ளதுடன், தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
உழைப்பு சக்திக்குச் செல்லும் அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய அதன் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ள அதேவேளையில், பெருநிறுவன இலாபங்களுக்கு செல்லும் பங்கோ சாதனையளவிலான உயரங்களை எட்டியுள்ளது.
இந்த சூழலை எவ்வாறு விவரிப்பது, வோல் ஸ்ட்ரீட் இன் மலைப்பூட்டும் வளர்ச்சிக்கும் தொழிலாள வர்க்கத்தின் சம்பள வீழ்ச்சிக்கும் இடையிலான உறவு என்ன?
வோல் ஸ்ட்ரீட் இன் செல்வசெழிப்பும் செல்வந்தர்களிடம் சேரும் இலாப திரட்சியும், உற்பத்தி வளர்ச்சியின் விளைவோ அல்லது உற்பத்தி சக்திகளின் புதிய மேல்நோக்கிய சுழற்சியின் விளைவோ அல்ல. அதற்கு மாறாக, தொடர்ந்து கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் வர்த்தக மந்தநிலையை, உற்பத்தி முதலீட்டில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான வீழ்ச்சிக்கும் மற்றும் அதனைச் சார்ந்து, உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கும் காரணமாக சர்வதேச நாணய நிதியம் (IMF) கருதுகின்றது.
பிரதான வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் அப்பட்டமான குற்றவியல்தனத்தால் தூண்டிவிடப்பட்டு, 2008 பொறிவுக்கு இட்டுச் சென்ற நிதியியல்மயமாக்கம் மற்றும் ஒட்டுண்ணித்தனத்தின் வளர்ச்சி நிகழ்முறையில் என்ன நடந்துள்ளது என்றால், அதற்கு பின்னர் இந்த நிகழ்முறை இன்னமும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. பெருநிறுவன இலாபங்களில் இருந்து ஒரு சிறிய பங்கையாவது சமூக சீர்திருத்தங்களுக்கு நிதியளிப்பதற்கு திருப்பி விடுவதற்குப் பதிலாக, அரசாங்கங்களும் மத்திய வங்கிகளும், தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து நிதிய தன்னலக்குழுக்களை மீட்கவும் அதை இன்னும் செல்வ செழிப்பாக்கவும், உலக பொருளாதாரத்தை முன்னொருபோதும் இல்லாதளவில் சூறையாடுவதை மேற்பார்வை செய்துள்ளன.
அமெரிக்க பெடரல் ரிசேர்வ் அதற்கான வழி வகுத்தளித்துள்ளது. பிரதான வோல் ஸ்ட்ரீட் வங்கிகளுக்கான முதல் பிணையெடுப்புக்கு நிதி வழங்குவதற்காக புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் பொது நிதிகளில் இருந்து 700 பில்லியன் டாலரை ஒதுக்கியதற்குப் பின்னரும், வங்கிகளது கணக்கில் இருந்து மதிப்பில்லா சொத்துக்களை நீக்குவதற்காக பெடரல் வங்கி ட்ரில்லியன் கணக்கிலான டாலர்களைக் கொண்டு அவற்றை விலைக்கு வாங்கியது (இது "பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விடுதல்" - quantitative easing - என்று கூறப்பட்டது), இதன் விளைவாக அதன் இருப்புநிலை கணக்கு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், நிதியியல் சந்தைகளுக்குள் பரிமாற்றத்தை அதிகரிக்கவும் மற்றும் பங்கு விலைகளை உயர்த்தவும், பெடரல் அதன் வட்டிவிகிதங்களை பூஜ்ஜியத்திற்கு அண்மித்தளவிற்கு குறைத்ததுடன், அவற்றை மிகக் குறைந்த மட்டங்களில் வைத்தது.
பெடரல் ரிசர்வின் இருப்புநிலை கணக்கு ஐந்து மடங்கிற்கு அதிகமாக உயர்ந்துள்ளது
பங்கு ஆதாயங்களை உயர்த்துவது, பங்குகளை வாங்கி விற்பது மற்றும் பெருநிறுவன ஒருங்கிணைப்புகள் என்ற வடிவத்தில் நிதியியல் தன்னலக்குழுக்களுக்கு அதிருஷ்டத்தை வழங்குவதற்காக, வங்கிகள் அவற்றின் பெரும் இலாபங்களை பயன்படுத்தின. மிகப்பெரிய முதலீட்டாளர்கள் அவர்களின் பணவரவுகளை அதிகரித்துக் கொள்வதற்கு, இந்த மாதம், வங்கிகளுக்கு பெடரல் பச்சைக் கொடி காட்டியது. பேங்க் ஆஃப் அமெரிக்கா தெரிவிக்கையில், அது அதன் பங்கு ஆதாயங்களை (dividends) 60 சதவீத அளவிற்கு அதிகரிக்க இருப்பதாக கூறியதுடன், 12 பில்லியன் டாலர் மதிப்பில் பங்குகளது மறுகொள்முதல் திட்டம் ஒன்றையும் வெளியிட்டது.
இது, ஒபாமாவின் கீழ், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் கூலி-குறைப்பு கொள்கையுடன் இணைந்திருந்தது. புதிதாக நியமிக்கப்படும் தொழிலாளர்களின் கூலிகளில் அனைவருக்கும் 50 சதவீத குறைப்பு, ஒபாமாகேர் வடிவத்தில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு மருத்துவ கவனிப்பு வெட்டு, டெட்ராய்ட் திவால்நிலைமையால் சமிக்ஞை காட்டப்பட்ட ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் வாகனத்துறை பெருநிறுவனங்களுக்கான பிணையெடுப்பு அதில் உள்ளடங்கி இருந்தது.
இந்த தாக்குதல் தொடர்ந்து தொய்வின்றி நடந்து வருகிறது என்பது கடந்த வாரம் மிசோரி மாநிலம் செயிண்ட் லூயிஸில் ஏற்கனவே சொற்ப அளவில் உள்ள 10 டாலர் குறைந்தபட்ச ஊதியத்தை மாநிலந்தழுவியளவில் பட்டினி மட்டமான 7.70 டாலருக்கு குறைந்த போது தெளிவானது.
தொழிலாள வர்க்க எதிர்ப்பு கிட்டத்தட்ட முழுமையாக ஒடுக்கப்பட்டது தான் இந்த சமூக எதிர்புரட்சியை சாத்தியமாக்கியது. 1930 களில் பெரு மந்தநிலைமை ஏற்பட்டபோது, ரஷ்ய புரட்சியின் முன்னுதாரணமும் சோவியத் ஒன்றியத்தின் இருப்பும் தொடர்ந்து முதலாளித்துவ வர்க்கத்தை துரத்தியதுடன், சர்வதேச அளவில் தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கு உணர்ச்சியூட்டி இருந்தன. புதிய உடன்படிக்கையின் சமூக சீர்திருத்தங்கள், பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் இடமிருந்து கிடைத்த ஆதாயமல்ல, மாறாக குறிப்பாக 1934 மற்றும் 1938 க்கு இடையே தொழிலாள வர்க்க போராட்டம் வெடித்ததன் விளைவாக இருந்தது, ஒட்டுமொத்த நகரங்களையும் முடக்கிய பொது வேலைநிறுத்தங்களும், வாகனத்துறை மற்றும் ஏனைய தொழில்துறைகளில் நடந்த உள்ளிருப்பு வேலைநிறுத்தங்களின் அலையும் அதில் உள்ளடங்கும்.
இதற்கு எதிர்விதமாக இன்றைய காலகட்டத்தில், வர்க்க போராட்டம் செயற்கையானவிதத்தில் ஒடுக்குமுறையினால் மேலாதிக்கம் செய்யப்படுகின்றது. கடந்த நான்கு தசாப்தங்களாக முக்கிய வேலை நிறுத்தங்கள் 90 சதவீதம் குறைந்திருப்பதாக அமெரிக்க தொழிலாளர் துறை அறிவிக்கிறது. 2007 இல் இருந்து 2016 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக அண்ணளவாக 14 முக்கிய வேலை நிறுத்தங்களுடன், சாதனையளவிற்கு அது மிகக்குறைந்த தசாப்தமாக இருந்தது.
தொழிலாள வர்க்கத்தில் கோபமும் போர்குணமும் அதிகரித்து வருவதற்கான பல அறிகுறிகள் உள்ளன. ஆனால் இப்போதிருக்கும் எந்தவொரு அமைப்புகளிலும் அங்கே சமூக போராட்டத்திற்கான எந்த அடித்தளமும் இல்லை. ஜனநாயகக் கட்சி முன்பினும் அதிகமாக வலதிற்கு நகர்ந்து, இன்று மிக பகிரங்கமாகவும் நேரடியாகவும் வோல் ஸ்ட்ரீட், போர் மற்றும் சிஐஏ இன் ஒரு கட்சியாக செயல்படுகிறது.
வேலைநீக்கங்கள், சம்பள குறைப்புகள், வேகப்படுத்தல்கள், தொழிலாளர்களை நாட்கூலியாட்களாக மாற்றுதல் (casualization), மருத்துவ கவனிப்பு மற்றும் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக எழும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒடுக்குவதில், AFL-CIO மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள், ஊழல் மற்றும் பிற்போக்குத்தன அதிகாரத்துவத்தின் பெருநிறுவன அமைப்புகளாக இருந்து அவற்றின் முயற்சிகளை அர்பணித்துள்ளன. எங்கெல்லாம் சாத்தியமோ அவை வேலைநிறுத்தங்களை முடக்குவதுடன், அவ்வாறு மீறி உடைத்துக் கொண்டு வந்தாலும் அவற்றை அவை நாசவேலை செய்கின்றன.
வேலைநிறுத்த மட்டங்கள் (நீல நிறத்தில்), உயர்மட்ட ஒரு சதவீதத்தினரின் வருவாய் பங்கு (சிவப்பு நிறத்தில்)
தொழிலாள வர்க்கம் மீதான AFL-CIO இன் அக்கறையின்மையை மற்றும் அவமதிப்பை அதன் வலைத் தளமே பிரதிபலிக்கிறது. கடமைக்காக எழுதப்பட்ட ஒருசில பத்திகளில், கூலிகள் பிரச்சினை குறித்து அது குறிப்பிடுகையில், “அமெரிக்கர்களின் கூலிகளில் தொண்ணூறு சதவீதம், 1997 இல் இருந்ததை விட இன்று குறைவாக இருக்கிறது,” என்று குறிப்பிட்டது. இந்த ஆச்சரியமூட்டும் மற்றும் அதிர்ச்சியூட்டும் உண்மையை எதிர்கொள்வதற்கான அதன் செயல்திட்டம்? காங்கிரஸ் க்கு அனுப்பிய ஒரு மனு! மட்டுமே.
கூலிகளின் தேக்கநிலையை மற்றும் முன்பில்லாதளவில் மிக உயர்மட்டத்தில் மிக அதிகளவிலான செல்வவள திரட்சியை, காங்கிரஸில் உள்ள வோல் ஸ்ட்ரீட்டின் இலஞ்சமளிக்கப்படும் கையாட்களுக்கு முறையிடுவதன் மூலமாகவோ அல்லது பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தன்னலக் குழுக்களின் ஏனைய எந்தவொரு அமைப்புகளிடமும் முறையிடுவதன் மூலமாகவோ நிறுத்த முடியாது. முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்க போராட்டத்தை மீட்டு உயிர்பிப்பதன் மூலமாக மட்டுமே இந்த நிலைமை மாற்ற முடியும்.
அமெரிக்காவில் வர்க்க போராட்டம் மறைந்துவிட்டதாக தெரிந்த நீண்ட மற்றும் பெரிதும் அசாதாரணமான காலக்கட்டம், வேகமாக முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. திருப்பி தாக்க வேண்டுமென்ற விருப்பத்துடன் கோபம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு வெரிஜோன் நிறுவன வேலைநிறுத்தம் பல ஆண்டுகளுக்குப் பின்னர், மிக நீண்ட மற்றும் மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக இருந்தது. இந்த போர்குண அதிகரிப்புடன் பரந்த அரசியல் தீவிரப்படலும் மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்புணர்வின் அதிகரிப்பும் சேர்ந்துள்ளது, இது 2016 இல் பேர்ணி சாண்டர்ஸை ஒரு நிஜமான சோசலிசவாதி, “பில்லியனிய வர்க்கத்தின்" எதிர்ப்பாளர் என்ற பிழையான நம்பிக்கையின் அடிப்படையில், அவருக்கு வழங்கப்பட்ட பாரிய ஆதரவில் அதன் ஆரம்ப வெளிப்பாட்டைக் கண்டது.
சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது செல்வந்த தன்னலக் குழுக்களது ட்ரம்ப் அரசாங்கம் நடத்தும் மூர்க்கமான தாக்குதல்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்த எதிர்ப்பை தூண்டும். ஆனால் இந்த எழுச்சிகரமான இயக்கம் ஒரு நனவுப்பூர்வ அரசியல் முன்னோக்கால் வழிநடத்தப்பட்டு, ஒரு புதிய அமைப்பு வடிவை எடுக்க வேண்டும். அது ஜனநாயக கட்சியின் பின்னால் திருப்பிவிடப்படவோ அல்லது தொழிற்சங்கங்களால் வீணடிக்கப்படவோ அனுமதிக்கக்கூடாது.
மருத்துவ கவனிப்பு, புலம்பெயர்ந்தவர்கள், வேலைகள், கூலிகள் மற்றும் கல்வி ஆகியவற்றை பாதுகாப்பதற்கும் மற்றும் மூன்றாம் உலக போருக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்ப்பதற்கும், சோசலிச சமத்துவக் கட்சி, பல்வேறு போராட்டங்கள் அனைத்தையும் ஐக்கியப்படுத்தி, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகம் மற்றும் அது பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக திரும்பிய ஒரே பாரிய சமூக மற்றும் அரசியல் இயக்கமாக, மிகப் பரந்தளவில் சாத்தியமான இயக்கத்தை அபிவிருத்தி செய்ய போராடி வருகிறது.
இந்த இயக்கத்தை அபிவிருத்தி செய்யவும் அதை உலகெங்கிலுமான தொழிலாளர் போராட்டங்களுடன் இணைக்கவும் தொழிற்சாலைகள், வேலையிடங்கள் மற்றும் சமூகங்களில் போராட்ட குழுக்களை ஸ்தாபிக்குமாறு நாம் தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுக்கிறோம். அனைத்திற்கும் மேலாக, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் அவசியத்தை உணரும் தொழிலாளர்களும் இளைஞர்களும் தொழிலாள வர்க்கத்தின் புதிய அரசியல் தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்பவும் மற்றும் அதில் இணையுமாறும் நாம் அழைப்புவிடுக்கிறோம்.